மௌனம் 7

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
நவீன் ரதியை குறுகுறுவென பார்த்தான். அவளின் இதழ்கள் துடித்தது. பயத்தாலா இல்லை கோபத்தாலா என்று அவனால் கண்டறிய முடியவில்லை.

"இன்னொரு முறை இப்படி தனி ரூம்ல வந்து மடக்காதா.!" என்று எரிச்சலோடு சொன்னவள் அவனை கதவின் மேலிருந்து நகர்ந்த முயன்றாள். சிலையாய் நின்றிருந்தவன் அவளின் முயற்சியை சில நொடிகள் பார்த்தபடி நின்றிருந்துவிட்டு "சாரி.." என்றான். ரதி அவனை குழப்பமாக பார்த்தாள். அவன் அமைதியாக அந்த அறையை திறந்துக் கொண்டு வெளியே சென்றான்.

ரதி ஹாலுக்கு வந்தபோது அவளுக்கு குடிக்க காப்பியை நீட்டினாள் ரூபி.

நம்பி குடிக்கவும் தயக்கமாக இருந்தது. நம்பாமல் சந்தேகத்தை தூண்டி விடவும் தயக்கமாக இருந்தது அவளுக்கு.

நடப்பது நடக்கட்டும் என்று காப்பியை வாங்கி பருகினாள்.

"நவீனா பிராக்டிஸ் போக போறா.. ஆனா எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு.. நீங்க மட்டும் அவளுக்கு துணைக்கு போயிட்டு வந்துடுறிங்களா.?" என்றுக் கேட்டாள் ரூபி.

மறுத்து பேச முடியாமல் பிற்பகல் வேளையில் நவீனாவோடு கிளம்பினாள் ரதி.

நாட்டிய பயிற்சி இடம் நோக்கி காரை ஓட்டினாள் ரதி. அவளின் அருகே அமர்ந்திருந்த நவீன் "வேற பாடிகார்ட் ஏற்பாடு பண்ண சொல்றியா.?" என்றுக் கேட்டான்.

புரியாமல் இவன் பக்கம் பார்த்தவள் நொடியில் சாலை பக்கம் திரும்பினாள். "ஏன்.?"

"ஒரு ஆண் பாடிகார்ட் வேணும்.. நீ வேணாம்.."

காரை நிறுத்தினாள் ரதி. "ஏன்.?"

"ஏனா எனக்கு நீ வேணாம்.." என்றான் எங்கோ பார்த்தபடி.

"நான் என்ன என்னையே உனக்கு தூக்கியா தந்திருக்கேன், வேணாம்ன்னு சொல்ற.?" கடுப்போடு கேட்டாள்.

இவள் பக்கம் பார்த்தவன் "உனக்கு எதுவும் தெரியாது.. தயவு செஞ்சி என்னை விட்டு விலகி போயிடு.. உன் நல்லதுக்குதான் சொல்றேன்.!" என்றான்.

"ஆமா.. சாத்தான் வேதம் ஓதுது.!" என்று முனகியவள் காரை கிளப்பினாள்.

"உன்னை கொல்ல கூட தயங்கமாட்டேன் வெள்ளைக் கொக்கே.! நீயா விலகிடுறதுதான் உனக்கு நல்லது.!"

ரதி காதில் போட்டுக் கொள்ளவில்லை.

நாட்டிய பள்ளியின் வாசலில் ஓரமாக காரை நிறுத்தினாள். இறங்கியவள் நவீனின் கையிலிருந்த பேக்கை வாங்கிக் கொண்டாள்.

"என்னால விலக முடியாது.." என்றாள் முடிவாக.

காரை திறந்துவிட்டு நிமிடங்கள் கடந்தும் அவன் இறங்காதது கண்டு குழப்பத்தோடு அவனைப் பார்த்தாள்.

அவளையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.

"என்ன.?" அவள் புருவம் சுருக்கி கேட்டதும் சட்டென தெளிந்தவன் "சாரி.." என்றான்.

"நீ என்னை விட்டு போறதுதான் உனக்கு நல்லது.!" என்றான் காரிலிருந்து இறங்கியபடியே.

ரதி அலட்சியமாக நின்ற வேளையில் கீழே இறங்கிய இவனும் அவளை மிக நெருங்கி நின்றான்.

"நான் பையன்னு நீ கண்டுபிடிச்சிட்டன்னு ரூபிக்கு தெரிஞ்சதுன்னா அது உனக்கு ஆபத்தா போயிடும்.! நீ யார் என்ன எதுவும் எனக்குத் தெரியாது. ஆனா நீ என் பொருட்டு சாகறதுல எனக்கு துளியும் விருப்பம் இல்ல.. ப்ளீஸ் போயிடு.." என்றவன் அவளின் கையிலிருந்த பேக்கை வாங்கிக் கொண்டு உள்ளே நடந்தான்.

ரதி குழம்பிப் போனவளாக அவனின் முதுகை வெறித்தாள். இப்பவும் அதே போலதான் இடுப்பை நொடித்து நொடித்து நடந்துக் கொண்டிருந்தான்.

நவீன் காலில் சலங்கையை கட்டிக் கொண்டு அங்கிருந்த நடுத்தர வயது பெண்மணியிடம் சென்றான்.

"ஹாய் நவீனா.. சின்னையன் சொன்னாரும்மா.. நீ இங்கே பிராக்டிஸ் எடுத்துக்கறது எங்களுக்கு சந்தோசம்‌.!" என்ற அவள் இன்னொரு பெண்மணியை அழைத்து அவளோடு இவளை அனுப்பி வைத்தாள்.

சில நிமிடங்கள் காரின் அருகிலேயே நின்றிருந்தாள் ரதி. 'நான் ஏன் சாக போறேன்.?' என்று குழம்பினாள். தன் கையிலிருந்த செல்போனை பார்த்தாள்.

'லாவண்யா அனைத்தையும் கேட்டுக் கொண்டிருக்கிறாள். நமக்கு பிரச்சனை இல்லை!' என்று நினைத்தபடி நாட்டிய பள்ளிக்குள் நடந்தாள்.

அலங்கார செடிகளுக்கு இடையே மண்டபம் மண்டபமாக இருந்தன. நவீன் எங்கே இருக்கிறான் என்று தேடியது அவளின் விழிகள். ஒவ்வொரு மண்டபமாக கடந்து நடந்தாள்.

அடுத்து இருந்த மண்டபத்தை கடக்க இருந்தது நேரத்தில் இனிமையான இசையின் மெல்லிய சத்தம் அவளின் காதில் வந்து விழுந்தது. திரும்பிப் பார்த்தாள். நவீன் கைகளை குவித்து ஆடிக் கொண்டிருந்தான். அவனின் அருகே நின்று தலையாட்டியபடி கையை தட்டிக் கொண்டிருந்தாள் ஒரு பெண்மணி. நவீனின் பின்னால் இருந்த ஸ்பீக்கரிலிருந்து வழிந்துக் கொண்டிருந்த இசை அந்த சூழ்நிலையையே ரம்மியமாக்கிக் கொண்டிருந்தது.

ரதி அந்த மண்டபத்தின் படிகளில் ஏறினாள். நவீனா இவளை கவனிக்க மறுத்து தனது நாட்டியத்தில் கவனமாக இருந்தாள். அவளின் விரல் அசைவுகளை கொட்ட கொட்ட விழித்துப் பார்த்த ரதி அவளின் முகத்தைப் பார்த்ததும் சிலையாகி விட்டாள். 'எப்போது அஞ்சனம் தீட்டினானோ.?' என்று ஆச்சரியப்பட்டாள்.

நீள விழிகள் அங்கும் இங்கும் அலைபாயுகையில் ரதிக்கு தன் இதயமும் சேர்ந்து அலைவதைப் போலிருந்தது.

'உனக்கு என்ன பைத்தியம் ரதி.? அவன் ஒரு டெரரிஸ்ட்.. அதை மறந்துட்டியா.?' என கேட்டு தலையை சிலுப்பிக் கொண்டவள் அங்கிருந்து வெளியே நடந்தாள்.

அலங்கார செடி ஒன்றின் மறைவில் வந்து நின்றவள் லாவண்யாவிற்கு அழைத்தாள். இரண்டு முறை அழைத்தும் எடுக்கவில்லை அவள்.

'உன் நிலமை என்னன்னு தெரிஞ்சது.. ஆனா நான் இப்ப கொஞ்சம் பிசியா இருக்கேன்.. நாம நாளைக்கு பேசலாம்..' என்று லாவண்யாவிடமிருந்து மெஸேஜ் மட்டும் வந்து சேர்ந்திருந்தது‌.

பாதி எபி கம்மி.. சாரி நட்புக்களே.. நாளை... நாளான்னைக்கு சரி பண்ணிடுறேன்..

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN