மணாளனின் மனம் 2

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
மூர்த்தியும் கார்த்தியும் தீவிர சிகிச்சை பிரிவின் வராண்டாவிலேயே காவல் இருந்தனர். இறந்து விடுவாள் என நினைத்த தங்கை மீண்டும் உயிர் பெற்றதே அவர்களுக்கு நிம்மதியை தந்தது.

"எப்ப கண் விழிப்பா.?" கவலையோடு கேட்டான் மூர்த்தி.

"தெரியல அண்ணா.. எனக்கும் பயமாதான் இருக்கு.. அவ எழுந்து உட்காரும் வரை பயமாவேதான் இருக்கும்.." என்று பதில் தந்தான் கார்த்திக்.

அடர் இருளில் ராத்திரி நேர சில்வண்டுகள் சத்தமிட்டுக் கொண்டிருந்தன.

ஜன்னல் அருகே நின்றபடி இருளை பார்த்துக் கொண்டிருந்தான் முத்தமிழ்.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் புவனாவை தன் வாழ்க்கை துணையாக ஏற்றுக் கொள்ள கூடாது என்று நினைத்திருந்தான் முத்தமிழ். அவளுடனான இதய கூடல் நிகழவே கூடாது என்று நினைத்தான். ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலை தன்னை எந்த இடத்தில் நிற்க வைத்துள்ளது என்ற விசயம் புரிந்ததும் அவனுக்கே அவன் மீது கோபம் வந்தது.

ஜன்னல் கம்பியை பிடித்திருந்த அவனின் வலது கரத்தின் விரல் முட்டிகளில் ரத்தம் சொட்டு சொட்டாக துளிர்த்திருந்தது.

கோபத்தில், ஆதங்கத்தில், இயலாமையில் தன் கையை சுவரில் குத்திக் கொண்டிருந்தான் அவன்.

இரவெல்லாம் அந்த ஜன்னல் அருகிலேயே நின்றிருந்தான். பைத்தியம் பிடித்தவன் போல இருளை வெறித்துக் கொண்டிருந்தான்‌‌.

அவனது வீட்டில் அவனது நிச்சயதார்த்தத்திற்காக அலங்கரிக்கப்பட்ட பூக்கள் அத்தனையும் வாடி காய்ந்து தரையில் உதிர்ந்துக் கொண்டிருந்தன. அவனின் மனமோ அந்த சருகை விட அதிகமாக உடைந்துப் போய்க் கொண்டிருந்தது.

மறுநாள் மதியம் இரண்டு மணியளவில் முத்தமிழின் போனுக்கு அழைத்தாள் அபிராமி.

"அண்ணா.. புவனா கண் திறந்துட்டா.." என்றாள்.

முன்பெல்லாம் தன் நாத்தனாரை குட்டை கத்தரிக்காய் என்றுதான் தன் அண்ணனிடம் குறிப்பிடுவாள் அபிராமி. அவளுக்கும் புவனாவிற்கும் ஆகவே ஆகாது.

தன்னை விட நான்கைந்து வருடம் பெரியவளான அபிராமியின் வயதிற்கும் புவனா மரியாதை தந்தது இல்லை. மாவட்ட ஆட்சியர் என இருப்பவளின் பதவிக்கும் புவனா மரியாதை தந்து இல்லை. அண்ணனின் ஆருயிர் காதல் மனைவி என்ற காரணமும் கூட அவளிடம் மரியாதையை உண்டு செய்யவில்லை. தன் காதலனின் செல்ல தங்கை என்ற காரணமும் மதிப்பை ஏற்படுத்தவில்லை. ஏனெனின் புவனா அப்படிதான். அவளுக்கு அபிராமியை சுத்தமாக பிடிக்காது. தன்னை திரும்பி கூட பார்க்காத முத்தமிழ் தங்கைக்காக உயிரையும் விடுவான் என்ற காரணம் பொறாமையை தந்திருக்கலாம்.

"வரேன்.." கட்டை குரலில் பேசிவிட்டு போன் இணைப்பைத் துண்டித்தான் முத்தமிழ்.

மருத்துவமனை நோக்கி புறப்பட்டான். அவன் சென்றிருந்தபோது கார்த்திக்கும் யமுனாவும் அந்த மருத்துவமனை வராண்டாவில் அமர்ந்திருந்தனர்.

இவனை கண்டதும் எங்கிருந்தோ வந்தாள் அபிராமி. "அண்ணா.." என்றவளை திரும்பி பார்த்தான். வேலைக்கு விடுமுறை விட்டுவிட்டு நாத்தனாரின் நலனில் அக்கறை எடுத்துக் கொண்டிருந்த தங்கையின் தலையை வருடி விட்டான்.

முத்தமிழின் சிவந்த விழிகளும், கருவளையங்களோடு இருந்த முகமும் அபிராமிக்கு வருத்தத்தை தந்தது. இக்கட்டான சூழலில் அண்ணன் மாட்டிக் கொண்டானே என்று கவலைப்பட்டாள்.

"அவளை போய் பார்க்கறியா.?" என கேட்ட தங்கையிடம் ஆமென தலையசைத்துவிட்டு உள்ளே நடநதான். புவனா மெள்ள இவனை திரும்பி பார்த்தாள். அந்த அரை மயக்கத்திலும் கூட இவனை கண்டுவிட்டு ஆச்சரியப்பட்டாள்.

முத்தமிழ் அவளருகே இருந்த நாற்காலியில் சென்று அமர்ந்தான். தொண்டையில் துளையிருந்ததால் அவள் மீண்டும் பேச சில நாட்கள் ஆகும் என்று தோன்றியது. அரை மயக்கத்தில்தான் இருந்தாள். சீரியஸ் கன்டிசனை தாண்டி விட்டாலுமே கூட அவளுக்கு தீவிர கண்காணிப்பும், சிகிச்சையும் தேவை என்று மருத்துவர்கள் சொல்லி இருந்தார்கள். அவளை வீட்டிற்கு அனுப்ப எப்படியும் இன்னும் இரண்டு வாரங்கள் ஆகலாம்.

அவளின் கையை பற்றினான் முத்தமிழ். புவனா அதிர்ச்சியும் ஆச்சரியமுமாக அவனை பார்த்தாள். அவளின் ஆச்சரியத்தின் காரணம் அவனுக்கு தெரியும். அவள் இறந்துக் கொண்டிருந்த நேரத்தில் சொன்ன எதுவும் அவளின் நினைவில் இருக்காது என்றும் தெரியும்.

அவளின் கையை பற்றி தன் முகத்தருகே கொண்டுப் போனான். புவனாவிற்கு இதய துடிப்பு நின்றுப் போகாமல் இருந்ததே பெரிய விசயம். அவளின் கையை வாயருகே வைத்துக் கொண்டவன் "சாரி.." என்றான்.

புவனாவின் விழிகள் அலை பாய்ந்தது. அவனிடம் எதையோ சொல்ல முயன்றாள். நிறைய கேட்க முயன்றாள். ஆனால் அவளால் அது இயலவில்லை.

"நீ பேச முடியாது.. நீ நிறைய பேசவும் செஞ்சிட்ட.. இப்ப நான் பேசுறேன். நீ கேளு.." என்றவனை பயத்தோடு பார்த்தாள்.

"நான் அன்னைக்கு சொன்னதை மறந்துடு.. உன்னோட காதலை நான் ஏத்துக்கறேன்.. நீ வீட்டுக்கு வந்ததும் நாம கல்யாணம் பண்ணிக்கலாம்.." என்றான்.

புவனாவின் விழிகளில் இருந்து கண்ணீர் வழிந்தது. அவளால் அதை நம்பவே முடியவில்லை. இன்னமும் காய்ச்சல் இருந்தது. மாத்திரை, மருந்துகளின் வீரியத்தால் மயக்கமாகவும் இருந்தது.

"அழாதே.." என்றுச் சொல்லி அவளின் கன்னங்களை துடைத்து விட்டான்.

அவளால் நம்பவே முடியவில்லை.

"நான் முட்டாள் மாதிரி இருந்துட்டேன்‌.. சாரி.!" என்றான் மீண்டும்.

அதிகமாய் உணர்ச்சிவசப்பட்டாள் புவனா. அதிகமாக அழுதாள்.

"ப்ளீஸ்.. அழாத.. அப்புறம் கன்டிஷன் சீரியஸாகிடும்.." சிறு குரலில் எச்சரித்தான்.

புவனா அழுதபடியே சரியென்று தலையசைத்தாள்.

வாய் பேச முடிந்திருந்தால் அவனிடம் பேச வேண்டியது அத்தனையையும் பேசியிருப்பாள். ஆனால் அப்போதைக்கு அவளால் முடியவில்லை.

புவனாவின் மருத்துவத்திற்கு செலவு செய்ய இருந்த முருகனை தடுத்து விட்டு முத்தமிழே பணம் செலுத்தினான்.

"எங்க வீட்டுக்கு பொண்ணுக்கு நீங்க ஏன் செலவு செய்யணும்.?" என கேட்டாள் யமுனா.

"என் பொண்டாட்டிதானே.? நானே செலவு பண்ணிக்கிறேன் அத்தை.." என்றவன் தனது வயலில் ஒரு பகுதியை அடமானம் வைத்து விட்டுதான் பணத்தை கட்டினான்.

புவனா கொஞ்சம் கொஞ்சம் பேசினாள்.

அடுத்த இரண்டு வாரங்களுக்கு பிறகு அவள் முழுதாக குணமாகினாள். அவள் வீட்டிற்கு செல்லலாம் என்று சொல்லிவிட்டார் மருத்துவர்.

அவளின் மருந்து மாத்திரைகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்த முத்தமிழை தயக்கமாக பார்த்தவள் "நிஜமாவே என்னை கல்யாணம் பண்ணிக்க போறிங்களா.?" என்றுக் கேட்டாள்.

திரும்பிப் பார்க்காமல் ஆமென தலையசைத்தான் முத்தமிழ்‌.

"ஏன் எனக்கு செலவு செஞ்சிங்க.?"

"ஏன் செலவு செய்யக் கூடாது.? என்னாலதானே நீ விஷம் குடிச்ச.. அப்ப நான்தானே செலவு செய்யணும்.?" என்றவன் அவளை திரும்பி பார்க்காமலேயே பதிலை சொன்னான்.

"விஷம் குடிச்சாதான் என் காதலை ஏத்துப்பிங்களா.?" கரைந்த குரலில் கேட்டவளை திரும்பி பார்த்தான். அவனின் பார்வையில் ஆயிரம் பதில்கள் இருந்தன. ஆனால் அதில் ஒன்றை கூட புவனாவால் புரிந்துக் கொள்ள முடியவில்லை.

அவளின் அருகே வந்தவன் அவளின் கழுத்தில் ஒட்டப்பட்டிருந்த பேண்டேஜை பார்த்தான்.

"விஷம் குடிச்சா காதலை ஏத்துப்பாங்களான்னு தெரியாது.! ஆனா விஷம் குடிச்சா நான் ஏத்துப்பேன்னு தெரிஞ்சிருந்தா நீ அஞ்சி வருசம் முன்னாடியே அதை குடிச்சி இருப்ப.." என்றான் அவளின் முகத்திற்கு பார்வையை திருப்பியபடி.

அவன் சொன்னது என்னவோ உண்மைதான். அவள் சாவுக்கு பயந்தவள் அல்ல. இவன் இப்படி இறங்கி வருவான் என்று தெரிந்திருந்தால் எப்போதோ விஷத்தை அருந்தி இருப்பாள். அது மட்டும் நூறு சதவீத உண்மையே.

புவனா மீண்டும் பேச தொடங்கும் முன் யமுனாவும் கார்த்திக்கும் அந்த அறைக்குள் வந்தனர்.

அண்ணனின் கைப்பிடித்தபடி வெளியே நடந்தாள் புவனா. முத்தமிழின் கையிலிருந்த மாத்திரை கவரை வாங்கிக் கொண்டாள் யமுனா.

ஆரம்பத்தில் முத்தமிழின் மீது அவளுக்கும் கோபம் இருந்தது. பெற்ற மனம் தன் பிள்ளை செய்த தவறை ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டது. அவளின் தவறுக்கு காரணமான முத்தமிழின் மீதே கோபம் வந்தது. ஆனால் இத்தனை நாளாக அவன் புவனாவின் மீது காட்டிய அக்கறையை கண்ட பிறகு அவனை வெறுக்க வேண்டும் என்று தோன்றவில்லை.

புவனா வீட்டிற்கு வந்த பிறகும் கூட முத்தமிழ் அவளின் வீட்டிற்கு அடிக்கடி வந்தான். வேலை முடிந்து வந்த நேரங்கள் மொத்தத்தையும் புவனாவிடமே செலவழித்தான்.

முத்தமிழின் ஊர் பசுமை மாறாத அழகிய கிராமம். அந்த ஊரில் முதல் ரக பணக்கார வீடு அவர்களுடையது. பக்கத்து ஊரில் இருந்தது புவனாவின் வீடு. பக்கத்து கிராமத்தில் புவனாவின் குடும்பம்தான் அதிக வசதியுடையது.

முத்தமிழும் புவனாவும் பணமெனும் தரத்தில் சமமாகதான் இருந்தார்கள். ஆனால் காதல் வாழ்க்கைக்கு இந்த தரம் சமமாக இருக்க வேண்டும் என்று எதிர்ப்பார்க்கவில்லை முத்தமிழ். அவன் எதிர்பார்த்த பெண் புவனா இல்லை. மதுமிதாவின் குணமும் கூட அவனுக்கு சரிப்பட்டு வராததுதான். ஆனால் புவனாவோடு ஒப்பிடுகையில் மதுமிதா எவ்வளவோ பரவாயில்லை என்றுதான் தோன்றியது அவனுக்கு.

நடந்து முடிந்ததை நினைக்கவே விரும்பவில்லை அவன். புவனாவின் வீட்டிற்கு செல்லும்போது கூட தன் முகத்தில் இருந்த வருத்தங்களை காட்டாமல் இருக்கவே முயன்றான்.

கார்த்திக்கும் அபிராமியும் அவர்கள் பணியின் காரணமாக அந்த மாவட்டத்தின் தலைநகரில் இருந்தனர்.

மூர்த்தியும் சுவாதியும் அடுத்த மாவட்டத்தில் குடியிருந்தார்கள். மூர்த்தி ஒரு வருடமாக அங்கேதான் பணி செய்து வருகிறான்.

வீட்டில் புவனாவும் அவளின் பெற்றோரும்தான் இருந்தார்கள்.

கார்த்திக்கின் மீது எந்த வித வருத்தமும் இல்லை முத்தமிழுக்கு. ஆனால் மூர்த்தியின் மனதில் தன் மீது கோபம் இருக்கும் என்று தெரியும். தெரிந்தும் தெரியாமலும் கூட அவன் முறைப்பதை முத்தமிழ் விரும்பிவில்லை. அவன் இங்கே இல்லாமல் போனது அவனுக்கு வசதியாகவே இருந்தது.

தினம் இங்கே வந்த முத்தமிழ் புவனாவிற்கான பணிவிடைகளை முகசுளிப்பு இல்லாமல் செய்தான். மருத்துவமனையிலும் கூட இப்படிதான் இருந்தான்.

அவளுக்கான மாத்திரைகளை நேரம் பார்த்து எடுத்து தந்தான். அவளை அடிக்கடி செக்கப்பிற்கு அழைத்துச் சென்றான்‌. அவளின் கழுத்தில் இருந்த காயமும் முழுதாய் குணமான பிறகே அவனுக்கு முழு நிம்மதி பிறந்தது.

புவனாவிற்குதான் சந்தோசமும் பயமும் ஒன்றுச் சேர்ந்துக் கொன்றது.

நிமிடங்களை மகிழ்ச்சியோடு கடக்க இயலாமல் குழம்பினாள்.

அந்த வார இறுதியில் கார்த்திக்கையும், மூர்த்தியையும் வீட்டிற்கு வர சொன்னான் முத்தமிழ்.

அனைவரும் வீடு வந்து சேர்ந்த பிறகு முத்தமிழின் வீட்டில் இருந்து புவனாவை முறைப்படி பெண் கேட்டு வந்தார்கள்.

புவனாவிற்கு பட்டுப்புடவை கட்டி அழைத்து வந்து அவளை நடு கூட்டத்தில் அமர வைத்தார்கள் அபிராமியும், சுவாதியும்.

அவளுக்கு எதிராக பட்டு வேட்டை சட்டையில் முத்தமிழ் அமர்ந்திருந்தான். அனைவரிடமும் சிரித்து பேசினான். புவனா அவனை பார்த்த வேளையில் அவளை பார்த்தும் புன்னகைத்தான்.

திருமண நாள் குறித்தார்கள். அன்றைய நாளிலேயே நிச்சயத்தார்த்தத்தை நடத்தி முடித்தார்கள். புவனாவின் விரலில் மோதிரம் அணிவித்தான் முத்தமிழ். அவளும் கண்கள் கலங்க அவனுக்கு மோதிரம் போட்டு விட்டாள்.

நடப்பது அனைத்தும் கனவு போலவே இருந்தது அவளுக்கு. ஆனந்த மிகுதியில் அடிக்கடி கண்ணீர் துளிர்த்தது. யாரும் அறியா வண்ணம் அவள் கண்ணீரை துடைத்தாலும் அனைத்தையும் பார்த்துக் கொண்டேதான் இருந்தான் முத்தமிழ்.

தேதி குறித்த நாளில் இருவருக்கும் திருமணமும் நடந்தது. அவர்களுக்கான திருமணத்திற்கு தேவையான ஒவ்வொன்றையும் புவனாவே பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்தாள். இரு வீட்டிலும் இதுதான் கடைசி திருமணம் என்பதால் சீரும் சிறப்புமாக திருமணத்தை நடத்தினார்கள். பணத்தை நிறையவே செலவு செய்தார்கள் புவனாவின் வீட்டில்.

தன் ஐந்து வருட காதல் வென்று விட்டதையும், ஊரறிய முத்தமிழின் மனைவியாகி விட்டதையும் எண்ணி மகிழ்ந்தாள் புவனா.

அதிகமாய் மகிழ்ந்துக் கொண்டிருந்தவள் முதலிரவு நேரத்தில் தன் மொத்த மகிழ்ச்சியும் மண்ணோடு புதைந்து போகும் என்று கனவில் கூட நினைக்கவில்லை.

பூவலங்கார கட்டிலில் கவிழ்ந்துப் படுத்திருந்த முத்தமிழ் கதவு தாழிடப்படும் சத்தம் கேட்டு எழுந்து அமர்ந்தான்.

பால் சொம்பை மேஜையின் மீது வைத்தவள் கட்டில் அருகே வந்து தயக்கமாக நின்றாள். முத்தமிழ் அவளுக்கு இடம் விட்டு நகர்ந்து படுத்தான்.

"உங்ககிட்ட ஆசிர்வாதம் வாங்கிக்க சொல்லி அம்மா சொல்லி விட்டாங்க.." தரை பார்த்து நின்றபடி சொன்னாள் புவனா.

"அதெல்லாம் ஒன்னும் வேணாம்.. அந்த லைட்டை ஆப் பண்ணிட்டு வந்து தூங்கு.." கொட்டாவி விட்டபடி அந்த பக்கம் திரும்பிப் படுத்தான்.

"கோபமா இருக்கிங்களா.?" இதை தவிர வேறு என்ன கேட்பது என்று தெரியவில்லை அவளுக்கு.

"என்ன கோபம்.?" என்றவன் கண்களை மூட முயன்றான்.

"அப்புறம் ஏன் அந்த பக்கம் திரும்பி படுத்துட்டு இருக்கிங்க.?" இவள் கேட்டதும் சட்டென எழுந்து அமர்ந்தான்.

"சாரி.." என்றான்.

"ஏன் சாரி சொல்றிங்க.?" எனக் கேட்டவளுக்கு அழுகை வரும்போல இருந்தது.

"உனக்கு பிடிக்காதுன்னு தெரியாது. இனி சாரி சொல்லல.." என்றவன் எழுந்து நின்றான்.

அவளுக்கு கோபமாக வந்தது. "வித்தியாசமா நடந்துக்கறிங்க.."

"ஒரு வித்தியாசமும் இல்ல.. நீ உடனே இதுக்கும் விஷம் குடிச்சிடாதே.!" என்றான் எரிச்சலை மறைத்தபடி.

புவனாவிற்குள் நடுக்கம் உருவாகியது.

"ஏன் இப்படி சொல்றிங்க.?" என்றாள் தயக்கமாக.

"உன் வேலையே இதுதானே.! பிளாக்மெயில், உதவாத போராட்டம், சூஸைட்.." என்றவனது குரலில் இப்போது எரிச்சல் அதிகமாகி இருந்தது.

"ஆனா நான் ஒன்னும் என்னை கல்யாணம் பண்ணிக்கங்கன்னு உங்களை கேட்கலையே.!" சந்தேகமாக கேட்டவளை முறைத்தான் அவன்.

"உன் முட்டாள்தனத்தால நீ செத்தா எனக்கு என்ன போகுது.? ஆனா நீ செத்தா உன் குடும்பம் என் தங்கச்சியை மறைமுகமாக வெறுப்பாங்க. என் தங்கச்சியோட லைஃப் எந்த ஒரு சூழ்நிலையிலும் துளி கூட சிதைய கூடாது. அதுக்காக மட்டும்தான் பிடிக்கலன்னாலும் கூட தலையெழுத்தேன்னு உன்னை கல்யாணம் செஞ்சேன்.!" என்றான்.

புவனாவின் கன்னங்களில் கண்ணீர் உருண்டது.

"உன்னை பிடிக்கலன்னு நான் தெளிவாதான் சொன்னேன். ஆனா நீதான் கேட்கல. உன் சோம்பேறித்தனமோ, உன் எண்ணங்களின் லட்சணமோ எதுவும் எனக்கு பிடிக்கல.. முட்டாள் கூட வாழ்க்கைப்படணும்ன்னு எனக்கு விதி.. உன்னை சொல்லி என்ன பண்ண.?" என்றான் கோபத்தோடு.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN