மணாளனின் மனம் 10

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
புவனா உப்பு பூத்த முகத்தோடு தன் அறைக்குள் நுழைந்தாள். அதே நேரத்தில் உள்ளிருந்து வெளியே செல்ல இருந்த முத்தமிழ் அவளை இடித்து நின்றான்.

"சாரி மாமா.. பார்க்கல நான்.." என்றவள் விலகி நின்றாள்.

"இன்னைக்கு வயல்ல கடலை விதைக்கலாம்ன்னு இருக்கேன்.." என்றான்.

"சாப்பிட்டு வந்துடுறேன் மாமா.." என்றவள் வெளியே செல்ல முயன்றாள்.

அவளை கைப்பிடித்து நிறுத்தியவன் "முதல்ல போய் குளிச்சிட்டு வா.." என்றான்.

சிணுங்கினாள். "பசிக்குது மாமா.." என்றாள்.

"பத்து நிமிசத்துல செத்துட மாட்ட.." என்றவன் அவளை தாண்டிக் கொண்டு நடந்தான்.

அவனின் முதுகை குத்துவது போல கையை கொண்டு சென்றவள் அமைதியாக குளியலறை நோக்கி நடந்தாள்.

எளிமையான புடவை ஒன்றை உடுத்திக் கொண்டாள். தலையை கொண்டையாக போட்டுக் கொண்டாள். வயலுக்கு செல்லும் நாட்களில் அவளால் பின்னலிட முடியவில்லை.

புடவை கட்டினால் அத்தைக்கும் பாட்டிக்கும் பிடிக்கிறது என்று கட்டிக் கொண்டு இருக்கிறாள்.

அவள் சாப்பிட்டு முடித்துவிட்டு வரும்வரை வாசலில் அமைதியாக நின்றிருந்தான் முத்தமிழ்.

"மாமா போலாம்.." என்று ஓடி வந்தவளை உற்று பார்த்தவன் அவளின் வாயோரம் ஒட்டிக் கொண்டிருந்த சோற்று பருக்கை ஒன்றை விரலால் தள்ளி விட்டான்.

அவசரமாக வாயை துடைத்துக் கொண்டாள் புவனா.

"சாரி மாமா.." என்றாள்.

"அது ஒன்னு தவிர வேற ஏதாவது உன்னால சொல்ல முடியுதா.?" என்று கேட்டவனை குழப்பமாக பார்த்தவள் "முடியும் மாமா.. ஐ லவ் யூ.." என்றாள்.

"அமைதியா வாடி.. காலையிலயே என்கிட்ட வாங்கி கட்டிக்காத.." என்றவன் பைக்கில் ஏறி அமர்ந்து பைக்கை ஸ்டார்ட் செய்தான்.

அவனின் முன்னால் இருந்த பையை பார்த்தவள் "என்ன மாமா அது.?" என்றாள்.

"கடலை விதைக்கிறோம்ன்னு தமிழ்லதான்டி சொன்னேன்.."

"இல்ல.. தமிழே தமிழ்லதான் சொன்னான்.. இது எப்படி மாமா இருக்கு.?" பைக்கில் ஏறி அமர்ந்த வண்ணம் கேட்டாள்.

"போற வழியில் உன்னை மட்டும் கீழே தள்ளி விட்டுடட்டா.?" என கேட்டவனின் தோளில் அடித்தாள்.

"சரியான முசுடு நீங்க.." என்றாள்.

மேட்டுக்காட்டில் பைக்கை நிறுத்தினான் முத்தமிழ்.

டிராக்டர் ஒன்று நிலத்தின் ஓரத்தில் நின்று இருந்தது.

கடலை இருந்த சாக்கை இறக்கி கீழே வைத்தவன் "நான் உழுவ உழுவ நீ விதைச்சிடு.." என்றான்.

அவன் டிராக்டரை நோக்கி நடக்க இருந்த நேரத்தில் அவனின் கைப்பிடித்து நிறுத்தினாள் புவனா.

"என்ன விளையாடுறிங்களா.? இதெல்லாம் ரொம்ப பெரிய வேலை மாமா.. சத்தியமா சொதப்பிடுவேன். ஒரு போக வெள்ளாமையே போயிடும்.." என்றாள்.

அவளை மேலும் கீழும் பார்த்தவன் "விதைக்க கூடவா தெரியாது.." என்றுக் கேட்டான் சந்தேகத்தோடு.

அவனின் கேள்வியே அவளுக்கு அதிர்ச்சியை தந்தது.

"மாமா.. நான் வயல் பக்கம் போனதே இல்ல.."

"விதை விதைப்பு விளையாட்டு கூடவா விளையாடியது இல்ல.?"

அவன் இப்போது கேட்டது முன்பை விட அதிக அதிர்ச்சியை தந்தது. இல்லையென தலையசைத்தாள்.

"இப்படி ஒரு விளையாட்டு இருக்குன்னு கூட தெரியாது மாமா.." என்று கையை விரித்தாள்.

டிராக்டரையும் அவளையும் மாறி மாறி பார்த்தான்.

"உன்னை நம்பி டிராக்டர் ஓட்டுற பையனை வேண்டாம்ன்னு சொன்னேன்.."

முறைத்தாள் அவள்.

"லூசுன்னு நிரூபிச்சிட்டே இருக்கிங்க மாமா.. என்கிட்ட முதல்லயே கேட்டு இருக்கணும். இல்லன்னா கடலை விதைக்கற மெஷினையாவது வர சொல்லி இருக்கணும்.." என்றாள்.

"உன்னை மாதிரி முட்டாளை நம்பியது என் தப்புதான்டி.."

"நான் முட்டாள்ன்னு தெரிஞ்சும் என்னை நம்பிய நீங்கதான் என்னை விட பெரிய முட்டாள்.."

அவளை முறைத்தவன் யோசித்தான். போனை எடுத்தவன் இன்றைக்கு அலுவலகம் வருவதற்கு தாமதம் ஆகும் என்று மதுமிதாவிடம் தகவல் சொன்னான்.

பின்னர் டிராக்டரை நோக்கி நடந்தவன் "இங்கேயே இரு.. நானே உழவோட்டி விதைச்சிக்கிறேன்.." என்றான்.

புவனா கடலை சாக்கின் அருகே அமர்ந்தாள். சாக்கை பிரித்தாள். குண்டு குண்டாக இருந்த கடலைகளை ஒரு கை அள்ளினாள். கணவன் உழவு ஓட்டுவதை பார்த்தவாறே கடலைகளை கொறிக்க ஆரம்பித்தாள்.

முத்தமிழ் இவளின் திசையில் உழவோட்டி வருகையில் பற்களை காட்டினாள். அவன் கடுப்பில் இருப்பது முகத்தை காணும்போதே அவளுக்கு புரிந்தது.

இரண்டு ஏக்கர் நிலம்தான் அது. கிணறு இல்லாத வயல் பகுதி. இந்த நிலத்திற்கும் கிணற்றிலிருந்து பைப் புதைத்து விட வேண்டும் என்று வெகுநாளாக நினைத்துக் கொண்டிருக்கிறான் முத்தமிழ். ஆனால் நேரம் அமையவில்லை. பெய்த தூறலுக்கும், இனி பொழிய இருக்கும் மழைக்கும் கடலையை விதைத்தாலாவது சரி வருமே என்று நினைத்தான்.

கைகளால் விதைப்பது அவனுக்கு மிகவும் பிடிக்கும். சிறு வயதில் விளையாட்டில் கற்று கொண்ட பழக்கம் ரொம்ப பிடித்துப் போய் விட்டது. விதைகளை விதைக்கையில் தன்னை கடவுளை போல உணர்வான் அவன். அவனுக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் விதைக்க தெரியாதவர்களே யாரும் இல்லை என்று எண்ணிவிட்டான். ஆனால் மனைவியாய் வாய்த்தவளுக்கும் விதைக்க தெரிந்திருக்கும் என்று நினைத்திருக்க கூடாது.

உழவை ஓட்டி முடித்தான். நிலத்தின் ஒரு ஓரத்தில் டிராக்டரை நிறுத்திவிட்டு வந்தான்.

புவனா சட்டென்று எழுந்து நின்றுக் கொண்டாள். வள்ளத்தில் முக்கால் பாகம் கடலைகளை அள்ளி எடுத்தான்.

"வா விதைக்கலாம்.." என்றான்.

"நானா.?" என கேட்டவளின் கையை பற்றியவன் ஓட்டிய வயலுக்குள் இழுத்து நிறுத்தினான்.

"நான் எப்படி விதைக்கிறேன்னு பாரு.. கத்துக்கோ.." என்றான்.

புவனா கண்களை உருட்டியபடி அவனின் கையை பார்த்தாள். கைப்பிடி கடலைகளை அள்ளியவன் இரு வீச்சுகள் வீசினான். அதே போல இரட்டை வீச்சுகளாக கையிலிருந்த கடலைகளை விதைத்து முடித்தான்.

அவனின் கையை பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு ஓவிய தீட்டலை பார்ப்பது போலவே இருந்தது. அதை விட முக்கியமாக விதைகள் மண்ணை சேர்கையில் வந்த சத்தம் மிகவும் புதிதாக இருந்தது. இசைகள் தோற்கும் அளவுக்கு இருந்தது. விதைப்பது பிடித்திருந்தது. ஆசையாக இருந்தது அதே போல் விதைக்க. அவனை போலவே தன் கையை அசைத்துப் பார்த்தாள்.

"மாமா நானும் நானும்.." என்றவள் வள்ளத்தில் கையை வைத்தாள்.

அவளின் கையை தட்டி விட்டான் முத்தமிழ். அவளை திரும்பி பார்த்தான்.

"ஒரு இடத்துல கூட சொட்டை வர கூடாது. எங்கேயும் பயிர் கூட்டமா வளர்ந்துட கூடாது. அதே போல சமமா விதைப்பியா.?" எனக் கேட்டான்.

மறுத்து தலையசைத்தாள். விதைப்பது சுலபம் என நினைத்தவளுக்கு இதிலும் ஒரு கணக்கு உள்ளது என்பது தெரியாமல் போய் விட்டது.

"நீங்க விதைக்கற டிராக்டரை வர சொல்லி இருக்கலாம்.." என்றாள் இரண்டாம் முறையாக.

விதைத்தபடியே முன்னேறியவன் "இப்படி விதைக்கிறதை பார்க்கும்போது உனக்கு என்ன தோணுது.?" என கேட்டான்.

"சூப்பரா இருக்கு.. கலைகளில் இதுதான் சிறந்த கலைன்னு தோணுது. ஏழு ஸ்வரங்கள் தோத்துடும் விதைகள் எல்லாம் மண்ணை சேரும் சத்ததோடு ஒப்பிடும்போது.." என்றாள் அவனின் கையையும், மண்ணையும் மாறி மாறி பார்த்தபடி.

விதைத்தபடியே அவளை திரும்பிப் பார்த்தவன் "கவிதையெல்லாம் வரும்போல இருக்கு.." என்றான் கிண்டலாக‌.

"உங்களை காதலிச்சதால் கிடைச்ச புண்ணியங்களில் இதுவும் ஒன்னு மாமா.‌." என்றவளை உதடு சுழித்துப் பார்த்தான்.

விதை தீர இருந்த நேரத்தில் "போய் அந்த சாக்கை தூக்கி வா.." என்றான்.

புழுதிக் காட்டில் அந்த விதை சாக்கை தூக்கி வருவதற்குள் மூச்சு வாங்கி விட்டது அவளுக்கு.

கட்டியிருந்த புடவை வேறு காலில் மாட்டி பாதி அவிழ்ந்து விட்டது. சாக்கை கொண்டு வந்து அவனருகே இருந்த வரப்பின் மீது வைத்தவள் அவசரமாக புடவையை கட்ட ஆரம்பித்தாள்.

"இந்த காலத்துல எந்த பயனுக்கு புடவை கட்டுறிங்களோ தெரியல.. புடவைன்னா நாம் செய்ற வேலைக்கு இடைஞ்சலா இருக்க கூடாது. தரை கூட்டுற மாதிரி வயல்காட்டுல எதுக்கு புடவை கட்டுற.? வரிவரியா இருக்கறதை எல்லாம் தூக்கி இடுப்புல சொருகி வைக்க கூடாதா.?" என்றான் எரிச்சலாக.

"மாமா இதெல்லாம் ஓவர்.. மாமியார் கொடுமை பண்ணலன்னு நீங்க கொடுமை பண்ணுறிங்க‌‌.. ஆகாத பொண்டாட்டி கை பட்டாலும் குத்தம். கால் பட்டாலும் குத்தம்ங்கற பழமொழியெல்லாம் உங்களுக்காகதான் கண்டுபிடிச்சி இருக்காங்க.." என்றபடி கொசுவத்தை தூக்கி சொருகிக் கொண்டு வந்தவளிடம் வள்ளத்தை நீட்டியவன் "போய் கடலையை அள்ளி வாடி.." என்றான்.

அவனை போலவே முக்கால்வாசி அள்ளி வந்தாள்.

"இப்படி வந்து நில்லு.." என்று தனக்கு முன்னால் கை காட்டினான்.

"எனக்கும் கத்து தர போறிங்களா.?" ஆவலோடு முன்னால் வந்து நின்றாள்.

"வேலைக்குன்னு உன்னை ஆள் வச்சிருக்கேன். இன்னைக்கு ஒருநாள் போனா போகுதுன்னு விடுறேன். அடுத்த முறைக்கு நீதான் விதைக்கணும்.." என்றவன் அவளின் கையை பற்றி அவளை சுற்றி நிறுத்தினான்.

தன் முதுகோடு உரசி நின்றவனை அண்ணாந்து பார்த்தாள்.

"வயல்காட்டு ரொமான்ஸ் நல்லாருக்கு மாமா.." என்றாள்.

"ஒரு வெங்காய ரொமான்ஸ்ம் இல்ல.. கடுப்பேத்தாம கத்துக்க டிரை பண்ணு.." என்றவன் அவளின் முன்னால் வள்ளத்தை நீட்டினான். "அள்ளிக்கோ.." என்றான்.

அவளின் வலது கையை பற்றியவன் "கையை லூசா விடு.. நான் உன் கையை ஹேண்டில் பண்ணனும். ஓகே.?" என்றான்.

"ஓகே மாமா.." என்றவளின் கையை மெல்ல வீசினான். இரட்டை வீச்சுகள். விதைகள் மண்ணில் புதைவதை கண்களை அகல விரித்து பார்த்தாள்.

"வாவ்.. சூப்பரா இருக்கு மாமா.." என்றாள்.

"எதை எதையோ கத்து தரதுக்கு பதிலா பேரண்ட்ஸ் தன் பிள்ளைகளுக்கு இதை கத்து தரலாம்.." என்றாள்.

"என்ன சென்ட் யூஸ் பண்ணி இருக்க.?"

சம்பந்தம் இல்லாத நேரத்தில் சம்பந்தம் இல்லாமல் கேட்க மாட்டானே என்று குழம்பியவள் "எதுவும் இல்ல மாமா. ஏன்.?" என்றாள்.

'நேச்சுரல் ஸ்மெல்லா இது.? ரொம்ப நல்லாருக்கே. ஆனா இந்த குட்டிச் சாத்தான்க்கிட்ட இதை சொன்னா உடனே என்னை சாய்ச்சிடுவா..' என்று நினைத்தவன் "சும்மா கேட்டேன்.. மனுசனுக்கு கேள்வி கேட்க கூட உரிமை இல்லையா.?" என்று எரிந்து விழுந்தான்.

"இது கடலை.. ஒவ்வொரு செடிக்கும் நடுவுல கேப் இருக்கணும். சோளம் அளவுக்கு நெருக்கமாவும் இருக்க கூடாது. தட்டை பயறு அளவுக்கு கேப்பும் இருக்க கூடாது.." என்றவன் அவளுக்கு விதைப்பதை பற்றி பாடம் எடுத்தான்.

எல்லாவற்றிற்கும் தலையாட்டிக் கொண்டே வந்தாள் புவனா.

கொஞ்ச நேரம் மட்டும் அவளுக்கு கற்று தந்தவன் "இந்த ஒரு லைன் மட்டும் நீ விதை.. விதைச்சி கத்துக்க.." என்றுவிட்டு அவளை விலக்கி நிறுத்தி விட்டு தனது வேலையை பார்க்க ஆரம்பித்தான்.

புவனா தன்னால் முடிந்த அளவுக்கு சேதாரம் செய்யாமல் இருக்க வேண்டும் என்று நினைத்தாள். ஆனால் முதல் முறை என்பதால் சரியாக வரவில்லை. சில முறைகளில் ஒரே இடத்தில் விதைகளை கொட்டி விட்டாள். ஒரு சில இடங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக விழுந்தது விதைகள். மீண்டும் அதன் மீதே விதைக்கையில் ஏற்கனவே விதை விழுந்த இடத்திலேயே விழுந்தது. நன்றாகவே சொதப்பி வைத்தாள்.

இரண்டு ஏக்கர் நிலத்திலும் கடலையை விதைத்து விட்டு மேடேறினார்கள் இருவரும்.

"காலெல்லாம் வலிக்குது மாமா.. வெயில் வேற.." என்றவள் தன் முகத்திலிருந்த வியர்வையை முந்தானையால் ஒற்றி எடுத்தாள்.

"ஆதி காலத்துல பொம்பளைதான் வேட்டைக்கே போவாளாம். நீயும்தான் இருக்கியே.. தண்டச்சோறு.." என திட்டினான்.

இருவரும் அலுவலகம் வந்து சேர்ந்தபோது அவர்களை குறுகுறுவென பார்த்தாள் மதுமிதா.

"பொண்டாட்டி கையால் விதைச்சா செல்வம் அதிகமா கிடைக்கும்னு நினைச்சிதானே அவளை கூட்டிப் போன.?" முத்தமிழ் தனியாய் கிடைத்தபோது ஆவலாக கேட்டாள் மதுமிதா.

"நான் சாங்கியம் சடங்கெல்லாம் அதிகம் பார்க்கிறது இல்ல மது‌‌.. ஏனா என்னை பொறுத்தவரை பொண்ணா பிறந்த எல்லோருமே மகாலட்சுமிங்கதான். இவ கையால் விதைச்சாலும் எப்போதும் போலவே நல்ல லாபம்தான் வரும். ஆனா இந்த பிசாசு குட்டிக்கு விதைக்கிறதுன்னா என்னன்னே தெரியல.." என்றான் எரிச்சலாக.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN