மணாளனின் மனம் 20

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
தயாளன் கதவின் அருகே வந்து நின்றான்.

மதுமிதாவின் கண்ணீரை வெறித்துப் பார்த்தான்.

"உன் நடிப்பை பார்க்க எனக்கு இஷ்டம் இல்ல.. தூரமா போய் தொலை.." என்றான்.

மதுமிதா கம்பிகளின் இடையே கையை விட்டு அவனின் சட்டையை பற்றினாள்.

"ஏன்டா பொறுக்கி இப்படி இருக்க.? நீ பண்றது எனக்கு ஹர்ட்டாகுதுன்னு உனக்கு புரியலையா.?" என்றாள்.

தயாளன் அவளின் கன்னத்தில் வழிந்த கண்ணீரை சுட்டு விரலால் தொட்டான். பின்னர் கண்ணீரை சுண்டி விட்டான்.

"அழுதுட்டா உனக்கு வலிக்குதுன்னு அர்த்தம். அழாம இருப்பதால எனக்கு வலிக்கலன்னு அர்த்தமா.?" கடுமையான முகத்தோடு கேட்டவன் தன் சட்டையிலிருந்த அவளின் கையை விடுவித்தான்.

"நீ ஆசைப்பட்ட மாதிரியே நான் ஜெயிலுக்கு வந்துட்டேன்.. இதுக்கு நீ தேங்க்ஸ்தான் சொல்லணும்.. நடிப்பை நிப்பாட்டிட்டு கிளம்பு.." என்றான் அடிக் குரலில்.

மதுமிதா நெற்றியில் அடித்துக் கொண்டாள். "தெரியாம கோபத்துல அப்படி சொல்லிட்டேன் தயா.." என்றாள் அழுகையின் இடையே.

குறுக்கே சென்று பேசலாமா வேண்டாமா என்ற சந்தேகத்தில் இருந்தார்கள் மற்ற நண்பர்கள் இருவரும்.

புவனா முன்னால் சென்றாள். மதுமிதாவின் தோளை பற்றி பின்னால் இழுத்தாள்.

"நீங்க அழாதிங்க அக்கா.. இவனுக்கு சரியான திமிரு.. பாவம் அந்த பொண்ணு.. ஒரு பொண்ணை ரேப் பண்ணியிருக்கியே.. உனக்கு அறிவிருக்காடா பொறுக்கி பயலே.? உங்க அம்மாதான் பாவம்.. நானா இருந்தா உனக்கு கள்ளிப்பாலை ஊத்தி குழந்தையிலேயே கொன்னு இருப்பேன்.. உன்னால அந்த பொண்ணு வாழ்க்கையும் நாசம். மதுக்கா வாழ்க்கையும் நாசம்.. உன்னை மாதிரி ஒரு பொறுக்கியை லவ் பண்ணதுக்கு இந்த அக்கா ரொம்ப கஷ்டப்படுறாங்க.." என்றாள் புவனா. முத்தமிழ் அவளின் கை பற்றி தன்னருகே இழுத்தான்.

"நீங்க அமைதியா இருங்க மாமா.." என்று கணவனின் கையை உதறி தள்ளியவள் மதுமிதாவின் கண்ணீரை கண்டுவிட்டு தயாளனை முறைத்தாள்.

"பொறுக்கி.. மது அக்காக்கிட்ட சாரி சொல்லுடா.." என்றாள்.

முத்தமிழ் நெற்றியில் அடித்துக் கொண்டான்.

மதுமிதா தேம்பிக் கொண்டே இருந்தாள். காவலர்கள் குழப்பமும் சுவாரசியமுமாக இந்த கூட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

"ஏய் வாயாடி! உனக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்ல.. தூரமா போய் உன் புருசனை வெரட்டுற வேலையோடு இரு.. இவளை பத்தி உனக்குத் தெரியாது.. இவ உனக்கும் உன் புருசனுக்கும் நடுவுல சண்டை வரணும்ன்னுதான் அப்படி ஒரு கேஸே தர சொன்னா.. உன்னை இவ பழிவாங்க கூடாதுன்னுதான் நான் நானாவே இங்கே வந்திருக்கேன்.." என்றான் தயாளன்.

அவன் சொல்லி முடிக்கும் முன்பே அவனின் வயிற்றில் ஒரு குத்து விட்டு விட்டாள் புவனா.

"டி போட்டு கூப்பிட்டன்னா கொன்னுடுவேன் பொறுக்கி.. அக்காவுக்கு உன் மேல கோபம்.. அதனாலதான் அப்படி சொன்னாங்க.. இவங்க உன்னை‌ எவ்வளவு லவ் பண்றாங்க.. அது உன் மரமண்டைக்கு புரியவே இல்லையா.? நீ பிளேபாயா மாறாவே தான்தான் காரணம்ன்னு சொல்லி அழுதாங்க அக்கா.. உன்னால இவங்க லவ்வை புரிஞ்சிக்க முடியல. ஆனா இவங்களை கஷ்டபடுத்த மட்டும் கத்து வச்சிருக்க.." என்றாள் கோபத்தோடு.

தயாளனுக்கு அந்த நிலையிலும் முத்தமிழை நினைத்து பரிதாபமாக இருந்தது. 'இவளை வச்சி எப்படி குப்பைக் கொட்டுறானோ.?' என்று நினைத்தான். அவள் குத்தியதால் வயிறு வேறு வலித்தது அவனுக்கு.

"சிஸ்டர்.. இவளுக்கு என் மேல லவ் இல்ல.. அவ அப்படி லவ் பண்ணியிருந்தா நான் ஏன் ப்ளேபாய் மாறப் போறேன்.? இல்ல ரேப்பிஸ்டா மாறப் போறேன்.?" தயாளன் கேட்டது கண்டு மேலும் விசும்பினாள் மதுமிதா.

"ஐ லவ் யூ.. ஆனா என்னால அதை சொல்ல முடியல.." என்றாள் தலைகுனிந்தபடி மதுமிதா. அவளின் கண்களில் இருந்து மாலை மாலையாக கண்ணீர் வழிந்தது.

தயாளன் நெருப்பாக அவளை முறைத்தான்.

"சொல்ல முடியாதவ ஏன் இங்கே வந்து அழுது நடிச்சிட்டு இருக்க.? அந்த பக்கமா போய் தொலைய வேண்டியதுதானே.?" என்றான்.

காவல் துறை அதிகாரி ஒருவர் தன் மேஜையின் மேல் இருந்த தொலைபேசி ஒலிப்பதை கண்டு எடுத்துப் பேசினார். பக்கத்தில் இருந்த சக காவலரோடு என்னவோ பேசினார்.

அந்த காவலர் தயாளனை நோக்கி செல்ல இருந்த நேரத்தில் அவரின் கைப்பற்றி நிறுத்தினார் அந்த அதிகாரி.

"வெயிட் பண்ணுங்க கொஞ்ச நேரம்.." என்றவர் தயாளனை சுவாரசியம் தீராமல் பார்த்தார்.

தயாளனின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் மதுமிதா விக்கியழுதாள்.

சத்யாவும், முத்தமிழும் இந்த நிலையை எப்படி சரி செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தார்கள்.

மதுமிதாவிற்கு பிரதிவாதியாக தானே இருந்தது போன்ற நினைப்பில் இருந்தாள் புவனா.

"லூசு பயலே.. நீ ப்ளேபாயா மாறியதாலதான் அக்கா உன்னை லவ் பண்ணதை சொல்லல.." என்றாள்.

தயாளனுக்கு புவனாவை பார்க்கையில் பள்ளிக்கூட வாயாடி சிறுமி போலவே இருந்தது. இப்படி ஒரு தங்கையை சும்மா தந்தால் கூட தனக்கு வேண்டாம் என்று எண்ணினான்.

"அவ லவ் பண்ணாததால்தான் நான் அப்படி மாறினேன்‌‌.." அவளோடு வாதாடவே கூடாதென்று மனம் சொன்னாலும் தன்னை மீறி வார்த்தையை விட்டான் தயாளன்.

புவனா என்னவோ சொல்ல முயன்றாள். ஆனால் அதற்கு முன்பு அவனே "ஒரு விசயம்தான் இங்கே மொத்த மேட்டரும் சிஸ்டர்.. இவ என்னை காதலிச்சிருந்தா நான் அவக்கிட்ட கெஞ்சி கேட்டு சுத்தி வந்து நேரத்துல அதை ஒத்துக்கிட்டு இருந்திருக்கணும்.. இல்ல அப்படி எந்த காதலும் இல்லன்னா நான் எப்படி நாசமா போனாலும் இவளுக்கு எந்த வலியும் இருக்க கூடாது.." என்றான்.

காலம் கடந்து விட்டதற்காக கதறியது மதுமிதாவின் உள்ளம். ஏதோ கொஞ்சம் வீம்பு, கொஞ்சம் ஈகோ, என்னதான் காதல் கொண்டு விட்டாலும் தன் காதலை சொல்லாமலேயே அவனை அலைய விடலாமே என்ற ஓர் எண்ணம்! ஆனால் இதெல்லாம் சேர்ந்து தன்னை எந்த அளவிற்கு பழி வாங்கி விட்டது என்ற விசயம் புரிந்து இப்போது கண்ணீர் விட்டாள்.

அவன் தன்னையே சுற்றி வந்த நாட்களை நினைத்துப் பார்த்தாள். கண் சாடை காட்டு போதும் என்று கெஞ்சினானே பல நாட்கள்.‌. அப்போதெல்லாம் அலட்சியமாக இருந்தவள்தான் 'நான் ஒருத்தியிடம் இணைந்து விட்டு வந்தேன்' என்று ஒருநாள் அவன் நண்பர்களிடம் சொன்னதைக் கேட்டு மனம் உடைந்துப் போனாள்.

தன் மனமுடைவை அவள் வெளியே சொல்லவே இல்லை. அவன் செய்ததை எண்ணி அவனை வெறுத்தாள். ஆனால் உள்ளுக்குள் இருந்த காதல்தான் சாகவேயில்லை. அவன் மேலும் மேலும் தவறானவனாக மாறிக் கொண்டிருந்ததை கேட்டவளுக்கு அவனிடம் சரணடைந்து விட கூடாது என்ற எண்ணம் வலுவடைந்தது. அவன் தவறானவன் என்று தினமும் தனக்குள் மனனம் செய்தாள். அவன் வழக்கம் போலதான் பேசினான். அவனுக்குள் இருந்த காதல் அவனின் விழிகளில் தெரிந்தாலும் அதை அவள் கண்டுக் கொள்ளாமல் அவனை வெறுத்தாள்.

அவனிடம் தன் தன்மானம் தோற்றுவிடக் கூடாது என்ற ஒரே ஒரு காரணத்திற்காகவே முத்தமிழுக்கு திருமண சம்மதம் சொன்னாள். ஆனால் அதையும் புவனா வந்து தடுத்து விட்டாள்.

இன்று அவன் முத்தம் தந்ததை கூட ஏற்றுக் கொள்ள முடியாமல்தான் தன் உதட்டையே காயப்படுத்திக் கொண்டாள். ஆனால் இவன் மீண்டும் இவ்வளவு பெரிய தவறை செய்வான் என்று கனவில் கூட நினைக்கவில்லை அவள். அதை விட முக்கியமாக தனது ஒரு வார்த்தைக்காக இப்படி செய்ததுதான் அவளுக்கு ரணத்தை தந்து விட்டது.

அவனின் வாழ்க்கையே தன்னால் வீணாக போய்விட்டதை உணர்ந்தவளுக்கு இதயம் வலித்தது. அவனோடு தான் கொண்ட காதலை முன்பே சொல்லி இருந்தால் இந்த விசயம் இவ்வளவு தூரம் வந்திருக்காது, முக்கியமாக தான் தனது வெறுப்பை அவனிடம் காட்டாமல் இருந்திருந்தால் அவன் இப்படி தப்பானவனாக மாறி இருக்க மாட்டான் என்பதை நினைத்து நினைத்து உள்ளம் நொந்துப் போனாள்.

"தப்பு பண்ணிட்டேன் தயா.." கன்னங்களை துடைத்துக் கொண்டே நிமிர்ந்தபடி சொன்னாள் மதுமிதா.

தயாளன் அலட்சியமாக ஒரு பார்வையை அவள் மீது வீசினான்.

"லவ் யூ.. ரொம்ப லவ் பண்றேன்.. ஏதோ ஒரு ஈகோ.. ஆனா இது இவ்வளவு தூரம் இழுத்துட்டு வரும்ன்னு நான் நினைக்கவே இல்ல தயா.. ரியலி சாரி.. ஐ லவ் யூ.." என்றாள்.

கசந்து சிரித்தான் எதிரில் இருந்தவன்.

"உங்க காதலை ஏத்துக்க முடியாத ஒரு நிலையில் இருக்கேன் மேடம்.. தயவு செஞ்சி போங்க.. போய் உங்க உதட்டை ஆசிட் ஊத்தி கழுவிக்கோங்க.. அப்பதான் இந்த தீட்டு விட்டுப் போகும்.." என்றான் ஒரு மாதிரி குரலில்.

"சாரி தயா.." என்ற மதுமிதா தன் உதட்டை கடைசி தடவையாக துடைத்துக் கொண்டாள்.

"நான் பண்ணது தப்புதான்.. ஆனா அதுக்காக நீ எனக்கு தந்த தண்டனை ரொம்ப அதிகம்.. நீ எனக்கு தந்த வலியோடு நான் இவ்வளவு நாள் நார்மலா வாழ்ந்ததே பெரிய விசயம்.. உன்னை எந்த அளவுக்கு வெறுக்கறேன்னும் உனக்கு புரியாது. உன்னை எந்த அளவுக்கு காதலிக்கிறேன்னும் உனக்கு தெரியாது.. எல்லாத்துக்கும் மன்னிச்சிடு.." என்றவள் அழுத கண்களோடு அங்கிருந்து திரும்பி நடந்தாள்.

தயாளன் அவளின் முதுகை வெறித்தான். புவனா அவனை முறைத்தாள். அவனை புவனா எட்டி உதைக்க முயன்ற நேரத்தில் சட்டென்று அவளை தன் பக்கம் பிடித்து இழுத்தான் முத்தமிழ்.

"இந்த முறையாவது காப்பாத்தணும்ன்னு மனசு வந்ததே.. நல்லா இருடா.." என்றான் தயாளன் நண்பனிடம்.

"மாமா என்னை விடுங்க.. நான் இவன் குடலை உருவிடுறேன்.." என்று துள்ளினாள் புவனா. முத்தமிழ் அவளை பிடித்து வைக்க இருந்த நேரத்தில் காவலர் ஒருவர் வந்து தயாளனின் அறை கதவை திறந்து விட்டார்.

"அப்பா சாமி.. உன் டிராமை இனியும் இங்கே நடத்தாத.. மரியாதையா வெளியே கிளம்பு.." என்றார்.

ஐந்தாறு தாண்டி நடந்து விட்ட மதுமிதா குழப்பத்தோடு திரும்பிப் பார்த்தாள்.

"என்ன சார் சொல்றிங்க.? நான் ஒரு ரேப்பிஸ்ட்.. என்னை கோர்ட்ல நிறுத்தி தூக்கு தண்டனை வாங்கிக் கொடுங்க.." என்றான் தயாளன்.

"நீ செட்அப் பண்ண ஜூனியர் ஆர்டிஸ்ட் டாக்டருக்கு பயந்து உண்மையை சொல்லிட்டா.. இது போலிஸ் ஸ்டேஷன்.. நாடக கொட்டகை இல்ல.. பார்க்க பாவமா இருக்கியேன்னு உன் நாடகத்தை நீ நடத்துவதைப் பார்த்தும் இவ்வளவு நேரம் அமைதியா விட்டுட்டோம். இனி முடியாது.. வெளியே கிளம்பு.." என்றவர் அவனின் சட்டை காலரை பற்றி வெளியே இழுத்து விட்டார்.

"சார் நான் நிஜமாவே ஒரு பொண்ணை ரேப் பண்ணிட்டேன்.. என்னை ஜெயில்ல தள்ளினா‌ உங்களுக்கு ப்ரமோசன் கிடைக்கும்‌.." என்றவனை முறைத்தார் அவர்.

"கொஞ்சமாவது சென்ஸோடு பேசுடா தம்பி.. ரேப் கேஸ்ல பாதிக்கப்பட்ட பொண்ணை டாக்டர் செக்அப் கூட பண்ணாம உனக்கு தண்டனை வாங்கி தருவோம்ன்னு நினைச்ச உன்னோட இந்த மூளையை வச்சி எப்படிதான் நீயெல்லாம் இன்ஜினியரிங் பாஸ் பண்ணியோ.? போடா போடா.. போய் பொழப்பைப் பாருடா. எங்களையும் பொழப்பை பார்க்க விடுடா.." என்றார்.

தயாளனை அதிர்ச்சி குறையாமல் பார்த்தனர் நண்பர்கள் இருவரும்.

"அட பொய்க்கார பக்கி.. சும்மாவே மது அக்காவை அழ வச்சியா.. உன்னை.‌." என்ற புவனா சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு அருகே இருந்த டேபிளில் இருந்த லத்தியை எடுத்துக் கொண்டு அவனை நோக்கி பாய்ந்தாள். முத்தமிழ் அவளை சட்டென்று தன்னோடு இழுத்துக் கொண்டான்.

"அவனை பொலி போடணும்.. நீங்க விடுங்க மாமா.." என்று துள்ளியவளின் காதோரம் குனிந்த முத்தமிழ் "அமைதியா இரு கழுதை.." என்றான் எச்சரிக்கும் விதமாக.

மதுமிதா தனக்கு செய்த உதவிக்கு நன்றிக்கடன் கூட செலுத்த முடியவில்லையே என்று கவலைக் கொண்டாள் புவனா.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே..
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN