மணாளனின் மனம் 43

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
காலையில் எழும்போதே லேசாக தலை சுற்றியது புவனாவிற்கு. கடந்த நான்கு நாட்களாக இருக்கும் கிறுகிறுப்புதான். ஆனால் இன்று கொஞ்சம் அதிகமாக கிறுகிறுத்தது. அலாரத்தை அணைக்கவும் முடியாமல் மீண்டும் படுத்துக் கொண்டாள்.

"என்னாச்சி.?" அலார சத்தத்திலேயே எழுந்து விட்ட முத்தமிழ் இவளின் தடுமாற்றம் கண்டு கேட்டான்.

"தலை சுத்துது மாமா.." என்றவளை பரிதாபமாக பார்த்தவன் "டாக்டர்கிட்ட போகலாம்ன்னு நான் அன்னைக்கே சொன்னேன்.." என்றுக் குற்றம் சொன்னான்.

"உங்களுக்கு பழி வாங்கவும், குறை சொல்லவும் வேற நேரம் காலமே கிடைக்கலையா.?" எரிந்து விழுந்தவள் "முடிஞ்சா டீயோ காப்பியோ போட்டு கொண்டு வாங்க.." என்றாள்.

பத்து நிமிடங்கள் கழித்து டீயோடு வந்தான் முத்தமிழ். புவனா குளியலறையிலிருந்து வெளியே வந்தாள்.

தேனீரை பருகியவள் "வாவ்.. முத்தமிழ்.. டீயெல்லாம் டேஸ்டா போட்டிருக்க.." என்றவளின் தலையில் குட்டியவன் "எனக்கு நல்லாவே சமைக்க வரும்.. உங்கொண்ணனை உங்க அம்மா வளர்த்திய மாதிரி ஒன்னும் எங்க அம்மா என்னை வளர்த்தல.!" என்றான்.

தலையை தேய்த்து விட்டுக் கொண்டாள் புவனா. அவ்வளவாக வலிக்கவில்லைதான். ஆனாலும் "இன்னொரு முறை கொட்டி வச்சிங்கன்னா நான் உங்களை கடிச்சி வச்சிடுவேன்.!" என்றாள்.

"என்னை பேர் சொல்லி கூப்பிடாதேன்னு எத்தனை முறை சொல்றது.?" என அவனும் திருப்பிக் கேட்க "ஒரு நாளாவது லவ்வர் மாதிரி நடந்துக்கிறிங்களா.? எனிடைம்மும் வாத்தியார் மாதிரியே இருந்தா நானும் என்னதான் பண்றது.?" என புலம்பினாள்.

தேனீரை பருகிவிட்டு தேனீர் கோப்பையை அவனிடமே தந்தவள் "அத்தை வேற வீட்டுல இல்லை.. நானே எல்லா வேலையும் செஞ்சிடுவேன்தான்.. ஆனா தலை சுத்துது.. அதனால இன்னைக்கு ஒருநாளைக்கு எனக்கு அசிஸ்டென்டா இருங்களேன்.!" என்றாள் புன்னகைத்தபடி.

அவள் கேட்காவிட்டாலும் அதைதான் செய்திருப்பான் முத்தமிழ்.

இருவரும் சேர்ந்து சமைத்துக் கொண்டிருந்த நேரத்தில் பாட்டி வந்தாள்.

பாட்டியும் சேர்ந்து வேலைகளை செய்து முடித்தாள்.

ரவீந்தரை மொத்த குடும்பமும் முறைத்தது. காலை உணவு நேரத்தில் அவர்களின் முறைப்பு கண்டே அவருக்கு சாதம் இறங்கவில்லை. உணவை பாதியில் வைத்துவிட்டு எழுந்து விட்டார்.

"நான் போய் அம்மாவை கூட்டி வரட்டா.?" என்றுத் தன் தாத்தாவிடம் கேட்டான் முத்தமிழ்.

"நீ கூப்பிட்டா அவ வர மாட்டா தமிழ்.. புருசன் உசுரோடுதானே இருக்கான்.. வேணும்ன்னா அவன் போய் கூட்டி வரட்டும்.!" என்றாள் பாட்டி.

முத்தமிழ் கோபத்தோடு தந்தையின் புறம் திரும்பினான். அவர் சோஃபாவில் அமர்ந்தவண்ணம் தொலைக்காட்சியை பார்த்துக் கொண்டிருந்தார்.

"அப்பா.." என்று அழைத்தான்.

திரும்பிப் பார்த்தவரிடம் "எனக்கு எங்க அம்மா வேணும்.." என்றான்.

அவன் கேட்ட விதத்தை கண்டுவிட்டு 'அச்சோ.. பச்சை புள்ளை..' என்று நினைத்து தனக்குள் சிரித்தாள் புவனா.

"அவளை நான் ஒன்னும் இந்த வீட்டை விட்டு துரத்தல.. அவளுக்கு திமிர்.. அதுக்கு நீங்க எல்லாம் ஒத்து ஊதிட்டு இருக்கிங்க.." என்றார் கோபமாக.

"உங்க மேலதான் தப்பு.!" என்றவனை முறைத்தவர் "நான் வப்பாட்டி வச்சதை நீ பார்த்தியாடா.?" என்றுக் கடுமையாக கேட்டார்.

"சொந்த புருசனை கூட நம்பாம உங்கம்மா வீட்டை தாட்டி போயிருக்கா.. நான் போய் அவ கால்ல விழணுமோ.?" என்றார் ஆத்திரத்தோடு.

"இதே மாதிரி எங்க அம்மா போனுக்கு ஏதோ ஒரு ஆம்பளை போன் பண்ணி இருந்தா நீங்க சும்மா இருந்திருப்பிங்களா.?" முத்தமிழ் கேட்கவும் பற்களை அரைத்தார் ரவீந்தர்.

"லூசு மாதிரி கம்பேர் பண்ணிட்டு இருக்காத தமிழ்.. உன் வேலை என்னவோ அதை பாரு.. அவ என் பொண்டாட்டி.. அவளுக்கே திமிர் அடங்கிய பின்னாடி வந்து சேருவா.." என்றவர் எழுந்து வீட்டை விட்டு வெளியே சென்றார்.

அலுவலகம் கிளம்பினார்கள் முத்தமிழும் புவனாவும்.

"ஹாஸ்பிட்டல் போகலாமா.?" என்று கேட்டவனிடம் "நாலஞ்சி நாள்ல கழிச்சி போகலாமா.? இப்ப நிறைய வேலை இருக்கு.!" என்றாள் அவள்.

அன்றைய நாள் இருவருக்குமே நல்லபடியாகதான் போனது. முத்தமிழ் புவனாவை அவ்வளவாக திட்டவில்லை. அவள் மயக்கத்தில் அவ்வப்போது மேஜையில் தலை சாய்த்தபோதும் ஆதரவாக தலையை வருடி விட்டான்.

அவர்கள் இருவரும் வீட்டிற்கு வந்திருந்தபோது ரவீந்தர் தனது வலது தோளில் பெரிய கட்டோடு ஹாலில் அமர்ந்திருந்தார். பாட்டி தன் மகனுக்கு பாலை கொண்டு வந்து வைத்தாள்

"என்னாச்சி.?" அதிர்ச்சியோடு கேட்டபடி அவரின் முன்னால் வந்து நின்றான் முத்தமிழ்.

தோளை இடது கையால் பிடித்தபடி நிமிர்ந்துப் பார்த்தார் ரவீந்தர்.

"உங்க மாமான்காரன் இருக்கானே.. நாசமா போனவன்.." என்று பற்களை கடித்தார் அவர். ஊசி மாத்திரை எதுவும் வலியை முழுதாய் குறைக்கவில்லை என்பது அவரின் முகத்தைப் பார்க்கும் போதே புரிந்தது.

"அவங்க வீட்டு வாசலுக்கு நானும் போனேன்.. அந்த வெளங்காதவனும் அப்பதான் வயல்ல இருந்து வந்திருக்கான்.. என்னை பார்த்ததும் என்ன ஏதுன்னு கூட கேட்காம கையில இருந்த மண்வெட்டியாலயே போட்டுட்டான்.." என்றவர் வலியை கட்டுப்படுத்த பற்களை அழுத்தமாக கடித்தார்.

முத்தமிழுக்கு மாமனை நினைத்து அதிர்ச்சியாக இருந்தது‌.

"அந்த மண்வெட்டி ஒரு இத்து போன மண்வெட்டி போல.. லேசான காயத்தோடு போயிடுச்சி.. அந்த போக்கத்தவன் நல்லவேளையா கடப்பாரையை கையில வச்சிருக்கல.." என்றார் பாதி கோபமும், பாதி நிம்மதியுமாக.

புவனாவிற்கு சிரிப்பு வருவது போலிருந்தது. ஆனால் மாமனார் உண்மையான வலியோடு அமர்ந்திருக்கிறார் என்ற எண்ணத்தை மனதில் நிறுத்தி சிரிப்பை அடக்கினாள்.

"அம்மா‌ எங்கே.?" முத்தமிழுக்கு அந்த நேரத்திலும் அம்மாதான் தேவையாக இருந்தாள்.

ரவீந்தர் தோளை பற்றியபடியே நிமிர்ந்துப் பார்த்தார்.

"நல்லவேளைடா சாமி.. உங்க அம்மா இந்த வயசுல வீட்டை விட்டு போனா.. நீ சின்ன பையனா இருக்கும்போது ஏதும் போயிருந்தா நீயே என்னை கொன்னுட்டு உங்க அம்மாவை வர வச்சிருப்ப போல.! பெத்தவன் இப்படி கையில அடிப்பட்டு வந்திருக்கானே, எப்படி இருக்கானோன்னு கவலைப்பட்டியா.? அந்த ஓடுகாலி கழுதையை பத்தி கேட்டுட்டு இருக்க.." என்றார்.

முத்தமிழுக்கு பாறாங்கல்லை தூக்கி அவரின் தலை மீது போட வேண்டும் போல இருந்தது.

"எங்க அம்மா ஓடுகாலியா.? வயசானா அறிவு வளரும்ன்னு நினைச்சேன்.. இப்படி முட்டாளா மாறிட்டு இருக்கிங்களே.." என்றவன் அவரை விட்டு விலகி நினறான்.

"மாமன் மண்வெட்டியை உங்க நடு மண்டையில் போட்டிருக்கணும்.. அப்பதான் புத்தி வந்திருக்கும்.." என்று முனகியவன் "இன்னொரு முறை எங்க அம்மாவை ஓடுகாலின்னு சொன்னிங்கன்னா அப்புறம் நீங்கதான் இந்த வீட்டை போக வேண்டியதா இருக்கும்.!" என்று எச்சரித்தான்.

ரவீந்தருக்கு ஏற்கனவே தோள் வலி. இதில் இவர்களின் வெறுப்பும் சேர்ந்து அவருக்கு கஷ்டத்தைதான் தந்தது.

இவர் ஆரம்பிக்கும் முன்பே மச்சான் தோளில் வெட்டி விட்டார். தோளை பற்றிக் கொண்டு நின்றிருந்தவரை முறைத்தார் அவர்.

"கிளி போல என் தங்கச்சி இருக்கையில உனக்கு கூத்தியாள் சகவாசம் கேட்குதா.? எவ்வளவு தைரியம் இருந்தா அப்படி ஒரு தப்பை பண்ணிட்டு இங்கே வரைக்கும் வந்திருப்ப.?" என்றார் ஆத்திரத்தோடு.

"அடப்பாவி.. உன்னை ரொம்ப அறிவாளின்னு நினைச்சேன்டா.! உன் தங்கச்சியை விடவும் முட்டாளா இருக்கியே, என் முகத்தை பார்த்தா வப்பாட்டி தேடி வர மாதிரியா இருக்கு.?" என்றுக் கவலையாக கேட்டார் இவர்.

அவருக்கு மற்றவர்களோடு வெறுப்பு இருந்தாலும் கூட மச்சானோடு மட்டும் பல வருடங்களாக நல்ல அனுசரணை இருந்தது. நண்பர்கள் போல பழகி வருபவர்கள் இருவரும். மச்சான் கொஞ்சம் கரடு முரடு, மூக்கின் மீது கோபத்தை தேக்கி வைத்திருப்பவன் என்று அவருக்கு ஏற்கனவே தெரியும். ஆனால் இப்படி பொசுகென்று மண்வெட்டியை வீசுவானென்று அவர் எதிர்பார்க்கவேயில்லை.

"வப்பாட்டி வச்சியோ இல்லையோ, யாருக்கு அந்த கன்றாவி வேணும்.? இந்த வயசுல எவளோ ஒருத்தி பேச்சை கேட்டுதானே என் தங்கச்சியை வீட்டை விட்டு அனுப்பி இருக்க.?" என்று கர்ஜனையோடு கேட்டார் அவர்.

கை காயத்திலிருந்து வழிந்த ரத்தத்தின் காரணமாக ரவீந்தருக்கு மயக்கம் வருவது போலிருந்தது. ஆனால் அதை விட மச்சானின் குற்றச்சாட்டுதான் அதீத மயக்கத்தை தந்தது.

"நான் அவளை வீட்டை விட்டு அனுப்பினேனா.? உன் தங்கச்சி நல்லா பொய் பேச கத்துட்டு இருக்கா.! கூப்பிட கூப்பிட என் பேச்சை கேட்காம வெளியே வந்தவ அவதான். அவ சொல்றான்னு கேட்டு சொந்த மாமனையே வெட்டியிருக்கியே, உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா.? நீயும் உன் தங்கச்சியை மாதிரியே புத்தி கெட்டவன்தான்னு நான்தான் புரிஞ்சிக்காம போயிட்டேன்.!" என புலம்பினார்.

ஆனால் ரவீந்தர் மயங்கி விழுந்ததும் அந்த மச்சானேதான் மருத்துவமனை கொண்டு வந்து சேர்த்தார்.

"வாசல் தாழ்வாரத்துல சொருகி வச்சிருந்த மண்வெட்டியில தோளை இடிச்சிக்கிட்டாரு.." என்று மருத்துவரிடம் காரணம் சொன்னவர் ரவீந்தவருக்கு சிகிச்சை முடிந்து அவர் கண் விழித்ததும் அவரை கொண்டு வந்து அவரின் வீட்டு வாசலில் விட்டார்.

"என் மருமகன், மருமக முகத்துக்காக உன்னை உயிரோடு விட்டுட்டு போறேன்.. இன்னொரு முறை என் தங்கச்சியை தேடி வராத.. அவதான் நீ கட்டிய தாலியையே கழட்டிட்டா இல்ல.. அப்புறம் என்ன.?" என்று எரிந்து விழுந்தவர் ரவீந்தர் அப்பாவியாக பார்த்துக் கொண்டிருக்கும்போதே அங்கிருந்து சென்றுவிட்டார்.

ரவீந்தருக்கு ஆத்திரமாக வந்தது. சொந்த மச்சானே தன்னை எதிரி போல பார்க்க காரணமான மனைவியை மனதுக்குள் திட்டி தீர்த்தார். வீட்டுக்கு வா என்று மனைவியை அழைக்கதான் சென்றிருந்தார் அவர். அழைப்பு என்பதை விடவும் கட்டளை என்றே சொல்லலாம். ஆனால்‌ அதற்குள் இப்படி நடந்து விட்டது. வாசலில் அடிப்பட்டு நின்றிருந்த தன்னை வீட்டுக்குள் இருந்த மனைவி கவனிக்கவில்லை என்பதை அவரால் நம்ப முடியவில்லை. வேண்டுமென்றே அவள் தன்னை வஞ்சம் தீர்க்கிறாள் என்றெண்ணி மனம் கொதித்தார்.

"உங்க மாமா இப்படி பண்ணி இருக்க கூடாது மாமா.. என்ன இருந்தாலும் நாளைக்கு அத்தையும் மாமாவும் சேர்ந்துப்பாங்க.. ஆனா அவர் செஞ்ச காரியம் சரியாகுமா.?" என்று கணவனிடம் கேட்டாள் புவனா.

"அவர் செஞ்சதும் தப்புதான்..‌ ஆனா அவரோட இடத்துல இருந்து பார்த்தாதானே அவரோட கோபம் புரியும்.! இந்த வயசுல தங்கச்சி தாலியை கழட்டி வீசிட்டு வர அளவுக்கு புருசன்காரன் கொடுமை பண்ணிருக்கான்னு நினைச்சிருப்பாரு அவர். அதான் இப்படி பண்ணிட்டாரு.. மண்வெட்டி லேசாதான் பட்டிருக்கும்ன்னு நினைக்கிறேன். ஆனா அவர் கோபத்துல இவரை கொல்லாம விட்ட வரை சந்தோசமே.!" என்று தன் நெஞ்சின் மீது கை வைத்து சொன்னான்.

நன்றாக இருந்த குடும்பம் இப்படி ஆகி விட்டதே என்று புவனாவிற்கும் கவலைதான். தான் கர்ப்பவதியாக இருக்கும் விசயத்தை இன்னும் அத்தையிடம் கூட சொல்லவில்லையே என்ற கவலையில் இருந்தாள் அவள். மகளை போல பார்த்துக் கொண்டவள் அவள். அதனாலேயே அவள் இல்லாமல் வெறுமையை உணர்ந்தாள் புவனா.

அன்று இரவு உணவை சமைத்து முடித்தவள் உணவிருந்த பாத்திரங்களை எடுத்து உணவு மேஜையின் மீது வைப்பதற்காக "மாமா!" என்று கணவனை அழைத்தாள்.

"ம்.." என்று முத்தமிழ் குரல் தந்த அதே நேரத்தில் "என்னம்மா.?" என்றுக் கேட்டார் ரவீந்தர்.

சமையலறை வாசலில் வந்து நின்ற புவனா "நான் மாமாவை கூப்பிட்டேன் மாமா.." என்று தன் கணவனை கை காட்டினாள்.

முத்தமிழ் எழுந்து வந்தான். அவனுக்கு வேலையை சொன்னாள் புவனா.

"அவரும் நானும் இருக்கும்போது மாமான்னு என்னை கூப்பிடாதே.!" என்றான் முத்தமிழ்.

"பேர் சொல்லி கூப்பிட்டா நீங்கதான் கொட்டி வைக்கிறிங்களே.!" என்றுத் தலையை தேய்த்துக் கொண்டவளிடம் "என்னங்கன்னு கூப்பிடு.!" என்றான் அவன் யோசித்துவிட்டு.

புவனா வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்தாள்.

"என்னங்கன்னா மாமா.?" என கேட்டு சிரித்தாள்.

"நான் அப்படியெல்லாம் கூப்பிட மாட்டேன்.. ஏங்க என்னங்கன்னெல்லாம் கூப்பிட எனக்கு வராது மாமா.." என்றாள் இடம் வலமாக தலையசைத்தபடி.

"தமிழ்ன்னு கூப்பிடட்டா.?" என்றுக் கேட்டாள் தலைசாய்த்து.

"நான் உன்னை விட பெரியவன்டி.!" என்றவனை முறைத்தவள் "எங்க மூர்த்தியை விட நீங்க ஒன்னும் பெரியவர் இல்ல.." என்றாள்.

முத்தமிழ் பெருமூச்சு விட்டான்.

"சில பஞ்சாயதெல்லாம் கடைசி வரை தீரவே தீராது புவனா.. இனி என் பக்கத்துல வந்து என்னை கூப்பிடு.. பிரச்சனை தீர்ந்தது.." என்றான்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN