மணாளனின் மனம் 36

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
புவனா கண் விழித்தபோது அவளின் அருகே கவலையோடு அமர்ந்திருந்த முத்தமிழ்தான் முதலில் தெரிந்தான்.

"மா.." குரல் எழ மறுத்தது. எழுந்து அமர்ந்தவளின் மறுபக்கம் அமர்ந்திருந்த யசோதா "இந்த சுடுதண்ணியை குடி.!" என்று தண்ணீரை தந்தாள்.

காலி டம்ளரை திருப்பி தந்தாள் புவனா.

"நீ மயக்கம் போட்டு விழுந்துட்டன்னு தமிழ் சொன்னதும் நான் எவ்வளவு பயந்துப் போனேன் தெரியுமா.?" என்றாள் யசோதா.

கட்டிலின் கால் பகுதியில் அமர்ந்திருந்த பாட்டி எழுந்து வந்து புவனாவின் தலையை வருடி விட்டாள்.

"சரியா சாப்பிடுறதே இல்ல.. அதான் மயக்கம் வந்திருக்கு.. இனி நீ பாதி சாப்பாட்டுல எழுந்தா நான் உனக்கு சூடு போட போறேன்.!" என்று செல்லமாக கடிந்து விட்டு அங்கிருந்து சென்றாள்.

"டாக்டர் வந்து இரண்டு ஊசி போட்ட பிறகுதான் எழுந்திருக்க.." வருத்தமாக சொன்ன யசோதா "இவளை ஹாஸ்பிட்டல் கூட்டி போகணுமா.?" என்று மகனைப் பார்த்துக் கேட்டாள்.

"அப்புறமா பார்க்கலாம்மா.. டாக்டர் சும்மா மயக்கம்ன்னுதான் சொல்லி இருக்காங்க.."

யசோதா கவலையோடு மருமகளை பார்த்துவிட்டு நகர்ந்தாள்.

மாமியாரின் முதுகை பார்த்திருந்தவளின் கையை பற்றினான் முத்தமிழ். திரும்பிப் பார்த்தாள். அவளின் கையில் பிரகனென்சி டெஸ்ட் கிட் இருந்தது. அதை கண்ட பிறகுதான் மயங்குவதற்கு முன்பு நடந்த விசயங்கள் நினைவிற்கு வந்தது.

"மாமா.." என்றபடி நிமிர்ந்தாள்.

முத்தமிழ் நாற்காலியில் சாய்ந்தபடி கால் மீது கால் போட்டு அமர்ந்திருந்தான்.

"சொல்லு.." என்றான் உணர்வுகளை காட்டாத ஒரு குரலில்.

புவனா யோசித்தாள். நிறைய பயந்தாள். கவலையோடு அவனைப் பார்த்தவள் "நான் பிரகனென்டா இருக்கேன் மாமா.!" என்றாள்.

"ஓ.." என்றவன் அடுத்து ஏதாவது சொல்வானா என எதிர்பார்த்திருந்தாள். ஆனால் அவன் அத்தோடு அமைதியாகிக் கொண்டான்.

சில நிமிடங்கள் மௌனத்திற்கு பிறகு அவளாகவே "இப்ப என்ன பண்றது.?" என்றுக் கேட்டாள்.

"என்ன பண்றதுன்னு என்கிட்ட கேட்டா நான் என்ன சொல்வேன்?"

"நீ.. நீங்க தந்த பர்த் கன்ட்ரோல் மாத்திரையை நான் கரெக்டா சாப்பிட்டேன் மாமா.. ஒரு நாள் கூட மறக்கல.. ப்ராமிஸ்.." என்றவளை நெற்றி சுருக்கி யோசனையோடு பார்த்தான்.

"ஓ.. அதுவா‌.? நான் பர்ஸ்ட் மூணு நாலு மாசம் தந்தது மட்டும்தான் பர்த் கன்ட்ரோல் டேப்ளட்.." என்றவனை குழப்பமாக பார்த்தாள்.

"அந்த மாதிரி மாத்திரைகளால் சைட் எஃபெக்ட்ஸ் ஆகும்ன்னு ஒரு நியூஸ்ல பார்த்தேன். அதான்.."

இன்னமும் குழப்பம் தெளியவில்லை அவளுக்கு.

"அப்படின்னா நான் இவ்வளவு நாளா சாப்பிட்டது.."

"அது விட்டமின் டேப்ளட்ஸ்.. ரொம்ப அதிகமா வேலை செய்றியே, அதான் எனர்ஜியா இருப்பியேன்னு தந்தேன்.." என்றவனை நம்ப இயலாமல் பார்த்தவள் "ஆனா நீங்க இதை என்கிட்ட சொல்லல.." என்றுக் குற்றம் சாட்டினாள்.

"முட்டாள்கிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க.. இப்படி நினைச்சிதானே சொல்லல.." என்றாள் அவளே.

"வாட்எவர்.." என்றுத் தோள்களைக் குலுக்கியவனை கோபத்தோடு வெறித்தவள் அருகில் இருந்த தலையணையை எடுத்து அவன் மீது எறிந்தாள்.

முகத்தில் மோதிய தலையணையை எடுத்து மீண்டும் கட்டிலின் மீது போட்டவன் நாற்காலியில் நன்றாக சாய்ந்து அமர்ந்தபடி அவளைப் பார்த்தான்.

"விட்டமின் டேப்ளட்ஸ்க்கும் பர்த் கன்ட்ரோல் டேப்ளட்ஸ்க்கும் கூட வித்தியாசம் தெரியாம சாப்பிட்டவ நீதானே தவிர நான் இல்ல.. மாத்திரை அட்டையை பார்த்துட்டு நீயே புரிஞ்சிக்கிட்டு இருந்திருப்பன்னு நினைச்சேன்.!"

வீட்டில் இருப்பவர்கள் யாராவது பார்த்து கேள்வி கேட்டால் தன் கணவனை தவறாக நினைப்பார்களே என்ற கவலையில் அவன் மாத்திரைகளை தரும் ஒவ்வொரு முறையும் உடனே அவற்றை பிரித்து பிளாஸ்டிக் டப்பா ஒன்றில் போட்டு மூடி வைத்துக் கொள்வாள். அதிலிருந்து எடுத்துதான் தினம் சாப்பிடுவாள். மாத்திரை அட்டையை குப்பை தொட்டியில் எறிய அவசரம் காட்டியுள்ளாளே தவிர ஒரு முறை கூட அதனை படித்துப் பார்க்கவேயில்லை.

இந்த முறையும் தானே முட்டாளாகி போனதை அறிந்தவளுக்கு அவன் மீதுதான் கோபம் வந்தது.

"ஒரு சின்னப் பொண்ணை ரொம்ப கொடுமைப் படுத்துறிங்க.."

'உன் உளறலை கேட்டுக் கொண்டுதான் இருக்கிறேன்.!' என்பது போல பார்த்தான் முத்தமிழ்.

"உங்களை லவ் பண்ண பாவத்துக்கு நான் வேணா காலம் முழுக்க தண்டனை அனுபவிக்க தயார். ஆனா பாவம்.. இன்னும் பிறக்காத குழந்தை என்ன பண்ணுச்சி.?" கண்களில் துளிர்த்த கண்ணீரோடு கேட்டவளை கவலையாக பார்த்தவன் "உனக்கு பிடிக்கலன்னா நீ அபார்ஷன் பண்ணிடு.." என்றான்.

கேலி கிண்டல் போல சொல்கிறானா என்ற சந்தேகத்தோடு அவனைப் பார்த்தாள். ஆனால் அவன் உண்மையான பரிவோடு அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான். புவனாவிற்கு மீண்டும் தோற்றது போல இருந்தது.

"இது உங்க குழந்தை மாமா.." என்றாள் திகிலோடு.

"அதுதான் தெரியுமே.." கை அசைத்துச் சொன்னவனை பயத்தோடு பார்த்தவள் "என் உயிரே போனாலும் உங்க குழந்தையை நான் அழிக்க மாட்டேன். இதுவும் உங்களுக்கு தெரியும்தானே.?" என்றுக் கேட்டாள்.

முத்தமிழ் மொத்தமாக தலையசைத்தான்.

"எனக்கு நீ என்னோடு இருப்பதே போதும். உன்னை தாண்டி நான் எதையுமே கேட்கல.. உனக்கு இஷ்டமா இருந்தா குழந்தையை பெத்துக்கோ.. இல்லன்னாலும் உன் இஷ்டம்.." என்றான்.

"நீங்க லூசுதானே.?" என்றவளை உற்று பார்த்தவன் "உனக்கு அப்படி நினைக்க ஆசையா இருந்தா அப்படியே நினைச்சிக்க.." என்றான்.

இரு கைகளாலும் தன் முகத்தை மூடினாள் புவனா. சீராக மூச்சு விட முயன்றாள். மனம் கொஞ்சம் அமைதிபட்டது போல தோன்றியதும் கைகளை விலக்கிக் கொண்டு அவனைப் பார்த்தாள்.

"ஓகே மாமா.. குழந்தை, இது அதுன்னு எல்லாத்தையும் ஒதுக்கி வச்சிடலாம். ஆரம்பத்துல இருந்து பேசலாம்.." என்றவள் சில நொடிகள் காத்திருந்தாள். அவன் பதில் தராமல் மௌனமாக இருந்தான்.

'இனி பேசலாம்' என நினைத்துக் கொண்டவள் "பர்ஸ்ட்.. உங்களை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்பட்டு நான் விஷம் குடிக்கல.." என்றாள் சுண்டு விரலை மட்டும் எண்ணிக்கைக்கு விட்டபடி.

"ஏற்கனவே சொல்லி இருக்க.." என்றான்‌ அவன்.

"ஆனா நான் விஷம் குடிச்சது தப்புதான். அதுனால நீங்க ரொம்பவே மனசு உடைஞ்சிட்டிங்க.. உங்களை அரை நாள் உள்ளுக்குள் அழ வச்சிட்டேன்.. அதுக்கு ரியலி சாரி.." என்றாள் மோதிர விரலையும் நீட்டியபடி.

இடம் வலமாக தலையசைத்தவன் "அரை நாள் இல்ல.. இருபத்தி ஏழு மணி நேரம். பதினெட்டு நிமிசம்.." என்றான்.

புவனா உள் உதட்டை கடித்தபடி அவனை வெறித்தாள்.

"ஓ.. ஓகே.. உங்களை நான் கஷ்டப்படுத்தி இருக்க கூடாது. ஆனா அந்த ஒன்னேகால் சொச்ச நாளுக்காக நீங்க என்னை இரண்டே முக்கால் வருசம் பழி வாங்கிட்டிங்க.." என்று அவள் சொன்னதும் காலண்டர் இருந்த திசையை திரும்பிப் பார்த்தான் முத்தமிழ். இரண்டே முக்கால் வருடங்கள் கழிந்து இரு வாரங்கள் ஆகியிருந்தது.

புவனா அவன் பார்த்த காலண்டரை கவனித்தாள்.

"வெறும் ஒரு நாள் உங்களுக்கு நான் தண்டனை தந்தேன்ங்கறதுக்காக இத்தனை வருசம் பழி வாங்குறது சைக்கோதனம் மாமா.. ஆனா ஒன்னு.. நீங்க என்னை இன்னும் ஐம்பது வருசத்துக்கு டார்ச்சர் பண்ணாலும் நான் என்னோட லவ்வை வாபஸ் வாங்கிக்க மாட்டேன். உங்களை விட பெரிய சைக்கோ நான்.. இந்த பழி வாங்கறது, பரிட்சை வைக்கிறது எல்லாம் இத்தோடு முடிச்சிக்கலாம்.." என்றாள் கவனத்தோடு.

முத்தமிழ் நாற்காலியை விட்டு எழுந்து நின்றான். சாத்தியிருந்த கதவை பார்த்தவன் அவளின் முகத்தை கைகளில் அள்ளினான்.

"ஒருவேளை அன்னைக்கு நீ செத்துப் போயிருந்தா இன்னைக்கு நான் பைத்தியமா இருந்திருப்பேன்.. செத்தும் கூட போயிருப்பேனோ என்னவோ.. ஒருவேளை.. அந்த ஒரு வேளைதான் மேட்டரே.. அந்த ஒருவேளையில் நீ செத்திருந்தா இன்னைக்கு நான் என்னாகிருப்பேன்னு என்னால யோசிக்க கூட முடியல.. இரண்டே முக்கால் வருசம் நீ உன் காதலை என்கிட்ட காட்டாம இருந்ததால நீ ஒன்னும் செத்துடல.. ஆனா அந்த இருபத்தியேழு மணி நேரத்துக்குள்ள கோடி முறை செத்துப் போனேன் நான்.." என்றவனை பயத்தோடு பார்த்தாள் புவனா.

அவளின் கண்களை சில நொடிகள் மாறி மாறி பார்த்தான். அவளின் முகம் பளபளத்திருக்கும் காரணம் இப்போது புரிந்தது‌. காரணம் அறிந்த பிறகு இதழ்களும் கூட முன்பை விட சற்று அதிகம் சிவந்திருப்பதை போலிருந்தது.

அவளின் இதழ்களை நோக்கி குனிந்தவன் முத்தத்தை தர ஆரம்பித்த பிறகு நேரம் காலத்தை மறந்து விட்டான் போல. நொடிகள் நிமிடங்களாக கடந்த பிறகு அவனை தன்னிடமிருந்து விலக்கித் தூர தள்ளினாள் புவனா. மூச்சிரைத்தது அவளுக்கு. இன்னும் சில நொடிகள் அமைதி காத்திருந்தால் மூச்சடைத்து செத்திருப்போம் என்று எண்ணி பயந்தவள் அதே பயத்தோடு அவனைப் பார்த்தாள்.

"பழி வாங்காதிங்க மாமான்னு சொல்லும் முன்னாடி கிஸ் பண்ணும்போது ஒழுங்கா மூச்சு விட கத்துக்கடி.." என்றான் நக்கலாக.

புவனா மூக்கு சிவக்க அவனைப் பார்த்தாள். அவனைக் கடித்துக் குதற வேண்டும் போல இருந்தது.

அவளை ஓரக்கண்ணால் பார்த்தபடியே சென்று மேஜை மேல் இருந்த மாத்திரைகள் சிலவற்றை பிரித்து எடுத்து வந்தான். கட்டிலின் கீழே கிடந்த தண்ணீர் பாட்டிலை எடுத்தவன் அவளிடம் இரண்டையும் நீட்டினான்.

"நீ பிரகனென்டா இருக்கன்னு டாக்டர்கிட்ட மட்டும் சொன்னேன். அவர் உனக்கு ஏத்த மாதிரிதான் ஊசி போட்டு இந்த டேப்ளட்ஸை தந்துட்டு போனாரு.. டைம் ஆச்சி.. மாத்திரை சாப்பிடு.." என்றான்.

புவனா அவனையும் மாத்திரைகளையும் மாறி மாறி பார்த்தாள். தோற்றுப் போனவளாக மாத்திரைகளை எடுத்து விழுங்கினாள்.

தண்ணீர் பாட்டிலை அவனிடமே திருப்பி தந்தவள் "அந்த ஒருவேளையில் நான் செத்திருக்கலாம்ன்னு இப்ப நினைக்கிறேன் மாமா.." என்றாள் சிறு குரலில். அவள் அதை சொல்லி முடித்த வேளையில் தண்ணீர் பாட்டில் எதிரே இருந்த சுவரில் மோதி நெளிந்து கீழே விழுந்துக் கிடந்தது.

முத்தமிழின் கோபத்தை உணர்ந்தாள் அவளும்.

"அப்படிதான் மாமா பண்றிங்க நீங்க.. என்னையும் சித்திரவதை செஞ்சி, நீங்களும் சித்திரவதை படுறிங்க.. நீங்க நல்லா சிரிச்சி இரண்டே முக்கால் வருசம் ஆச்சி. நான் நல்லா பேசியும் இரண்டே முக்கால் வருசம் ஆச்சி.. எனக்கு தண்டனைன்னு சொல்லி நீங்களும் அதே தண்டனையை அனுபவிக்கிறிங்க.. என்னாலயே சுத்தமா தாங்க முடியல. நீங்க எப்படிதான் சாதாரணமா இருக்கிங்களோ.. எனக்கு புரியவே இல்ல.. காட்டப்படாத அன்பு இருக்கறதுக்கு பதிலா உருவாகாமலேயே இருக்கலாம்.. பசியோடு இருப்பவன் முன்னாடி விருந்து சாப்பாட்டை வச்சிட்டு வாயை கட்டிப்போடுற பைத்தியக்காரனுக்கும் உங்களுக்கும் நடுவுல என்ன வித்தியாசம்..

உங்க திருப்திக்காக நான் இத்தனை நாளும் பொறுத்துப் போனேன். இனி நிச்சயம் முடியாது.. மூணு வருசம் முன்னாடி இருந்த பொண்ணாவே இருந்திருந்தா நீங்க என் கழுத்துல தாலி கட்டிய ஒரே காரணத்தை மனசுல நினைச்சி கோடி வருசம் கூட வாழ்ந்திருப்பேன். ஆனா என்னை நீங்களேதான் மாத்திட்டிங்க.. லைப்பை கத்து தந்துட்டிங்க.. நான் அன்னைக்கு தற்கொலை முடிவெடுத்தது தப்பு.. உங்களை இழுத்துட்டு போய் கல்யாணம் பண்ணி இருக்கணும். எனக்கு என்ன வேணுமோ அதுக்கு நான் போராடி இருக்கணும்..

இப்ப புத்தி மாறிடுச்சி.. நீங்களா சரணைஞ்சிடுறது ரொம்ப நல்லது. இல்லன்னா அவ்வளவு தயக்கமா இருந்தா டைவர்ஸ் தந்து அனுப்பிடுங்க.. இரண்டு முடிவுல ஒன்னை நீங்க எடுக்கலன்னா நான் உங்களை ரொம்ப மோசமா மாத்திடுவேன். என் கண்ணீருக்கு இரக்கப்படல நீங்க.. உங்க கண்ணீருக்கும் நான் இரக்கப்பட வேண்டிய அவசியமே கிடையாது.." என்றாள்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN