மணாளனின் மனம் 14

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
கார்த்திக் தன் தங்கையின் பூரித்த முகத்தை பார்த்தான். இது போல அவளை பார்த்துப் பல வருடங்கள் ஆகிவிட்டது.

ஒருதலைக் காதலினால் உள்ளுக்குள் வெந்துக் கொண்டிருந்தவளுக்கு இப்போதுதாவது ஒரு விமோசனம் கிடைத்ததே என்று மனம் நிம்மதி அடைந்தான்.

முத்தமிழையும், அபிராமியையும் கவனித்த புவனா "என்ன ஆச்சி.. அண்ணனும் தங்கச்சியும் ஓவரா பீல் பண்ற மாதிரி இருக்கு.." என்றாள்.

கார்த்திக் அவர்களின் திசை பார்த்தான். முத்தமிழ் அபிராமியை அணைத்துக் கொண்டிருந்தான்.

"அபிராமி பிரகனென்டா இருக்காளா.?" அவர்களை பார்த்த பிறகு இப்படிதான் கேட்க தோன்றியது புவனாவுக்கு.

கார்த்திக் மறுப்பாக தலையசைத்தான். "இல்ல.. அவங்க வேற ஏதாவது பேசுவாங்கன்னு நினைக்கிறேன். அண்ணன் தங்கச்சிக்குள்ள ஆயிரம் இருக்கும். நமக்கு எதுக்கு.? என்றவன் "நீ நல்லா இருக்கியா.?" எனக் கேட்டான்.

"ஏதோ.." என்றவள் "ஆனா கொஞ்சம் கஷ்டமா இருக்கு.." என்றாள்.

"என்னாச்சிம்மா.?" என்றான் அவன்.

"அவர்கிட்ட சொல்ல கூடாது.. அவர்கிட்ட சண்டை போட கூடாது.." என்றவளுக்கு விசயத்தை ஆரம்பிக்காமலேயே இருந்திருக்கலாம் என்று தோன்றியது.

"ம். சரி.." என்றான் அவளின் பீடிகையை பார்த்துவிட்டு.

எட்டு லட்ச விவகாரத்தை தயக்கமாக சொன்னாள் அவள். கார்த்திக் அதிர்ந்து விட்டான். முத்தமிழையை அதிர்ச்சியோடு திரும்பி பார்த்தான். அவனோ இன்னமும் தங்கையின் அணைப்பில்தான் இருந்தான்.

தன் தங்கையின் கையை எடுத்தான் கார்த்திக்.

"அவன் மேல கொஞ்சம் கோபம் வருது புவிம்மா.. ஆனா அவன் செஞ்சா அதுல நிச்சயம் நியாயம் இருக்கும். எல்லா பிறந்த வீடும் மாதிரியே நானும் மாப்பிள்ளைக்கு சப்போர்ட் பண்றேன்னு நினைக்காத.. அவன் என் பிரெண்ட்.. இத்தனை வருச பழக்கத்துலதான் இதை நம்பிக்கையா சொல்றேன்.. அவன் உன் நல்லதுக்குதான் வேலை செய்ய சொல்றான்.. வயசு பொண்ணு.. இதெல்லாம் பெரிய வேலையாவா இருக்க போகுது.?" என்று தங்கைக்கு சமாதானம் சொன்னான்.

புவனா மறுத்து தலையசைத்தபடி அவனின் தோளில் சாய்ந்தாள்.

"அவர் என்ன சொன்னாலும் அதை நான் கண்ணை மூடிக்கிட்டு செய்வேன் அண்ணா.. எனக்கு சுயபுத்தி இல்லன்னு மத்தவங்க சொன்னாலும் பிரச்சனை இல்ல. எனக்கு வேண்டியது அவர். அவரே எனக்கு கிடைச்ச பிறகு வேற என்ன வேணும்.? ஆனா நேத்திலிருந்து ரொம்ப வித்தியாசமா நடந்துக்கறாரு அண்ணா.. நான் பார்க்காத ஒரு மனிதர் மாதிரி.." என்றாள் கவலையோடு.

அவளின் தலையை வருடி விட்டான் கார்த்திக்.

"ஒவ்வொரு மனுசங்களுக்கும் இன்னொரு பக்கம் இருக்கு புவி.. அவனுக்கு வேறு காரணங்கள் இருக்கலாம். மறுபடியும் அவசரப்பட்டு எதாவது செஞ்சிடாத.. ப்ளீஸ் இப்போதாவது பொறுமையா இரு.." என்றான்.

அவன் சொன்னது புவனாவிற்கு முள்ளாக தைத்தது.

"டாக்டர்கிட்ட கன்சல்ட் பண்ணு அண்ணா.. எல்லாம் சரியாகிடும்.." என்றாள் அபிராமி.

வேண்டாமென்று தலையசைத்தான் முத்தமிழ்.

"சின்ன பிரச்சனைம்மா.." என்றான்.

"பிரச்சனைகளை வளர விடுவதை விட ஆரம்பத்துலயே சரி பண்ணிடுறதுதான் நல்லது அண்ணா.." என்றாள்.

"அட போம்மா.. இப்படி ஒரு பிரச்சனைன்னு சொன்னா சிரிப்பாங்க எல்லோரும்.." என்றான் சிரிப்போடு.

அபிராமிக்குதான் கவலை தீரவில்லை.

முத்தமிழ் தன் தந்தையிடம் உரையாடினான். அவரை வீட்டுக்கு வரச் சொல்லி அழைத்தான்.

"கொஞ்ச நாள் ஆகட்டும்ப்பா.. வரேன்.." என்றார் அவர்.

முத்தமிழை தனியாக அழைத்துச் சென்றான் கார்த்திக்.

"என் தங்கச்சி மேல உனக்கு கோபம் இருக்கலாம் தமிழ்.. ஆனா சின்ன பொண்ணு.. கொஞ்சம் மறந்து மன்னிச்சிடு.."

"நடந்ததை பேசுறதுல எனக்கு விருப்பம் இல்ல கார்த்தி.. அவ என் பொண்டாட்டி.. நான் அவளை ஹேண்டில் பண்ணிக்கிறேன்.." என்றான்.

சரியென்று தலையசைத்தவன் "ஆனா அவ சின்ன பொண்ணேதான். பார்த்து ஹேண்டில் பண்ணுடா.. எதுவா இருந்தாலும் கொஞ்சம் கொஞ்சமா புரிய வை.. ஏதாவது தப்பா பேசினா கொஞ்சமா மிரட்டு.. அடிச்சி ஏதும் வச்சிடாத.." என்றான்.

முத்தமிழ் நண்பனை பொய்யாக முறைத்தான்.

"என்னை பார்த்தா ஆன்டி ஹீரோ மாதிரி இருக்கா.?" என்றான்.

"இல்ல தமிழ்.. நான் அப்படி சொல்ல வரல.." அவசரமாக மறுத்தான் கார்த்திக்.

"எப்படி சொன்னாலும் அதேதான் கார்த்திக். நானும் அக்கா தங்கச்சியோடு பிறந்தவன்தான்.. பெண்களும் மனுஷிங்கதான்னு எனக்கும் தெரியும்.." என்றவன் அதன் பிறகு அவனோடு உரையாட விரும்பவில்லை.

திரும்பி செல்கையில் காரில் ஏறி அமர்ந்த சில நிமிடங்களிலேயே உறங்கிக் போய் விட்டாள் புவனா. தூங்கியபடி முத்தமிழின் தோளில் சாய்ந்தாள். முத்தமிழ் அவளை தன்னோடு அணைத்துக் கொள்ளவும் இல்லை. அவளை விலக்கி தள்ளவும் இல்லை.

வீட்டிற்கு வந்து சேர்ந்த பிறகும் உறங்கிக் கொண்டுதான் இருந்தாள் புவனா. ஒரு மாதத்தின் தொடர் வேலையின் சோர்வும் நேற்றிரவு உறங்காமல் இருந்ததின் காரணமும் சேர்ந்ததில் வீடு வந்து சேர்ந்ததை கூட அறியாமல் உறங்கிக் கொண்டிருந்தாள்.

"புவனா.." எழுப்பினான் அவளை.

"தூக்கம் வருது மாமா.." என்றவள் இருக்கையிலேயே அந்த பக்கமாக திரும்பி படுத்தாள்.

அவளின் முகத்தை சில நொடிகள் பார்த்தவன் அமைதியாக அவளை தன் கைகளில் தூக்கிக் கொண்டு உள்ளே நடந்தான்.

அவர்களை கண்டுவிட்டு பயத்தோடு அருகே வந்தாள் பாட்டி.

"என்னடா ஆச்சி.? ஏதாவது உடம்பு சரியில்லையா அவளுக்கு.?" என்றுக் கவலையோடு கேட்டாள்.

"தூங்கிட்டு இருக்கா பாட்டி.. சோம்பேறி கழுதை.." என்று திட்டியவன் அவளை கொண்டுச் சென்று கட்டிலில் படுக்க வைத்துவிட்டு வெளியே வந்தான்.

அபிராமி கார்த்திக்கின் நலனை விசாரித்தாள் பாட்டி. தகவல்களை சொல்லிவிட்டு தனது தினசரி வேலைகளை பார்க்க கிளம்பினான்.

வேர்கடலை விதைத்திருந்த வயலில் உளுந்தை ஊடுப்பயிராக விதைத்தான்.

காலையிலேயே முக்கால்வாசி முடித்து விட்டான். இருந்த கால்வாசியையும் இப்போது முடித்து விடலாம் என்று முனைப்போடு செயல்பட்டுக் கொண்டிருந்தான்.

இருள் சூழ ஆரம்பித்த அதே நேரத்தில் அவனும் வயலை விட்டு மேலே ஏறினான். கரையில் புவனா அமர்ந்திருந்தாள். எப்போது வந்தால் என்று அவன் கவனிக்கவே இல்லை.

"இங்கே எப்ப வந்த.?" எனக் கேட்டபடியே வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

"இப்பதான் மாமா.." என்றபடி எழுந்து அவன் பின்னால் ஓடினாள்.

"வீட்டுல சமைக்கிற வேலை இல்லையா உனக்கு.?" நடந்தபடியே கேட்டான்.

"அத்தையும் பாட்டியும் என்னை ரெஸ்ட் எடுன்னு சொல்லிட்டாங்க.." என்றவளை குழப்பத்தோடு திரும்பிப் பார்த்தான்.

முகத்தின் சோர்வு கண்டு அப்படி சொல்லி இருப்பார்கள் என்பதை யூகித்துக் கொண்டான்.

மறுநாள் காலையில் அலுவலகம் செல்கையில் முனகினாள் புவனா.

"லீவே போட கூடாது மாமா.. இரண்டு நாள் வேலைகளை ஒரே நாள்ல செய்றதுதான் ரொம்ப கஷ்டமா இருக்கு.." என்றாள்.

"புரிஞ்சா சரி.." என்று உதட்டுக்குள் முனகினான் அவன்.

"பாட்டியும் அத்தையும் மாமாவுக்கு தெரியாம ஹெல்ப் பண்றேன்னு சொன்னாங்க.. நான்தான் வீம்போடு வேணாம்ன்னு சொன்னேன். இப்ப அனுபவிக்கிறேன்.." என்று அலுவலகத்தில் அமர்ந்தபடி மெல்லிய குரலில் சொன்னவளை முறைத்தான் அவன்.

'கேட்டுடுச்சா.?' என்று நினைத்தவள் முகத்தை அவனுக்கு காட்டாமல் திருப்பிக் கொண்டாள்.

"சோம்பேறி.. போய் காபி கொண்டு வா.." என்று அவளை விரட்டினான்.

"இப்படி எப்பவும் முகத்தை காட்டிட்டே இருங்க.. சட்டையை அயர்ன் பண்றதுக்கு பதிலா ஒரு நாளைக்கு உங்க முகத்தை அயர்ன் பாக்ஸ்ல தேச்சி வச்சிடுறேன்.." என்றபடியே வெளியே நடந்தாள் அவள்.

"வாய் ஓவரா போகுதுடி.. இப்படியே போனா உன் வாயை நான்தான் தைக்க வேண்டியதா இருக்கும்.." என்றான் இருந்த இடத்தில் இருந்தபடியே.

கதவை திறந்தபடியே திரும்பிப் பார்த்த புவனா நாக்கை வெளியே நீட்டி அவனுக்கு பழிப்புக் காட்டி விட்டு வெளியே நடந்தாள்.

"எங்கிருந்து பிடிச்சாங்களோ.." என்று நெற்றியில் அடித்துக் கொண்டவன் தனது வேலைகளில் மூழ்க ஆரம்பித்தான்.

பத்து நிமிடங்கள் தாண்டியது. காப்பி வரவில்லை என்ற உறுத்தலோடு நிமிர்ந்தான் முத்தமிழ். அதே நேரத்தில் அந்த கதவை திறந்தான் சத்யா.

"மச்சி.. கொஞ்சம் சீக்கிரம் வா.." என்றான் பதட்டமாக.

முத்தமிழ் குழப்பத்தோடு எழுந்து வெளியே வந்தான்.

"புவி சிஸ்டருக்கும் தயாவுக்கும் சண்டை.." என்றவன் அங்கிருந்த ஒரு அறையை நோக்கி கை காட்டினான். உணவு பைகளும், பிரிட்ஜும், அவர்களின் உபயோகத்திற்கென்று காப்பி தயாரிக்க மின்சார அடுப்பும், பிற இதர சாமான்களும் இருக்கும் அறை அது.

'காப்பி போட அனுப்பியது குத்தமா.? என்ன வம்பை இழுத்து வச்சிருக்கா.?' என நினைத்தபடி அறை நோக்கி நடந்தான்.

"பொய் பேசுறான் அக்கா.." என்று மதுமிதாவிடம் சொல்லிக் கொண்டிருந்தாள் புவனா.

"என்ன.?" என்றபடி உள்ளே வந்தான் முத்தமிழ். தயாளன் புவனாவுக்கும் மதுமிதாவுக்கும் இடையில் நின்றுக் கொண்டிருந்தான்.

புவனா முத்தமிழை கண்டதும் தயாளனை எரித்து விடுபவள் போல பார்த்தாள்.

"சரியான பொம்பளை பொறுக்கி மாமா.." என்றாள் முத்தமிழிடம் தயாளனை கைக்காட்டி.

"உன் வொய்ப் சும்மா சீன் போட்டுட்டு இருக்கா தமிழ்.. இல்லாத விசயத்துக்கு.." அவன் முடிக்கும் முன்னால் பளீரென்று ஒரு அறையை அவனுக்கு விட்டாள் புவனா.

"பிராடு.. இல்லாத விசயமா.? கொன்னுடுவேன் உன்னை.. யார்கிட்ட.?" என்றாள்.

அவசரமாக ஓடி வந்து அவளை தன் அருகே இழுத்தான் முத்தமிழ். "என்னடி பண்ற.?" என்றான் கோபத்தோடு.

"தப்பு இவன் மேலதான் தமிழ்.." என்ற மதுமிதாவை மேலே பேச விடாமல் நிறுத்தியவன் "என்ன தப்பா இருந்தாலும் என்கிட்ட வந்து சொல்ல வேண்டியதுதானே.?" என்றான்.

மதுமிதா அவனை முறைத்தாள்.

"அவனை நீ அடிச்சது தப்பு புவனா.. அவன்கிட்ட சாரி சொல்லு.." என்றான் மனைவியிடம்.

மதுமிதா அவனை அதிர்ச்சியோடு பார்த்தாள். அவனோடு தனக்கு நடக்க இருந்த திருமணம் நின்றுப் போனதற்கு கடவுளுக்கு நன்றிச் சொன்னாள். அவனை முறைத்துக் கொண்டு வெளியே நடந்தாள்.

"அவன் என்ன செஞ்சான்னு நீங்க கேட்கவே இல்ல மாமா.." தன் கோபத்தை மறைத்துக் கொண்டு இயல்பான சிணுங்கலோடு கேட்டாள்.

"அவனை அடிக்கும் முன்னாடி அதை சொல்லி இருக்கணும் நீ.." என்றவனிடம் உதடு சுழித்து காட்டியவள் தயாளன் பக்கம் திரும்பினாள். "சாரிடா பரதேசி.. இன்னொரு முறை நீ என் பக்கத்துல வந்தன்னா உன் குடலை உருவி மாலையா போட்டுப்பேன்.." என்று மிரட்டினாள்.

முத்தமிழ் அவளை முறைத்தான். அவனை கண்டுக் கொள்ளாதவள் அங்கிருந்து வெளியே நடந்தாள்.

கன்னத்தை பிடித்தபடி நின்றிருந்தான் தயாளன்.

"இப்படி இருக்காத தயா.. என்ன இருந்தாலும் அவ உனக்கு தங்கச்சி மாதிரி.." என்ற சத்யா அத்தோடு அங்கிருந்து கிளம்பி விட்டான்.

"என்ன ஆச்சி.?" எனக் கேட்டான் முத்தமிழ்.

கன்னத்தை தேய்த்தபடி நண்பனை நிமிர்ந்துப் பார்த்த தயாளன் "என் டேபிள்ல இருந்த தண்ணீர் தீர்ந்துடுச்சி.. எடுத்துட்டு போகலாம்ன்னு இங்கே வந்தேன். தண்ணீர் பாட்டில் எடுத்துட்டு திரும்பும்போது கவன குறைவா என் கை உன் வொய்ப் மேல பட்டுடுச்சி.. அதுக்கு சீன் கிரியேட் பண்ணி மூணு முறை அறைஞ்சிட்டா.." என்றான்.

அவனின் கை தன் மீது பட்டபோதே ஒரு அறையையும், மதுமிதா மற்றும் சத்யாவிடம் விளக்கி சொல்லும் போது ஒரு முறையும், இப்போது முத்தமிழிடம் சொல்லும்போது ஒரு அறையையும் தந்திருந்தாள் புவனா.

முத்தமிழ் நண்பனின் தோளில் தட்டி தந்தான். "அவளுக்கு பதிலா நான் சாரி கேட்டுக்கறேன்.. ஆனா இனி கவனக் குறைவா இருக்காத.." என்று புரியாத ஒரு குரலில் மிரட்டி விட்டு வெளியே வந்தான்.

முத்தமிழின் அறையில் கோபத்தோடு அமர்ந்திருந்தாள் புவனா. அவளின் எதிரே நின்றிருந்தாள் மதுமிதா.

"தப்பு அவன் மேலதான்.. நான் உன்னை நம்புறேன்.. நீ சாரி கேட்டிருக்க கூடாது.." என்றாள் மதுமிதா.

"எனக்கு மட்டும் ஆசையா அக்கா.? மாமா மட்டும் வராம இருந்திருந்தா அவனுக்கு பாடை கட்டி இருப்பேன்.." என்றவள் கோபத்தோடு மேஜையின் மீது கையை குத்தினாள்.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN