மணாளனின் மனம் 15

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
புவனா கோபத்தோடு இருப்பது மதுமிதாவிற்கும் பிடித்திருந்தது. ஆனால் மாமனை காரணம் காட்டி அமைதியாக வந்தது லேசாக உறுத்தியது.

"இதுக்கும் தமிழுக்கும் என்ன சம்பந்தம்.? தயா தப்பா பிகேவ் பண்ணது உன்கிட்ட.. நீதான் இதுல முடிவெடுக்கணுமே தவிர உன் மாமன் கிடையாது.." என்றாள் அழுத்தமாக.

"கரெக்டாதான் அக்கா. ஆனா மாமா சொன்னா நான் கேட்டுதானே ஆகணும்.? அவருக்கு மனசுல வேற எண்ணம் இருக்கலாம் இல்ல.? எல்லாத்திலும் அவசரப்படுறேன்னு ஏற்கனவே எல்லோரும் திட்டுறாங்க. மாமா பேச்சை கேட்காம மறுபடியும் நான் ஏதாவது தப்பு பண்ணிட்டா என்ன பண்றது.?"

மதுமிதா சந்தேகத்தோடு அவனைப் பார்த்தாள்.

"நீ என்ன தப்பு பண்ண.?" என்றாள்.

புவனா பதில் சொல்ல நிமிர்ந்த நேரத்தில் அறைக்குள் வந்தான் முத்தமிழ்.

மதுமிதாவையும், புவனாவையும் முறைப்பாக பார்த்தான்.

"தமிழ்.. நீ ஒரு செகண்ட் கூட இவ தரப்பு நியாயத்தை கேட்கவே இல்ல.." என்று மீண்டும் முதலில் இருந்து ஆரம்பித்தாள் மதுமிதா.

"போதும் மது.. நான் கேட்டுக்கறேன்.. நீ போய் உன் வேலையை பாரு.." என்றவனை பத்ரகாளியாக முறைத்துவிட்டு வெளியே நடந்தாள் மதுமிதா.

கதவை சாத்திய முத்தமிழ் புவனாவின் முன்னால் வந்து நின்றான்.

"விவரம் இல்லாத பொண்ணு மாதிரியேதான் நடந்துப்பியா.?" என்றுக் கேட்டான்.

"அவன் எங்கே கை வச்சாலும் நான் அமைதியா இருக்கணும்.. அப்படிதானே.?" மூக்கு சிவக்க கேட்டவளை கோபத்தோடு பார்த்தவன் "நான் என்ன செத்தா போயிட்டேன்.? என்கிட்ட வந்து சொல்லி தொலைய வேண்டியதுதானே.?" என்றான்.

"ஒரே ஆபிஸ்க்குள்ள இருப்பதால ஆச்சி.. இதே வேற ஒரு இடமா இருந்திருந்தா.? நான் சட்டுன்னு உங்களை தேடி வர முடியாத இடமா இருந்திருந்தா.? அவன் என்ன பண்ணாலும் சரின்னு அமைதியா இருந்திருக்கணும்.. அப்படிதானே.?" என்றுக் கேட்டாள். கோபத்தில் கண்கள் இரண்டும் கலங்கியது அவளுக்கு.

"இந்த முறை நான் நிஜமாவே கோச்சிக்கிட்டேன்.. போங்க.." என்றவள் கண்களை துடைத்துக் கொண்டு இருக்கையிலிருந்து எழுந்து நின்றாள்.

"அன்னைக்கே புருசன் வருகையை எதிர்பார்த்து காத்துட்டு இருக்காம தன்னை கடத்திப்போக வந்த ராவணனை சீதா தேவி தாக்கியிருந்தா அதுக்கப்புறம் பல பிரச்சனைகளை அவங்க சந்திச்சி இருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது.. காதல் காதல்ன்னு அவங்கதான் நெருப்புல இறங்கியும் வனவாசம் போனாங்க. எல்லா பெண்களுக்கும் பதிலா ஒருத்தர் பட்ட பாடு போதாதா.? நானும் நீங்க வரும்வரை கையை கட்டி வேடிக்கை பார்த்துட்டு இருந்திருக்கணுமா.?" எனக் கேட்டவள் கதவை நோக்கி நடந்தாள்.

புவனா அறையின் கதவை திறக்கும் முன் பாய்ந்து வந்து அவளின் கையை பற்றினான் முத்தமிழ்.

"கையை விடுங்க.. நான் வீட்டுக்கு போறேன்.. நான் இனி உங்க கூட வேலை செய்யல.. ஐ ஹேட் யூ‌‌.. இதே உங்க தங்கச்சி இந்த இடத்துல இருந்திருந்தா அவளை பாராட்டி இருப்பிங்க.. ஆனா நான்தான் எப்பவும் முட்டாள்.." எவ்வளவோ முயன்றும் அழுகை அவளின் குரலில் கலந்து விட்டது.

அவளை தன் அருகே இழுத்து அணைத்துக் கொண்டான் முத்தமிழ்.

"என்னை விடுங்க.." அவனின் பிடியிலிருந்து விலக முயன்றாள்.

"என் தங்கச்சியும் நீயும் ஒன்னாகிட முடியாது புவனா.." என்றான் அவளின் காதோரம்.

கோபம்தான் வந்தது அவளுக்கு.

முழு சக்தியையும் பயன்படுத்தி அவனை விலக்கி தள்ளினாள். மலை மாடு போல நின்றான் அவன். அவனின் முகத்தை மட்டும்தான் நிமிர்ந்து பார்க்க முடிந்தது அவளால். அவளை கடுகடுப்போடு பார்த்துக் கொண்டிருந்தான் முத்தமிழ்.

"ஒரு காதலியாய் என் காதலை ஏத்துக்கல நீங்க.. ஒரு மனைவியாவும் என் நேசத்தை ஏத்துக்கல.. சாதாரண பெண்ணா கூட என்னோட தனிப்பட்ட உணர்வுகளை ஏத்துக்க மாட்டேங்கிறிங்க.. எனக்கு பிடிக்காத அந்நியன் ஒருத்தன் என் அனுமதி இல்லாம என்னை தொட்டாலும் அமைதியா நிற்க என்னால முடியாது.." என்றவள் கன்னங்களில் உருண்ட கண்ணீரை துடைத்துக் கொண்டாள்.

அவளை தன் அணைப்பிலிருந்து விலக்கி நிறுத்தினான். அவள் நகர இருந்த நேரத்தில் அவளின் முகத்தை இரு கைகளால் பற்றினான்.

"நீ எப்பவுமே முட்டாளாதான் இருப்பியா புவனா.?" என்றுக் கேட்டான்.

அவள் பதில் பேசும் முன் "உனக்கு வெறும் வாய் மட்டும்தான். நீ அடிச்சதும் அவன் உன்னை திருப்பி அடிச்சிருந்தான்னா அங்கேயே சுருண்டு விழுந்து செத்திருப்ப.. எதிரியை பத்தி தெரிஞ்சிக்காமலேயே திரும்பி நின்னு சண்டை போட்டாலும் சேதாரம் இல்லாம ஜெயிக்க நீ ஒன்னும் பலசாலியோ புத்திசாலியோ கிடையாது.." என்றான் பற்களை கடித்தபடி.

அவள் யோசிக்க ஆரம்பித்த நேரத்தில் "அதே இடத்துல என் தங்கச்சியோ மதுமிதாவோ இருந்திருந்தா நிச்சயம் நான் குறுக்கே புகுந்திருக்கவே மாட்டேன். ஏனா அவங்க பலம் பத்தி எனக்கு நல்லா தெரியும். எவ்வளவு தூரம் போனாலும் அவங்க இரண்டு பேரும் ஜெயிச்சிட்டு திரும்புவாங்க. ஆனா நீ.? எதிரியை உன்னால ஜெயிக்க முடியாத பட்சத்துல நீ உனக்கான பாதுகாப்பை தேடுறதுதான் புத்திசாலிதனமே தவிர வெத்து சண்டை போடுறது இல்ல.. இன்னைக்கு ஒரே ஆபிஸ்ன்னு அசால்டா இருப்பவ நாளைக்கு ஒரே ஊர்தானே, ஒரே நாடுதானேன்னு இன்னொருத்தனையும் இப்படிதான் யோசிக்காம அடிப்ப.." என்றான்.

அவள் இதையும் யோசிக்க ஆரம்பித்தாள். நெருங்கி நின்றவன் அவளை தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டான்.

தயாளன் ஒருவேளை திருப்பி தாக்கியிருந்தால் என்ன செய்திருப்போம் என்பதை யோசித்துப் பார்த்தாள் புவனா. முத்தமிழ் சொன்னது போலவே ஒரு அடிக்கே சுருண்டுதான் விழுந்திருப்போம் என்பது அவளுக்கே புரிந்தது. காதலியாய் மனைவியாய் தோற்கும்போது வராத கோபம் தனியொரு பெண்ணாய் தோற்கையில் வந்தது.

'சின்ன பாப்பா சின்ன பாப்பான்னு கொஞ்சி கொஞ்சி சண்டை போட கூட கத்துக் கொடுக்காம போயிட்டாங்க இரண்டு பன்னாடைகளும்.. கார்த்தி கூட என்னை மாதிரிதான். அதனாலதான் இந்த மாமாக்கிட்ட இரண்டு முறை அடிப்பட்டான். எல்லாம் மூர்த்தியால வரது.. புண்ணாக்கு! அவன் மட்டும் எல்லாம் கத்துக்கிட்டு போலிஸ் ஆகிட்டான்.. செல்ப் டிபன்ஸ் கூட எங்க இரண்டு பேருக்கும் கத்து தரல. அடுத்த முறை பார்க்கும்போது அவன் சங்கை கடிச்சி வைக்கணும்..' என்று தன் மூத்த சகோதரனை மனதுக்குள் திட்டிக் கொண்டிருந்தாள் புவனா.

முத்தமிழ் அவளின் முதுகை வருடி தந்தான்.

அவனின் அணைப்பில் நின்றிருப்பதையே மறந்து விட்டிருந்தாள் புவனா. சுற்று புறத்தை பற்றிய நினைவு தாமதமாகவே வந்து சேர்ந்தது அவளுக்கு. அப்போதுதான் முத்தமிழின் இதய துடிப்பை உணர்ந்தாள் அவள். படபடவென இரு மடங்கு வேகத்தில் துடித்துக் கொண்டிருந்தது அவனின் இதயம்.

'மாமாவுக்கு‌ ஏன் இதயம் இப்படி துடிக்குது.? கோபமா.. பயமா.?" குழப்பத்தோடு நிமிர்ந்து பார்த்தாள். ஏதோ யோசனையில் இருந்தான் முத்தமிழ். அவளின் முதுகை மட்டும் அனிச்சை செயலாக வருடித் தந்துக் கொண்டிருந்தான்.

"சாரி மாமா.." என்றவளை குனிந்துப் பார்த்தான்.

"நான் என்னை தற்காத்துக்க கத்துக்கறேன்.. தற்காத்துக்க தெரியலன்னா உங்ககிட்ட உதவி கேட்கறேன். இனி முட்டாளா இல்ல.. சாரி.." என்றாள் சிறு குரலில்.

அவளின் நெற்றியில் தன் நெற்றியை மோதியவன் சரியென்று தலையசைத்தான்.

அவனின் நெருக்கம் அவளுக்கு புதியதாக இருந்தது. இத்தனை நாட்களாக நாய்க்குட்டி போல காலை சுற்றினாலும் கண்டுக் கொள்ளாதவன் இன்று ஏன் அணைத்துக் கொண்டான் என்றும் புரியவில்லை.

"யாராவது வருவாங்க.. என்னை விடுங்க.." என்றவள் அவனை விட்டு விலக முயன்றாள்.

"சாரி.. உன் சுய கௌரவத்தையோ, உன் நியாயமான கோபத்தையோ நான் எப்பவுமே தடுக்க நினைக்கல.." என்றவன் அவளின் கன்னங்களை துடைத்தான். அவளின் நெற்றியின் மீது முத்தமிட்டுவிட்டு விலகி நின்றான்.

புவனாவிற்கு கனவு போலவே இருந்தது. 'மாமா.. எனக்கு முத்தம் தந்தாரா.?' என்று நினைத்து இன்ப அதிர்ச்சியானாள்.

முத்தமிழ் தனது இருக்கையில் சென்று அமர்ந்தான்.

புவனா தன் நெற்றியை தொட்டுப் பார்த்தாள். ஈரம் கூட இருந்தது இன்னும். ஆச்சரியமாக இருந்தது.

'தெரியாம காதல்ல விழுந்துட்டேன்.. எப்ப என்ன மூடுக்கு பார்ம் ஆகுறார்ன்னே கண்டுபிடிக்க முடிய மாட்டேங்குது..' என்று சோகமாக நினைத்தாள்.

புவனா தனது இருக்கையில் வந்து அமர்ந்தாள். இருவரும் பேசிக் கொள்ளவில்லை. அவரவர் வேலைகளை கவனித்தனர். ஆனால் மனதுக்குள் ஓராயிரம் எண்ணங்கள் ஓடிக் கொண்டிருந்தது.

மதிய உணவு உண்ணுகையில் அங்கே தயாளன் இல்லை. அவன் வெளியே சென்று விட்டதாக தகவல் தந்தான் சத்யா.

மதுமிதா முத்தமிழை பார்க்கும் போதெல்லாம் முறைத்தாள்.

பிற்பகல் வேளையில் சைட்டிற்கு கிளம்பினான் முத்தமிழ். புவனாவும் உடன் சென்றாள். பெரிய நிறுவனம் ஒன்றின் பின்பகுதியில் கட்டப்பட்டுக் கொண்டிருந்த வரிசை வீடுகள் அவை. அந்த நிறுவனத்தில் வேலை செய்யும் நிரந்தர தொழிலாளர்கள் வீட்டு வாடகைக்கு பலவாயிரம் பணம் செலவழிப்பது கண்டு அந்த நிறுவனர் தன் நிறுவனத்தின் வருட லாபத்தில் இருந்து பணத்தை ஒதுக்கி அவர்களுக்கு இலவச வீடு கட்டிக் கொண்டிருந்தார்.

நிறுவனத்தில் வேலை செய்வோர் அதிகம். மாத வாடகை கட்ட சிரமப்படுபவரும் அதிகம். பட்ஜெட்க்கு மேல் செலவும் ஆக கூடாது. சிறு சிறு வீடுகளாக இருந்தாலும் அடிப்படை வசதிகள் அனைத்தும் இருக்க கூடிய வீடாக இருக்க வேண்டும் என்று நினைத்தார் அவர். அப்போதுதான் முத்தமிழையும் அவனது நண்பர்களையும் பற்றி அறிந்தார். தனது எண்ணத்தை இவர்கள் செயல்படுத்தி தருவார்கள் என்று நம்பியவர் இவர்களிடமே ஒப்பந்தம் போட்டு விட்டார்.

வீடுகள் கட்டும் வேலைகள் எப்படி போகிறது என்று கவனித்துக் கொண்டிருந்தான் முத்தமிழ். தேவையான பொருட்கள் அனைத்தும் அந்தந்த அளவில் இருக்கிறதா என்று பார்த்து முத்தமிழ் தந்த நோட்டில் குறிப்பு எடுத்தாள் புவனா.

வரிசையாக அனைத்தையும் பார்த்துக் கொண்டு நடந்த புவனா தயாளன் யாரிடமோ கத்திக் கொண்டிருக்கும் சத்தம் கேட்டு சத்தம் வந்த திசை நோக்கி நடந்தாள்.

"நான் உங்கக்கிட்ட தெளிவாதான் சொல்லிட்டு போனேன்.. தொட்டில் மாட்டுற கொக்கியை சீலிங் பேன் சுற்றளவுக்குள்ள இருந்து தள்ளி வைங்கன்னு தெளிவாதானே சொன்னேன்.? நான் இப்ப பார்க்காம இருந்திருந்தா இப்படியே கான்கிரீட் போட்டிருப்பிங்க.. நான் சொல்ற மாதிரி கூட செய்யாம உங்களுக்கு என்னதான் வேற வேலை இருக்கு.?" என்று தன் முன் இருந்தவனிடம் எரிந்து விழுந்தும் கொண்டிருந்தான் தயாளன்.

"சார்.. நான் என் அசிஸ்டென்ட் பையன்கிட்ட அந்த வேலையை சொல்லி இருந்தேன் சார்.. அதுவும் இல்லாம இது கடைநிலை தொழிலாளர்கள் இருக்க போற வீடுதானே.? அவங்களுக்கு இந்த வசதி இல்லன்னாலும் என்ன போயிட போகுது.?" என்றான் அவனின் எதிரில் இருந்தவன்.

"உனக்கு வேலை இல்லை.. நீ கிளம்பு.. நான் வேற ஆள் பார்த்துக்கறேன்.." தயாளனின் கோபம் எல்லையை தாண்டி விட்டது.

"சார்.." எதிரில் இருந்தவன் அதிர்ச்சியோடு அவனை பார்த்தான்.

"என்ன சார்.? கடைநிலை தொழிலாளர்கள் பேன் யூஸ் பண்ண கூடாதா.? இல்ல குழந்தைதான் பெத்துக்க கூடாதா.? போன முறையே உங்க வேலை எனக்கு பிடிக்கலன்னு சொன்னேன்.. சொல்ல சொல்ல கவன குறைவா இருக்கற உங்களை இனியும் என்னால வேலைக்கு வச்சிக்க முடியாது.. கிளம்புங்க‌‌.." என்றுவிட்டு நடந்தவன் தன்னை பார்த்து நின்ற புவனாவை கண்டதும் அனிச்சையாக தன் கன்னத்தை தொட்டான்.

வேலையாள் மீது கடுப்பில் இருந்தவன் இவளையும் அதே கடுப்போடு முறைத்துவிட்டு தாண்டி நடந்தான்.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN