மணாளனின் மனம்1

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
கதாபாத்திரங்களின் அறிமுகம்.

நாயகன் - முத்தமிழ் (அப்பா - ரவீந்தர். அம்மா - யசோதா. தாத்தா - ரங்கநாதர். பாட்டி - முத்தரசி. தங்கை - அபிராமி.)

நாயகி - புவனா (அப்பா - முருகன். அம்மா - யமுனா. அண்ணன்கள் - கார்த்திக், மூர்த்தி. அண்ணிகள் - சுவாதி, அபிராமி. அண்ணன் மகன் -சரண்)

* புவனாவின் சின்ன அண்ணனுக்குதான் முத்தமிழ் தன் தங்கையை திருமணம் செய்துக் கொடுத்திருந்தான். (காதல் கடன்காரா தொடரில் இவர்களை பற்றிய மேலும் விபரங்கள் உள்ளது. ஆனால் அந்த தொடருக்கும் இந்த தொடருக்கும் இடையில் சம்பந்தம் இல்லை. இது அதன் அடுத்த பாகமும் கிடையாது)

* புவனாவின் பெரிய அண்ணன் மூர்த்தி காவல் துறை ஆய்வாளர். அவன் மனைவி சுவாதி சமூக ஆர்வலராக இருப்பவள். சின்ன அண்ணன் கார்த்திக் அவர்கள் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர்.

*முத்தமிழ் இன்ஜினியரிங் முடித்துவிட்டு பொழுதாக்கம் என்று விவசாயம் பார்ப்பவன். அவனின் தங்கை அபிராமி அந்த மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியர் பொறுப்பில் இருப்பவள்.

இனி கதைக்கு போகலாம்.


அதிகாலை நேரத்து பூங்குயில்கள் தங்களின் இசையால் அந்த பகுதியில் இருந்தோரை மயக்கிக் கொண்டிருந்தன.

பூங்குயில்கள் அமர்ந்திருந்த மரத்தின் அருகேயிருந்த மருத்துவமனையில் அமர்ந்திருந்த முத்தமிழுக்கு பூங்குயில் இசை மட்டுமல்ல இந்த புவியின் எந்த சத்தமுமே காதில் கேட்கவில்லை.

தலையை பிடித்தபடி அமர்ந்திருந்தவனுக்கு நேரம் செல்வது தெரியவில்லை. தன் முன் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்பதையும் அறியவில்லை அவன்.

தீவிர சிகிச்சை பிரிவின் முன்பே இருந்த இருக்கையில் சிலையாக அமர்ந்திருந்தான் அவன். அந்த அறையினிலிருந்து வெளியே வரும் மருத்துவரின் நாவில்தான் தனது எதிர்காலம் இருக்கிறது என்று அவனுக்கு தெரியும்.

"இவ ஏன்டா இப்படியெல்லாம் பண்றா.?" என்று அழுத யமுனாவை தன்னோடு அணைத்துக் கொண்டான் மூர்த்தி.

"பைத்தியம் அம்மா.. நல்லாகி வந்துடுவா. கவலைப்படாதே.!" என்று தன் அம்மாவிற்கு ஆறுதல் சொன்னான் மூர்த்தி.

அவன் தங்கை புவனா குடித்த விஷம் அவளின் ரத்தத்தில் கலந்து விட்ட காரணத்தால் தீவிர சிகிச்சையில் இருந்தாள். நேற்று மதியத்தில்தான் அவள் விஷமருந்திய விசயம் அவள் வீட்டில் இருந்தவர்களுக்கு தெரிந்தது. மறுநிமிடமே அவளை மருத்துவமனைக்கு அழைத்து வந்து விட்டார்கள்‌. ஆனால் கேஸ் சீரியஸ் என்றுச் சொல்லி அவளை நவீன சிகிச்சை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டார்கள். விஷம் ரத்தத்தில் கலந்து விட்டது என்ற விசயம் அறிந்த நொடியிலிருந்தே அங்கிருந்த யாருக்குமே உண் உறக்கம் இல்லை.

புவனா பல வருடமாக முத்தமிழை விரும்பிக் கொண்டிருந்தாள். அது அவளின் வீட்டில் இருந்தோருக்கும் தெரியும். கார்த்திக் அவ்வப்போது சாடையாக தன் தங்கையின் காதலை பற்றி முத்தமிழிடம் சொல்லி இருக்கிறான். ஆனால் முத்தமிழ்தான் கண்டும் காணாமல் இருப்பான்.

புவனாவின் மனதிற்குள்ளும் தீவிர காதல் இருந்தது. அதை அவள் மற்றவர்களிடம் வெளிக்காட்டவில்லை என்றாலும் முத்தமிழிடம் காட்டிக் கொண்டுதான் இருந்தாள்.

நேற்று முத்தமிழுக்கு நிச்சயத்தார்த்தம் நடக்க இருந்தது. ஆனால் இவள் விஷம் குடித்த காரணம் அவனின் நிச்சயத்தையே தடுத்து விட்டது.

இவள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் இருந்து அவனும் பைத்தியம் பிடித்தவன் போல இருக்கிறான்.

மூர்த்திக்கிற்கும் கார்த்திக்கிற்கும் முத்தமிழ் மீது கோபம்தான். ஆனால் தவறு தங்களின் தங்கை மீது மட்டும்தான் என்று அவர்களுக்கும் தெரியும். நியாயம் அறிந்ததால் அமைதியாக இருந்தார்கள்.

ஒருதலைக் காதலுக்கு எதிராளியை குறை சொல்வது போன்று மோசமான விசயம் ஏதுமில்லை என்று கார்த்திக்கிற்கும் தெரியும்.

ஆனாலும் அவனுக்கு முத்தமிழ் மீது வருத்தம்தான். பல வருடங்களாக அவனும் முத்தமிழும் நண்பர்கள். தன் தங்கையின் காதலை அவன் ஏற்றுக் கொண்டு இருந்திருக்கலாம் என்று நினைத்தான். புவனாவின் ஒருதலைக் காதல் சற்று முரட்டுதனமானது. முத்தமிழை தன் வீட்டில் உள்ளவர்கள் ஏதாவது சொல்லி விட்டால் கூட அவர்களோடு சண்டை போடுவாள். சின்ன அண்ணி அபிராமியே கூட இவளின் முன்னால் தன் அண்ணன் முத்தமிழை திட்டி விடக்கூடாது. உடனே பொங்கி எழுந்து விடுவாள்.

முத்தமிழை பொறுத்தவரை இவள் ஒரு பைத்தியம் என்றுதான் தன் தங்கையிடமே சொல்லி இருந்தான். ஆனால் அந்த பைத்தியம் இப்படி உயிரை விடவும் தயாராய் இருக்கும் என்று அவன்தான் நினைக்காமல் போய் விட்டான்.

தீவிர சிகிச்சை பிரிவின் கதவு திறந்தது. முருகனும் யமுனாவும் தங்களின் மகள் எப்படி உள்ளாள் என்பதை கேட்க மருத்துவர்களின் அருகே ஓடினார்கள்.

புவனாவின் அண்ணன்களின் பின்னால் முத்தமிழும் சென்றான். வாடி வதங்கியிருந்தது அவனின் முகம்.

"என் பொண்ணு இப்ப எப்படி இருக்கா டாக்டர்.?" யமுனா கண்ணீரோடு கேட்டாள்.

மருத்துவரின் உடன் இருந்த மற்ற நர்ஸ்களும், துணை மருத்துவர்களும் இந்த உறவினர் கூட்டத்தை கடந்துச் சென்றனர்.

தலைமை மருத்துவர் சோகமாக அவர்களை பார்த்தார்.

"கிரிட்டிக்கல் கன்டிஷன். காப்பாத்த சான்ஸ் இல்ல.. கடைசியா பார்க்கிறதா இருந்தா பார்த்துட்டு வாங்க.. எப்ப வேணாலும் உயிர் பிரியலாம். மூச்சு விட்டுட்டு இருப்பதை வேணா போய் பாருங்க.." என்றவர் அவர்களை தாண்டி நடந்தாள்.

"புவனா.." பெருங்கத்தலோடு தரையில் அமர்ந்தாள் யமுனா. தலையில் அடித்துக் கொண்டாள்.

"அடிப்பாவி மகளே.. ஒத்தை பொண்ணுன்னு செல்லம் தந்து வளர்த்தியது தப்பா போயிடுச்சே.!" என்று அழுதாள்.

"இவ இப்படி செய்வான்னு தெரியாமே போச்சே அத்தை.." சுவாதி கண்ணீர் விட்டாள்.

"நான் போய் அவளை பார்த்துட்டு வரேன்.." என்றுவிட்டு புவனா இருந்த அறைக்குள் நுழைந்தாள் அபிராமி.

அறையே விஷத்தின் வாசமாய் இருந்தது. புவனாவின் கழுத்தில் இருந்தது ஒரு பைப். கழுத்தில் ஓட்டைப் போட்டு விஷத்தை வெளியே எடுக்க முயன்றிருந்தார்கள் மருத்துவர்கள். வாயில் நுரை பொங்கிக் கொண்டே இருந்தது. அபிராமிக்கு புவனாவின் முகம் பார்க்கவே சங்கடமாக இருந்தது. வீங்கி போயிருந்தது புவனாவின் முகம்.

மயங்கி, இறந்துக் கொண்டிருந்தவளை பத்து நொடிகளுக்கு மேல் பார்க்க முடியாமல் வெளியே நடந்தாள் அபிராமி.

கலங்கும் கண்களோடு வெளியே வந்தவள் "நீங்க போய் பார்த்துட்டு வாங்க அத்தை.." என்றாள் யமுனாவிடம்.

யமுனா மறுப்பாக தலையசைத்தாள்.

"பாதியில எமனுக்கு கொடுக்கவா வரம் வாங்கி அவளை பெத்தெடுத்தேன்.?" என்று அழுதபடி கேட்டாள்.

முருகன் தன் மனைவியை சமாதானம் செய்து அழைத்துச் சென்று மகளை கண்டு வந்தார்.

கடைசியாக மூர்த்தியும் கார்த்தியும் மனமே இல்லாமல் சென்று பார்த்தார்கள். இருவருக்குமே அரை உயிர் போய் விட்டது. முத்தமிழுக்கு வேண்டுமானால் அவள் தொல்லையாக இருக்கலாம். ஆனால் அவள் இவர்களின் செல்ல தங்கை. இருவரும் கைகளில் தூக்கி வளர்த்த அவர்களின் முதல் தோழி. முதல் குழந்தையும் கூட. ஆனால் இப்படி பாதியில் விட்டுச் செல்வாள் என்று கனவில் கூட நினைக்கவில்லை இருவரும்.

"உன் மச்சான் இவளை ஏத்துக்கிட்டு இருந்திருக்கலாம்.." என்றான் மூர்த்தி தங்கையின் தலையை வருடி விட்டபடி.

"அவனுக்கு பிடிக்கல அண்ணா.. நாம என்ன பண்ண முடியும்? வாழ போற அவனுக்கே பிடிக்காதபோது நாம கட்டாயப்படுத்தி கட்டி வைக்க முடியாது.!" என்றான் தங்கையின் கையை பற்றியபடி.

"நிஜமாவா செத்துடுவாளா.?" உடைந்து போய் கேட்ட அண்ணனின் தோளை தொட்டான் கார்த்திக்.

"வேற ஹாஸ்பிட்டல் மாத்தி பார்க்கலாமா.?" கடைசி நம்பிக்கையோடு தம்பியை பார்த்துக் கேட்டான் மூர்த்தி.

"வேற எந்த ஹாஸ்பிட்டல்.? பாதி வழியிலேயே பிணமா தூக்கிட்டுதான் வீட்டுக்கு போவோம்.? இவளை பார்த்தியா.. எந்த கட்டத்துல இருக்கான்னு.! செத்துட்டு இருக்கா அண்ணா.." என்றவன் கண்ணீர் வழிந்த தன் கன்னங்களை துடைத்துக் கொண்டான்.

"இவளால இப்ப அவன் வாழ்க்கையும் நாசம்.. இவ கல்லறை மேல எப்படி அவன் கல்யாணம் செய்வான்.?" அந்த நேரத்திலும் நண்பனின் நிலையை எண்ணி கவலைக் கொண்டான் கார்த்திக்.

"இப்பவும் மச்சானுக்குத்தான் சப்போர்ட் பண்ற நீ.! என் முன்னாடியாவது கடுப்படிக்காம இரு.. அவன்தான் இவளை பிடிக்கலன்னு சொல்லிட்டான் இல்ல? பிறகு அவன் ஏன் சந்தோசமா கல்யாணம் செய்ய மாட்டான்.?" எரிச்சலோடு கேட்டான் மூர்த்தி.

அதே நேரத்தில் அந்த அறையின் கதவை திறந்துக் கொண்டு உள்ளே எட்டிப் பார்த்தான் முத்தமிழ்.

"நாம போகலாம்.. அவன் பார்த்துட்டு வரட்டும்.." அண்ணனின் கைப்பிடித்து அழைத்துக் கொண்டு வெளியே நடந்தான் கார்த்திக்.

வாயிலை தாண்டும் முன் "அவளோட நிலைக்கு நீ எந்த விதத்திலும் பொறுப்பு கிடையாது தமிழ்.. பீல் பண்ணாத.!" என்று நண்பனுக்கு சமாதானம் சொல்லிவிட்டுதான் அங்கிருந்து சென்றான் கார்த்திக்.

மூடிய கதவின் அருகே நின்றிருந்த முத்தமிழ் தன் நண்பன் சொல்லிச் சென்றதை யோசித்தான். அவளின் மரணத்திற்கு தான் நேரடி காரணம் இல்லை என்று அவனுக்கு தெரியும். ஆனால் மறைமுகமாக அவன்தான் காரணமென்று குற்றம் சாட்டியது அவனின் மனம்.

இவனுக்கு நிச்சயத்தார்த்தம் என்று தெரிந்ததும் இவன் செல்லும் பாதையை மறித்து இவனை சந்தித்தாள் புவனா. கடைசி கடைசியாக பேசிவிட்டு போகட்டும் என்று எண்ணத்தோடுதான் தன் பைக்கிலிருந்தே கீழிறங்கினான் முத்தமிழ்.

"நிஜமா நீங்க அந்த பொண்ணை கல்யாணம் பண்ணிக்க போறிங்களா.?" அழுகையை மறைத்தபடி கேட்டவளிடம் ஆமென தலையசைத்தான் முத்தமிழ்‌.

"ஆனா என் லவ்வை ஏன் ஏத்துக்கல.? அவளை விட நான் எந்த விதத்துல குறைச்சல்.? நீங்க என்னை கல்யாணம் பண்ணிக்கங்களே.!" என்றாள் நீர் மின்னும் விழிகளோடு.

"அவளை நான் லவ் பண்றேன்.!" வானம் பார்த்து சொன்னான் அவன். புவனா இல்லையென தலையசைத்தாள்.

"கிடையவே கிடையாது. பொய் சொல்லாதிங்க.. அவளை நீங்க லவ் பண்ணல.. நான் உங்களை தினம் பார்த்துட்டு இருந்திருக்கேன். நீங்க எந்த டைம்க்கு எங்கே போவிங்க, உங்களுக்கு யாரெல்லாம் பிரெண்ட்ஸ், உங்களுக்கு என்ன பிடிக்கும்ன்னு கூட எனக்கு தெரியும். நீங்க அவளை லவ் பண்ணல.." என்றவளை எரிச்சலோடு பார்த்தவன் "ஸ்டால்க்கிங்? அதுவும் பெண்பிள்ளை.? உன் வீட்டுல உன்னை நல்லா வளர்த்தி விட்டுருக்காங்க.." என்றான்.

"என் லவ்வை தப்பா சொல்லாதிங்க.." என்றவளை கன்னத்திலேயே அறையை வேண்டும் போல இருந்தது அவனுக்கு. ஆனால் இவளுக்கும் தனக்கும் இடையில் என்ன சம்பந்தம் என நினைத்து அமைதியாகி கொண்டான்.

"காதலிக்கிறதா.? எது இதுவா.? விடாம துரத்துறது, எனக்கு தெரியாமலேயே என் பின்னாடி பாலோவ் பண்றது இதுதான் லவ்வா.?"

"நான் செஞ்சது ஒன்னும் தப்பு இல்ல.. என்னை சும்மா குறை சொல்லாம என் லவ்வை ஏத்துக்கங்க.."

"உனக்கும் எனக்கும் செட் ஆகாது.."

"ஆனா நான் எந்த விதத்துல குறைஞ்சவ.?" என்றவளை கேலியாக பார்த்தவன் "நீ எதுல குறையல.? என்னை விட ஒன்னரை அடி குறைஞ்சிதான் இருக்க.." என்றான்.

புவனாவிற்கு கோபமாக வந்தது. அவனை விட உயரம் குறைவுதான். ஆனால் இதெல்லாம் காரணமா என்று எரிச்சல் கொண்டாள்.

"உங்களுக்கு என்ன போகுது.? எனக்கு தேவைன்னா நான் ஸ்டூல் போட்டு ஏறி நின்னு முத்தம் தந்துக்கறேன்.!" என்றவளை சிவந்த விழிகளோடு பார்த்தான்.

"ஒரு பொண்ணு மாதிரி பேசவே மாட்டியா.? ஒரு டிகிரி கூட முடிக்காதவ நீ! முட்டாள் நீ.!"

புவனாவின் தன்மானம் சுட்டு விட்டது. ஆனாலும் தடுக்க இயலாத தன் காதலுக்காக அவனை ஏக்கமாக பார்த்தாள்.

"நான் வேணா அப்புறமா பாஸ் பண்ணிடுறேன்.." என்றாள் நம்பிக்கையோடு.

"உனக்கு எந்த வேலையும் செய்ய வராது.. உனக்கும் எனக்கும் நடுவுல எட்டு வயசு வித்தியாசம் வேற.. என் தேவைகள் எதுன்னு உன்னால புரிஞ்சிக்கவே முடியாது.." என்று ஒரே முடிவாக சொன்னான்.

"எல்லாமே சப்பைக்கட்டா இருக்கு.."

அவன் இவ்வளவு சொல்லிபிறகும் அவள் இதை சொன்னது அவனுக்கு கோபத்தை உண்டு பண்ணி விட்டது.

"எனக்கு உன்னை சுத்தமா பிடிக்கல.. என்னை விட்டுடு.. ஆம்பள பசங்க பின்னாடி சுத்தாம இனியாவது ஒரு பொண்ணு மாதிரி இரு.!" என்றுவிட்டு கிளம்பியவன், நிச்சயதார்த்தம் நடந்த நாளன்று தன் வருங்கால மனைவி மதுமிதாவோடு முக்கியமான விசயம் ஒன்றை பற்றி உரையாடிக் கொண்டிருந்த நேரத்தில்தான் புவனா விஷம் குடித்த செய்தி வந்து சேர்ந்தது‌.

நிச்சயதார்த்தம் பற்றி யோசிக்கவில்லை. மதுமிதா பற்றியும் யோசிக்கவில்லை. மருத்துவமனைக்கு பறந்து வந்து விட்டான். ஆனால் இவள் இப்போது இறக்க போகிறாள் என்ற செய்திதான் அவனை அதிகம் கஷ்டப்படுத்தி விட்டது.

அவளை விரும்பவில்லை அவன். ஆனால் அவள் தன் பொறுட்டு சாக வேண்டும் என்றும் விரும்பவில்லை‌

படுக்கையில் படுத்தபடி கொஞ்சம் கொஞ்சமாக மரணித்துக் கொண்டிருந்தவளை நோக்கி நடந்தான்.

அருகே இருந்த நாற்காலியில் அமர்ந்து அவளின் கையை பற்றினான்.

"புவி.." என்றான்.

தீவிர சிகிச்சை பிரிவின் வெளியே அவளின் குடும்பம் மொத்தமும் கண்ணீரும் கம்பலையுமாக இருந்தது.‌ முத்தமிழ் புவனாவை பார்க்கச் சென்று அரை மணி நேரத்திற்கு மேலாகிவிட்டது.

புவனாவிற்கு இறப்பை உறுதிப்படுத்தி விடலாம் என்று அங்கே வந்தார் மருத்துவர்.

"மனசை தேத்திக்கங்க.. பிறப்பும் இறப்பும் நம்ம கையில இல்ல.." என்றார்‌ புவனாவின் குடும்பத்தாரிடம்.

புவனா இருந்த அறையின் கதவை அவர் திறக்க இருந்த நேரத்தில் அந்த கதவை திறந்துக் கொண்டு வெளியே வந்தான் முத்தமிழ்.

மருத்தவர் அவனின் முகத்தை பார்த்தபடி உள்ளே சென்றார்.

முத்தமிழ் வராண்டாவில் இருந்த இருக்கை ஒன்றில் வந்து அமர்ந்தான். கையை கோர்த்தபடி கண்களை மூடியபடி அமர்ந்திருந்தவனின் அருகே வந்து அவனின் தோளில் கை பதித்தாள் அபிராமி.

"எதுவும் நம்ம கையில் இல்ல அண்ணா.." என்றாள். அவளின் வயிற்றில் முகம் புதைத்தான் முத்தமிழ். அவனால் அவனின் உணர்வுகளை வெளிச் சொல்ல முடியவில்லை. அண்ணனின் தலையை வருடி விட்டாள் அபிராமி. அண்ணனின் மனதில் உள்ள குற்ற உணர்வை நீக்கும் வழி அவளுக்கு தெரியவில்லை.

புவனாவை பரிசோதிக்க சென்ற மருத்துவர் அதிர்ந்து போன முகத்தோடு வெளியே வந்தார். யமுனாவையும் முருகனையும் பார்த்தவர் "உங்க பொண்ணு அபாய கட்டத்தை தாண்டிட்டா.." என்றார்.

அனைவரும் அவரை புரியாமல் பார்த்தனர்.

"உங்க பொண்ணு இனி பிழைச்சிப்பா.. இதுக்கு நான் கேரண்டி.." என்றார்.

மற்ற மருத்துவர்களுக்கு தகவல் தர கிளம்பினார் அவர்.

புவனாவின் பெற்றோரும், சகோதரர்களும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். தங்களின் காதுகளில் கேட்ட விசயம் உண்மைதான் என்பதை மற்றவர்கள் முகத்தை பார்த்துதான் அறிந்துக் கொண்டனர். யமுனா கடவுள்களுக்கு மனதிற்குள் நன்றி சொன்னாள்.

கார்த்திக் முத்தமிழின் அருகே வந்தான். அவனின் தோளை பற்றினான். தங்கையின் வயிற்றில் முகத்தை மறைத்தபடி அவளின் புடவையை இறுக்கிப் பிடித்துக் கொண்டிருந்தவன் நண்பனின் புறம் திருப்பினான்.

"என் தங்கச்சிக்கு பிழைக்கணுங்கற எண்ணமே இல்ல, அதனாலயே அவ பிழைக்க மாட்டான்னு டாக்டர் சொன்னாங்க.. ஆனா இப்ப எப்படி இந்த மிராக்கல்.? அரை மணி நேரமா அவளோடு அப்படி என்ன பண்ணிட்டு இருந்த நீ.?" சந்தேகமாக கேட்டான்.

"செத்துட்டு இருந்தவக்கிட்ட ஒரு சத்தியம் பண்ணி தந்தேன்‌. அவ பிழைச்சி வந்தா அவளையே நான் கல்யாணம் பண்ணிக்கறதா சத்தியம் பண்ணி தந்தேன்.." என்றான் முத்தமிழ்.

கார்த்திக் அவனை அதிர்ச்சியோடு பார்த்தான்.

"நீ ஒன்னும் அவளுக்கு வாழ்க்கை பிச்சை போட வேணாம்.." என்றான் உணர்வுகள் அற்ற குரலில்.

முத்தமிழ் எழுந்து நின்றான்.

"வாழ்க்கை பிச்சைங்கற வார்த்தையெல்லாம் அவ சாக கிடக்கும் முன்னாடியே சொல்லி இருக்கணும். என் வார்த்தை அவளை உயிர் பிழைக்க வச்சிருக்கு. அதுக்காகவாவது நான் என் வார்த்தையை காப்பாத்துவேன்.." என்றவன் "அவ கண் விழிச்ச பிறகு போன் பண்ணு, வரேன்.." என்றுவிட்டு வெளியே நடந்தான்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே..

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN