மணாளனின் மனம் 6

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
புவனா தன் அதிர்ச்சியில் இருந்து வெளிவர ஐந்து நிமிடங்கள் ஆனது.

கணவனை தேடினாள். அவன் கட்டிலில் அமர்ந்து லேப்டாப்பை நோண்டிக் கொண்டிருந்தான்.

"மாமா.." பத்திரத்தோடு இவனருகே வந்தாள்.

"இது நிஜமா ஓவர் தெரியுங்களா.? நான் எப்படி இந்த கடனை அடைப்பேன்.?"

"அப்படின்னா அதை கிழிச்சி போட்டுட்டு போ.. உன்னை கல்யாணம் பண்ணதுக்கு எனக்கு ஆன நட்டத்துல சேரட்டும் இது.." எரிந்து விழுந்தபடி சொன்னான்.

"எட்டு லட்சம்.?" சொல்லும்போதே திகிலாக இருந்தது. எட்டு லட்சத்தை செலவு செய்ய ஒரு நாள் கூட ஆகாதுதான். ஆனால் டிகிரி கூட முடிக்காத தன்னால் எப்படி இந்த பணத்தை சம்பாதிக்க இயலும் என்று யோசித்து பயந்தாள்.

"நூத்துக்கு இரண்டு ரூபா வட்டி அதுக்கு. மாசம் பதினாறாயிரம் கட்டணும்.. நீ வட்டி கட்டாம விட்டாலே போதும். இரண்டு வருசத்துல நிலத்தை கடன்காரனே எடுத்துப்பான்.." கூடுதல் தகவல் சொன்னவன் கூலாக தன் வேலையை பார்த்தான். ஆனால் இவளோ குற்ற உணர்வில் சிலையாய் நின்றாள்.

எட்டு லட்சம் பெரிய தொகை. அதை விட மாதம் பதினாறாயிரம் அதை விட பெரியதாக தோன்றியது.

"ஒரு வருசத்துக்கு லட்சத்து அறுபதாயிரம் வட்டி மட்டுமே கட்டணுமா மாமா.?"

பற்களை கடித்தபடி நிமிர்ந்தான்.

"முட்டாள்.. வருசத்துக்கு ஒரு லட்சத்துக்கு தொண்ணூத்தி இரண்டாயிரம் வட்டி வருது.. ஒரு வருசத்துக்கு பன்னென்டு மாசம்.. உன்னையெல்லாம்.."

"படிக்க வச்சதுக்கு பதிலா கழுதை மேய்க்க போட்டிருக்கலாம்.." அவனுக்கு பதில் இவள் முடித்தாள்.

"இல்ல.. கழுதை மேச்சா கூட காசு வரும். அதுவும் உழைப்புதான்.. உன்னையெல்லாம் உங்க அம்மாவும் அப்பாவும் பெத்துக்காமலேயே இருந்திருக்கலாம்.." என்றான்.

"உன் கூட பேச பேச பி.பி ஏறுது.." என்று தலையை பிடித்தான்.

"நான் வேணா தலையை பிடிச்சி விடட்டா மாமா.?"

தலையை பிடித்தபடி நிமிர்ந்து பார்த்தான்.

"தயவு செஞ்சி தூரம் போ.. உன்னை மாதிரி ஒரு சோம்பேறியை பக்கத்துல வச்சிட்டு இருந்தா தலைவலி மட்டுமில்லாம எல்லா வலியும் வரும்.." என்று சீறினான்.

புவனா பத்திரத்தின் கணக்கை மனதில் போட்டுப் பார்த்தாள். எப்படி கணக்கிட்டாலும் தன்னால் கட்ட இயலாத தொகை அது என்று மட்டும் புரிந்தது.

"நான் தூர போறேன்.. ஆனா ஒரு டவுட்.. இந்த பணத்தை நான் எங்க அப்பாக்கிட்ட வாங்கிட்டு வந்து கட்டிட்டு அப்புறமா நான் படிச்சி வேலைக்கு போன பிறகு அப்பாவுக்கு திருப்பி தந்திடட்டா.? எங்க அப்பா வட்டி கேட்க மாட்டார்.."

முத்தமிழ் கண்களை மூடி திறந்தான்.

"உனக்கு என்ன வயசு.?"

யோசித்து கணக்கிட்டாள் புவனா. நெற்றியில் அடித்துக் கொண்டான் அவன்.

"இருபத்தி மூணு முடிஞ்சி இருபத்தி நாலு நடக்குது மாமா.." என்றாள் விரல்களை எண்ணியபடி.

'வயசை சொல்ல கூட கணக்கிட வேணுமா.? வருடம் ஒருமுறை ஒரு எண் கூடும் வயது. இதற்கு கூடவா எண்ணுவாள்.?' என்று சலிப்பு வந்தது அவனுக்கு.

"நீ இந்த பூமிக்கு வந்து இருபத்தி நாலு வருசம் ஆச்சி. உனக்குன்னு எல்லா வாய்ப்பும் இருந்தது. ஆனா நீ ஒரு சாதாரண டிகிரியை கூட முடிக்கல. போய் பாரு, பல பெண்கள் பன்னென்டாவது முடிச்சிட்டு அதுக்கு மேல படிக்க வாய்ப்பு கிடைக்காம புருசன் வீட்டோட முடக்கி கிடக்கறதை.. காலேஜ் முடிச்சி பர்ஸ்ட் கிளாஸ்ல பாஸ் பண்ணாலும் வேலைக்கு அனுப்பாத புருசனை எதிர்க்க பிடிக்காம துடைச்சி வச்ச அடுப்பையே ஏழு முறை துடைச்சிட்டு இருப்பங்களை கொஞ்சம் பாரு.

படிக்க நோட்டு புக் கூட வாங்க பணம் இல்லாம இருப்பதை வச்சே கஷ்டப்பட்டு படிச்சி அரசாங்க வேலையில் முதல் நிலை ஆபிசர் ஆன பெண்களையும் பாரு. வீட்டுல உட்கார்ந்து குழந்தை புருசனை பார்த்துக்கிட்டே ஜாக்கெட் தச்சி மாசம் ஐம்பதாயிரம் சம்பாதிக்கும் பெண்களையும் போய் பாரு..

உனக்குன்னு அத்தனை வாய்ப்பும் இருக்கு. அத்தனை வசதிகளும் இருக்கு. ஆனா உடம்பு முழுக்க சோம்பேறித்தனம் ஊறி போய் இருக்கு. இதே இருபத்தி நாலு வயசுல என் பெரியப்பா மக டாக்டர் ஆகிட்டா.. மதுமிதாவோட அக்கா வக்கீல் ஆகிட்டா.. என் அத்தை மக இரண்டு குழந்தைங்களை வச்சிக்கிட்டே இந்த வயசுல சொந்தமா ஒரு பொட்டிக் ஓபன் பண்ணிட்டா.. ஆனா நீ.?"

புவனாவிற்கு தன்மானம் சுட்டது. கொஞ்சமாக தன் மீதே கோபம் வந்தது.

"நான் உங்களை லவ் பண்ணிட்டு இருந்தேன்.." தரை பார்த்தபடி சிறு குரலில் சொன்னாள்.

"வாவ்.. சூப்பர்.. எவ்வளவு பெரிய சாதனை.? நாளைக்கு எங்கேயாவது உன்னை ஸ்பீச்க்கு கூப்பிட்டாங்கன்னா இதை பெருமையா சொல்லு.. எல்லாரும் உன் உழைப்பு, தியாகத்தை கேட்டு புல்லரிச்சி போய் கை தட்டுவாங்க.."

கிண்டல் செய்கிறான் என்பது புரிந்தது. ஆனால் என்ன செய்வது என்றுதான் தெரியவில்லை.

"நான் இனி நல்லா படிப்பேன் மாமா.." என்றாள் தயங்கிய குரலில்.

"வெரிகுட்.. அதைதான் நானும் சொன்னேன். படிச்சி முடிச்சி வேலைக்கு போய் இந்த வயலை மீட்டு வா.."

புவனாவிற்கு கண்கள் கலங்கியது. சில நொடிகளிலேயே கண்ணீர் கன்னங்களை தாண்டி விட்டது‌.

"சாரி மாமா.. ப்ளீஸ்.. ஆனா ஹெல்ப் பண்ணுங்க.. இந்த வயலை என்னால மீட்க முடியாது.. மாசம் பதினாறாயிரம் வட்டிக்கே சம்பாதிக்கணும்.. இப்போதைக்கு என்னால முடியாது மாமா.." என்றாள் அழுகை குரலில்.

"உன்னால முடியாதுன்னா விட்டுடு.. நானா மீட்க சொல்லி கேட்டேன்.? கடன்ல மூழ்கிட்டு போகட்டும்.!"

"இப்படி சொல்லாதிங்க மாமா.. இந்த வயலை தாத்தா கஷ்டப்பட்டு சம்பாதிச்சி இருப்பாரு.. என்னாலதான் இது கைவிட்டு போகுதுன்னு தெரிஞ்சா பாட்டியும் அத்தையும் என்னை வெறுப்பாங்க.." என்றாள் அழுதபடியே.

'அப்பவும் பாட்டி, அத்தைன்னுதான் யோசிக்கிறா..' கடுப்பாக நினைத்தான்.

"இப்படி தண்டனை தரதுக்கு பதிலா என்னை நீங்க சாகவே விட்டிருக்கலாம்.."

லேப்டாப்பை ஓரம் வைத்துவிட்டு எழுந்து நின்றான்.

"ஓர் எட்டு லட்சத்துக்கு பயந்து செத்திருக்கலாம்ன்னு நினைக்கற.. நீ உயிரோட மதிப்பு‌ என்னன்னும் உனக்கு தெரியல. உன் உழைப்பு மேலயும் உனக்கு நம்பிக்கை இல்ல.. நீ இருப்பதே தண்டம். போய் செத்துத் தொலை.. இனி காப்பாத்த வந்தேன்னா பிஞ்சி கிடக்கற செருப்பால அடி.." என்று அவளை தூர தள்ளியவன் அவளின் கையில் இருந்த பத்திரத்தை பிடுங்கிச் சென்று அலமாரியிலேயே வைத்து பூட்டினான்.

அவன் சொன்னது அவளை அதிகமாக சுட்டு விட்டது. 'பிஞ்சி போன செருப்பால அடி..' இதெல்லாம் அவளுக்கு கெட்ட வார்த்தை போல. அவன் அவளை திட்டியதை விட அவனையே அவமதித்துக் கொண்டதுதான் அதிகம் வலித்தது அவளுக்கு.

திரும்பி வந்தவன் கட்டிலில் சென்று அமரும் முன் அவனின் கையை பிடித்தாள். "மாமா.." என்றாள் கெஞ்சலாக.

"குடிக்க விஷம் வேணுமா.? வயலுக்கு வாங்கி வச்ச விஷம் ஸ்டோர் ரூம்ல இருக்கும். அந்த கருப்பு பாட்டில்தான் அதிக வீரியம்.. போய் அதையே எடுத்து குடி.." வெறுப்பாக சொன்னவனுக்கு அதற்கு மேல் வேலை பார்க்கவே மனம் வரவில்லை. லேப்டாப்பை அணைத்து எடுத்து வைத்தான்.

கட்டிலில் படுத்தான். புவனா நின்ற இடத்திலேயே அழுதுக் கொண்டிருந்தாள்.

பெரிய சுமையை தூக்கி தலை மேல் வைத்தது போல இருந்தது அவளுக்கு.

அவள் விஷம் குடிக்க மாட்டாள். ஏனெனில் அவள் தன் வாழ்வின் ஒரே வானமென நினைத்த முத்தமிழ் அவளோடு இருந்தான். விரும்பியவனை துணைக் கொண்டு விட்ட பிறகு எமன் எதிரில் வந்தாலும் எதிர்க்கதான் நினைப்பாள் அவள். இதை அவளை விட அவன் நன்றாகவே அறிந்து வைத்திருந்தான்.

"எதுக்கு சிலை மாதிரி நின்னு தொலையுற.? போய் லைட்டை ஆப் பண்ணிட்டு வந்து தூங்கி தொலை.. ச்சை.. உன்னை பார்த்தாலே கடுப்பா இருக்கு.." என்றான்.

புவனாவிற்கு ரூம் போட்டு அழ வேண்டும் போல இருந்தது.

"எப்ப பார்த்தாலும் வெறுத்துட்டே இருக்கிங்க.. உங்களை ரொம்ப பிடிக்கும் மாமா.. இப்படியெல்லாம் தொலைய சொல்லி திட்டாதிங்க.." அழுதபடி சொன்னவளின் மீது தலையணையை தூக்கி வீசினான்.

"இந்த சிணுங்கல் கொஞ்சலெல்லாம் என்கிட்ட வேணாம்.. எப்ப பார்த்தாலும் அழறது.. இல்லன்னா சிணுங்கி சிணுங்கி நடிக்க வேண்டியது.." திட்டியவன் போர்வையை எடுத்து போர்த்திக் கொண்டு படுத்தான்.

புவனா அரை மணி நேரத்திற்கு மேலாக அங்கேயே நின்று மௌனமாய் அழுதாள். உறங்கிக் கொண்டிருப்பவன் தன் மீது கொஞ்சமாவது கருணை காட்ட மாட்டானா என்று ஏக்கமாக காத்திருந்தாள். அவன் அசையாமல் படுத்திருந்தான்.

பத்து நிமிடங்கள் தாண்டியது. முத்தமிழ் எழுந்து அமர்ந்தான். அவளை முறைத்தபடி சென்று விளக்கை அணைத்து வந்தான்.

நின்று நின்று கால் வலித்தது அவளுக்கு. அதற்கு மேல் அழுவதற்கும் மிச்சம் இல்லாதவாறு கண்ணீரும் காலியாகி விட்டிருந்தது. வேறு வழி இல்லாமல் வந்து கட்டிலில் அமர்ந்தாள்.

அழுது தீர்த்த பிறகுதான் யோசிக்க ஆரம்பித்தாள். ஆனால் எப்படி யோசித்தாலும் எட்டு லட்சம் எட்டாக்கனியாகவே இருந்தது.

முத்தமிழ் புரண்டு படுத்தான். போர்வை அவன் முகத்திலிருந்து விலகி விட்டிருந்தது. இரவு விளக்கின் சிறு மஞ்சள் ஒளியில் அவனின் முகத்தை பார்த்தாள்.

அவள் தேடி தேடி அலைந்த தெய்வம் அவன். அவள் வேண்டி வேண்டி பெற்ற வரம். அவள் கனவில் எழுதிய கவிதையை நேரில் தந்தவன். அவளின் எண்ணங்கள் அத்தனையையும் நிஜத்தில் வரைந்தவன். அவள் வானத்தில் இருந்த தேயாத வெண்ணிலவின் கந்தர்வ காவலன். கற்பனையில் அவள் கட்டி வைத்த கோட்டையை நிஜத்தில் எழுப்பி அதற்கு அரசனும் ஆனவன்.

இவனையே கைக்கொண்டு விட்ட பிறகு வேறு எது பெரிய விசயம் என்று தோன்றியது. ஆனாலும் தொகைதான் பயமுறுத்தியது.

'திறக்காதுன்னு நினைச்ச கதவே திறந்துடுச்சி.. இது ஏன் முடியாது.?' என்று தன்னையே கேட்டுக் கொண்டாள்.

'இந்த முயற்சி தன்மானம் ஜெயிக்க இல்ல.. மாமாவோட மனசுல இருக்கும் கோபத்தை குறைக்க..' என்றெண்ணியபடி தலையணையில் முகம் புதைத்தாள்.

'என்ன செய்றது.? வெற்றிக்கொடி கட்டு பாட்டை போட்டு விட்டுட்டு பிசினஸ் ஆரம்பிக்கலாமா.? இல்ல நட்சத்திர ஜன்னலில் பாட்டை போட்டு விட்டுட்டு படிக்க ஆரம்பிக்கலாமா.?'

எப்படி யோசித்தாலும் முட்டு சந்துதான் முதலில் வந்து நின்றது.

முழு சோம்பேறி அவள். யோசிக்கவே சிரமம் அவளுக்கு. படிப்பதே பாரம் அவளுக்கு. உழைப்போ எருமை மாட்டில் ஏறி எப்படி ஏரோபிளேன் வேகத்துக்கு போக முடியாதோ அதே அளவிற்கு இயலாத விசயம்.

கூரையை பார்த்தபடி திரும்பி படுத்தாள். நேரம் கடந்த பிறகும் கொட்ட கொட்ட விழித்திருந்தாள். அவளின் வயிற்றின் மீது விழுந்தது ஒரு கரம். துள்ளி விழுந்தபடி திரும்பி பார்த்தாள். முத்தமிழ் அவளின் அருகே நெருங்கி படுத்திருந்தான்.

அவனின் சிறு அணைப்பே அவளோடு சேர்த்து அந்த அறையையும் தீயாக பற்றிக் கொண்டு எரிய செய்தது போல இருந்தது.

தூக்கத்தில் புரண்டவனின் முகம் அவளின் கழுத்தில் புதைந்தது. கைகளும் கால்களும் வெடவெடவென்று நடுங்க ஆரம்பித்தது அவளுக்கு. அடுத்த நொடியில் அவளின் வயிற்றின் மீது இருந்த அவனின் கரம் இன்னும் சற்று இறுக்கி அவளை அணைத்தது. வியர்ப்பது போலவே இருந்தது அவளுக்கு. தன் இதயத்தின் துடிப்பு நின்று விட்டதோ என்று பயந்தாள்.

தன் இடது கையை அவனின் கரத்தின் அடியிலிருந்து விடுவித்து எடுத்தவள் வலது கையில் இருந்த நாடியின் துடிப்பை பரிசோதித்தாள். நாடியின் துடிப்பு தெரியவேயில்லை.

'கட்டிப்பிடிச்சதுக்கே இப்படி.? நேத்து மட்டும் பர்ஸ்ட் நைட் நடந்திருந்தா ரா.கி.ரவோட ஆணி சிறுகதையில் வந்த ஹீரோயினி மாதிரியே செத்திருப்பா.. ஓவர் எமோசனல் கழுதை..' அவள் தன் நாடித்துடிப்பை பரிசோதிப்பதை கண்டுவிட்டு இப்படி நினைத்தவனுக்கு நெற்றியில் அடித்துக் கொள்ள வேண்டும் போல இருந்தது.

அவள் உறங்காமல் அவனுக்கும் உறக்கமே வரவில்லை. நேற்றும் இப்படிதான் அவள் உறங்கும் வரை தூங்குவது போல நடித்துக் கொண்டிருந்தான். இன்றாவது சீக்கிரம் உறங்கட்டுமே என்று நினைத்துதான் அவளை தன்னோடு அணைத்துக் கொண்டான். தன் தீண்டலில் உறங்குவாள் என்று நினைத்தவன் தனது அணைப்பிற்கே நாடித்துடிப்பை பரிசோதிப்பாள் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN