மணாளனின் மனம் 32

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
குளிர் நீர் தெறித்து விழுந்துக் கொண்டிருந்தது. குளியலறையின் தரையில் சிலையாக அமர்ந்திருந்தாள் புவனா. தண்ணீரோடு சேர்ந்து அவளின் கண்ணீரும் கலந்துக் கொண்டிருந்தது.

அவன்தான் வேண்டுமென்று அழுதவள் இப்போது எதுவுமே வேண்டாமென்று அழுதாள். விட்டில் பூச்சி விளக்கிற்கு ஆசைப்பட்ட அதே கணக்காய் தன் காதலும் போய் விட்டது என்ற உண்மை புரிந்து அழுதாள்.

ஒற்றை புன்னகை, ஒற்றை பார்வை, ஒற்றை காதல் மொழி.. இதையெல்லாம் எதிர்பார்த்து இத்து போன மனதிற்கு அவனுடனான கூடலும் சேர்ந்து இப்போது கசந்தது.

அவன் சொன்னான் என்று தான் கேட்டிருக்க கூடாது என்று நினைத்தாள் இப்போது. காதல் இல்லா வாழ்வில் காமமும் வேண்டாம் என்று அமைதியாக ஒதுங்கி இருக்க வேண்டுமோ என்று எண்ணிக் கலங்கினாள். தன் உணர்வுகள் அனைத்தும் மெள்ள செத்துக் கொண்டிருப்பது தெரிந்தும் எதுவும் செய்ய முடியாத சூழலில் இருந்தாள். அவனுக்காக அவனுக்காக என்று சொல்லிச் சொல்லியே தன் மனதை சிதைத்துக் கொண்டிருந்தாள்.

வெகு நேரம் கழித்து எழுந்து நின்றாள். மாற்று உடையை அணிந்துக் கொண்டு அவள் வெளியே வந்தபோது முத்தமிழ் கட்டிலின் ஒரு ஓரத்தில் அமர்ந்திருந்தான். திகைத்துப் போனவள் இரவு விளக்கின் வெளிச்சத்தில் கடிகாரத்தைப் பார்த்தாள். மணி நடு இரவு பன்னிரெண்டை தாண்டி இருந்தது.

"எ.. என்னாச்சி மாமா.?" தயக்கமாக கேட்டபடி அவனருகே வந்தாள்.

"இந்த டைம்க்கு எதுக்கு குளிச்சி இருக்க.?" சந்தேகமாக கேட்டவன் அவளின் கூந்தலில் இருந்து சொட்டிக் கொண்டிருந்த தண்ணீரை அந்த அரை இருளில் வெறித்துப் பார்த்தான்.

"அ.. சு.. சும்மாதான் மாமா.." வேகும் நெஞ்சை வெளிக்காட்ட இயலாததால் குளித்தேன் என்று சொல்ல பயமாக இருந்தது அவளுக்கு. அவள் அறியாத விடுகதையாக இருந்தான் அவன். அவன் என்ன சொல்வான் என்ன செய்வான் என்பதை அவளால் ஒரு சதவீதம் கூட யூகிக்கவே முடியவில்லை.

"ஓ.." என்றவன் அமைதியாக தலையணையில் விழுந்தான்.

தலைமுடியை உலர்த்திக் கொண்ட பிறகு வந்து கட்டிலில் சாய்ந்தாள் புவனா. ஓரமாய், அவனை விட்டு தூரமாய் படுத்திருந்தாள். படுக்கை முழுக்க நெருப்புப் பிடித்திருப்பதை போல அவளின் இதயம் உணர்ந்தது. அவளின் தோளைப் பற்றி தன் பக்கம் திருப்பினான் முத்தமிழ். 'இவ்வளவு நேரம் உறங்காமல் இருந்தானா?' என்ற யோசனையோடு அவனைப் பார்த்தாள். அவளை இரு நொடிகள் பார்த்தவன் எதுவும் பேசாமல் அவளை தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டான்.

மறுநாளில் இருந்து அவளுக்கு வேலைகளை அதிகப்படுத்தினான். ஏன் என்று அவளுக்கு புரியவில்லை. ஒருநாளைக்கு பத்து முறை காப்பி கேட்டான். பார்த்த பைலையே நான்கைந்து முறை மீண்டும் மீண்டும் பார்க்க வைத்தான். வயலுக்கு செல்லுகையில் அவளை பைக்கில் அழைத்துச் செல்லாமல் அவன் மட்டும் தனியாக சென்றான். புவனா அவசரகதியில் நடந்துச் செல்ல வேண்டியதாக இருந்தது.

இந்த தீடீர் புறக்கணிப்பும், தண்டனையும் எதற்கென்று அவளால் கண்டறிய முடியவில்லை. ஆனால் மௌனமாய் தன் பணிகளை தொடர்ந்தாள்.

ஒரு வாரம் கடந்தது. அவளை சம்பந்தமே இல்லாமல் திட்ட ஆரம்பித்தான். வேலைகளில் குறைச் சொல்லிக் கொண்டே இருந்தான். அவள் என்ன செய்தாலும் தப்பு கண்டுபிடித்தான். அவள் 'சாரி மாமா..' 'மறுபடியும் பார்க்கறேன் மாமா..' என்று பதிலை தந்துவிட்டு மீண்டும் வேலைகளை செய்தான்.

"குழம்பு படு கேவலமா இருக்கு.. ஒரு குழம்பு கூட ஒழுங்கா வைக்க தெரியாதா.?" என்று ஒருநாள் அனைவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் எரிந்து விழுந்தான்.

"வேற குழம்பு வச்சிட்டு வரேன் மாமா.." என்று சமையலறை நோக்கி ஓடினாள்.

"ஒன்னும் வேணாம்.. இதுவே இப்படின்னா அந்த குழம்பு மட்டும் எப்படி இருக்கும்.?" என்று திட்டியபடியே உணவை ஒதுக்கி வைத்துவிட்டு எழுந்துச் சென்றான்.

புவனா நீர் திரண்ட தன் விழிகளை யாருக்கும் காட்டவில்லை. ஆனாலும் அபிராமி பார்த்துவிட்டாள்.

'பிறந்த வீட்டில் அனைவரின் தலையையும் உருட்டிக் கொண்டிருந்தவளுக்கு இப்படியா சோதனை.?' என்று ஆச்சரியப்பட்டாள்.

அபிராமிக்கு புவனாவை விட முத்தமிழ்தான் வித்தியாசமாக தெரிந்தான்.

"புவனா இப்பவெல்லாம் முன்ன மாதிரி இல்ல.. பேச்சு ரொம்ப குறைஞ்சி போச்சி.." பாட்டியிடம் சொல்லி வருத்தப்பட்டுக் கொண்டிருந்தாள் யசோதா‌.

அபிராமிக்கும் அதுதான் எண்ணமாக இருந்தது‌. அவளை கூப்பிட்டுக் கேட்க விருப்பமில்லாமல் முத்தமிழை தனியாக அழைத்துக் கேட்டாள்.

"புவனாவுக்கு என்ன ஆச்சி.?"

தங்கையின் கேள்வியை ஆச்சரியமாக நினைத்தவன் "ஏன்‌.. நல்லாதானே இருக்கா.?" என்றுக் கேட்டான்.

"நீங்க இரண்டு பேரும் நல்லபடியா பேசியே நான் பார்க்கல அண்ணா.."

"பேசிட்டுதான் இருக்கோம்.." முணுமுணுத்தான்.

"அவளை நீ டார்ச்சர் பண்ற மாதிரி பீல் ஆகுதுண்ணா எனக்கு.!" என்றாள் கவலையோடு.

"வெளியே இருந்து பார்க்கற உனக்கு ஒன்னும் தெரியாது அபிராமி.. உண்மையை சொல்லணும்ன்னா அவதான் என்னை டார்ச்சர் பண்ணிட்டு இருக்கா.." என்றான் எரிச்சலாக.

புவனா முன்பு போல இல்லை. மாறிவிட்டாள் என்று அவளை தன் மனதிற்குள் குறை கூறிக் கொண்டிருந்தான். அவளின் பழைய தொணதொணப்பை எதிர்பார்த்துக் காத்திருந்தான். அவள் ஏன் பேசாமல் போனாள் என்று அவனுக்கு புரியவில்லை. அவளை பேச வைக்க வேண்டும், அவள் பழையபடி சிணுங்கல் சண்டை போட வேண்டும் என்ற காரணத்திற்காகவே அவளை படுத்தி எடுத்தான். அப்போதும் அவள் பேசவேயில்லை.

"எனக்கு என்னவோ தப்பு உன் மேலதான்னு தோணுது அண்ணா.." என்றாள் அபிராமி சிறுகுரலில்.

"உனக்கு தெரியாதும்மா.. அவ என்கிட்ட முகம் கொடுத்து பேசி எத்தனை மாசம் ஆகுது தெரியுமா.?" என்று திருப்பிக் கேட்டான்.

"அவ பேசலன்னா நீ பேசேன்.!"

இடம் வலமாக தலையசைத்தான். "அவதானே என்னை லவ் பண்றா.. அப்ப அவதான் பேசணும்.. நான் ஏன் முயற்சி எடுக்கணும்.?" என்றுக் கேட்டான்.

அபிராமி அதிர்ச்சியோடு அண்ணனை தன் பக்கம் திருப்பினாள். "ஏன் அண்ணா இப்படி சொல்ற‌.?" என்று கேட்டவள் சந்தேகம் நிறைந்த குரலில் "நீயும்தானே அவளை லவ் பண்ற.?" என்றாள்.

அவன் மொத்தமாக தோள்களை குலுக்கவும் அவளுக்கு கண்கள் இருட்டிக் கொண்டு வருவது போலிருந்தது. புவனாவின் பைத்தியக்காரதனமான காதலுக்கு கல்லாய் இருந்தாலும் திருப்பி காதலித்து விடும் என்பது அபிராமியின் அசைக்கவியலா நம்பிக்கை.

"நீ.. நீ அவளை லவ் பண்ணலையா.?" மீண்டும் நம்பிக்கை இல்லாமல் கேட்டாள்.

"இப்ப இதுவா முக்கியம்.? அவ என்னை லவ் பண்றாளா இல்லையா.. இதான் முக்கியம்.." என்றான் அழுத்தமாக.

"மெ.." அவள் தன் அண்ணனை திட்டும் முன் இடுப்பு வலி பிடித்துவிட்டது.

அண்ணனின் கையை இறுக்கமாக பற்றியவள் "ஹாஸ்பிட்டல் போகணும்ண்ணா.." என்றாள்.

புரியாமல் பார்த்து நின்றவனிடம் "வலி பிடிச்சிடுச்சி.." என்றாள் பற்களை கடித்தபடி.

முத்தமிழ் தாமதிக்காமல் அவளை மருத்துவமனை அழைத்துச் சென்றான். பாட்டியும் யசோதாவும் அவளுக்கு தைரியம் சொன்னார்கள். லேசாக விசும்பினாள் அபிராமி. வலிக்கிறது என்று சில முறை அழுதாள். காரை ஓட்டிக் கொண்டிருந்த முத்தமிழின் கரங்கள் அவனையும் மீறி நடுங்கின.

"ஒன்னும் ஆகாது அபிராமி.. நீ எவ்வளவு ஸ்ட்ராங் தெரியுமில்ல.." என்று தைரியம் சொன்னான். ஆனாலும் அவனின் நெற்றியெல்லாம் வியர்த்துப் போயிருந்தது.

ஓட்டுபவனின் அருகே அமர்ந்திருந்த புவனா அவனின் வேதனை கண்ட பிறகு அமைதி காக்க முடியாமல் அவனின் தொடையின் மீது கையை வைத்தாள். அவளை திரும்பிப் பார்த்தவன் அந்த கரத்தை தனக்குள் எடுத்துக் கொண்டான்.

'காதல் இல்ல புவனா.. இது அவருக்கான கம்பர்ட் மட்டும்தான்..' என்று நினைத்தவள் அபிராமியை அவ்வப்போது திரும்பி திரும்பி பார்த்தாள். வீட்டிலிருந்து கிளம்பும் முன்பே தன் அண்ணனுக்கு போன் செய்து சொல்லி விட்டாள்.

முத்தமிழின் கரம் அழுத்தமாக அவளின் கையை பிடித்திருந்தது. கரங்கள் இரண்டும் இணைந்திருப்பதை மறக்க எண்ணினாள் புவனா.

மருத்துவமனையில் அபிராமி நுழைந்த அடுத்த பத்து நிமிடத்திற்குள் கார்த்திக்கும் அவனது பெற்றோரும் அங்கே வந்து சேர்ந்து விட்டனர்.

குட்டி போட்ட பூனை போல அந்த மருத்துவமனை வராண்டாவில் சுற்றிக் கொண்டிருந்தான் கார்த்திக்.

முத்தமிழ் புவனாவை அழைத்துக் கொண்டு கேன்டினிற்கு வந்து விட்டான்.

"அங்கே இருந்தா பிரஷர் ஏறி செத்துடுவேன் போல.." என்றவன் இருவருக்கும் தேனீர் வாங்கினான்.

அவன் வலது கையில் தேனீர் பருகினான். புவனா தன் கையை விடுவித்துக் கொள்ள இயலாமல் இடது கையால் தேனீர் கோப்பை எடுத்து பருகினாள். காரிலிருந்து இறங்கும்போது அவளின் கையை விட்டிருந்தான் முத்தமிழ். ஆனால் பிரசவ அறைக்குள் அபிராமி நுழைந்த அடுத்த நொடியிலிருந்து இருவரின் கரங்களும் இணைந்திருந்தது.

"பாவம் அபிராமி.." என்றான் சில நிமிடங்களுக்கு பிறகு.

'உங்க தங்கச்சியேதான் அதிசயமாக பிரசவ அறை வாசலை மிதித்து இருக்கிறாளா?' பழைய புவனாவாக இருந்திருந்தால் இப்படி கேட்டிருப்பாளோ என்னவோ ஆனால் இன்று மௌனமாகதான் இருந்தாள்.

ஒரு மணி நேரத்திற்கு மேல் கடந்து விட்டிருந்தது.

புவனாவின் போனுக்கு அழைத்தார் அவளின் அப்பா.

"குழந்தை பிறந்துடுச்சி.. நீ எங்கே போன கழுதை.?" என்று கடிந்தார்.

"வரேன்ப்பா.." என்றவள் முத்தமிழிடம் "குழந்தை பிறந்துடுச்சாம்.!" என்றாள்.

முத்தமிழ் அவசரமாக அங்கிருந்து ஓடினான். புவனா நீண்டிருந்த தன் கரத்தை வெறித்தாள். அவன் ஓட ஆரம்பித்த அடுத்த நொடியில் அவளின் கரத்தை விட்டுவிட்டு ஓடியிருந்தான்.

அந்தரத்தில் நின்றிருந்த கையை காணுகையில் கண்கள் கலங்கியது அவளுக்கு. தங்கையின் மீது கொண்ட பாசத்தால் உண்டான பரிதவிப்பை போக்கிக் கொள்ளவே கையை பற்றிக் கொண்டு இருந்திருக்கிறான் என்று அவளுக்கே புரிந்துதான் இருந்தது‌. ஆனால் அதன் பிறகும் எதை எதிர்பார்க்கிறது இந்த மனது என்று எண்ணி தனக்குள் சிரித்தாள்‌. இதயமும் மூளையும் ஒரு சேர கசந்துப் போனது போல இருந்தது.

முன்பும் இப்படிதான் இருந்தான்‌. அவளை நேசிக்கவில்லை. ஆனால் இப்போது மட்டும் ஏன் வலிக்கிறது என்று அவளுக்கே புரியவில்லை.

அபிராமிக்கு அழகான பெண் குழந்தை பிறந்திருந்தது. இந்த குழந்தையும் புவனாவை போலவே இருப்பதாக சொன்னான் கார்த்திக்.

முத்தமிழ் நம்பிக்கையில்லாமல் மனைவியை பார்த்தான். அதே வட்ட முகம். அதே மூக்கும் கண்களும்.. தன் மருமகள் தன் மனைவியின் சாடையில்தான் இருக்கிறாள் என்பதை விருப்பமே இல்லாமல் ஒத்துக் கொண்டான் முத்தமிழ்.

"அதே முகம்தான்.." என்றான் சிறு குரலில்.

"விதியும் என்னை மாதிரியே வாய்க்காம இருந்துட்டா போதும்.." என்று முனகியவள் குழந்தைக்கு நெற்றியில் முத்தமிட்டுவிட்டு அண்ணனிடமே குழந்தையை திருப்பி தந்தாள்.

அவளின் முனகல் முத்தமிழை தவிர வேறு யாருக்கும் கேட்கவில்லை.

அன்று இரவு வீட்டிற்கு வந்ததும் "உன் விதிக்கு என்ன குறைச்சல்.?" என்றுக் கேட்டான் முத்தமிழ்.

"ஒரு குறையும் இல்ல மாமா.." என்றாள் சத்தம் வராத குரலில்.

முத்தமிழுக்கு ஆத்திரமாக வந்தது. அவளின் இந்த மாமா என்ற வார்த்தையை ஒருகாலத்தில் அவ்வளவு விரும்பினான் அவன். ஆனால் இப்போது ஜீவன் செத்த குரலில் 'மாமா' என்று அழைத்தாள். அதில் ஒரு கொஞ்சலும் இல்லை‌. ஒரு கெஞ்சலும் இல்லை. முன்பு போல நிரம்பி வழியும் காதலும் அந்த குரலில் இல்லை.

"என்னை பிடிக்கலையா புவனா.? சலிச்சிட்டேனே.?" என்று கேட்டவனை நிமிர்ந்து பார்த்தவள் "இல்ல மாமா.." என்றாள் அவசரமாக.

"ரொம்ப பிடிக்கும் மாமா.." என்று அந்த மூன்று வார்த்தைகளை சொல்லுவதற்குள் அவளுக்கு இதயமே வெடித்து சிதறுவது போல இருந்தது.

'மாமா எப்படி வேணாலும் கேட்கறாரு.! லவ்வை சொல்ல கூடாது காட்ட கூடாதுன்னு கன்டிஷனும் அவரே போட்டாரு.. இப்ப சலிச்சிடுச்சான்னும் அவரே கேட்கறாரு.!' வேதனையோடு நினைத்தாள்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN