நெடும்வனம் 5

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
கனவெல்லாம் பாம்புகளே வந்தன. என்னை சோகமாக பார்த்தன. உதவ சொல்லிக் கேட்டுக் கண்ணீர் விட்டன.

காய்ச்சலில் அதிகம் அழுது விட்டேன்.‌ மறுநாள் விழிக்கவேயில்லை. அண்ணன் என்னை மருத்துவமனை அழைத்துச் சென்றபோது பகலாய் இருந்ததை அரை மயக்கத்தில் உணர்ந்தேன். சிந்தை செயல்பட மறுத்து விட்டது.

நான்கு நாட்கள், ஆறு ஊசிகளுக்கு பிறகே காய்ச்சல் முழுதாய் என்னை விட்டு போனது.

கல்லூரிக்கு என்னை அனுப்புவதா வேண்டாமா என்று வீட்டில் பட்டிமன்றமே நடந்தது.

"ஏன்ப்பா இப்படி இருக்கிங்க.? அஞ்சாவதோடு நிறுத்திட்டோம்ன்னு அத்தை இன்னமும் இந்த வீட்டுக்கு வந்தா மனசு நொந்து அழுதுட்டு போகுது.. இவளாவது படிக்கட்டுமே! காலம் மாறிட்டு இருக்குப்பா.. படிப்புங்கறது வேலைக்காகங்கற காலம் எப்பவோ மலை ஏறிப் போச்சி. இப்பவெல்லாம் படிப்புங்கறது அறிவை வளர்த்துக்கதான்.! படிக்க விடுங்கப்பா இவளை.." என்றான் அண்ணன்.

படிப்பை பற்றி வியாக்கியானம் பேசிய இந்த கரிச்சட்டை தலையனுக்கு ஒரு கேமரா வாங்கி தந்தால் எனக்கு அதுவே போதும் என்பது ஏன் தெரியவில்லை என்று அந்த நேரத்திலும் யோசனை தோன்றியது.

நான் சிறு பிள்ளை, கேமரா ஆசை எனது விளையாட்டு பேச்சு என்றே எண்ணிக் கொண்டிருக்கும் இவனுக்கு எப்போதுதான் என் கனவு பற்றி தெரியவருமோ என்று கவலையாக இருந்தது.

சனி ஞாயிறு விடுமுறை முடிந்து ஐந்தாம் நாள் கல்லூரிக்கு கிளம்பினேன். அதிகாலை நேர சாலையில் அந்த பாம்புகள் இருந்த இடத்தை கடக்கையில் மனம் அலைபாய்ந்தது. சுத்தமான மண் சாலையில் பாம்புகள் இல்லை.

ஏனோ அழுகை வரும் போலவே இருந்தது. நான் பேருந்து ஏறியபிறகு அண்ணன் அங்கிருந்து கிளம்பினான்.

சுசி எனது நலம் விசாரித்தாள். மற்ற தோழிகளும் என்னை காணாமல் வருந்தியதாக சொன்னார்கள். அனைவரையும் பிடித்திருந்தது.

கல்லூரியில் பாடம் படிக்க சற்று சிரமமாக இருந்தது. பாம்புகளை மறந்துவிட்டு அரைகுறையாக பாடத்தில் கவனம் செலுத்தினேன்.

அன்று மாலையில் பேருந்தை விட்டு இறங்குகையில் நீயும் உன் பேருந்தை விட்டு கீழிறங்கினாய். என்னை பார்த்துப் புன்னகைத்தாய்.

பேருந்துகள் இரண்டும் கிளம்பி சென்ற பிறகு இருவரும் ஒரு சேர மண் சாலையில் இறங்கினோம்.

"உங்க காலேஜ் ரோடு சரியாகிடுச்சா.?" நானாக கேள்வியை ஆரம்பித்தது உனக்கு ஆச்சரியமாக இருந்திருக்கும்.

"ஆச்சி.. அஞ்சி நாள் முன்னாடியே.." என்ற நீ என்னை ஆழமாய் பார்த்தாய். "ஏன் நாலு நாளா வரல.?" என்றுக் கேட்டாய்.

"காய்ச்சல்.." என்றேன் தரையை பார்த்தபடி.

"ஓ.."

"பாம்புங்க செத்தது ரொம்ப கஷ்டமா போயிடுச்சி.." என்றேன் வேறு பக்கம் பார்த்தபடி.

பாம்புகள் இறந்த இடத்தை கடந்தபோது "பாம்புங்க வண்டி சக்கரங்களில் சிக்கி சிதைஞ்சி போயிருக்கும்.. அப்படியே மறைஞ்சிடுச்சி போல.." என்று உடைந்த குரலில் சொன்னேன்.

அந்த பாம்புகள் மீது எனக்கு ஏன் இவ்வளவு அக்கறை என்று அப்போது தெரியவில்லை சகா. ஆனால் பிறகுதான் புரிந்தது.

எனது குரல் உன்னை என்னவோ செய்துவிட்டது. என் கையை பற்றினாய். அந்த பாம்புகள் இறந்து கிடந்த இடத்தின் அருகே இருந்த கருக்கட்டான் மரங்களின் புதரை தாண்டி என்னை இழுத்துச் சென்றாய்.

"என்ன பண்ற.?" கயவனிடம் சிக்கிவிட்டோமோ என்று அந்த நேரத்தில் பயந்து விட்டேன் சகா. இதை கேட்டு சிரித்து வைக்காதே.

கருக்கட்டான் புதரின் பின்னால் இருந்த ஒரு பனை மரத்தின் அடியில் என்னை கொண்டுச் சென்று நிறுத்தினாய். பனை மரத்தின் அடியே இருந்த மண்மேட்டை கை காட்டினாய்.

காய்ந்த ஆவாரம், சுண்டை பூக்கள் அந்த மண்மேட்டின் மீது இருந்தன.

"அந்த பாம்புகளை அடக்கம் பண்ணிட்டேன் நான்.!" என்றாய்.

எனக்கு மீண்டும் அழுகை வந்தது‌. அந்த அழுகையில் சிறிது நிம்மதி கலந்திருந்தது‌. நீ கர்ச்சீப்பை எடுத்து நீட்டினாய்.

"எதுக்கு சும்மா அழற.?" என்றாய்.

"தேங்க்ஸ்.."

"கர்ச்சீப்க்கா.?"

"இல்ல.. பாம்புகளை அடக்கம் செஞ்சதுக்கு.!" என்ற என்னை புன்னகையோடு பார்த்தாய்.

கைக்கடிகாரத்தை நோட்டம் விட்டுவிட்டு நிமிர்ந்தாய்.

"போகலாமா.? லேட்டான்னா இருட்டிடும்.. பனிக்காலம் நெருங்குது.!" எனது பயணத்தில் நீ அக்கறை கொண்டாய்.

இருவரும் அந்த பனை மரத்தடி விட்டு வெளியே வந்தோம். மண் சாலையில் ஆளுக்கொரு பக்கமாக நடந்தோம்‌.

இருவருமே அன்றைக்கு எதுவும் பேசிக் கொள்ளவில்லை.

இருள் சூழ இருந்த நேரத்தில் வீடு வந்து சேர்ந்தேன். ஒரு வாரத்திற்கு பிறகு இன்றுதான் டேரா பூ செடியின் நினைவு வந்தது. ஓடிச் சென்று பின் வாசலை பார்த்தேன். குட்டி குட்டியாக முளைத்திருந்த செடிகள் அத்தனையும் சருகாய் கிடந்தன. எதையோ இழந்தது போலவே ஆகிவிட்டது அதை கண்டதும்.

"அம்மா.. இந்த செடிக்கு தண்ணி விட்டிருக்க கூடாதா.?" வருத்தமாக அம்மாவிடம் கேட்டேன்.

"நானே இடுப்பொடிய வேலை செஞ்சிட்டு நல்ல சோறு திங்க கூட நேரம் இல்லாம இருக்கேன். உனக்கு அந்த செடிதான் குறைச்சலா.? உன்னையெல்லாம் வயல்ல வேலை செய்ய வச்சி நொங்கெடுக்கணும்.!" அம்மாவின் திட்டுகள் கோபத்தைதான் தந்தன.

ஆனால் அம்மாவிடம் வாய் வீரத்தை காட்ட மனமில்லை‌. அதற்கு பதிலாய் அடுத்த நாள் உன்னிடம் பூ விதை வேண்டுமென்று மலர்ந்த முகத்தோடு கேட்டேன். என்ன நினைத்தாயோ, சரியென தலையசைத்து விட்டு மறுநாளே விதைகளை கொண்டு வந்து தந்தாய்.

"விசாகா.." சுசியின் குரலில் உறக்கத்தில் இருந்து கண் விழித்தேன். டிரெக்கிங் வந்தது நினைவுக்கு வந்தது. இறந்த காலத்தை விட இந்த நிகழ்காலம் மிகவும் பிடித்துள்ளது சகா.

உறங்கி விழித்த என் விழிகள் முதலில் பார்த்தது உன்னைதான்‌. என்னை அணைத்துக் கொண்டு படுத்திருந்த நீ கண்விழித்து என்னை மனமே இல்லாமல் விடுவித்தாய். உன் இதழில் என் இதழை பதித்தேன். உன் முகம் கொஞ்சம் கொஞ்சமாக மாறியது. நீ என்னை உன் கை வளைவில் கைது செய்யும் முன் விலகி எழுந்து விட்டேன்‌.

"விசாகா.." என்றாய்.

"எனக்கு நிறைய வேலை இருக்கு.!" என்றுவிட்டு கூடாரத்தை விட்டு வெளியே வந்தேன்.

பகல் அழகாய் இருந்தது. நாம் தங்கியிருந்த மலை சரிவில் மரங்கள் இல்லை‌. ஆனாலும் புற்கள் இருந்தன. புற்களின் இடையே மிருகங்கள் போட்டு வைத்திருந்த ஒத்தையடி பாதையில் நடந்து வந்தான் மஜீத்.

"குட் மார்னிங் விசாகா.." என்றான் என்னை பார்த்து கையாட்டியபடி.

"குட்மார்னிங்.." என்றேன். நீ எப்போது பின்னால் வந்தாய் என்று தெரியவில்லை. என்னை அணைத்துக் கொண்டாய். எனக்கு வெட்கமாக இருந்தது. என் நண்பர்கள் முன்னால் ஏன் மானத்தை வாங்கிக் கொண்டிருக்கிறாய் என்று திட்ட தோன்றியது. ஆனால் என் நண்பர்களுக்கு நீ முக்கியம் இல்லாதபோது நான் மட்டும் ஏன் அவர்களை முக்கியமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணினேன்.

"கிளம்பலாமா விசாகா.. நாம வந்து நாலு நாள் ஆயிடுச்சி.! உனக்கு தேவையான போட்டோஸ் எடுத்துட்டதானே.?" என்றாள் சுசி தனது கூடாரத்தை பிரித்தபடியே.

"ம்.. நீ உன் ஆராய்ச்சிக்கு தேவையான குறிப்பை எடுத்துட்டியா.?" எனது கேள்விக்கு மறுப்பாக தலையசைத்தாள் அவள். அவள் ஆராய்ச்சி படிப்பு படித்துக் கொண்டிருக்கிறாள். என்னவோ அடர் மரங்கள் பற்றிய ஆராய்ச்சி. நான் சரியாக கேட்டுக் கொள்ளவில்லை.

மஜீத்தும் இந்த பயணத்தில் கலந்துக் கொள்ள காரணம் அவனுக்கு புது கதைக்கான சிந்தனை கிடைக்குமா என்றுதான். இந்த பயணத்தில் எந்த வேலையும் இல்லாமல் வந்தது ராம் மட்டும்தான். முட்டை கண்ணன்.

"இப்ப கீழே இறங்கினாதான் உச்சி வெயிலுக்கு முன்னாடி ரோட்டுக்கு போய் சேர முடியும்.." என்ற மஜீத்தும் தனது கூடாரத்தை பிரிக்க ஆரம்பித்து விட்டான்.

அனைவரும் கீழே இறங்க ஆரம்பித்தோம். நீ என் கையை விடாமல் பற்றிக் கொண்டிருந்தாய்.

அப்படியிருந்தும் ஓரிடத்தில் சறுக்கி விட்டு விட்டது. சட்டென்று நிறுத்தி காப்பாற்றினாய். அருகே இருந்த பள்ளத்தாக்கை பார்த்து மிரட்சியாக இருந்தது. நீ காப்பாற்றாவிட்டால் நான் காலி ஆகியிருப்பேன்.

நடு வழியில் ஒரு மரத்தடியில் அமர்ந்து அனைவரும் உணவை முடித்தோம். நீ வழக்கம்போல நான்கு ரொட்டி துண்டுகளே போதும் என்று விட்டாய்.

அனைவரும் கீழே இறங்கி வந்தபோது நமது கார்கள் நாம் நிறுத்தியிருந்த அதே இடத்தில் இருந்தன. நீயும் நானும் கைக்கோர்த்தபடி நமது காரை நோக்கி நடந்தோம்.

"விசாகா நானும் உன்னோடு வரேன்.." என்றான் ராம்.

அவனை கொல்ல வேண்டும் போல இருந்தது எனக்கு. உனது கோபமும் புரிந்துதான் இருந்தது.

"நானும் உன் வீட்டுலதான் தங்கி இருக்கேன்.. அவங்களோடு போனா டாக்சி பிடிச்சி வீடு வரணும் விசாகா.. லிஃப்ட் கொடு.." ராம் அவனாகவே காரின் பின் சீட்டில் ஏறி அமர்ந்துக் கொண்டான்.

நான் பயண பைகளை கார் டிக்கியில் பத்திரப்படுத்தினேன்.

சுசி மஜீத்தின் காரில் ஏறினாள். என்னை பார்த்து சிரித்தாள். அவள் இன்றாவது மஜீத்திடம் காதலை சொன்னால் நல்லது.

நான் காரை ஸ்டார்ட் செய்த பிறகுதான் நீ காரில் ஏறி அமர்ந்தாய். ராமை முறைத்தாய்.

நான் முகத்தை பற்றி முன் பக்கம் திரும்பினேன்.

கார் சில பல கிலோமீட்டர்களை தாண்டிய பிறகு "பேய் உண்மையில் இருக்கு விசாகா.." என்றான் ராம்.

நீ அவனை மீண்டும் முறைத்தாய். நானும்தான் முறைத்தேன்.

"இருக்கலாம் ராம்.." என்றேன் நான்‌.

"நம்ம வீட்டுல பேய் இருக்கு விசாகா.."

'நம் வீடு அல்ல, எங்கள் வீடு..' என்று சொல்ல தோன்றியது. ஆனால் நண்பனின் மனம் வாட வைக்க விரும்பவில்லை நான்.

"இவனுக்கு என்ன பிரச்சனை.? எதுக்கு லூசு மாதிரி உளறுறான்.." கோபத்தோடு முணுமுணுத்தாய் நீ‌.

உன் முணுமுணுப்பு அவன் காதில் விழுந்து விட கூடாது என்று பாடலை இயக்கினேன் நான்‌. முணுமுணுப்பு விழுந்திருக்காதுதான்.

வழியெல்லாம் உளறிக் கொண்டே வந்தான் அவன். எனக்கு சலிப்பாக இருந்தது.

"நீ எப்ப தனி வீடு பார்க்க போற ராம்.?" என்றேன் நம் வீட்டின் முன்னால் காரை நிறுத்துவிட்டு.

"கொஞ்சம் வேலை இருக்கு விசாகா.. அப்புறம் வேற வீடு பார்த்து கிளம்பிடுறேன்.." என்றவன் நமக்கு முன்னால் நமது அப்பார்ட்மெண்டை நோக்கி நடந்தான்.

"இவன் சரியான அறுப்பு கேஸ் விசாகா.. ரம்பம் போடுறான்‌‌.." காதை குடைந்தபடி சொன்னாய் நீ. சிரித்தபடியே உன் தோளில் அடித்தேன். கேலியில் உன் முகம் அழகாய் இருந்தது. கேலி மட்டுமல்ல சிரிப்பு, கோபம், வருத்தம் என அனைத்திலும் நீ அழகுதான். நான் உன் தோளில் அடித்து விளையாடுவதை குறுகுறுப்போடு பார்த்தபடி கடந்தாள் ஒரு பெண்.

"போகலாம் வா‌‌.." என் கைப்பிடித்து நம் தளம் நோக்கி அழைத்துச் சென்றாய் நீ‌.

"அவன் மறுபடியும் பேய் பிசாசுன்னு ஏதாவது சொல்லிக்கிட்டு உன்கிட்ட அட்வான்டேஜ் எடுக்க டிரை பண்ணான்னா அப்புறம் நான் புரட்டி எடுத்துட்டுவேன்.." லிப்டில் செல்லுகையில் எச்சரிக்கை விடுத்தாய் நீ.

புரிந்ததாக தலையாட்டினேன்.

நீ அவனையே நேரடியாக மிரட்டி இருக்கலாம்தான். ஆனால் அவன் ஏனோ உன்னோடு பேசுவதை தவிர்த்தான். காரணம்‌ எனக்கு தெரியவில்லை.

நாம் இருவரும் நம் வீட்டினுள் நுழைந்தபோது ஹால் சோபாவில் அமர்ந்திருந்த இருவர் எழுந்து நின்றனர். என் அப்பாவும், அண்ணனும்.

"உன்னை எங்கேயெல்லாம் தேடினோம் தெரியுமா.?" என்றான் அண்ணன்.

வைல்ட் லைஃப் போட்டோகிராபர் விசாகா என்று பார்த்திருக்கலாமே. நான் எங்கும் முகம் காட்டவில்லைதான். ஆனால் இந்த வேலையும், இந்த பெயரும் நான்தான் அவர்கள் வீட்டு பெண் என்பதை சொல்லி இருக்குமே. அவர்கள் வீட்டு பெண் அவ்வளவு தூரம் வருவாள் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் போல.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN