மணாளனின் மனம் 37

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
புவனா சொன்னதை அலட்சியமாக எடுத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தான் முத்தமிழ்.

அவனுக்கு வருத்தமாக இருந்தது. சரியாக உணவு உண்ணாததால்தான் மயங்கி விழுந்துள்ளாள் என்று அவள் மீது கோபம் கொண்டான்.

அன்றைய நாள் அவளை வீட்டிலேயே விட்டுவிட்டு அலுவலகம் சென்றான். புவனா மயங்கி விழுந்ததில் பயந்து விட்டவனுக்கு இன்னமும் நெஞ்சம் படபடவென அடித்துக் கொண்டே இருந்தது.

"எப்பவும் பயத்தை மட்டும்தான் தரா.." என்று திட்டினான்.

புது சொந்தம் வருவதில் அவனுக்கு ரொம்ப சந்தோசம். ஆனால் பயந்தான். அவள் விவாகரத்து கேட்ட அந்த நொடியிலேயே அவள் மீது கொலை வெறிக் கொண்டு விட்டான். அதனால் அவள் கருவுற்று இருப்பதை கூட முழு மகிழ்ச்சியோடு அவனால் கொண்டாட முடியவில்லை. எப்போதும் தவறாக மட்டுமே முடிவெடுத்துக் கொண்டிருப்பவளை அவனால் புரிந்துக் கொள்ள முடியவில்லை.

அவளின் எல்லை எவ்வளவு தூரம் என்று சோதித்துக் கொண்டிருந்தான் என்பது உண்மைதான். அவள் தனக்கு கட்டுப்பட வேண்டும் என்று அவன் எப்போதுமே ஆசைப்படவில்லை. ஆனால் அவள் எடுக்கும் முடிவுகள் அவளுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் இருக்க வேண்டும் என்றும் நினைத்தான்.

இரண்டரை வருடங்களாக இதே போலதான் வாழ்ந்துக் கொண்டிருக்கிறாள். தான் சொன்னதும் அவள் ஏன் அமைதியாக வேண்டும் என்றுதான் இப்போதும் தனக்குள் கேட்டான். அவளின் வாழ்க்கைக்கு எது தேவையென்று கூட சரியாக முடிவெடுக்க முடியாதவளாகதான் முத்தமிழின் கண்களுக்கு அவள் தெரிந்தாள்.

பிற்பகல் வரை அறையிலேயே அடைந்திருந்தாள் புவனா. என்ன செய்வது என்று வெகுநேரம் யோசித்தாள். யோசனை ஒன்று பிடிப்பட்ட பிறகு கடைக்கு கிளம்பினாள்.

முத்தமிழ் இரவு சூழ்கையில்தான் வீட்டிற்கு வந்து சேர்ந்தான். சீக்கிரமே வந்து விட வேண்டுமென்றுதான் ஆசைப்பட்டான். ஆனால் வேலை அவனை தாமதப்படுத்தி விட்டது.

அலுப்போடு வந்தவன் மூடியிருந்த தனது அறையை திறந்ததும் சிறிது அதிர்ந்து விட்டான். அறையின் சுவர் முழுக்க சிவப்பு ரோஜாக்கள் ஒட்டப்பட்டு இருந்தது‌. தரையிலும் ரோஜா இதழ்கள் இறைந்துக் கிடந்தது. அந்த அறையே ரோஜாவின் வாசமாக மணந்துக் கொண்டிருந்தது. அரையாய் திறந்த கதவை முழுதாய் திறந்துக் கொண்டு உள்ளே வந்தான். அம்மாவும் மற்றவர்களும் பார்த்தால் என்ன நினைப்பார்களோ என்ற தயக்கத்தில் கதவை சட்டென்று மூடி விட்டான்.

கதவின் ஓரத்தில் நின்றிருந்த புவனா அவனின் முன்னால் வந்து நின்றாள். என்றும் இல்லாத அதிசயமாக பட்டு சேலை அணிந்திருந்தாள். அவனின் முன் ஒரு காலை மட்டும் ஊன்றி மண்டியிட்டாள். தன் கையிலிருந்து பல வண்ண ரோஜா மலர்களை அவனிடம் நீட்டினாள்.

"நான் புவனா.. உங்களை ரொம்ப லவ் பண்றேன்.. நான் உங்களை லவ் பண்ண ஆரம்பிச்சி எட்டு வருசமாச்சி.. உங்களை ரொம்ப ரொம்ப பிடிக்கும். உங்களோட ஸ்டேட்டஸ் பத்தி எனக்கு அவ்வளவா புரிதல் இல்லாத நேரத்துலயே லவ்வுல விழுந்துட்டேன். உங்களுக்கு நான் தகுதியானவளா மாற நினைக்கவே இல்ல நான்.. உங்களை என் பின்னாடி சுத்த வைக்கணும்ன்னு ஒ.." என்றவளுக்கு தொண்டை பிடித்தது. வெளி வர இருந்த விம்மலை உள்ளுக்குள்ளேயே அடக்கிக் கொண்டாள்.

"உங்களை என் பின்னாடி சுத்த வைக்கணும்ன்னு ஒரு செகண்ட் கூட யோசிச்சதே இல்ல.. என் காதலை நீங்க ஏத்துக்கிட்டா போதும்ன்னு கஞ்சதனமான எண்ணங்களோடு இருந்துட்டேன்.. ஆனா அது தப்புன்னு இன்னைக்கு புரிஞ்சிக்கிட்டேன்.. காதல்ன்னா ஒன்னை தந்து பத்தா வாங்குறதுன்னு தோணுது.. ஐ வாண்ட் யுவர் லவ்.. அதனாலதான் இந்த முறை என் காதலை நீங்க ஏத்துக்கணும்ன்னு சொல்லி கேட்க வரல.. எனக்கு உங்களோட காதல் கொடுங்கன்னு கேட்க வந்திருக்கேன்.. நான் உங்க அளவுக்கு படிக்கல.. உங்க அளவுக்கு சம்பாதிக்கல.. ஆனா உங்களை விட ரொம்ப சூப்பரா சமைப்பேன்.. யூ நோ, இந்த உலகத்துல மனுசனுக்கான முதல் தேவையே உணவுதான். நீங்க என்னோடு இருந்தா உங்க வயிறை வாட விடாம பார்த்துப்பேன் நான். ஐ வில் ப்ராமிஸ்‌‌.. என்னால உங்க வீட்டையும், உங்க வாரிசுகளையும், உங்க தோட்டத்தையும், உங்க சொந்தக்காரங்களையும், உங்களையும் மேனேஜ் பண்ண முடியும்.. உங்களுக்கு நான் எல்லா விதத்திலும் தகுதியானவ.. இது எனக்கு இன்னைக்கேதான் புரிஞ்சுது.. இந்த உலகத்துல நீங்க எங்கே போய் தேடினாலும் என்னை போல பர்பெக்ட்டான பார்ட்னரை தேடி பிடிக்கவே முடியாது.. இன்னும் பச்சையா சொல்லணும்ன்னா உங்களுக்கு என்னை விட்டா வேற ஆளே கிடையாது.. நீங்க சொன்னிங்கங்கற ஒரே காரணத்துக்காக இரண்டரை வருசம் லவ்வையே வெளி காட்டல நான்.. இந்த மாதிரி எவ இருப்பா.? சோ எனக்கு உங்க காதலை கொடுங்க.. சும்மா தர மனசு இல்லன்னா கூட கடனா கொடுங்க.. நூறு வருசத்துல திருப்பி தந்துடுறேன்.." என்றாள்.

முத்தமிழ் தனது தோளிலிருந்த பேக்கை கழட்டினான். அருகே இருந்த மேஜையின் மீது எறிந்தான். அணிந்திருந்த சட்டையின் கை பட்டனை கழட்ட ஆரம்பித்தான்.

"சாரி மேம்.. நீங்க நினைச்சா டைவர்ஸ் கேட்பிங்க.. நீங்களே நினைச்சா விஷமெல்லாம் குடிப்பிங்க.. உங்களை நம்பி நான் ரிஸ்க் எடுக்க தயாரா இல்ல.." என்றான்.

புவனா பற்களை கடித்தபடி தன் கோபத்தை கட்டுப்படுத்தினாள்.

"காலையில் ரொம்ப பயந்துட்டேன்.. உங்களை எப்பவும் டாப்புல வச்சே பார்த்துட்டேன்.. அதான் இந்த பயம்.. இன்னைக்குதான் உங்களை எனக்கு சமமா வச்சி பார்த்தேன்.. டைவர்ஸ் கேட்டது தப்புன்னு புரிஞ்சது.. உங்களை விட்டு பிரிஞ்சா நான் நானாவே இருக்க மாட்டேன்.. நீங்க எவ்வளவு பரிட்சை வச்சாலும் நான் என் காதலை குறைச்சிக்க மாட்டேன்.. உங்களை விட்டு பிரிய நினைச்சது என் கடைசி முட்டாள் முடிவா இருக்கட்டும்.." என்றவள் பெருமூச்சு விட்டுக் கொண்டாள்.

"நீங்க எனக்கு சொல்லி தந்த விசயங்களுக்கு குரு தட்சணை தர நினைச்சா எவ்வளவோ தர வேண்டியது இருக்கும். புத்தியை தெளிய வைக்கிறதுதான் ரொம்ப கஷ்டம்.. நீங்க எனக்காக எவ்வளவோ யோசிச்சிங்க.. ஆரம்பத்துல இருந்தே நீங்க எனக்காக மட்டும்தான் யோசிச்சி இருக்கிங்க.." என்றவளின் விழிகளின் ஓரம் கண்ணீர் துளிர்த்தது.

அவசரமாக கண்ணீரை துடைத்துக் கொண்டு நிமிர்ந்தாள்‌. "உங்களை போல ஒருத்தரை மிஸ் பண்றது ரொம்ப தப்பு.. எனக்கு நீங்க வேணும்.. முழுசா வேணும். உங்களோட ஹார்ட் பீட் கூட எனக்கு மட்டுமே சொந்தமாகணும்.. அழுத பிள்ளைக்குதான் பால் கிடைக்கும். இதை நான்தான் புரிஞ்சிக்கல.. கிவ் மீ யுவர் லவ்.." என்றாள்.

அவளை அலட்சியமாக பார்த்தபடியே சட்டையை கழட்டியவன் "கிஸ் வேணா தரேன்.. மத்தபடி எதையும் கேட்காதே.." என்று விட்டு அவளை விட்டு விலகி நடந்தான்.

'இன்னும் எவ்வளவு தூரம் போவாள்.?' என்று யோசித்தது அவனின் எண்ணம். அவனது செயல்கள் அவனுக்கே சைக்கோதனமாதான் தெரிந்தது. அவள் வேதனைபடும் ஒவ்வொரு முறையும் தனக்குள் வலியை உணர்ந்தவனுக்கு அந்த உணர்வு பிடித்திருந்தது‌.

"மாமா.." சிணுங்கலாக அழைத்தாள் புவனா. இரண்டரை ஆண்டுகள் கடந்து அந்த பழைய சிணுங்கலை காதில் கேட்டான் முத்தமிழ். கண்களை மூடி உணர்வுகளை கட்டுப்படுத்த முயன்றான். 'விழுந்துடாத தமிழ்..' என்றுத் தனக்குள் சொல்லிக் கொண்டான்.

"மாமா.." இந்த முறை சிணுங்கல் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது போலிருந்தது. கண்களை திறந்தவன் அவள் பக்கம் திரும்ப நினைத்தான். ஆனால் அவள் அவனின் முன்னாலேயே வந்து நின்றிருந்தாள். கொஞ்சல் முகம். தூண்டிலாய் பார்வையை மாற்றி நீந்திக் கொண்டிருந்த விழிகள். அவனுக்கே குத்தகைக்கு தந்தது போல புன்னகையை திரட்டி வைத்திருந்த இதழ்கள். என்னை கொஞ்ச மாட்டாயா என கேட்ட கன்னங்கள்.

புன்னகைக்கும் ஒவ்வொரு முறையும் அவள் தன் மனதை வீழ்த்துகிறாள் என்று நினைத்தவனை சென்டிமீட்டர் நெருங்கி நின்றாள் புவனா.

அவளின் வாசம் அவனின் நுரையீரலில் பரவியது. மெள்ள ரத்தத்தில் கலக்க ஆரம்பித்தது‌. ஆனால் அந்த வேளையிலும் மருத்துவமனையில் வீசிய விஷ மருந்தின் வாசம் அவன் நினைவில் வந்தது.

"முத்தம் தரேன்னு சொன்னிங்க.. ஆனா தரலையே.." என்றவளை குழப்பமாக பார்த்தான்.

எட்டி அவனின் கழுத்தைப் பற்றினாள். அவன் ஒன்றும் தன்னால் வளைக்க முடியாத உயரம் இல்லை என்று புரிந்துக் கொண்டவள் தன் முதல் முத்தத்தை அவனுக்கு தந்தாள். முத்தமிழ் உறைந்துப் போய் கொண்டிருந்ததை அறிந்து தனக்குள் சிரித்தாள்.

சில நிமிடங்களுக்கு பிறகு அவனை விட்டு விலகி நின்றாள். பனியன் அணிந்திருந்த அவனின் நெஞ்சின் மீது தனது வலது கையை பதித்தவள் "மூச்சு விட்டுக்கங்க.." என்றாள்.

முத்தமிழ் அவளை முறைத்தான்.

"கிஸ்ஸை என்ஜாய் பண்ணும்போது இந்த மாதிரி மூச்சு விட மறப்பது ஒன்னும் பெரிய மேட்டர் கிடையாது.." என்றாள் கண்ணடித்து.

"கொழுப்புதான்டி..'' என்று மெல்லியதாக முனகினான்.

"இந்தாங்க மாமா பூங்கொத்து.." என்று இடது கையிலிருந்த பூங்கொத்தை நீட்டினாள். முத்தமிழ் கண்களை சுழற்றினான்.

"இட்ஸ் ஓகே பேபி.. காதலனா இல்லன்னா என்ன என் குழந்தைக்கு அப்பாவா வாங்கிக்கங்க.." என்றாள்.

முத்தமிழின் இதயம் ஒரு நொடி துடிக்க மறந்துப் போனது.

"யூ ஆர் மை ஹீரோ.. ஒன்லி ஒன் ஹீரோ.. நீங்க என்னை எவ்வளவு லவ் பண்றிங்கன்னு எனக்குத் தெரியும்.. உங்க அளவுக்கு என்னை லவ் பண்ண யாராலும் முடியாது.. நமக்குள்ள எத்தனை திரைகள் இருந்தாலும் சரி.. இந்த குழந்தையை நான் தப்புச் சொல்லவே மாட்டேன்.." என்றவள் தன் கையிலிருந்த பூங்கொத்தை அவனின் வலதுக் கையில் திணித்தாள். அவனின் இடது கையை பற்றினாள். தன் வயிற்றின் அருகே கொண்டு வந்தாள். முத்தமிழ் தன் கையை பின்னே இழுக்க முயன்றான்.

"நம்மூர்ல ஒரு சொல்லாடல் இருக்கு தெரியுங்களா.. நெருப்பு சுடும்ன்னு சொன்னா குழந்தை நம்பவே நம்பாதாம்.. கையை சுட்டுக்கிட்ட பிறகுதான் நம்புமாம்.. அது போல லவ்வு சேப்பானதுன்னு சொன்னா நீங்களும் நம்பவே இல்ல.. ஆனா அதுக்காக உங்களை நான் விட முடியுமா.?" எனக் கேட்டவள் அவனின் பிடிவாத கரத்தை அதே பிடிவாதத்தோடு பற்றி தன் வயிற்றின் மீது வைத்தாள். அதற்கு முன்பே நடுங்க ஆரம்பித்து விட்டிருந்த அவனின் கரம் அவளின் புடவையை மோதியதும் அதிகமாக நடுங்க ஆரம்பித்து விட்டது.

"நம்ம பாப்பா.." என்றாள்.

முத்தமிழ் அவளின் விழிகளைதான் பார்த்தான். ஒளிர்ந்துக் கொண்டிருந்த அவளின் கண்களில் புன்னகையும் கலந்தது.

"என் சந்தோசத்தை உங்களால தடுக்கவே முடியாது.. நான் சத்தியமா திருந்திட்டேன்.. ஆனா சொன்னா நீங்க நம்ப மாட்டிங்க.. அதனால செஞ்சே காட்டுறேன்.." என்றவளை சந்தேகமாக பார்த்தான்.

என்ன செய்ய போகிறாள் என்ற குழப்பத்தோடு பார்த்து நின்றவனிடம் "நீங்க ரொம்ப அழகா இருக்கிங்க மாமா.." என்றாள்.

முத்தமிழ் முகத்தை திருப்பி சுவற்றைப் பார்த்தான்.

"வெட்கப்படலாம்.. தப்பில்ல.. நான் உங்க பொண்டாட்டிதான்.!" என்றவள் அவனின் கரத்தை விட்டாள். அவனை விட்டு விலகி நின்றாள்.

"எனக்கு கிச்சன்ல வேலை இருக்கு.. நான் போறேன்.. உங்களுக்கு இந்த மாதிரி ஆயிரம் ப்ரொபசல் பண்ண நினைச்சேன் நான்.. இன்னைக்காவது நேரம் வந்து சேர்ந்திருக்கே.." என்று பெருமூச்சு விட்டவள் கதவை நோக்கி நடந்தாள்.

"பூக்களை சுத்தம் பண்ணிடாதிங்க.. நாளைக்கு காலையில் நானே சுத்தம் பண்ணிக்கிறேன்.. இன்னைக்கு முழுசா பூ வாசம் மட்டும் வீசட்டும்.." என்றவள் கதவை திறந்துக் கொண்டு வெளியே சென்றாள்.

முத்தமிழ் தன் கையிலிருந்த பூங்கொத்தை வெறித்தான்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN