மௌனம் 1

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
கதை மாந்தர்கள்

நாயகன் - நவீன் (நவீனா).

அண்ணன் - புவின்.

தலைவர் - தங்சேயா

துணை தோழி - ரூபி.நாயகி - ரதி.

அண்ணன்- அர்ஜூன்.

அண்ணி - லட்சுமி.

அம்மா - சந்திரா.

சீனியர் தோழி - லாவண்யா.

ஆசான் - பரந்தாமன்.துணை நாயகர்கள்

1.தன சேகர் (ஐ.பி.எஸ் ஆபிசர்)

2. விஷால் (தன சேகரின் உதவியாள்)

3. லாவண்யா (தனசேகரின் உதவியாள்)

இந்த கதை மௌனமாய் சில மரணங்கள் கதையின் அடுத்த பாகம். அதன் கன்டினியூ கிடையாது இது. இருந்தாலும் அந்த கதையின் மாந்தர்கள் இந்த கதையில் வரிசை கட்டி இருப்பதால் சிறு குறிப்பு;

புவின் இந்த நாட்டை அழிக்க வேண்டும் என்ற கொள்கையோடு புறப்பட்டு வந்தவன். அவனுக்கும் அவனின் தம்பி நவீனுக்கும் தலைவனாக செயல்பட்டது தங்சேயா எனும் தீவிரவாத தலைவர். அவருக்கு உலகத்தையே முழுதாய் அழிக்க வேண்டும். இந்த சிவிலிசேசனை அழிக்க வேண்டும். அதற்காக பணம் தரும் நாடுகளிடம் பணத்தை பெற்றுக் கொண்டு எதிரி நாட்டை அழித்துக் கொண்டிருந்தார். இந்த வகையில் அனைத்து நாடுகளுமே பாதிக்கப்பட்டது என்பதுதான் உண்மை. உலக தலைவர்களிடம் ஒற்றுமை இல்லாததை தங்சேயா பயன்படுத்திக் கொண்டார். ஆனால் புவின் தனது வேலையில் முழுதாக ஜெயிக்கவில்லை. காதல் அவனை தலைகீழாக மாற்றி விட்டது. காதலினால் அவனின் பணியும் பாதிக்கப்பட்டு விட்டது. அடுத்து என்ன ஆனது என்பது அந்த கதையோடு முடிந்த விசயம். இந்த கதை.. புவினால் பாதியில் விடப்பட்ட நாடு அழிக்கும் வேலைக்கு இப்போது அனுப்பி வைக்கப்பட்டவன்தான் நவீன். என்ன ஆகும் இனி.?


அழகான மாலை நேரம். சாலையில் விரைந்தோடிக் கொண்டிருந்த வாகனங்களை அந்த ஐந்து மாடி கட்டிடத்தின் நான்காம் தளத்திலிருந்த ஜன்னல் வழியாக பார்த்தபடி நின்றுக் கொண்டிருந்தாள் லாவண்யா.

"லாவண்யா.." விஷாலின் குரலில் திரும்பினாள். விஷாலும் அவளும் ஒன்றாகதான் ஐ.பி.எஸ் பாஸ் செய்திருந்தார்கள்.

விஷால் இருபத்தி ஏழை தாண்டிவிட்டான். லாவண்யா அவனை விட மூன்று வருடங்கள் சிறியவள்.

சில மாதங்களுக்கு முன்பு நாட்டில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பின் காரணமாக அந்த தீவிரவாத கும்பலை பிடிக்க ஏற்படுத்தப்பட்டது தனி காவல்படை. அந்த தனிப்படையின் தலைமையாக இருப்பவன் தனசேகர். தனசேகருக்கு உதவியாக லாவண்யாவும் விஷாலும் இருக்கிறார்கள். இந்த குழுவில் இவர்களோடு சேர்த்து மொத்தம் பன்னிரெண்டு பேர். ஆனால் இவர்கள் மூவரும் முக்கிய முடிவெடுக்கும் பொறுப்பில் இருந்தார்கள்.

லாவண்யா திரும்பிய பிறகு அவளிடம் பைல் ஒன்றை நீட்டினான் விஷால். திறந்துப் பார்த்தாள். அந்த ஊரின் முக்கிய புள்ளிகள் சிலரின் விவரங்கள் இருந்தன.

"இவங்க அந்த தீவிரவாத கும்பலோடு தொடர்பில் இருப்பாங்களோன்னு ஒரு டவுட்.. விசாரிக்கணும்.." என்றான்.

சரியென தலையசைத்தாள்.

நகர முற்பட்டவன் "அந்த பொண்ணை பாலோவ் பண்ண ஆள் ரெடி பண்ணிட்டியா.?" என்றான்.

"டன்.. என் பிரெண்ட்.. கராத்தேவில் ப்ளாக் பெல்ட்.. ஒரு பத்திரிக்கையில் ரிப்போர்டரா வேலை செய்றா.. அவளோடு நானே அதிகம் கான்டேக்ட்ல இல்ல.. அதனால அவளை யாரும் சட்டுன்னு சந்தேகப்பட மாட்டாங்க.." என்றாள்.

"கிரேட்.." என்றவன் "உன் பிரெண்டுக்கு அது யாருன்னு தெரியுமா.?" எனக் கேட்டான்.

இல்லையென தலையசைத்தாள் லாவண்யா.

"நல்ல பிரெண்ட் நீ.!" கேலியாக சொல்லிவிட்டு நகர்ந்தான்.

***

ரதி வீட்டிற்கு வந்தபோது அவளின் அண்ணி லட்சுமி "பொண்ணுன்னுதான் பேரு.. நாள் முழுக்க வெளியவே சுத்திட்டி இருக்கா.. என்ன பொண்ணோ.? நல்லா வளர்த்திருக்கிங்க அத்தை.." என்று மாமியாரிடம் குறை சொல்லிக் கொண்டிருந்தாள்.

ரதிக்கு இது பழக்கப்பட்ட ஒன்றுதான். அம்மாவும் இவளும் அண்ணனோடுதான் தங்கி இருந்தார்கள். அண்ணனின் பணம்தான் இருவரையும் வளர்த்துக் கொண்டிருந்தது. அவனுக்கு திருமணம் ஆகும் வரை இது ஒரு பெரிய விசயமாக தெரியவில்லை. ஆனால் அண்ணி வந்த பிறகு அவன் பணத்தில் உண்ணுவதும், உடுத்துவதும் ஏதோ போல இருந்தது ரதிக்கு.

அம்மாவை அதிகம் குறை சொல்ல மாட்டாள் அண்ணி. ஏனெனில் அம்மா வீட்டு வேலைகளை செவ்வனே செய்து முடிப்பாள். ஆனால் ரதிக்குதான் வேலைகள் செய்ய நேரங்கள் வாய்ப்பதில்லை.

விண்ணைத் தொடு பத்திரிக்கை நிறுவனம் அவளின் கல்லூரி பேராசிரியர் பரந்தாமனால் உருவாக்கப்பட்டது. பத்திரிக்கையில் சேவை புரிய வேண்டும் என்ற பேராசையில் அவருக்கு கீழ் இணைந்து விட்டாள் ரதி. ஆனால் பத்திரிக்கைதான் அவ்வளவாக ஓடவில்லை. நல்ல நல்ல விசயங்களைதான் தேடி பிடித்து வெளியிட்டார்கள்.

ஜோதிடத்தை விடுத்து மருத்துவ குறிப்புகளை வெளியிட்டார்கள். நடிகைகளின் அரை நிர்வாண புகைப்படத்திற்கு பதிலாக சிறந்த ஓவியங்களை வரிசை படுத்தினார்கள். மாடல்களின் வாழ்க்கை வரலாறையே மீண்டும் மீண்டும் வெளியிடாமல் மற்ற துறை சார்ந்த வெற்றியாளர்களின் வாழ்க்கையையும் வெளியிட்டார்கள். முக்கியமாக நடுநிலை அரசியல் பேசினார்கள். எந்த கட்சிக்கும் கூஜா தூக்காமல், அனைத்து கட்சிகளின் தவறுகளையும் ஆதாரங்களோடு வெளியிட்டு அவர்களின் கோபத்தை வாங்கிக் கட்டிக் கொண்டார்கள். பிறகு எப்படி பத்திரிக்கை ஓடும்.? இவ்வளவு‌ நாளாகியும் அதை ஒழித்துக் கட்டாமல் விட்டதே அரசியல்வாதிகள் சிலரின் பெருந்தன்மை என்றுச் சொல்லலாம்.

ஓடாத பத்திரிக்கையில் சம்பளம் மட்டும் கொட்டியா தருவார்கள்.? அவளுக்கென்று தரப்படும் மாத சம்பளம் அடுத்தடுத்த விசயங்களை சேகரிக்க செல்லும்போது பெட்ரோல் செலவுக்கும், அவளின் மதிய உணவிற்குமே சரியாக இருக்கும். இதில் எங்கே அவள் தன் சம்பளம் என்று கற்றைப் பணத்தை வீட்டில் தருவது.?

இந்த வயதிலும் நல்ல வேலைக்கும் செல்லாமல், திருமணமும் செய்யாமல் சுற்றிக் கொண்டிருந்தால் எந்த அண்ணிக்குதான் பிடிக்கும்.? ரதிக்கு வயது இருபத்தி மூன்று வருடமும் மூன்று மாதங்களும்.

இந்த விசயத்தில் அவளுக்கு லாவண்யாவின் மீது சிறு பொறாமைதான். ஐந்தில் இரண்டு பாடங்களில் பார்டர் பாஸ் செய்துக் கொண்டிருந்த அவளே இன்று நல்ல வேலையில் இருக்கும்போது நன்றாக படித்து பாஸ் செய்த தனது கட்டுரைகள் எதுவும் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க மறுக்கிறதே என்று தன் மீதே வெறுப்பு அவளுக்கு.

அண்ணியின் திட்டுகளை இந்த காதில் வாங்கி அந்த காதில் விட்டுவிட்டு தனது அறைக்குள் நுழைந்தாள் ரதி.

அவளின் அண்ணன் தனியார் நிறுவனம் ஒன்றில் நல்ல வேலையில் இருக்கிறான். அவனால் இவனை போல இன்னும் நான்கு தங்கைகளை கூட குறை வைக்காமல் பார்த்துக் கொள்ள முடியும். ஆனால் இவளுக்கு செய்யும் செலவுக்கு இன்னும் நான்கு சவரன் நகைகள் வாங்கி தன் குழந்தைகளுக்கு சேர்த்து வைக்கலாமே என்பது அண்ணியின் சிறு ஆசை. ஆனால் அண்ணிக்கு இன்னும் குழந்தை இல்லை. அவர்களுக்கு குழந்தை பிறக்கும் முன்பாவது தனது பத்திரிக்கை நிறுவனம் நல்ல நிலைக்கு வந்து விட வேண்டும் என்று ஆசைப்பட்டாள் ரதி.

குளித்து விட்டு வந்தவள் தனது போனில் இருந்த நவீனாவின் புகைப்படத்தை பார்த்தாள்‌. புகைப்படத்தின் விழிகளை மட்டும் பெரிதுபடுத்தி தன்னை மறந்து ரசித்து பார்த்தாள்.

அருகே இருந்த நிலைக்கண்ணாடியில் தன் கண்களை பார்த்தாள்‌. புகைப்படத்தில் இருந்த விழிகளோடு ஒப்பிட்டு பார்த்தாள். பொறாமையாக இருந்தது நவீனாவின் கண்களை பார்த்து.

"ச்சை.. கண்ணுதான் நமக்கு அழகா இல்ல.. அட்லீஸ்ட் லெஸ்பியனாவாவது பிறந்திருக்கலாம்.. இல்லன்னா அவ ஆணா பிறந்திருக்கலாம்.. கடத்தி வந்து தனி ரூம்ல அடைச்சி வச்சி காதலிச்சி இருப்பேன்.." கவலை நிறைந்த குரலில் சொன்னாள்.

எந்த கண்களும் இந்த அளவுக்கு அவளை பாதித்ததில்லை. அவளுக்கு விழிகளின் மீது ஒரு தனி காதல் உண்டு. யாரையும் முகத்தை பார்த்து விரும்பாமல் விழிகளை பார்த்து விரும்புவாள். கண்களை பற்றிதான் அதிகம் பேசுவாள். அவளின் கட்டுரைகளில் அவள் பேட்டி எடுத்த ஆட்களின் கண்ணழகை பற்றி இரு வரியாவது வர்ணித்து எழுதியிருப்பாள்.

"எத்தனை கண்களை பார்த்து பார்த்து சலித்தேன்.. கடைசியில உன் கண்ணு என்னை அடிக்டாகிடுச்சி.. கண்களுக்காக இதை வரைக்கும் எத்தனையோ கவிஞர்கள் கவி எழுதி இருக்காங்க.. அது அத்தனையையும் நான் உனக்கே டெடிகேட் பண்றேன் பேபி.!" என்றாள்.

இரவு உணவை உண்ணும்போது "எங்க ஆபிஸ்ல வேலை செய்ற சுதாகருக்கு உன்னை பிடிச்சிருக்காம்.." என்றான் அண்ணன்.

"ப்ளீஸ் அண்ணா.. இன்னும் ஆறு மாசம் டைம் கொடு.. அதுக்குள்ள எங்க விண்ணைத் தொடு விண்ணை தொடாம போயிடுச்சின்னா நான் பத்திரிக்கையிலிருந்து விலகிக்கிறேன்.. அப்புறம் நீ சொல்ற இடத்துல வேலைக்கு சேர்ந்துடுறேன்.. ப்ளீஸ்.." என்றாள்.

அண்ணி அண்ணனின் முகத்தை பார்த்தாள்.

"ஓகே.. ஒருவேளை இந்த ஆறு மாசத்துக்குள்ள உங்க பத்திரிக்கையை இழுத்து மூடிட்டா அப்புறம் நான் சொல்ற பையனை கல்யாணம் பண்ணிக்கணும்.!" என்றான்.

ரதி பற்களை அரைத்தாள். பத்திரிக்கை நிறுவனத்தை இழுத்து மூட வேண்டும் என்பதில் இவனுக்குதான் எவ்வளவு ஆனந்தம் என்று கடுப்பானாள்.

உறங்கும்போது நவீனாவின் கண்களை ரசித்தவாறே உறங்கிப் போனாள்.

***

"தீவிரவாதம்தான் நாட்டை திருத்தும்.. மயிலே மயிலே இறகு போடுன்னு சொன்னா தராது.. அது போலதான் இவங்கக்கிட்ட மாறுங்கன்னு சொன்னா மாற மாட்டாங்க.. நாமதான் பாதி பேரை கொன்னு மீதி பேருக்குள்ள பயத்தை உண்டுப் பண்ணனும்.. அப்ப நாம சொன்னா உடனே கேட்பாங்க.. ஏனா இவங்க டிசைன் அப்படி.!" தங்சேயாவின் கோட்பாட்டை ரூபியிடம் சொல்லிக் கொண்டிருந்தான் நவீன்.

"அதேதான்.." என்று சிரித்தாள் அவள்.

இருவரும் டைனிங் டேபிளில் எதிரெதிரே அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். ஊரை விட்டு ஒதுக்கி இருந்த அந்த வீட்டில் அனைத்து வசதிகளும் இருந்தது. ரூபிக்கு மிகவும் விருப்பமான நீச்சல் குளம் கூட இருந்தது. துப்பாக்கிகளும், மற்ற வகையான ஆயுதங்களும் அந்த வீட்டின் தரைத் தளத்து அறைகளில் இருந்தன. அவர்களுக்கு தேவையான அனைத்தையும் செய்து தர அதே ஊரில் ஆட்கள் இருந்தனர்.

"மயிலே மயிலே இறகு போடுன்னா மயில் இறகு போடாது.. நாமதான் பிடுங்கிக்கணும்.!" என்றாள் ரூபி சிரிப்போடு.

"இன்னும் ஆறு மாசம் டைம்.. தங்சேயா எனக்கு தந்த டைம்.!" என்றான் நவீன். இந்த நாட்டை ஆறு மாதத்திற்குள் சுடுகாடாக மாற்ற வேண்டும் என்று சொல்லி அனுப்பி உள்ளார் தங்சேயா. அதற்கு சரியென்று தலையசைத்து விட்டுதான் இவர்கள் இருவரும் இங்கே வந்துள்ளார்கள்.

"நமக்கு ஆறு மாசம் போதுமா.?" சந்தேகமாக கேட்டாள் ரூபி.

"இதுவே அதிகம்.." கேலி சிரிப்போடு சொன்னான் நவீன்.

இருவரும் உறங்க சென்றார்கள்‌.

***

"பசிக்குது அண்ணா.." வயிற்றை பிடித்தபடி கெஞ்சினான் ஐந்து வயது சிறுவன் நவீன்.

"கொஞ்சம் நேரம் பொறுத்துக்க அப்பு.. யாராவது சாப்பாடு வாங்கி தந்தா சாப்பிடலாம்.." என்று சொன்னான் ஏழு வயதான அவனின் அண்ணன் புவின்.

கண்ட கனவில் தூக்கம் கலைந்து எழுந்து அமர்ந்தான் நவீன். மணி விடியற்காலை மூன்றை தாண்டியிருந்தது. நெற்றியிலிருந்த வியர்வையை துடைத்துக் கொண்டான். பசிப்பது போலவே இருந்தது. இது உண்மையான பசி இல்லை. பசி போன்ற ஒரு உணர்வு. பல நாட்களாக பட்டினி கிடந்ததின் பலனாக கிடைத்த உணர்வு.

உணவை உண்டாலும் இந்த உணர்வு தீராது என்பதால் செல்போனை எடுத்து தன் அண்ணனின் புகைப்படத்தை சில நிமிடங்கள் பார்த்தான். அவனுக்கு தன் அண்ணனின் மீது உயிர். ஆனால் சேர்ந்து வாழதான் விதி வாய்க்கவில்லை.

இருவரும் சிறு வயதில் அனாதை ஆனவர்கள். உணவுக்காக பிச்சையெடுத்தும் கூட பட்டினியாகவே பாதி நேரம் மயக்கமாகி உறங்கியவர்கள்.

அவர்களை தத்தெடுத்தது தங்சேயா. உணவு தந்தவருக்கு உயிரை தர துணிந்த பல சிறுவர்களோடு இவர்களும் அடக்கம். புவனின் கதை முடிந்த ஒன்று. நவீன் இப்போது தன் அண்ணனின் இடத்தில் இருந்தான். ஆனால் தங்சேயாவிற்கு தன் அண்ணனை பிடித்தது போல தன்னை பிடிக்காது என்று அவனுக்கே தெரியும். புவின் தங்சேயாவின் சொந்த மகன் போல இருந்தான். நவீன் எப்போதும் அடியாள் போலதான்.

"நீ வேணா பாரு.. இன்னும் கொஞ்ச நாள் கழிச்சி தங்சேயாவுக்கு உன்னை விட என்னைத்தான் ரொம்ப பிடிக்கும்.." என்று தன் அண்ணனிடம் சவால் விட்டதை நினைத்துப் பார்த்தான் நவீன்.

தங்சேயா புவினுக்கு என்று தந்திருந்த மகன் ஸ்தானத்தை அந்த குழுவில் இருந்த ஒருவருமே பிடிக்கவில்லை இன்னும். தன்னால் அது நிச்சயம் முடியும் என்று நம்பினான் நவீன்.

என் வேலையில் திடீர் தடைகள் ஏதும் வராமல் இருந்தால் கதை தினம் காலை ஆறு டூ ஏழுக்குள் அப்டேட் ஆகும். பிரதிலிபியில் மட்டும் காலை 6.6க்கு அப்டேட் ஆகும். (பிரதிலிபியில் மட்டும்தான் முந்தைய நாளோ முந்தைய மாதமோ எபிக்கு டைம் செட் பண்ணும் வசதி உள்ளது). கதை பிரதிலிபியின் சப்ஸ்கிரைப் வசதியின் கீழ் வருவதால் ஒவ்வொரு எபியும் ஐந்து நாட்களுக்கு பிறகு அன்லாக் ஆகும்.‌ தினம் ஒரு எபி அன்லாக் ஆகும் காரணத்தால் நான் அன்லாக் ஆகும் எபிகளை தினம் தவறாமல் நான் எழுதும் மற்ற அனைத்து தளங்களில் பப்ளிஷ் செய்வேன். நன்றிகள்

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN