மணாளனின் மனம் 11

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
மதுமிதா தன் நண்பனை பொய்யாக முறைத்தாள்.

"அவ எவ்வளவு க்யூட்டாக இருக்கா.. அவளை ஏன் இப்படி சொல்ற.?" என்றாள்.

"அவளை க்யூட்டுன்னு நம்பி நீயே ஏமாந்துட்டு இருக்காத.. ஒன்னாம் நம்பர் வில்லி அவ.. இப்ப கூட பாரு.. அவ நம்மளைதான் வாட்ச் பண்ணிட்டு இருப்பா.." என்றான்.

மதுமிதா தயக்கத்தோடு பார்வையை திருப்பினாள். முத்தமிழின் அறையின் ஜன்னல் தடுப்பின் பின்னால் இருந்த புவனாவின் முகம் கொஞ்சமாக தெரிந்தது.

"அவ உன்னை மிஸ் பண்றாப்பா.." என்றாள்.

"அவளை விட நீ லூசா இருக்க மது.." என்றவனின் காலில் ஓங்கி ஒரு மிதி தந்தாள் மதுமிதா.

"யாரை லூசுங்கற.?" என்றாள் புருவம் நெரித்தபடி.

"நீ இல்லதான். ஆனா அவக்கிட்ட இதையே நான் சொல்லியிருந்தா பல்லை காட்டிக்கிட்டு நின்னிருப்பா.. அது ஒரு அரை மெண்டல்.. அவளோட முட்டாள்தனத்தை அளந்து பார்க்க ஸ்கேல் மட்டும்தான் இன்னும் கண்டுபிடிக்கல.‌" என்றான்.

மதுமிதாவின் முகம் சட்டென்று மாறி விட்டது. கோபமும் ஆதங்கமும் அவளின் முகத்தில் பொங்கி வழிந்தது.

"உன் பிரச்சனைதான் என்ன தமிழ்.? ஒரு பொண்ணு தன் புருசனையே அம்மாவா, அப்பாவா, அண்ணனா, நண்பனா நினைச்சி ஏத்துக்கறது தப்புன்னு சொல்ல வரியா.? நீ என்ன திட்டினாலும் அதை விளையாட்டா எடுத்துட்டு உன்னை சுத்தி வருவதை முட்டாள்தனம்ன்னு சொல்ல வரியா.?" என்றாள்.

முத்தமிழ் இடம் வலமாக தலையசைத்தான்.

"உன் எண்ணம் ரொம்ப மோசமா இருக்கு தமிழ். எந்தவொரு சூழ்நிலை வந்தாலும் தன்னை விட்டு விலகாம காலம் முழுக்க கூடவே இருந்து காதலிக்க ஒரு ஜீவன் கிடைக்காதான்னு ஏங்கிட்டு இருக்காங்க எத்தனையோ பேர். ஆனா உன்னை சுத்தி வந்து வலுக்கட்டாயமா காதலை தந்தா அந்த பொண்ணை முட்டாள்ன்னு சொல்ற.. நிறைய படிச்சதுல உன் தலையில நிறைய வெயிட் ஏறிடுச்சி. அந்த ஹெட்வெயிட்டை கொஞ்சம் குறைச்சிக்க பாரு. அவளோட காதலையும் கண்ணை திறந்து பாரு.." என்றாள்.

முத்தமிழ் யோசனையில் இருந்தான்.

"நான் கடுப்புல கத்தி வைக்கும் முன்னாடி எழுந்து இங்கிருந்து போ.." என்று சீறினாள் அவள்.

"ஓகே.. கூல் டவுன் பேபி.." என்றவன் யோசனையோடு எழுந்து தன் அறைக்கு நடந்தான்.

அவன் வந்து பார்த்த போது புவனா அவன் தந்து சென்ற பைலில் ஏதாவது விடுபட்டு போய் உள்ளதா என்று சரிபார்த்துக் கொண்டிருந்தாள்.

இவனை கண்டதும் புன்னகைத்தாள்.

மதுமிதா சொன்னதை பற்றியே யோசித்துக் கொண்டிருந்தான் அவன்.

"மாமா.. நான் ஒன்னு சொல்லட்டா.?" கொஞ்சலாக கேட்டவளிடம் சரியென தலையசைத்தான்.

"இந்த கம்பெனிக்கு மதுமிதா அக்கா எவ்வளவு காசு தந்திருக்காங்களோ அதே அளவு காசை நான் தரேன். அவங்களுக்கு பதிலா என்னை கூட்டு சேர்த்துக்கிறிங்களா.?"

முத்தமிழ்‌ தன் பின்னந்தலையில் தட்டிக் கொண்டான். மதுமிதா சொன்னாள் என்று இவ்வளவு நேரம் யோசித்துக் கொண்டிருந்த தன் மூளையை திட்ட தோன்றியது அவனுக்கு.

புவனாவின் ஆவல் நிறைந்த முகத்தை பார்த்தவன் "உனக்கு இன்ஜினியரிங் தெரியுமா.?" எனக் கேட்டான்.

புவனா இல்லையென தலையசைத்தாள்.

"அப்புறம் ஏன் நான் உன்னை கூட்டு சேர்க்கணும்.? உன்னை திட்டி திட்டியே எனக்கு சலிச்சி போகுது. மதுமிதா மேல உனக்கு எரிச்சல். அவளை இங்கிருந்து அனுப்பணும். உனக்கு அதான் வேணும். நாங்க நடத்தற கம்பெனி நாசமா போறதை பத்தி கவலை இல்ல.." என்று முறைத்தான்.

புவனா அமைதியாக தலை குனிந்துக் கொண்டாள்.

"காசு தர மொகரையை பாரு.. உங்க அப்பா காசு, உங்க அண்ணனுங்க காசெல்லாம் என்னவோ நீயே உழைச்சி சம்பாதிச்ச மாதிரி செலவு பண்ண மட்டும் ஆசைப்படுற.." என்று எரிந்து விழுந்தான்.

"ஓகே.. விடுங்க மாமா.. தெரியாம கேட்டுட்டேன்.." என்றவள் பைலுக்கு பார்வையை திருப்பிக் கொண்டாள்.

"உன்னை மாதிரி முட்டாளோடு வாழணும்ன்னு விதி எனக்கு.." முனகியவன் தனது வேலைகளை பார்க்க ஆரம்பித்தான்.

'முட்டாள்களும் மனுசங்கதான். முட்டாள்களோடு வாழ்ந்தா கொலை குத்தம் கிடையாது..' என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டாள் புவனா.

முத்தமிழ் சொல்லிச் சென்றதையே நினைத்து கடுப்பில் இருந்தாள் மதுமிதா. பெண்களை தரம் தாழ்த்தி பார்க்கும் மனிதர்களை கண்டாலே அவளுக்கு பிடிக்காது.

அவளுக்கு முத்தமிழை பிடிக்க காரணமே அவன் மற்றவர்களுக்கு தரும் மரியாதைதான். ஆனால் அவனே தன் மனைவியை முட்டாள் என்று திட்டுவது கண்டு அதிர்ந்து விட்டாள்.

அவனை திருமணம் செய்யாமல் போனதை பற்றி அவளுக்குள் இதுவரையில் எந்த பெரிய வருத்தமும் இல்லை. ஆனால் இப்போது இவன் இப்படி பேசியது கண்டதும் அவனை திருமணம் செய்திருந்தால் அது தனது தவறாகி இருக்கும் என்று நினைத்தாள்.

சுய கௌரவத்தை அதிகம் நேசிப்பவள் மதுமிதா. புவனாவின் இடத்தில் தன்னால் ஒருநாள் கூட வாழ முடியாது என்பது புரிந்தது‌. கணவனுக்காக கூட மதுமிதா அழ மாட்டாள். ஆனால் புவனா காதலுக்கே உயிரை தந்தது இதுவரை அவளுக்கு முட்டாள்தனமாக தோன்றினாலும் அதெல்லாம் காதலின் கணக்கு என்றுதான் நினைத்தாள். ஆனால் திருப்பி காட்டப்படாத காதலுக்காக உயிரை விட துணிவது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பது இப்போதுதான் தெளிவாக புரிந்தது.

"என்ன யோசனை மது.?" எனக் கேட்டபடி அவளின் முன்னால் வந்து அமர்ந்தான் தயாளன். கம்பெனிக்கு முதலிட்டு இருக்கும் நண்பர்கள் கூட்டத்தில் அவனும் ஒருவன். ஆனால் ஒன்னாம் நம்பர் ப்ளேபாய். திறமைக்காக அவனை தங்களுடன் வைத்திருந்தாள் மதுமிதா. இல்லையென்றால் அவனின் குணத்திற்கு தன் பார்வைக்குள் கூட அவனை வர விட்டிருக்க மாட்டாள்.

"உன் வேலையை போய் பாரு தயா.. எனக்கு வேலை இருக்கு.." என்றவள் தனது வேலையை கவனிக்க ஆரம்பித்தாள்.

"நீ ரொம்ப ப்ரிட்டி.. இது உனக்கு தெரியுமா.?" என்றுக் கேட்டான் கண்களை சாய்த்து.

மதுமிதா கண்களை மூடி திறந்தாள். அவனை பார்த்து புன்னகைத்தாள். "எங்க வீட்டிலும் கண்ணாடி இருக்க தயா. நான் ப்ரிட்டின்னு எனக்கும் தெரியும். நீ புதுசா கண்டுபிடிச்ச மாதிரி பாராட்டிட்டு இருக்காத.. போய் உன் வேலையை பாரு.." என்றாள்.

"ரொம்ப கோபமா இருக்க.. நாம அப்புறமா பார்க்கலாம்.." என்றவன் சிரித்தபடியே எழுந்துப் போனான்.

புவனா தன் வேலையை பார்த்தபடியே இடை இடையே முத்தமிழை ரசித்துக் கொண்டிருந்தாள்.

"மாமா.. நீங்க ரொம்ப ஹேண்ட்சமா இருக்கிங்க.." என்றாள்.

"ஆனா நீ அழகா இல்ல.." என்றான் அவன் பட்டென்று.

"பொய்.." என்றவளை நிமிர்ந்துப் பார்த்தான். தனது வேலையில் கண்ணாக இருந்தாள். அழகாய்தான் இருந்தாள். அழகு அவரவர் பார்வையில் என்றால் அவனின் பார்வைக்கும் அழகாய்தான் தெரிந்தாள். ஆனால் அதை தன் மனதுக்குள் ஏற்றுக்கொள்ள மறுத்தான்.

"நான் ரொம்ப அழகு கிடையாது மாமா.. ஆனா உங்க அழகுக்கு ஏத்த ஆள்தான். ஏதோ நீங்க கொஞ்சம் அதிகம் படிச்சிட்டிங்க‌.. உங்க உடம்போட சுறுசுறுப்பும் சேர்ந்து பிறந்துடுச்சி. மத்தபடி நானும் உங்களுக்கு ஈக்வெல்தான்.." என்றாள் தலை நிமிராமல்.

அவளின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவன் ஏன் இவள் முகம் வட்டமாக இருக்கிறது என்ற ஆராய்ச்சியில் இருந்தான்.

"நான் நாளைக்கு ஒருநாள் மட்டும் லீவ் எடுத்துக்கிட்டா.?" என அவள் கேட்டதும் தன் சிந்தனையிலிருந்து வெளியே வந்தவன் "ஏன்.?" என்றான்.

நிமிர்ந்தாள் அவள். "உடம்பு கொஞ்சம் வலிக்குது மாமா.." என்றாள் வெட்கத்தோடு.

அவனுக்கு என்னவோ போல் இருந்தது‌. உழைப்பை பற்றி அறிந்திராதவள் அவள். தான் ஒற்றை அண்ணனாக இருக்கும்போதே அபிராமியை எவ்வளவு செல்லமாக வளர்த்தினோம் என்பதை யோசித்து பார்த்தான். இரண்டு அண்ணன்களோடு வளர்ந்தவள் நிச்சயம் ஒரு மர நாற்காலியை கூட நகர்த்தி வைத்திருக்க மாட்டாள் என்பதையும் புரிந்துக் கொண்டான். இந்த ஒரு மாதத்தில் அவள் தனது வேலைகளை செய்ய சலிக்கவே இல்லை. அவனும் அவளுக்கு ஓய்வு தரவேயில்லை. ஞாயிற்றுக் கிழமைகளில் கூட வயலில் வேலை செய்ய வைத்து அவளை படுத்தி எடுத்தான்.

"ஓ.. ஓகே.." என்றான் சிறு குரலில். அவள் மீது எவ்வளவு கோபம் இருந்தாலும் அவளும் ஒரு பெண், அவளும் ஒரு மனுஷி என்பதை முன்பே நினைத்திருக்க வேண்டும் என்று தன் மீதே கோபம் கொண்டான்.

"தேங்க்ஸ் மாமா.." முகம் மலர சொன்னாள்‌.

மொத்தமாக தலையசைத்தவனை பார்த்துக் கொண்டிருந்தவளின் பார்வை சட்டென்று மாறியது.

தன் இருக்கையை விட்டு எழுந்து நின்றவள் அவனை தாண்டிக் கொண்டு ஓடினாள். ஜன்னல் கம்பிகளை பற்றியபடி வெளியே பார்த்தாள்.

"மாமா.. தூறல் விழுது.." என்றாள் சந்தோசத்தோடு.

"ம்.." என்றவன் இதற்கு ஏன் இவ்வளவு சந்தோசம் என்று குழம்பினான்.

"நம்ம வயல்லயும் மழை பெய்யும் மாமா.. நாம விதைச்ச விதையெல்லாம் முளைச்சிடும்.." என்றவள் சந்தோச மிகுதியில் கையை தட்டினாள்.

பருவ மழை எப்போதும் போலதான் பெய்தது. அவனும் எப்போதும் போலதான் விதைத்து விட்டு வந்தான். ஆனால் இவள் ஏன் இதற்கு கூட இவ்வளவு சந்தோசப்படுகிறாள் என்றுதான் தெரியவில்லை. முதல் முதலாக அவளும் ஒரு விவசாயி ஆனதன் மகிழ்ச்சி அது என்பது அவளுக்கு மட்டும்தான் தெரிந்திருந்தது.

சின்ன யூடிக்கு சாரி நட்புக்களே
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN