மௌனம் 12

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
தோற்றாகி விட்டது என்றுப் புரிந்தது ரூபிக்கு.

கையில் இருந்த விலங்கை கவலையோடு பார்த்தாள். விஷால் காரை வெறியோடு ஓட்டிக் கொண்டிருந்தான். லாவண்யா அவனின் அருகே அமர்ந்தபடி பின்னால் இருந்த ரூபியை கவனித்துக் கொண்டிருந்தாள்.

அவனின் முகத்தை பார்க்கும்போதே ரூபிக்கு தெரிந்தது, இன்று தன்னிடமிருந்து உண்மையை வாங்க போகிறான் இல்லையேல் தனக்கு சாமாதி கட்டப் போகிறான் என்று. எப்படி இருந்தாலும் முதல் விசயம் நடக்காது என்று நம்பினாள். இரண்டாம் முடிவுக்காக காத்திருந்தாள். தனது உடல் தங்சேயா இருக்கும் தீவிற்கு செல்லுமா என்று யோசித்துக் கவலைப்பட்டாள்.

"நான் தனசேகர் சாருக்கு போன் பண்றேன்.." என்றபடி போனை எடுத்தாள் லாவண்யா.

ஒற்றைக் கையால் அவளின் போனை கீழே தட்டி விட்டான் விஷால்.

"ஒன்னும் தேவை கிடையாது.. அவர் நம்மகிட்ட எல்லாத்தையும் சொல்றது கிடையாது. அதனால நானும் இந்த முறை எதையும் அவர்கிட்ட சொல்ல போறது கிடையாது. அந்த ஸ்டெல்லாவை கண்டுபிடிச்சி என் கையாலயே சுட்டுக் கொன்ன பிறகுதான் இவளைப் பத்தி அவருக்குத் தெரிய போகுது.." என்றான் அழுத்தமாக.

லாவண்யாவிற்கு இப்போதே தலை வலிப்பது போல இருந்தது. விரைவிலேயே விஷாலும், தனசேகரும் எதிரெதிர் நின்றுச் சண்டை போட போகிறார்கள் என்பது மட்டும் அவளுக்கு தெளிவாக புரிந்தது.

"என்னை எங்கே கூட்டிப் போக போறிங்க.?" ரூபி தயக்கமாக கேட்டாள்.

"எங்கேயாவது, உன்கிட்ட இருந்து உண்மையை வர வைக்கணும். அதுக்கு எங்கே வேணாலும் கூட்டிப் போவேன்.." என்றான் பற்களை கடித்தபடி.

'போலிஸ்ன்னு நினைச்சேன். வில்லனை போலவே பேசுறான் பாவி பையன்..' என நினைத்தவள் ஏற்றியிருந்த ஜன்னலின் வழியே வெளியே பார்த்தாள்.

ஊரே அமைதியாக இருந்தது. குயில் ஒன்று எங்கோ கூவிய சத்தம் லேசாக கேட்டது.

தனசேகர் ஸ்டெலாஸ்டியன் இருந்த வீட்டின் முன்னால் காரை நிறுத்தினான். அருகே அமர்ந்திருந்த நவீனாவை பார்த்தான்.

"நான் போய் முடிச்சிட்டு வரேன்.." என்றவன் தனது துப்பாக்கியோடு கீழே இறங்க முயன்றான்.

"சார்.. அவனை நான் கொல்லணும் சார்.. என்னோட உரிமையை நீங்க தட்டி பறிக்கிறிங்க.." என்று குற்றம் சாட்டினான்.

"நீ அப்ரூவரா மாறி இருக்கறது என்னையும், என் ஹெட் ஆபிசரையும் தவிர வேற யாருக்குமே தெரியாது, வேற நாடுகளுக்கும் கூட தெரியாது.. அப்ரூவரா மாறிய உன்னை சுட்டு தள்ள விட்டுட்டு நான் அமைதியா பார்த்துட்டு நிற்பேனா.?" எனக் கேட்ட தனசேகர் நவீனாவை முறைத்தபடியே கீழே இறங்கினான்.

நவீன் கோபத்தில் அருகில் இருந்த சீட்டை குத்தினான்.

தனசேகர் அந்த வீட்டுக்குள் மெள்ள நடந்தான். ஸ்டெல்லாவை பார்த்த உடனே கொன்று விட வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தான்.

போன முறை தோற்றதற்கே இன்னும் பத்து ஜென்மத்திற்கு வருத்தப்படுபவன்தான் தனசேகர். அதனால்தான் இந்த முறை முதல் அடியிலிருந்தே கவனமாக இருக்க தொடங்கி விட்டான். நாட்டுக்குள் புதிதாக வரும் ஒவ்வொருத்தரையும் கண்காணித்தான். அவன் நன்றாக உறங்கி ஒன்றிரண்டு வாரங்களே ஆகிவிட்டது என்று சொல்லலாம். அவ்வளவு உழைத்தான். நாட்டுக்குள் நுழைந்தவர்களில் யார் மீதெல்லாம் சந்தேகம் இருந்ததோ அவர்களை எல்லாம் தனியாய் அழைத்து விசாரித்தான்.

நவீனாவும், ரூபியும் விமான மார்க்கமாக வந்திருந்தனர். அதனாலேயே அவர்களை சுலபமாக பார்த்து விட்டான் தனசேகர். நவீனாவுக்கும், சின்னையனுக்கும் இடையில் இருந்த தொடர்பை கணக்கிட்டு பார்த்துவிட்டு அவளை மருத்துவ செக்கப் என்ற பெயரை சொல்லி தனியே இழுத்து வந்தான். வேறு தனி அறையில் இருந்த ரூபிக்கு இந்த விசயங்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

"யார் நீ.?" எனக் கேட்டவனிடம் "நவீனா.." என்றாள் அவள்.

"நீ இங்கே எதுக்கு வந்திருக்கன்னு தெரியல.. ஆனா நான் அனுமதிச்சா மட்டும்தான் உன்னால இந்த நாட்டுக்குள் காலெடுத்து வைக்க முடியும்.." என்றான் தனசேகர்.

"நாட்டியம் ஆட வந்த பொண்ணை தனியா கூட்டி வந்து சம்பந்தமே இல்லாம பேசுறிங்க சார்.." என்றவனின் தொண்டையின் மீது துப்பாக்கியை எடுத்து வைத்து அழுத்தினான் தனசேகர்.

"நாட்டியம் ஆட வந்த பொண்ணா.? அப்புறம் ஏன்டா உன் குரல்வளை மட்டும் ஆம்பளையோடது போலவே இருக்கு.?" என்றான்.

நவீன் கண்களை மூடினான்.

"இங்கே நாங்க எல்லோரும் கண்ணை முதுகுல வச்சிக்கிட்டு அலையுறோம்ன்னு நினைச்சியா.? நீ ஆம்பளைதான்.. பார்த்த அடுத்த செகண்டே நான் கண்டுபிடிச்சிட்டேன். இப்ப சொல்லு.. இங்கே எதுக்கு வந்திருக்க.?" என்றான் அதட்டலாக.

"என் பேர் நவீன்.." என்றவனிடம் அடுத்த பதிலை எதிர்பார்த்தான் தனசேகர்.

"நீங்க நழுவ விட்ட புவினோட தம்பி நான்.." என்று சொன்ன அடுத்த நொடியில் அவனின் தொடையில் உதைத்து மண்டியிட வைத்தான் தனசேகர்.

"உன்னை.." என்றவன் டிரிக்கரை இழுக்க முயல "என் அண்ணன் இப்ப இல்ல.. ஆனா அவன் உங்களை பத்தி கொஞ்சம் சொல்லி இருக்கான்.." என்று அவசரமாக சொன்னான் நவீன்.

தனசேகர் புரியாமல் அவனைப் பார்த்தான்.

"என் அண்ணன் இல்லாம போயிட்டான். அவனை இங்கே அனுப்பாம இருந்திருந்தா இன்னேரம் அவன் உயிரோடு இருந்திருப்பான்‌. எனக்கு எல்லாமும் அவன்தான்.. அவன் வேணா தங்சேயாவுக்கு அடிமையா இருக்கலாம். நான் இல்ல.. தப்பு எது சரி எதுன்னு எனக்கு தெரியும்.. நான் இங்கே வந்தது தங்சேயா அனுப்பிதான். ஆனா நான் அவர் சொன்ன மாதிரி குண்டு வைக்க நினைக்கல.. ஏதாவது ஒன்னு பண்ணி அவரையும், எங்களோட மொத்த கும்பலையும் ஒழிக்க நினைக்கறேன்.." என்றான்.

அவன் சொன்னதை தனசேகரால் நம்ப முடியவில்லை.

"என்கிட்ட மாட்டிக்கிட்டதால பொய் சொல்லலையே.?" என்றான் சந்தேகமாக.

நவீனா தலை குனிந்தாள்.

"ப்ராமிஸ் சார்.. என் அண்ணன் மேல ப்ராமிஸ்.. என் அண்ணன் இல்லாம அனாதை ஆகிட்டேன் சார்.. தங்சேயா கொஞ்சம் கெட்டவர் சார்.. அவரால பல குழந்தைங்க அனாதை ஆகறாங்க.. ஆனா கடைசியில் நானும் அனாதை ஆகிட்டேன்.." என்றவனின் குரல் கடைசி வாக்கியங்களை சொல்லும்போது கம்மி விட்டது.

தனசேகர் நாற்காலி ஒன்றை இழுத்துப் போட்டு அமர்ந்தான். நவீனாவிடம் இருந்து அடுத்த விசயங்களை கேட்க ஆரம்பித்தான்.

தங்சேயா ஏன் தனக்கு கெட்டவராக தெரிகிறார் என்பதை விளக்கிச் சொன்னான் நவீன். ஆரம்பம் முதல் கடைசி வரை அனைத்தையும் சொன்னான்.

"இது அந்த ரூபி பொண்ணுக்கும் தெரியுமா?" அதிர்ச்சியோடு கேட்டான் தனசேகர்.

தரை பார்த்த நவீன் ஆமென்று தலையசைத்தான். ரூபியை தனி அறைக்கு அழைத்துச் செல்கையில்தான் நன்றாக உற்றுப் பார்த்திருந்தான் தனசேகர். அழகான சின்ன பெண். அவளுக்கு இப்படி ஒரு சோதனையா என்று எண்ணி வருத்தம் கொண்டது அவனின் மனம்.

"நான் அந்தப் பொண்ணுக்கு உதவி பண்றேன்.." என்ற தனசேகரிடம் மறுப்பாக தலையசைத்தான் நவீன்.

"அந்த பொண்ணை விட மோசமான நிலமையில் இருப்பது நான்தான் சார்.. எனக்கு தங்சேயாவை கொல்லணும்.. ஆனா அவரோட இடம் எனக்கு லொக்கேட் பண்ண தெரியாது.. நாங்க அங்கிருந்து கிளம்பும்போதும், அங்கே போகுப்போதும் கண்ணை கட்டிதான் அந்த தீவுக்கு கூட்டி போவாங்க.. அதே தீவுலதான் நானும் வளர்ந்தேன். ஆனா அந்த தீவு இந்த உலகத்துல எங்கே இருக்குன்னு என்னால கரெக்டா சொல்லவே முடியாது. பைலட்ஸ்கும், கப்பல் கேப்டன்ஸ்க்கும் மட்டும்தான் தெரியும். ஆனா அவங்க எல்லாம் தங்சேயாவோட விசுவாசிங்க.. அவரை மீறி தூசை கூட தட்டி விட மாட்டாங்க.."

தனசேகர் யோசித்தான்‌. இவன் சொல்வது அத்தனையும் உண்மை போலதான் இருந்தது. ஆனால் ஒரு தீவிரவாதியை நம்புவதா என்று தயங்கினான்.

"சார்.. தங்சேயாவை எங்க தீவை விட்டு வெளியே கொண்டு வந்தா மட்டும்தான் அவரை அழிக்க முடியும். அவர் அழிஞ்ச பிறகுதான் எங்களோட மொத்த கூட்டமும் உருப்படும்.. நானே உங்களை தேடி வரலாம்னுதான் இருந்தேன். ஆனா அதுக்குள்ள நீங்களே பிடிச்சிட்டிங்க.. ப்ளீஸ் சார்.. பிலீவ் மீ.!" என்றான் கெஞ்சலாக.

"உன்னை நம்புறேன்.. ஆனா அதுக்கு பதிலா நீ எனக்கு எல்லாமும் சொல்லணும்.. உன் கூட்டத்தை சேர்ந்த யாராவது இங்கே வந்திருந்தா அவங்களை அழிக்கவும் உதவி செய்யணும்.. ஆனா பாரு.. உன்னை என்னோட கண்காணிப்பு வட்டத்தை விட்டு விலக்கி வைக்க முடியாது.." என்றான்.

நவீன் புரிந்துக் கொண்டதாக தலையசைத்தான்.

"நீங்க என்னை கண்டுக்காம விட்டா அது எங்க கூட்டத்துல இருப்பவங்களுக்கு சந்தேகத்தை தந்துடும் சார்.. நீங்க வழக்கம் போலவே என்னையும் கண்காணிங்க.. ஆனா ரூபியை எதுவும் பண்ணிடாதிங்க.. உங்களுக்கான இன்பர்மேசன் அத்தனையும் நான் தரேன்.. இந்த நாட்டுல அவளுக்குன்னு ஒரு புது லைஃப் இருக்கு.. நான் தங்சேயாவை அழிக்க புறப்பட்டேன்ங்கறது ஒரு காரணம்ன்னா, ரூபியை செட்டில் பண்ணிட்டு போக வந்தேன்ங்கறது இரண்டாம் காரணம்.." என்றான்.

இவனுக்கு இருந்த சென்டிமென்ட் பார்த்து தனசேகருக்கு வியப்பாக இருந்தது. தனசேகரின் முகத்தை படித்தவன் போல "நான் என் அண்ணன் செல்லம் சார்.. அப்புறம் இந்த ரூபியும் எப்பவும் வால் மாதிரி பின்னாடியே சுத்திட்டு இருப்பா.. எனக்கான அன்பை இரண்டு பேரும் கொடுத்துட்டே இருந்தாங்க சார்.. நானும் மனுசன்தான் சார்.. அதுவும் இந்த நாட்டு ரத்தம் ஓடுற மனுசன்.." என்றான்.

"சும்மா ஒரு வாய்ப்பு.." என்றபடி அவனை வெளியே விட்டான் தனசேகர்.

ஆனாலும் கூட நவீனின் போனை பெர்சனலாக ஹேக் பண்ணி வைத்துக் கொண்டான் தனசேகர். யாருக்கும் சந்தேகம் வந்து விட கூடாது, முக்கியமாக தங்சேயாவின் சந்தேக வளையத்திற்குள் நவீன் வந்துவிடக் கூடாது என்பதற்காகவே நவீனாவையும், ரூபியையும் கண்காணிக்க சொல்லி விஷாலிடம் வேலையை தந்தான் தனசேகர்.

தனசேகர் விஷாலை நம்பினான். ஆனால் நவீனைதான் நம்பவில்லை. அதனால்தான் விஷாலிடம் உண்மையை சொல்லவில்லை அவன். சந்தேகத்துக்குரிய கண்களுக்குதான் பல விசயங்களும் தெரியும் என்பதால் விஷாலின் போக்கிலேயே அவனை விட்டு விட்டான் தனசேகர்‌.

தனசேகரின் ஹெட் ஆபிசர் மற்ற நாட்டு அதிகாரிகள் சிலரோடு பேசி தங்சேயாவை வெளியே கொண்டு வரும் வழி இருக்கிறதா என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு இடையில் தனசேகரும், நவீனும் அவரவர் வேலைகளில் இருந்தனர்.

ஆனால் ஸ்டெல்லா இந்த நாட்டிற்குள் நுழைந்துள்ளான் என்ற விசயம் தனசேகரின் செவிகளுக்கு வந்த உடனேயே பரபரப்பு தொடங்கி விட்டது. ஸ்டெல்லாவை கொல்லும் வரை தனக்கு தூக்கம் வராது என்பதால் நவீனுக்குதான் போன் செய்து தொல்லை செய்தான் தனசேகர். ஆனால் நவீனுக்குமே ஸ்டெல்லா வந்த விபரம் கிடைக்கவில்லை.

இதற்கு இடையில்தான் ரூபியும் ஸ்டெல்லாவும் போனில் பேசி இருக்கிறார்கள் என்ற விசயத்தை நவீனிடம் சொன்னான் தனசேகர். நவீன் உடனே ஆண் காளியாகி ரூபியிடமிருந்து விசயத்தை கறந்து விட்டான்.

நவீனே ஸ்டெல்லாவை கொன்று விடலாம் என்ற எண்ணத்தோடுதான் புறப்பட்டு இருந்தான். ஆனால் அவனை கண்காணித்துக் கொண்டிருந்த தனசேகர் இடையில் வந்து குறுக்கிட்டு நின்று விட்டான்.

தனசேகர் அந்த வீட்டுக்குள் சென்று வெகுநேரம் ஆகி விட்டதை உணர்ந்து காரிலிருந்து இறங்கினான் நவீன்.

ஸ்டெல்லா இருக்கும் வீட்டின் உள்ளே நடந்தான். ஹாலில் பாதி தூரத்தை கடந்திருப்பான். அப்போதுதான் அங்கே சிலையாக நின்றிருந்த தனசேகரை கவனிக்கவே செய்தான்‌.

"சார்.." என்று அவனின் தோளை தொட்டான்.

தனசேகர் மௌனமாக எதிரே கை காட்டினான்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN