மணாளனின் மனம் 9

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
காலை ஐந்து மணிக்கு புவனாவை தட்டி எழுப்பினான் முத்தமிழ்.

"போடா.. கார்த்தி குரங்கு.. நான் தூங்குறேன்.." என்று அவனை தூர தள்ளினாள் அவள்.

பற்களை கடித்தபடி கோபத்தை கட்டுப்படுத்தியவன் பட்டென்று அவளின் பின்னந்தலையில் ஒரு அடியை விட்டான். பதறியடித்து எழுந்து அமர்ந்தவள் "என்ன ஆச்சி.?" என்றபடி சுற்றும் முற்றும் பார்த்தாள்.

"ஏய்.. சோம்பேறி கழுதை மணி அஞ்சாகுது.. இன்னும் உனக்கு என்ன தூக்கம்.?" என்று திட்டினான்.

புவனா கண்களை கசக்கிக் கொண்டு அவனை பார்த்தாள்.

"மாமா.." என்றவள் அருகே இருந்த அலாரத்தை பார்த்தாள். மணி ஐந்தை தாண்டி ஐந்தாறு நிமிடங்கள் ஆகியிருந்தது.

"சாரி மாமா.. உடம்பு வலி.. அதான் அசந்து தூங்கிட்டேன்.." என்றவள் அவசரமாக எழுந்து குளியலறை நோக்கி ஓடினாள்.

பல் துலக்கும்போது முத்தமிழின் பிரெஸ்ஸைதான் எடுத்தாள். 'என் டூத் பிரெஸ்ஸை தொடாதே' என அவன் முதல் நாள் சொன்னதற்காகவே தினமும் அவனின் பிரெஸ்ஸிலேயே பற்களை துலக்கிக் கொண்டிருந்தாள்.

காலை வேலைகளை முடித்துக் கொண்டவள் அவசரமாக வாசலுக்கு ஓடினாள். வாசலை முழுதாய் பெருக்கி, தெளித்து தனக்கு தெரிந்த கோலம் ஒன்றை போட்டாள். வீட்டிலிருந்தவர்களின் உடைகளை டிடெர்ஜென்டில் ஊற வைத்துவிட்டு வீட்டை சுத்தம் செய்ய ஆரம்பித்தாள். எட்டரைக்குள் வீடு பளிச்சென்று ஆகி விட்டது. துவைத்த உடைகளை வீட்டின் பின்னால் இருந்த கொடியில் காய வைத்தாள்‌.

மெஷினில் போட்டால் வேலை முடிந்தது. ஆனால் முத்தமிழ் காட்டில் இறங்கி வேலை செய்ததன் காரணமாக அவனது உடைகளை கைகளால்தான் துவைக்க வேண்டி இருந்தது. அப்போதும் கூட முதல் இரு வாரங்களில் உடையில் இருந்த கரைகளே போகவில்லை. அவனிடம் நிறைய திட்டுகளை வாங்கினாள்.

மெஷினில் துவைத்த உடைகளிலும் சிறு சிறு அழுக்கை தேடி காட்டி திட்டினான். அதிலிருந்தே மெஷினை ஓரம் கட்டிவிட்டாள்‌. தினமும் துவைக்கையில் அவ்வளவு அலுப்பாக தெரியவில்லை. ஆனால் தினமும் சுழற்சி முறையில் ஒரே வேலைகளை செய்யும்போதுதான் சலிப்பாக இருந்தது.

யசோதாவும் பாட்டியும் இவளின் திடீர் அவதாரம் கண்டு முதல் நாளே பிடித்து நிறுத்தி விசாரித்தார்கள்.

"மாமா எப்பவும் என்னை சோம்பேறின்னு திட்டுறாரு அத்தை.. அதனால நான் என் சுறுசுறுப்பு என்னன்னு அவர்கிட்ட காட்ட போறேன்.. நீங்க யாரும் இதுல தலையிடாதிங்க. நீங்க உதவியும் செய்யாதிங்க.. உங்க மகனுக்கு தனக்கு மட்டும் தலையில் கொம்பு முளைச்சி இருப்பதா நினைப்பு. அதை நான் உடைச்சி காட்டுறேன் பாருங்க.." என்று பொய்யாய் ஒரு காரணமும், சவாலையும் சொன்னாள்.

சின்ன பெண், இரண்டு வாரத்தில் இதையெல்லாம் விட்டு விடுவாள் என்று நம்பினார்கள் அந்த மூத்த பெண்மணிகள்.

வீட்டு வேலை கூட அவ்வளவா சோர்வை தரவில்லை. வயல் வேலைதான் அவளை பாடாய் படுத்தி எடுத்தது. முத்தமிழுக்கு இணையாக வேகநடை கூட போட முடியவில்லை அவளால்.

"நீங்க உயரமா இருக்கிங்க.. உங்க காலும் பெருசு. நீங்க ஓரடி எடுத்து வைக்கிற இடத்துல நான் இரண்டடி எடுத்து வைக்கிறதா இருக்கு. மெதுவா நடங்க மாமா.." என்று கூட சில முறை கெஞ்சினாள்.

ஆனால் அவன்தான் "அப்படின்னா நான் ஓர் அடி எடுத்து வைக்கிற நேரத்துக்குள்ள நீ இரண்டு அடி எடுத்து வச்சி நட.." என்றான்.

"யோவ் மாமா.. சத்தியமா உனக்கு மனசாட்சின்னு ஒன்னு இருக்காயா.?" எப்போதும் மனதுக்குள் கேட்பவள் அன்று நிஜத்தில் கேட்டு விட்டாள்.

கோபம் அவனின் முகம் முழுக்க தெரிந்தது. வாயை விட்டுவிட்டோமோ என்று அவள் நினைத்த நேரத்தில் அவளின் தாடையை பற்றினான்.

"கொன்னுடுவேன் உன்னை. உங்க அண்ணனுங்களை வாடா போடான்னு கூப்பிடுற மாதிரி என்னையும் கூப்பிடலாம்ன்னு நினைச்சிடாத.. பல் எல்லாத்தையும் தட்டி கையில தந்துடுவேன்.." என்று மிரட்டினான்.

"போங்க மாமா.. உங்களுக்கு ரொமான்டிக்ன்னா என்னன்னே தெரியல.." சிணுங்கலோடு அவனின் கையை தட்டிவிட்டு அவனை தாண்டி நடந்தாள் அன்று.

தனது கோபம், மிரட்டல் எதுவும் இவளிடம் எடுப்படவில்லை என்று அறிந்து முத்தமிழ்தான் தன்னையே நொந்துக் கொண்டான்.

அவள் வேலையை தொடங்க ஆரம்பித்து இன்றோடு ஒரு மாதம் முடிவடைய போகிறது. ஆனால் அதை கூட கணக்கிடாமல் கண்டுக் கொள்ளாமல் கொடிகளில் துணிகளை உலர்த்த போட்டுக் கொண்டிருந்தாள் புவனா.

துணிகளை காய வைத்துக் கொண்டிருந்தவளை அறையில் இருந்தபடி வெறித்துக் கொண்டிருந்தான்‌ முத்தமிழ். குள்ளமாக இருந்தவளுக்கு கொடி கயிறு எட்டவில்லை என்பதால் ஸ்டூலில் ஏறி நின்று துணிகளை காய வைத்துக் கொண்டிருந்தாள். ஒவ்வொரு முறையும் கீழே இறங்கி மீண்டும் ஸ்டூலில் ஏறுவது அவளுக்கு கொஞ்சம் சிரமமான வேலைதான்.

அந்த கயிறை சற்று கீழே தளர்த்தி கட்ட வேண்டும் என்றுதான் முத்தமிழும் தினம் காலையில் நினைப்பான். ஆனால் அவளின் வாயும், வார்த்தைகளும் அவனின் கோபத்தை சற்றும் குறைக்காமல் வைத்திருந்தது. அதனாலயே ஒரு மாதமாக கயிறு கட்டும் வேலையை கூட தள்ளி போட்டுக் கொண்டிருந்தான்.

முதல் நாள் இவளை தன் அலுவலகம் கூட்டிச் சென்றதை நினைத்து பார்த்தான்.

அலுவலகத்தில் இருந்தவர்கள் அவளிடம் தங்களை அறிமுகம் செய்துக் கொண்டனர். 'அவர்களோடு கை குலுக்கு, இவர்களுக்கு வணக்கம் வை!' என்பதை கூட முத்தமிழ்தான் அவளின் காதோரம் கிசுகிசுத்தபடி சொல்லித் தந்தான்.

அனைவரிடமும் சிரித்து பேசியவள் மதுமிதாவோடு பேசும்போது மட்டும் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டாள். மதுமிதாவை பிடிக்கவில்லை என்பதை தெளிவாகவே முகத்தில் காட்டினாள்.

அவனின் அறைக்கு வந்ததும் ஆச்சரியத்தோடு சுற்றிலும் பார்த்தாள். அறைக்குள் வந்த பிறகு அவளை கண்டுக் கொள்ள வேண்டிய தேவை தனக்கு இல்லை என்று நினைத்தபடி தன் இருக்கையில் அமர்ந்தான் முத்தமிழ்.

"நிஜமா இது உங்க சொந்த ஆபிஸா மாமா.?" அவன் நடத்திக் கொண்டிருந்த நிறுவனம்தான் அது என்று யூகித்துக் கொண்ட பிறகு ஆச்சரியத்தோடு கேட்டாள் அவள்.

அவள் தன்னை துரத்திய நாட்களை நினைவுப்படுத்தி பார்த்தவன் 'பண்ணது முழுக்க இல்லீகல் ஸ்டால்கிங்.. அதையும் குறை இல்லாம செஞ்சி இருக்காளா.? நான் பண்ற வேலையை கூட தெரிஞ்சிக்காம அப்படி என்னதான் பாலோவ் பண்ணா.? அன்னைக்குதான் நானே சொன்னேனே, ஆபிஸ் கட்டிடத்துக்கு வாடகை தரணும்ன்னு.. அதை கூட அப்பவே மறந்துட்டு இருக்கா முட்டாள் கழுதை..‌' என யோசித்து திட்டினான்.

"ஆமா.. என்னோடதுதான்.. நானும்.." அவன் முழுதாய் சொல்லி முடிக்கும் முன் "வாவ்.. நம்மோட கம்பெனி.." என்று கைகளை தட்டினாள்.

இருக்கையில் அமர்ந்திருந்த வண்ணமே தன் அருகே நின்றிருந்தவளின் தலையில் ஒரு தட்டு தட்டினான்.

"சொல்ல வருவதை முழுசா கேட்டு தொலையுறியா.?" என்றான் எரிச்சலாக.

"சாரி மாமா.." என்றவள் அவன் அடித்ததை பற்றிய எண்ணம் இல்லாமல் மேஜை மேல் இருந்த புகைப்படங்களை எடுத்து பார்த்தாள்.

அவளின் கையில் இருந்த புகைப்படங்களை வாங்கி மேஜை மேல் வைத்தவன் "அடியேய் என் பொண்டாட்டி.." என்று ஆரம்பித்தான்.

"நான்தான் மாமா அது.." என்றாள் கண்களை சிமிட்டியபடி.

நெற்றியில் அடித்துக் கொண்டவள் "இவளோட இப்படியெல்லாம் மாரடிக்கணும்ன்னு என்ன கெரகமோ.? இவளாலேயே ஒரு எபிசோட்ல முடிய வேண்டிய விசயமெல்லாம் இரண்டு எபிசோட் தாண்டி போகுது.." என்று முனகினாள். (ஆமா.. இங்கே முனகியது நான்தான் - crazy writer)

"இந்த நிறுவனம் நாலு நண்பர்கள் இணைஞ்சி நடத்திட்டு இருக்கறது.. நான், மது, இன்னும் இரண்டு பேர்..ஓகே.. இந்த நிறுவனத்தின் மூலமா குறைஞ்ச விலையில் ஏழைகள் பலருக்கும் வீடு கட்டி தந்துட்டு இருக்கோம். லாபம் சம்பாதிக்க ஆரம்பிச்சது இல்ல இந்த நிறுவனம். வீடு இல்லாத, வாடகை தந்தே மாச சம்பளம் முழுசா கரைச்சிடுற எளியவர்களுக்கு எங்களால் முடிஞ்ச சிறு உதவி. குறைந்த விலையில் கிடைக்கும் தரமான பொருட்களை வாங்கி எளிமையான, அதை சமயத்தில் சவுகரியமான வீடு கட்டிட்டு இருக்கோம். ஒரு ஊர்ல, ஒரு சமூகத்துக்கு, ஒரு கூட்டத்துக்குன்னு மொத்தமா பேசி அவங்களுக்கு ஒரே இடத்துல வசதியான வீடுகளை கட்டி தந்துட்டு இருக்கோம். எங்களுக்கு கிடைக்கறது கொஞ்சம் லாபம்தான். அதை லாபம்ன்னு சொல்லாம சம்பளம், கூலின்னு சொல்லலாம்.. இது எங்களோடது மட்டும்தான். நம்மோடது கிடையாது. ஓகே.?" என்றான்.

பதிலை காணவில்லையே என்று நிமிர்ந்து பார்த்தான்.

புவனா அவனின் மேஜை மேல் இருந்த பேப்பர் வெயிட்டை கைகளில் வைத்து விளையாடிக் கொண்டிருந்தாள்.

பெருமூச்சி விட்டபடி மேஜையில் தலையை சாய்த்தான். தான் பேசுவது முழுக்க சுவரிடம்தானோ என்று தோன்றியது அவனுக்கு.

"உங்க ஆபிஸ் கட்டிடத்துக்கு மாசா மாசம் வாடகை ஏன் தரணும்.? பேசாம நீங்களே ஏன் குறைஞ்ச விலையில் சவுகரியமான ஆபிஸ் கட்டிக்க கூடாது.?" பேப்பர் வெயிட்டை இரு கைகளிலும் மாற்றி மாற்றிப் போட்டு விளையாடியபடி கேட்டாள்.

படுத்துக் கொண்டிருந்தவன் பார்வையை திருப்பி அவளை பார்த்தான். ஆச்சரியத்தை தந்தது அவளின் கேள்வி.

"கட்டிட்டு இருக்கோம்.. வேலை முடிய இன்னும் நாலஞ்சி மாசம் ஆகும்.." என்றான்.

அவனின் புல்லரிப்பு முழுதாய் தீரும் முன்பே "அம்மா.." என்று அலறினாள் புவனா.

பதறி எழுந்து அமர்ந்து அவளை பார்த்தான். புவனா தரையில் அமர்ந்தபடி அவளின் காலை பிடித்துக் கொண்டிருந்தாள். அவளின் காலருகே இருந்த பேப்பர் வெயிட் இரண்டாய் உடைந்துப் போய் கிடந்தது.

"உங்க அப்பாவும், அண்ணன்களும் இப்ப மட்டும் இங்கே இருந்தாங்கன்னா இந்த உடைஞ்ச பேப்பர் வெயிட்டால அவங்க தலையை உடைச்சி இருப்பேன்.." என்று கடுகடுத்தவன் அவளின் காலை ஆராய்ந்தான். பேப்பர் வெயிட் விழுந்ததில் வலது காலின் மேல் பாதம் வீங்கி விட்டிருந்தது. இவன் தொட்டதற்கே கத்தினாள்.

"சனியனே.! நீ என்ன குழந்தையா.? பேப்பர் வெயிட்டோடு உனக்கு என்ன விளையாட்டு.?" என்று கேட்டு அவளின் தலையில் கொட்டினான்.

"காலோடு சேர்த்து இப்ப தலையும் வலிக்குது பையா.." அழுகையின் இடையே அவள் சொன்னதை கேட்டவன் ஒற்றை கையால் தன் முகத்தை மூடிக் கொண்டான்.

'முடியல இவளோட.. வா போன்னு கூட கூப்பிட கூடாதுன்னு நேத்துதான் மிரட்டினேன்‌. இப்ப பையாங்கறா.. என்னையே இப்படி படுத்துறா.. வேற யாரையாவது கட்டியிருந்தான்னு அந்த பாவி இன்னேரம் சன்னியாசம் ஓடியிருப்பான்..' என்று நினைத்தவன் அவளை எழுப்பி இருக்கையில் அமர வைத்துவிட்டு வெளியே சென்றான்.

இரண்டு நிமிடங்களுக்கு பிறகு இவன் திரும்பி வந்தபோதும் அவள் அழுதுக் கொண்டேதான் அமர்ந்திருந்தாள்.

"அழாத.." என்றவன் மதுமிதாவிடம் வாங்கி வந்திருந்த தைலத்தை அவளின் காலில் தேய்த்து விட்டான். அவன் தேய்த்து விட்டதற்கும் அழுதாள் அவள்.

அன்று அவனது வேலை முடியும் வரை அமைதியாக அமர்ந்திருக்கும் வேலைதான் இருந்தது அவளுக்கு. அவனுக்கு பி.ஏ என்று சொல்லிக் கொண்டு வேலைக்கு வந்த முதல் நாளிலேயே ஓய்வெடுத்தாள்.

வேலை முடிந்து கிளம்புகையில் "தூக்கிக்கோங்க மாமா.. கால் வலிக்குது.." என்று சிணுங்கினாள்.

இவளால் அன்று அவன் தனது வேலையை சரியாகவே செய்யவில்லை‌. அந்த கோபத்தில் இருந்தவன் இவள் இப்படி கேட்டதும்‌ "ஜெயிலுக்கு போனாலும் பரவால்லன்னு உன்னை கொன்னுடுவேன். வெளியே என் பிரெண்ட்ஸ் எல்லாரும் இருக்காங்க.. அவங்க முன்னாடி என் மானத்தை வாங்க டிரை பண்ணாத.. மரியாதையா எழுந்து நடந்து வா.." என்று உருமினான்.

"வெட்கமா இருந்தா வெட்கம்ன்னு சொல்லுங்க மாமா.. அதை ஏன் மானம் போகுதுன்னு பொய் சொல்றிங்க.?" எனக் கேட்டவள் உதட்டை சுழித்துக் காட்டிவிட்டு அவனுக்கு முன்னால் வெளியே நடந்தாள்.

அவள் அந்த அறையை விட்டு செல்லும் முன் பிடித்து நிறுத்தியவன் அவளின் துப்பட்டாவை எடுத்து அவளின் முகத்தை துடைத்து விட்டான்.

"அழுது சிவந்த முகத்தோடு உன்னை பார்த்தா என் பிரெண்ட்ஸ் என்னை தப்பா நினைப்பாங்க. ஏன்னா சின்ன வலிக்கே இவ்வளவு அழுது ஆர்ப்பாட்டம் செஞ்சவ நீயாதான் இருப்ப.." என்றவன் அவளின் காதோரம் ஒட்டிக் கொண்டிருந்த அவளின் நெற்றிப் பொட்டை எடுத்து நெற்றியின் நடுவே ஒட்ட வைத்தான்.

செல்லும் வழியில் ஊசி போட்டுக் கொண்ட பிறகும் கூட அன்று இரவெல்லாம் வலியில் சிணுங்கி அவனை தூங்க விடாமல் செய்தாள் அவள்.

உடைகளை காய வைத்துவிட்டு திரும்பிய புவனா யோசனையோடு உடைகளை திரும்பி பார்த்தாள். முத்தமிழின் உடைகளையும் தனது உடைகளையும் மாறி மாறி பார்த்தவள் "டெய்லியும் மறந்து போயிடுறேன்.." என்று நெற்றியில் அடித்துக் கொண்டாள். அவனின் உடைகளின் இடையே தனது உடைகள் இருக்கும்படி மாற்றி வைத்துவிட்டு கிளம்பினாள்.

அவளை பார்த்துக் கொண்டிருந்த முத்தமிழ் "சரியான சில்லறை.." என்று முனகினான்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN