தகுந்த பாதுகாப்போடு மலை ஏறியதால்... சூழ இருந்தவர்களின் உதவியால் பெரிய பாதிப்பு இல்லாமல் வீட்டிற்கு வந்திருந்தான் குமரன்.
குமரன் அவன் அறையில் படுக்கையில் இருக்க... விஷயமறிந்து பதறி கணவனை நாடி வந்தாள் வள்ளி. காயம் பட்ட வலது கையை நெற்றியின் மேல் அண்டி கொடுத்து இவன் சயனித்திருக்க.. கணவனை அந்நிலையில் காணவும் இவளுக்கு கண்களில் குளம் கட்டியது. அவளின் விசும்பல் ஒலியில் இமைகளைப் பிரித்தவன்... “வந்திட்டியா...” என்றபடி இவன் எழுந்து அமர
வேதனையுடனும் எதிர்பார்ப்புடனும்... நிம்மதியுடனும் ஒலித்த கணவனின் குரலை உணராமல், “ஏன்... இப்படி.. பார்த்து கவனமா இருக்க மாட்டீங்களா... பாருங்க இப்போ எவ்வளவு கஷ்டம்..”
“எப்போதும் கவனமா தான் இருப்பேன்... அதுக்கான உடுப்புல கை உறையை சரியா மாட்டல போல.. கழண்டு விழுந்துடுச்சு.. இதுவரை இதுமாதிரி நடந்தது இல்ல.. கீழே கூட வலை கட்டியிருந்ததால... எதுவும் பெருசா பாதிப்பில்லை... மத்தபடி இந்த கை தான்...” அவளை சமாதானம் செய்ய இவன் விளக்கம் தர... அவன் குரலோ வலியில் நிறைந்திருந்தது. முகத்தில் வேதனையின் சாயல்.
“இன்னைக்குன்னு பார்த்து... கல்பனா அக்கா கூட நான் வெளியே போய்ட்டேன்... டாக்டர் கிட்ட போனீங்களா... மருந்து சாப்டீங்களா...”
மனைவியின் அக்கறையில், “எல்லாம் போய்ட்டு தான் வந்தேன்... நீ ஏன் இப்படி அழற... எனக்கு ஒண்ணுமில்ல... இன்னும் மருந்து எடுத்துக்கல...”
“ஏன்...”
“இன்னும் ஆகாரம் எடுத்துக்கல டி...”
கணவனின் பதிலில், “இன்னும் சாப்பிடலியா... இருங்க நான் போய் எடுத்துகிட்டு வரேன்...” என்றவள் வெளியே செல்ல எத்தனிக்க
“நான் குளிக்கணும்... மலை ஏறினது உடம்பு கசகசன்னு இருக்கு...”
“குளிங்க...”
“எப்படி...” தன் வலது கையை அவள் முன் நீட்டியவனின் குரலோ வேதனையைப் பிரதிபலித்தது.
“ச்சே... இதை நான் மறந்துட்டனே... இருங்க..” என்றவள் அவனின் சட்டை பட்டனைக் கழற்றி விட முற்பட...
“அதை நான் கழட்டிடுவேன்.. நீ கொஞ்சம் பேண்ட் பட்டன் மட்டும் கழட்டு...” அவன் என்னமோ இயல்பாய் தான் சொன்னான்.. இவளுக்கு தான் மூச்சடைத்தது. அந்தளவுக்கு மனதால் மனைவியை நெருங்கியிருந்தான் குமரன். மணிக்கட்டிலிருந்து விரல்களின் நுனிவரை அவனுக்கு காயம் ஏற்பட்டிருக்க... அவனால் சில வேலைகளை செய்ய முடியாத நிலை... இவள் லுங்கியை எடுத்து வந்து கணவனின் தலை வழியாய் இறக்கி அவன் இடுப்பில் கட்டிவிட...
“அப்படியே இந்த கைக்கு கொஞ்சம் கவர் கட்டி விடு வள்ளி.. நான் குளிச்சிட்டு வந்துடுறேன்...” கணவன் சொன்னதை செய்தவள்... அவன் பின்னே தானும் குளியல் அறைக்குள் நுழைய...
எதற்கு வருகிறாள் என்பதை யூகித்தவனோ... “நான் குளிச்சுகிறேன் நீ போ...” அவன் மனைவியை விரட்ட
“இல்ல.. இந்த கைய வச்சிகிட்டு நீங்க எப்படி... நான் ஊத்தி விடறேன்...” இதை சொல்லும்போதே அவளுக்கு திக்கியது.. இந்த அளவுக்கு கணவனிடம் அவள் நெருங்கியது இல்லையே..
அவள் முகத்தையே சில கணங்கள் கண்டவன், “கை வலியைப் பத்தி கூட யோசிக்காம.. இந்த நிமிஷமே உன்னை என் மனைவியா ஆளணும்னு... எனக்குள் ஒரு அலை புரளுது டி... அது பேரலையா மாறி உன்னையும் என்னையும் மூழ்கடிக்கறதுக்குள்ள நீ வெளியே போயிடு வள்ளி...” தாபத்துடன் அவனின் குரல் ஆழ்ந்து ஒலித்தது... ஏற்கனவே மனதால் அவளை நெருங்கி இருந்தவனுக்கு.. இன்று அவள் நான் என்ன உங்க மனைவியா என்று கேட்ட கேள்வியில்… அவளை ஆள வேண்டும் என்றே அவனுள் சுழன்றது… அதன் விளைவு தான் இவ்வார்த்தைகள்.
இமைகள் படபடக்க... இவள் ஒருவித அவஸ்தையுடன்... கணவனின் முகம் காண... அங்கே நான் சொன்னதை செய்தே தீருவேன்... என்பதை அவன் முகம் காட்டவும்... அவசரமாய்... தப்பித்தோம் பிழைத்தோம் என்ற நிலையில் வெளியே ஓடினாள் வள்ளி. பெரிய பெரிய மூச்சை எடுத்து தன்னை நிலைப்படுத்தியவளுக்கு... சற்று முன் கணவன் சொன்ன வார்த்தைகளை மறுபடியும் உருப்போட்டவளுக்கு அவளின் காது மடல்கள் எல்லாம் சூடானது.
குளித்து முடித்தவன்.. ஒரு கையால் இடுப்பிலிருந்த லுங்கியை பற்றிய படி வெளியே வர... அவனைக் கண்டவள் பின் எல்லாம் மறந்தவளாக... ஓடி சென்று கணவனுக்கு உதவ... தன் முகம் காணாமல் தன் வேலையே நிலை என செய்பவளின் முகத்தைக் காணவும் இவன் இதழில் ஒரு உல்லாச புன்னகை தவழ்ந்தது.
“ச்சே.. டேட் பார் ஆன சோப்பு போல... என்ன தான் தேய்ச்சு குளிச்சாலும்... நுரையும் வரல... வாசமும் இல்ல...” அவன் சலித்தபடி சொல்லவும் அதை உண்மை என்று நம்பியவள்..
“அப்படியா... எனக்கு ஒண்ணும் அப்படி தெரியலையேங்க...”
“அப்படியா... எங்க நீ தான் என்னைய வாசம் புடிச்சு பாரேன்... ஆமாவா இல்லையான்னு தெரியும்...” இவன் அப்பாவியாய் சொல்ல
அதையும் உண்மையென்று நம்பியவள்... கணவனின் கழுத்தையும்... தோளையும் துவாலையால் துடைத்துக் கொண்டிருந்த நிலையிலேயே அவனை நெருங்கி வாசம் பிடித்தவள், “இல்லையே எனக்கு என்னமோ... சோப்பு வாசமா இருக்கிற மாதிரி தானே தெரியுது...” இவள் அப்பாவியாய் பதில் தர... அதில் மென்மையாய் புன்னகைத்துக் கொண்டவன்...
“அப்படியா... எங்க என் கழுத்துக்கு கீழே... வாசம் இருக்கா பாரேன்...” காதல் கொண்டவனுக்கு மனைவி இன்னும் தன்னை நெருங்க வேண்டும் என்று ஆவல் பிறந்தது. அதுவே அவளை சீண்டிப் பார்க்கவும் வைத்தது. அதனால் இவன் சொல்ல... இந்த தத்தியும் அதை ஏற்று அவனை இன்னும் நெருங்கி... தன்னவனின் கழுத்து வளைவை நுகர...
ஒருவித மயக்கத்தில் இருந்தவனோ மனைவியின் இடையில் கையிட்டு தன்னுள் அவளை இறுக்கிக் கொண்டான். கணவனின் திடீர் தாக்குதலில் முதலில் வள்ளி அதிர்ந்தாள் என்றால் பின் அவன் கள்ளச்சிரிப்பில் மயங்கித்தான் போனாள்.
“என்னங்க இது விடுங்க...” இவள் சிணுங்க...
“கெட்டுப் போன சோப்பு ம்மா.. அதை செக் செய்யணும் தானே...” அவன் ராகத்தோடு சொல்ல...
“போதுமே...” இவள் புன்னகைக்க...
“எனக்கு போதாதே...” மன்னவன் சிணுங்க
அந்நேரம் கதவு தட்டப்படவும்... “அண்ணி தான்...” என்றவள் அவசரமாய் கணவனிடமிருந்து விலகி ஓடி சென்று கதவைத் திறக்க... உணவு தட்டுடன் உள்ளே நுழைந்தாள் மீனாட்சி.
“என்ன டா.. இப்படி செஞ்சு வச்சிருக்க...” தம்பியின் கரத்தைப் பார்த்து மறுபடியும் அவள் அழ... வள்ளிக்கும் கண்கள் கசங்கியது. பின் தமக்கையை சமாதானம் செய்து அனுப்பியவன்...
மனைவி புறம் திரும்பி, “சும்மா சும்மா.. எதுக்கு கண்ணுல தண்ணீ வைக்கிற... நான் உன்னைய அடிச்சதுக்கு... எனக்கு தகுந்த தண்டனை தான் கிடைச்சிருக்கு...” அவன் உணர்ந்து சொல்ல
“ப்ச்சு.. என்ன பேசுறீங்க... இப்படி எல்லாம் பேசாதீங்க.. எந்த கணவன் மனைவிக்குள்ள தான் சண்டையில்ல... அதுக்காக தண்டனை அது இதுன்னு பேசுவாங்களா...”
மனைவியின் பதிலில் அவளை நெருங்கியவன், “கஷ்ட காலத்தில்... மேலுக்கு ஊத்திக்கவும்... இடுப்புல லுங்கி கட்டவுமே.. என்னைய மாதிரி ஆண்களுக்கு.. பொண்டாட்டி தயவு தேவைப்படுது. இதிலே பொண்டாட்டிக்கு என்ன கொம்பா முளைச்சிருக்குன்னு வீராப்பா வேற கேட்டு வைக்கிறோம்....”
கணவன் குரலில் வருத்தத்தைக் கண்டவள், “ப்ச்சு... மனைவியின் கஷ்ட காலத்தில் கூட... கணவன் தான் தன்னவளைத் தாங்குவாங்க. இப்போ நீங்க சொன்னதை எல்லாம் செய்வாங்க. ஒருவருக்கு ஒருவர் என்று ஆன பிறகு இதெல்லாம் பெரிதேயில்லைங்க. அதே மாதிரி தான் கோபமும்... சண்டையும். வார்த்தை என்னும் வாள் வீச்சுக்குப் பிறகு... இருவரும் அன்பு என்னும் தூரிகையால் மருந்திட்டுக் கொள்வாங்க... அது தானே தாம்பத்தியம்” வள்ளி இதமாய் எடுத்துச் சொல்ல..
அவளையே காதல் பொங்க பார்த்தவன், “நான் அடிச்சது... உனக்கு வலிக்கலையா டி..”
“இல்லன்னு பொய் சொல்ல மாட்டேன்... இருந்தது... கன்னத்தை விட.. மனசுல வலி அதிகம். ஆனா நீங்க மன்னிப்புன்னு ஒரு மருந்தை உடனே தடவிட்டீங்களே.. அதனால.. அது போயிந்தி...” இவள் இயல்பாய் சொல்ல தன்னவள்பால் இன்னும் காதல் பெருகியது இவனுக்குள்.
மனைவியை அடித்து விட்டு இவன் வருந்தினான் என்றால்.... இவனின் வலியையும்... வேதனையையும் கண்டு அவள் அல்லவா துடிதுடித்துப் போனாள். அப்போ இது காதல் இல்லாமல் எப்படி சாத்தியம்... மனைவி சொன்ன தாம்பத்தியம் என்னும் வார்த்தையின் அர்த்தம் இவனுக்கு புரிந்தது... இருவரும் இன்னும் உடலால் தீண்டிக் கொள்ளவில்லை... ஆனால் மனதால் பிணைந்து விட்டார்களே...
“மாத்திரை வேற எடுத்துக்கணும்... சீக்கிரம் சாப்பிடுங்க...” தன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு தட்டிலிருந்த உணவைப் பிசைந்து... கணவன் முன் இவள் நீட்ட
அவனுக்குள் எதுவோ தடம் புரண்டது... அன்று மருத்துவமனையில் ‘உனக்கு நான் ஊட்டி விடணும்னு எதிர்பார்க்கறியா’ என்று கேட்டவன்.. அதே இன்று எந்தவித தயக்கமும் இல்லாமல் மனைவி ஊட்டி விட முன்வருகிறாள், அவனுடைய விழிகள் கலங்கியது. தமக்கைக்குப் பிறகு... தன்னையும் நேசிக்க ஒரு ஜீவன் இருக்கிறாளே... அதிலும் காதல் மனைவியாக... இதை விட அவனுக்கு என்ன வேண்டும்... வரம் பெற்று விட்டேன் என்று தான் அவனுக்கு ஆடத் தோன்றியது.
“சாப்பிடுங்க...” மனைவியின் குரலில் தன்னிலையில் இருந்து வெளியே வந்தவன்
“நாம சேர்ந்து வாழ்ந்த காலத்துல.. ஒருமுறையாவது நீ எனக்கு ஊட்டி விட்டிருக்கிறியா வள்ளி...” அதாவது, நாம் இருவரும் மணமாகி சேர்ந்து வாழ்ந்தோம் என்று தாம் சொன்ன பொய்யான.. வார்த்தையை வைத்து.. கணவன் உண்மை அறிய இப்படி கேட்கிறானோ என்ற பீதியில் இவள் அவன் முகம் காண… அவன் முகமோ விளையாட்டு பாவத்தில் இருந்தது.. அதில் நிம்மதியானவள்
கணவனின் திடீர் கேள்வியில்... திகைத்தவளாக, “ஒஹ்... ஒருமுறையா... இரண்டு முறையா... நூறு முறை உங்களுக்கு ஊட்டி விட்டிருக்கேன்...” பொய்யே என்றாலும் பெண்ணவளும் சமாளிக்க
தன்னவளின் சமாளிப்பை ரசித்தவன், “அப்போ நான் உனக்கு எத்தனை முறை ஊட்டி விட்டிருப்பேன்...” கணவனின் இந்த கேள்வியில் வெளிப்படையாய் அதிர்ந்தவள்... பின் முகம் சிவக்க தலையைத் தாழ்த்தியவள், “அதெல்லாம் கணக்கே இல்ல...” இவள் மெல்லிய குரலில் சொல்ல... அந்த குரலே இவனுக்கு காட்டிக் கொடுத்தது... தன்னவளின் கனவில் தான் தினந்தினம் வாழ்கிறேன் என்று.
“ஹும்ம்ம்... அப்போ நாம சண்டை கூட போட்டிருப்போம் இல்ல...”
“அது இல்லாமலா... அதெல்லாம் நிறைய...”
“அதுக்கும் கணக்கு இருக்கா...” இது கணவன்
“ஓ... இருக்கே... நீங்க ஆயிரம் தடவை... நான் லட்சம் தடவை...” அப்போதும் தானே சண்டையிடுவதில் வல்லவள் என்று மனைவி சொன்ன விதத்தில்... தற்போது பேசியது எல்லாம் நிஜத்தில் நடக்காதா என்று இவனுக்குள் ஒரு ஏக்கம் பிறந்தது. இயல்பான வாழ்வை நோக்கி அவன் மனது அவனையும் மீறி எட்டி வைத்தது.
“அப்போ ஐ லவ் யூ.. என்ற வார்த்தையை... நாம எத்தனை முறை சொல்லிகிட்டோம்..” அவன் அடுத்த கேள்வியைக் கேட்க
விதிர்விதிர்த்துப் போனாள் பெண்ணவள்... அவளையும் மீறி அவள் விழிகள் கலங்கியது... என்ன சொல்வாள் இதுவரை நாம் வாழ்ந்ததே இல்லை என்று சொல்வாளா... இப்படியான வார்த்தையில் நாம் காதலைப் பரிமாறிக் கொள்ள கொடுப்பினை வந்ததில்லை என்று சொல்வாளா... எல்லாம் தெரிந்தும் கணவன் தன்னை சீண்டுகிறான் என்று தெரிந்தும்... இதுவரை பதில் கொடுத்தவளால் தற்போது இந்த கேள்விக்கு பதில் தர முடியவில்லை.
அவள் கலங்கிய விழிகளைக் கண்டவன், “ப்ப்ச்சு... என்ன இது... கண்ணுல தண்ணீ வெக்க கூடாதுன்னு சொன்னேனா இல்லையா...” செல்லமாய் மிரட்டியவன், “அப்போ நான் ஒரு முறை கூட காதல் சொன்னது இல்லையா.. சரி இப்போ சொல்றேன்... க்கும்...” தொண்டையை சீர் செய்தவன்,
“ஐ லவ் யூ!
நான் உன்னைக் காதலிக்கிறேன்!
நேனு நின்னு பிரேமிஸ்துன்னானு!
மை தும்ஸே ப்யார் கர்த்தா ஹூன்!
ஞான் நின்னை ப்ரேமிக்கின்னு!
நான் நின்னா ப்ரீத்திஸ்தினி!
அப்பாடா.. எனக்கு தெரிஞ்ச எல்லா மொழியிலும் சொல்லிட்டேன்... யூ லவ் மீ...” இவன் காதலோடு அவளின் சம்மதத்தைக் கேட்க
பெண்ணவளின் மேனியில் சில்லென்று ஒரு நடுக்கம் ஊடுருவவும்... தட்டை மேசை மேல் வைத்தவள்... பின் ஓடி சென்று ஜன்னல் புறம் நின்று கொண்டாள்... தன்னவளின் முதுகு புறம் குலுங்குவதிலிருந்தே... அவள் அழுகிறாள் என்பது இவனுக்கு தெரிந்தது. அதில் எழுந்து சென்று பட்டும் படாமல் தன்னவளை நெருங்கியவன் அவள் காது மடல் உரச, “என் காதலை ஏத்துக்கிறது உனக்கு அவ்வளவு கஷ்டமா இருக்கா...” அவன் குரல் வேதனையோடு ஒலிக்கவும்... ஒரு கேவலுடன் திரும்பியவளோ தன்னவனின் நெஞ்சில் முகம் புதைத்துக் கொண்டாள் பெண்ணவள்.
“ப்ச்சு... எதுக்கு இப்போ அழற...” தற்போது அவன் குரலில் கோபம் மிளிர்ந்தது.
அவளிடம் அழுகை மட்டும் தான் ஊற்றாக பிரவாகம் ஆனது. இப்படி ஒரு வார்த்தையை தன்னவன் சொல்ல மாட்டானா என்று எத்தனை முறை இவள் ஏங்கியிருப்பாள்...
“புருஷங்காரான் காதலை சொல்ல... அதை கேட்டு அழற பொஞ்சாதி நீயா தான் டி இருப்ப...” இவன் சலித்துக் கொள்ள
அவளின் அழுகையோ ஓங்காரத்துடன் ஒலித்தது. “பச்சு...” அவனின் இடது கை உயர்ந்து பெண்ணவளின் கேசத்திற்குள் நுழைந்து... அவளின் பின்னங்கழுத்தை வருடியது. அவனின் விரல் தந்த ஆறுதலில் இவளின் அழுகையோ மெல்ல மெல்ல மட்டுப்பட்டவும்.
“புடிக்கலையா...” கேட்கும் போதே அவனையும் மீறி அவன் குரல் அச்சத்தில் நடுங்கியது… எல்லாம் காதல் படுத்தும் பாடு.
அவளிடம் பதில் இல்லை.
“பேசினா தானே தெரியும்...” கணவனின் குரலில் கண்டிப்பைக் கண்டவள்..
“நீங்க என்ன அடிச்சதுக்காக குற்ற உணர்ச்சியில இப்படியான வார்த்தையை சொல்றீங்களா...” என்ன தான் கணவன் கொஞ்சி... குழைந்து... பேசி சீண்டினாலும் இப்போ அவன் சொன்னவைகளை அவளால் நம்ப முடியவில்லை.
அது அவனுக்கும் புரிந்து இருந்ததோ.. “அதுக்கு மன்னிப்பு தான் கேட்டிருப்பேன்... காதலை சொல்ல மாட்டேன்...” உடனே வந்தது பதில்
கணவனின் பதிலில், “அப்போ அண்ணியை பார்த்துகிட்டு... வீட்டு வேலையை எல்லாம் செய்ததாலே... பரிதாபப்பட்டு சொன்னீங்களா...”
“அதுக்கு துணிமணி எடுத்து கொடுத்து... மூணு வேளை சோறு போட்டு.. கை நிறைய சம்பளம் தந்திருப்பேன்... காதலை சொல்லியிருக்க மாட்டேன்...”
“அப்போ என்ன பத்தி தெரிஞ்சிக்கிறதுக்காக.. இப்படி எல்லாம் சொன்னீங்களா...” பெண்ணவள் விடுவதாய் இல்லை.
“டிவி... பேப்பர்ன்னு உன் புகைப்படத்தை தந்தா.. உன்னைய பத்தி தெரிஞ்சிட போகுது... இதுக்காக யாராச்சும் காதலை சொல்லுவாங்களா...” இப்போது அவன் குரல் மென்மையிலும் மென்மையாய் ஒலித்தது.
“என்ன டி.. உன் விசாரணை எல்லாம் முடிஞ்சதா... என்னைய நிமிர்த்து பாரு டி...”
“ம்ஹும்...” இம்மியும் அவள் முகம் நிமிர்த்தவில்லை.
“பட்டும்மா...” வெல்வெட்டாய் அவன் குரல் குழைந்தது.
அதில் விலுக்கென்று நிமிர்ந்தவள் மன்னவனைக் காண... “என் பட்டுவோட... அம்மா நீ தானே... அப்போ நீ பட்டும்மா தானே...” தன் மகளை முன்னிறுத்தி இவன் அழைக்க
“உங்க மகளை வைத்து நீங்க ஒண்ணும் என்ன கொஞ்ச வேணாம்...’” முறுக்கிக் கொண்டவள்... மறுபடியும் தன்னவனின் நெஞ்சில் முகம் புதைத்துக் கொண்டாள்.
காலையில் இருவரும் சண்டையிட்டு விட்டு... இப்போது மனைவி சிணுங்க... தான் கொஞ்ச என்று பாந்தமாய் இருக்கும் அந்நிலையை ரசித்தவன்..
“சரி... ஒரு ஆண் எப்போது தன் காதலை உணருவான்னு உனக்கு தெரியுமா...” கணவனின் திடீர் கேள்வியில் விழித்தவள்.. மறந்தும் அவளின் முகத்தை நிமிர்த்தவே இல்லை.
“இவ எனக்கானவ... இவ என் உயிரானவ... இவ சந்தோஷத்துக்காக என்ன வேணா செய்யலாம்.. இவளுக்கு எந்த கஷ்டத்தையும் தர கூடாது... இவ குடும்பம்.. இவளின் லட்சியம்... எல்லாம் என்னுடையது.. இவ வாழற காலம் வரைக்கும் நாமும் இவ கூடவே வாழ்ந்திடணும்.. இப்படியான உணர்வுகள் எல்லாம் ஒரு ஆணுக்குள் பூத்தா... அது தான் காதல்! இதெல்லாம் எனக்கு உன் மேலே தோணுச்சு டி... யாரிடமும் வராத உணர்வை நீ எனக்கு தந்திருக்க... இப்போ சொல்லு நான் உன் காதல் மன்னன் தானே...” இவன் நெகிழ்வாய் கேட்க..
என்ன சொல்வாள்.. பெண்ணவளும் நெகிழ்ந்து போய் அல்லவா இருக்கிறாள்... அவள் கேட்ட காதலை இதோ வாய் விட்டே தன்னவன் சொல்லி விட்டான். ஆனால் தன்னவன் கேட்ட காதலை இவள் தயக்கமின்றி சொல்லுவாளா... அது எப்படி முடியும்? தான் எதற்கு வந்தேன் ஏன் வந்தேன் என்பது கணவனுக்கு தெரியும் போது... இதே மாறாத அன்பு கணவனிடம் இருக்குமா... பெண்ணவளுக்கு பயம் கவ்விக் கொள்ள... தன்னவனை இறுக்க கட்டிக் கொண்டாள் இவள்.
“சரி.. உன் கண்ணுக்கு நான் எப்போ காதல் மன்னனா தெரிகிறேனோ.. அப்போ என் காதலை ஏத்துக்க. அதுவரை... நான் காத்துகிட்டு இருக்கேன். ஆனா ஒண்ணு.. இந்த ஜென்மத்துல நீ தான் என் மனைவி... பட்டு தான் என் மகள்...” கோபம் இல்லாமல் அனுசரணையாய் ஒலித்த கணவனின் குரலில் இவளுள் நிம்மதி படர்ந்தது.
“ஊசி போட்டதில் இவ்வளவு நேரம் வலி தெரியல டி... இப்போ வலிக்குது. அதை விட பசிக்குது.. ஆகாரம் கொடு டி...” கணவனின் குரலில் சோர்வைக் கண்டவள்... அவசரமாய் புது உணவை எடுத்து வந்து தன்னவனுக்கு ஊட்டி விட... வேண்டுமென்றே அவளின் விரல்களை கடித்து வைத்தான் இவன். உணவை முடித்து பின் கணவனுக்கு இவள் மாத்திரை கொடுக்க அறையினுள்ளே நுழைந்தாள் அஸ்மி.
“அப்பா.. பூச்சீஈஈ.. கட்ச்சி.. ஊஊ.. ” எடுத்ததும் இவள் தகப்பனின் காயத்தைப் பற்றி விசாரிக்க... அதாவது உனக்கு பூச்சி கடிச்சிடுச்சா என்று கேட்க
மகளை இடது கையால் தூக்கி தன் மடியில் அமர்த்திக் கொண்டவன் “ஆமா டா பட்டு... அப்பாவுக்கு பூச்சி தான் டா கடிச்சிடுச்சு...” என்க
அந்த குட்டிவாண்டோ தந்தையின் வலியை நினைத்து அழுதது... “இப்போ வலி இல்ல டா...” இவன் சமாதானம் செய்ய... அவளோ சமாதானம் ஆகாமல் தந்தையின் வலி போக்க அவனின் இடது உள்ளங்கை முழுக்க முத்தமிட்டாள்.
அதிலும் அவள் ஒவ்வொரு முத்தத்திற்கும், “ஊஊ... போச்சி...” என்று கேட்க..
நெகிழ்ந்து போனவனோ பட்டுவின் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டு... “என் வலிய போக்க உனக்கு தெரியுது... ஆனா உன் அம்மாவுக்கு இது தெரியல பாரு டா பட்டு... ஒரு முத்தம் கூட குடுக்கல டா இவ...” வேண்டுமென்றே இவன் மனைவியை வம்பிழுக்க
இவள் பொய்யாய் முறைக்க... அதில் உல்லாசமானவன் படுக்கையில் சாய்ந்து மகளைத் தன் நெஞ்சில் போட்டுக் கொண்டவன் வாய் விட்டே சிரிக்க... தந்தையின் சிரிப்பில் மகளுக்கும் புன்னகை அரும்ப.. தந்தையை நிமிர்ந்து பார்த்து மறுபடியும் அவன் நெஞ்சில் படுத்துக் கொண்டவள்..
“அம்மா... பச்சோ...” துணைக்கு தாயையும் அழைக்க... அதாவது தந்தையை ஒட்டி தாயும் படுக்க வேண்டுமாம்... அந்த வாண்டின் உத்தரவில் வள்ளி புன்னகைத்தவள் “நீ படு பட்டு” என்று மகளைக் கொஞ்ச
“ம்ஹும்... நீ வா...” மகள் பிடிவாதம் பிடிக்க
மனைவியின் முகத்தில் ஆசையையும்.. தயக்கத்தைப் பார்த்த குமரன், “அட... வா புள்ள...” என்ற படி மனைவியின் கரத்தை சுண்டியிழுக்க... அதில் பெண்ணவளின் தலை மன்னவனின் புஜத்தில் அழுந்தவும்... அதை கண்டு “ஹே... அம்மா படுத்தா..” அஸ்மி கை கொட்டி குதூகலித்து சிரிக்க... அவளின் சிரிப்பு கணவன் மனைவி இருவரையும் தொற்றிக் கொண்டது.
ஆயிற்று.. குமரனுக்கு கை சரியாகி அவன் இயல்புக்கு வர மூன்று தினங்கள் ஆனது.
இன்று மேகமலையில் இவர்களுக்கு இருக்கும் எஸ்டேட்டில் அவனுக்கு சிறு வேலை இருந்தது. அதை சென்று முடித்தவன் பின் கிளம்ப எத்தனிக்க... அவனை கட்டிப்போட்டது ஒரு உருவம். நவயுக யுவதியாய் இருந்தாள் அவள். இவன் அந்த யுவதியைப் பின் தொடர்ந்தவன்... அவள் சென்ற வீட்டினுள் இவனும் சென்றவன்... அந்த யுவதி திரும்ப வெளியே வரும் வரை இவன் காத்திருக்க..
“தேவி... நான் கிளம்பறேன்...” என்றபடி தன் அறையிலிருந்து வெளியே வந்த அந்த பெண்... கூடத்தில் அமர்ந்திருந்தவனைக் கண்டு அதிர்ச்சியில் “இளா!...” என்று உதட்டசைக்க
தன் இருக்கையிலிருந்து எழுந்து நின்றவனோ... அவளை கூர்மையாய் நோக்கி, “இப்போதாவது நீங்க யாருன்னு சொல்றீங்களா மிஸ்ஸஸ் ஏழிசைவள்ளி...” என்று அழுத்தம் திருத்தமாய்.. தன் மனைவியை நோக்கி கேள்வியை வீசியிருந்தான் இளங்குமரன்.