மணாளனின் மனம் 3

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
புவனா தன் கண்ணீரை துடைத்துக் கொண்டு நிமிர்ந்தாள்.

"ஆனா நீங்க வெறுக்கும் அளவுக்கு அவ்வளவு கெட்டவ இல்ல நான்.. உங்களை ரொம்ப லவ் பண்றேன்.." என்றாள்.

முத்தமிழ் அவளின் தாடையை பற்றினான். "லவ்.?" என்றவன் அங்கிருந்த கண்ணாடியின் அருகே அழைத்துச் சென்றான்.

"இது என்னன்னு தெரியுதா.?" என்றான் அவளின் தொண்டை பகுதியில் இருந்த காயம் ஆறிய வடுவைக் காட்டி.

"உன்‌ எண்ணத்தின் லட்சணம்தான் இது. விஷம் குடிச்சி நீ செத்துப்போனா அதுக்கு பிறகு நான் ஆயுசுக்கும் மனம் வெந்து சாவேன்னுதான் நீ விஷம் குடிச்ச.." என்றான்.

புவனா மறுப்பாக தலையசைத்தாள்.

"உங்களுக்கு கல்யாணம்ன்னு தெரிஞ்சதும் ரொம்ப வலிச்சது. அதனால்தான் சாக டிரை பண்ணேன்.." என்று கண்ணீர் விட்டவளுக்கு தெரியாது அவளை கல்யாணம் செய்து வந்து முறைத்து நிற்கும் இவனேதான் அவளை சாவின் பிடியில் இருந்தும் அழைத்து வந்தான் என்று.

"எனக்கு கல்யாணம்ன்னா உனக்கு ஏன் வலிக்குது.?"

"லூசு மாதிரியேதான் கேள்வி கேட்பிங்களா.?" அழுகையோடு கேட்டவளை முறைத்தான்.

"ஐ லவ் யூ. உங்களுக்கு கல்யாணம் ஆனா எனக்கு வலிக்காதா.?" என்றாள்.

"நீதான் ஒன்சைட்டா லவ் பண்ண. உன் காதலை ஏத்துக்க வேண்டிய அவசியம் எனக்கு கிடையாது. இது என் லைஃப். நான் யாரை வேணாலும் கல்யாணம் பண்ணுவேன். நீ ஏன் விஷம் குடிக்கற.. உன் காதலை உன்னோடு வச்சிக்க வேண்டியதுதானே.?" என்றவனை தன்னிடமிருந்து தூர தள்ளினாள்.

"நான் செத்தா உங்களுக்கு என்ன போகுது.? என்னை நீங்க லவ் பண்ணல. உங்களுக்கும் என் சாவுக்கும் நடுவுல என்ன சம்பந்தம்.? நான் செத்தா உங்களுக்கு ஏன் மனம் வேக போகுது.?" என்றாள் மூக்கு சிவக்க‌.

அவளின் கழுத்தை கடித்து ரத்தம் குடிக்கும் அளவுக்கு கோபம் வந்தது முத்தமிழுக்கு.

"என் தங்கச்சிக்காக நீ சாக கூடாது.." என்றான்.

"உங்க தங்கச்சியை மாதிரியே நீங்களும் பேசாதிங்க.. நான் செத்தா என் அண்ணன் அவளை வெறுக்க மாட்டான். அதையும் மீறி வெறுத்தா அவனுக்கு லவ் இல்லன்னுதான் அர்த்தம், உங்களை போல! ஏனா லவ் இல்லாதவங்கதான் உங்களை போல தங்கச்சி அக்கான்னு சப்பை கட்டு கட்டுவாங்க.." என்றவள் கண்ணாடியில் தெரிந்த தன் கழுத்தை பார்த்தாள்.

மருத்துவமனையில் மயக்கம் தெளிந்து எழும் நேரமெல்லாம் இவன்தான் தெரிந்தான். அதை நினைத்தவளுக்கு கோபமாக வந்தது.

"என்னை காப்பாத்திய டாக்டர் மட்டும் கையில கிடைச்சா சங்கை கடித்து துப்பிடுவேன்.!" என்று பற்களை அரைத்தபடி சொன்னாள்.

"பிழைச்சும் நரகம்ன்னா, இதுக்கு செத்தே இருக்கலாம்.. ஆனா.." என்றபடி கணவன் புறம் திரும்பியவள் "என்னை பத்தி உங்களுக்கு சரியா தெரியல. நரகத்துலயே நீங்க என்னை சிறை வச்சாலும் சம்மதம். நீங்க கூட இருந்தா எந்த நரகமா இருந்தாலும் அது எனக்கு சொர்க்கம்தான். நான் லூசு மாதிரி கூட தெரிவேன் உங்களுக்கு. ஆனா என்னை நீங்க புரிஞ்சிக்கல.!" என்றாள்.

முத்தமிழ் அவளை வெறித்தான்.

"பைத்தியம்.." என்று விட்டு வந்து கட்டிலில் படுத்தான்.

தலையில் சூட்டியிருந்த பூச்சரத்தை கழட்டியவள் கவிழ்ந்துப் படுத்திருந்தவனின் முதுகின் மீது விசையோடு வீசினாள். வலிக்கவில்லைதான். ஆனால் பூச்சரம் தன் மீது விழுந்ததை அவனால் உணர முடிந்தது. அவளை திரும்பி பார்த்தான்.

"பர்ஸ்ட் நைட்டையே நாசம் பண்ணிட்டிங்க.. ஐ ஹேட் யூ.." என்றவள் பஞ்சு தலையணை ஒன்றை எடுத்து அவன் முகத்தின் மீது வீசினாள்.

முத்தமிழ் தலையணையை முகத்திலிருந்து தூர எடுத்தான். மூக்கு லேசாக வலித்தது. தேய்த்து விட்டுக் கொண்டான்.

"இதுக்கெல்லாம் நான் உங்களை பழி வாங்காம விட மாட்டேன்.!" என்றவள் கண்ணீரை துடைத்தபடி கட்டிலில் அமர்ந்தாள்.

"நியாயப்படி நான்தான் பழி வாங்கணும்.." என்று முனகியவன் மீண்டும் கவிழ்ந்துப் படுத்தான்.

புவனாவிற்கு அழுகையாக வந்தது. இவனின் உதவாத காரணங்களுக்கு விளக்கம் தேடவும் அவளுக்கு தெரியவில்லை. அவனின் வீண் ‌ கோபத்தை சரி செய்யும் வழியும் புரியவில்லை.

"மாமா.." என்று அவனின் தோளை தட்டினாள். அவனின் கையை தட்டி விட்டவன் "என்ன.?" என்றான்.

"இல்ல.. பால் வீணா போயிடும். குடிச்சிட்டு தூங்கிக்கிறிங்களா.? இல்ல காலையில் அத்தை கேட்கும்போது நீங்க சண்டை போட்டு தூங்கிட்டத்தாலதான் பால் வீணாயிடுச்சின்னு சொல்லட்டா.?" என்றாள்.

முத்தமிழ் துள்ளியெழுந்து அமர்ந்தான்.

"இந்த ரூமுக்கு வெளியே நீயும் நானும் புருசன் பொண்டாட்டி. தேவையில்லாம நம்மை பத்தி என் வீட்டுலயோ இல்ல உன் வீட்டுலயோ சொல்லி அது மூலமா என் தங்கச்சி லைப்க்கு மட்டும் ஏதாவது சிக்கல் வந்ததுன்னா.. அப்புறம் உன்னை கொன்னுட்டுதான் அடுத்த வேலை பார்ப்பேன்.!" என்று எச்சரித்தான்.

"ஆவூன்னா தங்கச்சி தங்கச்சின்னே சொல்றிங்க.. உங்க தங்கச்சி பேரை சொல்லி நான் எனக்கு தேவையானதை சாதிச்சிக்கலாம்ன்னு ஐடியா தரிங்களா என்ன.?" என்றாள் சந்தேகத்தோடு.

முத்தமிழ் அவளின் முகத்தை பார்த்தான். கவராயம் பயன்படுத்தி வரைந்தது போன்று சரியான வட்ட முகம். அதுவே அவனுக்கு பிடிக்கவில்லை. வட்ட வடிவில் பூக்களை போலவே இருந்தது அவளின் முகம். நீள முடி இல்லை‌. அதை அவன் கேட்கவும் இல்லை. மேடில்லாத நெற்றி. அது மட்டும்தான் அவனுக்கு பிடித்திருந்தது. மற்ற லட்சணங்கள் அழகாகவே இருந்தாலும் அவனுக்கு பிடிக்கவில்லை.

"கேனத்தனமா யோசனை செய்யாதே. அப்புறம் நான் என்ன செய்வேன்னே எனக்கு தெரியாது.." என்றவனின் கையில் பால் சொம்பை எடுத்து திணித்தாள்.

"நீங்க என்ன செஞ்சாலும் நான் பீல் பண்ண மாட்டேன்.. ஏனா ஐ லவ் யூ.." என்றாள்.

பாலை ஒரே மடக்கில் குடித்து விட்டு சொம்பை அவளிடமே தந்தான்.

"நான் சரக்கடிச்சாலும், தம் அடிச்சாலும் உனக்கு பிடிக்குமா.?"

புவனா வெளிறிப் போன முகத்தோடு மறுப்பாக தலையசைத்தாள்.

"லவ்வு.?" என்று கேட்டவனுக்கு தயக்கமாக ஆமென தலையசைத்தாள் புவனா.

"வீட்டுக்கே வராம ஊரை சுத்தினா அப்ப பிடிக்குமா.?" மீண்டும் இடம் வலமாக தலையசைத்தாள் புவனா.

"ஆனா இதெல்லாம் ப்ளாக்மெயில்.." என்றாள்.

"நீ உன் கோட்டை தாண்டி உரிமை எடுத்துக்க டிரை பண்ணா வைப்பாட்டி கூட வைப்பேன்.." என்று அவன் சொல்லி முடிக்கும் முன்பே அவளின் கன்னங்களில் கண்ணீர் கோடுகள் போட்டது.

"நானா உங்களை கட்டிக்கச் சொல்லிக் கேட்டேன்.?" என்றாள் சிறு குரலில்.

"அதே டாப்பிக்குக்குதான் திரும்பி வந்திருக்க.. நான் கூட இருந்தா நரகத்தையும் என்ஜாய் பண்ணுவேன்னு சொன்ன நீ.! ஆனா நீ லைனை கிராஸ் பண்ணா நானே உனக்கு நரகமா மாறுவேன்‌.." என்று எச்சரித்தவன் வாயை துடைத்துக் கொண்டு மறுபக்கம் திரும்பிப் படுத்தான்‌.

முன்பை விட அதிகமாக அழுகை வந்தது புவனாவிற்கு. அழுதபடி தலை குனிந்தவள் கையில் காலியாய் கிடந்த பால் சொம்பை பார்த்தாள்.

அவன் தன் பேச்சை கேட்டானா இல்லை கேட்க மறுத்தானா என்று அவளுக்கு சரியாக தெரியவில்லை. ஆனால் இந்த பால் சொம்பு புது நம்பிக்கை வெளிச்சத்தை தந்தது.

பால் சொம்பை மேஜையின் மீது வைக்கும்போதுதான் அவன் பாலில் தனக்கு பங்கு தரவில்லை என்பது நினைவிற்கு வந்தது.

இது போன்ற ஒரு சூழ்நிலையிலும் தன்னால் மட்டும் எப்படி இப்படியெல்லாம் யோசிக்க முடிகிறது என்று நினைத்து ஆச்சரியப்பட்டாள்.

கட்டிலின் ஒரு ஓரமாக படுத்துக் கொண்டாள். கை கால்கள் மோதினால் அதற்கும் கத்தி விடுவானோ என்று கவலையாக இருந்தது. சொன்னது போலவே குடிப்பானோ, வைப்பாட்டி வைத்துக் கொள்வானோ என்று நினைத்துக் கொண்டிருந்தவளுக்கு அந்த பயத்தில் தூக்கமே வரவில்லை.

அருகில் இருப்பதே பெரும் வரமாக இருந்தது. அதை சாபமாக மாற்றி விடுவானோ என்று பயமாக இருந்தது. செத்து கெடுத்தவனை போல திருமணம் செய்த பிறகும் கொல்கிறானே என்று அவனை மனதுக்கு திட்டினாள்.

கவலையோடு திரும்பி படுத்தாள்.

"அடிக்கடி புரளாத.. உன்னால தூக்கம் கூட கெடுது.." எரிச்சலாக முனகினான் முத்தமிழ்.

'அடப்பாவி.. தூங்கி எழுந்தியா.? இல்ல தூங்காமலேயே திட்டுறியா.? புரண்டு படுக்கறதை கூட குறைன்னு சொன்ன மகராசன் நீயாதான் இருப்ப..' என்று நினைத்தவள் புரளாமல் எப்படி தூங்குவது என்று யோசித்தாள்.

இரவு கடந்துக் கொண்டே இருந்தது. திருமணம் நடைபெற்றது உடலுக்கு சோர்வை தந்தாலும் கண் மூடினால் உள்ளம் தூங்க மறுத்தது. கடிகாரத்தின் ஓடும் சத்தம் கேட்டு அதன் நொடிகளை எண்ணினாள்.

'சிவாராத்திரியில் விழிச்சிட்டு இருந்திருந்தா கூட புண்ணியம் கிடைச்சிருக்கும்..' என்று எண்ணினாள்.

முதல் கோழி கூவியது. 'அதுக்குள்ள நடுராத்திரி ஆயிடுச்சா..' அவனை போலவே கவிழ்ந்து படுத்தால் உறக்கம் வருமா என்று யோசித்தவள் கவிழ்ந்து படுத்தாள். ஏற்கனவே பலமுறை அப்படியும் இப்படியுமாக திரும்பி படுத்திருந்ததின் காரணமாக தாலி கயிறு மேலேறி விட்டது. இவள் கவிழ்ந்து படுக்கவும் ஆபரேசன் காயம் இருந்த கழுத்து பகுதியிலேயே நறுக்கென்று குத்தி விட்டது தாலி.

"அம்மா.." சிறு கத்தலோடு எழுந்து அமர்ந்தாள். அவளுக்கு முன்பே அவன் எழுந்து விட்டான். எழுந்த நொடியில் விளக்கை ஒளிர விட்டுவிட்டு வந்தான்‌.

"என்னாச்சி.?" என்றான் பதட்டமாக.

அவளின் விழிகள் கலங்கிக் கொண்டிருந்தது‌. முகத்தில் வலி அப்படியே தெரிந்தது.

"தாலி குத்திடுச்சி.." என்றாள் கழுத்தை சுட்டிக்காட்டி.

அருகில் வந்து அமர்ந்தான். அவளின் தாடையை பற்றி உயர்த்தினான். கழுத்தில் தாலி குத்திய இடத்தில் சிறு அடையாளம் தெரிந்தது.

"ஹாஸ்பிட்டல் போகலாமா.?" எனக் கேட்டான்.

வேண்டாமென தலையசைத்தாள். தாலி குத்திய இடத்தை இரண்டு மூன்று முறை ஊதி விட்டான்.

"காதலே இல்ல.. எனக்கு உங்க கருணை ஒன்னும் வேணாம்.." வலி குறைந்த பிறகு அவனை தூர தள்ளினாள்.

முத்தமிழ் அவளை முறைத்தான்.

"கருணையும் இல்ல கத்திரிக்காயும் இல்ல.. நடுராத்திரியில் காதோரம் கத்தித் தொலைஞ்சா எப்படி மனுசன் தூங்கறது.?" எனக் கேட்டவன் அவளை முறைத்தபடியே படுத்தான்.

"அதுதானே பார்த்தேன்.. நான் கூட திடீர் நல்லவராகிட்டிங்களோன்னு நினைச்சிட்டேன்.!" என்றவள் தனது தலையணையில் தலை சாய்த்தாள். மறக்காமல் தாலியை ஓரமாக தள்ளி விட்டுக் கொண்டாள்.

புரண்டான் முத்தமிழ். "அந்த லைட்டை ஆப் பண்ணு.." என்றான்.

"தேவைன்னா நீங்களே ஆஃப் பண்ணுங்க‌.." என்றவள் இந்த பக்கம் தலையை திருப்பிக் கொண்டாள்.

"நீதானே கடைசியா படுத்த.. அப்ப நீதான் ஆஃப் பண்ணனும்.!" என்றான் அவன் கவிழ்ந்து படுத்தபடியே.

"சாரி.. எங்களுக்கு அப்படி யாரும் சொல்லி தரல. யார் லைட்டை போட்டாங்களோ அவங்களேதான் அதை ஆஃப் பண்ணவும் செய்யணும்.." என்றவள் பெட்ஷீட்டை இழுத்து முகத்தோடு போர்த்திக் கொண்டாள்.

முகத்தைத் தேய்த்தபடி எழுந்து நின்றான் முத்தமிழ்.‌ ஆத்திரமாக வந்தது. ஓரமாக படுத்திருந்தவளை ஓங்கி உதைத்துக் கீழே தள்ள வேண்டும் போல இருந்தது. கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டுச் சென்று விளக்கை அணைத்தான்‌.

புவனா அந்த பாலைவனத்தின் இடையே நடந்துக் கொண்டிருந்தாள். "அவருக்கு என்னை பிடிக்கல.! நான் வாழவே கூடாது.." என்று அழுதபடி நடந்தாள்.

"புவனா.."

"அவரோட குரல்தான். ஆனா அவருக்கு என்னை பிடிக்கல.!" அழுதாள் பாலைவன மணலில் மண்டியிட்டபடி.

அழுதுக் கொண்டே இருந்தாள்.

"புவனா உன்னை எனக்கு பிடிச்சிருக்கு.."

"பொய் சொல்றாரு.!"

"சத்தியமா பிடிச்சிருக்கு.."

நம்பிக்கை இல்லை. ஆனால் அவன் சொன்ன பிறகு நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. திரும்பி பார்த்தாள். அவனின் முகம் நெருக்கத்தில் தெரிந்தது. கண்களை மூடிக் கொண்டிருந்தான்.

"முத்தமிழ் மாமா.." என்றாள்.

அவனின் கண்கள் மெள்ள திறந்தது. அவளின் இதழில் உருவான புன்னகை முகம் முழுவதையும் ஆக்கிரமித்தது.

"மாமா.." என்றாள்.

புருவம் நெரித்தான் அவன். அவனின் முகத்தில் கோபம் தெரிந்தது.

புவனாவின் மூளையில் சுளீரென்று அடி விழுந்தது. சுற்றும் முற்றும் பார்த்தாள்.

"பொழுது விடிஞ்சிடுச்சி.. நான்தான் கனவு கண்டிருக்கேன்.!" என்று நெற்றியில் அடித்துக் கொண்டவள் அவசரமாக எழ முயன்றாள். ஆனால் அவனின் கரம் இரும்பு தூணென அவள் மீது கிடந்தது. அதையும் இப்போதுதான் கவனித்தாள் அவள்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN