மணாளனின் மனம் 28

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
புவனா தயங்கி தயங்கி அறைக்குள் வந்தாள். முதல் இரவில் இருந்ததை விட இப்போதுதான் புதிதாக பயம் இருந்தது.

இரவு மணி ஏழுக்கு இருவரும் வீடு வந்து சேர்ந்தார்கள். வீட்டிற்கு வந்ததிலிருந்து ஒரு வார்த்தை பேசவில்லை முத்தமிழ். உண்ணும்போது கூட நெருப்பாக அமர்ந்திருந்தான்.

யசோதாவும் பாட்டியும் தாத்தாவும் அவளின் நலம் விசாரித்தார்கள். அவள் பதில் சொல்வதை வெறித்து பார்த்தபடி அமர்ந்திருந்தான் முத்தமிழ். அவள் அந்த பக்கம் இந்த பக்கம் நடந்தாலும் அவனின் பார்வை விடாமல் துரத்தியது. அவளுக்கு உண்மையிலேயே பயமாக இருந்தது. இன்று நன்றாக சிக்கி விட்டோம் என்று நினைத்து கவலைப்பட்டுக் கொண்டிருந்தாள்.

இவள் அறைக்குள் வந்த அடுத்த நொடி கதவை அறைந்து சாத்தினான் முத்தமிழ். அவன் கதவின் அருகில் நின்றிருந்ததை அவள் கவனிக்க தவறிவிட்டாள். கதவு சாத்தப்படும் சத்தம் கேட்டுப் பயத்தில் துள்ளி விழுந்தாள்.

புவனா அவன் திசைக்கு திரும்பினாள். அதே நொடியில் அவளை அறைந்தான் அவன்.

கன்னத்தை பற்றிக் கொண்டவள் அவனை கண்ணீரோடு பார்த்தாள்.

"ஏ.." அவள் முடிக்கும் முன்னால் மீண்டும் ஒரு அறையை மறு கன்னத்தில் தந்தான்.

"ஏன் அடிக்கிறேன்னா.. உனக்கு வாய்ல சொன்னா எந்த வெங்காயமும் புரியாது இல்லையா.. அதான்.!" என்றான் அவனே.

"இப்ப கூட வலிச்சிருக்காது இல்ல.? ஏனா உனக்குத்தான் சொரணைங்கற ஒரு விசயமே இல்லையே.!" என்றான் கடுமையான குரலில்.

அவன் சொன்னது என்னவோ உண்மைதான். மாமா கோபத்தில் இருக்கிறார். அடித்து விட்டால் கோபம் தீர்ந்து அவருக்கு மனம் நிம்மதியாகி விடும் என்ற எண்ணத்தில்தான் இருந்தாள் அவள்.

"யாரை கேட்டு டைவர்ஸ் வேணும்ன்னு உங்க அண்ணனுங்ககிட்ட கேட்ட.? நான் உன்னை என்ன அப்படி சித்திரவதை பண்ணேன்.?" எனக் கேட்டவனுக்கு அவள் டைவர்ஸ் கேட்டதை நினைத்து பார்க்கையில் ஆத்திரத்தில் ரத்தம் கொதித்தது.

"ஏனா நீங்களாவது நிம்மதியா இருப்பிங்கன்னுதான்.!" என்றவளை உறுத்துப் பார்த்தவன் "நான் நிம்மதியா இருக்கறது என் மனசு சம்பந்தப்பட்டது. அதுக்கும் உனக்கும் நடுவுல எந்த சம்பந்தமும் கிடையாது. நான் உன்னை அந்த டாக்டர்கிட்ட கூட்டிப் போக காரணம் உன் தற்கொலை முயற்சி என்னை எந்த அளவுக்கு உடைச்சதுன்னு புரிய வைக்கதான்.! ஆனா நீ அதையே சாக்க வச்சி டைவர்ஸ் கேட்கற.. உனக்கு கொழுப்புதானே.?" என்று எரிந்து விழுந்தான்.

"கோபப்படாதிங்க மாமா.. உங்களுக்கு பிடிக்காதுன்னு தெரியாது. நான் டைவர்ஸ் தந்தா உங்களுக்கு ஓகேன்னு நினைச்சேன்.."

முத்தமிழ் கண்களை மூடியபடி கதவிலேயே சாய்ந்து நின்றான். காதல் இல்லாத திருமண வாழ்வு முடியாத ஒன்றா என்று கவலையோடு யோசித்தான்.

மனதின் வேதனையை வெளிக்காட்ட தெரியவில்லை. வெளிக்காட்ட பிடிக்கவும் இல்லை. விழிகள் இரண்டும் கலங்குவது போலவே இருந்தது. அவரவர் வாழ்க்கையை அவரவர் தீர்மானிப்பது உண்மையென்றால் தனக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு நிலை என்று வருத்தப்பட்டான். அவனே எதிர்ப்பார்க்காத நேரத்தில் அவனின் வாழ்வின் தீர்மானங்கள் பலவும் புவனாவின் கைகளுக்கு சென்று விட்டது போலிருந்தது. இப்படி சென்றால் இன்னும் சில மாதங்களில் அவளின் கண் சைகைகளுக்கு கட்டுப்பட்டு விடுவோம் என்பது போல இருந்தது. பிசிகல் டச் இல்லாத இந்த நேரத்திலேயே இப்படி கவிழ்த்து விட்டவள் மற்ற கணவன் மனைவியர் போல வாழ ஆரம்பித்தால் முழுதாக சாய்த்து விடுவாள் என்பது புரிந்து பயந்தான்.

அவளிடம் விழவும் விரும்பவில்லை. அவளை விலக்கி அனுப்பவும் முடியவில்லை. ஆரம்பிக்கும் முன்பே காதல் இப்படி படுத்தினால் காதலின் வளையத்திற்குள் ஓரடி எடுத்து வைத்தால் என்ன ஆகுமோ என்று பயந்தான்.

"என்னாச்சி மாமா.? எதுவா இருந்தாலும் என்கிட்ட பேசுங்க.. நீங்க யோசிச்சி யோசிச்சி நிக்கறதை பார்த்தாலே பயமா இருக்கு.. மறுபடியும் அந்த டாக்டர்கிட்ட வேணா போலாமா.?" அக்கறையும் கவலையுமாக கேட்டாள் புவனா.

முத்தமிழ் கண்களை திறந்தான். கலங்கியிருந்த விழிகளில் இருந்து‌ இரு துளி கண்ணீர் வழிந்தது.

"சாரி மாமா.. இனி டைவர்ஸ் கேட்க மாட்டேன்.. அழாதிங்க.." என்றவள் சட்டென அவனை அணைத்துக் கொண்டாள்.

அவளின் கன்னத்தில் இவனின் விரல் தடம் அப்படியே தென்பட்டது. ஆனால் இவள் தனக்கு சமாதானம் சொல்கிறாளே என்று வருத்தப்பட்டான். இவளின் அன்பு அதிகம் பயத்தை தந்தது. சுயநலமில்லாத காதலை போன்று வேறு எதுவும் ஆபத்து கிடையாது என்று நம்பினான்.

"நான்தான் முட்டாள்.. எனக்குத்தான் அறிவே கிடையாதுன்னு உங்களுக்கு தெரியாதா.? என்னை நாலு சாத்து சாத்துறதை விட்டு நீங்க ஏன் பீல் பண்றிங்க.? நிஜமா சாரி மாமா.!" என்றாள்.

முத்தமிழ் அவளை தன்னிடமிருந்து விலக்கி நிறுத்தினான்.

"என்னோடு வா.." என்றவன் அழைத்து வந்து கட்டிலில் அமர வைத்தான். கட்டிலில் ஏறி அவளின் முன்னால் சம்மணமிட்டு அமர்ந்தவன் "இன்னைக்கு பேசி தீர்த்துடலாம்.." என்றான்.

புவனா சரியென்று தலையாட்டினாள். ஆனால் உள்ளுக்குள் என்னவோ உதறதான் செய்தது. என்ன பேச போகிறானோ என்ற பயத்தில் இதயம் வேறு தாறுமாறாக துடித்தது.

"நீ என்னை லவ் பண்ற.. ரைட்‌.?"

அவனின் கேள்விக்கு ஆமென தலையசைத்தாள்.

"ஆனா நான் உன்னை லவ் பண்ணல. உன்னை லவ் பண்ணவும் விரும்பல.." அவன் சொன்னதை கேட்டு அவளுக்கு நெஞ்சம் வலித்தது. தனது வலியை முகத்தில் காட்டவே கூடாது என்றுதான் நினைத்தாள். ஆனால் அவளின் முக சுருக்கத்தையும், வாட்டத்தையும் அவனாலும் பார்க்க முடிந்தது.

"உனக்கு என் லவ் தேவை கிடையாது. நீ என்னை லவ் பண்ற பார்த்தியா, நான் இனி அதுக்கு உனக்கு முழு உரிமை தரேன். நீ தாராளமா லவ் பண்ணிக்கலாம்.."

புவனா மொத்தமாக தலையசைத்து வைத்தாள். வேறு என்ன செய்ய முடியும் அவளால் மட்டும்.?

"நீ என்னை எவ்வளவு வேணாலும் லவ் பண்ணிக்க.. ஆனா அதை எப்பவும் என்கிட்ட காட்டவே கூடாது.."

'மாமாவுக்கு லூசு பிடிச்சிருக்கான்னு அந்த டாக்டர்கிட்ட கேட்காம விட்டுட்டேனே.!' புவனா சோகமாக நினைத்த நேரத்தில் "உன் லவ் உன் மனசுக்குள்ள மட்டும்தான் இருக்கணும்.. என் வரை வர கூடாது.! எனக்கு என்ன ஆனாலும் நீ என் மேல பாசமே காட்ட கூடாது.! என் மேல அக்கறை காட்ட கூடாது.!" என்று மேலும் சொன்னான்.

புவனா விழிகளை கூட அசைக்காமல் அவனை பார்த்துக் கொண்டிருந்தாள்.

"நீ என் வொய்ப். அதனால உன்னை பாத்துக்கறது என்னோட கடமை.!"

"ஓ.." என்றுவிட்டவள் அவசரமாக நாக்கை கடித்துக் கொண்டாள்.

"உனக்கு எந்த குறையும் நான் வைக்க மாட்டேன். பெட்ல கூட எந்த குறையும் வைக்க மாட்டேன். நீ என்னை நம்பலாம்.! ஆனா லவ்வை மட்டும் எதிர்பார்க்காத.! நாம இப்படியே காலம் முழுக்க வாழ்ந்துட்டு போயிடலாம். ஓகே.? உனக்கும் கஷ்டம் இல்ல. எனக்கும் கஷ்டம் இல்ல.."

தலையசைத்தவள் "லவ் பண்ண மாட்டேன்னு யாருக்காவது சத்தியம் பண்ணி தந்திருக்கிங்களா மாமா.? ஆனா நீங்க பயப்பட தேவையே கிடையாது.. என் அண்ணன் தப்பு பண்ணான். உங்க தங்கச்சியும் தப்பு பண்ணா.. அவங்க லவ் பண்றதும் பழி வாங்கிக்கறதும் அவங்களோட லைப்போடு சம்பந்தப்பட்டது. நமக்கு அப்படி கிடையாது. நமக்குள்ள எந்த விரோதமும் இல்ல.. நான் உங்களை கல்யாணம் பண்ணிக்க நினைச்சி சூஸைட் டிரை பண்ணல. உங்களுக்கு வேறு ஒருத்தரோட கல்யாணம்ன்னு வந்த பிறகு வாழ இஷ்டம் இல்லாமதான் சூஸைட் டிரை பண்ணேன்.! உங்களோட லவ்வையோ, இல்ல உங்களுக்கு வொய்ப்ங்கற ஸ்தானத்தையோ ப்ளாக்மெயில் மூலமா அடைய நினைச்சிருந்தா நான் எப்பவோ விஷம் குடிச்சி இருப்பேன்.. நல்லா நினைச்சி பாருங்க. நான் உங்களை அடையணும்ன்னு விஷம் குடிக்கவே கிடையாது. வயித்து லலிக்காரன் எப்படி வலி தாங்காம விஷம் குடிப்பானோ அது போல நானும் என் இதய வலி தாங்காம விஷம் குடிச்சேன்.! நீங்க என்னை பார்த்தோ என் லவ்வை பார்த்தோ பயப்படவே வேணாம்.!" என்றாள்.

முத்தமிழ் மறுப்பாக தலையசைத்தான்.

"உனக்கு புரியாது புவனா.. என் பயம் எப்படின்னா.." என்றவன் விளக்கம் தர யோசித்துவிட்டு அவளைப் பார்த்தான். "பர்ஸ்ட் டைம் பர்ஸ்ட் நைட் நடக்கும்போது வலிக்குமேன்னு உனக்கு பயமா இருக்கும் இல்லையா.? அது போலதான் எனக்கும்.!" என்றான். அவனின் யோசனைக்கு அப்போதைக்கு இதுதான் உதாரணமாக கிடைத்தது.

புவனா அப்பாவியாக அவனைப் பார்த்தாள். "ஆனா எனக்கு பயமா இருக்காதே.!" என்றாள்.

முத்தமிழ் அவளை ஆச்சரியமாக பார்த்தான். நிஜமாகவா என்பது போல இருந்தது அவனின் பார்வை.

"ரொம்ப வலிக்கும் புவனா.. அப்பவும் பயமா இருக்காதா.?" என்றவனிடம் இல்லையென தலையசைத்தவள் "உங்களை கட்டி பிடிச்சிப்பேன்.. அதனால எந்த வலியும் இருக்காது. பயமாவும் இருக்காது.." என்றாள்.

முத்தமிழ் குழப்பத்தோடு அவளை பார்த்தான். "ஹக் பண்ணிக்கிட்டா வலிக்காதா.? இது என்ன புது புரளியா இருக்கு.?" என்று முனகினான்.

"நிஜமாதான் மாமா.. பயப்படாதிங்க.. எனக்கு வலிக்காது. அதெல்லாம் பெரிய மேட்டரே இல்ல.!" என்று அவனின் கைப்பிடித்து தைரியம் சொன்னாள்.

"ஆமா உனக்கு யாரு இந்த மேட்டர் பத்தியெல்லாம் சொல்லி தந்தது.?" சந்தேகத்தோடு கேட்டான்.

புவனா வெட்கத்தோடு தலை குனிந்தாள். "புக்ல படிச்சேன் மாமா.." என்றாள்.

"ஹிஸ்ட்ரி புக்கை தவிர மீதி எல்லா புக்கையும் படிச்சிருப்பா போல.." என்று முனகியவனை தயக்கமாக அவனை பார்த்தாள். "உங்களுக்கு எப்படி மாமா இதெல்லாம் தெரியும்.?" என்றுக் கேட்டாள்.

"இத்தனை வருச எக்ஸ்பீரியன்ஸ்.." என்று அவன் சொன்னதும் அவளை மீறி சிரித்தாள். வயிற்றை பிடித்துக் கொண்டு விழுந்து விழுந்து சிரித்தவள் "உங்க பின்னாடி அஞ்சி வருசத்துக்கு மேல சுத்தி இருக்கேன்.! அன்னைக்கு நீங்க மது அக்காவை லவ் பண்ணேன்னு சொன்ன போதே நம்பல நான். இதை எப்படி நம்புவேன்னு நினைச்சிங்க‌.?" என்றுக் கேட்டாள்.

முத்தமிழுக்கு முகத்தை மூடிக் கொள்ள வேண்டும் போல இருந்தது. 'இவக்கிட்ட எல்லாம் மொக்கை வாங்குறோமே' என்று நினைத்தவன் "நானும் புக்லதான் படிச்சேன்.." என்றுச் சுவற்றைப் பார்த்துக் கொண்டு சிறுகுரலில் சொன்னான்.

அவனின் கையை அழுத்தினாள். "மாமா.." என்று அழைத்தாள்.

திரும்பிப் பார்த்தான்.

"நீங்க நினைக்கிற மாதிரி எதுவும் இல்ல.. பிரசவத்தை தாங்குற ஒரு பொண்ணால இந்த சின்ன வலியெல்லாம் தாங்க முடியாதுன்னு நினைக்கறதே தப்புதான்.! ரேப், செக்ஸ் இதையெல்லாம் தாண்டியது தாம்பத்தியம்.. இது லவ் மேக் பண்றது மாமா.! இதுலயெல்லாம் எனக்கு பயமே கிடையாது.! உங்களை எவ்வளவு லவ் பண்றேன்னு உங்களுக்கு சொன்னாலும் புரியாது.! லவ்ன்னா என்னன்னு புரிஞ்சா உங்களுக்கு இப்படி கேனத்தனமான பயமும் இருக்காது.! காதலும் இப்படிதான்.! நீங்க பயப்படுற அளவுக்கெல்லாம் லவ் கிடையாது.! அது ஒரு சுகமான பீலிங்.! நான் உங்களை எப்பவும் அடிமைப்படுத்த மாட்டேன்.! கார்த்திக்கும் அபிராமியும் சரியான லூசுங்க மாமா.! அவங்களை பார்த்துட்டு நீங்க காதலை கண்டு பயப்படுவிங்கன்னு நான் நினைக்கவே இல்ல.! லவ் க்யூட்டானது மாமா, உங்களை போலவே.!" என்று அவனின் மீசையை பிடித்து திருகினாள்.

அவளின் கையை தட்டி விட்டவன் "இந்த கொஞ்சல், கெஞ்சலெல்லாம் இருக்க கூடாது.! லவ், நேசம், பாசம் எதையும் என்கிட்ட நீ காட்ட கூடாது.! இதுதான் நமக்குள்ள டீல்.!" என்றான்.

'விடிய விடிய ராமாயணம் கேட்டு விடிஞ்சதும் சீதைக்கு ராமன் சித்தப்பன்னான்னு கேட்ட அதே கணக்குதான் இதுவும் போல.!' என்று நினைத்தவன் "சரி மாமா.. உங்க இஷ்டமே என் இஷ்டம்.. இனி நான் லவ், நேசம், பாசம்ன்னு எதையும் காட்ட மாட்டேன்.." என்றாள்.

'கழுதைக்கு வாக்கப்பட்ட உதை வாங்கிதான் ஆகணும்ன்னு சொல்வாங்க.! ஆனா எனக்கு வாச்ச கழுதை.. யப்பா சாமி.. எங்கேதான் பிடிச்சாங்களோ இவரை.. இவர் பயத்தையெல்லாம் பார்த்தா இவர் நம்மளை நாம கடைசி வரை பிரசவ அறை வாசலையே மிதிக்க விட மாட்டாரு போலிருக்கே.!' என்று இன்னும் பிறக்காத குழந்தையை நினைத்தெல்லாம் கவலைப்பட்டாள் புவனா.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN