மணாளனின் மனம் 22

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
ஒரு வாரம் முடிந்துவிட்டது.

புவனாவை கண்டும் காணாமல் இருந்தான் முத்தமிழ். அவள் தன் அருகில் இருக்க வேண்டினான். ஆனால் புன்னகைக்க மறுத்தான்.

இடையில் இரண்டு நாட்கள் நன்றாக இருந்தவனுக்கு இப்போது என்ன வந்தது என்று குழம்பினாள் புவனா.

அந்த இரண்டு நாளும் இயல்பாக அவளிடம் விழுந்துக் கொண்டிருந்தான் முத்தமிழ். ஆனால் மருத்துவர் மங்கையின் குற்றச்சாட்டும், தயாளன் மதுமிதாவின் மீது கூறிய குற்றச்சாட்டும் இவனை நேரடியாக தாக்கி விட்டது. பழைய குருடி கதவை திறடி எனும் கணக்காக மீண்டும் முருங்கை மரம் ஏறி விட்டது அவனின் மனம்.

புவனா அவனின் விலகலை அவ்வளவாக கண்டுக் கொள்ளவில்லை. அவனின் அருகில் இருப்பதே மகிழ்ச்சியாக இருந்தது.

மதுமிதாவும், தயாளனும் ஒரு வாரமாக அலுவலகம் வரவில்லை. தயாளன் வராததால் வேலைகள் அப்படியே நின்றுக் கொண்டிருந்தன. அவன் வந்து மின்சாரம் சம்பந்தமான வேலைகளை முடித்து தந்தால்தான் இவர்களால் அடுத்த வேலைகளை செய்ய முடியும். தயாளனுக்கு கீழ் வேலை செய்து கொண்டிருந்தவர்களோ "சாருக்குதான் தெரியும், சார்க்கிட்டதான் கேட்கணும்.." என்று சாக்கு ஓட்டிக் கொண்டிருந்தார்கள்.

தயாளனுக்கு போன் செய்தால் மதுமிதா போனை எடுத்து "அவன் உறங்கிக் கொண்டிருக்கிறான்.." என்று சொன்னாள்.

அவளுக்கு போன் செய்தாலோ அவன் போனை எடுத்து "உங்களுக்கு என்னடா பிரச்சனை.? நானும் அவளும் பத்து நாளைக்கு லீவ்‌.. இன்னொரு முறை தேவையில்லாம போன் பண்ணா நடக்கறதே வேற.." என்று கத்தினான்.

"ச்சே.. இதுங்க லவ் பண்றதுக்கு நமக்கு வேலை கெடுது.. ஆனாலும் இவன் கொஞ்சம் ஓவர்தான்.." என்று சலித்துக் கொண்டான் சத்யா.

"என்ன கருமம் பிடிச்ச லவ்வோ.? அவன் தன்னை ஒரு ப்ளேபாய்ன்னு சொன்ன பிறகும் அவனை ஏத்துக்கிட்டு இருந்திருக்கா இந்த மதுமிதா.. அவ மேல ரொம்ப நம்பிக்கை வச்சிருந்தேன் நான்.. ஆனா ரொம்ப மோசமா பல்டி அடிச்சிட்டா.." என்று முத்தமிழ் ஒரு பக்கம் சோக மடல் வாசித்தான்.

"மது அக்காவை ஏன் தப்பு சொல்றிங்க.? அவங்க காதல் அவங்களோடது.. காதலிச்சாதான் சில பீலிங்க்ஸெல்லாம் புரியும்.." என்றாள் புவனா.

"கண்ட இடத்திலயும் மேஞ்சிட்டு வந்தவனை ஏத்தக்கறதெல்லாம் லவ்வா.? கர்மம்.!" என்று நினைத்துப் பார்த்துவிட்டு நெற்றியில் அடித்துக் கொண்டான்.

புவனா அவனை முறைத்தாள்.

"அவர் ப்ளேபாய் இல்லன்னு அந்த அக்கா நம்புறாங்க.! உங்களுக்கு ஏன் வேகுது.? ஒருவேளை மது அக்காவுக்கு இன்னமும் ரூட் விட்டுட்டு இருக்கிங்களா.?" என்றுக் கேட்டாள்.

விழிகளை சுழற்றி அவளை முறைத்தவன் "அது ஒன்னேதான் குறைச்சல்.. போய் வேலையைப் பாரு சோம்பேறி.." என்று அவளை திட்டி அனுப்பினான்.

மதிய உணவு உண்ணும்போதும் அவர்களின் பேசுப்பொருள் தயா, மதுவாகவே இருந்தது.

"அவன் இவளை உண்மையா லவ் பண்றான்னு நினைக்கிறேன்.. ஆனா இவதான் லஸ்ட்ல மன்னிச்சி விட்டுட்டான்னு நினைக்கிறேன்.." புவனா இருப்பதை கவனிக்காமல் நெஞ்சின் சந்தேகத்தை சொல்லி விட்டான் சத்யா.

உணவில் கலந்திருந்த பச்சை மிளகாயை கடித்து மென்ற முத்தமிழ் இடம் வலமாக தலையசைத்தான்.

"இரண்டு பேருமே அந்த காரணத்துக்காக மட்டும்தான் லவ் பண்ணி இருப்பாங்க.. இல்லன்னா ப்ளேபாய்ன்னு தெரிஞ்சும் எந்த பொண்ணாவது லவ் பண்ணுவாளா.? இல்ல எவனாவதுதான் தன்னை செருப்பால அடிச்ச பொண்ணை, தானும் செருப்பால அடிச்ச பொண்ணை லவ் பண்ணுவானா.? தேய் வான்ட் செக்ஸ்.. அதுக்காக காதல் கத்திரிக்கான்னு உளறிட்டு இருக்காங்க.. நீ வேணா பாரு.. இரண்டு பேரும் இன்னும் ஆறு மாசத்துல பிரேக்அப் பண்ணிப்பாங்க.." தன் அருகில் அமர்ந்திருந்த மனைவியை பற்றி நினையாது அவனும் தன் மனதில் உள்ளதை நண்பனை பார்த்தே சொல்லி முடித்து விட்டான்.

சத்யா ஆமென தலையசைத்த நேரத்தில் இருவருக்கும் இடையில் அமர்ந்திருந்த புவனா மௌனமாய் எழுந்து நின்றாள். நிழல் ஆடிய பிறகே இருவரும் திரும்பி பார்த்தனர். அப்போதும் கூட தாங்கள் பேசியது புவனாவை பாதித்து இருக்கும் என்பதை உணரவில்லை.

அங்கிருந்து நகர்ந்த புவனாவை இடது கையால் பற்றி நிறுத்தினான் முத்தமிழ்.

"ஏன் கிளம்பிட்ட.?" என்றான். அவளின் உணவு அப்படியே இருந்தது.

"பசிக்கல மாமா.." என்றவளின் முகம் முன் எப்போதையும் விட அதிகமாக வாடிப் போயிருந்தது.

"உடம்பு சரியில்லையா புவனா.?"

"இல்ல மாமா.. நல்லாருக்கேன்.." என்றவள் அமைதியாக அவ்விடத்தை விட்டு நகர்ந்தாள்.

"இவளுக்கு என்ன வந்துச்சோ.? முன்னையெல்லாம் மதுவை கண்டா முறைப்பா.. இப்ப மதுவை கண்டா அக்கா அக்கான்னு உருகுறா.. இந்த உலகத்துலயே ரொம்ப டிபிகல்டான வேலைன்னா அது பொண்ணுங்களோட மனசை புரிஞ்சிக்கறதாதான் இருக்கும்.." என்றான் முத்தமிழ்.

சத்யா சிரிப்போடு ஆமென்று தலையசைத்தான்.

முத்தமிழ் தனது அறைக்கு வந்தபோது புவனா மேஜையில் தலை சாய்ந்துக் கவிழ்ந்துப் படுத்திருந்தாள்.

"புவனா.." அருகில் வந்தவன் அவளின் தோளை தொட்டான்.

எழுந்து அமர்ந்தவள் அவசரமாக தன் கண்களை துடைத்துக் கொண்டாள்.

அவளின் கண்ணீர் அதிசயம் போல தோன்றியது அவனுக்கு. மேஜையின் மீது ஏறி அமர்ந்தவன் "ஏன் அழற.?" எனக் கேட்டான்.

"மது அக்காவையும், தயா அண்ணாவையும் அவ்வளவு கேவலப்படுத்த வேண்டிய அவசியம் என்ன.?" என்றாள் சிறு கோபம் கலந்த குரலில்.

முத்தமிழ் அவளின் முகத்தை ஆராய்ந்தான். அவனுக்கு அவர்கள் இருவரும் நண்பர்கள். நண்பர்களை அனைத்து வித கோணத்திலும் பேசி விமர்சிக்க தங்களுக்கு மட்டுமே தகுதி உள்ளது என்று நினைப்பவன் அவன்.

"உனக்கேன் அவ மேல அவ்வளவு பாசம்.?" எனக் கேட்டவன் அவள் பதில் சொல்லும் முன் "மதுவும், தயாவும் என் பிரெண்ட்ஸ்.. நாங்க கலாய்க்கவும் சொல்லுவோம். மீன் பண்ணி கூட சொல்வோம்.‌. நீ இடையில வராத.." என்றான்.

மீண்டும் அன்னியனாகி போனவனை வருத்தம் மறைத்துக் கொண்டு பார்த்தவள் "என்னையும் அப்படிதான் நினைச்சிங்களா.?" என்றாள்.

புருவங்கள் யோசனையோடு முடிச்சிட்டது அவனுக்கு.

"லஸ்ட்காக மட்டும்தான் நானும் உங்க பின்னால் சுத்தி வந்தேன்னு சொல்லுவிங்களா.?" சிறு குரலில் கேட்டாள்.

"யாருக்கு தெரியும்.? நான் என்ன உன் மனசையா படிச்சேன்.?" என்று அவன் சொன்ன நொடியில் அவளின் இமைகளில் ஈரம் படர்ந்தது.

அவளை பார்த்து கேலியாக சிரித்தவன் "ஆமா அதை ஏன் இவ்வளவு சீரியஸா எடுத்துக்கற.? அது ஒன்னும் தப்பும் கூட இல்லையே.! லவ்வை விட லஸ்ட் நூறு பர்சண்ட் உண்மையானது.!"

உதட்டை கடித்துக் கொண்டு அவனை வெறித்தாள் புவனா. அவனை பார்த்து அவளுக்கு ஆசையே வந்தது இல்லையென்று சொன்னால் அது நிச்சயம் பொய்தான். ஆனால் அதையும் தாண்டி அவனின் இதயத்தை விரும்பினாள் அவள். அவனின் அருகாமையை, அவனின் மனைவி எனும் உரிமையை, அவனின் காதலுக்கு சொந்தக்காரி எனும் பதவியை அதிகம் விரும்பினாள்.

"உங்க தங்கச்சியும் கூட அதுக்காகத்தான் என் அண்ணனை லவ் பண்ணாளா.?"

பளீரென்று ஒரு அறை விழுந்தது அவளின் கன்னத்தில்.

முத்தமிழ் ஆத்திரத்தோடு அவளை முறைத்தான். கேள்விக்காக நிச்சயம் முறைப்பான் என்று எதிர்ப்பார்த்து இருந்தவள் அவனின் அறையை எதிர்ப்பார்க்கவில்லைதான்.

"உங்க தங்கச்சின்னா மட்டும் யோக்கியம்.. ஆனா‌‌.." அவள் மீதி சொல்லும் முன் அந்த மேஜையை விட்டு கீழிறங்கி விட்டான் முத்தமிழ்.

"உன் எல்லை என்னவோ அதோடு இரு புவனா.. என்னை பகைச்சிக்க நினைக்காத.. உன் லவ் அவ்வளவு உயர்ந்ததா இருந்தா மனசுலயே வச்சி உருகி சாக வேண்டியதுதானே.? ஏன் தற்கொலை பண்ணி என் லைப்பையும் சேர்த்து நாசம் செஞ்ச.?" என்றான் பற்களை கடித்தபடி.

புவனா அடிப்பட்ட கன்னத்தை பிடித்தபடி அவனை நிமிர்ந்துப் பார்த்தாள்.

"உங்க லைப்பை நான் நாசம் செய்யல.. கோபத்துல எதையாவது பேசி வைக்காதிங்க.. உங்களுக்கும் எனக்கும் நடுவுல சண்டை வர வேணாம்.." என்றவளை இளக்காரமாக பார்த்தான்.

"முதல்ல நீதான் ஆரம்பிச்ச.. இப்ப என் பக்கம் பழியை திருப்பி விடுற.. இதான் நீ.! உனக்கு தேவையானது கிடைக்கணும்ன்னா நீ எதை வேணாலும் செய்வ.!" என்றவன் அந்த அறையை விட்டு வெளியே நடந்தான்.

புவனாவின் விழிகளில் மீண்டும் கண்ணீர் துளிர்த்தது. இந்த ஒரு வாரத்தில் மிகவும் அன்னியமாகி போனவனை எப்படி பழைய காதலனாக பார்ப்பது என்று அவளுக்கு தெரியவில்லை.

தயாளன் படுக்கையிலிருந்து மெள்ள எழுந்து அமர்ந்தான்.

"அம்மா.." என்றுக் கத்தினான்.

சமையலறையிலிருந்து ஓடி வந்தாள் மதுமிதா. உணவு தட்டோடு அவன் முன்னால் வந்து அமர்ந்தவள் "இரண்டு வாய் சாப்பிட்டுக்கோ.. அப்பதான் டேப்ளட் சாப்பிட முடியும்.." என்றுவிட்டு உணவை பிசைந்து ஊட்டி விட்டாள்.

"கால் வலிக்குதுடி.." என்றான் உணவை உண்டபடியே.

அவனின் காலை கவலையோடு பார்த்தாள் மதுமிதா.

"ரொம்ப வலிக்குதா தயா.?" என்றாள் சோகமாக.

"எருமை..வலிக்காமலா இருக்கும் ராட்சசி.. ரொம்ப வலிக்குதுடி.." என்றான்.

ஒரு வாரம் முன்பு அவளோடு சண்டை போட்டபடியே பேருந்திலிருந்து இறங்கினான் தயாளன். மதுமிதாவும் அவனை பின்தொடர்ந்து ஓடி வந்தாள். அவனின் அறை மூன்றடுக்கு மாடி வீட்டின் இரண்டாம் தளத்தில் இருந்தது. அவனுக்கும் முன்னால் படிகளில் ஏறிய மதுமிதா "சாரி சொன்னா ஏத்துக்க தயா..‌" என்றாள் கொஞ்சலும் கெஞ்சலும் கலந்து.

"ஐ ஹேட் யூ.." என்பதை திருப்பி திருப்பி சொல்லிக் கொண்டிருந்தவன் அவளை தாண்டிக் கொண்டு படியேற இருந்த சமயத்தில் அவனின் காலே அவனை இடறி விட்டு விட்டது. படிகளில் உருண்டு புரண்டு கீழே வந்து விழுந்தான். காலில் சின்னதாக அடிபட்டு விட்டது. மதுமிதா அவனை மருத்துவமனை அழைத்ததற்கு வரமாட்டேன் என்று வீம்பாக சொல்லிவிட்டு தன் வீட்டுக்குள் நுழைந்துக் கொண்டான். மதுமிதா அவனை அழைத்துப் பார்த்துவிட்டு தன் வீட்டிற்கு சென்று விட்டாள். ஆனால் அடுத்த இரண்டு மணி நேரத்தில் அவனே போன் செய்தான்.

மதுமிதா வந்து பார்த்தபோது அவனின் கால் மும்மடங்கு வீங்கிப் போயிருந்தது. அவளே அவனை மருத்துவமனை அழைத்துச் சென்றாள்.

காலின் முட்டிக்கால் மூட்டு பிசகி விட்டதாகவும், சில நாட்களில் சரியாகிவிடும் என்றும் சிகிச்சை செய்து அனுப்பி வைத்தார்கள் மருத்துவர்கள்.

அவனை பார்த்துக் கொள்ள துணையாக இருப்பதாக சொல்லி அவளும் அவனோடு வீட்டில் தங்கி விட்டாள். இருவருக்குமே தனிமையுடன் கூடிய நேரம் தேவைப்பட்டது. நண்பர்களிடம் சொன்னால் தங்களின் தனிமையை களவாடி விடுவார்கள் என்று தனி தனியாக யோசித்தவர்கள் அதனாலேயே காலில் அடிப்பட்டதை பற்றி சொல்லாமல் விட்டு விட்டார்கள்.

மதுமிதா அவனை நன்றாக கவனித்துக் கொண்டாள். இருவரும் சில நேரங்களில் பாம்பாக சீறிக் கொண்டார்கள். சில நேரங்களில் மௌனத்தின் பிடியில் உறைந்து காதலை சொல்ல வார்த்தைகளை தேடிக் கொண்டிருந்தார்கள்.

அவள் அருகில் இருந்தால் கால் அதிகமாக வலித்தது அவனுக்கு. அவள் தொலைவில் சென்றால் அதை விட அதிகம் வலித்தது. இருவருக்கும் இன்னும் சமாதானம் ஆகவில்லை.

தயாளனுக்கு மாத்திரைகளை தந்துவிட்டு எழுந்தாள் மதுமிதா.

"இன்னும் நாலு நாள்ல முழுசா நல்லாகிடுவன்னு டாக்டர் சொல்லி இருக்காங்க.. நீ சும்மா கத்தாத.. யாராவது காதுல கேட்டா தப்பா நினைப்பாங்க.." என்றாள் மதுமிதா.

"வலிச்சா வலிக்குதுன்னுதான்டி சொல்வாங்க பைத்தியக்காரி.." பற்களை கடித்தபடி சொன்னவனின் தலையில் குட்டியவள் "என்னை அழ வச்ச இல்ல.. அதான் இப்படி.." என்று பழித்துக் காட்டி விட்டு நகர்ந்தாள்.

தலையை தேய்த்து விட்டுக் கொண்டான் தயாளன். "இவளையெல்லாம் ஏன்தான் பெத்தாங்களோ.? அதை விட முக்கியமா என் கண்ணுல ஏன்தான் விழுந்தாளோ.?" என்று முனகினான்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN