மணாளனின் மனம் 12

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
புவனாவின் அருகே வந்தான் முத்தமிழ். அவளை தாண்டிக் கொண்டு ஜன்னல் வழியே பார்த்தான். தூறல் சாரலாய் விழுந்துக் கொண்டிருந்தது. புவனாவின் முகத்திலும் வந்து மோதியது மழைத் துளிகள்.

மழைத்துளியின் ஈரத்தை கூட உணர முடியாமல் புவனாவின் இதயம் வேகம் பிடித்திருந்தது. அவளின் தலையோடு உரசிக் கொண்டிருந்தது முத்தமிழின் நெஞ்சம். அவனின் தாடை அவளின் உச்சந்தலையில் பதிந்திருந்தது.

"இந்த மழை அவ்வளவு நல்லாவா இருக்கு.?" எனக் கேட்டான்.

"ஆ.. ஆமா மாமா.. பாருங்க. எவ்வளவு ஜில்லுன்னு, எவ்வளவு ராகமா பெய்யுதுன்னு.!" என்றாள்.

"ஆனா நீ ஏன் சூடா இருக்க.?" எனக் கேட்டவன் கேட்ட பிறகே கண்களை மூடி தன்னைத் தானே திட்டிக் கொண்டான்.

நான் கேட்டதில் வேறு விதமான அர்த்தங்கள் இல்லையென்று அவன் சொல்ல வரும் முன்பு அவளே, "மழையால ஜன்னலோரம் டெம்ரேச்சர் மாறுச்சி இல்லையா.. அதனால்தான் மாமா.." என்று பதில் சொன்னாள்.

'இவ முட்டாளா இருக்கறதுக்காக முதல் முறையா சந்தோசப்படுறேன்..' என நினைத்தான் அவன்.

"உங்க பிரெண்ட்ஸ் யாராவது இந்த ரூம்க்குள்ள வந்தா.." அவள் சொல்லி முடிக்கும் முன்பு அந்த அறையின் கதவை திறந்துக் கொண்டு உள்ளே வந்தான் சத்யா. அவர்களின் நான்காவது கூட்டாளி அவன்.

கதவு திறந்த சத்தம் கேட்டு அவசரமாக விலகி நின்றான் முத்தமிழ்.

"சாரி.. நான் அப்புறம் வரேன்‌‌.." கதவோடு திரும்பிச் செல்ல முயன்றான் சத்யா.

"இல்ல பரவால்ல வாடா.." என்று அழைத்த முத்தமிழ் தனது இருக்கையில் வந்து அமர்ந்தான்.

புவனாவிற்கு முகம் செங்கிழங்காக சிவந்துப் போனது. ஏதும் செய்யாமல் இப்படி தங்களை அவன் பார்க்க வேண்டுமா என்று நினைத்தாள்.

"புவனா ஒரு காப்பி வேணும்.." முத்தமிழ் சொன்னதும் கதவை நோக்கி நடந்தவள் "அண்ணா உங்களுக்கு.." என்று சத்யாவிடம் கேட்டாள்.

"கொண்டு வாம்மா.." என்றவனுக்கு அவளின் விசாரிப்பே மகிழ்ச்சியை தந்திருந்தது.

அவளின் தலை மறைந்த பிறகு நண்பனிடம் திரும்பிய சத்யா "ரொம்ப நல்ல பொண்ணுடா.." என்றான்.

அவன் சொன்னது இவனுக்கு ஆச்சரியத்தை தந்தது. பார்வைக்கு நல்லவள் குணத்திலும் நல்லவளாக இருப்பாள் என்று எப்படி இவர்கள் நம்புகிறார்கள் என்று குழம்பினான்.

"இந்த காலத்துல இப்படி ஒரு அமைதியான குணமான பொண்ணுங்க எங்கே இருக்காங்க.?" என்றான் பெருமூச்சோடு.

முத்தமிழுக்கு இப்போதுதான் விசயம் புரிந்தது. கலகலவென நகைத்தான்.

"ஏன்.. உன் ஆளு உன்னைப் படுத்தி எடுக்கறாளா.?" என்றுக் கேட்டான்.

சோகமாக ஆமென தலையசைத்தான் சத்யா.

"அவ கேட்ட ஜிமிக்கியை வாங்கி தரல. ஒரு வாரம் முன்னாடி கேட்டிருக்கா.. டென்சன்ல மறந்துட்டேன் நான். ஒரு வாரம் என்னை கவனிச்சிட்டே இருந்திருக்கா.. முந்தாநேத்து 'உனக்கு என் மேல அக்கறை இல்ல.. ஐ ஹேட் யூ.. நாம பிரேக்அப் பண்ணிக்கலாம்'ன்னு சொல்லிட்டு கிளம்பிட்டா.. முந்தாநேத்தே அவ ரூமுக்கு போனேன். நைட் பன்னென்டு வரைக்குமே கதவை திறக்கல அவ. நான் கிளம்பி வந்துட்டேன். இந்த இரண்டு நாளா இரண்டாயிரம் முறை கால் பண்ணி இருப்பேன். ரெஸ்பான்ஸே பண்ண மாட்டேங்கிறா.." என்றவன் தலையை கோதியபடி நாற்காலியில் சாய்ந்தான்.

"அவளுக்கு நான் இந்த நிறுவனத்துல வொர்க் பண்றதே பிடிக்கல. பிரிஞ்சி வந்து நல்ல சம்பளம் தர நிறுவனத்துல சேர சொல்றா.. மாசம் இரண்டு லட்சம் குறையாம சம்பளம் வாங்கினா மட்டும்தான் கல்யாணத்துக்கு சம்மதிப்பேன்னு சொல்றா.." என்றவனை பரிதாபமாக பார்த்தான் முத்தமிழ்.

"விலகிக்கறதா இருந்தா விலகிக்கடா.." என்றான் மனமே இல்லாமல்.

இடம் வலமாக தலையசைத்தான் சத்யா.

"பிரேக்அப் பண்ணிக்கிட்டவ திரும்பியே வராம இருந்துட்டா நல்லாருக்கும்ன்னு தோணுது. பணம் முக்கியம்தான் தமிழ். நானும் எங்க இரண்டு பேருக்கும் தேவையான அளவு சம்பாதிக்கிறேன். ஆனா அதை விட என் உழைப்பு, நாம செய்ற ஆத்மார்த்தமான வேலை, இந்த வேலை மேல நான் கொண்ட காதல்ன்னு அவ புரிஞ்சிக்கவே மாட்டேங்கிறா.. அவ என்னை ஏ.டி.எம் மெஷினா யூஸ் பண்றது ரொம்ப வெளிப்படையாவே தெரியுது தமிழ்.. அவளை மறக்க எனக்கு ரொம்ப நாள் ஆகும்தான். அவளை மிஸ் பண்ணிட்டமேன்னு கொஞ்ச நாளைக்கு நிச்சயமா அழுவேன். ஆனா ரொம்ப வருசம் கழிச்சி திரும்பிப் பார்க்கும்போது நான் செஞ்சது கரெக்ட்ன்னு எனக்கே தோணும்.." என்றான்.

அவனுக்கு எப்படி ஆறுதல் சொல்வதென்று முத்தமிழுக்கு தெரியவில்லை. சில வருடங்களுக்கு முன்பு தன் தங்கையிடம் முத்தமிழ் ஒரு கேள்வியை கேட்டான். 'அவன் பணக்காரனா இல்லன்னு ஏதும் விட்டு வரலதானே நீ.!?' என்று. 'இல்ல அண்ணா.. அவன் தன்கிட்ட இருக்கற சொத்தை மதிக்க தெரியாதவன். அதே மாதிரிதான் என்னையும் மதிக்காம இருப்பான்..' என்றுக் காரணம் சொன்னாள் அவள்.

தன் தங்கை இவனின் காதலி போல இல்லையென்று நினைத்து நிம்மதி அடைந்தான்.

"உள்ளே வரலாமா.?" புவனா வாயிலில் நின்றபடி கேட்டாள்.

"வாம்மா.." சிரிப்போடு சொன்னான் சத்யா.

இருவர் முன்னாலும் காப்பியை வைத்தவள் அமைதியாக சென்று தன் இருக்கையில் அமர்ந்துக் கொண்டாள்.

சத்யா காப்பியை பருகி விட்டு எழுந்து நின்றான். "தேங்க்ஸ்ம்மா.. காப்பி சூப்பர்.." என்றுவிட்டு வெளியே நடந்தான்.

புவனா முகம் மலர்ச்சியோடு அவனின் முதுகை பார்த்தாள்.

"சோம்பேறி கழுதை.. வேலையை சட்டுன்னு முடி.." முத்தமிழ் காப்பியை பருகியபடியே சொன்னான். அவனிடம் சரியென தலையசைத்தவள் தனது வேலைகளை கவனிக்க ஆரம்பித்தாள்.

மாலை வரையிலுமே தூறல் தூறிக் கொண்டே இருந்தது. முத்தமிழ் அடிக்கடி புவனாவின் திசை பார்த்தான். அவளின் முகத்தில் அளவுக்கு அதிகமான சோர்வு தெரிகிறதா என்று கவனித்துக் கொண்டே இருந்தான்.

மாலை கிளம்புகையில் அவளின் கைப்பிடித்துக் கொண்டு வெளியே நடந்தான். புவனா ஆச்சரியத்தோடு அவனை பார்த்தாள். அவன் இவளின் பார்வையை கண்டுக் கொள்ளவில்லை.

பைக்கை ஸ்டார்ட் செய்தவன் அவள் சவுகரியமாக அமர்ந்துக் கொண்டாளா எனக் கேட்டுவிட்டு கிளம்பினான்.

ஊசியாய் அங்கொன்றும் இங்கொன்றுமாக மழை தூறியது. அண்ணாந்து வானம் பார்த்தாள் புவனா. அப்படியே வீடு வரை செல்ல வேண்டும் என்று ஆசையாக இருந்தது.

"இடியட்.. அந்த முந்தானையை தூக்கி தலை மேல போர்த்திக்க.. காய்ச்சல் ஏதும் வந்ததுன்னா கொன்னுடுவேன்.." என்று திட்டினான் முத்தமிழ். அவசரமாக தன் முந்தானையை எடுத்து தனக்கும் அவனுக்கும் சேர்த்து போர்த்தினாள் புவனா.

"மெதுவா போங்க மாமா.. நான் வண்டியை பிடிக்கல.." என்றாள்.

ஆனால் அவள் சொல்லும் முன்பே பைக்கின் வேகத்தை குறைத்து விட்டிருந்தான் முத்தமிழ்.

"மாமா ஒரு சந்தேகம் கேட்கட்டா.?" சிணுங்கலாக கேட்டவளை வண்டியின் சைட் மிரரில் பார்த்தவன் "கேளு.." என்றான்.

"அன்னைக்கு என்னை வரப்புல இருந்து கீழே விழக் கூடாதுன்னு சொன்னிங்க. இப்ப காய்ச்சல் வர கூடாதுன்னு கவலைப்படுறிங்க.? இது லவ்வுதானே மாமா.?" என்றாள் கொஞ்சல் குரலில்.

"கீழே விழுந்து நீ கை காலை உடைச்சி வச்சா உனக்கு எவன் செலவு செய்வான்.? காய்ச்சல் வந்தா அதுவும் வெட்டி செலவுதான்.. உனக்கு ஏற்கனவே தண்டம் கட்டியது போதாதா.? காசு என்ன மரத்துலயா காய்க்குது.?" என்றுக் கேட்டவன் தங்களின் வீட்டின் முன்பு பைக்கை நிறுத்தினான்.

"மரியாதையா போன உடனே டிரெஸ்ஸை மாத்தி தொலை.." என்று காய்ந்தான்.

"சும்மா முகத்தை காட்டாதிங்க மாமா.." சிணுங்கியபடியே சொல்லிவிட்டு உள்ளே ஓடினாள் அவள்.

முத்தமிழ் தன் தலையை உதறிக் கொண்டான்.

புவனா உடையை மாற்றிக் கொண்டு வந்து பாட்டியிடம் தலையை தந்து தலை வாரிக் கொண்டாள். மாமியாருக்கு சமையலுக்கு உதவிச் செய்ய ஓடினாள்.

ஹாலில் அமர்ந்திருந்தான் முத்தமிழ். புவனாவை தவிர வேறு யாரையும், எதையும் அவனின் விழிகள் பார்க்கவில்லை.

ஒரு மாதமும் ஒரு வாரமும் முடிந்திருந்தது அவர்களின் திருமணம் நடந்து. அப்போது இருந்ததை விட இப்போது அவளின் நடையிலும் வேலையிலும் வேகம் கூடியிருந்தது. யசோதாவையும் பாட்டியையும் தன் கைப்பிடிக்குள் பிடித்து வைத்து விட்டாள் அவள்.

இந்த ஒரு மாத ஓயாத வேலையின் காரணமாக உடம்பு கொஞ்சம் மெலிந்திருந்தாள். ஆனால் கன்னங்களில் சற்று சதை பிடித்திருந்தது. அது காதலின் கணக்கு என்பது அவளுக்கு மட்டும்தான் தெரியும்.

சமையலறையிலிருந்து வெளியே வந்தாள் புவனா. முத்தமிழ் தன்னை பார்ப்பதை கண்டவளுக்கு வெட்கம் தானாக வந்து சேர்ந்தது. தலை குனிந்தபடி அவனை தாண்டிச் சென்றாள்.

"பாட்டி.. சுண்டல்.." என்று சுண்டல் இருந்த தட்டை பாட்டியிடம் தந்துவிட்டு திரும்பியவள் "புவி குட்டி.." என்ற தன் அத்தையின் குரலுக்கு அவசரமாக ஓடினாள். முத்தமிழை தாண்டிச் செல்லும் முன் கால் தடுமாறி கீழே சாய்ந்தாள். முத்தமிழ் சட்டென்று எழுந்து நின்று அவளை பிடித்து நிறுத்தினான்.

"சோம்பேறி கழுதை.. கண்ணை என்ன முதுகுலயே வச்சிருக்க.? நடக்க கூடவா உனக்கு சொல்லி தரணும்.?" என்று எரிந்து விழுந்தான்.

பாட்டி அவனை வறுத்து எடுக்க இருந்த நேரத்தில் "சாரி மாமா.." என்றாள் புவனா கொஞ்சலாக.

"சாரிக்கு மட்டும் பஞ்சமே இல்ல.. இந்த கருமத்தை தூக்கி சொருகுன்னு காலையிலேயே சொன்னேன் இல்ல.?" என்றுக் கோபம் தீராமல் கேட்டவன் அவளின் புடவையின் கொசுவ பகுதியை ஒன்றாய் சேர்த்து எடுத்து அவளின் இடுப்பில் சொருகி விட்டான்.

என்ன செய்தோம் என்பது அவனின் மூளையில் பதியவே இல்லை. ஆனால் பாட்டிக்கு திடீரென்று ஏறிய புரை அவனின் மூளையை மெள்ளமாக தட்டி எழுப்பி விட்டு விட்டது.

அதிர்ச்சியோடு நிமிர்ந்துப் பார்த்தான். புவனா திருதிருவென விழித்தபடி நின்றிருந்தாள். என்ன செய்வதென்று சுத்தமாக தெரியவில்லை அவளுக்கு.

"அத்தை என்ன ஆச்சி.?" தண்ணீரோடு ஓடி வந்த யசோதாவை கண்டுவிட்டு புவனாவிடமிருந்து விலகி நின்றான் முத்தமிழ்.

"பச்சை மிளகா கடிச்சிக்கிட்டேன் யசோதா.." என்ற பாட்டி அவசரமாக தண்ணீரை வாங்கி பருகினாள். முத்தமிழ் சற்று குழம்பிப் போனான். பாட்டி தன்னை பார்க்கவில்லையா என்ற சந்தேகத்தோடு திரும்பி பார்த்தான்.

"பாட்டி பார்க்கல.. ஆனா போட்டுக் கொடுத்துடாதிங்க மாமா.." பய குரலில் சொன்ன புவனா அவன் திரும்பி பார்க்கும் முன் சமையலறைக்குள் சென்று புகுந்துக் கொண்டாள்.

முகத்தை ஒற்றைக் கையால் மூடியபடி இருக்கையில் அமர்ந்தான் முத்தமிழ். 'என்ன வேலை பண்ண தமிழ்.?' என்றுத் தனக்குள் கேட்டுக் கொண்டவன் விரல் இடுக்குகளின் வழியே சமையலறையை பார்த்தான்.

புவனா தண்ணீரை அருந்திக் கொண்டிருந்தாள். அவளின் நெற்றியில் வியர்வை துளிகள் மின்னின. தண்ணீர் டம்ளரை பிடித்திருந்த அவளின் கை லேசாக நடுங்கிக் கொண்டிருந்தது. அவளின் உதடுகள் தாண்டி தெறித்து விழுந்த தண்ணீர் துளிகள் சில அவளின் கழுத்தை நோக்கி இறங்கின. தண்ணீரின் பாதையை தன் பார்வையால் தொடர்ந்தான் முத்தமிழ். அவளின் கழுத்தில் இருந்த ஆபரேசன் தழும்பை தாண்டி சென்றது தண்ணீர். ஆனால் அவனின் பார்வை அந்த தழும்போடு நிலைத்து நின்று விட்டது.

காலையில் முதல் முதலாக சுவாசித்த அவளின் வாசம் பற்றிய நினைவுகளை ஒதுக்கி தள்ளினான். மருத்துவமனையில் அவளின் வாசம் என்னவாக இருந்தது என்பதை ஒற்றை நொடி ஞாபகம் சொல்லி சென்றது.

கசப்பு.. மருந்தின் நாற்றம்.. இறப்பின் வாசம்.. இதைதான் அந்த மருத்துவமனையில் அவள் இருந்த அறையில் சுவாசித்தான் அவன். அவளின் மேனியின் வாசம் அதுதான் என்பது போல அவனின் மூளையில் அச்சாக பதிந்திருந்தது அந்த வாசம். தனது இறப்பிலும் மறக்க இயலாத வாசம் அது என்பது அவனுக்கே புரிந்த விசயம்தான்.

"மாமா சுண்டல்.." பத்து நிமிடங்களுக்கு பிறகு அவன் முன் சுண்டல் தட்டை நீட்டினாள் புவனா.

"நீயே கொட்டிக்க.." என்று எரிந்து விழுந்தவன் அங்கிருந்து எழுந்து நடந்தான். 'மாமாவை புரிஞ்சிக்க நம்மால முடியாது போல..' என்று நினைத்தபடியே தனது வழக்கமான வேலைகளை பார்க்க கிளம்பினாள் புவனா.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN