மணாளனின் மனம் 25

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
தன் தாயிற்கும் தந்தைக்கும் தொல்லை கொடுக்க வேண்டும் என்று கூட நினைத்தது இல்லை புவனா. தான் முட்டாள்தனமாக செய்து விட்ட காரியத்தால் தன் பெற்றோரும் அண்ணன்களும் வேதனைப்பட்டிருப்பார்கள் என்பதைக் கூட அவ்வளவாக புரிந்துக் கொள்ளவில்லை அவளின் மூளை.

"நான் கெட்டப் பொண்ணு.. என் பேரண்ட்ஸை ரொம்ப அழ வச்சிட்டேன்.!" என்றாள் அழுகையோடு.

"ஒப்பாரி வைக்கிறதை நிறுத்து புவனா.." என்றவனை நிமிர்ந்துப் பார்த்தவள் "சாரி மாமா.. உங்களையும் அழ வச்சிட்டேன்.!" என்று அவனின் நெஞ்சில் சாய்ந்துத் தேம்பி அழுதாள்.

"நீ புரிஞ்சிக்கிட்டதே போதும் புவனா.. இனி இப்படி எந்த தப்பையும் பண்ணிடாத.." என்றான்.

புவனா மறுபடியும் நிமிர்ந்தாள்.

"என் அண்ணன்களும், அம்மா அப்பாவும் என் மேல ரொம்ப பாசமாக இருந்தாங்க.. அதனால அவங்க வருத்தப்பட்டாங்க.. ஆனா நீங்க ஏன் மாமா வருத்தப்பட்டிங்க.. ஏன் பயந்திங்க.?" அப்பாவியாக கேட்டாள்.

'இந்த கேள்வியை இவ கேட்டுட கூடாதுன்னுதான் இவ்வளவு நாளா பயந்துட்டு இருந்தேன். கரெக்டா கேட்டுட்டாளே.!' என்று கவலைப்பட்டவன் "நீ செத்தா என் தங்கச்சி லைஃப் பாதிக்கப்படும்.." என்று அதே பழைய காரணத்தை சொன்னான்.

புவனா மறுப்பாக தலையசைத்தாள். கசப்பாக சிரித்தாள்.

"என்னை லவ் பண்றிங்க இல்லையா.?" என்றாள்.

அதிர்ச்சியோடு அவளை பார்த்தவன் "இல்ல.." என்றான்.

"அந்த டாக்டர் எல்லாத்தையும் சொல்லிட்டாங்க மாமா.. லவ் பண்ண உங்களுக்கு பயம். என் அண்ணனை போல மாறிட கூடாதுன்னு பயம். ஆனா அதுக்கும் முன்னாடியே நீங்க லவ் பண்ணிட்டுதான் இருந்திருக்கிங்க. ஆனா வெளியே சொல்ல மனசு வரல.. ஏன் மாமா இப்படி.? என்னை ஏன் பிடிக்கல.?" என்றாள் சோகமாக.

தலையை பிய்த்துக் கொள்ள வேண்டும் போல இருந்தது முத்தமிழுக்கு. மங்கையின் மீது கோபமாக வந்தது.

"முட்டாள்ங்கறதால பிடிக்கலையா.?" என கேட்டவளுக்கு மீண்டும் கண்களில் ஊற்றெடுத்தது.

அவனிடமிருந்து விலகியவள் முகத்தை மூடிக் கொண்டு விம்மினாள்.

"அந்த டாக்டர் சொன்னது கேட்ட பிறகு என் அப்பா அம்மா, அண்ணன்களை நினைச்சி ரொம்ப கவலையா இருந்தது. அவங்க எந்த அளவுக்கு பயந்திருப்பாங்கன்னு நினைக்கும்போதே வருத்தமா இருந்தது. ஆனா அந்த கவலையெல்லாம் என் நெஞ்சை விட்டு போற அளவுக்கு அதிகமா உங்களை பத்திய கவலை ஆக்கிரமிச்சி இருக்கு. நான் என்னைக்கு உங்களை பார்த்தேனோ அன்னைக்கே என் லைஃப் குட்டிச் சுவரா போயிடுச்சி. சத்தியமா நீங்க காரணம் இல்ல. நான்தான். என்னை என்னால கன்ட்ரோல் பண்ண முடியல. என் மைன்டை கன்ட்ரோல் பண்ண முடியல. காதலிச்சாலும் அதை வெளிக்காட்ட கூடாதுன்னு உங்ககிட்ட இருக்கற அந்த மன உறுதியும், பிடிவாதமும் என்கிட்ட இல்ல. அப்படி ஒரு உறுதி இருந்திருந்தா இன்னைக்கு நம்ம இரண்டு பேர் வாழ்க்கையுமே நாசமா போயிருக்காது இல்லைங்களா.?"

முத்தமிழுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.

"என் குடும்பத்தை, என் படிப்பை, என் மைன்ட்ன்னு எல்லாத்தையும் மறக்க வச்சிடுச்சி என் காதல்.." என்று சிரித்தாள்.

"செய்றது முழுக்க தப்புன்னு கூட தெரியாம இருந்திருக்கேன் இத்தனை நாளா! போதும் மாமா.. நான் இப்பவும் கூட என்னை கன்ட்ரோல் பண்ணிக்க முடியாமதான் இந்த முடிவுக்கு வந்திருக்கேன். உங்க மேல இருக்கற அதே லவ்னால மட்டும்தான் இந்த முடிவு.. நான் டிவோர்ஸ் தரேன் மாமா.." என்றாள்.

முத்தமிழுக்கு அதிர்ச்சியில் இதயம் இரு மடங்காய் துடித்தது. பின்னங்கழுத்தில் வியர்வை பூத்தது.

"நான் உங்களுக்கு வேண்டாம்.. என்னை மாதிரி ஒருத்தி வேண்டாம்.. நீங்க சுதந்திரமா இருங்க மாமா.. இனி என் டார்ச்சர் உங்களுக்கு வேணாம்.. நான் உங்களை எவ்வளவு லவ் பண்றேன்னு உங்களுக்கு சொன்னா புரியாது. நீங்க என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டா நான் உங்களை நல்லா பார்த்துப்பேன்னு நினைச்சேன். உங்களுக்கு தேவையான லவ்வை தருவேன்னு நினைச்சேன். ஆனா உங்களுக்கு என்னால இவ்வளவு பிரச்சனைன்னு தெரிஞ்ச பிறகு அதே போல யோசிக்க முடியல. நீங்க சந்தோசமா இருந்தா எனக்கு அதுவே போதும் மாமா.. இந்த புத்திக்கு இப்பதான் இது புரிஞ்சது.. இத்தனை நாளா தொந்தரவு பண்ணதுக்கு சாரி மாமா.." என்றாள் விழிகளை துடைத்தபடியே.

''எப்ப பார்த்தாலும் எடுத்தோம் கவுத்தோம்ன்னுதான் முடிவெடுப்பியா.? முன்னாடி இருக்கற மனுசங்களுக்கும் முடிவெடுக்கற உரிமை இருக்கு. அதை தரவே மாட்டியா.?" எனக் கேட்டவனை குழப்பமாக பார்த்தவள் "நீங்க என்னை லவ் பண்றிங்களா.?" என்றுக் கேட்டாள்.

முத்தமிழ் உதட்டை கடித்தான்.

"நீங்க என்னை லவ் பண்றதை என்கிட்ட சொல்ல விரும்பல. அந்த லவ்வை காட்ட விரும்பல.. இது சரியா.? இப்ப கரெக்டா கேள்வி கேட்டிருக்கேன்னு நினைக்கிறேன்.." அவளுக்கு பதில் சொல்லாமல் மீண்டும் உதடுகளையே கடித்தான்.

"என்னோடு இருந்து நீங்க தோற்க வேணாம்.." என்றாள்.

"ஆனா நான் ஏன் டிவோர்ஸ் தரணும்.?" எனக் கேட்டவனை நிமிர்ந்து பார்த்தாள். முன்னால் நின்றுக் கொண்டிருந்தவன் கட்டிலில் வந்து அமர்ந்தான்.

"கல்யாணமும் என் லைஃப். இப்ப டிவோர்ஸ்ம் என் லைப்போடு சம்பந்தப்பட்டது. எப்பவும் நீ மட்டுமே முடிவு எடுக்க முடியாது.. தெரியுதா.?" எனக் கேட்டான்.

"கூடவே இருந்து உங்களை டார்ச்சர் செய்ய சொல்றிங்களா.? இவ்வளவு நாளாக நான் ஏதோ இது விளையாட்டு மாதிரி நினைச்சிருந்தேன். உங்களை என்னால லவ் பண்ண வைக்க முடியும்ன்னு நினைச்சேன். ஆனா நீங்க டாக்டர்கிட்ட போற அளவுக்கு நான் உங்களை டார்ச்சர் பண்ணியிருக்கேன்னு நினைக்கவே இல்ல மாமா.. சாரி மாமா.." என்றவள் மீண்டும் முகத்தை மூடிக் கொண்டு குலுங்கி அழுதாள்.

முத்தமிழ் நெற்றியை தேய்த்துக் கொண்டான்.

'டார்ச்சர் பண்ற வரை பண்ணிட்டு இப்ப வந்து இப்படி ஒரு ஞானோதயம் இவளுக்கு. ஆனா இதுவும் டார்ச்சராவேதான் இருக்கு.! இவளை பார்த்ததுதான் என் லைஃப்ல நான் செஞ்ச பெரிய பாவமா இருக்கும்..' என்று தனக்குள் கவலைக் கொண்டான்.

"நான் சும்மாதான் டாக்டர்கிட்ட போனேன் புவனா.. டார்ச்சர்லாம் இல்ல.." என்றான் கவலை நிறைந்த குரலில்.

"பொய் சொல்லாதிங்க மாமா.. பைத்தியக்கார டாக்டர்கிட்ட யாரும் சும்மா போக மாட்டாங்க.."

"அது பைத்தியக்கார டாக்டர் இல்ல.. மனோதத்துவ நிபுணர்.. நமக்கு மனசுக்குள்ள பிரச்சனைன்னா அதை தீர்த்து வைப்பாங்க.." என்று சொன்னான்.

புவனாவிற்கு சமாதானம் ஆகவில்லை.

"உங்களுக்கு மனசுக்குள்ள பிரச்சனை.." என்று ராகம் இழுத்து அழுதாள்.

முத்தமிழால் அதற்கு மேல் பொறுக்க முடியவில்லை. அவளின் தலையில் நச்சென்று ஒரு கொட்டு வைத்தான்.

மூக்கை உறிஞ்சியபடி தலையை தேய்த்துக் கொண்டே நிமிர்ந்தாள்.

"பண்றதும் பண்ணிட்டு உங்களுக்கு மனசுக்குள்ள பிரச்சனைன்னு சீன் போடுறியா? கொன்னுடுவேன் பார்த்துக்க.. நீ விஷம் குடிக்காம இருந்திருந்தா எனக்கு ஏன் மனசுக்குள்ள பிரச்சனை வர போகுது.?" என்றான் எரிச்சலாக.

"சாரி மாமா.. நான் விஷம் குடிச்சதால நீங்க பைத்தி.." அவசரமாக நாக்கை கடித்துக் கொண்டவள் "உங்களுக்கு மனசு சரியில்லாம போகும்ன்னு நான் நினைக்கவே இல்ல.. உங்களை காதல் பைத்தியமா மாத்ததான் ஆசைப்பட்டேன். இப்படி நிஜமா பைத்தி.." என்று பாதியில் நிறுத்தினாள்.

அவளை கொன்று விடுவது போல பார்த்தவன் "உன்னை மாதிரி ஒரு பொண்ணு இந்த பூமியில எங்கே தேடினாலும் கிடைக்க மாட்டா.. நான் பைத்தியமெல்லாம் கிடையாது. அப்படி பைத்தியமா மாறினாலும் உன் அளவுக்கு பைத்தியமா மாற மாட்டேன்.." என்று கடுப்பாக சொன்னான்.

புவனா புரிந்ததாக தலையசைத்தாள்.

"என்னாலதான் உங்களுக்கு இத்தனை பிரச்சனை.. நான் உங்களுக்கு டிவோர்ஸ் தரேன் மாமா.. நீங்க பத்திரமா நிம்மதியா இருங்க‌‌.." நெஞ்சம் விம்ம, அழுகை குரலில் சொன்னாள்.

முத்தமிழ் எழுந்து நின்றான்.

"நான் ஒன்னும் பொம்மை கிடையாது.. நீ கேட்டதும் கல்யாணம் பண்ணிக்கணும். நீ சொன்னா டிவோர்ஸ் தரணுமா.? என்னால தர முடியாது.. உனக்கு மண்டை குழம்பி போயிருக்கு.. வேணும்ன்னா இரண்டு நாள் இங்கேயே இருந்துக்க.. இரண்டு நாள் கழிச்சி வந்து உன்னை கூட்டிப் போயிக்கிறேன்.. அதுவரைக்கும் எனக்கு பைத்தியக்கார பட்டம் கட்டாம, உன்னையும் கஷ்டப்படுத்திக்காம இரு.." என்றான்.

அவன் அங்கிருந்து செல்வதை நீர் நிரம்பிய கண்களோடு பார்த்துக் கொண்டிருந்தாள்.

"என்னாலதான் எல்லாம்.." என்று மீண்டும் அழ ஆரம்பித்தாள்.

இரண்டு நாட்களும் யோசனைகளோடே கழிந்தது முத்தமிழுக்கு. 'நல்ல வாய்ப்பு அவளுக்கு விவாகரத்து தந்து விடு..' என்றது ஒரு குரல். 'அவளுக்கு டைவர்ஸ் தந்தா அபிராமி வாழ்க்கை என்னத்துக்கு ஆகும்.? அதுவும் இல்லாம அவளுக்கு நீ அழுத எட்டு லட்சம் என்ன கணக்கு.? அவ வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்கிட்டா அப்புறம் உனக்கு யார் ஆபிஸ்ல அசிஸ்டென்ட் வேலை பார்ப்பாங்க.? போன வாரத்துலதான் துணி காயப்போடுற கயிறை கீழே இறக்கி கட்டி வச்சிருக்க.. இவ போனா மறுபடியும் அந்த கயிறை ஏத்தி கட்டணும்.. எதுக்கு இவ்வளவு ரிஸ்க் எடுக்கற.?' என்று கேட்டது இன்னொரு குரல்.

'இதுக்கு பேசாம நீ அவளை லவ் பண்றதை வெளிக்காட்ட ஆரம்பிச்சிக்கலாம்.. இப்படி மொக்கை காரணம் ஏன் தேடணும்.?' என்று தன்னையே கேட்டுக் கொண்டான்.

புவனாவோ தன் அம்மாவிடமும் அப்பாவிடமும் ஆயிரம் சாரி சொன்னாள். விஷம் குடித்தது தனது முட்டாள்தனம் என்று சொல்லி அழுதாள்.

அதை அவள் சொன்ன போது அம்மாவும் அப்பாவும் நன்றாக திட்டினார்கள். விஷம் குடித்த போதே திட்டி இருப்பார்கள். ஆனால் மறுபடியும் ஏதாவது செய்துக் கொள்வாளோ என்ற பயத்தில் திட்ட கூட முடியவில்லை அவர்களால்.

"எவ்வளவு ஆசையா வளர்த்தோம் உன்னை.. எங்களையெல்லாம் விட்டுட்டு சாக உனக்கு என்ன அவ்வளவு கொழுப்பு.? உன்னை பெத்ததுக்கு பதிலா ஒரு கழுதையை வளர்த்தி இருக்கலாம்.. அதுவாவது எங்க பேச்சை கேட்டு இருக்கும்.." என்றாள் அம்மா.

"எனக்கே உசுரே போயிடுச்சி.. எப்படி வளர்த்தினேன் உன்னை.. வீட்டுல வறுமை இருந்தபோது கூட உனக்கு ஒருநாள் ஒரு குறை வச்சது இல்ல நான்.. எனக்கு கிழிஞ்ச லுங்கி இருந்தா கூட அதுக்கு மாத்து துணி வாங்காம உனக்கு பட்டு வாங்கி தந்திருக்கேன்.. காதல் என்ன *** காதல்.? நீ விஷம் குடிச்ச நாலஞ்சி மாசத்துக்கு முன்னாடியே நானே அவனை போய் கேட்டேன்.. எனக்கு பிடிக்கல மாமான்னு சொல்லிட்டான்.. எனக்கே செத்து போற மாதிரி இருந்துச்சி.. ஆனா வெட்கம் இல்லாம விஷம் குடிச்சி அவனை கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணி வச்சிருக்க.. இந்த மாதிரி கல்யாணத்துல உன் அண்ணனுக்கும் உனக்கும் நடுவுல என்ன வித்தியாசம்.? நீ சொரணை கெட்ட முட்டாள் மட்டும்தான்.." என்று கடுமையாக திட்டினார்.

"அப்பவே அடிச்சி சொல்லி தந்திருந்தா இப்படி இருந்திருக்க மாட்டேன் இல்லையா.? அவரை ஐஞ்சரை வருசத்துக்கும் மேல லவ் பண்ணிட்டு இருக்கேன்.. நிஜமா உங்க யாருக்குமே தெரியாதுன்னு நெஞ்சுல கை வச்சி சொல்லுங்க பார்க்கலாம்.. ஆரம்பத்துலயே 'அவருக்கும் எனக்கும் நடுவுல ஏணி வச்சாலும் எட்டாது.. அவரோட ஸ்டேட்டஸ் வேற, என் ஸ்டேட்டஸ் வேற'ன்னு சொல்லி புரிய வச்சிருக்கலாம் இல்ல.?" கண்ணீரோடு கேட்டவளை பரிதாபமாக பார்த்தார் முருகன். அவளை அதட்டியது தவறோ என்று தோன்றியது. ஆனால் அதட்டாமல் விட்டதுதான் தவறு என்று சொல்லி அழுதுக் கொண்டிருந்தாள் அவள்.

"சின்ன புள்ளை.. செல்ல புள்ளைன்னு செல்லம் தந்து வளர்த்திய அதே நேரத்துல கொஞ்சம் கண்டிச்சி வளர்த்தியிருந்தா இன்னைக்கு நானும் நல்லா இருந்திருப்பேன் இல்ல.?" என்றவளுக்கு முத்தமிழை நினைத்துதான் அதிக கவலையாக இருந்தது.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN