மணாளனின் மனம் 30

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
நாட்கள் அதன் வாக்கில் சென்றுக் கொண்டிருந்தது.

முத்தமிழ் இப்போது நிம்மதியாக இருந்தான். அப்படிதான் நினைத்துக் கொண்டிருந்தான். புவனா அளவோடு விலகி நின்றாள். அவளது தினசரி வேலைகளை வஞ்சகம் இல்லாமல் செய்து தீர்த்தாள். இன்னும் சொல்ல போனால் அவள் அவனை கண்டுக் கொள்ளவில்லை என்று கூட சொல்லலாம்.

அலுவலகம் வருகையில் மதுமிதாவோடு கொஞ்சி பேசி விளையாடினாள். முத்தமிழின் குணத்தை புரிந்துக் கொண்டதன் காரணமாக சத்யா, தயாவிடமிருந்து நான்கடி இடைவெளி விட்டு நின்றே பேசினாள். மாமியாரிடமும், பாட்டியிடமும் நல்ல மருமகள் என்ற பெயரை தினம் தவறாமல் வாங்கிக் கொண்டிருந்தாள். அண்ணன்களிடம் தினம் பேசினாள். பிரச்சனை தீர்ந்தது என்று அவர்களுக்கு புரிய வைத்தாள்.

தான் செய்த சொதப்பலின் காரணமாகதான் எட்டு லட்சம் கடன் ஆனது என்பதைப் புரிந்துக் கொண்டு அமைதியாக வேலைகளை பார்த்தாள்.

இரு வாரங்களுக்கு ஒருமுறை பிறந்த வீடு சென்று வந்தாள். அவள் ஒவ்வொரு முறை பிறந்த வீடு சென்ற போதும் முத்தமிழுக்கு சிறு பயம் உண்டானதும் உண்மைதான். எங்கே அங்கே போய் இருந்துக் கொண்டு மீண்டும் விவாகரத்து கேட்டு விடுவாளோ என்று கலங்கினான்.

புவனா பிறந்த வீடு வந்தபோதெல்லாம் அம்மாவிடமும் அப்பாவிடமும் அதிகம் நெருங்கினாள். தான் செய்த செயலுக்கு அவர்களுக்கு எவ்வளவு இதம் தந்தாலும் அவர்களின் மனதின் காயம் ஆறாது என்பதைப் புரிந்துக் கொண்டாள்.

அவளை மருத்துவர் மங்கையிடம் மாதம் ஒருமுறை அழைத்துச் சென்றான் முத்தமிழ். தற்கொலை தவறு என்று கவுன்சிலிங் நடந்துக் கொண்டே இருந்தது. கவுன்சிலிங்கை கேட்க கேட்கதான் 'இவங்க அறுவையை கேட்கறதுக்கு பதிலா தற்கொலையே பண்ணிக்கலாம்ன்னு இப்ப தோணுதே.!' என்று மனதுக்குள் கிண்டலாக நினைத்து சிரித்தாள்.

வயலில் செடிகளும் கொடிகளும் செழித்து வளர்ந்தன. ஆனால் புவனா விதைத்த கடலைகள் மட்டும் இரு மடங்கு செழிப்பில் வளர்ந்திருந்தன. இது எப்படி சாத்தியம் என்று அவளுக்கே சந்தேகம் வந்தது. மழை பொழியுகையில் எல்லாம் இரு மடங்கு உரத்தை கொட்டி அந்த செடிகளை மட்டும் அதிக கவனத்தோடு பார்த்துக் கொண்ட முத்தமிழால்தான் இந்த வளர்ச்சி என்று அவளுக்கு தெரியவில்லை.

செடிகள் சில இடங்களில் அதிக இடைவெளியோடும், சில இடங்களில் அடர்ந்தும் வளர்ந்திருந்தன. அதற்கும் முத்தமிழ் தன்னை திட்டுவான் என்று நினைத்திருந்தாள் புவனா. ஆனால் அவன் திட்டாமல் விட்டது அவளுக்கே ஆச்சரியமாக இருந்தது.

மாதா மாதம் எட்டாயிரம் சேமிப்பில் சேர்ந்துக் கொண்டிருந்தது. இரவுகளில் முத்தமிழ் உறங்க ஆரம்பித்த பிறகு ஹிஸ்டிரி புத்தகங்களை வாசிக்க வேண்டிய சூழல் அவளுக்கு‌.‌ பகலெல்லாம் வேலையால் உடல் சோர்ந்துப் போயிருந்தாலும் கூட புத்தகங்களின் பக்கங்கள் அவளை உறங்க விடாமல் இழுத்தன.

முத்தமிழின் அருகில் அமர்ந்தபடி வரலாறை படித்தவளுக்கு அப்போதுதான் அந்த பாடத்தை எவ்வளவு விரும்பியிருக்கிறோம் என்பது பத்து மடங்கு வேகத்தில் நினைவிற்கு திரும்பி வந்தது. முன்பாவது பாடங்களை இரண்டு முறை படிக்க வேண்டி இருக்கும்‌. ஆனால் இப்போதோ ஒரு முறை படித்தாலே அனைத்தும் அப்படியே நினைவில் பதிந்துப் போனது. அதற்கும் அவளுக்கு தன் மீதேதான் கோபம் வந்தது. கிடைக்காத பொருள் கிடைத்த பிறகுதான் காலடியிலும், உள்ளங்கையிலும் இருக்கும் விசயங்களை பற்றி நினைவு வரும் என்பது எவ்வளவு உண்மையாக போய் விட்டது என்று நினைத்து வருந்தினாள்.

வரலாற்று புத்தகங்களில் அவளுக்கு பிடித்த பக்கங்கள் வந்தபோது கண்ணீர் தானாக விழுந்து காகிதத்தை நனைத்தது.

அம்மாவின் புன்னகை, அப்பாவின் உழைப்பு, அண்ணன்களின் பாசம், தான் கொண்ட லட்சியங்கள் அத்தனையும் ஒற்றைக் காதலால் மறந்துப் போனதை அறிந்தவளுக்கு உள்ளம் கரடு முரடாக வலித்தது. மழுங்கி போன மனதை பல வருடங்கள் கழித்து கூர் தீட்டியவளுக்கு காதலேதான் துருவாய் மாறி மனதை அறித்துக் கொண்டு இருந்திருக்கிறது என்ற விசயம் புரிந்து மனம் வெந்துப் போனது.

எட்டாத கனிக்காக எத்தனை விசயங்களை மறந்துள்ளோம் என்றறிருந்து தன் மீதே கோபம் கொண்டாள். முத்தமிழ் இத்தனை நாளாக திட்டிய முட்டாள் என்ற வார்த்தையின் அர்த்தம் இப்போதுதான் அவளுக்கே விளங்கியது.

அதிக சோகம் மனதைத் தாக்குகையில் அவளையும் மீறி தன் அருகில் உறங்கியவனின் நெஞ்சில்தான் முகம் புதைத்து அழுகையை அடக்கினாள்.

சுய கழிவிரக்கத்தை விட மோசமான தண்டனை உலகில் உண்டா என்று நினைத்துப் பார்த்து சிரித்தாள். இதற்கு பதில் முத்தமிழிடம் திட்டு வாங்கியபடியே காலம் கடந்திருக்கலாமோ என்று கூட யோசித்தாள்.

அவளின் வேதனையை முத்தமிழ் தன் நெஞ்சில் அப்படியே வாங்கிக் கொண்டிருந்தான். காதல்.. பாசம்.. நேசம்.. எதையும் வெளிக்காட்டினால்தான் நிஜமா.? உள்ளுக்குள் வைத்திருந்தாலுமே கூட அவனாலும் அவளின் அனைத்து வலிகளையும் உணர முடிந்தது. அவளுக்கு ஆறுதல் சொல்வதை விட அப்படியே விட்டு விடுவதுதான் சரியென்று தோன்றியது அவனுக்கும்!

சுவாதிக்கு பெண் குழந்தை பிறந்தது. முத்தமிழும் புவனாவும் குழந்தையை பார்க்க சென்றார்கள்.

"அத்தையும் மாமனும் மருமகளை பார்க்க வந்திருக்கிங்களா.?" எனக் கேட்டு குழந்தையை தூக்கி புவனாவின் கையில் தந்தாள் சுவாதியின் அம்மா.

சுவாதியின் அம்மா சொன்னதை கேட்டதும் புவனா முத்தமிழைதான் பார்த்தாள். அவளின் பார்வையின் அர்த்தம் அவனுக்குத்தான் விளங்கவில்லை.

"குழந்தை என்னை மாதிரியே இருக்கா அண்ணா.." என்று மூர்த்தியின் தோளில் சாய்ந்தாள் புவனா.

"ஆமா.." என்று குழந்தையின் கன்னம் வருடியவன் "பாப்பா அப்படியே உன்னை மாதிரியே அழகா இருக்கா புவனா.." என்றான்.

முத்தமிழுக்கு என்னவோ குழந்தை சுவாதியை போலதான் இருப்பதாக தோன்றியது. அதை சொல்லி ஏன் வம்பை வளர்க்க வேண்டும் என்று சுவாதியிடம் நலம் விசாரித்தபடி அமைதியாக அமர்ந்திருந்தான்.

மூர்த்தியும் புவனாவும் குழந்தை பசிக்கு அழுத பிறகே அந்த குழந்தையை சுவாதியிடம் திருப்பி தந்தார்கள்.

எங்கே தனக்கும் குழந்தை வேண்டும் என்று கேட்டு விடப் போகிறாளோ என்ற கவலையோடு மருத்துவமனையை விட்டு வெளியே வந்தான் முத்தமிழ்.

ஆனால் அவளோ "அண்ணியோட அம்மா மருமகள்ன்னு சொன்னாங்களே.. உங்களுக்கு ஏதாவது புரிஞ்சதா.?" என்றுக் கேட்டாள் பைக்கின் அருகே வந்த பிறகு.

முத்தமிழ் உதட்டை பிதுக்கியபடி மொத்தமாக தோள்களை குலுக்கினான்.

"உறவு முறை மாறிடுச்சி மாமா.. பிறந்ததுல இருந்து என் அண்ணன்களுக்கும் எனக்கும் ஒரே அம்மா ஒரே அப்பாதான்.. மாமாவோ அத்தையோ.. எங்களுக்கு எல்லாம் ஒரே உறவுதான். ஆனா இந்த திருமணம் உறவு முறையை முழுசா மாத்திடுது இல்ல.. இனி பிறக்க போகும் புது உயிர்களை என் அண்ணன்கள் என்ன உறவு வச்சி அழைச்சாலும் எனக்கு அது பொருந்தாது. நீங்கதான் எனக்கான இணை. உங்களுக்கு யார் மருமகனோ அவன்தான் எனக்கு மருமகன். உங்களுக்கு யாராவது சம்பந்தியானால் அவங்கதான் எனக்கும் சம்பந்தி.." என்றவள் அவன் தன்னை விசித்திரமாக பார்ப்பதை உணர்ந்து "சாரி மாமா.. என்னவோ உளறிட்டேன்.. ஏதோ லூசுதனமான யோசனை.." என்றவள் அமைதியாக தலை குனிந்துக் கொண்டாள்.

எதுவும் சொல்லாமல் பைக்கை கிளப்பினான் முத்தமிழ். சொல்ல வந்ததை அவள் சரியாக விளக்கவில்லைதான்‌. ஆனால் அவனுக்கு நன்றாகவே புரிந்திருந்தது.

'பிறந்த வீட்டின் உறவுகள் அத்தனையையும் உன் ஒருவனில் காண்கிறேன் கண்ணாளா.! என் தாய் தந்தை இடத்தை மட்டுமல்ல என் சகோதர சகோதரிகளின் இடத்தையும் நீயே பறித்துக் கொண்டாய் கள்வனே.!' என்று சொல்ல முயன்றிருந்தாள் அவள். புரிந்துக் கொண்டவனுக்கு தான் அவளுக்கு எந்த அளவுக்கு முக்கியம் என்பதும் புரிந்தது. அவள் தனக்கு எவ்வளவு முக்கியம் என்றும் புரிந்ததுதான் இருந்தது‌.

அன்று கடலைகளை ஆய்ந்து களத்து மேட்டிலேயே உலர வைத்தார்கள். புவனா விதைத்து முளைத்த செடிகளில் இருந்த கடலைகளை மட்டும் தனியாக உலர்த்தினான் முத்தமிழ். உலர்ந்ததும் எடுத்துப் பத்திரப்படுத்திச் சமையலறையின் தனி செல்பில் வைத்துக் கொண்டான். அது அவனுக்கு மட்டும் என்று யசோதாவிடமும் தகவல் சொன்னான்.

அந்த கடலைகள் ஏதோ ஒரு கடலைகள் என்பது யசோதாவின் நினைப்பு. ஆனால் அந்த கடலைகளுக்கு கூட அர்த்தம் உள்ளது என்று புரிந்திருந்த புவனாவிற்குதான் மெள்ளவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் அழுகை வந்தது. சித்திரவதையாக இருந்தது அவளுக்கு. திரையின் மறுபக்கம் நின்று எதற்காக அவன் சிரிக்க வேண்டும் என்று தனக்குள் கேட்டு அழுதாள். இருவரின் நேசத்திற்கும் இடையில் இருக்கும் திரையை விலக்கி தன்னை அவனுடைய காதலோடு சேர்த்து பிணைத்துக் கொள்ள மாட்டானா என்று ஏங்கியது அவளின் மனம்.

காலம் ஓடியது.

அவர்களுக்கு திருமணமாகி எட்டு மாதங்கள் கடந்து விட்டது.

புவனா பரிட்சையை எழுதி விட்டு வந்தாள். ஆனால் ரிசல்ட்டை பற்றிக் கனவுக் காணவில்லை.

முத்தமிழின் அலுவலகத்திற்கான புது கட்டிடம் திறக்கப்பட்டது. அரை வட்ட வடிவில் கட்டியிருந்த கட்டிடத்தில் தங்களின் திறமைகளை அவர்கள் நால்வரும் காட்டி இருந்தது புவனாவிற்கும் புரிந்தது.

இந்த இடைப்பட்ட காலத்தில் புவனாவிற்கு கத்தி வீச கற்று தந்திருந்தான் முத்தமிழ். வீட்டு உபயோகத்திற்கு பயன்படும் சின்ன கத்தியைதான் தேர்ந்தெடுத்திருந்தான். தூரத்தில் இருப்போரையும் எப்படி தாக்குவது என்று சொல்லி தந்தான். ஆரம்பத்தில் ரொம்ப பயந்தாள் புவனா. கத்தி முத்தமிழ் மீது பட்டு விடுமோ என்று கூட நினைத்து தயங்கினாள். ஆனால் கூர் இல்லாத கத்தியை வைத்துதான் சொல்லி தந்தான் அவன். எதிர்பாராத ஆபத்து வருகையில் எப்படி சுலபமாக தாக்கி விட்டு, முக்கியமாக எதிரில் உள்ளவரை கொல்லாமல் எப்படி தப்பிப்பது என்று சொல்லி தந்தான். சிறு சிறு தற்காப்பு யுக்தியையும் சொல்லித் தந்தான். அவளின் பாதுகாப்பு உபயோகத்திற்கு என்று உறையோடு கூடிய ஒரு சிறு கத்தியையும் பரிசாக தந்தான்.

புவனா அந்த நாளில் அவனை நன்றியோடு பார்த்ததை முத்தமிழால் சில பல வாரங்களுக்கு மறக்கவே முடியவில்லை.

அலுவலகத்தில் முன்பெல்லாம் முத்தமிழுக்கு மட்டும் வேலை செய்துக் கொண்டிருந்தவள் இப்போது அவர்கள் நால்வருக்குமே உதவிகள் செய்ய ஆரம்பித்தாள். இந்த செயலால் மதுமிதாவிற்கு அவளை பல மடங்கு பிடித்து விட்டது.

இவள் கிராமத்தில் இருக்கும் தன் தங்கையை நினைவுப்படுத்துவதாக அடிக்கடி புவனாவிடம் சொல்வான் சத்யா.

தயாவும் கூட அரை மனதாக அவளை தங்கை என்று ஏற்றுக் கொண்டான். அதற்கு காரணம் அவளின் வாயாடிதனம் குறைந்ததுதான். அனைவருக்கும் மரியாதையை சரியான முறையில் தந்தாள் அவள்.

சமையலிலும் தேர்ந்து விட்டாள். யசோதாவின் கைப்பக்குவமும், யமுனாவின் கைப்பக்குவமும் கலந்து வந்து விட்டது இவளுக்கு. தாத்தா கூட தினமும் அவளை பாராட்டினார். முத்தமிழ்தான் ஒற்றை வார்த்தையை கூட முத்தென உதிர்க்காமல் உணவை உண்பான். அவனின் பாராட்டுக்காக காத்திருந்த அவளின் மனமோ வலியை வெளிக்காட்டாமல் வாழ பழகிக் கொண்டிருந்தது.

பகலில் சிறு முத்தத்தை கூட அனுமதிக்கவில்லை அவள். இரவில் கூட அவன் தொடுகையில் இதற்கு அர்த்தமில்லை, இதில் எந்த நேசமும் இல்லை என்று மனதுக்குள் மனனம் செய்துக் கொண்டே இருப்பாள். தப்பி தவறி கூட அவனுக்கு மீண்டும் தான் ஒரு தொந்தரவாக இருந்து விடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தாள்.

அவள் காலமெல்லாம் வாயை மூடி மௌனம் காக்க அவனின் இரு துளி கண்ணீரே போதுமானதாக இருந்தது. அந்த கண்ணீரை மீண்டும் பார்க்க நேர்ந்தால் அதன் பிறகும் தன்னால் தாங்க இயலும் என்று அவளுக்கு நம்பிக்கையில்லை.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN