மணாளனின் மனம் 21

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
காவல் துறையினர் தயாளனை கழுத்தைப் பிடித்துத் தள்ளாத குறையாக வெளியே அனுப்பி வைத்தனர்.

"சார்.. ப்ளீஸ் சார் என்னை ஜெயில்ல போடுங்க.." என்று கெஞ்சியவனை முறைப்போடு பார்த்தார் அந்த ஸ்டேசனின் சப் இன்ஸ்பெக்டர்.

"டேய் மரியாதையா போயிடு.. இல்லன்னா எங்க டியூட்டியை ஒழுங்கா செய்ய விடமாட்டேங்கிறன்னு கேஸ் எழுதி உள்ளே போட்டுடுவோம்.." என்று எச்சரித்தார்.

"அப்படியாவது உள்ளே போடுங்க சார்.." கெஞ்சலாக கேட்ட தயாளனை பற்களை கடித்தபடி முறைத்தனர் நண்பர்கள்.

இது வேலைக்கு ஆகாது என்பதை புரிந்துக் கொண்ட சப் இன்ஸ்பெக்டர் புவனாவின் பக்கம் திரும்பினார். "ஏம்மா குட்ட பாப்பா.. அந்த பையனை இங்கிருந்து கூட்டிப் போம்மா.. கொண்டுப் போய் நல்ல மெண்டல் ஹாஸ்பிட்டல்லா பார்த்து சேர்த்து விடும்மா.." என்றார்.

தயாளன் கடுப்போடு அந்த சப் இன்ஸ்பெக்டரை பார்த்தான்.

புவனா தயாளனை பார்த்துவிட்டு கணவன் புறம் பார்த்தாள்.

"அமைதியா வாடா தயா.." என்று அவனை தன்னோடு இழுத்தான் சத்யா.

தயாளன் மதுமிதாவை பார்த்தான். மதுமிதா காய்ந்த கண்ணீரோடு அவனை ஏக்கமாக பார்த்தாள். சத்யாவின் கையை உதறிய தயாளன் தார் சாலையில் இறங்கி நடந்தான்.

"அவன் வீட்டுக்கு போறான்னு நினைக்கிறேன்.." என்று சத்யா சொன்ன நேரத்தில் தயாளனின் பின்னால் ஓடினாள் மதுமிதா.

"அக்கா பாவம்.." என்று சொன்னபடி மதுமிதாவின் பின்னால் ஓடி இருந்த புவனாவை சட்டென்று கைப்பிடித்து நிறுத்தினான் முத்தமிழ்.

"அவ ஒன்னும் குழந்தை இல்ல.. வா போகலாம்.." என்றான் கடுகடுத்த குரலில்.

சத்யா தான் வந்த காரிலேயே கிளம்பினான்.

அவனிடம் தாங்கள் வீட்டுக்கு செல்வதாக சொன்ன முத்தமிழ் பைக்கை ஸ்டார்ட் செய்தான். புவனா அமைதியாக ஏறிக் கொண்டாள். மதுமிதாவின் அழுத முகம் அவளுக்கு கவலையை தந்தது.

"பாவம் மது அக்கா.. ஏன் மாமா இந்த ஆம்பளைங்களே எல்லோரும் இப்படி இருக்காங்க.?" என்றாள் அவனின் பின்னந்தலையை பார்த்தபடி.

முத்தமிழுக்கு கோபம் வெடித்து சிதறும் அளவுக்கு இருந்தது‌. கட்டுப்படுத்திக் கொண்ட மனநிலையோடு பைக்கை ஓட்டினான்.

"மது அக்கா எவ்வளவு லவ் பண்றாங்க.. அந்த அண்ணா அவங்களை புரிஞ்சிக்கவே இல்ல.. தப்பு மேல தப்பா செஞ்சி அந்த அக்காவைதான் கஷ்டப்படுத்தி இருக்காரு.." புவனா பேசி முடித்ததும் பைக்கை நிறுத்தினான் முத்தமிழ்.

"மத்தவங்களை சொல்லும் முன்னாடி நீ யோக்கியமான்னு பாரு புவனா.. இன்னைக்கு தயாளன் என்ன தப்பை பண்ணானோ அதே போலதான் அன்னைக்கு நீயும் ஒரு தப்பை பண்ண.. மதுமிதா பாவம்ன்னு நினைச்ச நீ நான் எவ்வளவு பாவம்ன்னு ஒரு தடவையாவது நினைச்சி பார்த்தியா.?" என்றான்.

புவனா குழப்பத்தோடு அவனைப் பார்த்தாள். அதுவும் இதுவும் எப்படி ஒன்றாகும் என்று யோசித்து குழம்பினாள். முத்தமிழ் என்னவோ சொல்கிறான் என்று புரிந்தது. ஆனால் அர்த்தம்தான் விளங்கவில்லை.

"ஆனா தயா அண்ணன் போல நான் உங்க மனசை உடைக்கலையே.." என்றாள். இதை தவிர வேறு என்ன கேட்பதென்று அவளுக்கு விளங்கவில்லை.

"நீயா சொல்லாத அதை.. நீ பண்ண டேமேஜ் என்னன்னு உனக்கு எப்பவும் புரியாது.. ஏனா உன் மரமண்டை அப்படிப்பட்டது.." என்றவன் அவளிடம் அறிவிக்காமல் திடீரென்று பைக்கை கிளப்பினான். வண்டி திடீரென்று நகரவும் பயத்தில் அவனை அணைத்துக் கொண்டவள் 'என்னவோ பண்ணிட்டேன் போல.. ஆனா என்னவா இருக்கும்.? ஒருவேளை நான் விதைச்ச கடலையெல்லாம் முளைக்காம போயிருக்குமோ.? இல்லன்னா ஆபிஸ்ல எதையாவது மாத்தி எழுதி தந்துட்டேனா.?' என்று யோசித்துக் குழம்பினாள். குழப்பத்தில் அவளுக்கு இதயம் திக் திக் என்று துடித்தது.

தயாளனை பின்தொடர்ந்து ஓடிக் கொண்டிருந்தாள் மதுமிதா. சாலையில் இருந்தவர்கள் அவளை வித்தியாசமாக பார்த்தனர்.

"தயா நில்லு‌‌.." என்று அழைத்தாள்.

ஆனால் அவன் திரும்பியும் பார்க்காமல் நடந்துக் கொண்டிருந்தான்.

"தயா ப்ளீஸ்.." என்று கெஞ்சினாள்.

"என் பின்னாடி வராத மது.. பயங்கர வெறியில் இருக்கேன். உனக்குதான் ஆபத்தாகும். தயவுசெஞ்சி என்னை தனியா விட்டுட்டு போ.." திரும்பிப் பார்க்காமல் எச்சரித்தான்.

"சாரி தயா.." என்றவளை திரும்பிப் பார்த்தான்.

ஓட்டமும் நடையுமாக அவன் பின்னால் ஓடிக் கொண்டிருந்தவள் அவன் சட்டென திரும்பியதால் சுதாரிக்க முடியாமல், பின்னால் நகரவும் முடியாமல் தடுமாறி நின்றாள்.

"நடு ரோட்டுல சீன் வேணாம் மது.. நான் ஒரு ப்ளேபாய்.. நான் ஒரு பொம்பளை பொறுக்கி. நான் ரேப்பிஸ்ட்.. நான் தொட்டா கூட அது பாவ கணக்கு.. அதனால என்னை விட்டுட்டு போய் தொலை.. ஐ டோன்ட் வான்ட் யூ.." என்று சீறிவிட்டு திரும்பினான். அவன் நடக்கும் முன் அவனின் கையை பற்றினாள் மதுமிதா.

"சாரி.. ஆயிரம் முறை சாரி.. உன்னை ப்ளேபாய்ன்னு சொன்னது தப்புதான்.. உன்னை பொம்பளை பொறுக்கின்று நம்பியது தப்புதான்.. இனி அப்படி தப்பு பண்ண மாட்டேன்.. நான் உன்னை முழுசா நம்புறேன்.." என்றாள்.

அவளின் கையை தன் கையிலிருந்து விடுவித்தான் அவன்.

"காலம் கடந்த பிறகு கிடைக்கும் நம்பிக்கையும் வேணாம்.. என் மனசு முழுசா உடைஞ்ச பிறகு பிச்சையா கிடைக்கும் உன் காதலும் வேணாம்.. நான் நிஜமாவே ப்ளேபாய்தான்.. இதுவரை அறுபது பேரோடு படுத்திருக்கேன்.." என்றவாறு அவளின் கையை கீழே விட்டான்.

"நீ சொல்றது எவ்வளவு தெரியுமா வலிக்குது.? நீ பொய்தான் சொல்றன்னு தெரிஞ்சும் கூட வலிக்குது தயா.." என்றாள் புறங்கையால் கன்னத்தை துடைத்தபடி.

"நான் பொய் சொல்லல.. ஐயம் எ ப்ளேபாய்.." என்றான் சிரித்தபடி. அந்த சிரிப்பு அவளுக்கு தந்த வலிகள் அதிகம்.

"அதுதான் சாரி சொல்லிட்டேன் இல்ல.. அப்புறமும் ஏன் சாகடிக்கற.?" மூக்கை உறிஞ்சியபடி கேட்டாள்.

"உன் சாரியும் வேணாம்.. வேற எதுவும் வேணாம்ன்னு முன்னதானே சொன்னேன்.?" என்றவன் அருகே இருந்த பேருந்து நிறுத்தத்தை வந்தடைந்தான்.

மாலை வேளை. ஆனால் இன்னும் மாணவர்களும், அலுவலகவாசிகளும் தங்களின் படிப்பு வேலையை விட்டு திரும்ப இன்னும் அரை மணி நேரம் இருந்த காரணத்தால் பயணிகள் அதிகமின்றி ஓடிக் கொண்டிருந்தன பேருந்துகள்.

தயாளன் பேருந்து ஒன்றில் ஏறி அமர்ந்ததும் அவனின் அருகே வந்து அமர்ந்தாள் மதுமிதா.

"உனக்கு உட்கார கூட வேற சீட் கிடைக்கலையா.? போய் தொலை அந்த பக்கம்.." என்றான் எரிச்சலாக.

"நான் விலகிப் போனா நீ துரத்துவ.. நான் நெருங்கி வந்தா என்னை துரத்துறியா.?" வருத்தமாக கேட்டாள் மதுமிதா.

"எனக்கு ரொம்ப கடுப்பா இருக்கு மது.. தயவுசெஞ்சி விட்டு போ.." கடைசியில் தன் முழு கோபத்தையும் விட்டுவிட்டு பொறுமையான குரலில் சொன்னான்.

"உன்னை விட்டுப் போனா செத்துப் போவேன்.." என்றவளை எரிச்சலோடு பார்த்தவன் "இவ்வளவு நாள் நான் செத்தேன் இல்ல.? கொஞ்ச நாளைக்கு நீயும் சாவு போ.." என்றான்.

வீட்டின் முன்னால் பைக்கை நிறுத்தினான் முத்தமிழ்.

"வீடு வந்துடுச்சி.. இறங்கு.." என்றான்.

புவனா அவசரமாக அவனை விட்டுவிட்டு கீழே இறங்கினாள்.

யசோதாவும் பாட்டியும் சீரியல் பார்த்துக் கொண்டிருந்தார்கள். இவர்களை கண்டு திரும்பிம யசோதா "அதுக்குள்ள வேலை முடிஞ்சிடுச்சா.?" எனக் கேட்டாள்.

தயா, மதுவை பற்றி புவனா சொல்ல இருந்த நேரத்தில் "ம்.." என்ற ஒற்றை மொழியோடு அவர்களை தாண்டி நடந்தான் முத்தமிழ்.

புவனா அத்தையை பார்த்து புன்னகைத்துவிட்டு கணவனை பின்தொடர்ந்தாள்.

"நான் என்ன மாமா தப்பு பண்ணேன்.?" சட்டையை களைந்துக் கொண்டிருந்தவனிடம் ஆவலாக கேட்டாள்.

முத்தமிழ் அவளை மேலும் கீழுமாக பார்த்தான். "நிஜமா உனக்கு புரியலையா.? நீ விஷம் குடிச்சது உன்னைச் சுத்தி இருந்த யாருக்குமே வலியை தந்திருக்காதுன்னு நினைக்கிறியா.? இன்னைக்கு தயா செஞ்ச தப்பு பெரிய மேட்டரே கிடையாது. ஆனா நீ மட்டும் அப்ப செத்திருந்தா அது மூலம் நாங்க எத்தனை பேர் பாதிக்கப்பட்டிருப்போம் தெரியுமா.?" அவன் சீற்றமாக கேட்கவும் ஓரடி பின்னால் தள்ளி நின்றாள் புவனா.

வழக்கம் போல புவனாவை குற்ற உணர்வு ஆட்கொண்டது. 'எல்லோரும் இதையேதான் சொல்லி திட்டுகிறார்கள்' என்று மனம் வாடியவள் ' ஏன்தான் கேட்டோமோ.?' என்ற எண்ணத்தோடு வெளியே நடந்தாள். இரவு வரையிலும் அவள் முத்தமிழை தொந்தரவு செய்யவில்லை.

முத்தமிழ் அடங்காத கோபத்தோடு இருந்தான். நடந்த தவறுகளுக்கு காரணம் மதுமிதாதான் என்று தயாளன் குற்றம் சாட்டியது இவனுக்கு எரிச்சலை தந்தது. அதே போல் ஒரு குற்றச்சாட்டைதான் மருத்துவர் மங்கையும் சாட்டியிருந்தாள். புவனாவும் அதையே சொல்லி விட்டால் என்ன செய்வது என்று யோசித்து கடுப்பானான்.

தயாளன் செய்த தவறுக்கெல்லாம் காரணம் அவனின் திமிர்தானே தவிர மதுமிதா கிடையாது என்று யாராவது சொல்லியிருந்தால் இவனுக்கும் மனம் குளிர்ந்திருக்கும்.

புவனா யோசனையோடே இருந்தாள். முத்தமிழ் சொன்னதையே நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். தனது தற்கொலை முயற்சி அவனை கஷ்டப்படுத்தியிருக்கிறது என்ற விசயம் அவளுக்கும் கவலையை தந்தது.

முத்தமிழ் இரவை வெறித்தபடி நின்றிருந்தான்.

"மிஸ்டர் முத்தமிழ்.. இங்கே விசயம் ரொம்ப எளிமையானது. அந்த பொண்ணை நீங்க விரும்பியிருந்தா அதை சொல்லியிருக்கணும். அப்படியிருந்திருந்தா அந்த பொண்ணு தற்கொலை முயற்சி பண்ணியிருக்காது. நீங்க அந்த பொண்ணை லவ் பண்ணலன்னா அந்த பொண்ணு தற்கொலை முயற்சி பண்ணிக்கிட்டது உங்களுக்கு வலியை தந்திருக்காது. யாரோ திமிரெடுத்து விஷம் குடிச்சா உங்களுக்கு உள்ளம் உடைய வேண்டிய அவசியமே கிடையாது. ரோட்டுல யாராவது செத்தே கிடந்தாலும் அந்த பிணத்தை பார்த்தா பரிதாபம்தான் வருமே தவிர 'அச்சோ விட்டுட்டு போயிட்டாங்களே. இனி இவங்க இல்லாம நாம எப்படி வாழ்வோம்'ன்னு பதட்டமும் பயமும் வராது.. ஏனா அவங்களுக்கும் உங்களுக்கும் நடுவுல எந்த சம்பந்தமும் கிடையாது.. இந்த பொண்ணும் கூட உங்களுக்கு அப்படிதான்.." மங்கை சொன்னது அவனின் காதுகளுக்குள் எதிரொலித்துக் கொண்டிருந்தது.

ஜன்னலின் கம்பிகளில் தலையை முட்டினான்.

'நானும்தான் அவளை லவ் பண்ணேன்.. ஆரம்பத்துல இருந்தே விழுந்துட்டு இருந்திருக்கேன்.. அவ சுத்தி வரும்போதெல்லாம் என்னையறியாமலேயே கெத்தா பீல் பண்ணி இருக்கேன்.. அவளோட பிடிவாதம், ஸ்டால்கிங், திமிர் எல்லாத்தையுமே லவ் பண்ணேன்.. ஆனா சொல்ல முடியல.. பயமா இருந்தது. ஒருதலைக் காதலுக்கே அவ்வளவு ரிஸ்க் எடுக்கறவ காதல் இருபக்கமும்ன்னு ஆன பிறகு என்னை எவ்வளவு சீக்கிரத்தில் சாய்ப்பான்னு நினைச்சி பயமா இருந்தது. என் தங்கச்சியை போல, என் நண்பனை போல சூடு சொரணை இல்லாதவனா இருக்க எனக்கு சுத்தமா ஆசையில்ல‌‌.. என் லைப்பை நானே முழுசா கன்ட்ரோல் பண்ண ஆசைப்பட்டேன். அதுக்காகவே அவளை ஒதுக்கி வச்சேன். ஆனா அவ அப்படி ஒரு காரியம் செய்வான்னு நான் கனவுல கூட நினைச்சி பார்க்கல.. தற்கொலை பண்ணிக்க முயற்சி செய்வான்னு நொடி நேரம் கூட நினைக்கல.. அவ விஷம் குடிச்சான்னு தெரிஞ்ச அடுத்த செகண்டே உள்ளுக்குள்ள செத்துட்டேன். அவ நிஜமாவே என்னை விட்டுட்டு போயிடுவாளோன்னு ரொம்ப பயந்துட்டேன்.. அவ எழாம போயிட்டா என் லைப்பே அத்தோடு முடிஞ்சிடும்ன்னு தோணிடுச்சி.. அவ இல்லாம, அவளோட டார்ச்சர் இல்லாம என்னால வாழவே முடியாதுன்னு அப்போதான் புரிஞ்சது.. ஆனா அதுக்காக அவக்கிட்ட என் காதலை என்னால ஒத்துக்க முடியாது. அவ செஞ்ச தப்பு மன்னிக்க கூடியது கிடையாது. அவ எதுக்காக விஷம் குடிச்சாளோ அது அவளுக்கு கடைசி வரையிலும் கிடைக்காது. ஏனா உயிரை தந்து வாங்க காதல் ஒன்னும் பண்டமாற்று கிடையாது..' தனக்குள் தானே சொல்லினான்.

மேகம் மறைத்திருந்த நிலா மெள்ள வெளியே தென்பட்டது. அவனின் இதயத்தின் காயம் புவனாவை நினைக்க நினைக்க ஆழமாகிக் கொண்டிருந்தது.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN