மணாளனின் மனம் 18

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
முத்தமிழ் செல்வதை பார்த்தபடி வாசலிலேயே நின்றிருந்தாள் புவனா.

"என்னம்மா சைட்டிங்கா.?" மதுமிதாவின் குரல் கேட்டவள் அவசரமாக திரும்பிப் பார்த்தாள்.

அலுவலகத்தின் வாசற்படியில் சாய்ந்து நின்றிருந்தாள் மதுமிதா.

"இ.. இல்லக்கா.. மாமா என்னை விட்டுட்டு சைட்டுக்கு போறாறேன்னு வருத்தம். எப்போதும் கூட்டிப் போவாரு. திடீர்ன்னு இன்னைக்கு விட்டுட்டு போயிட்டாரு.." என்றவளின் அருகே வந்த மதுமிதா "சைட்ல எந்த வேலையும் இல்லையே.? சும்மா போயிருப்பான்னு நினைக்கிறேன். அவன் கூட்டிப் போகலன்னா போகட்டும் விடு.." என்றாள்.

புவனா தயக்கமாக அவளை ஏறிட்டாள்.

"உங்களுக்கு என் மேல கோபம் இல்லையா அக்கா.?" என்றாள்.

ஆச்சரியமாக அவளை பார்த்தவள் "ஆனா நான் ஏன் கோபப்படணும்.?" என்றாள் சிறு புன்னகையோடு.

"மாமாவுக்கும் உங்களுக்கும் கல்யாணம் நடக்க இருந்தது. என்னாலதான் அது நின்னுப் போச்சி. என்னோட ஒன்சைட் லவ்வால நீங்கதான் அதிகம் பாதிக்கப்பட்டுடிங்க.. சாரிக்கா.." என்றாள்.

அதிர்ச்சியோடு அவளை பார்த்தவள் "முத்தமிழ் உன்கிட்ட எதையுமே சொல்லலையா.?" எனக் கேட்டாள்.

திருதிருவென விழித்தாள் புவனா. 'மாமா முக்கியமான எதையாவது என்கிட்ட சொல்ல இருந்தாரா.? அவர் சொல்லலன்னு மது அக்காகிட்ட நாம சொன்னா அப்புறம் அவர் நம்மை திட்டுவாரே.! ஏற்கனவே ரொம்ப திட்டு விழுது. இந்த காரணத்தை வச்சி இன்னும் திட்டு வாங்கணுமா.?' யோசித்தவளின் தோளைப் பற்றினாள் மதுமிதா.

"அப்படின்னா அவன் தன் பிடிவாதத்துல இருந்து இறங்கல.. உன்கிட்டயும் எதுவும் சொல்லல.. ரைட்.?" என்றாள்.

புவனாவிற்கு குழப்பம்தான் அதிகமானது.

"சொ.. சொன்னாருக்கா.. நான்தான் மறந்துட்டேன்.." என்றவளை பரிவோடு பார்த்தவள் "ஏன் புவனா இப்படி இருக்க.?" எனக் கேட்டாள்.

"என்னோடு வா.." என்றவள் அவளை தன் அறைக்கு அழைத்துச் சென்றாள்.

"வேலை இருக்கு அக்கா.. மாமா வரும் முன்னாடி நான் முடிச்சி வைக்கணும்.." என்றவளிடம் "பரவால்லம்மா.. அந்த வேலையை அப்புறம் கூட பார்த்துக்கலாம் வா.." என்று அழைத்தாள்.

தயக்கமாக மதுமிதாவின் எதிரில் அமர்ந்தாள் புவனா. மதுமிதாவை கவனித்தாள். கம்பீரமாக தனித்துவமாக தென்பட்டாள் மதுமிதா. அவளின் ஒவ்வொரு செயலிலும் நளினம் இருந்தது. 'நமக்கு ஏன் இந்த நளினம் வரவில்லை.?' எனக் கேட்டுத் தன்னையே நொந்துக் கொண்டாள்.

தனது கூந்தலை காதோரம் ஒதுக்கி விட்டுக் கொண்ட மதுமிதா நாற்காலியில் சாய்ந்து அமர்ந்தாள். புவனாவின் கண்களுக்கு ஓவியம் போலவே தெரிந்தாள் அவள். மதுமிதாவின் கண் அசைவுகள் கூட அவ்வளவு பிடித்திருந்தது அவளுக்கு. தன் கணவன் இவளை கட்டிக் கொள்ள விரும்பியதில் தவறேதும் இல்லை என்ற எண்ணம் நொடிக்கு நொடி அவளுக்குள் வலுப் பெற்றுக் கொண்டிருந்தது.

"அவன் ஏன் உன் காதலை ஏத்துக்கலன்னு தெரியுமா.? அஞ்சரை வருசம் நீ சுத்தியும் அவன் உன்னை திரும்பிப் பார்க்கல.. காரணம் என்ன தெரியுமா.?" என்றுக் கேட்டவளிடம் தெரியாதென தலையசைத்தாள் புவனா.

"அவனுக்கு பயம்.." மதுமிதா சொன்னது கேட்டு ஆச்சரியத்தில் விழி விரித்தாள் இவள்.

"பர்ஸ்ட்ல நீ சின்ன பொண்ணா இருந்த.. சோ உன் காதலை ஈர்ப்புன்னு நினைச்சி உன்னை கண்டுக்காம விட்டுட்டான் அவன். உன் அண்ணன் அபிராமியை கல்யாணம் பண்ணிக்கிட்டது, அபிராமி உன் அண்ணனை பழிவாங்கியதுன்னு அந்த டைம்ல அவனோட தங்கச்சிக்காக உன்னை மறுத்துட்டான். ஆனா அபிராமியும் உன் அண்ணனும் மறுபடியும் சேர்ந்துடவும் அவனுக்கு உன் மேல பயம் வந்துடுச்சி.." என்றாள்.

புவனாவிற்கு தலையை சொறிந்துக் கொள்ள வேண்டும் போல இருந்தது. மதுமிதா சொன்னது புரியவே இல்லை அவளுக்கு.

'நான் என்ன பேயா பிசாசா.? என்னைப் பார்த்து ஏன் மாமா பயப்பட்டாரு.?' குழப்பத்தோடு யோசித்தாள்.

"அவனுக்கு தன்னோட சுதந்திரத்தை ரொம்ப பிடிக்கும். அபிராமியோட பிடிவாதமும் ரொம்ப பிடிக்கும். உன் அண்ணனையும் ஒரு நண்பனா பிடிக்கும். ஆனா அபிராமியோட அத்தனை பிடிவாதமும் நொறுங்க காரணம் காதல்தான். தனக்கான தனி கெத்தை விட்டுட்டு கார்த்திக்கும் அபிராமிக்கிட்ட சரணைச்சிட்டான். காரணம் காதல். அவங்களை போல மாற தமிழுக்கு விருப்பம் இல்ல. காதல் தன்னை மாத்திடும்ன்னு பயந்தான். நீ அவனை மாத்திடுவியோன்னு பயந்தான். அவனோட ஸ்பேஸை நீ உன் காதலால திருடிடுவியோன்னு அவனுக்கு பயம். இதுக்கு இன்னொரு காரணம் உன் நாத்தனார். 'அந்த குடும்பமே மோசம் அண்ணா.. கார்த்திக் அதை விட மோசம். கொடியோடும் தாவரம் எப்படி மரத்தை பின்னி பிணையுதோ அதே போல அவன் காதலை யூஸ் பண்ணி என் மனசோடு பிண்ணி பிணைஞ்சிட்டான். ஆனா பிரச்சனை என்னன்னா கொடிக்குதான் மரம் இல்லாம வாழ முடியாது. ஆனா இந்த காதல்ல மரத்தாலயும் கொடி இல்லாம வாழ முடியாது. அந்த அளவுக்கு என்னை மாத்திட்டான் அவன். பாசத்தை விஷம் போல பரப்பி அவங்களோட காலடியில் விழ வைக்கிற குடும்பம் அது..'ன்னு சொல்லி வச்சிருக்கா அவ. அது உண்மையா கூட இருக்கலாம். ஆனா இதுவும் தமிழை பயப்படுத்திடுச்சி. உனக்கு அடிமையா இருக்க அவனுக்கு துளியும் இஷ்டமில்ல. ஒன்சைட் லவ்வுலயே அவன் எவ்வளவு விரட்டியும் திரும்பி போகாம சுத்தி வந்தவ நீ. ஒருவேளை உன் காதலை ஏத்துக்கிட்டா அவன் நிலமை என்னவாகும்ன்னு நீயே யோசிச்சி பாரு.." என்றாள்.

புவனா அதிர்ச்சி தீராமல் சிலை போல அமர்ந்திருந்தாள்.

"அடுத்து உன் அண்ணன். தமிழுக்கு சுய கௌரவம் ரொம்ப பிடிக்கும். ஒரு அண்ணனா இல்லாம ஒரு மூணாவது மனிதனா நின்னு யோசிக்கும் போதெல்லாம் அவனுக்கு உன் அண்ணனை நினைச்சி பாவமா இருந்திருக்கு. உன் அண்ணன் அபிராமிக்கு எதிரியாதான் அறிமுகமானான். ஆனா அபிராமி அவனுக்கு துரோகியா மாறினா. எதிரியை கூட ஈசியா மன்னிக்க முடியும். ஆனா நம்ம ஆளுங்க துரோகியை மன்னிக்கவே மாட்டாங்க. ஆனா உன் அண்ணன் அபிராமிக்கிட்ட அந்தர் பல்டி அடிச்சிட்டான். ஒரு பொண்ணுன்னா இப்படிதான் லவ்வை காட்டி தன் சுய சிந்தனையை கூட முடக்கிடுவான்னு உன் புருசனா முடிவு பண்ணிட்டான்.. உன் அண்ணன் அபிராமிக்கிட்ட தோத்த மாதிரி தமிழ் உன்கிட்ட தோற்க விரும்பல.." என்றாள்.

புவனா நெற்றியை தேய்த்தாள்.

'குரங்கு கார்த்தி.. குட்டி சாத்தான் அபிராமி.. கடைசியில நீங்களா எனக்கு வில்லன் வில்லியா வந்து சேர்ந்திங்க‌.?' என அதிர்ச்சியோடு நினைத்தவளுக்கு அவர்கள் இருவரையும் கண்டவுடன் கடித்து வைக்க வேண்டும் போல வெறி வந்தது.

"உன்னோடு லவ்வுல விழுந்தா தன் லைஃப் காலின்னு பயந்தான் அவன். உன் அண்ணனும் அபிராமியும் இரண்டாவது முறையா கல்யாணம் பண்ணிக்கிட்டதும் எங்கே நீ அவங்க உறவை காட்டி உனக்கும் தமிழுக்கும் முடிச்சி போட்டுடுவியோன்னு பயந்துட்டான். உன்கிட்ட மாட்டிக்க கூடாதுங்கற ஒரே ஒரு காரணத்துக்காக மட்டும்தான் என்கிட்ட வந்து மேரேஜ் ப்ரொபசல் பண்ணினான். இப்ப நான் உன்கிட்ட சொன்ன எல்லாத்தையும் என்கிட்ட தெளிவா சொல்லி ஏன் என்னை கல்யாணம் பண்ணிக்க விருப்பப்படுறான்னு புரிய வச்ச பிறகுதான் என் விருப்பத்தை கேட்டான் அவன்.."

புவனா இப்படி ஒரு காரணத்தை எதிர்பார்க்கவே இல்லை.

'அடப்பாவி மாமா.. உன்னை போய் பெரிய மனுசன்னு நினைச்சேனே.! என்னை விட சில்லறையா இருந்திருக்கியேயா..' என நினைத்தவளின் கையை பற்றினாள் மதுமிதா.

"உன்கிட்ட விழுந்துட கூடாதுன்னு அவன் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்பட்டான். நான் ஒரு பரதேசிக்கிட்ட மாட்டிக்க கூடாதுன்னு அவனுக்கு சம்மதம் சொன்னேன். கடைசி நேரத்துல செத்தாலும் சாவேன், உன் கல்யாணத்தை பார்க்க மாட்டேன்னு நீ வீம்பா விஷத்தை குடிச்சிட்ட.. ஒரு படி கூட இறங்கவே கூடாதுன்னு நினைச்சிட்டு இருந்த பையன் உன்னால முழுசா அதல பாதளத்துல விழுந்துட்டான்.." என்றுச் சொல்லிவிட்டு கலகலவென சிரித்தாள் மதுமிதா.

புவனாவிற்கு ஆயிரம் விதமாக மனம் துடித்தது.

"நீ எப்பவும் போலவே இரு.. பையன் இன்னும் ஆறு மாசத்துல எல்லாமே என் பொண்டாட்டின்னு சொல்லலன்னா நான் என் பேரை மாத்திக்கிறேன்.." என்றாள் கண்களில் நீர் தழும்ப சிரித்தபடி.

இவளை போய் தவறாக நினைத்து வெறுத்து விட்டோமே என்று தனது அவசர புத்தியை திட்டிக் கொண்டாள் புவனா. இப்போது மதுமிதாவை ரொம்ப பிடித்திருந்தது அவளுக்கு. தனக்கும் தன் கணவனுக்கும் இடையில் கத்தரிக்கோலாய் வந்துவிடுவாளோ என்றுப் பயந்துக் கொண்டிருந்தவள் இவள் கத்திரி அல்ல பாலம் என அறிந்த பிறகு மனதார மகிழ்ந்தாள்.

"உன்னை ரொம்ப கொடுமை பண்றானா அவன்.?" சிரித்து முடித்த பிறகு கேட்டாள் மதுமிதா.

"இல்லக்கா.. அப்படி எதுவும் இல்ல.. நான்தான் சோம்பேறி. அதுக்காக அப்பப்ப செல்லமா திட்டுவாரு.." என்றாள் கன்னம் சிவக்க.

"நீயெல்லாம் தனி ரகம் புவனா. அவன் வெறுத்தா கூட அதையும் பாசம்ன்னே நினைப்ப.. இந்த காதலை கண்டு தமிழ் பயந்ததை விட அதிகமா நான் பயப்படுறேன். வெறுப்பையும் பாசமா நினைக்கற முட்டாளா மாற எனக்கு விருப்பம் இல்ல.. யாரும் என்னை கன்ட்ரோல் பண்றதை நான் விரும்பல. அந்த கன்ட்ரோலுக்கான ஸ்விட்ச் காதலாய் இருப்பதை சுத்தமா விரும்பல நான்.." என்றாள்.

புவனாவிற்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. நேற்று மதுமிதாவும், தயாளனும் போட்டுக் கொண்ட சண்டையை பார்த்தவளுக்கு நாம் எதை சொன்னாலும் வம்பில்தான் மாட்டுவோம் என்பது மட்டும் தெளிவாக புரிந்திருந்தது.

"புவனா.. நீ எனக்கு ஒரு ஹெல்ப் பண்றியா.?" என கேட்ட மதுமிதாவிடம் தயக்கமாக தலையசைத்தாள் புவனா.

"தயா மேல கேஸ் பைல் பண்ணனும்.. அதுக்கு நீ என்னோடு வந்து கம்ப்ளைண்ட் தரணும்.." என்றாள்.

புவனா அதிர்ச்சியில் தன் இருக்கையிலிருந்து எழுந்து விட்டாள்.

"ஏன்க்கா இவ்வளவு கொலைவெறி.?" என்றாள்.

"அவன் ஒன்னும் யோக்கியன் கிடையாது.. ஐ வாண்ட் எ ரீசன். இப்ப கிடைச்சிருக்கு. நீ என்னோடு வா. அவன் உன்கிட்ட தப்பா நடந்துக்க டிரை பண்ணான்னு போலிஸ்ல சொல்லு.. மீதியை நான் பார்த்துக்கறேன்.." என்றாள்.

"இ.. இல்லக்கா.. அவர் அப்படியெல்லாம் நடந்துக்கல.. தெரியாமதான் கை பட்டுடுச்சி.. நானே மூணு முறை அறைஞ்சிட்டேன். அதுவே ஓவர்தான். போலிஸ் கம்ப்ளைண்ட் ரொம்ப தப்புக்கா.." என்றாள்.

"அவனை அடக்க நல்ல சான்ஸ் இது.." என்றவளிடம் மறுப்பாக தலையசைத்தாள் புவனா.

"நா.. நான் போறேன்.. எனக்கு வேலை இருக்கு.." என்றவள் அவசரமாக வெளியே நடந்தாள்.

"ஏய் புவனா.." மதுமிதா அழைத்ததை காதிலேயே வாங்கவில்லை புவனா. அவள் அந்த அறையை விட்டு வெளியே வந்த போது அங்கே தயாளன் நெருப்பாக நின்றுக் கொண்டிருந்தான்.

"ம்.." புவனாவிற்கு வார்த்தைகள் வர மறுத்தது.

"தமிழ் அவன் ரூம்ல இருக்கான்.." கட்டைக் குரலில் சொன்னான் அவன்.

மொத்தமாக தலையசைத்தவள் அவனை தாண்டிக் கொண்டு ஓடினாள். அறையின் வாசலில் நின்றுக் கொண்டிருந்த முத்தமிழ் "தயா கூட என்ன பேச்சு உனக்கு.?" என்றான் மூக்கு சிவக்க.

'மெண்டல் ஹாஸ்பிட்டல்ல இருக்க வேண்டிய எல்லாரும் இந்த ஆபிஸ்லதான் இருக்காங்க போலயே..' என நினைத்தவள் "நான் பேசவே இல்ல மாமா.. தாண்டிதான் வந்தேன்.." என்றாள்.

"ஆனா அவன் ஏன் உன்னை முறைக்கிறான்.?" சந்தேகத்தோடு கேட்டவனை திணறலாக பார்த்தவள் "அதை அவர்கிட்டதான் கேட்கணும் மாமா.. அவர் என்னை முறைக்கல.. அவரோட கை தெரியாம என் மேல பட்டதுக்கு மது அக்கா அவர் மேல போலிஸ் கம்ப்ளைண்ட் தரலாம்ன்னு சொன்னாங்க. நான் வேணாம்ன்னு சொல்லிட்டு ஓடி வந்துட்டேன். அங்கேதான் அவர் இருந்திருக்காரு. அந்த அக்கா சொன்னது அவர் காதுலயும் விழுந்திருக்கும் போல.. அவர் அந்த அக்கா மேலதான் கோபமா இருக்காரு.. அவங்களைதான் முறைச்சாரு.." என்றாள்.

முத்தமிழ் அவளின் முகத்தை ஆராய்ந்தான். உண்மையை சொல்கிறாள் என்பது புரிந்தது‌. ஆனால் அந்த முகத்தில் இருந்த கூடுதல் சந்தோசம் ஏன் என்று அவனுக்கு புரியவில்லை.

அதை பற்றி கேட்க இருந்த நேரத்தில் மதுமிதாவின் அறையில் என்னவோ விழுந்து உடையும் சத்தம் கேட்டது.

"மது அக்காவும், தயா அண்ணாவும் மறுபடியும் சண்டை போட்டுக்கறாங்க போல.." புவனா கவலையோடு சொல்லவும் மதுமிதாவின் அறையை நோக்கி ஓடினான் முத்தமிழ். என்ன கை கலப்போ என்ற கவலையோடு புவனாவும் அவனின் பின்னால் ஓடினாள்.

அறையின் நடுவில் இருந்த மேஜை எங்கோ தூரமாக கிடந்தது. நாற்காலியில் அமர்ந்திருந்த மதுமிதாவின் உதட்டோடு தன் உதடு பதித்திருந்தான் தயாளன்.

அதிர்ச்சியோடு பார்த்துக் கொண்டிருந்த புவனாவின் கண்களின் மீது தன் வலது கரத்தை பொத்தினான் முத்தமிழ்.

புவனா ஏதோ சொல்ல முயலும் முன் அவளை அங்கிருந்து நடத்தி தூரமாக அழைத்து வந்தான்.

புவனாவின் விழிகளின் மீதிருந்த தன் கரத்தை விலக்கினான். "உனக்கு எவ்வளவு வேலை இருக்கு.? அதுல கொஞ்சத்தையாவது முடிச்சியா.?" என்றான் புருவம் உயர்த்தி.

"பார்க்கறேன் மாமா.." என்றவள் அவசரமாக அறைக்கு ஓடினாள்.

முத்தமிழ் தன் தலையை கலைத்து விட்டான். "டேஞ்சர் கைய்ஸ்.." என்றவன் தனது மேஜையின் பின்னால் வந்து அமர்ந்தான். புவனாவை பார்த்தான். வழக்கத்தை விட அதிக மகிழ்ச்சியோடு வேலையை பார்த்துக் கொண்டிருந்தாள் அவள். என்ன காரணமாக இருக்கும் என்று யோசித்தவனுக்கு பதில் கிடைக்கவில்லை.

மதுமிதாவை தன் பிடியிலிருந்து விலக்கினான் தயாளன். கோபத்தில் சிவந்திருந்தது இருவரின் கண்களுமே‌.

எழுந்து நின்று அவனின் கன்னத்தில் அறையை தந்தாள் மதுமிதா. அதே வேகத்தில் அவனும் ஒரு அறையை தந்தான்.

"உன் பிரச்சனை என்ன.? நான்தான் இந்த ப்ராஜெக்ட் முடிஞ்சதும் இந்த குரூப்ல இருந்து விலகிக்கிறேன்னு தெளிவாதானே சொன்னேன்‌.? அப்புறம் ஏன் சம்பந்தமே இல்லாம அந்த பொண்ணு லைப்பையும் சேர்த்து ஸ்பாயில் பண்ண பார்க்கற.?" என்று கர்ஜித்தான்.

தன் உதடுகளை ஓயாமல் துடைத்துக் கொண்டிருந்த மதுமிதா ஆத்திரத்தோடு அவனை பார்த்தாள். "ஏனா எனக்கு உன்னை பிடிக்கல.. என்னை எதுக்கு கிஸ் பண்ண.?" என்றாள் எரிச்சலோடு.

"நீ கேட்ட ரீசனை நானே தரலாமேன்னுதான்.." என்றவன் "உனக்கு என் மேல கோபம்ன்னா அதை என் மேல காட்டு.. நான் செய்யாத தப்புக்கு அந்த பொண்ணையும் சேர்த்து போலிஸ், கேஸ்ன்னு மாட்டிவிட டிரை பண்ணாத.. அவ கேஸ் தந்தா தமிழுக்கும் அவளுக்கும் நடுவுல பிரச்சனை உருவாகும். அந்த கேப்ல அவனை நீ கொத்திட்டு போகலாம்ன்னு திட்டம் போட்டிருக்க.."

மதுமிதா அதிர்ச்சியோடு மறுப்பாக தலையசைத்தாள். அவள் இப்படி ஒரு கோணம் இருந்ததை யோசிக்கவில்லை என்பதுதான் உண்மை. தயாவின் மீதிருந்த கோபத்தில் தவறான முடிவை யோசித்து விட்டாள்.

"என்னை ஜெயிலுக்கு அனுப்ப அவ்வளவு ஆசையா இருந்தா இந்த கிஸ்ஸை ரீசனா யூஸ் பண்ணிக்க.. அப்பாவி பொண்ணை சிக்க வைக்க டிரை பண்ணாத.‌‌. நான் உன்னை ரேப் பண்ணதா கூட கம்ப்ளைண்ட் கொடு.. எனக்கு பிரச்சனை இல்ல.. உன்னை மாதிரி ஒருத்தியை தினம் பார்க்கறதை விட இருட்டறை ஜெயில்ல சந்தோசமா வாழ்ந்துட்டு போயிடுவேன் நான்‌‌.." என்றவன் அந்த அறையை விட்டு வேகமாக வெளியே நடந்தான்.

மதுமிதா முகத்தை மூடியபடி நாற்காலியில் அமர்ந்தாள். 'அப்பாவி பொண்ணை சிக்க வைக்காத' என அவன் சொன்னதை நினைத்து கவலைப்பட்டாள். இவன் அப்படி நினைத்ததை பற்றி அவளுக்கு எந்த கவலையும் இல்லை. புவனாவும் அப்படி நினைத்து விட்டாளோ என்றுதான் கவலைப்பட்டாள்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN