மணாளனின் மனம் 7

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
நாடி துடிப்பை கவனித்துக் கொண்டிருந்த புவனா சற்று நேரம் கழித்து உறங்கி போனாள். முத்தமிழ் அவளுக்கும் முன்னால் உறங்கி விட்டிருந்தான்.

காலையில் புவனா கண்விழித்தபோது முத்தமிழ் அங்கே இல்லை. எட்டு லட்சம் பற்றிய எண்ணம்தான் முதலில் வந்தது. இரவு அழுததன் காரணமாக தலை வலித்தது. கண்களும் சிவந்துப் போய் எரிந்தது.

உறங்கிக் கொண்டே இருந்திருக்கலாம் என்று தோன்றியது.

தாத்தாவின் போனில் ஒலித்துக் கொண்டிருந்த திருவாசக பாடல் திறந்திருந்த கதவின் வழியே வந்து புவனாவின் காதுகளை சேர்ந்தது.

எந்த கடவுள் தன் பிரச்சனையை தீர்ப்பார் என்ற எண்ணத்தோடு எழுந்து அமர்ந்தாள்.

வானத்திலிருந்து பணம் கொட்டினால் பரவாயில்லை என்று தோன்றியது.

யசோதாவுக்கு உணவு சமைக்க உதவி செய்கையில் "ஏன் முகம் ஒரு மாதிரியா இருக்கு.?" என்று கேட்டாள் அவள்.

"ஒன்னுமில்ல அத்தை. லேசா தலைவலி.." என்றவளுக்கு விசயத்தை சொல்ல பயமாக இருந்தது. முத்தமிழ் சும்மாகவே வெறுத்துக் கொண்டிருக்கிறான். இதுவும் வந்து பிரச்சனையை இழுத்து விட வேண்டுமா என்று கவலைக் கொண்டாள்.

முத்தமிழ் எங்கே என்று கேட்க கூட மனம் வரவில்லை புவனாவிற்கு. அவனை தேடிச் செல்லும் அளவிற்கு இப்போது தைரியம் இருக்கவில்லை.

அவளை வேலை செய்ய விடவில்லை யசோதா.

"நீ போய் ரெஸ்ட் எடு.." என்றாள்.

"வேணாம் அத்தை.." என்றவளுக்கு கண்கள் கலங்கியது. யசோதா அதைப் பற்றிக் கேட்டபோது வெங்காயத்தின் மீது சாக்கு ஓட்டினாள்.

முத்தமிழ் இந்த இரண்டு நாட்களில் அவளோடு பேசியதில் சரி பாதி வார்த்தை சோம்பேறி கழுதை என்பதாகதான் இருந்தது.

சிறு வயதிலிருந்து உடம்பில் ஊறிவிட்ட சலிப்பு. அவன் திட்டினாலும் கூட மந்தமாகதான் இருந்தது. ரோசத்தை எப்படி வேலைகளில் செயல்படுத்தி காட்டுவது என்று அவளுக்கு புரியவில்லை.

காலை உணவு நேரத்தில் முத்தமிழ் சாப்பாடு கூடத்தில் அமர்ந்திருந்தான். எப்போது வந்தான் என்று கவனிக்கவில்லை புவனா. அவனுக்கு உணவை பரிமாறுகையில் அவனின் முகத்தை பார்க்கவில்லை அவள்.

அவன் எழுந்து சென்ற பிறகு குழம்பு பாத்திரத்தை சமையல் கட்டுக்கு எடுத்து செல்ல வந்த புவனா குழம்பு பாத்திரத்தின் அருகே இருந்த தலைவலி மாத்திரையை கண்டு கையில் எடுத்தாள். அவன்தான் வைத்து சென்றுள்ளான் என்பது புரிந்தது. சந்தோசபட கூட முடியாத அளவிற்கு எட்டு லட்சம் பயமுறுத்தியது.

மாத்திரையை பிரித்தவள் தண்ணீர் தேடிய நேரத்தில் அவளின் பின்னந்தலையில் ஒரு அறை விழுந்தது. தேய்த்துக் கொண்டு திரும்பி பார்த்தாள்.

"சாப்பாடு சாப்பிட்ட பிறகு மாத்திரையை போட்டு தொலை.." என்று திட்டிவிட்டு நகர்ந்தான் முத்தமிழ்.

அவன் அடித்ததில் உண்டான வலியால் இரு மடங்காகி இருந்தது தலைவலி. ஆனால் அவனின் அக்கறையின் காரணமாக வலி பாதியாய் குறைந்து விட்டிருந்தது.

அவன் சொன்னது போலவே உணவை சாப்பிட்டு விட்டு மாத்திரையை விழுங்கினாள்.

அவனை தேடினாள். மீண்டும் எங்கே சென்றான் என்று தெரியவில்லை. காலண்டரை பார்த்தாள். செவ்வாய்க்கிழமை. அலுவலகம் சென்றிருப்பான் என்று புரிந்துக் கொண்டாள். அங்கே மதுமிதா இருப்பாள்.

வைப்பாட்டி வைப்பேன் என்று சொன்னவன் அவளை வைத்துக் கொள்ளாமல் இருக்க வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக் கொண்டாள். தலைவலி மிகுதியும், இரு இரவுகள் சரியாய் உறங்காததின் காரணமாகவும் சோபாவில் அமர்ந்தவள் அப்படியே உறங்கிப் போனாள்.

முத்தமிழ் தன் அலுவலக அறையில் அமர்ந்திருந்தான். அவனின் தலை மேஜையில் கவிழ்ந்து கிடந்தது.

"அதுக்குள்ள வேலைக்கு வந்துட்ட.." என்றபடி அந்த அறையினுள் வந்தாள் மதுமிதா.

எழுந்தான். முகம் வாடி போய் இருந்தது.

"என்ன ஆச்சி.? ஓவர் டென்சனா.?" என் கேட்டவள் அவன் முன்னால் இருந்த இருக்கையில் வந்து அமர்ந்தாள்.

"ரியலி சாரி மது.." அவன் மீதி சொல்லும் முன் அவனை கை காட்டி தடுத்தாள்.

"எத்தனை முறை சாரி சொல்வ.? பீ பிராக்டிகல். உனக்கும் எனக்கும் நடுவுல எந்த லவ்வும் கிடையாது. அது மேல நம்ம இரண்டு பேருக்குமே நம்பிக்கையும் கிடையாது. ஏதோ கல்யாணம் பண்ணிக்க யோசனை வந்ததேன்னு முயற்சி எடுத்தோம். அது நின்னாலும் நான் பீல் பண்ணல. ஏனா நான் புவனா கிடையாது.." என்றாள்.

அவள் எத்தனை முறை சொன்னாலும் அவனுக்கு மட்டும் கவலையாகவேதான் இருந்தது. நிச்சயத்தார்த்தம் வரை வந்து நின்று போன சம்பந்தம். பிற்காலத்தில் அவளின் திருமணத்திற்கு இது சறுக்கலை தரும் என்று அவனுக்கு தெரியும்.

"நீ உடனே இங்கே வந்திருக்க வேண்டியது இல்ல.. நான் வேலையை கவனிச்சிட்டு இருந்திருப்பேன்.."

அங்கிருந்து தப்பிக்க வேண்டும் என்றுதான் இங்கே ஓடி வந்தேன் என்று சொல்லவில்லை அவன்.

"அந்த பொண்ணை டார்ச்சர் ஏதும் பண்ணிடாத தமிழ்.. அவ ரொம்ப க்யூட்.." என்றாள் மதுமிதா எழுந்து நின்றபடி.

முத்தமிழுக்கு இதை கேட்ட பிறகு காதும் சேர்ந்து கசந்து போனது போல இருந்தது. க்யூட்டுக்கு அர்த்தம் தெரியுமா என்று அவளை கேட்க தோன்றியது.

"ஓவரா பண்ணாத.. டேக் இட் ஈஸியா இரு.. அந்த பொண்ணை புரிஞ்சிக்க டிரை பண்ணு.." என்றவள் அந்த அறையை விட்டு வெளியே நடந்தாள்.

முத்தமிழ் கம்ப்யூட்டரை அணைத்தான். பைல்கள் அனைத்தையும் மூடி வைத்தான். மீண்டும் மேஜையில் முகம் கவிழ்ந்தான்.

நான் ஏன் அவளை புரிந்துக் கொள்ள வேண்டும் என்று யோசித்தான்.

புவனா பாலைவனத்தின் நடுவில் இருந்தாள். அழுதுக் கொண்டே நடந்துக் கொண்டிருந்தாள்.

"புவனா.."

"மாமாதான்.. ஆனா நான் திரும்பி போக மாட்டேன். அவர் என்னை ஏமாத்திடுவாரு.."

"நான் ஏமாத்த மாட்டேன்.. திரும்பி வா.."

"என்னை லவ் பண்றிங்களா.?" திரும்பி பார்த்துக் கேட்டாள்.

வானம் முழுக்க அவன் முகம்தான் இருந்தது. ஆமென தலையசைத்தான் அவளிடம். புவனா வேகமாக அவனை நோக்கி ஓடினாள். வானிலிருந்து என்னவோ வந்து விழுந்தது. பயத்தோடு பின்னால் நகர்ந்தவள் விழுந்தது என்னவென்று பார்த்தாள். எட்டு லட்சம் என்ற வார்த்தையோடு கை கால் முளைத்த பத்திரம் ஒன்று அவள் முன் எழுந்து நின்றது.

"புவனா.."

"மாமா கூப்பிடுறாரு. நான் போகணும்.." ஓட முயன்றவளை தடுத்தது பத்திரம்.

"எட்டு லட்சம் எனக்கு தந்துட்டு அப்புறம் போ.." என்றது.

புவனா தன் கைகளை பார்த்தாள். எதுவுமே இல்லை.

"என்கிட்ட காசு இல்ல.." என்று தரை பார்த்து சொன்னாள்.

"புவனா.." பாட்டி உலுக்கி எழுப்பியதில் விதிர்த்து போய் எழுந்து அமர்ந்தாள்.

"பாட்டி.."

"என்ன உளறிட்டு இருக்க.? எழுந்து இந்த காப்பியை குடி.." என்றாள் பாட்டி.

புவனா முகத்தை துடைத்தபடி எழுந்து அமர்ந்தாள். அவளின் மேல் இருந்த போர்வை கீழே விழுந்தது. டீப்பாயின் மீது காப்பி கோப்பையை வைத்த பாட்டி போர்வையை கையில் எடுத்து மடிக்க ஆரம்பித்தாள்.

"பாட்டி ஒரு நிமிசம்.." என்றுவிட்டு அவசரமாக எழுந்து நின்றாள் புவனா.

"நானே மடிக்கிறேன் பாட்டி.." என்றாள்.

பாட்டி அவளை குழப்பமாக பார்த்தாள்.

"சோம்பேறி சோம்பேறின்னு திட்டுறாரு பாட்டி.. நானே என் வேலைகளை இனி பண்ணிக்கிறேன்.." என்றவள் தரையை பார்த்தபடி போர்வையை மடித்தாள்.

"அவன் சொல்றான்னு கேட்கறியா.? அவனை மாதிரி கால்ல சக்கரம் கட்டிக்கிட்டு ஓட நம்மாள முடியாது. அவன் சொல்றதை கேட்காம விட்டுடு.." பாட்டி இதை சொல்ல சொல்ல வாசலில் இருந்து வீட்டுக்குள் வந்தார் தாத்தா.

"ஆமாம்மா.. இவ சொல்றதை கேட்டுடு.. அவன் அப்படியே உன்னை மணந்துப்பான். இவளை பார்த்து புருசனை அராஜகம் பண்றது எப்படின்னு கத்துக்கோ, உன் வாழ்க்கையும் நல்லா இருக்கும்.!" என்று எரிச்சலாக சொல்லிவிட்டு தன் அறையை நோக்கி நடந்தார் அவர்.

"யோவ்.. கிழவா‌‌.. என்னை எத்தனை இடத்துல இருந்து பொண்ணு கேட்டு வந்தாங்க தெரியுமா.? ஆனா என் கிரகம் சரியில்லாம உன்னை கட்டிக்கிட்டேன்.." என்ற பாட்டி மல்லுக்கு நிற்பது போல நின்றாள்.

"கிரகம் உண்மையில் எனக்குதான்டி சரியில்ல.. புருசனை கவுக்குறது எப்படின்னு அவளுக்கு சொல்லி தரதுக்கு பதிலா அவனுக்கு பிடிச்ச மாதிரி நடந்துக்க சொல்லி கொடு.." என்றார் தாத்தா தன் அறை வாசலில் நின்றபடி.

"பெண்ணுக்கு எந்த வீட்டுல சுதந்திரம் இருக்கு.. அவனுக்கு பிடிச்ச மாதிரிதான் இவ மாறணுமாம். ஏன் இவளுக்கு பிடிச்ச மாதிரி அந்த குரங்கு பையன் மாற கூடாதா.?" பாட்டி கேட்டது கேட்டு பற்களை கடித்தார் தாத்தா.

"சொந்த பேத்தியை புரிஞ்சிக்காத நீ பெண் உரிமை பத்தி பேசாதா.! போலி பெண்ணுரிமையாளர் நீயெல்லாம்.. இவளுக்கு பிடிச்ச மாதிரிதான் அவன் இருக்கான். அதனால்தான் இவ அவனை லவ் பண்ணா.. இவ அவனுக்கேத்த மாதிரி மாறினா போதும். உன் மனசுல இருக்கற விஷத்தையெல்லாம் அந்த புள்ளை மனசுலயும் விதைச்சிடாத.. அறியாத பொண்ணு.. தெரிஞ்சும் தெரியாம ஏதாவது தப்பு பண்ணா கூட அவன் கரெக்டா சொல்லி தருவான். வயசானவளுக்கு எல்லாம் தெரியும்ங்கற நினைப்புல இவங்க வாழ்க்கையையும் சேர்த்து நீ நாசம் பண்ணிடாத.." என்ற தாத்தா தனது அறைக்குள் சென்று விட்டார்.

பாட்டிக்கு ஆத்திரமாக வந்தது. சின்ன பெண்ணின் முன்னால் தன்னை அவமதித்து விட்டானே இந்த கிழவன் என்று கோபம் கொண்டாள்.

தன்னால் தாத்தா பாட்டி சண்டை போட்டுக் கொண்டால் அதற்கும் முத்தமிழ் தன்னைத்தான் திட்டுவான் என்ற பயத்தில் இருந்த புவனா "விடுங்க பாட்டி.. தாத்தா ஏதோ கிண்டல் பண்றாரு.." என்று சமாதானம் சொன்னாள்.

"கிண்டல் இல்ல.. எகத்தாளம் அந்த கிழவனுக்கு. எனக்கு மாமியார் இல்லாத குறைக்கு இந்த மகராசனே இன்னமும் குறை சொல்லி சாகடிக்கறாப்டி.!" என்ற பாட்டி தாத்தா சென்ற திசையை பார்த்து உதட்டை சுழித்து காட்டிவிட்டு தனது வேலையை கவனிக்க கிளம்பினாள்.

புவனா ஆறிக் கொண்டிருந்த காப்பியை குடித்தாள். போர்வையை வைக்க வேண்டிய இடத்தில் வைத்தாள். காப்பி பருகிய கோப்பையை சுத்தம் செய்து சமையலறையில் வைத்துவிட்டு திரும்பினாள்.

முத்தமிழ் அவளை தாண்டிக் கொண்டு நடந்தான்‌.

"மாமா.. சாப்பாடு.."

"வேணாம்.." என்றுவிட்டு அறைக்குள் வந்தவனின் நிழலாக அவளும் வந்தாள்.

"மாமா.. நான் ஒரு ஐடியா சொல்லட்டா.?"

"ம்.." என்றவன் கலர்வேட்டியை கட்டிக் கொண்டுவிட்டு கால்சட்டையை கழட்ட ஆரம்பித்தான்.

"என் நகை இருக்கு இல்லையா.? அதை ஏன் நாம பேங்க்ல வச்சி இந்த கடனை கட்ட கூடாது.?"

"பேங்க் வட்டி உன் மச்சானா வந்து கட்டுவான்.?" கழட்டிய கால்சட்டையை தூக்கி எறிந்தபடி கேட்டான் முத்தமிழ். கூடையின் வெளியே விழுந்து விட்டதை அவசரமாக ஓடி சென்று எடுத்து கூடைக்குள் போட்டாள் புவனா.

"இங்கே கட்டுற வட்டியை விட அங்கே கம்மி வட்டிதானே வரும் மாமா.?"

'அதிசயமா மூளை வேலை செய்யுதோ.?' ஆச்சரியப்பட்டான் அவன்.

"அங்கேயும் ஒரு ரூபா வட்டி. மாசம் எட்டாயிரம் கட்டணும். அதை விட முக்கியமாக உன் நகைகளை நான் வாங்கி பேங்க்ல வைக்கலாம்ன்னு இருந்தேன்.."

புவனா திருதிருவென விழித்தாள்.

"உனக்கு விருப்பம் இல்லன்னா உன் நகைகளை நான் தொடல.." என்றவன் சட்டையின் மேல் இரண்டு பட்டன்களை கழட்டினான்.

"உங்களுக்கு வேணும்ன்னா நீங்க யூஸ் பண்ணிக்கங்க மாமா.. நான் கேட்கல.." அவசரமாக சொன்னாள்.

அவளை கண்கள் சாய்த்து பார்த்தவன் "தேங்க்ஸ் சொல்வேன்னு நினைக்காத.. நான் அடமானம் வச்ச நிலத்துல கடன் தந்தவன்தான் விவசாயம் பண்ணிட்டு இருக்கான். அந்த நிலத்துல இருந்து மாசம் இருபதாயிரம் வருமானம் வந்துட்டு இருந்தது. ஆனா உன்னால அந்த வருமானம் நின்னு போச்சி. அதுக்கு பதிலாதான் உன் நகையை அடமானம் வச்சி பிஸ்னெஸ்ல இன்வெஸ்ட் பண்ண போறேன். நீ எப்ப நிலத்தை மீட்டு தரியோ அன்னைக்கு உன் நகையை நான் மீட்டு தந்துடுவேன்.." என்றான்.

தலையை சொறிந்துக் கொண்டாள் புவனா. நமக்கு மட்டும் ஏன் இப்படி என்று நினைத்தாள். நல்லவன் போலதான் பேசினான். ஆனால் அவளுக்குதான் முட்டுச்சந்தை கொண்டு வந்து நிறுத்தினான்.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN