மணாளனின் மனம் 40

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
புவனா இரவு உணவுக்கான சமையலை செய்துக் கொண்டிருந்தாள். கோபத்தோடு காய்களை நறுக்கிக் கொண்டிருந்தாள்.

"சின்ன சின்ன விசயத்துலயும் சந்தோசம் தேடுற பொண்ணு வேணுமாம்.. இதையெல்லாம் எட்டு வருசம் முன்னாடியே சொல்லி இருக்க கூடாதா.? நானும் வயல்ல ஓடுற நண்டை பார்த்தும், வானத்துல போற ராக்கெட்டை பார்த்தும் சந்தோசம் பொங்கித் துள்ளிக் குதிச்சிக்கிட்டு இருந்திருப்பேனே.." புலம்பியபடியே வேலைப் பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு முத்தமிழ் மீதுதான் கோபம் வந்தது.

'நீ நீயா இரு' என்று அவன் சொன்னது கேட்டதும் யாரோ பெரிய சுத்தியை எடுத்து நடு மண்டையில் அடித்தது போலாகி விட்டது அவளுக்கு. அவன் சொன்னது இருநூறு சதவீத உண்மையாகும். அவள் சந்தோசமாகவே இல்லை. இத்தனை ஆண்டுகளில் அவனின் புன்னகையின் பிரதிபலிப்பில் மட்டுமே தனது மகிழ்ச்சி உள்ளது என்று நம்பிக் கொண்டிருந்து விட்டாள். அவனும் இதே போல தனது புன்னகையில் மகிழ்ச்சியை தேடியிருக்க வாய்ப்பு உள்ளது என்பதை யோசிக்கவில்லை.

முரண்பாடுகள் எரிச்சலை தரும் என்றால், அழுகை சலிப்பை தருகிறது என்பதுவும் உண்மைதான் என்று அவளின் மூளைக்கு இப்போதுதான் புரிந்தது.

நேற்றை விட இன்று புத்தி சற்று தெளிந்திருப்பது போலிருந்தது. ஏன் எப்பவும் தான் மட்டும் வளராமலேயே இருக்கிறோம் என்று எண்ணிக் கவலைக் கொண்டாள்.

ஒரு காதலியாக இருந்து பார்க்கையில் அவனின் காதல் மட்டும்தான் அனைத்தும் என்று தோன்றியது. ஆனால் மனுசியாக இருந்து பார்க்கையில் மகிழ்ச்சிக்கு இந்த காதல் மட்டும்தான் அடிப்படை என்று நினைப்பது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்று புரிந்து தனக்குள் கசந்துப் போனாள்.

காதல் என்ற ஒற்றை பெயரை சொல்லிவிட்டு அதன் பிறகு வாழ்க்கை என்ற ஒன்றை தான் வாழவே இல்லை என்று புரிந்தது. முத்தமிழின் பயம் இப்போது அவளுக்கு மிக தெளிவாக புரிந்தது. அவன் காதலை வெளிப்படுத்தாமல் போனதன் காரணமும் புரிந்தது. காதல் என்ற பெயரை சொல்லிவிட்டு வாழ்க்கையை முழுதாய் அழிப்பதுதான் காதல் என்று அவனுக்கு தானேதான் நிரூபித்துக் கொண்டிருக்கிறோம் என்பதையும் புரிந்துக் கொண்டாள்.

"எல்லாத்தையும் சொல்லி தந்தாரே.. இதையும் சொல்லி தந்திருக்கலாம் இல்ல.!? அவருக்கு நம்ம கூட விளையாடிக்கிட்டே இருக்கணும்ன்னு ஆசை போல.!" என்று முனகிக் கொண்டிருந்தவளின் தோளில் கை விரல்கள் இரண்டு ஊர்ந்தது. துள்ளி விழுந்தவள் திரும்பிப் பார்த்தாள். முத்தமிழ் நின்றிருந்தான்.

"என்ன.?" என்றாள்.

"விளையாடிக்கிட்டே இருக்கணும்ன்னு நான் இதுவரைக்கும் நினைக்கவேயில்ல.." என்றவன் தண்ணீர் சொம்பை கையில் எடுத்து தண்ணீரைக் குடித்தான்.

"ஒட்டுக் கேட்கறதெல்லாம் தப்பு.." என்றவளைப் பார்த்து சிரித்தவன் "நீ புலம்புனது நடு ஹாலுக்கே கேட்டிருக்கும்.." என்றான்.

புவனா கன்னத்தில் கை வைத்தபடி அரை கண்களை மூடி அவனைப் பார்த்தாள்.

"எ.. என்ன.?" குழப்பமாக அவளைக் கேட்டான்.

"நீங்க சிரிச்சா ரொம்ப அழகா இருக்கிங்க.." என்றாள் வெட்கத்தோடு.

முத்தமிழ் அவளை நேர்கொண்டு பார்க்க மறுத்தான்.

"அப்படின்னா நான் இனி சிரிக்கவே கூடாதுன்னு சொல்ல வரியா.?" என கேட்டவனின் அருகே வந்து நின்றவள் "மத்தவங்களுக்கு அட்வைஸ் பண்ணும் முன்னாடி நாம அதை பாலோவ் பண்ணனும் ராசா.. எனக்கு பரிட்சை வைக்கணும்ன்னு நீங்க உங்க சுயத்தை இழக்காதிங்க.. நீங்க எப்படி என்னோட நிஜத்தை வேணும்ன்னு கேட்கறிங்களோ அதே போலதான் நானும் உங்க ஒரிஜினல் பீலிங்க்ஸை கேட்கறேன்.. லவ் யூ மாமா.. என் லவ் மெச்சூரே இல்லன்னாலும் நான் என் பீலிங்க்ஸை வெளிக்காட்ட தயங்கியதே கிடையாது.. நீங்க மட்டும் ஏன் பயப்படுறிங்க.?" என்றாள் கண்களை சாய்த்து.

முத்தமிழ் கேலியாக சிரித்தான்.

"நான் ஏன் பயப்படணும்.?" என்றான்.

புவனா அவனை விட்டு தள்ளி வந்து மீண்டும் காய் நறுக்கும் வேலையை தொடர ஆரம்பித்தாள்.

"நம்ம நாட்டு ஆண்கள் பலர்கிட்டயும் ரொம்ப பெரிய மைனஸ் பாயிண்ட் இருக்கு தெரியுமா மாமா.?" எனக் கேட்டாள் அவனைப் பார்த்து.

அவன் அவளின் பதிலை எதிர்நோக்கி இருந்தான்.

"மனைவியையும், குழந்தைகளையும், தாயையும், சகோதரிகளையும் உயிரா விரும்புவாங்க. ஆனா அதை நூறு சதவீதம் எத்தனை பேர் வெளிக்காட்டுறாங்கன்னு நினைக்கிறிங்க.? அன்பு காட்டினா தப்புன்னு உங்களுக்கு யார் சொல்லி தந்ததுன்னு தெரியல. நாலு வார்த்தை சிரிச்சி பேசுறது அவ்வளவு கஷ்டமா.? எங்க அப்பாவும் கூட உங்களை போலதான்.. எல்லாம் வாங்கி தருவாரு. அவர் உழைப்புல முக்கால்வாசி பணத்தை என் ஒருத்திக்கேதான் செலவு பண்ணியிருப்பாரு. ஆனா எத்தனை நாள் என்னோடு உட்கார்ந்து பேசி இருப்பாருன்னு நினைக்கிறிங்க.? ரிப்போர்ட் கார்ட் காட்டினா கூட எதுவும் பாராட்ட மாட்டாரு. நிறைய நாள் நானா போய் அவர்கிட்ட பேசுவேன். ஆனா அவர் சிரமப்பட்டு பேசுற மாதிரி இருக்கும். அதனாலயே அதிகம் பேச டிரை பண்ண மாட்டேன். ஆனா நீங்க எங்க அப்பா மாதிரி இல்லன்னு தெரியும் மாமா.. எப்பவும் அபிராமியோடு பேசுவிங்க.. அவளோடு கொஞ்சிட்டு இருப்பிங்க.. அவளை உங்க பிரெண்ட் போல ட்ரீட் பண்ணுவிங்க. நீங்களும் அவளும் தோள் மேல கை போட்டு பேசிட்டு சுத்துவிங்க.." என்றவள் தன் விழிகளை சுண்டு விரலால் துடைத்து விட்டபடி "எங்க அப்பா ஒருநாள் கூட என் தோள் மேல கை போட்டு பேசியதே இல்ல மாமா.. கார்த்தி மட்டும்தான் ஏதோ கொஞ்சம் கொஞ்சம் நெருக்கமா பழகுவான். ஆனா அந்த நாயும் உங்க தங்கச்சியை பார்த்ததும் என்னை மறந்துடுச்சி.." என்றாள்‌.

அவள் சொன்னது அனைத்தும் அவனுக்கு சிறு வலியை தந்துக் கொண்டிருந்தது. ஆனால் அவளின் கடைசி வரி அந்த வலிகள் அத்தனையும் மறக்கடித்து விட்டது.

"அவன் நம்ம தொகுதி எம்.எல்.ஏ.! அவனை நாய்ன்னு சொல்ற.!" என்றான் குற்றம் சாட்டும் விதமாக.

"ஊருக்கே கிங்கா இருந்தாலும் வீட்டுக்கு தொடப்பக்கட்டைதான்.. அவனுக்கு எங்கே எப்ப மரியாதை தரணுமோ அப்ப கரெக்டா தருவேன்.. இதுவும் உங்க பாடம் கத்து தந்ததுதான்.. ஆனா தனியா இருக்கும் போதெல்லாம் அவனை வாங்க சார் போங்க சார்ன்னு கூப்பிடுவேன்னு நினைக்காதிங்க.." என்றாள்.

"அதானே! நாய் வாலை நிமிர்த்த முடியுமா.?" என்று முனகினான் முத்தமிழ்.

"கரெக்ட்தான். அதைப் போய் கண்ணாடியைப் பார்த்துச் சொல்லிக்கங்க.. நாய் வாலை கூட நிமிர்த்தலாம். ஆனா உங்களோட பேய் மனசை மாத்தவே முடியாது.. எனக்கு நல்ல ஹஸ்பண்டா இல்லன்னாலும் உங்க பாப்பாவுக்காவது நல்ல அப்பாவா இருங்க.. நான் பண்ண பாவமெல்லாம் என்னோடவே போகட்டும்.!" என்றவள் வெட்டிப் போட்டிருந்த வெண்டையின் அடிப்பகுதியையும், மேல் பகுதியையும் கைகளில் எடுத்துக் கொண்டு அவனருகே வந்தாள்.

முத்தமிழ் அவளை கேள்வியாக பார்த்தான்.

"சின்ன சின்ன விசயத்துல மகிழ்ச்சி தேட ஆசைப்படுறேன் மாமா.. சின்ன பிள்ளையா இருக்கும்போது இந்த மாதிரி வெண்டைக்காய் வேஸ்டையெல்லாம் மூர்த்தி முகத்துல ஒட்டி விளையாடுவேன்.. நீங்கதானே இப்ப எனக்கு எல்லாமும்.. அதனால பத்து நிமிசத்துக்கு உங்க முகத்தை மட்டும் கடன் கொடுங்க.." என்றவள் அவன் தடுக்க தொடங்கும் முன்பே பத்து பன்னிரெண்டு பொட்டுகள் ஒட்டி விட்டாள்.

"மூர்த்தி என்னை விடவும் பெரியவன். அவனுக்காவது மரியாதை தரலாம் இல்ல.?" எனக் கேட்டவனை சிடுசிடுப்போடு பார்த்தவள் "லூசு மாதிரியே கன்டிசன் போடுறிங்க மாமா.! அந்த லூசு பையனை நானா பெரிய பையனா பிறக்க சொன்னேன்.? இப்ப நீங்க கூடத்தான் அவன் பேர் சொல்லி கூப்பிட்டிங்க‌. அவன் இவன்னு சொன்னிங்க.. நீங்க சொன்னா அது இயல்பு. நான் சொன்னா அது மரியாதை குறைவா.? நீங்க முதல்ல இந்த மாதிரி குட்டி குட்டி விசயத்துக்கெல்லாம் டென்சன் ஆகறதை நிப்பாட்டுங்க.." என்றவள் அருகே இருந்த சில்வர் தட்டு ஒன்றை எடுத்து அவன் முன் காட்டினாள்.

"உங்க முகம் அழகா இருக்கு மாமா.." என்றாள்‌. தட்டில் பிரதிபலித்த முகத்தை கண்டுவிட்டு நெற்றியில் அடித்துக் கொண்டான்.

"நீ இங்கே இருக்க வேண்டிய ஆளே இல்ல புவனா.. ஒன்னு ஜூவுல இருக்கணும். அப்படியும் இல்லன்னா மெண்டல் ஹாஸ்பிட்டல்ல இருக்கணும்.!" என்றான்.

கலகலவென சிரித்தவள் "அப்படிதான் எனக்கும் தோணுது.. ஆனா நான் எங்கே போனாலும் உங்களுக்கும் பக்கத்துலயே ரூம் புக் பண்ணிடுவேன். கவலைப்படாதிங்க.." என்றுக் கண்களைச் சுருக்கி நாக்கை வெளியே நீட்டி கிண்டலோடு சொன்னாள்.

அவளை புதிதாக பார்ப்பது போலிருந்தது அவனுக்கு. அவனின் நினைவில் இப்படியெல்லாம் அவள் சிரித்ததே இல்லை. இப்படி ஒரு முகபாவத்தையும் கூட அவன் பார்த்ததே இல்லை.

"ரொம்ப சைட் அடிக்காதிங்க.. அப்புறம் எனக்கு காய்ச்சல் வந்துட போகுது.. அத்தையும் பாட்டியும் பார்க்கும் முன்னாடி முகத்தை சுத்தம் பண்ணிக்கங்க.." என்றவள் சமையலை செய்ய ஆரம்பித்தாள்.

"கிரேஸிதனம் அதிகமாகுது உனக்கு.!" என முனகியவன் முகத்தைச் சுத்தம் செய்ய ஆரம்பித்தான்.

இரண்டரை வருடங்களுக்கு முன்பு ஒருநாள் தான் அலுவலகத்தில் நின்று மழையை ரசிக்கையில் இதோ போல அவன் தன்னை நெருங்கியதை நினைத்துப் பார்த்தாள். அவன் மாலை சொன்ன வார்த்தைகளோடு பொருத்திப் பார்த்தாள். அவள் அவளாக இருக்கையில் அவன் நெருங்கதான் முயன்றிருக்கிறான் என்பது அவளுக்கு புரிந்தது. தான்தான் விவாகரத்துக் கேட்டு அவன் கோபத்தை தூண்டிவிட்டு விசயங்களை சொதப்பி வைத்துள்ளோமோ என்று எண்ணினாள்‌.

மறுநாள் காலையில் அவனின் கையில் டீ கோப்பையை தந்தவள் அவனின் கன்னத்தில் முத்தம் ஒன்றை தந்துவிட்டு நகர்ந்தாள்.

முத்தமிழ் அதிசயம் போல அவளைப் பார்த்தான்.

அலமாரியில் சாய்ந்து நின்றிருந்த புவனா அலுவலகத்துக்கு தயாராகிக் கொண்டிருந்த முத்தமிழை மேலும் கீழும் பார்த்துவிட்டு "செமையா இருக்கிங்க மாமா.. இந்த டிரெஸ் உங்களுக்கு பர்பெக்டா மேட்சாகுது, நான் உங்களுக்கு மேட்ச் ஆகுற மாதிரியே.!" என்றாள் கண்ணடித்தபடி.

முகம் முழுக்க புன்னகையோடு இருந்தவளை வியப்போடு பார்த்தவன் தனது கைபேசியை எடுத்து அவளைப் புகைப்படம் எடுத்தான்.

"அழகா இருக்க.." என்றான் கைபேசியை தனது பாக்கெட்டில் போட்டுக் கொண்டபடியே.

அதிர்ச்சியில் இருந்தவளுக்கு அவன் சொன்னதை நம்பவே மனம் இல்லை. ஏதாவது மாற்றி சொல்லிவிட்டானா என்று குழப்பமாக இருந்தது.

"போலாமா.?" என அவன் கேட்கும் வரையிலும் அதே அதிர்ச்சியில் இருந்தவள் அன்று மாலை வரையிலுமே கூட அந்த அதிர்ச்சியிலிருந்து மீளவே இல்லை.

அலுவலகத்தில் நிறைய முறை கழிவறைக்கு சென்றாள். ஒவ்வொரு முறையும் சில நிமிடங்கள் நின்று அங்கிருந்த கண்ணாடியில் தன்னை பார்த்தாள். உண்மையில் அழகாய் இருக்கிறோமா என்று எண்ணி ஆச்சரியப்பட்டாள்.

மாலையில் வீடு வருகையில் அவனின் முதுகில் சாய்ந்துக் கொண்டாள். இன்றைய நாளில் உண்மையிலேயே தான் வாழ்ந்தது போலிருந்தது அவளுக்கு.

வீட்டிற்கு அவர்கள் வந்தபோது யசோதா நடு கூடத்தில் சோகமாக அமர்ந்திருந்தாள். அவளின் அருகே பயணப் பைகள் இரண்டு இருந்தன. முத்தமிழின் தந்தை நாற்காலி ஒன்றில் கோபத்தோடு அமர்ந்திருந்தார்.

புவனா அவர்கள் இருவரையும் தயக்கமாக பார்த்தாள்.

"தமிழ்.." பாட்டி இவனைக் கண்டதும் சத்தமாக அழைத்தாள்.

"இவங்களை கொஞ்சம் என்னன்னு கேளுப்பா.." என்றாள் தன் மகனையும், மருமகளையும் கைக்காட்டி.

"ஏன்.. என்னாச்சி.?" புரியாமல் கேட்டவனை நிமிர்ந்துப் பார்த்தாள் யசோதா.

"நான் எங்க அண்ணன் வீட்டுக்கு போறேன் தமிழ்.." என்றாள். சொல்லும்போதே கண்ணீர் வழிந்தது அவளுக்கு.

"என் அண்ணனுக்கு போன் பண்ணி இருக்கேன். இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவான். நான் கிளம்பறேன்.. என்னால இந்த வீட்டுல இருக்க முடியாது.. நீயும் உன் தங்கச்சியும் உங்க லைஃப்ல செட்டில் ஆகிட்டிங்க.. என் தேவை இனி உங்களுக்கு அவசியம் இல்லன்னு நினைக்கிறேன்.." என்றவள் நிற்காமல் வழிந்த கண்ணீரை நொடிக்கொரு தரம் துடைத்துக் கொண்டாள்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN