மணாளனின் மனம் 34

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
*கதை கொஞ்ச நாளாவே சோகமா போகுதுன்னு தெரியும். இந்த எபியிலும், நாளைக்கு எபியிலும் மட்டும் முத்தமிழை அட்ஜஸ்ட் பண்ணிக்கங்கப்பா..🙏

சிறு குன்றாக குவிந்துக் கிடந்த நெல்லை கைகளில் அள்ளினாள் புவனா. மணி மணியாக நெற்கள். அவளது வயலில் விளைந்த நெற்கள் அவை அனைத்தும்.

மொத்த நெல்லையும் பேராசையோடு அவள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே நெல் மூட்டைகளாக பிடிக்கப்பட்டது. அனைத்தும் நாளை விற்பனைக்கு செல்ல போகிறது.

அந்த நெல் களத்து மேட்டிற்கு வந்து சேர்வதற்குள் எவ்வளவு வேலை செய்தோம் என்று நினைத்துப் பார்த்தவளுக்கு எட்டு லட்சத்தை எவ்வளவு சுலபமாக செலவழித்து விட்டோம் என்றும் புரிந்தது. அங்கிருந்த ஒவ்வொரு நெல் மணியிலுமே அவளின் உழைப்பும், மற்ற உழைப்பாளர்களின் வியர்வையும் கலந்திருந்தது.

'ஒற்றை ரூபாயை சம்பாதிப்பது எவ்வளவு கடினம் தெரியுமா.?' என்று அன்று முத்தமிழ் கேட்டதன் அர்த்தம் இப்போதுதான் புரிந்தது. புரிந்த பிறகு தந்தையை நினைத்துதான் கண்ணீர் கொட்டியது.

'மாற்று லுங்கி கூட வாங்காமல் உனக்கு பட்டு வாங்கி தந்தேன்!' என்றவர் அந்த பட்டிற்காக எவ்வளவு பாடுபட்டிருப்பார் என்ற விசயம் புரிந்ததும் மனம் வலித்தது அவளுக்கு.

தந்தை இத்தனை வருடங்களாக உழைத்ததை நினைக்கையில் காதல் என்ற வார்த்தை முட்டாள்தனமாக தோன்றுவது போலிருந்தது.

வாழ்க்கையில் கட்டி வைத்திருந்த மகிழ்ச்சி எனும் கோட்டையை முழுதாய் சரித்து விட்டது அவள் கொண்ட காதல்.

வாழ்க்கையை அழிப்பதுதான் காதல் என்றால் அதற்கு எப்படி காதல் என்று பெயர் வரும் என்று யோசித்து தனக்குள் சிரித்தாள்.

மூட்டை பிடிப்பவர்களின் இடையே நின்று கண்காணித்துக் கொண்டிருந்த கணவனின் முகத்தைப் பார்த்தாள்.

ஒரு நல்ல நீதிபதி, நல்ல ஆசான், நல்ல மனிதனாகதான் தெரிந்தான். அவள் செய்த தவறுக்கு இதை விட சிறந்த தண்டனையை யாராலும் தந்திருக்க முடியாது என்று புரிந்தது. அவனோடு பழகிய பிறகு,‍ அவனோடு வாழ ஆரம்பித்த பிறகுதான் அவனை இன்னும் சிறப்பாக கற்றுக் கொண்டாள். அவனை படிக்க படிக்க அவன் மீதான காதல்தான் கூடியது. அதுதான் வலியை தந்தது அவளுக்கு.

அவன் வானத்துச் சூரியன். மழலையின் களங்கமற்ற சிரிப்பும் அவன். அவனை மிகவும் பிடித்திருந்தது. காதலின் அளவு தினமும் ஒளியாண்டு வேகத்தில் வளர்ந்துக் கொண்டிருந்தது. அத்தோடு சேர்ந்து அவனிடம் காதலை எதிர்பார்க்க தனக்குத் தகுதி இல்லை என்கிற எண்ணமும் வளர்ந்துக் கொண்டிருந்தது.

அவன் பின்னால் சுற்றித் திரிந்த நாட்களை நினைத்துப் பார்த்தாள். அவனின் நிழலை தொட கூட தனக்குத் தகுதி இல்லை என்று இப்போது எண்ணினாள். திரைப்பட நாயகன் ஒருவனை காதலித்து பைத்தியமாகிப் போன பெண்ணுக்கும் தனக்கும் இடையில் என்ன வித்தியாசம் இருக்கிறது என்று யோசித்துப் பார்த்தாள். அவனுக்கும் அவளுக்கும் ஒத்துவராது என்பதை அவன் தெளிவாகதான் புரிய வைத்திருக்கிறான் என்பதை இப்போதுதான் புரிந்துக் கொண்டாள்.

தன் காதல் முட்டாள்தனத்தின் உச்சம் என்ற உண்மை நெருப்பாய் நெஞ்சை சுட்டதன் வேதனையை பொறுக்க முடியாமல் கையிலிருந்த நெல் மணிகளை கண்ணீரால் நனைத்தாள். சுய கழிவிரக்கம் கூட கூட வாழ்வதே வீண் என்று தோன்றியது. தற்கொலை செய்துக் கொண்டிருந்திருக்க கூடாது என்று எண்ணிய அதே நேரத்தில் தான் பிழைத்திருக்கவே கூடாது என்றும் எண்ணினாள்.

எண்ணங்கள் தெளிவு பெற ஆரம்பித்த பிறகுதான் பைத்தியம் பிடிக்கும் போலிருந்தது. 'மெச்சூரிட்டி ரொம்ப ஆபத்தானது..' என்றது அவளின் மனம்.

அவள் தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு நிமிர்ந்தபோது அவளின் அருகே வந்தான் முத்தமிழ்.

"என்னாச்சி.?" என்றான்.

"தூசி பட்டுடுச்சி மாமா.." என்றவள் கண்களை கசக்க முயன்றாள். அவளின் கையை பற்றி நிறுத்தியவன் அவளின் இரு கண்களையும் மாறி மாறி பார்த்தான்.

"எந்த கண்ணுல தூசி.?"

வலதுக் கண்ணை கை காட்டினாள். தூசியை ஊதி விட்டான். "தூசி விழுந்தா கண்ணை கசக்க கூடாதுன்னு தெரியாதா.? பக்கத்துலதானே இருந்தேன். கூப்பிட்டு இருக்கலாமில்ல.?"

"சாரி மாமா.." என்று தலை குனிந்துச் சொன்னவளை பெருமூச்சோடு பார்த்துவிட்டு நகர்ந்தான்.

மறுநாள் தனது வயலில் விளைந்த நெற் மூட்டைகளோடு சேர்த்து இந்த வயலில் விளைந்த நெற் மூட்டைகளையும் வேலையாட்களோடு சேர்த்து லாரியில் ஏற்றினான் முத்தமிழ். ஓரமாக நின்றபடி அவனை வெறித்துக் கொண்டிருந்தாள் புவனா.

எந்த வேலையையும் செய்ய தயங்கவேயில்லை அவன். அவனுக்கு ரசிகையாகி எட்டு ஆண்டுகள் ஆகி விட்டது. ஆனாலும் கொஞ்சமும் சலிக்காமல் அவளை வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருந்தான். அவள் பார்த்த பூமியின் தேவன் அவன்.

அன்று மாலையில் நெல் விற்ற பணத்தை கொண்டு வந்து அவளிடம் தந்தான்.

"இது உன் வயலில் சம்பாதிச்ச பணம்.. இன்னும் இரண்டு வருசத்துக்கு நாமளே உழவு ஓட்டினா உன்னோட மொத்த கடனையும் அடைச்சிடலாம்.!" என்றான்.

கடன் வாங்கியதில் அசலை விட வட்டிதான் உழைப்பை அதிகம் குடித்தது‌. வயலில் விதை, மெஷின், பூச்சி மருந்து, உரம், கூலியாட்களுக்கான பணம் என்று அனைத்திற்கும் கிள்ளிப் பிடித்தது போல செலவு செய்தால்தான் லாபம் என்ற ஒன்றையும் பார்க்க முடிந்தது.

இவனின் கையை பற்றியதற்கு எத்தனை விசயங்களை கற்று தருகிறான் என்று எண்ணி ஆச்சரியப்பட்டாள்.

இவனின் இடத்தில் வேறு ஒருவராக இருந்திருந்தால் பிடிக்காமல் கட்டிய மனைவி என்ற காரணம் சொல்லி எப்படி வேண்டுமானாலும் திரிந்திருப்பார்கள். இல்லையேல் தான் கொண்ட காதலையே அடிப்படையாக வைத்து அடிமையாக்கி முட்டாளை முழு முட்டாளாக மாற்றி மண்ணில் புதைத்து இருப்பார்கள் என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள்.

பணத்தை பீரோவின் வைத்து பூட்டிவிட்டு திரும்பினாள். அவளை நெருங்கி நின்றிருந்தவன் அவளின் உதடுகளை நோக்கி குனிந்தான். அவனின் உயரத்திற்கு மதுமிதாவை திருமணம் செய்திருந்தால் இப்படி கழுத்து வலிக்க முத்தம் தந்திருக்க தேவையில்லை என்று நினைத்து அதற்கும் தன்னையே திட்டிக் கொண்டாள்.

அவளின் யோசனையை கண்டவன் "என்ன.?" என்றான். 'நான் இதைதான் முதலிலேயே சொன்னேன்.!' என்றுக் கூறித் திட்டுவான் என்று தெரிந்திருந்தும் தன் மனதில் நினைத்ததை அவனிடம் சொல்லி விட்டாள்.

அவளை விட்டு ஓரடி விலகி நின்றான். "எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு.." என்றவன் அவளின் பதிலை எதிர்பார்க்காமல் கிளம்பி விட்டான்.

அறையின் வெளியே அவன் தனக்கு தேவன்தான் என்றாலும் இந்த அறைக்குள் அவன் ஒரு கொடூரன் என்பதைப் புரிந்து வைத்திருந்தவளுக்கு அவனின் திடீர் விலகல் பெரியதாக தோன்றவில்லை.

"மதுவை கல்யாணம் பண்ணி இருக்கணுமாம்.. முட்டாள் கழுதை.." என்று புவனாவை திட்டியபடியே தென்னந்தோப்பில் குவித்து வைத்திருந்த தேங்காய்களை மட்டை உரித்துக் கொண்டிருந்தான் முத்தமிழ்.

அவளின் மீது கோபமாக வந்தது. இரண்டரை வருடங்களுக்கு முன்பு ஒருநாள் மதுவை திருமணம் செய்துக் கொள்ளலாம் என்று அவன் நினைத்தது என்னவோ உண்மைதான். ஆனால் இந்த இரண்டரை வருட திருமண வாழ்வில் புவனாவை தவிர வேறு யாரையும், அது தேவலோக ரதியாக இருந்தாலும் கூட அவனால் மனைவி என்ற இடத்தில் வைத்துப் பார்க்க முடியவில்லை. அபிராமி சொன்னது போலவே பற்றுக்கொடி ஒன்று அதன் மரத்தையும் சேர்த்து வளைத்துப் போட்ட அதே கதையாகி போனான் அவனும்.

கோபத்தில் கவனம் சிதறிப்போய்தான் வேலைச் செய்துக் கொண்டிருந்தான் முத்தமிழ். பத்து தேங்காய்கள் கூட உரித்திருக்க மாட்டான். அதற்குள் தேங்காயோடு சேர்த்து கையையும் கடப்பாரையில் தந்து விட்டிருந்தான். சிறு காயம்தான். ஆனாலும் ரத்தம் நிற்காமல் கொட்டியது.

சிறுநீர் கழித்துவிட்டு வர சென்றிருந்த தேங்காய் உரிக்கும் வேலையாள் பீடி ஒன்றை பற்ற வைத்தபடி அப்போதுதான் அங்கே வந்தார். இவனை கண்டதும் அவசரமாக பீடியை அணைத்து எறிந்துவிட்டு "பத்து நிமிசம்தான் அந்த பக்கம் நகர்ந்தேன்‌‌.." என்று புலம்பியபடி ஓடி வந்தார்.

"என்ன தம்பி இப்படி பண்ணிட்டிங்க.?" வருத்தமாக கேட்டபடி தனது தலையிலிருந்த துண்டை எடுத்து அவசரமாக அவனின் கையை சுற்றிக் கட்டுப் போட்டார்.

"சின்ன அடிதான் அண்ணா.." என்றவனை கண்டு நெற்றியில் அடித்துக் கொண்டவர் "கொஞ்சம் கவனமா இருக்க கூடாதா.? சின்ன காயம்தான். ஆனா ஆழமா பட்டிருக்கு.. சீக்கிரம் டாக்டரை பார்க்கலாம் வாங்க.." என்றவர் அவனை அழைத்துக் கொண்டு கிளம்பினார்.

"நானே பைக் ஓட்டிப்பேன் அண்ணா.." என்றவனின் பேச்சை காதில் வாங்காமல் பைக்கை கிளப்பினார். "உட்காருங்க தம்பி.. சீக்கிரம் போகலாம்.. இல்லன்னா உங்க தாத்தா நானேதான் உங்க கையை கடப்பாரையால குத்திட்டதா நினைச்சி வருத்தப்படுவாரு.." என்றார்.

மருத்துவமனையில் காயத்திற்கு மருந்துப் போட்டு கட்டு போட்டனர்.

"மெஷின் வாங்கிடலாம்ன்னு நான் அப்பவே சொன்னேன்‌.!" மருத்துவமனை வாசலில் நின்று சொன்னவனை கவலையாக பார்த்தவர் "எனக்கு இது பழகி போச்சி.. இருக்கற கொஞ்சம் மரத்துக்கு எதுக்கு மெஷின்னு நினைச்சி வேண்டாம்ன்னு சொன்னேன்.. ஆனா நீங்க இப்படி வந்து கையை கொடுப்பிங்கன்னு கனவா கண்டேன்.?" என்று கேட்டவர் அவனை வீட்டில் கொண்டு வந்து சேர்த்துவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.

முத்தமிழ் வீட்டுக்குள் நுழைந்தபோது புவனா அபிராமியின் குழந்தையை மடியில் வைத்து கொஞ்சிக் கொண்டிருந்தாள். மூன்று மாதங்கள் ஆகி விட்டது குழந்தைக்கு. புவனாவின் கை நிறைய பொக்கிஷம் போல படுத்திருந்தாள் குழந்தை.

"கைக்கு என்னாச்சி.?" அபிராமிதான் முதலில் பார்த்துவிட்டுக் கேட்டாள். புவனாவை மட்டுமே விழிகளில் சேகரித்துக் கொண்டிருந்தவனுக்கு அதன் பிறகுதான் குழந்தைக்கு ஸ்வெட்டர் பின்னிக் கொண்டிருந்த யசோதா‌வும், சீரியல் பார்த்துக் கொண்டிருந்த பாட்டியும், மடிக்கணினியில் வேலையாக இருந்த அபிராமியும், திருவாசகத்தின் பின்பகுதி பக்கங்களை புரட்டிக் கொண்டிருந்த தாத்தாவும் கண்களுக்கு தெரிந்தனர்.

"சின்ன காயம்.." என்றபடி வந்து புவனாவின் முன்னால் இருந்த சோபாவில் அமர்ந்தான். புவனா அவனின் கையை சில நொடிகள் கவனித்துவிட்டு தலை குனிந்துக் கொண்டாள்.

"எப்படிடா.?" என்ற அம்மாவிற்கு நடந்ததை விவரித்தவன் தன்னை நேர்கொண்டு பார்க்காமல் அமர்ந்திருந்த மனைவியை இமைக்காமல் பார்த்தான்.

பாட்டியும், தாத்தாவும் அவனை திட்டினார்கள். யசோதா கடிந்துக் கொண்டாள். "நீ என்ன குழந்தையா.?" என்று அபிராமியும் திட்டினாள். எல்லோருக்கும் மொத்தமாக தலையாட்டினான். "என்னவோ அசால்டா இருந்துட்டேன்.." என்றவன் "மாத்திரை சாப்பிடணும்.. கொஞ்சம் சுடுதண்ணி கிடைக்குமா.?" என்றான் புவனாவை பார்த்தபடி.

நிமிர்ந்து நோக்காத புவனாவிற்கு அவனின் பார்வை தெரியாவிட்டாலும் அபிராமிக்கு தெரிந்துதான் இருந்தது.

"பாப்பா தூங்கிட்டா புவனா.. அவளை வச்சிட்டு போய் சுடுதண்ணி கொண்டு வரியா.?" என்றாள்.

மடியில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை தூக்கிச் சென்று தொட்டிலில் இட்டவள் அடுத்த ஐந்தாம் நிமிடத்தில் சூடான பால் கோப்பையை முத்தமிழின் முன்னால் நீட்டினாள். அவளின் நடுங்கும் கரத்தை பார்த்தபடியே கோப்பையை வாங்கியவன் அவளிடமிருந்து ஒரு வார்த்தையாவது வராதா என்று எதிர்பார்த்தான்.

"டிரெஸ்ஸெல்லாம் காஞ்சிடுச்சி.. நான் போய் எடுத்துட்டு வரேன்‌.." என்று பொதுவாக சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

கோப்பையை வைத்துவிட்டு மாத்திரையை கைகளில் எடுத்தான். அபிராமி மாத்திரைகளை கவரில் இருந்து எடுத்து பிரித்து தந்தாள்.

மாத்திரைகளை விழுங்கிவிட்டு பாலையும் குடித்து முடித்தான்.

புவனா காய்ந்த துணிகளோடு வீட்டுக்குள் வந்தாள். அவளின் சிவந்த கண்களை முத்தமிழை தவிர வேறு யாரும் பார்க்கவில்லை. தோட்டத்தில் அமர்ந்து அழுதுவிட்டு வந்திருக்கிறாள் என்று புரிந்தது. ஆனால் தன்னிடம் ஒரு வார்த்தையும் விசாரிக்காதவள் அழ வேண்டிய அவசியம் என்ன என்று அவனுக்கு புரியவில்லை.

துணிகளை மடித்து அவரவர் அறையில் கொண்டுச் சென்று வைத்துவிட்டு வந்தாள். தனது உடைகளையும், முத்தமிழின் உடைகளையும் அலமாரியில் வைத்துவிட்டு திரும்பியவள் தன் முன் வந்து நின்ற கணவனை ஏறிட்டு பார்த்தாள். பின்னர் அவனைத் தாண்டிக் கொண்டு நடந்தாள்.

"புவனா.." அவளின் கையை பற்றி நிறுத்தியவன் ஒற்றை கரத்தால் அவளை இழுத்து அலமாரியின் மீது சாய்த்து நிறுத்தினான்.

"என் கைக்கு அடி பட்டுடுச்சி.." என்று தன் வலதுக் கரத்தை தூக்கிக் காட்டினான்.

கரத்தை பார்க்காமல் அவனை மட்டும் பார்த்தவள் "தெரியும் மாமா.." என்றாள் உணர்ச்சிகளற்ற குரலில்.

"உ.. உனக்கு எதுவும் சொல்லணும்ன்னு தோணலையா.?"

உதட்டை கடித்தபடி இடம் வலமாக தலையசைத்தாள். ஓவென்று கதறி அழ வேண்டும் போல இருந்தது. அவனின் கையை பற்றி அந்த காயத்திற்காக உருகி மருகி கண்ணீர் விட வேண்டும் போல இருந்தது. பட்ட அடி இன்னும் கொஞ்சம் ஆழமாக பட்டிருந்தால் அவனின் கையே போயிருக்கும் என்ற விசயம் புரிந்து அவனை திட்ட வேண்டும் போல இருந்தது. ஆனால் அப்படியெல்லாம் செய்தால் காதலென்று ஆகி விடுமே என்பதால் மௌனம் காத்தாள். வெளிக்காட்ட கூடாத காதல் இது. தனக்குள்தான் அழ வேண்டுமே தவிர அவனிடம் சொல்லி அழ கூடாது என்ற எண்ணத்தில் மனதை எந்திரம் போல வைத்திருந்தாள்.

"உங்களுக்கு நைட் சாப்பாடு என்ன வேணும் மாமா.?" அவனை விட்டு விலகிக் கொண்டே கேட்டாள்.

"கொஞ்சம் விஷம் கிடைச்சா நல்லா இருக்கும்.." என்று தனக்குள் முனகியவன் "ஏதோ ஒன்னு செய்யுங்க.." என்றான் வெறுப்பான குரலில்.

இரவு உணவு பிடிக்கவேயில்லை அவனுக்கு.

மறுநாள் அலுவலகம் சென்றதும் மதுமிதாவை சென்றுப் பார்த்தாள் புவனா. "அக்கா உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்.. பிரெண்ட் மாதிரி.." என்றாள்.

மதுமிதா அவளை யோசனையோடு பார்த்தாள். "எனக்கு பிரெண்ட்ஸ் கிடையாதுன்னு உங்களுக்கே தெரியும் இல்லையா.? எல்லாம் என் முட்டாள்தனமான காதல் தந்த பரிசு.. எனக்கு உங்களை தவிர மனசு விட்டு பேச வேற ஆள் இல்லக்கா..‌ அதான் ஹெல்ப் கேட்டு வந்தேன்.." என்றாள்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN