மணாளனின் மனம் 33

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
தன் கண்களை கூட பார்க்க மறுத்த மனைவியின் முகத்தை பற்றி நிமிர்த்தினான் முத்தமிழ்.

"உனக்கு உடம்பு ஏதும் சரியில்லையா.?" என்றுக் கேட்டான்.

"நல்லாருக்கேன் மாமா.!" என்றுச் சொன்னவளை வருத்தமாக பார்த்தவன் "உனக்கு என்ன பிரச்சனைன்னாலும் சொல்லு.. நான் சரி பண்றேன்.." என்றான்.

சரியென்று தலையசைத்தாள் புவனா.

'காட்டப்படாத காதல், உணர்த்தப்படாத நேசம், உணர்விக்க இயலாத காமம், வாய் சொல்லில் கூட வெளிப்படுத்தப்படாத பாசம், நெஞ்சத்தை தர மறுக்கும் காதலன்..' என்று இப்படியே வாழ்க்கை முடிந்து விடுமோ என்று பயமாக இருந்தது அவளுக்கு.

இரவுகளில் அவள் உறங்கி விட்டாள் என்று நம்பிய பிறகே அவளின் நெற்றியில் பாச முத்தம் தந்தான் அவன். உறங்காமல் கண் மூடி கிடந்தவளுக்கு அந்த முத்தம் கண்டு அழுகைதான் வந்தது. தினமும் வயலுக்கு செல்ல வேண்டி வெகுதூரம் நடக்கிறாளே என்று உறங்குபவளின் பாதங்களை கூட பிடித்து விட்டான். ஆனால் அவளுக்குதான் இதயம் உணர்வற்றுப் போய் இறந்துக் கொண்டிருந்தது.

அனைத்தும் அறிந்தே தனக்கு அவன் தண்டனை தந்துக் கொண்டிருக்கிறான் என்று புரிந்தவளுக்கு தன்னால் இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்த தண்டனையை தாங்க முடியும் என்றுதான் தெரியவில்லை.

காதலித்தான். அவளின் அளவுக்கே காதலித்தான். ஆனால் அந்த காதலை அவளிடம் தர மறுத்தான். 'தன்னை காதலித்தது குற்றம், அந்த காதலுக்காக விஷம் அருந்தியது அதை விட குற்றம்' என்று சொன்னவனுக்கு உரிமையாகி விட்டவளிடம் காட்டப்படாத இந்த காதலும் மிக பெரிய குற்றம் என்று புரியவில்லையா என்று நினைத்துக் குழம்பினாள்.

அபிராமி குழந்தையோடு வீடு வந்தாள். புவனா ஆரத்தி எடுத்து உள்ளே வரவேற்றாள்.

"குழந்தை அவங்க வீட்டு சாடையா இருக்கு.. நம்ம சாடையா இருந்திருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும்.!" என்றாள் யசோதா.

மருமகனுக்கு உணவு சமைத்துப் போட்டுக் கொண்டிருந்த அபிராமியின் தந்தை மகளுக்கு பிரசவ வலி கண்ட உடனேயே கார்த்திக்கோடு சேர்ந்து வீட்டிற்கு வந்து விட்டிருந்தார். தொட்டிலில் இருந்த பேத்தியை கொஞ்சிக் கொண்டிருந்தவர் மனைவியின் சொல்லால் சலிப்போடு நிமிர்ந்தார்.

"அவங்க வீட்டு சாடை இருந்தா இப்ப என்ன போச்சி.? நாளைக்கு உன் மகனுக்கு ஒரு குழந்தை பிறக்கும்போதும் இதே மாதிரி சொல்வியா நீ.?" என்றுக் கேட்டார்.

யசோதா எரிச்சலோடு கணவனைப் பார்த்தாள். "சாதாரணமா கூட எதுவும் நான் பேசிட கூடாதா.? எப்பவும் என்னை திட்டி குறை சொல்லிக்கிட்டே இருக்கணுமா.?" என்றுக் கேட்டாள்.

"தயவுசெஞ்சி இரண்டு பேரும் சண்டையை நிறுத்துங்க.. அபிராமி கார்த்திக் முன்னாடி சண்டை போட்டுக்காதிங்கன்னு எத்தனை முறை சொல்றது.?" என்று கேட்டுக் கடிந்தான் முத்தமிழ்.

முத்தமிழுக்கு அவனின் தந்தையின் குணம்தானோ என்று சந்தேகித்தாள் புவனா.

கார்த்திக் மனைவியை தாங்கு தாங்கென்று தாங்கினான். சும்மாகவே உயிரை தருபவன். இப்போது கேட்கவா வேண்டும்.? தன் மகளால் தான்தான் இந்த உலகத்திலேயே அதிக செல்வந்தன் என்று நினைத்தான்.

"இவ புத்தி அப்படி. நான் சண்டை போட்டா உனக்கு எரிச்சலா இருக்கு.." என்ற முத்தமிழின் தந்தை அவ்விடத்தை விட்டு நகர்ந்தார்.

இவ்வளவு நாளாக இந்த வார்த்தைகளை கேட்டபோதும் தந்தைக்கே ஆதரவாக பேசிக் கொண்டிருந்த முத்தமிழுக்கு இப்போது தந்தையின் பேச்சில் தவறு உள்ளதாக தோன்றியது. விசயத்தை பெரிதுப்படுத்த விரும்பாமல் அவனும் அத்தோடு நிறுத்திவிட்டான்.

மூர்த்தியும் சுவாதியும் அபிராமியின் குழந்தையை பார்க்க வந்திருந்தார்கள்.

"அழகு செல்லம்.." என்றுக் கொஞ்சினாள் சுவாதி.

மூர்த்தியும் மகளை தூக்கி கொஞ்சினான்.

"புவனா நீயும் ஒரு பொண்ணோ பையனோ பெத்து தந்துடு.. இன்னும் நல்லா இருக்கும்.." என்றாள் சுவாதி.

புவனா மொத்தமாக தலையசைத்து விட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

"எதுக்கு இப்ப இவ கப்பல் கவுந்த மாதிரி முகத்தை வச்சிருக்கா.?" கணவனும் மச்சினனும் அருகில் இல்லாத நேரத்தில் அபிராமியிடம் கேட்டாள் சுவாதி.

"யாருக்கு தெரியும்.? நான் இங்கே வந்ததுல இருந்தே இப்படிதான் இருக்கா.." என்றவள் பசியில் அழுத குழந்தைக்கு பசி தீர்க்கும் வேலையை ஆரம்பித்தாள்.

பெரிய அண்ணனுக்கு அண்ணிக்கும் காப்பி போட்டுக் கொண்டிருந்த புவனாவின் நினைவில் சுவாதி சொன்னது வந்து போனது.

'இப்போது படும் வேதனை போதாதா?' என்று தோன்றியது அவளுக்கு.

நாத்தனார், மாமியார், சக பணியாளர், ஏன் தோட்டத்து பயிரை கண்டு கூட பொறாமை கொண்டிருந்தாள் புவனா. அனைவரிடமும், அனைத்திடமும் பாசம் காட்டிக் கொண்டிருக்கும் கணவன் நாளை வரும் நாளில் தனது குழந்தையிடம் காட்டும் பாசம் கண்டு கடைசியில் அந்த பிஞ்சு குழந்தையிடமும் பொறாமைப்பட்டு விடுவோமோ என்று பயந்தாள்.

அது மட்டுமின்றி அவளே ஆசைக்கொண்டாலும் கூட குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என்று அவளுக்கு தெரியும். முத்தமிழ் மாதம் தவறாமல் கருத்தடை மாத்திரைகளை வாங்கி வந்துத் தந்துக் கொண்டிருக்கிறான். அதை புவனாவும் தினம் தவறாமல் விழுங்கிக் கொண்டிருக்கிறாள். அவனே ஆசைப்படாத போது தனக்கு எதற்கு குழந்தை ஆசை என்று அமைதியாகி விட்டிருந்தாள்.

அபிராமிக்கு குழந்தை பிறந்த பிறகு வீடே தலைகீழாக மாறி விட்டது என்றுச் சொல்லலாம். குழந்தை பகலெல்லாம் உறங்கி விட்டு இரவில்தான் விழித்திருந்தாள். கார்த்திக்கும் பணியின் காரணமாக கிளம்பிச் சென்று விட்டிருந்ததால் புவனாதான் அபிராமியோடு இரவில் உறங்கினாள். யசோதாதான் துணைக்கு தூங்குகிறேன் என்று சொன்னாள். ஆனால் தன் மாமியாருக்கு நடு இரவில் கண் விழிப்பது சிரமம் என்று புவனாவிற்கே தெரியும் என்பதால் அத்தையை ஓய்வெடுக்க சொல்லிவிட்டு இவள் வந்துவிட்டாள்.

அவளின் மருமகளோ இரவெல்லாம் சிணுங்கிக் கொண்டே இருந்தாள். அபிராமி தாய்ப்பால் தந்த களைப்பில் சோர்ந்துப் போவாள். புவனாதான் அவளை உறங்கச் சொல்லிவிட்டு குழந்தையை தொட்டிலில் இட்டு இரவெல்லாம் தொட்டிலை ஆட்டி விட்டுக் கொண்டிருப்பாள்.

அந்த குழந்தையின் அருகே இருக்கையில் சிறு மன நிம்மதியை உணர்ந்தாள் அவள். குழந்தையின் தேவை என்ன என்பது அபிராமிக்கு அடுத்து அவளுக்குதான் புரிந்தது. அபிராமி கார்த்திக்கின் கையை விடுத்து புவனாவின் கைகளில்தான் அமைதியாக அழாமல் இருந்தது குழந்தை.

மருமகளுக்கு தான்தான் இரண்டாம் தாயாய் இருக்கிறோம் என்பதை உணர்ந்து புவனாவின் நெஞ்சம் பூரித்து போனது. குழந்தையை தன்னோடே வைத்துக் கொள்ளலாமா என்று கூட ஆசை வந்தது அவளுக்கு.

இரவுகளில் குழந்தையோடு சேர்ந்து அந்த வீட்டில் உறங்காமல் இருந்த இன்னொரு ஜீவன் முத்தமிழ். தனது அறையில் தனியாய் உறங்க முடியவில்லை அவனால். புவனாவின் வாசத்தையும், அவளின் அருகாமையையும் கேட்டது அவனின் மனம். தினமும் நடு இரவு வரையிலும் கைபேசியை நோண்டியபடி இருந்தான்.

புவனா குழந்தையை சாக்கிட்டு அவனை விட்டு விலகி இருந்தாள் என்பதுவும் உண்மை. அவனின் அருகே நரகம் போல இருந்தது அவளுக்கு.

அலுவலகத்தில் தனியாய் இருக்கும் நேரத்தில் அவளை நெருங்க முயன்றான் அவன். ஆனால் அவளோ மதுமிதா, தயா, சத்யா இவர்களுக்கு செய்துக் கொண்டிருக்கும் வேலையை காட்டி அவனிடமிருந்து தப்பித்துக் கொண்டிருந்தாள்.

குழந்தை பிறந்து ஒரு மாதம் ஓடிவிட்டது. அபிராமிக்கு இன்னமும் பத்திய சாப்பாடுதான் தந்துக் கொண்டிருந்தாள் பாட்டி. அபிராமியை காரணம் காட்டி புவனாவும் பத்திய உணவினை சமைக்க கற்றுக் கொண்டாள்.

ஞாயிற்றுக்கிழமை அன்று. கார்த்திக் வந்திருந்தான். அபிராமியின் அறையில் அமர்ந்தபடி தன் மகளை மடியில் வைத்துக் கொஞ்சிக் கொண்டிருந்தான். அபிராமி புவனா தந்த உணவை உண்டுக் கொண்டிருந்தாள். அண்ணனுக்கும் அண்ணிக்கும் நேரம் தந்து விட்டு புவனா அந்த அறையை விட்டு வந்து தனது அறையில் புகுந்தாள்.

அந்த நடுப்பகல் நேரத்திலேயே தன்னை மறந்து உறங்க வேண்டும் போல இருந்தது அவளுக்கு. அவள் அணிந்திருந்த உடையில் குழந்தையின் வாசம் அப்படியே இருந்தது. அப்படியே உறங்கிவிட மனம் கெஞ்சினாலும் கூட தன் மனதின் ஆசையை எப்போதும் அனுபவிக்க விடவே கூடாது என்ற சுய கோபத்தோடு குளியலறை நோக்கி நடந்தாள்.

"புவி.." குளியலறை கதவை தீண்ட இருந்தவள் திகைத்துப் போய் திரும்பிப் பார்த்தாள்.

முத்தமிழ் அறையின் கதவை தாழிட்டு விட்டு உள்ளே வந்தான். அவன் தன்னை புவியென அழைத்தது நிஜமா கனவா என்று குழம்பிப் போயிருந்தாள் அவள்.

"குளிக்க போறியா.?" எனக் கேட்டவனை குழப்பமாக பார்த்தவள் தாழிட்ட கதவை பார்த்துவிட்டு இல்லையென தலையசைத்தாள்.

மணி இன்னும் இரவு ஒன்பது ஆகவில்லை. ஆனால் வாரம் முழுக்க அந்த ஒன்பது மணி நேரத்தில் அபிராமியின் அறையில்தான் உறங்கிக் கொண்டிருந்தாள் அவள்.! ஞாயிற்றுக்கிழமையில் மட்டும்தான் அருகில் வருகிறான். அன்றும் தடை போடுவானேன் என்று நினைத்தாள்.

அவள் யோசனையில் இருக்கும்போதே அருகில் வந்துவிட்டவன் அவளை தன்னோடு அணைத்துக் கொண்டான். ஒருகாலத்தில் இந்த அணைப்பிற்காக காத்திருந்ததை நினைக்கையில் இப்போது சிரிப்பு வரும் போல இருந்தது.

அவள் தோளில் போட்டிருந்த மாற்று உடை அவளின் காலடியில் விழுந்தது. அவளோடு கலந்திருந்த குழந்தையின் வாசத்தோடு சேர்த்து அவளின் வாசத்தையும் தனக்கென திருடி எடுத்துக் கொண்டிருந்தான் அவன்.

பிற்பகல் வேளையில் உறங்கிப் போன புவனா மீண்டும் எழுந்து குளித்து விட்டு அந்த அறையை விட்டு வெளியே வந்தபோது மாலை நேரம் கடந்துக் கொண்டிருந்தது.

குழந்தையும் குளித்து விட்டிருந்தது. யசோதா தரையில் அமர்ந்தவண்ணம் குழந்தைக்கு பவுடர் அடித்து வசம்பு மை பொட்டு வைத்துக் கொண்டிருந்தாள்.

அபிராமி சோபாவில் அமர்ந்து செய்தித்தாளை புரட்டிக் கொண்டிருந்தாள். அண்ணனை தேடியது புவனாவின் விழிகள்.

"அர்ஜென்ட் மீட்டிங்ன்னு கிளம்பி போயிட்டாரு உங்க அண்ணன்.." என்றாள் அபிராமி.

புவனா குழந்தையிடம் பார்வையை திருப்பினாள். அபிராமியின் அருகே வந்து அமர்ந்தான் முத்தமிழ். சில நொடிகள் குழந்தையை பார்த்தவன் செய்தித்தாளில் அபிராமி படித்து விட்டு வைத்ததை கையில் எடுத்தான்.

"அண்ணா உனக்கு ஒரு விசயம் சொல்லட்டா.?" என்றுத் தன் காதோரம் ரகசியமாக கேட்ட தங்கையை கேள்வியாக திரும்பிப் பார்த்தான்.

"உன் வொய்ப்பை யார் வேணாலும் ஈசியா படிச்சிடலாம்.. திறந்த புத்தகம்ன்னு சொல்வாங்களே, அது உன் பொண்டாட்டி மனசுக்கு முழுசா பொருந்தும்.!" என்றாள் அதே ரகசிய குரலில்.

முத்தமிழ் பதில் பேசவில்லை. குழந்தைக்கு அலங்காரம் முடிந்ததும் ஆவலாக குழந்தையை அள்ளி எடுத்தாள் புவனா. முத்தமிழின் பார்வைதான் செய்தித்தாள்களை விடுத்து மனைவியின் முகத்தில் குடி போனது.

அவன் பேராசை கொள்ளும் அளவுக்கு அவளின் முகத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் இருந்தது. இது போல தன்னிடம் ஏன் புன்னகைக்க மறுக்கிறாள் என்று குழம்பினான்.

புவனா குழந்தையின் கன்னத்தில் முத்தமிட்டாள்.

"அண்ணி பாப்பாவை என்கிட்டயே தந்துட்டுறிங்களா.? ரொம்ப ஆசையா இருக்கு. நானே வளர்த்துக்கறேன்.!" என்றாள். அவளின் குரலில் இருந்த ஆசையும், ஏக்கமும் அங்கிருந்த மூவரையுமே திகைக்க செய்து விட்டது.

"அ.." புவனா அப்படி கேட்ட பிறகு அபிராமிக்கு பட்டென்று சொல்ல மனமே வரவில்லை.

"உங்க அண்ணன் ரொம்ப வருத்தப்படுவார் புவனா.. இப்பவே எப்ப வருவீங்கன்னு தினம் கேட்டுட்டு இருக்காரு.. பாப்பா பாப்பான்னு ஒரு நாளைக்கு நூறு டைம் போன் பண்ணிட்டு இருக்காரே, உனக்கே தெரியும்தானே.?" என்றாள் அபிராமி.

புவனாவின் முகம் வாடி விட்டது. அவள் மீண்டும் குழந்தையை கொஞ்சுவதற்கே திரும்பி விட்டாலும் கூட அவளின் சோகம் அபிராமிக்கு புரிந்துதான் இருந்தது. தன்னை விடவும் அவள் குழந்தையை நன்றாக கவனித்துக் கொள்கிறாள் என்பதற்காக குழந்தையை அவளிடமே கொடுத்து விட முடியும் என்று தோன்றவில்லை அபிராமிக்கு.

"நீயும் புவனாவும் ‌ஹாஸ்பிட்டல் போய்ட்டு வாங்களேன்.!" என்று மகனை பார்த்துச் சொன்னாள் யசோதா.

முத்தமிழ் புரியாமல் பார்த்தான்.

"உங்களுக்கும் ஒரு குழந்தை இருந்தா நல்லா இருக்கும் இல்ல.? நீங்க இரண்டு பேரும் போய் டாக்டரை பார்த்து வாங்களேன்.!" என்று மீண்டும் சொன்னாள் அம்மா.

முத்தமிழ் என்ன பதில் சொல்ல இருந்தானோ.? ஆனால் அதற்குள் குழந்தை பசியால் வீறிட்டு அழவும் அந்த இடமே முழுதாய் மாறி விட்டது. அபிராமி அவசரமாக குழந்தையை வாங்கிக் கொண்டு தனது அறைக்கு சென்றாள். புவனா இரவு உணவு சமைக்க வேண்டும் என்று எழுந்து சமையலறைக்கு சென்று விட்டாள்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN