மணாளனின் மனம் 38

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
இரவு உணவை முடித்துக் கொண்டு அறைக்கு வந்த புவனாவிடம் "டாக்டர்கிட்ட நாளைக்கு அப்பாயிண்மென்ட் வாங்கியிருக்கேன்." என்றான் முத்தமிழ்.

"அபார்ஷன் பண்ணவா.?" என்று அவள் கேட்டதும் அதிர்ந்து போனவன் அவசரமாக மறுத்து தலையசைத்தான். பின்னர் "உனக்கு இஷ்டம்ன்னா நீ அப்படி கூட பண்ணிக்கலாம்.. நான் செக்கப்க்கு அப்பாயிண்மென்ட் வாங்கினேன்.." என்றான் சிறு குரலில்.

"நான் நாளைக்கு வரல‌‌.." என்றவள் கட்டிலில் சென்று அமர்ந்தாள்.

"ஆனா ஏன்.?" குழப்பமாக கேட்டவனை திரும்பிப் பார்த்தவள் "எனக்கு இஷ்டம் இருக்கும்போதுதான் என்னால ஹாஸ்பிட்டல் போக முடியும்.! அப்பாயிண்மென்ட் வாங்கும் முன்னாடி என்னையும் ஒரு வார்த்தை கேட்கணும்ன்னு தோணுச்சா உங்களுக்கு.? இந்த முட்டாள்கிட்ட நாம என்னத்தை கேட்கறதுங்கற அசால்ட்தானே‌.?" என்றாள்.

வியப்பு நிரம்பி நின்ற கண்களோடும் அவளைப் பார்த்தவன் "ஓ.. ஓகே நான் கேன்சல் பண்ணிடுறேன்.." என்றான்.

"அப்படின்னா உங்களுக்கு என் மேல அக்கறை இல்லதானே.? நான் வேணாம்ன்னு சொன்னா அப்படியே கண்டுக்காம விட்டுடுவிங்க.. அப்படிதானே.?" என்றுக் கேட்டாள்.

முத்தமிழ் பற்களை கடித்த சத்தம் அவளுக்கும் கேட்டது.

"ஒரு நிமிசம் சமாளிக்க முடியல இல்ல.. ஆனா நான் இந்த டார்ச்சரைதான் இரண்டே முக்கால் வருசம் அனுப்பவிச்சேன்.! வயித்து வலியும் தலை வலியும் அவங்கவங்களுக்கு வந்தாதான் தெரியும்.."

முத்தமிழின் கண்களில் தெரிந்த கேலியை கண்டவள் பழிப்புக் காட்டிவிட்டு தலையணையில் சாய்ந்தாள்.

'வர வர இவளுக்கு கொழுப்பு அதிகமாகிட்டே போகுது..' என நினைத்தபடி வந்து தனது இடத்தில் படுத்தான்.

புவனா எழுந்து அமர்ந்து அவனை பார்த்தாள். "இன்னொரு விசயம்.. மகனே நான் தூங்கிய பிறகு என் வயித்தை பார்த்துட்டே உட்கார்ந்திருக்கிறது, பாப்பான்னு பேச்சு கொடுக்கறது, கிஸ் பண்றதுன்னு எதையாவது வச்சிக்கிட்டிங்கன்னா கொலை பண்ணிடுவேன்.." என்று விரல் நீட்டி எச்சரித்தாள்.

முத்தமிழ் கண்களை உருட்டினான்.

"காட்டப்படாத அன்பை எப்பவுமே காட்டாதிங்க.. திருட்டு காதல் உங்களுக்கு வேணா பிடிக்கலாம். ஆனா எனக்கு கொஞ்சமும் பிடிக்காது.." என்றவள் அவனுக்கு முதுகுக் காட்டிப் படுத்துக் கொண்டாள்.

அவன் அவள் சொன்னதை பற்றி இப்போதுதான் யோசித்தான். அதற்கு முன்பு வரை அவனுக்கு வேறு சில தயக்கங்கள்தான் இருந்தது.

"பு.. புவனா.."

'சாத்தான் இப்ப ஏன் கூப்பிடுதுன்னு தெரியலையே.!' என்று நினைத்தபடி திரும்பினாள்.

"நான் வேணா கீழே தூங்கிக்கிட்டா.?" என்றுக் கேட்டான் அவன்.

"ஆனா ஏன்..? இதுவரை பண்ண டார்ச்சர் போதாதா.? இனி புதுசா வேற திட்டம் வச்சிருக்கிங்களா.?" என்றாள்.

அவசரமாக மறுத்து தலையசைத்தவன் "நான் வழக்கம்போல ஹக் பண்ணேன்னா.. அப்புறம் உனக்கு ஏதாவது ஹர்ட் ஆகிட்டா.." என்றான் தடுமாற்றமாக.

புவனாவின் முகம் நொடியில் மாறி போய் விட்டது. கண்கள் இரண்டும் கலங்கும் போல இருந்தது. உருண்டு அவனருகே வந்து சேர்ந்தாள்.

"நீங்க பயப்படுற அளவுக்கு எதுவும் ஆகாது.. சீனை போடாம அமைதியா தூங்குங்க.." என்றவள் அவனை அணைத்தபடி கண்களை மூடினாள்.

தயக்கமும் தடுமாற்றமுமாக அவளை அணைத்துக் கொண்டான். அவளின் நெற்றி உச்சியில் தன் முகம் பதித்தான். அணைத்திருந்த கையின் பிடி நொடிக்கு நொடி இறுகிக் கொண்டே இருந்தது. அறை முழுக்க வீசிக் கொண்டிருந்த பூ வாசத்தோடு அவளின் வாசமும் சேர்ந்து ஒரு வித கிறக்கத்தை தந்தது. அவனை மறந்து உறங்க ஆரம்பித்தான்.

புவனா அவனின் இதயத்துடிப்பின் ஓசையை கேட்டபடியே உறங்கிப் போனாள்.

மறுநாள் காலையில் தயாராகிக் கொண்டிருந்த புவனாவிடம் தயக்கமாக வந்து நின்ற முத்தமிழ் "ஹாஸ்பிட்டல் போலாம்தானே.?" என்றுக் கேட்டான்.

கூந்தலில் நான்கு முழ பூச்சரத்தை சூடியபடியே திரும்பியவள் "அடுத்த வாரத்துல போலாம் மாமா‌‌.." என்றாள் புன்னகைத்தபடி.

முத்தமிழ் அவளின் முகத்தை பார்க்க தயங்கினான். அந்த புன்னகை மிகவும் ஆபத்தானது என்று தனக்குள் சொல்லியபடி அவளை விட்டு தூர நடந்தான்.

அலுவலகம் செல்கையில் ஸ்வீட் கடை ஒன்றின் முன் பைக்கை நிறுத்த சொன்ன புவனா ஸ்வீட் பாக்ஸ் ஒன்றை வாங்கிக் கொண்டு திரும்பி வந்தாள்.

"எதுக்கு இது.?" என்று கேட்ட முத்தமிழிடம் "மது அக்காவுக்கும் மத்தவங்களுக்கும் தரதுக்கு.!" என்றாள்.

"ஆனா பாப்பா பத்தி நீ இன்னும் நம்ம வீட்டுல கூட சொல்லல.." குற்றம் சாட்டுபவனாக சொன்னவனை முறைத்தவள் "உங்க வாய் என்ன வாடகைக்கா போயிருக்கு.? ஏன் நீங்க சொல்லி இருக்க வேண்டியதுதானே உங்க பாப்பாவை பத்தி.!" என்று கடுகடுத்தாள்.

அவனுக்கு வீட்டில் சொல்ல தயக்கமாக இருந்தது. அவனுக்கு புவனாவின் மீது நம்பிக்கையே இல்லை. காதலுக்காக விஷம் குடித்தவள் மீண்டும் ஏதாவது வம்பு வந்தால் என்ன செய்வாளோ என்று பயந்தான். தன்னையே காப்பாற்றிக் கொள்ள இயலாத ஒருத்தி ஒரு குடும்பத்தை காப்பாற்றுவாள் என்று நம்புவதற்கு அவனுக்கு மனமே வரவில்லை. அதுவும் இல்லாமல் தன்னிடம் டைவர்ஸ் கேட்டவளை நம்பி தைரியமாக அடியெடுத்து வைக்கவும் முடியவில்லை அவனால்‌.

அலுவலகம் வந்து சேர்ந்ததும் உள்ளே ஓடினாள் புவனா. வேகமாக நடந்து வந்து அவளின் கூந்தலை பிடித்து இழுத்து நிறுத்தினான் முத்தமிழ். புவனா வலியோடு சிணுங்கியபடி அவனை திரும்பிப் பார்த்து முறைத்தாள்.

"என் பின்னல் மேல அவ்வளவு ஆசையா இருந்தா கேளுங்க.. நானே கட் பண்ணி தரேன்.. ஆனா இப்படி வோரோடு பிடுங்க டிரை பண்ணாதிங்க.." என்றாள்.

"ஓடி தொலையாம மெதுவா போடி.." கோபத்தில் சிவந்த முகத்தோடு அவளை முறைத்தபடி சொன்னான் முத்தமிழ்.

புவனா யோசனையோடு கண்களை உருட்டினாள். 'இது.. இப்படிதானே கல்யாணமான புதுசுல திட்டிட்டே இருப்பாரு.. அட கடவுளே.! மறுபடியும் ஆரம்பிச்ச இடத்துலேயேதான் வந்து நின்னிருக்கேனா.?' என்று கவலையோடு எண்ணினாள்.

'இந்த முறையாவது இவர் நம்மளை வளைக்கும் முன்னாடி நாம இவரை வளைச்சிடணும் ஆண்டவா.!' என்று நினைத்தபடி அவனைப் பார்த்தவள் "ஓகே பேபி.." என்று அவனின் கன்னத்தை கிள்ளிவிட்டு அவனிடமிருந்து விலகி நின்றாள்.

முத்தமிழ் அவளைக் கடுப்போடு பார்த்தபடியே தாண்டி நடந்தான்.

"மது அக்கா.." புவனா மதுவை தேடி செல்வது கண்டு நடப்பதை நிறுத்திவிட்டு திரும்பிப் பார்த்தான்.

"ஸ்வீட் எடுத்துக்கங்க அக்கா.." என்று பாக்ஸை நீட்டினாள்.

"என்ன விஷேசம் புவி.?" லட்டு ஒன்றை கையில் எடுத்துக் கொண்டு கேட்டாள் மதுமிதா.

"நான் லவ்வுல விழுந்து எட்டு வருசம் முடிஞ்சி இன்னையிலிருந்து ஒன்பதாவது வருசம் பிறக்க போகுது அக்கா.."

மதுமிதாவிற்கு புரை ஏறியது. புவனா பரிவோடு அவளின் தலையை தட்டி விட்டாள்‌.

"கவனமா இருங்க அக்கா.." என்றாள்.

புவனா சொன்னது கேட்டு முத்தமிழ் ஒற்றை கையால் முகத்தை மூடியபடி நின்ற இடத்திலேயே திரும்பி நின்றான்.

'இதை கூட கணக்கு வச்சிருப்பா போல..' என்று தனக்குள் முனகினான்.

மதுமிதா மேஜையில் இருந்த தண்ணீரை எடுத்து குடித்தாள்.

"கன்கிராட்ஸ் புவி.. நீ திடீர்ன்னு சொல்லவும் கொஞ்சம் ஜெர்க் ஆகிட்டேன். சாரி.." என்றாள்.

"பரவால்லக்கா.." என்று இளித்தபடி சொன்னவளை சந்தேகமாக பார்த்த மதுமிதா "ஹேப்பினெஸ்ஸெல்லாம் ஓவரா இருக்கு.. உன் காதல் ஒன்பதாவது வருசத்துக்கு வந்திருக்குன்னு சொல்லி உன் புருசன் ஏதாவது வைர மோதிரம் வாங்கி பிரசென்ட் பண்ணிட்டானா என்ன.?" என்றுக் கேட்டாள்.

"நமக்கு எதுக்கு அக்கா வைர மோதிரம்.? கொஞ்சம் சிரிச்சி பேசிட்டாவே போதாதா.?" என்றாள்.

அதே நேரத்தில் அந்த அறைக்குள் வந்த முத்தமிழ் வாசல்காலின் மீது சாய்ந்து நின்றபடி அவர்கள் இருவரையும் பார்த்தான்.

புவனா திரும்பி கணவனை பார்த்தாள். பின்னர் மதுமிதாவிடம் திரும்பியவள் "அக்கா உங்களுக்கு ஒரு விசயம் தெரியுமா.? ஆண்கள்ன்னு ஒரு பிறவி இருக்கு இல்லையா.. அவங்களுக்கு இந்த ஹெல்மெட்டும் லவ்வும் ஒன்னுதான்.! இரண்டையும் கூடவே வச்சிருப்பாங்க.. ஆனா யூஸே பண்ண மாட்டாங்க.. அன்பை வெளிகாட்டுறதுக்கு இவங்களுக்கு வெள்ளிக்காசு கொட்டி தரணும்ன்னு நினைக்கிறேன்.!" என்றாள் கிண்டலாக.

முத்தமிழ் நக்கலாக சிரித்தான்.

"மது இந்த பெண்கள் பிறவிக்கு பேராசை அதிகம் தெரியுமா.? எப்பவும் அவங்க நினைப்பதுதான் நடக்கணும். அதுக்காக எது வேணாலும் செய்வாங்க.. எதிர்ல இருப்பவங்களை பத்தி ஒரு செகண்ட் கூட யோசிக்க மாட்டாங்க.. ஆசைப்பட்டது கிடைக்கும் வரை ஐம்பது வயசு கிழவி மாதிரி யோசிப்பாங்க.. ஆனா ஆசைப்பட்டது கிடைச்சதும் குழந்தையை விட மோசமா நடந்துப்பாங்க.." என்றான்.

இருவரும் பேசுவதைக் கண்ட மதுமிதா 'இரண்டு பேரும் ஏதோ கள்ள ஆட்டம் ஆடுறாங்க போலயே.. மது நீ நடுவுல சிக்கிடாம தப்பிச்சிக்கோ.!' என்று தன்னையே எச்சரித்துக் கொண்டாள்.

புவனா அவனருகே வந்தாள். "உங்களுக்கு என் மேல கடுப்பா இருந்தா என்னை மட்டும் குத்தம் சொல்லுங்க.. ஏன் மொத்த பொண்ணுங்களையும் குறிப்பிட்டு சொல்லுறிங்க.?" என்றாள் மூக்கு சிவக்க.

அவளின் கையில் இருந்த ஸ்வீட் பாக்ஸை பார்த்தவன் அதிலிருந்து ஜாங்கிரி ஒன்றை எடுத்தான். ஒரு வாய் கடித்து உண்டவன் "உனக்கு என் மேல கடுப்பா இருந்தா என்னை மட்டும் குத்தம் சொல்லணும்.. ஏன் மொத்த ஆண்களையும் குறிப்பிட்டு சொல்லுற.?" என்றான் புருவம் உயர்த்தி.

புவனா பதில் சொல்ல முயன்றாள். ஆனால் பதில் கிடைக்கவில்லை. சில நொடிகள் யோசித்து விட்டு "ஓகே நான் சொன்னது ஆண்களுக்கு இல்ல மனுசங்க எல்லோருக்கும்.!" என்றாள்.

"நானும் பெண்களை குறிப்பிடல.. மொத்த மனுசங்களைதான் குறிப்பிட்டேன்னு நினைச்சிக்க.." என்றவன் ஜாங்கிரியை முழுதாய் உண்டுவிட்டு அவளிடம் கையை நீட்டினான்.

புவனா குழப்பமாக அவனைப் பார்த்தாள்.

அவளின் கையை அவனே பற்றி குலுக்கினான். "படிப்பு, இலட்சியம், குடும்ப பொறுப்பு இதையெல்லாம் கையாள கையாலாகாததால்.. உன்னோட அந்த அலட்சியத்துக்கு காதல்ன்னு பேரை வச்சி, அது மூலமா நீ நாசமா போனதுக்கான மொத்த பழியையும் என் மேல தூக்கி போட்டதுக்கு எனது நன்றிகளும் வாழ்த்துகளும்.!" என்றான் கிண்டல் தொனிக்க.

புவனாவிற்கு முகம் கறுத்து விட்டது. "கல்யாணம், கணவன்ங்கற வார்த்தைகளுக்கும் கூடதான் நிறைய நிறைய அர்த்தம் இருக்கு. நீங்க மட்டும் யோக்கியமா என்ன.? உங்க தங்கச்சி வாழ்க்கை வீணாக கூடாதுன்னு, நான் தற்கொலை முயற்சி வரை போன பிறகு உங்க மேல ஊர் பழி சொல்லிட கூடாதுங்கறதுக்காக என்னைக் கல்யாணம் பண்ணிங்க.. உங்களை விட நான் ஒன்னும் பெரிய துரோகி கிடையாது.. அன்னைக்கு அப்படியே விட்டிருந்தா நானா கூட நாலஞ்சி வருசத்துல தெளிஞ்சிருக்க சான்ஸ் இருக்கு.. ஆனா நீங்கதானே கல்யாணம் பண்ணி பழி வாங்கிட்டு இருக்கிங்க.." என்றாள்‌.

மதுமிதா அவர்கள் இருவரையும் திகிலோடுப் பார்த்தாள். இவர்கள் இப்போது வரையிலும் அதே ஒற்றை காரணத்துக்காக சண்டை போடுகிறார்களா என்று அதிர்ந்தாள்.

"பழி வாங்குறேன்னு சொல்லாத புவனா.." பற்களை அறைத்தபடி சொன்னான். "நான் இப்படிதான்.. சும்மா லவ்வுன்னு சொல்லி பீல் பண்ணிட்டு உட்கார்ந்திருக்க எனக்கு சுத்தமா பிடிக்காது.. நீதான் என்னை பழி வாங்கிட்டு இருக்க.." என்றவன் அவளை கோபத்தோடு பார்த்துவிட்டு தனது அறைக்கு சென்றான்.

புவனா பெருமூச்சு விட்டுக் கொண்டாள். 'தெளிய வைக்க டிரை பண்ணி மறுபடியும் குழப்பி வச்சிட்டேன் போல.!' என்று நினைத்தபடி வெளியே நடந்தவள் தயாவிற்கும், சத்யாவிற்கும் ஸ்வீட்டை தந்து விட்டு வந்தாள்.

வேலை பார்ப்பதை நிறுத்திவிட்டு நிமிர்ந்த முத்தமிழ் "உன் பிரச்சனைதான் என்ன.? நமக்குள்ள என்ன பிரச்சனை இருந்தாலும் அது நம்ம பெட்ரூமை விட்டு வெளியே வர கூடாதுன்னு நான் ஆரம்பத்துலயே தெளிவாதானே சொல்லி இருந்தேன்.?" என்றான் கோபத்தோடு.

அவன் முன் வந்து நின்றவள் மேஜையின் மீது சாய்ந்தாள். "பர்ஸ்ட் நீங்கதான் ஆரம்பிச்சிங்கன்னு நினைக்கிறேன்.." அவள் அடுத்தது சொல்லும் முன் "பின்னாடி தள்ளி நில்லு.." என்று சுட்டு விரலை நீட்டி விரட்டினான் முத்தமிழ். புவனா குழப்பத்தோடு தன்னைப் பார்த்தாள். அவளின் வயிறு மேஜையோடு உராய்ந்தபடி இருந்தது.

"சைக்கோ.." முணுமுணுத்தபடி பின்னால் தள்ளி நின்றாள்.

"நான் லவ் பண்ணி நாசமா போனேன்னு எனக்கு மட்டுமில்ல என்னை சுத்தி உள்ள எல்லோருக்குமே தெரியும். நீங்க என்னவோ இன்னைக்குதான் அதை புதுசா கண்டுபிடிச்ச மாதிரி சொல்லி கிண்டல் பண்ணி சீன் போட்டுட்டு இருக்கிங்க.. நான் உங்களை விஷ் பண்ண சொல்லி கேட்டேனா.?" தான் விட்ட இடத்திலிருந்து முழுதாய் கேட்டு முடித்தவள் அவன் முன் ஸ்வீட் பாக்ஸை டொப்பொன்று வைத்தாள்.

"இந்தாங்க இது எல்லாத்தையும் நீங்களே சாப்பிடுங்க.. நான் லவ்வுங்கற முட்டாள்தனமான படுகுழிக்குள் விழுந்ததுக்கு இந்த ஸ்வீட் சாப்பிட்டு நீங்களாவது கொண்டாடுங்க.." என்றாள்.

அவனின் முறைப்புக்கு பதில் முறைப்பு தந்தபடியே சென்று தனது இருக்கையில் அமர்ந்தாள்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN