மணாளனின் மனம் 31

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
பேசி பேசியே காதை செவிடாக்கியவள் இப்போது மௌனமாகவே இருப்பது முத்தமிழுக்கு உறுத்தலாகவேதான் இருந்தது. ஆனால் உறுத்தலை வெளிக்காட்டுபவனா அவன்.?

முத்தமிழும் அவனது நண்பர்களும் அடுத்தடுத்த ப்ரோஜக்ட்களில் பிசியாக இருந்தனர். அதனால் புவனாவிற்கும் உட்கார கூட நேரம் இல்லாத அளவிற்கு வேலை இருந்தது.

அவளின் தேர்வு முடிவை ஆர்வத்தோடு எதிர் பார்த்திருந்தான் முத்தமிழ். ஆனால் அவள் எடுத்த மதிப்பெண் அவனே எதிர் பார்க்காதது. அவள் வரலாறை உண்மையிலேயே நேசித்துள்ளாள் என்பது அப்போதுதான் அவனுக்கும் புரிந்தது. தன் மீது அவள் கொண்ட காதல் அவளுக்கான சாபம் என்பதை குற்ற உணர்வோடு தன்னிடமே ஒப்புக் கொண்டான்.

அபிராமி கருவுற்றாள்.

புவனா முதுகலைக்கு அப்ளை செய்து விட்டு வந்தாள்.

அவளின் செயல்பாடுகள் வெளியே இயல்பாக தெரிந்தாலும் உள்ளுக்குள் நடமாடும் பிணம் போலதான் இருந்தாள். கண்ணை தோண்டி விட்டு சூரியனை பார்க்க சொன்னது போலவே உணர்ந்தாள்.

அந்த வருடத்தில் வயலின் பெரும்பான்மையாக நெல் நட்டார்கள். மீதி இருந்த இடத்தில் வழக்கம் போல மிளகாய், கடலை போன்றவற்றை வளர்த்தார்கள்.

புவனா யோசித்துவிட்டு தன்னிடமிருந்த சேமிப்பு பணத்தை முத்தமிழிடம் நீட்டினாள்.

"இதுல எண்பதாயிரம் காசு இருக்கு.. குத்தகைக்கு எங்கேயாவது நிலம் வாங்கி தரிங்களா.? எதாவது விதைச்சா காசு கிடைக்கும்.!" என்றாள்.

முத்தமிழ் அவளின் முகத்தை சில நொடிகள் பார்த்தான். ஆனால் அவள் கவனிக்காதது போல அங்கிருந்து நகர்ந்து விட்டாள்.

அவள் சொன்னது போலவே குத்தகைக்கு நிலம் பேசினான். வாரிசை வெளிநாட்டு வாழ்க்கைக்கு தந்து விட்ட அதே ஊரை சேர்ந்த வயதான தம்பதி வைத்திருந்த நிலத்தை இவன் கேட்டதும் 'பணமே வேண்டாம், நிலத்தைக் குறையாக விடாமல் பத்து வருடத்திற்கு கூட ஓட்டிக் கொள்ளுங்கள்.. வருடமானால் நெல் மட்டும் சில மூட்டைகள் தந்தால் போதும்..' என்றார் அந்த கிழவர்.

ஆனால் அவர் சொன்னதை அவனால் ஏற்க முடியவில்லை. பின்னால் எந்த வம்பும் வர வேண்டாம் என்று அவர்களிடம் பணத்தை தந்து பத்திரம் எழுதி வாங்கிக் கொண்டான். பத்திரத்திலேயே அவர்கள் கேட்ட நெல்லையும் தருவதாக எழுதி தந்தான்.

குத்தகை நிலத்தை புவனாவால் நம்பவே முடியவில்லை.

"இது வெறும் எண்பதாயிரத்துக்கு தந்தாங்களா.?" என்று நிலத்தை பார்த்தபடி ஆச்சரியமாக கேட்டாள்.

"ம்.." என்றவனை சந்தேகமாக பார்த்தவள் "நீங்க எக்ஸ்ட்ரா லட்சங்கள் தந்து வாங்கி இருக்கிங்களா.?" என்றுக் கேட்டாள்.

ஐந்தாறு ஏக்கர் நிலம். அதுவும் வற்றாத கிணற்று பாசன வசதியுடன். இதை யாராவது வெறும் எண்பதாயிரத்திற்கு தருவார்களா என்ற சந்தேகம் அவளுக்கு மட்டுமில்லை அவள் இடத்தில் யார் இருந்திருந்தாலும் வந்திருக்கும்.

"அவங்க தன் பிள்ளைகளுக்கு இந்த நிலத்தை காப்பாத்தி வைக்க டிரை பண்றாங்க.. அங்காளி பாங்காளிங்கக்கிட்ட தந்தா நிலத்தை கடைசி கும்பிடு போட வேண்டியதா இருந்திருக்கும். நம்மக்கிட்டன்னா பாதுகாப்பா இருக்கும். அதுக்குதான் அவங்க நம்மளை யூஸ் பண்ணிக்கறாங்க.. அதனாலதான் கம்மி காசுக்கு முழு நிலத்தையும் தராங்க. மத்தபடி இது உனக்கு அடிச்ச லக்கா கூட இருக்கலாம்.. ஆனா நீ சீக்கிரமா கடன் கட்டுறதுல எனக்கு கொஞ்சமும் விருப்பம் கிடையாது.." என்று கடைசி வாக்கியத்தை மட்டும் சிறு குரலில் சொன்னான்.

அவன் சொன்னது முழுதுமே புவனாவிற்கு கேட்டது, கடைசி வாக்கியம் உட்பட!

'ஏன் மாமா.?' என்று கேட்க அவளுக்கும் ஆசைதான். ஆனால் எதற்கு அதை வேறு கேட்டு, பிறகு அவன் தன் மனதை துண்டாக்கும்படி ஏதாவது சொல்லி, தான் ஏன் வருந்துவானேன்.? என்று அமைதியாகி கொண்டாள்.

அந்த நிலத்திலும் நெல்லையே பயிரிட்டார்கள் இருவரும்.

மாதங்கள் கழிந்த பிறகு அபிராமிக்கு வளைக்காப்பு நடந்தது. ஆனால் அவள் பிறந்த வீடு வர முடியாது என்று சொல்லி விட்டாள். அவளுக்கு பணி ஓய்வு தந்திருந்தார்கள். ஆனால் அவளால் கார்த்திக்கை விட்டு பிரிந்திருக்க முடியாது என்று அண்ணன் அம்மாவிடம் வெளிப்படையாகவே சொல்லி விட்டாள்.

கார்த்திக் சனி ஞாயிறுகளில் வீடு வந்து விடுவதாக சொல்லி அவளை பிறந்த வீட்டில் இருக்க சொன்னான். ஆனால் அவள் மறுத்து விட்டாள். "என்னை அந்த பக்கம் அனுப்பிட்டு இந்த பக்கம் வேற எவளையாவது செட் பண்ணிக்கலாம்ன்னு ஐடியாவுல இருக்கியா.?" என்று அவனிடம் சண்டையிட்டாள்.

கருவுற்றிருப்பவளின் மனம் எப்படி வேணாலும் மாறும் என்பதை பழகி அனுபவித்திருந்த கார்த்திக் "அந்த வீட்டுல உன்னை பார்த்துக்க அத்தை பாட்டி இருக்காங்க.. இந்த டைம்ல புருசன் துணை வேணும்ன்னு ஏங்குறது சகஜம்தான்‌.! ஆனா அதே மாதிரி உன்னை பத்திரமா பார்த்துக்கணும்ன்னு உங்க அம்மாவும் பாட்டியும் ஆசைப்படுவாங்க இல்லையா.? சும்மா ஒரு நாலு மாசம்.. நடுவுல நான் என்னால முடிஞ்ச வரைக்கும் லீவு எடுத்துக்கிட்டு வந்துடுவேன்.." என்று சொல்லி புரிய வைக்க முயன்றான்.

அபிராமி அதன் பிறகும் மறுத்துதான் பேசினாள். ஆனால் இந்த முறை அவள் போக்கில் விட முடியாது என்று சொல்லி அவளை பிறந்த வீட்டிலேயே விட்டுவிட்டு கிளம்பினான் கார்த்திக். ஆனால் அவன் அந்த பக்கம் நகர்ந்ததும் இவள் போன் எடுத்து அவனுக்கு அழைக்க ஆரம்பித்து விட்டாள்.

அபிராமி வீட்டிற்கு வந்ததில் அந்த வீட்டில் இருந்த அனைவருக்குமே சந்தோசம். அபிராமி தனக்கு அடங்காத மகளாகவே இருந்தாலும் கூட யசோதா அவளை விழுந்து விழுந்து கவனித்துக் கொண்டாள். அபிராமியை அந்த பக்கம் இந்த பக்கம் அசைய விடாமல் அனைத்தையும் அவர்களே செய்தார்கள்.

பாட்டிக்கும் யசோதாவுக்கும் புவனா அளவிற்கு அபிராமியின் மீது பாசம் கிடையாதுதான். ஆனால் இப்போது அவர்களின் முழு பாசமும் அபிராமியின் புறம்தான் இருந்தது. நம் அண்ணிதானே என்ற எண்ணத்தில் புவனாவிற்கும் பெரியதாக தோன்றவில்லை.‌

புவனாவும் தன்னால் முடிந்த அளவுக்கு அபிராமிக்கு சிறு சிறு உதவிகள் செய்தாள். அவளின் அமைதி குணம் கண்டு அபிராமிக்கே ஆச்சரியமாகதான் இருந்தது. புகுந்த வீட்டில் தன்னை சிறிதும் மதிக்காமல், முத்தமிழுக்காக தன்னையே கண்டபடி திட்டிய அதே புவனாதானா இது என்று வியந்தாள்.

புவனாவிற்கு பெரியதாக பிரச்சனையில்லை. ஆனால் முத்தமிழ் அபிராமியுடன் சிரித்து பேசிக் கொஞ்சி விளையாடுவது காணுகையில்தான் அவளையும் மீறி நெஞ்சத்தின் ஓரத்தில் காயம் ஆழமாகிக் கொண்டே போனது. ஒருநாள், ஒருபொழுது தன்னோடு இது போல சிரித்து பேசி விட மாட்டானா என்று ஏங்கிய நெஞ்சத்தை அவளால் கட்டுப்படுத்தவே முடியவில்லை.

அலுவலகத்தில் இருந்து திரும்பிய ஒருநாள் பூக்களை வாங்கி வந்தான் முத்தமிழ்.

"உனக்கு பிடிச்ச முல்லைப்பூ.." என்று முழுவதையும் தங்கையிடமே தந்தான். அவளுக்கு அனைத்து பூக்களுமே பிடிக்கும் என்பது தனிகணக்கு.

அலுவலகத்திலிருந்து அவனோடு திரும்பி வந்திருந்த புவனா கண்டும் காணாதது போல அவனை தாண்டி நடந்தாள்.

"புவனாவுக்கு பூ எங்கேடா.?" புவனாவின் தலையில் எதுவும் இல்லாததை கண்டுவிட்டு யசோதாதான் கேட்டாள்.

பூக்கடையில் பைக்கை நிறுத்தி வாங்கியவன் பின்னால் அமர்ந்திருந்த ஜீவனை மறந்திருப்பான் என்று நம்ப முடியவில்லை புவனாவால்.

"அவளுக்குதான் பூ பிடிக்காதே அம்மா.." என்றான் அவளைப் பார்த்தபடியே.

'ஏற்கனவே அனுபவிக்கும் கொடுமை போதாது என்று இப்போது பழிவாங்கல் வேறா.?' என்று எண்ணி தனக்குள் சிரித்தாள் புவனா.

அபிராமி காமெடி என்று நினைத்து சிரித்தாள்.

உணவு என்றுச் சொல்லி விஷத்தை உண்ண தருபவன் தன் மணாளன் என்று எண்ணி கலங்கினாள் புவனா.

இந்த இடைப்பட்ட நாட்களில் மதுமிதாவும் தயா சத்யாவும் இல்லாமல் போயிருந்தால் தான் என்னவாகியிருப்போம் என்று நினைக்கவே பயமாக இருந்தது அவளுக்கு.

அவளால் வீட்டில் அதிக நேரத்தை செலவழிக்க முடியவில்லை. ஆனாலும் அவளின் ஆறுதலாக அவர்கள் மூவரும்தான் இருந்தார்கள். அவளோடு புன்னகையோடு பேசிய ஜீவன்கள் அவர்கள்.

முத்தமிழால் அவளின் உள்ளம் விரிசல் விட்டுக் கொண்டே இருந்தது. தூரமாய் இருந்தபோது அவனின் அருகே நெருங்குவதே பெரிய விசயமாக தோன்றி இருந்தது. ஆனால் இப்போது நெருங்கிய பிறகும் இதயம் என்னவோ வெற்றிடமாகதான் இருந்தது. முன்பே பரவாயில்லை என்று இப்போது தோன்றியது.

புவனாவை மௌனமாய் வதைத்துக் கொண்டிருந்தான் முத்தமிழ். தான் வதைப்படவில்லை என்று முகத்தில் காட்டியபடி நடித்துக் கொண்டிருந்தாள் அவள்.

இவர்களின் இந்த மௌன போரை அபிராமி அறியாவிட்டாலும் கார்த்திக் அறிந்து விட்டிருந்தான். மனைவியை பார்க்க வந்த நேரங்களில் எல்லாம் தங்கையின் கலப்பட புன்னகையையும் கண்டு பிடித்திருந்தான்.

"என்ன ஆச்சி.?" அவளின் பொய்யான சிரிப்பைக் காண சகிக்காமல் கேட்டான் ஒருநாள்.

"என்ன ஆச்சி.?" என்று அவளும் திருப்பிக் கேட்டாள்.

தன் முகத்தை கூட பார்க்காமல் சமையலறையின் ஷெல்பை சுத்தம் செய்துக் கொண்டிருந்த தங்கையை தன் பக்கம் பிடித்து திருப்பினான்.

"உனக்கு என்ன ஆச்சி.? ஏன் நீ இப்படி இருக்க.? ரொம்ப மெலிஞ்சி போன மாதிரி இருக்க.. நீ ஒரு செகண்ட் கூட சும்மா உட்கார மாட்டேங்கிற.. ரொம்ப வித்தியாசமா இருக்க.. எப்பவும் எதையாவது செஞ்சிட்டே இருக்க.. கிட்டத்தட்ட முத்தமிழுக்கு லேடீஸ் வேஷம் போட்ட மாதிரி வேலைகளை செஞ்சிட்டு இருக்க.." என்றான்.

'ஆமா.. அவனை மாதிரியே என்னையும் இதயம் இல்லாதவளா மாத்திட்டு இருக்கான்..' என்று நினைத்தவள் "அங்கே இருந்த மாதிரியே இங்கேயும் இருக்க முடியுமா.? ஆணை விட அதிக கடமை பொண்ணுக்குதான் இருக்கு அண்ணா.. நானே இப்பதான் கொஞ்சம் பொறுப்பா நடந்துட்டு இருக்கேன். நீ இதுலேயும் குறை கண்டுபிடிச்சிட்டு இருக்காத.." என்றாள்.

"என்னன்னு என்கிட்ட சொல்ல மாட்டியா.? இல்ல நான் அவன்கிட்டயே கேட்டு தெரிஞ்சிக்கிட்டா.?" அண்ணன் சொன்னதை கேட்டு முறைத்தபடி திரும்பினாள்.

"இங்கே எந்த பிரச்னையும் இல்லை.. நீ புதுசா கிளப்பி விட்டுட்டு இருக்காத.. எனக்கு நிம்மதியை தவிர வேற எதுவுமே வேணாம்.." என்றவள் அங்கிருந்து வெளியே சென்றாள்.

கார்த்திக் குழப்பத்திலேயே இருந்தான். அப்போது ஏன் விவாகரத்து கேட்டாள் என்றும் புரியவில்லை. இப்போது ஏன் இப்படி இருக்கிறாள் என்றும் புரியவில்லை. முத்தமிழ் மீது அளவுக்கு அதிகமான நம்பிக்கை வைத்திருந்தான். அதனால் நண்பனையும் சந்தேகிக்க முடியவில்லை.

ஆனால் அவனும் அமைதியாக கிளம்பி செல்லாமல் நண்பனிடம் சென்று என் தங்கைக்கு என்ன பிரச்சனை என்று கேட்டுவிட்டுதான் சென்றான்.

அன்றிரவு புவனாவை சந்தேகமாக பார்த்த முத்தமிழ் "உன் அண்ணன்கிட்ட என்ன சொன்ன.?" என்றுக் கேட்டான்.

"நான் எதுவும் சொல்லல மாமா.." என்றவள் "நீங்க ஏதாவது சொன்னிங்களா.?" என்றுக் கவலையோடு கேட்டாள்.

இல்லையென தலையசைத்தவன் "அண்ணன் மேல ரொம்ப பாசமோ.?" என்றான் இப்போதுதான் அவர்கள் இருவரையும் புதிதாக பார்த்தது போல.

"பாசம் இல்லாம என்ன.?" முணுமுணுத்தாள்.

"இல்ல.. அவ்வளவு பாசமா இருக்கறவ என்னை லவ் பண்ணி இருக்கியே.! என் தங்கச்சி விசயமா நான் அவனை இரண்டு முறை அடிச்சி சாகடிக்க பார்த்தேன்.!"

புவனா கசந்த சிரிப்போடு நிமிர்ந்தாள்.

"உங்க தங்கச்சியும்தான் என் அண்ணனையும், உங்களையும் ஏத்துக்கிட்டா.. ஆனா உங்களுக்கு ஏன் என்கிட்ட மட்டும் இந்த கேள்வி‌.? மத்த விசயத்துல சொரணை இல்லாதவ.. அண்ணன் மேலேயும் பாசமா இல்லன்னு ஒரு வார்த்தையில் முடிச்சிடுங்க மாமா.. மீதி ஏதாவது குற்றச்சாட்டு இருந்தாலும் இப்பவே சொல்லிடுங்க.. திடீர் திடீர்ன்னு கேட்காதிங்க.." என்றாள் தனக்கே அந்நியமாகி போன குரலில்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN