மணாளனின் மனம் 35

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அன்று மதுமிதா சைட்டுக்கு கிளம்பும்போது புவனாவை தன்னோடு அழைத்துச் சென்றாள். முத்தமிழ் தன்னை விட்டு செல்பவளை கோபத்தோடு பார்த்தான்.

"புருசனுக்கு கையில அடிப்பட்டிருக்கு.. கூடவே இருந்து உதவி பண்ணலாமேன்னு தோணுச்சா.. சரியான ராட்சசி.!" என்று எரிந்து விழுந்தான்.

நடு வழியில் இருந்த காப்பி ஷாப்பின் முன்னால் தன் காரை நிறுத்திவிட்டு கீழிறங்கினாள் மதுமிதா.

இருவரும் எதிரெதிரே அமர்ந்து காப்பி அருந்துகையில்தான் "என்ன ஆச்சி.?" என்று கேட்டாள் மதுமிதா.

"ரொம்ப கஷ்டமா இருக்குக்கா.!" காப்பி கோப்பையை பார்த்தபடி சொன்னவளின் கையை பற்றினாள் மதுமிதா.

"அவன் கைக் காயம் நல்லாகிடும் புவி.." என்று ஆறுதல் சொன்னாள்.

"அ.. அது இல்லக்கா.. வாழ்க்கை ரொம்ப வெறுத்துப் போச்சி.! ஒரு மாதிரி வருத்தமும், சோகமுமா இருக்கு.. என் ஆசைகளே என்னை உயிரோடு உருக்கிட்டு இருக்கற மாதிரி இருக்கு.! நான் சுதந்திரமா சிரிச்சும் அழுதும் ரொம்ப நாள் ஆகுதுக்கா.!"

மதுமிதா அவளை அதிர்ச்சியோடுப் பார்த்தாள்

"ஆத்துல பாதியும் சேத்துல பாதியுமா லைஃப் போயிட்டு இருக்கு.! நான் மாமாவை லவ் பண்ணதை நினைச்சி சந்தோசப்படுறேன். ஆனா அதே நேரத்துல அவரை லவ் பண்ணதுக்காக என்னை நானே திட்டிக்கிறேன். நான் சொல்வதை பார்த்தா உங்களுக்கு பைத்தியக்கார பேச்சு போல இருக்கு இல்ல.? ஆனா நானே அப்படிதான்க்கா இருக்கேன். நான் அவரை லவ் பண்ணது தப்பு இல்ல. ஆனா அதை அவர்கிட்ட சொன்னதும், அந்த லவ் கிடைச்சாவே போதும்ன்னு நம்பி அவரை கல்யாணம் பண்ணிக்கிட்டதும் ரொம்ப தப்புக்கா.!" என்றவளின் விழிகளில் இருந்து ஒற்றை துளி கண்ணீர் விழுந்தது.

"புவி.. நீ இப்படி சொல்லலாமா.? நீ எவ்வளவு க்யூட்டான பொண்ணு.! கல்யாணமாகி இத்தனை நாள் கழிச்சி உனக்கு ஏன் இந்த குழப்பம்.? அவனும் நீயும் மேட் ஃபார் ஈச் அதர்.. இதை நான் தயாகிட்ட கூட பலமுறை சொல்லி இருக்கேன்.!" என்றாள்.

புவனா நிமிர்ந்தாள். மதுமிதாவின் கழுத்தில் இருந்த மாங்கல்யத்தை சில நொடிகள் பார்த்தாள். மதுமிதாவிற்கு திருமணமாகி இத்தோடு நான்கு மாதங்கள் ஆகிவிட்டது. தயா அந்த தாலியை கட்டும்போது எவ்வளவு சீன் காட்டினான் என்று யோசித்து பார்த்தாள் புவனா. 'இவங்களோடதுதான் காதல். நிஜ காதல்.‌!' என்று உள்ளுக்குள் சொன்னாள்.

"நான் அவருக்கு பர்பெக்ட் கிடையாதுக்கா.! நான் அவர்கிட்ட இருந்து டைவர்ஸ் வாங்கணும். ஆனா எப்படின்னு தெரியல. நான் அவர் கூட இருந்தா ஏதாவது பண்ணிப்பேனோன்னு பயமா இருக்கு. அப்புறம் அவர் ரொம்ப உடைஞ்சிடுவாரு.! இரண்டு பேருக்குமே சேதாரம் இல்லாம அவர்கிட்ட இருந்து பிரியணும்க்கா.. ப்ளீஸ் ஏதாவது நல்ல ஐடியா சொல்லுங்க.!" என்றாள்.

மதுமிதாவின் முகத்தில் தெரிந்த அதிர்ச்சியை கவனித்தவள் "நான் நல்லா யோசிச்ச பிறகுதான் இந்த முடிவுக்கு வந்திருக்கேன் அக்கா.. ஆனா இதை பத்தி மாமாக்கிட்ட சொல்லிடாதிங்க ப்ளீஸ்.." என்றாள் கெஞ்சலாக.

"பு.. புவனா உனக்கு கிறுக்கு பிடிச்சிருக்கு. அதனாலதான் இப்படி யோசிச்சி இருக்க.. உனக்கு ஏதாவது அன்கம்பிர்டபிளா இருந்தா ஒரு வாரத்துக்கு என் வீட்டுக்கு வந்து தங்கிக்கோ.. இல்லன்னா உன் பேரண்ட்ஸ் வீட்டுக்கு போ.. அதை விட்டுட்டு டைவர்ஸ்ன்னு எதுக்கு லூசுதனமா யோசிக்கற.?" என்று கேட்டாள்.

புவனாவால் அனைத்து விசயங்களையும் மதுமிதாவிடம் சொல்ல முடியவில்லை. தன் மனநிலையை யாரிடம் சொல்லி புரிய வைப்பது என்றும் அவளுக்கு தெரியவில்லை.

"அவனுக்கும் உனக்கும் நடுவுல என்ன சண்டைன்னு தெரியல புவி.. ஆனா அவன் உன்னை லவ் பண்றான். நீ அவனை லவ் பண்ற.. நீங்க இரண்டு பேரும் சேர்ந்து இருந்தாதானே நல்லாருக்கும்.? ஏதாவது பேசணும்ன்னா சொல்லு நான் அவன்கிட்ட பேசுறேன்.!" என்றாள் மதுமிதா.

புவனா சில நொடிகள் மௌனம் காத்தாள். மதுமிதாவோடு பேச வந்த விசயம் தோல்வியில் முடிந்ததை புரிந்துக் கொண்டாள். "அவர்கிட்ட பேசுற அளவுக்கு ஒன்னும் இல்லக்கா. இது மைன்ட் டிஸ்டர்ப். நல்லாயிடும்ன்னு நினைக்கிறேன்.!" என்றாள்.

மதுமிதா புன்னகைத்தாள். "குட் கேர்ள்.." என்று பாராட்டினாள்.

மதிய உணவை அனைவரும் சேர்ந்து சாப்பிடுகையில் புவனா தனக்கு ஊட்டி விட முயல்வாள் என்று எதிர்ப்பார்த்தான் முத்தமிழ். ஆனால் அவளோ ஸ்பூன் ஒன்றை அவனருகே வைத்துவிட்டு அமைதியாக தனது உணவை உண்ண ஆரம்பித்தாள்.

மாலையில் வீடு திரும்புகையில் காரை புவனா ஓட்டினாள். முத்தமிழின் கைக் காயத்தால் அவனால் பைக் ஓட்ட முடியவில்லை என்பதால் காரை புவனாவே எடுத்து வந்திருந்தாள்.

"உனக்கு என்னைப் பிடிக்கலையா புவனா.?" தன் அருகே அமர்ந்துக் கேட்டவனின் பக்கம் திரும்பி பார்க்காதவள் "பிடிக்கும் மாமா.!" என்றாள்.

"நீ இப்பவெல்லாம் ரொம்ப அன்னியமா நடந்துக்கற புவனா‌. என் மேல உனக்கு பாசமே இல்ல.. நான் செத்தேனே பிழைச்சேனேனான்னு கூட கண்டுக்கல.."

புவனா காரை சாலையில் ஓரமாக நிறுத்தினாள். அவன் பக்கம் திரும்பினாள்.

"நான் உங்ககிட்ட என் லவ்வை காட்ட கூடாது.. இதான் நமக்குள்ள இருக்கும் ரூல்ன்னு நினைக்கிறேன் மாமா.! இந்த கைக் காயத்துக்காக நான் கண்ணீர் விட்டாலும் அது காதல்தான்.! உங்களை பிடிக்கும்ன்னு சொல்லி உங்களை சுத்தி சுத்தி வந்தாலும் அதுவும் காதலைக் காட்டுற மாதிரிதான் ஆகும்.."

முத்தமிழ் யோசித்தான். "நட்பு மாதிரி என் மேல அக்கறைக் காட்ட கூடாதா.?"

அவனை கலங்கும் விழிகளோடு பார்த்தாள். "பிரெண்ட்ஸ் வித் பெனிபிட்ஸ்.. இந்த மாதிரி உறவுல நாம இருக்கோம்ன்னு சொல்லாம சொல்றிங்க, ரைட்.?" என்றாள்.

அதிர்ந்தவன் "நா.. நான் அப்படி சொல்ல வரல.. ப்ராமிஸ்.." என்றான்.

கசந்த சிரிப்போடு கண்களை துடைத்துக் கொண்டாள் "என் கழுத்துல இருக்கும் தாலிக்கு ஏதோ ஒரு மீனிங் இருக்குன்னு நினைச்சேன் மாமா.. ஆனா.." அதற்கு மேல் சொல்ல வார்த்தைகள் வரவில்லை அவளுக்கு. துக்கம் தொண்டையை பிடித்தது. அவனிடமிருந்து பதில் வரும் என்று அவள் எதிர்பார்க்கவில்லை. அதனால் அமைதியாக காரை கிளப்பினாள்.

முத்தமிழ் சாலையை வெறித்தான். சில நொடிகளுக்கு பிறகு புவனாவை திரும்பிப் பார்த்தான். அவள் பழையபடி அதே இயல்போடு விருப்பு வெறுப்பு இல்லாத முகத்தோடு இருந்தாள்.

அவர்கள் இருவரும் வீட்டிற்கு வந்திருந்தபோது கார்த்திக் தன் மனைவி மகளை பார்க்க வந்திருந்தான்.

இன்னும் இரண்டு நாட்களில் அபிராமியும் குழந்தையும் அவனோடு செல்ல போகிறார்கள். அவர்களை அழைத்துச் செல்ல இரண்டு நாள் முன்பே வந்து விட்ட அண்ணனோடு சிறிது நேரம் பேசி இருந்துவிட்டு தனது வேலைகளை கவனிக்க சென்றாள் புவனா.

அன்று இரவு முத்தமிழாகவே ஒதுங்கிப் படுத்துக் கொண்டான். புவனா அவனைக் கண்டுக் கொள்ளவில்லை. அவளின் மனம் இன்னும் நான்கைந்து மாதங்களுக்கு கசந்துக் கிடக்க அவன் காரில் சொன்னதே போதும் போல இருந்தது.

ஆனால் காலையில் அலார சத்தத்திற்கு கண் விழித்தபோது அவனின் அணைப்பில்தான் இருந்தாள் அவள். இருவருமே அவரவர் இடத்தை விட்டு நகர்ந்து வந்து கட்டிலின் மையத்தில் படுத்திருப்பதை புரிந்துக் கொண்டாள். அவனின் முகத்தைப் பார்த்தாள். அவள் தினமும் ரசித்த அதே முகம். முத்தமிட்டு கொஞ்சி விட மாட்டோமா என ஆசைக்கொண்ட அதே முகம். பெருமூச்சோடு எழுந்து அமர்ந்தாள். அவனின் கைக் காயத்தை பார்த்தாள். அந்த அதிகாலை நேரத்திலும் சோகத்தால் மனம் கண்ணீர் விடும்போல இருந்தது. சலிப்போடு குளியலறைக்கு நடந்தாள்.

அடுத்த இரண்டாம் நாளில் அபிராமியையும் குழந்தையையும் புகுந்த வீடு அனுப்பி வைக்கும் விழா நல்லபடியாக நடந்து முடிந்தது.

புவனாதான் தனிமையை உணர்ந்தாள். குழந்தையின் நினைவாகவே இருந்தது.

இரண்டு நாள் விலகி இருந்த முத்தமிழ் மூன்றாம் நாளில் அவனே அவளோடு ஒட்டிக் கொண்டு விட்டான். அவளாலும் அவனை விலகிப் போ என்றுச் சொல்ல முடியவில்லை. அவன் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் பிரெண்ட்ஸ் வித் பெனிபிட்ஸ் போலதான் தங்களின் வாழ்க்கையும் போகிறது என்று எண்ணிக் கலங்கினாள்.

முத்தமிழின் கைக் காயம் நல்லாகி போனது.

நாட்கள் அப்படியே நகர்ந்தது. மீண்டும் அதே பழைய வாழ்க்கைக்கு திரும்பி வந்தது போலிருந்தது அவளுக்கு.

'விடு புவனா.. இதை பொறுத்துக்க முடியாதா.? எல்லாம் பழகிட்ட விசயம்தானே.?' என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டவள் அடுத்த இரண்டாம் வாரத்திலேயே "எனக்கு டைவர்ஸ் வேணும்.." என்று முத்தமிழின் முன்னால் நின்றுக் கேட்டாள்.

அலுவலகம் செல்ல வேண்டும் என்று அவசரமாக தயாராகிக் கொண்டிருந்தவன் தன் முன் வந்து நின்றவளை குழப்பமாக பார்த்துவிட்டு "என்ன உளறுற.?" என்றுக் கேட்டான்.

தலை குனிந்து நின்றிருந்தவள் "ஒன்னும் உளறல.. என்னால உங்களோடு இருக்க முடியாது. ப்ளீஸ் என்னை எங்க வீட்டுக்கு அனுப்பிடுங்க.." என்றாள் உடைந்த குரலில்.

முத்தமிழ் அவளின் தாடையை பற்றி நிமிர்த்தினான்.

புவனா ஓரடி பின்னால் தள்ளி நின்றாள்.

"ப்ளீஸ் மாமா.." என்றவளின் விழிகளில் இருந்து வழிந்த கண்ணீர் கன்னங்களை தாண்டி விட்டிருந்தது.

முத்தமிழுக்கு ஒன்றும் புரியவில்லை. தினசரி நாள் போலதான் இந்த நாளும் செல்கிறது. ஆனால் இவளுக்கு என்ன வந்தது என்று புரியாமல் குழம்பியவன் "நான் அன்னைக்கு சொன்னதுதான். என்னால டைவர்ஸ் தர முடியாது.." என்றான் உறுமும் குரலில்.

புவனா அவனை கெஞ்சலாக பார்த்தாள்.

"சரி நீங்களே சொல்லுங்க.. எனக்கு இன்னும் எத்தனை நாளுக்கு இந்த பனிஷ்மென்ட் தர போறிங்க.?"

நெற்றியை சுருக்கி யோசித்தவன் "என்ன பனிஷ்மென்ட்.?" எனக் கேட்டான்.

"இரண்டு பேரும் ஒருத்தருக்கொருத்தர் லவ்வையே காட்டிக்க கூடாதுன்னு தண்டனை தந்து வச்சிருக்கிங்களே, இந்த தண்டனையை எப்பதான் வாபஸ் வாங்குவிங்க.?"

முத்தமிழ் கண்ணாடியின் பக்கம் திரும்பி நின்றான். கண்ணாடியில் பிம்பமாக தெரிந்தவளை பார்த்தபடியே சட்டையின் கைகளுக்கு பட்டனை போட்டான்.

"இது தண்டனை போலவா இருக்கு.?" எனக் கேட்டான் கிண்டலாக.

புவனா பதில் சொல்லாமல் அவனை கெஞ்சலாக பார்த்தாள்.

"இத்தனை நாளும் நல்லாதானே போயிட்டு இருக்கு.. இப்ப என்ன திடீர்ன்னு.!" என கேட்டவனை தன் பக்கம் திருப்பியவள் "நான் உங்களை காதலிச்சது ரொம்ப தப்பு. விஷம் குடிச்சது அதை விட பெரிய தப்பு.. நான் செஞ்ச தப்பையெல்லாம் ரொம்ப நல்லாவே உணர்ந்துட்டேன். ப்ளீஸ்.. என்னை விட்டுடுங்க.. இதுக்கு மேல சத்தியமா என்னால முடியாது.." என்றாள்.

முத்தமிழ் அவளின் நெற்றி கூந்தலை ஒதுக்கி விட்டான். நிற்காமல் வழிந்த கண்ணீரையும் துடைத்து விட்டான். நடுங்கிக் கொண்டிருந்த அவளின் கரங்களை கவனிக்கவில்லை அவன். "நீ உன் தப்பை உணர்ந்ததுல எனக்கும் சந்தோசம் புவனா.. ஆனா இதை தண்டனைன்னு சொல்லி என்னை வில்லனை போல சித்தரிக்காதே.! இப்ப நம்ம வாழ்க்கைக்கு என்ன குறைச்சல்.? சந்தோசமாதானே இருக்கோம்.!" என்றுக் கேட்டான்.

"ஆனா எனக்கு பிடிக்கல மாமா.. தயவு செஞ்சி என்னை விட்டுடுங்க.. உங்களை கெஞ்சி கேட்கிறேன்.!" என்றாள்.

முத்தமிழ் அவளை வெறித்துப் பார்த்தான். கண்களை மூடியவன் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு மீண்டும் கண்களைத் திறந்து அவளைப் பார்த்தான். அவளின் தாடையை பற்றியவன் அவளின் முகத்தை நோக்கிக் குனிந்தான்.

"உனக்கோ எனக்கோ தனி தனி லைஃப் கிடையாது புவனா‌. நம்ம லைஃப்ல எல்லா விசயத்தையும் முடிவெடுக்கற உரிமை எனக்கு மட்டும்தான்.. என்னால உனக்கு டைவர்ஸ் தர முடியாது‌. இத்தனை நாள் நல்லா இருந்தவளுக்கு இன்னைக்கு என்ன வந்ததுன்னு தெரியல. ஆனா என்ன நடந்தாலும் ஒன்னு மட்டும் ஞாபகம் வச்சிக்க.. ஐ டோண்ட் வாண்ட் யுவர் லவ். பட் ஐ வாண்ட் யூ.!" என்றவன் அவளின் இதழில் நீண்டதொரு முத்தத்தை தந்து விட்டு அவளை விட்டு விலகி நின்றான்.

கலங்கும் விழிகளோடு அவனை நிமிர்ந்துப் பார்த்தாள். அவளின் விழிகள் தாங்கி நின்ற சோகத்தை தாங்க முடியாதவனாக முத்தமிழ் அங்கிருந்து விலகி நடந்தான். இரண்டு எட்டுகள் எடுத்து வைக்கும் முன் என்னவோ விழும் சத்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தான். புவனா தரையில் கிடந்தாள். மயங்கி விழுந்து கிடந்தவளை கண்டதும் பதறிப்போய் அவளருகே ஓடினான்.

"புவி.. புவி.." நடுங்கும் கரத்தோடு அவளின் கன்னத்தை தட்டினான். பயத்தோடு அவளின் நெஞ்சின் மீது காதை வைத்துக் கேட்டான். இதயம் சீராகதான் துடித்துக் கொண்டிருந்தது.

"டைவர்ஸ் தர மாட்டேன்னு தெரிஞ்சி மறுபடியும் எதையாவது குடிச்சி வச்சிட்டியா புவனா.? அப்படி மட்டும் இருந்தா நானே உன்னை கொன்னுடுவேன்.!" என்று நடுங்கும் குரலோடு மிரட்டியவன் அவசரமாக அவளை தூக்கி வந்து பெட்டில் படுக்க வைத்தான். மேஜையின் மீதிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து வர வேண்டி நகர்ந்தவன் சட்டென்று நின்றான். அவளின் இடதுக் கரத்தை அப்போதுதான் கவனித்தான். எதையோ இறுக்கமாக பற்றி இருந்தாள்.

கட்டிலை நெருங்கியவன் அவளின் கையை பற்றி விரல்களை பிரித்தான். இரட்டை கோடுகளோடு இருந்த பிரகனென்சி டெஸ்ட் கிட் ஒன்று அவளின் உள்ளங்கை வியர்வையின் இடையே இருந்தது.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN