மணாளனின் மனம் 8

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
புவனா கவலையோடு முத்தமிழை பார்த்தாள்.

"நான் வேற என்ன மாமா பண்ணுவேன்.?" என்றாள்.

"என்கிட்ட கேட்டா எனக்கெப்படி தெரியும்.?" என கேட்டவனின் அருகே நெருங்கி நின்றவள் அவனின் சட்டையின் ஓரத்தை கை விரல்களால் நெருடினாள்.

முத்தமிழ் அசையாமல் நிற்க முயன்றான். அவளை முறைத்தான். தலை குனிந்து நின்றிருந்தவளுக்கு அவனின் முறைப்பு தெரியவில்லை. அவளை அவனும் விலக்கி தள்ளவில்லை.

"நீங்கதான் எனக்கு எல்லாமே.! நீங்க ஹெல்ப் பண்ணாம வேற யார் செய்வா.? என்னை வேணா நீங்க தத்தெடுத்துக்கங்க.."

அவளின் தலையில் கொட்டு ஒன்றை வைத்தான் முத்தமிழ். தலையை தேய்த்தபடி நிமிர்ந்துப் பார்த்தாள்.

"உன்னை ஏன் நான் தத்து எடுக்கணும்.? நீதான் ஆல்ரெடி என்னை உன் புருசனா தத்தெடுத்து வச்சிருக்கியே.!" என்றான் கடுப்போடு.

உதட்டை பிதுக்கியவள் "ஒரு சின்ன பொண்ணை இப்படி கொடுமை பண்றிங்க.? எட்டு லட்சத்தை நான் இதுவரைக்கும் மொத்தமா பார்த்ததே இல்லை.. எங்க அப்பாவும், அண்ணாவும் மெடிக்கல் பில்லை கட்டி ஈசியா முடிஞ்சிருக்க வேண்டிய வேலையை எனக்கு டெஸ்ட் வைக்கிறதா நினைச்சி ரிஸ்க் எடுக்குறிங்க.." என்றாள்.

"முட்டாளுக்கு யாரும் டெஸ்ட் வைக்க மாட்டாங்க.." என்றவன் அவளின் கையை தன் சட்டையிலிருந்து விடுவித்தான். அவனின் கையோடு ஒப்பிடுகையில் அவளின் கை சின்னதாக தெரிந்தது.

அவனோடு இணைந்திருந்த தன் கரத்தை அதிசயம் போல பார்த்துக் கொண்டிருந்தாள் அவள். அதை கவனித்த முத்தமிழ் "சீரியஸ்னெஸ் கொஞ்சமாவது உன்கிட்ட இருக்கா.?" என கேட்டான்.

நிமிர்ந்து அவனின் கண்களை பார்த்தவள் மேலும் கீழுமாக தலையசைத்தாள்.

"சொன்ன விசயத்தையே திருப்பி சொல்ல வைக்காத.." என்றவனிடம் "நீங்க மாசம் எவ்வளவு மாமா சம்பாதிக்கிறிங்க.?" என்றுக் கேட்டாள்.

அவளை குறுகுறுவென பார்த்தவன் "வயல் வருமானமெல்லாம் சேர்த்து சராசரியா எழுபது எண்பதாயிரம் வரும்.. ஏன்.?" என்றுக் கேட்டான்.

"எங்க சின்ன அண்ணன் சம்பளத்தை விடவும், உங்க தங்கச்சி சம்பளத்தை விடவும் கம்மி.." என்றவளை முறைத்தவன் "அவங்க உழைப்பு எந்த அளவுக்கானதோ அந்த அளவுக்கு சம்பாதிக்கிறாங்க.. உனக்கு என்ன வந்தது சோம்பேறி.?" என்றான்.

"நான் குறை சொல்லல மாமா.. ஆனா உங்க சம்பள சேமிப்புல இருந்து இந்த எட்டு லட்சத்தை கொடுங்களேன்.. நான் வேலைக்கு போன பிறகு திருப்பி தந்திடுறேன்.."

இடம் வலமாக தலையசைத்தான்.

"நான் என்ன சத்திரமா வச்சி நடத்துறேன்.? அதுவும் இல்லாம இந்த வீட்டுக்கு மாசம் எவ்வளவு செலவாகுது தெரியுமா.? உன்னை கல்யாணம் பண்ணிக்க எனக்கு ஆன செலவு எவ்வளவு தெரியுமா.? வயலுக்கு வாங்கற உரம் எவ்வளவு விலை.. எங்க ஆபிஸ் கட்டிடத்துக்கு மாசம் ஆனா கட்டுற வாடகை செலவு.."

"போதும் மாமா.. போதும்.." அவன் முழுதாய் சொல்லும் முன் நிறுத்தினாள். "லிஸ்ட் பெருசா போகுது.." என்றாள்.

''எல்லார் வீட்டிலும் சம்பளத்தை பொண்டாட்டி கையில்தான் கொண்டு வந்து தருவாங்களாம்.." அவனின் சட்டையில் மீண்டும் விளையாடியபடி சொன்னாள்.

"பேருக்கு பொண்டாட்டியா இருப்பவக்கிட்ட எவனும் சம்பளத்தை தந்ததா நான் கேள்விப்படல.."

அவன் சொன்னது சுருக்கென்று தைத்து விட்டது.

"நீங்கதானே என்னை ஒதுக்கி வச்சிருக்கிங்க.?" கோபமாக கேட்டவளை பார்த்து பொய்யாய் சிரித்தான்.

"கட்டில்ல மட்டும்தான் பொண்டாட்டிக்கு வேலைன்னு உனக்கு எவன்டி சொல்லி தந்தது.? புருசன்காரன் தன் தொழிலையும், குடும்பத்தையும் எந்த அளவுக்கு மேனேஜ் பண்றான்னா அதே அளவுக்கு பொண்டாட்டியும் மேனேஜ் பண்ணனும். குடும்ப நிர்வாகம்ன்னா என்னன்னே தெரியாத உன்கிட்ட காசு தந்தா வீட்டுல நாலு கிலோ மிளகாய்தூளும், அரைகிலோ அரிசியும்தான் இருக்கும். முதல்ல நீ பொண்ணா இருக்க கத்துக்க.. அப்புறம் பொண்டாட்டியா இருக்க கத்துக்க. அதுக்கப்புறம் உனக்கு தகுதி இருந்தா நானே சம்பள பணத்தை தருவேன்.." என்றான் கோபத்தோடு.

அவளோ இவன் சொன்னதுக்கு மறுமொழி சொல்லாமல் கனவுலகில் இருந்தாள். அவளின் முன்னால் சொடக்கிட்டான் முத்தமிழ்.

"என்ன.?" புருவம் உயர்த்திக் கேட்டான்.

"பர்ஸ்ட் டைம்மா டி போட்டு கூப்பிட்டு இருக்கிங்க மாமா.." என்று அவள் சொன்னதை கேட்டவன் இந்த முறையில் உண்மையிலேயே நெற்றியில் அடித்துக் கொண்டான்.

"எந்த ஜென்மத்துல என்ன பாவம் பண்ணேனோ, உன்கிட்ட மாட்டிக்கிட்டு சித்திரவதை படுறேன்.." என்றான் எரிச்சலாக.

"ஆனா நான் புண்ணியம் பண்ணியிருக்கேன் மாமா.." என்றவள் தன்னை மீறி அவனின் நெஞ்சில் சாய்ந்துக் கொண்டாள்.

முத்தமிழுக்கு மூச்சடைத்தது. 'மயக்க பார்க்கறா.. ஏமாந்துடாத..' என்று‌ தன்னையே எச்சரித்துக் கொண்டான்.

"வயலை மீட்டு‌ தராம என்னை தொடாத.." என்றவனை அவசரமாக நிமிர்ந்து பார்த்தவள் "நிஜமாவா மாமா.? சீக்கிரம் சம்பாதிச்சிட்டா ஆகுமே.." என்றாள்.

'ஆண்டவா.. கொஞ்சம் கூட மைனஸ் பாயிண்டை பார்க்கவே மாட்டேங்கிறாங்களே..' என்று மனதுக்குள் புலம்பினான்.

"சரி போய் சம்பாதி.." என்றவன் அவளை தன்னிடமிருந்து விலக்கி நிறுத்தினான். தாயிடம் இருந்து விலக்கப்பட்டு குழந்தையை போல முகம் வாடியவள் "அதுதான் எப்படின்னு தெரியலையே.. நான் சத்தியமா கையாலாகாத ஆள்தான் மாமா.. இது ரொம்ப பெரிய டாஸ்க்.. நீங்களா ஒரு வழி சொல்லாம எனக்கு ஒரு வழி பிறக்காது.. இப்ப நீங்க வழி சொல்லலன்னா நடக்கறது நடக்கட்டும்ன்னு இரண்டு வீட்டுலயும் இதை பத்தி போட்டுக் கொடுத்துடுவேன்.." என்றாள்.

'ஆளுதான் குட்டை.. ஆனா மனசுல இருக்கற விஷம் மட்டும் வானத்துக்கும் மேல வளர்ந்து இருக்கு..' கடுப்பாக நினைத்தவனின் தாடையை தட்டினாள்.

அவளின் கையை தட்டி விட்டவன் "கொஞ்சம் விடுடி.. யோசிக்கிறேன்.." என்றான்.

"யோசிங்க மாமா.. எவ்வளவு நேரம் வேணாலும் யோசிங்க.. நான் போய் நைட் சாப்பாடுக்கு அத்தைக்கு உதவி பண்றேன்.." என்றவள் அவனை விட்டுவிட்டு ஓடினாள்.

முத்தமிழ் சோர்வாக வந்து கட்டிலில் அமர்ந்தான். புவனா இவனின் பார்வைக்கு சிறு குழந்தை போலவே தெரிந்தாள். அவளின் நடத்தையும் அப்படிதான் இருந்தது.

தற்கொலை செய்துக் கொண்டவளை காப்பாற்றி திருமணம் செய்திருக்க கூடாதோ என்று நினைத்தான். இருவருக்கும் செட் ஆகும் என்றே தோன்றவில்லை.

இரவு உணவை சமைக்கும்போது துள்ளலலோடு இருந்தாள் புவனா. அவளின் முக மலர்ச்சியை கவனித்துக் கொண்டே இருந்தான் முத்தமிழ். யோசிக்கும் வேலையை தன்னிடம் தூக்கி தந்துவிட்டவள் அதை மறுபடியும் நினைக்கவேயில்லை என்பது புரிந்தது.

"என்ன ஐடியா யோசிச்சி வச்சிருங்கிங்க மாமா.?" இரவில் கேட்டாள் புவனா.

கட்டிலின் மறுபுறம் அமர்ந்திருந்தவன் இவள் தன் அருகில் நெருங்கி அமர்வதை கண்டு தூர தள்ளி அமர்ந்தான்.

"இந்த வீட்டு வேலைக்கார அக்காவுக்கு மாசம் பன்னென்டாயிரம் தரோம். தினம் வீடு வாசல் பெருக்கி, அஞ்சி பேரோட துணியை துவைச்சி, தரையெல்லாம் துடைச்சா அந்த பன்னென்டாயிரம். நீ ஏன் அந்த அக்காவை நிறுத்திவிட்டு இந்த வேலைகளை செஞ்சி அந்த சம்பளத்தை வாங்கிக்க கூடாது.?"

அவன் கேட்டதும் நெஞ்சில் கையை வைத்தபடி அவனை அதிர்ச்சியோடு பார்த்தாள்.

"நான் செத்தே போயிடுவேன் மாமா.."

"அந்த அக்கா சாகல.." கண்களை உருட்டி சொன்னான்.

"நா.. நான்.. எனக்கு எந்த வேலையும் செய்ய வராது மாமா.." சிறு குரலில் தலைகவிழ்ந்தபடி சொன்னாள்.

அவளின் முகத்தை பற்றி நிமிர்த்தியவன் "நீயும் பொண்ணு.? எனக்கு பொண்டாட்டியா ஆகணும்ன்னு வேற ஆசைப்படுற.?" என்றான் கிண்டலாக.

அவனின் கையை தட்டி விட்டவள் "போங்க நான் கோச்சிக்கிட்டேன்.." என்றாள் முகத்தை திருப்பியபடி.

'நான் மட்டும்தான் சீரியஸா பேசிட்டு இருக்கேனா.?' என்று நினைத்தவன் "ஓ.. சரி.. நீ கோச்சிக்கோ.. கொஞ்சம் தள்ளி உட்கார்ந்து கோச்சிக்கோ.. நான் தூங்குறேன்.." என்றான். அவன் தலை சாய்க்க இருந்த நேரத்தில் அவனின் தலையை பிடித்து நிறுத்தியவள் "எனக்கு பதில் சொல்லவே இல்ல.." என்றாள்.

தலையை திருப்பி அவளை பார்த்தான்.

"தலையை விடுடி.." என்றான்.

நேராக அமர்ந்தவன் அவளை மூக்கு சிவக்க முறைத்தான்.

"முட்டாள்.. அதுதான் ஏற்கனவே சொன்னேன் இல்லையா.?" என்றான்.

"ஆனா.."

"எந்த ஆனாவும் இல்ல.. இந்த வீட்டுல வேலை செஞ்சா அந்த பன்னென்டாயிரத்தை அந்த அக்காவுக்கு தரதுக்கு பதிலா உனக்கு தருவேன். வயல்ல எனக்கு உதவியா வேலை செஞ்சா போனா போகுதுன்னு மாசம் பத்தாயிரம் போட்டு தருவேன். ஆபிஸ்ல எனக்கு ஒரு பி.ஏ தேவை. அங்கேயும் வந்து உதவி செஞ்சா மாசம் இரண்டாயிரம் தருவேன்.." என்றவன் அவளிடமிருந்து விலகி கட்டிலின் ஓரத்தில் கவிழ்ந்து படுத்தான்.

"மாமா.." அவனின் தோளை தட்டினாள்.

"இன்னும் என்னடி.?"

"இல்ல.. அது என்ன பி.ஏவுக்கு மட்டும் இரண்டாயிரம். நான் உங்களுக்கு பி.ஏவாவா இருக்கேன். மாசம் இருபத்தி நாலாயிரம் இந்த வேலைக்கே ஏன் நீங்க தரக் கூடாது.?" என்றாள் கொஞ்சலாக.

"வேலைக்கேத்த காசுதான் தர முடியும்.. இஷ்டமா இருந்தா கடனை கட்டு. இல்லையா விட்டுத் தொலை.. என்னை சும்மா டார்ச்சர் பண்ணி சாகடிக்காத.. உனக்கு போரடிக்கறதால்தான் வேலை செய்றேன்னு எங்க வீட்டுல சொல்லணும். இந்த சம்பள கணக்கெல்லாம் அந்த பத்த வச்சன்னு வை, பக்கத்துல இருக்கற மலைக்கு கூட்டிப்போய் அங்கேயிருந்து கீழே உருட்டி தள்ளிடுவேன்.." என்றான் மிரட்டலாக.

"சரி மாமா.. நான் யோசிச்சி நாளைக்கு சொல்றேன்.." என்றவள் பின்னலை கழட்டி விட்டுவிட்டு கட்டிலில் சாய்ந்தாள்.

அவளின் கேசம் அவனின் தோளிலும் முகத்திலும் படர்ந்தது. தள்ளி விட்டவன் ஒன்று இரண்டு எண்ணியபடியே கண்களை மூடினான்.

"மாமா.."

"என்ன.?"

"உங்களோடு கொஞ்சம் பேசலாமா.?"

"அதைதானடி பண்ணிட்டு இருக்க.?" அவனுக்கே சலிப்பாக இருந்தது. இவளுக்கெல்லாம் வாயே நோகாதா என்று வியந்தான். நொடிக்கொருதரம் 'மாமா, மாமா' என்று அழைத்துக் கொண்டே இருக்க வேண்டுமா என்று கடுப்பானான்.

"உங்க வீட்டுல எப்படின்னு தெரியல மாமா. எங்க வீட்டுல அப்பா, இரண்டு அண்ணன்ங்க.. என் பெரிய அண்ணன் சமைக்க கூட செய்வான். அவனே வீட்டு வேலையும் செய்வான். மத்த வேலையெல்லாம் அம்மாவே செய்வாங்க.. நான் தண்ணி குடம் கூட தூக்கியது இல்ல மாமா.. சின்ன பாப்பா.. சின்ன பாப்பான்னு சொல்லியே என்னை சும்மாவே வச்சிருந்துட்டாங்க.." என்றவளின் புறம் திரும்பி பார்த்தான்.

"இதுக்கு நீ பெருமை படக்கூடாது. வருந்தணும். உங்க அம்மா என்ன மெஷினா.? அவங்களுக்கு மட்டும்தான் பசிக்குமா.? அவங்களுக்கு உதவி செய்றதால நீ என்ன தேய்ஞ்சிருக்க போற.? நீயும் உன் சின்ன அண்ணனும் ஒரே ரத்த லைன்ல ஊறின சோம்பேறிங்கதான். என் தங்கச்சிக்கு நல்ல நேரம் பொறந்து அவன் மாறிட்டான். ஆனா என் தலையெழுத்துதான் உன்னோடு சிக்க வச்சிடுச்சி.." என்று பெருமூச்சி விட்டான்.

புவனாவின் கண்கள் கலங்கியது.

"அவங்க பண்ண தப்புக்கு நான் என்ன செய்வேன்.?" என்றாள்.

"நீ ஒன்னும் குழந்தை கிடையாது. நீ முதல்ல நடிக்கறதை நிறுத்து. என் தங்கச்சி உன் வீட்டுல மாடு போல உழைச்சபோது கைக்கட்டி வேடிக்கை பார்த்தவதானே நீயும்.? உனக்கு உன் அம்மா, அண்ணியெல்லாம் சேவகம் செய்ய படைக்கப்பட்ட ஜீவன்‌னு நினைப்பு.." என்றான் பற்களை அரைத்தபடி.

"போதும்.‌. மாமியார் கொடுமை செய்யாததுக்கு பதிலா நீங்களே கொடுமை செய்யாதிங்க.. நானே எப்படியோ முட்டி மோதி பிழைச்சிக்கிறேன்.." என்றவள் அந்த பக்கம் திரும்பி பார்த்தாள்.

'எப்ப கோச்சிப்பா, ஏன் கோச்சிப்பான்னு கூட தெரிய மாட்டேங்குது. நான் பார்த்த பெண்களில் பெஸ்டுன்னா என் தங்கச்சி மட்டும்தான். அப்புறம் தங்கச்சியை கரிச்சி கொட்டாத நேரத்துல இந்த கிழவி பாட்டியையும் பிடிக்கும்..' என மனதுக்குள் சொன்னவன் மெள்ள மெள்ள உறக்கத்தில் ஆழ்ந்தான்.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN