மணாளனின் மனம் 13

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அன்று இரவு உணவை அரை குறையாக உண்டு விட்டு எழுந்து விட்டான் முத்தமிழ்.

புவனா அறைக்கு வந்ததும் இந்த மாத சம்பளத்தை அவளிடம் நீட்டினான்.

"எண்ணிக்க.‌." என்றான்.

"சரியா இருக்கு மாமா.." என்றாள் எண்ணி பார்த்து விட்டு.

"நாளைக்கு போய் வட்டி கட்டணும். பதினாராயிரம் கொடு.." என்று கையை நீட்டினான்.

அவசரமாக எண்ணி காசை தந்தாள் புவனா.

"இன்னொரு தொள்ளாயிரத்து அறுபது ரூபா கொடு.." அவனை நிமிர்ந்து பார்க்காமல் எண்ணித் தந்தாள்.

"இது ஏன் தெரியுமா.?" கேட்டவனை நிமிர்ந்து பார்த்தவள் "ஏன் மாமா.?" என்றாள்.

"கடன் வாங்கி மூணு மாசம் ஆகுது. அந்த மூணு மாச வட்டி நாற்பத்தி எட்டாயிரத்தை நான் கட்டியிருக்கேன். அந்த நாற்பத்தி எட்டாயிரத்துக்குதான் இந்த வட்டி.." என்றான் அவள் தந்த ஆயிரத்தை பாக்கெட்டில் வைத்தபடியே.

"ஓ.." என்றவள் குறும்பாக அவனை பார்த்தாள். "பொண்டாட்டிக்கிட்டயெல்லாம் வட்டி வாங்க கூடாது மாமா.." என்றாள் கொஞ்சலாக.

"சில கருணைக் கோட்பாட்டின்படி அவங்கவங்க உயிரை அவங்கவங்களும் கொன்னுக்கவும் கூடாதுதான்.. உன்னை விட நான் மோசம் கிடையாது.." என்றவன் அவளை முறைப்பாக பார்த்துவிட்டு நகர்ந்தான்.

அவன் செல்லும் முன் கையை பிடித்து நிறுத்தினாள் புவனா.

"மாமா.. இந்த காசு.." என்றாள் தன் கையிலிருந்த பணத்தைக் காட்டி.

"அது உன் காசு.." என்றவன் கையை விலக்கிக் கொள்ள இருந்த நேரத்தில் "உன் காசு என் காசுன்னு பிரிச்சி பேசாதிங்க மாமா.. வச்சிக்கங்க.." என்றாள்.

"சோம்பேறி.. அந்த காசை சேர்த்து வச்சிதான் நீ அந்த கடனை கட்டப்போற.." என்றான்.

கண்களை அகல விரித்தவள் பணத்தோடு நீட்டியிருந்த கையை அவசரமாக பின்னால் இழுத்தாள்.

"சரி மாமா.." என்றவள் அதற்கு மேல் எதுவும் பேசாமல் அமைதியாக சென்று பணத்தை அலமாரியினுள் வைத்துப் பூட்டினாள். 'மாசம் ஏழாயிரம் சேமிப்பு.. அப்படி பார்த்தா பன்னென்டு ஏழுதான் எட்டு லட்சத்துக்கு மேல வருது. பன்னென்டு வருசம் ஆகுமா இந்த கடனை கட்ட.?' என்று கவலையோடு மனதுக்குள் கணக்கிட்டாள். ஒன்பதே முக்கால் வருடத்தில் முடிய வேண்டியதை இப்படி பன்னிரெண்டு வருடத்திற்கு கணக்கிட்டவள் அதை சத்தமாக சொல்லியிருந்தால் இன்றும் அவனிடம் வாங்கிக் கட்டிக் கொண்டு இருந்திருப்பாள் என்பது தனிக் கணக்கு.

வருடங்கள் பலவாகும் என்பதை விட தன்னாலும் கடனை கட்ட முடியும் என்ற உற்சாகத்தில் இருந்தவளுக்கு கை கால்கள் பரபரத்தது.

தனது பக்க அலமாரியை பூட்டி விட்டு வந்தான் முத்தமிழ்.

கதவை நோக்கி நடந்தான். "குட்நைட்.." என்றான் இவளை திரும்பிப் பார்க்காமல்.

"எங்கே மாமா போறிங்க‌.?" தயக்கமாக கேட்டவளை திரும்பிப் பார்த்தான்.

மணி பத்தை தாண்டி விட்டிருந்தது. இதுநாள் வரை இந்த நேரத்திற்கு அவன் அறையை விட்டு வெளியே சென்றதே இல்லை.

"அம்மா கூட தூங்க போறேன்.." சிறு குரலில் சொன்னவனை அதிர்ச்சியாக பார்த்தாள்.

புதிதாக இருந்தது அவன் சொன்னது. இந்த ஒன்னேகால் மாதத்தில் அவன் தன் அம்மாவிடம் அவ்வளவாக கொஞ்சி கூட அவள் பார்த்ததே இல்லை. இன்று அம்மாவோடு தூங்க போகிறேன் என்று அவன் சொன்னது உண்மையிலேயே அவளுக்கு அதிர்ச்சியாகதான் இருந்தது.

அவனின் முகம் இத்தனை நாளை போல இல்லை. அவள் என்றுமே பார்க்காத ஒரு உணர்வில் நிரம்பி இருந்தது அவனின் கண்கள்.

இந்த ஐந்தரை வருடத்தில் தினம் அவனை பின்தொடர்ந்து இருந்தவளுக்கு ஒவ்வொரு நாளுமே அவன் தன்னவனாகதான் மனதில் பதிந்து இருக்கிறான். ஆனால் இன்று ரொம்ப புதியதாக, அவள் அறியாத ஒரு அந்நியனாக தோன்றினான்.

அவள் தன் யோசனையில் இருக்கும்போதே அந்த அறை கதவை திறந்துக் கொண்டு வெளியே நடந்தான் முத்தமிழ்.

யசோதா அப்போதுதான் உறங்கலாம் என்று கட்டிலில் அமர்ந்தாள். தொலைக்காட்சியின் ரிமோட்டை அவள் கையில் எடுத்த நேரத்தில் கதவை திறந்துக் கொண்டு உள்ளே வந்தான் முத்தமிழ்.

அந்த நேரத்தில் மகனை அங்கே எதிர்ப்பார்க்காதவள் தொலைக்காட்சியை அணைத்து விட்டு எழுந்தாள்.

"ஏன்டா பையா.?" என்றாள்.

"சும்மாதான்ம்மா.. உன் கூட தூங்கலாம்ன்னு வந்தேன்.." என்றவன் அவளை தாண்டிச் சென்று கட்டிலில் படுத்தான். அவனை இப்படி பார்த்து பல வருடங்கள் ஆகிவிட்டது யசோதாவுக்கு. கடைசியாக பத்து வயதில் இந்த மாதிரி ஒரு முகத்தோடு அந்த அறைக்குள் வந்தவன் அவன். அதன் பிறகு பெரியவன் ஆனதாக காட்டிக் கொண்டவன் தூங்குவதற்கு இந்த அறைக்கு வந்ததே இல்லை.

யசோதாவுக்கு வருத்தமாக இருந்தது அவனைப் பார்த்து. அவனருகே அமர்ந்தாள். அவள் தனது கேள்விகளை ஆரம்பிக்கும் முன் அவளின் மடியில் தலையை வைத்தான் முத்தமிழ். அவளின் வயிற்றில் முகம் புதைத்தவன் அவளை முதுகோடு அணைத்துக் கொண்டான். அவளின் முந்தானையை தூக்கி தன்னையும் தன் முகத்தையும் மறைத்துப் போர்த்திக் கொண்டான்.

யசோதா அவனின் தோளில் தட்டித் தந்தாள்.

"பயந்துட்டியா தமிழ்.? ஆனா நீ பெரிய பையனாச்சே.. எதுக்கும் நீ பயப்பட மாட்டேன்னு நினைச்சேனே நான்.." என்றாள் சிறு குழப்பமும், தயக்கமுமாக.

அவனுக்கு பயம் வந்தால் மட்டும்தான் அவளை தேடுவான் அவன். சிறு விசயங்கள் எதுவும் அவனை பயப்படுத்தியதே கிடையாது. இதயத்தை உலுக்கும் அளவுக்கு பயந்தால் மட்டும்தான் இப்படி தன் அம்மாவிடம் தனது பயத்தை பற்றி வெளிக்காட்டுவான் அவன். இத்தனை வயதில், இத்தனை வருடங்கள் கழித்து இப்படி ஒரு பயம் இவனுக்கு ஏன் என குழம்பினாள் யசோதா.

'பேய் பிசாசுக்கு பயந்திருப்பானா, இல்லை யாராவது ரவுடிகள் இவனை துப்பாக்கியை காட்டி மிரட்டியிருப்பார்களா' என்று யோசித்துக் குழம்பினாள். மகனின் தைரியம் பற்றி அறிந்து இருந்தவளுக்கு அவனின் திடீர் பயம் கவலையை தந்தது.

"ஏதாவது பிரச்சனையா தமிழ்.? நான் வேணா அப்பாக்கிட்டயும், உன் தாத்தாக்கிட்டயும் பேசட்டா.?" என்றுக் கேட்டாள்.

மறுப்பாக தலையசைத்தவன் அழுத்தமாக அவளின் வயிற்றுக்குள் தனது முகத்தை புதைத்தான். அவன் பத்து மாதங்கள் வாழ்ந்த அதே கருவறைக்குள் நுழைய முயன்றது போல இருந்தது அவனின் பயம்.

யசோதா அவனின் தோளைத் தட்டிக் கொண்டே இருந்தாள். அவனின் கைகள் கொண்ட அணைப்பில் இருந்த இறுக்கமே அவளை சற்று கவலையடைய செய்தது. சிறு வயது தாலாட்டு ஒன்றை மெல்லிய குரலில் பாடினாள்.

தனது பயத்தை மறந்து அவளின் தாலாட்டில் மெள்ள மெள்ள மூழ்கினான் முத்தமிழ். அவனின் அசைவு நின்று சில நிமிடங்கள் ஆன பிறகு தன் முந்தானையை விலக்கிப் பார்த்தாள் யசோதா. உறங்கிப் போயிருந்தான் அவன். இன்னமும் அவன் குழந்தையை போலவேதான் தெரிந்தான்.

தலையணையை அருகே இழுத்தாள். அவனின் கையை விலக்கினாள். அவனின் தலையை தலையணையின் மீது தூக்கி வைத்தாள். போர்வையை போர்த்தி விட்டாள். பேய் பிசாசுக்குதான் பயந்திருப்பான் என்று நம்பியவள் அறையில் இருந்த சாமி குங்குமத்தை எடுத்து அவனுக்கு வைத்து விட்டாள். அவன் ஆழ்ந்து உறங்கி விட்டான் என்பதை உறுதிச் செய்துக் கொண்ட பிறகே அவளுக்கு தூங்குவதை பற்றிய எண்ணம் வந்தது. காலியாக கடந்த அந்த பெரிய கட்டிலின் ஓரத்தில் படுத்தாள். மகனின் முகத்தைத் பார்த்தபடியே உறங்கிப் போனாள்.

புவனா உறங்காமல் புரண்டுக் கொண்டிருந்தாள். யாரோ இவன் என்று எண்ணி பயந்துக் கொண்டிருந்தாள்.

இவ்வளவு நாள் மனதின் மறு பாகமாக இருந்தவன் இன்று வேற்றுக் கிரகவாசி போல ஆகி போனதன் விசயம் புரியாமல் கவலைப்பட்டாள்.

முத்தமிழ் காலையில் கண் விழித்தபோது இரவு விளக்கின் வெளிச்சத்தில் அம்மாவின் முகத்தைதான் பார்த்தான். இரவு இங்கே வந்து உறங்கியதை நினைத்துப் பார்த்த பிறகுதான் பழைய விசயங்கள் நினைவுக்கே வந்தது.

எழுந்தவன் கடிகாரத்தைப் பார்த்தான். மணி ஐந்தாக இன்னும் பத்து நிமிடங்கள் இருந்தன. கண்களை கசக்கிக் கொண்டு எழுந்து நின்றவன் அம்மாவின் முகத்தை சில நொடிகள் பார்த்துக் கொண்டு இருந்துவிட்டு தன் அறைக்கு வந்தான்.

இவன் தனது அறையின் கதவை திறந்ததும் புவனா அவசரமாக கட்டிலில் இருந்து எழுந்து நின்றாள். வெளிறிப் போன முகத்தோடு இருந்தவளை குழப்பமாக பார்த்தான். கட்டில் அப்படியே இருந்தது. அவளின் ஆயிரம் புரளலால் கசங்காமல் இருந்தது. போர்வை கூட மடித்து வைத்தபடியே இருந்தது.

'இவ ஏன் ராத்திரியெல்லாம் தூங்காம இருந்தா.?' குழப்பமாக யோசித்தபடி வந்தவனின் அருகே வந்து நின்றாள் புவனா.

"என்ன ஆச்சி மாமா.?" எனக் கேட்டவள் அவனின் கழுத்தில் தன் புறங்கையை வைத்துப் பார்த்தாள். காய்ச்சல் ஏதும் இல்லை என்று தெரிந்தது. ஆனால் பிரச்சனை எதுவென்று தெரியாமல் பயந்தாள்.

சிலையாய் நின்றவன் அசைய விரும்பவில்லை.

அவனின் வலதுக் கன்னத்தில் தன் உள்ளங்கையை பதித்தாள் புவனா.

"ஏதாவது பிரச்சனையா மாமா.?" என்றாள் கவலையோடு. அவளின் கண்களில் தெரிந்த கவலையை பார்த்தவன் அவளைத் தன்னோடு அணைத்துக் கொண்டான்.

அவளின் உடல் சிலிர்த்து அடங்கவே சில நொடிகள் ஆனது. தன் நெஞ்சில் முகம் புதைத்து இருந்தவளின் தலையை வருடி விட்டான்.

"ஒன்னும் இல்ல.." என்றான்.

அவளுக்கு இப்போதுதான் அதிக பயம் வந்து சேர்ந்தது. ஏதும் அறியாத இந்த புது நெருக்கத்தை விட எல்லாம் அறிந்த அந்த சோம்பேறி கழுதை எவ்வளவோ பிடித்திருந்தது.

"சும்மா அம்மாவோடு தூங்க போனேன்.. நீ போய் தூங்கு.." என்றவன் அவளை விட்டு விலகி நின்றான்.

புவனா எதுவும் சொல்லவில்லை. என்ன சொல்வதென்றும் தெரியவில்லை. அவன் சொன்ன பிறகு மறுத்துப் பேச தோணாமல் சென்று கட்டிலில் படுத்தாள். குறுங்கிப் படுத்திருந்தவளை பார்த்தபடியே சென்று குளியலறைக்குள் புகுந்தான்.

அந்த அதிகாலை நேரத்தில் ஜில்லென்று கொட்டிய தண்ணீரில் நனைந்தவன் உள்ளத்தின் தூக்கம் கலையும் வரை குளித்தான். வேற்றுடை உடுத்தியபடி அவன் வெளியே வந்தபோது புவனா உறங்கி விட்டிருந்தாள். பெருமூச்சோடு அவளை சில கணங்கள் பார்த்தவன் தனது அன்றைய வேலைகளை பார்க்க கிளம்பினான்.

புவனா பத்து மணிக்கு மேல்தான் எழுந்து அமர்ந்தாள். அதிசயமாக தூங்குகிறாள் என்று பாட்டியும் யசோதாவும் அவளை எழுப்பவில்லை.

காலை உணவை பதினொரு மணிக்கு உண்டு முடித்தாள்.

தன் கணவனுக்கு என்ன பிரச்சனை என்று யசோதாவிடம் கேட்க தயக்கமாக இருந்தது புவனாவிற்கு. மருமகளிடம் விசயம் கேட்க மாமியாருக்கும் தயக்கமாக இருந்தது.

பதினொன்றரை அளவில் வீட்டிற்கு வந்தான் முத்தமிழ்.

"நான் அபிராமியை பார்க்க போறேன்.. நீ உங்க அண்ணனை பார்க்க வரியா.?" என்று மனைவியிடம் கேட்டான். ஆமென தலையசைத்தவள் துள்ளலலோடு எழுந்து தயாராக சென்றாள்.

யசோதா தன் கணவனுக்கு பிடித்த வத்தல், வடாம், ஊறுகாய் போன்றவற்றை பைகளில் எடுத்து வைக்க ஆரம்பித்தாள்.

"பத்திரம்.." என்று சொல்லி அனுப்பினாள் பாட்டி.

ஞாயிற்றுக் கிழமை என்பதால் அபிராமி வீட்டில்தான் இருந்தாள். கார்த்திக்கும் தனது அன்றைய அலுவல்களை முடித்துக் கொண்டு நேரத்திலேயே வீட்டிற்கு வந்து விட்டான்.

கார்த்திக்கை கண்டதும் "அண்ணா.." என்று ஓடிச் சென்று அவனைக் கட்டிக் கொண்டாள் புவனா.

தினமும் போனில் பேசினாலும் கூட நேரில் பார்க்கையில்தான் அவனை எந்த அளவிற்கு மிஸ் செய்து இருக்கிறோம் என்பது அவளுக்கு புரிந்தது.

அண்ணனும் தங்கையும் ஊர் உலக விசயங்களை பேசிக் கொண்டிருந்த நேரத்தில் அபிராமி தன் அண்ணனுக்கு காப்பியை தந்தாள். தூரத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த மனைவியையும் மச்சானையும் பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.

"என்ன ஆச்சி அண்ணா.?" அபிராமி கவலையோடு கேட்டாள்.

தங்கையை பார்த்தவன் அவளிடம் தன் பிரச்சனைகளை சொல்ல ஆரம்பித்தான். அவளிடம் சொன்னால் அவள் தீர்த்து வைத்து விடுவாள் என்ற நம்பிக்கையாக இருக்கலாம்.

அவன் சொன்னதை கேட்டு கவலையோடு எழுந்து நின்ற அபிராமி அவனை தன்னோடு அணைத்துக் கொண்டாள்.

"எல்லாம் சரியா போயிடும் அண்ணா.. வேணும்ன்னா புவனாவை கொஞ்ச நாளைக்கு இங்கேயே விட்டுட்டு போ.. அதுக்குள்ள சரியாகிடும்.." என்றாள்.

மறுப்பாக தலையசைத்தவன் அவளை அணைத்தப்படியே அவளின் வயிற்றில் முகம் புதைத்தான்.

"நான் சரியாவேன். ஆனா அவ அதுக்குள்ள அரையாய் கரைஞ்சிடுவா.." என்றான் பாதி சிரிப்பும், பாதி இயலாமையுமாக.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN