மணாளனின் மனம் 27

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
இரவு நெருங்கிக் கொண்டிருந்தது.

முத்தமிழ் புவனாவின் வீட்டின் முன் பைக்கை நிறுத்தி விட்டு கீழே இறங்கினான். வாசலில் இரண்டு கார்கள் நின்றிருந்தன. ஒன்று அவனின் தங்கையுடையது.

"அபிராமி வந்திருக்காளா.? ஒரு போன் கூட பண்ணல.‌." என நினைத்தபடி வீட்டுக்குள் நுழைந்தான்.

ஹாலில் மூர்த்தி, கார்த்தி ஜோடிகளோடு அவர்களின் பெற்றோரும் சேர்ந்து அமர்ந்திருந்தார்கள்.

முத்தமிழின் விழிகள் முதலில் அபிராமியைதான் தேடியது. ஹாலில் ஒரு ஓரமாக அமர்ந்திருந்தவள் அண்ணனை கண்டதும் அமைதியாக தலை குனிந்து தரையை பார்த்தாள். மூர்த்தி மதிய வேளையிலேயே தன் தம்பிக்கு போன் செய்து விட்டான். தங்கையின் திடீர் முடிவு கார்த்திக்கையும் கலங்க செய்து விட்டது. இப்போதுதான் தங்கை கொஞ்சம் நிம்மதியாக இருந்தாள். அதற்குள் அவளுக்கு என்ன வந்ததோ என்று மனைவியோடு வீட்டிற்கு ஓடி வந்து விட்டான்.

அபிராமியிடம் சுவாதி தனக்கு தெரிந்த விசயத்தை விளக்கிச் சொன்னாள். 'புவனாவிற்கு விவாகரத்து வேண்டும். காரணம் சொல்லவில்லை. மீண்டும் மீண்டும் கேட்ட பிறகு 'அவருக்கு நான் செட் ஆகவில்லை..'' என்று அவள் சொன்னதை மட்டும் சொல்லி இருந்தாள்.

அபிராமியும் சுவாதியும் தங்களுக்குள் விவாதித்தார்கள். புவனாவின் குணம் பற்றி இருவருக்குமே தெரியும். அவள் முத்தமிழ் மீது காதல் கொண்டிருக்கவில்லை என்றால் அவளின் பிடிவாதத்திற்கும் குணத்திற்கும் எந்த வீட்டிலுமே ஒரு வாரத்திற்கு மேல் குப்பைக் கொட்டி இருக்க மாட்டாள் என்பது அவர்களின் யூகம். அண்ணன் இரவு வருவான் பேசிக் கொள்ளலாம் என காத்திருந்த அபிராமி அவன் வந்த பிறகு பேச வார்த்தைகள் இல்லாமல் மௌனமானாள்.

புவனா ஹாலில் இல்லாததால் சுற்றும் முற்றும் பார்த்தபடி முன்னேறி நடந்த முத்தமிழ் "புவனா.." என்று அழைத்தான்.

"அவளுக்கு தலைவலி.. படுத்து தூங்கிட்டு இருக்கா தமிழ்.." கார்த்திக்தான் தகவல் சொன்னான். புவனாவின் அறை நோக்கி நடந்தவனை "தமிழ்.." என்று அழைத்து நிறுத்தினான் மூர்த்தி.

"இப்படி வந்து உட்காரு.. கொஞ்சம் பேசணும்.." என்றான்.

'இந்த முள்கரடிக்கிட்ட என்ன பேசுறது.? சும்மாவே உர்ன்னு முறைப்பான்.. பாவம் சுவாம்மா.. அவ குணத்துக்கு இப்படி ஒரு கிறுக்கன்கிட்ட மாட்டிக்கிட்டு இருக்கா.!' என்று நினைத்தபடியே வந்து மூர்த்தியின் முன்னால் இருந்த இருக்கையில் அமர்ந்தான் முத்தமிழ்.

"என் தங்கச்சி இனி உங்க வீட்டுக்கு வர மாட்டா.." என்ற மூர்த்தியை சந்தேகமாக பார்த்தவன் "ஏன்.?" என்றான்.

"அவளுக்கு உன்னோடு வாழ விருப்பம் இல்ல.. அவளுக்கு விவாகரத்து வேணும்ன்னு கேட்டிருக்கா.."

முத்தமிழ் எழுந்து நின்றான்.

"உட்காரு தமிழ்.. பேசலாம்.." என்ற மூர்த்தியை கொலை வெறியோடு முறைத்தவன் "உன்கிட்ட பேச எனக்கு என்ன இருக்கு.? அவ எங்கே.?" என்று கடுப்போடு கேட்டான்.

"கத்தாதே.." மூர்த்தி எச்சரித்தான். முத்தமிழுக்கு கோபம் தலைக்கேறிக் கொண்டிருந்தது.

"என்னை நீங்க சும்மா டென்சன் பண்ணாதிங்க.." என்றவன் புவனாவின் அறை வாசலுக்கு சென்று கதவை திறக்க முயன்றான். கதவு தாழிடப்பட்டு இருந்தது.

"ஏய் முட்டாள் கழுதை.. இப்ப வந்து கதவை திறக்க போறியா.? இல்ல உன்னை கொல்லட்டா நான்.?" என்று கோபத்தோடு கேட்டபடி கதவை அறைந்தான்.

"என் தங்கச்சியை முட்டாள்ன்னு திட்டுறியா தமிழ்.? எங்க முன்னாடியே இந்த மிரட்டு மிரட்டுற.. அப்படின்னா இத்தனை நாளா என்னவெல்லாம் பண்ணியோ.?" என்றபடியே அவனின் அருகே வந்தான் மூர்த்தி.

திரும்பிப் பார்த்து அவனை முறைத்தவன் "மரியாதையா போயிடு.. என்னை சும்மா காண்டேத்திட்டு இருக்காத.?" என்றான். மீண்டும் கதவை ஓங்கி அறைந்தான்.

"ஏய்.. வெளியே வாடி கழுதை.." என்றுக் கத்தினான்.

"அண்ணா.." அபிராமி அவனின் மறுபக்கம் வந்து நின்றாள். கார்த்திக்கும் சுவாதியும் ஒரு ஓரமாக வந்து நின்றார்கள். எதையாவது பேசி அவர்களுக்குள் மேலும் அதிக சண்டையை இழுத்து விட்டுவிடுவோமோ என்று இருவருக்குமே பயமாக இருந்தது. முருகனும் யமுனாவும் மகளை பற்றிய கவலையோடு முத்தமிழின் பின்னால் வந்து நின்றார்கள்.

தங்கையின் பக்கம் திரும்பிய முத்தமிழ் "நீ இதுல குறுக்கே வராத அபிராமி.. ப்ளீஸ்.." என்று கெஞ்சலாக கேட்டான்.

அபிராமி சோகத்தோடு அண்ணனைப் பார்த்தாள்.

"உங்களுக்குள்ள என்ன ஆச்சி.? ஏன் அண்ணா அவ இப்படி பண்றா.?" எதுவும் புரியாமல் கேட்டவளை திரும்பிப் பார்த்த முத்தமிழ் "எனக்கு மட்டும் என்ன எழவு தெரியும்.? அம்மா வீட்டுக்கு போகணும்ன்னு சொன்னா‌.. கொண்டு வந்து விட்டேன். இரண்டு நாள் கழிச்சி வரேன்னு சொன்னா.. இப்ப டைவர்ஸ்.." என்று பற்களை கடித்தான்.

"இவ விளையாடிட்டே இருக்க என் லைஃப் என்ன டென்னிஸ் கிரவுண்டா.? ஒரு மனுசனுக்கு எவ்வளவு டார்ச்சர் தருவா.?" என்று தங்கையிடம் கேட்டவன் மீண்டும் கதவை அறைந்தான். "புவனா.. உனக்கு லிமிட் அவ்வளவுதான்.! உனக்கு லாஸ்ட் வார்னிங் தரேன்.. மரியாதையா வந்துடு.. இல்லன்னா நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது.." என்று மீண்டும் கத்தினான்.

"பொறுமையா பேசலாம் தமிழ்.." மூர்த்தி இறங்கிய குரலில் சொன்னான்.

"வாயை மூடிட்டு போடா அந்த பக்கம்.. பொண்ணு வளர்த்தி இருக்காங்க பாரு.. ஒத்தை புள்ளையை ஒழுங்கா வளர்த்த தெரியல.." அவன் கடுப்பில் திட்டிக் கொண்டிருந்த நேரத்தில் மெள்ள கதவை திறந்தாள் புவனா.

முத்தமிழ் அவளை முறைத்தான். அழுது வீங்கிய அவளின் முகத்தை பார்க்கவே சகிக்கவில்லை.

"இப்ப இங்கே எவன் செத்தான்னு இப்படி அழுது தொலைஞ்சிருக்க.?" கோபத்தோடு கேட்டான்.

மூக்கை உறிஞ்சியபடி கன்னங்களை துடைத்துக் கொண்டவள் "என்னால உங்களுக்கு எப்பவும் தொல்லை மட்டும்தான் மாமா.. டைவர்ஸ் தந்துடுங்க.. நல்ல பொண்ணா கட்டிக்கங்க.." என்றாள் சிறு குரலில்.

அவள் பேசும் வரை கேட்டு நின்றவன் பட்டென்று ஒரு அறையை விட்டான். புவனா கன்னத்தை பற்றியபடி தலை குனிந்தாள்.

அபிராமி அதிர்ச்சியில் மூழ்கி இருந்தாள்.

மூர்த்தி கோபத்தில் பொங்கியெழுந்து அவனின் சட்டையை பற்றினான்.

கார்த்திக்கும் சுவாதியும் சோகமாக நெற்றியை பிடித்தனர். ஆனால் இதன் விசயமாக கார்த்திக்கிற்கும் நண்பனின் மீது கோபம்தான் வந்தது.

"மாப்பிள்ளையை விடுடா.." என்றார் முருகன்.

"அண்ணா.." புவனா தன் அண்ணனை சோகமாக பார்த்தாள். "விடுண்ணா அவரை.." என்றாள்.

ஆனால் அதற்குள் முத்தமிழே அவனின் கையை தட்டி விட்டு விட்டான்.

"குறுக்க வராதேன்னு தமிழ்லதான் சொன்னேன் மூர்த்தி.. நடுவுல வந்து வாங்கிக் கட்டிக்காத.. இங்கே யாருமே குறுக்க வராதிங்க.." சுற்றிலும் பார்த்து எச்சரித்தவன் புவனாவின் கையை பற்றிக் கொண்டு வெளியே வந்தான்.

"என்னை விடுங்க மாமா.. நான் வரல.." என்றாள் புவனா.

"ஏன்.?" ஒரே வார்த்தையாக இருந்தாலும் அழுத்தமாக கோபமாக இருந்தது.

"அதுதான் சொன்னேனே.!" என்றவளை எத்தனை முறை அறைந்தாலும் ஆத்திரம் தீராது என்பது மட்டும் அவனுக்கு புரிந்தது.

"உனக்கு மனசாட்சின்னு ஒன்னு இருந்தா தொட்டு சொல்லு.. என் விருப்பத்தை பத்தி சொல்லியும் கேட்காம நீயேதான் விஷம் குடிச்ச.. நான் கல்யாணம் பண்ணிக்கிட்ட பிறகு இப்ப நீயே விவாகரத்து கேட்கற.. என்னை ஒரு மனுசனா கூட உன்னால மதிக்க முடியாதா.? உன் கண்ணுல தெரியாம பட்டுட்டேன்.. அதுக்காக காலமெல்லாம் சாவடிப்பியா புவனா.? என்னைப் பார்த்தா உனக்கே பாவமா இல்லையா.?" பரிதாபமாக கேட்டான்.

"நான் உங்களுக்கு செட் ஆனவ இல்ல மாமா.." விழிகளில் நீர் பொங்க சொன்னவளை கோபத்தோடு பார்த்தான் மூர்த்தி. அவள் தன்னையே தாழ்த்திக் கொள்வது அவனுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. இது அத்தனைக்கும் காரணம் முத்தமிழ்தான் என்று கோபத்தில் பொங்கியது அவனின் சகோதர நெஞ்சம்.

முத்தமிழ் முகத்தை தேய்த்துக் கொண்டான்.

"உன்னோட ரீசன் எனக்கு தேவை கிடையாது புவனா.. நம்ம விசயத்துல முடிவெடுக்க வேண்டிய வாய்ப்பு எப்பவோ உன்னை விட்டு போயிடுச்சி. இனி இங்கே என் டிசிசன் மட்டும்தான்.! நீ என்னை விட்டு பிரியறதா இருந்தா ஒன்னு நான் சாகணும். இல்லன்னா நீ சாகணும்.. மத்தபடி உன் இஷ்டபடி உன்னை ஆடவிட்டு வேடிக்கை பார்க்கற பொறுமை எனக்கு கிடையாது‌‌.." என்றவன் அவளை இழுத்துக் கொண்டு வெளியே நடந்தான்.

"விடுங்க மாமா.." என்றவளின் குரல் அவனின் காதுகளில் ஏறவே இல்லை.

"தமிழ்.." கார்த்திக் ஓடி வந்து இருவருக்கும் முன்னால் நின்றான்.

"தப்பா எடுத்துக்காத.. என் மேல கோபப்படாத.. எதுவா இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம்.. நீ ரொம்ப கோபமா இருக்க.. ஒரு இரண்டு நாள் கழிச்சி இவளை அனுப்பி வைக்கிறோமே.!" கவனத்தோடு கேட்டான்.

முத்தமிழ் சிரித்தான். "இரண்டு நாள்ல இவ முட்டாள் மூளையை முழுசா மாத்தி வைக்கவா.?" என்றுக் கேட்டவனின் தோளை பற்றி தன் பக்கம் திருப்பினான் மூர்த்தி.

"இப்படி முட்டாள் முட்டாள்ன்னு திட்டினா அவளுக்கு வருத்தமா இருக்காதா.? உன் அளவுக்கு அவ படிக்கல.. அவ்வளவுதான். அதுக்காக என்ன வேணாலும் பேசுவியா நீ.? எல்லாம் இவளை சொல்லணும்.. அப்பவே இவன் செட் ஆக மாட்டான்னு சொன்னேன்.. அடம் பிடிச்சி கல்யாணம் பண்ணா.." கடுப்போடு தங்கையையும் சேர்த்து திட்டினான்.

மூர்த்தியின் கையை தட்டி விட்டான் முத்தமிழ்.

"தேவையில்லாம மேல கை வைக்காத.! முட்டாளை முட்டாள்ன்னு மட்டும்தான் சொல்லுவாங்க.. இவளுக்கு அறிவு இருந்திருந்தா அப்ப கல்யாணமும் கேட்டிருக்க மாட்டா.. இப்ப டைவர்ஸும் கேட்டிருக்க மாட்டா.." கடித்த பற்களிடையே வார்த்தைகளை மென்று துப்பினான் முத்தமிழ். புவனாவிற்குதான் இதயம் வலித்தது. அவன் திட்டியது இப்போதும் கூட சுத்தமாக சொரணையை தரவேயில்லை. தேவையில்லாமல் தன்னால் டென்ஷன் ஆகிறானே என்றுதான் கவலைப்பட்டாள்.

புவனாவை அருகில் இழுத்து அவளின் நெற்றியில் இரு விரல்களை குத்தி காட்டினான் முத்தமிழ். "இந்த மண்டையில் இருக்கும் மசாலா பத்தி உங்க யாருக்கும் தெரியாது.. ஆனா எனக்கு ரொம்ப நல்லா தெரியும்.. இவளை எப்படி வழிக்கு கொண்டு வருவதுன்னும் எனக்கு மட்டும்தான் தெரியும். அதனால நீங்க யாரும் எங்களுக்கு நடுவுல வராதிங்க.. என்னை தவிர வேற யாராலும் இவளை மேனேஜ் பண்ணவே முடியாது.. அனுபவசாலியா சொல்றேன்.. புரிஞ்சிப்பிங்கன்னு நினைக்கிறேன்.." என்றவன் வெளியே நடந்தான். புவனா கண்களை துடைத்துக் கொண்டே அவன் பின்னால் நடந்தாள்.

மூர்த்திக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. தங்கையின் அழுகை அவனுக்குள் இருந்த பாசத்தை தட்டி எழுப்பியது. அதே சமயம் முத்தமிழ் சொன்னதில் இருந்த உண்மையும் புரிந்தது‌.

முத்தமிழ் பைக்கை முறுக்கினான். "உட்கார்ந்து தொலை.." என்றான். புவனா விம்மிக் கொண்டே அமர்ந்தாள்.

"நெருப்பை விட மோசமா இருக்கேன் நான்.. அழுகை சத்தம் வெளியே வந்தா உன்னை கொன்னுட்டு நான் ஜெயிலுக்கு போவேன்.! நீ ஆசைப்பட்டு கட்டிய மாணாளன் ஜெயில்ல இருப்பதை பார்த்து ஆன்மாவா சாந்தியடையுவ நீ.!" என்று கேலியும் கர்ஜனையுமாக சொன்னான்.

புவனா சட்டென்று வாயை மூடிக் கொண்டாள். "சாரி மாமா.." என்றாள் சிறு குரலில்.

முத்தமிழ் வேகமாக பைக்கை கிளப்பினான். புவனா பயத்தில் அவனை அணைத்துக் கொண்டாள். அவனின் முதுகில் முகம் புதைத்துக் கொண்டவளுக்கு இதற்கு என்ன திட்ட போகிறானோ என்று பயமாக இருந்தது.

"பாவம் பாப்பா.." என்று தன் அறையின் படுக்கையில் படுத்தபடி சொன்னான் மூர்த்தி. சரண் வழக்கம்போல கார்த்திக் அபிராமியுடன் தூங்க சென்றிருந்தான்.

"எங்க தமிழ் அண்ணன்தான் உண்மையிலேயே பாவம்.." தன் கூந்தலில் இருந்த பூச்சரத்தை கழட்டிபடியே சொன்னாள் சுவாதி.

"உங்க நொண்ணன் நல்லவனா இருந்திருந்தா அவ ஏன் அப்படி அழ போறா.?" என்ற கணவனின் முகத்தில் பூச்சரத்தை விட்டெறிந்தவள் "உங்க தங்கச்சி நல்லவளா இருந்திருந்தா எங்க அண்ணன் ஏன் இப்படி டென்சன்ல வாழ போறாரு.?" என்று திருப்பிக் கேட்டாள்.

மூர்த்தி எழுந்து அமர்ந்தான். பூச்சரத்தை முகர்ந்தான். "வாடாத பூவை ஏன்டி கழட்டி எறிஞ்ச.?" என்று சந்தேகமாக கேட்டான்.

"பூச்சரம் மேல அவ்வளவு அக்கறை இருந்தா நீங்க வேணா உங்க காதுல வச்சிக்கங்க.." என்று கிண்டலடித்தாள்.

"கேடி.. நீ எறிஞ்ச பூச்சரம் முகத்தில் பட்டு எனக்கு காயம் ஆயிடுச்சி.. இதுக்கு கேஸ் பைல் பண்ண போறேன்.. ஜாமின் வேணும்ன்னா டபுள் கிஸ் கொடு.." என்றான் எழுந்து நின்றபடி.

'தங்கச்சியை டீல்ல விட்டுட்டாரா.? இல்ல எங்க அண்ணன் மேல உள்ள நம்பிக்கையா.?' என்று மனதுக்குள் கேட்டுச் சிரித்தவள் "எனக்கு ஜாமினே வேணாம்.." என்றாள்.

அருகில் அவன் நெருங்கியது கண்டவள் அவசரமாக பின்னால் நகர்ந்தாள்.

"வேணாம் கேடி போலிஸ்.. அப்புறம் நான்.." அவள் மேலே பேசும் முன் அவளின் இதழ்கள் தன் சுதந்திரத்தை இழந்து விட்டன. கைது செய்த கணவனை விரட்ட மனமில்லாமல் அவளும் சிறைப்பட்டுப் போனாள்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN