மணாளனின் மனம் 44

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
யசோதா கட்டிலை விட்டு இறங்காமல் அழுதுக் கொண்டிருந்தாள்.

"பெரிய சீமையிலயே இல்லாத மாப்பிள்ளை அவன்.. அப்பவே தலையில அடிச்சி சொன்னேன்.. அவங்க குடும்பமே இப்படிதான். அவனை கட்டாத.. என் அண்ணன் மகன் மைனர் கணக்கா இருக்கான். அவனை கட்டிக்கோன்னு சொன்னேன். நீ எங்கே என்‌ பேச்சை கேட்ட.?" என்று யசோதாவின் அம்மா அந்த அறையின் ஒரு மூலையில் அமர்ந்து வெற்றிலைக்கு பாக்கு இடித்தபடியே மகளைத் திட்டிக் கொண்டிருந்தாள்.

யசோதாவுக்கு அந்த சோகத்திலும் கூட அம்மாவின் பேச்சை கேட்டு எரிச்சல் வந்தது. 'எத்தனை வருசம் போனாலும் அண்ணன் மகன் பாட்டை விட மாட்டியா நீ.?' என கேட்க நினைத்தாள்.

"அம்மா.. நீ எழுந்து வெளியே போ.. பாவம் புள்ளை அழுதுட்டு இருக்கு.. இங்கே வந்து உட்கார்ந்துக்கிட்டு நை நைன்னு பேசிட்டு இருக்க.. உன் அண்ணன் மகன் அம்புட்டு அழகா இருந்தா அவனை நீயே கட்டிக்க வேண்டியதுதானே.?" என கேட்டு தாயை வெளியே அனுப்பினார் யசோதாவின் அண்ணன்.

"இதுக்கு அழலாமா கண்ணு.. அவன் மூஞ்சி மொகரையை பேத்து விடுறேன் நான். அப்புறம் பாரு அவனே உன்னை தேடி வருவான்.!" என்றார் அவர்.

யசோதாவிற்குதான் கண்ணீரே நிற்கவில்லை.

"அந்த ஆளை எவ்வளவு நம்பினேன் தெரியுமா.?" என்றுக் கேட்டாள்.

"விடு விடு.. கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனைன்னு நினைச்சி விட்டுட்டு போக வேண்டியதுதான்.. குரங்கு கையில தந்த பூமாலையா போச்சி அவனுக்கு உன்னை கட்டி வச்சது.." என்று அவரும் கடைசியில் புலம்பினார்.

மறுநாள் மாலை வேளையில் யசோதா அந்த வீட்டின் தோட்டத்தில் உலாவிக் கொண்டிருந்தாள்‌. திருமணமான நாளில் இருந்து ஒருநாள் கூட சண்டையின் காரணமாக பிறந்த வீட்டிற்கு வந்தவள் அல்ல அவள். இத்தனை வருடங்கள் கழித்து, பேத்தி ஒருத்தி பிறந்த பிறகு வருவோம் என்று நினைக்கவே இல்லை.

"யசோதா.." கணவனின் குரல் கேட்பது போலவே இருந்தது அவளுக்கு. நினைவிலும் தொல்லையா என யசோதா எண்ணிய நேரத்தில் "யசோதா.." என்று மீண்டும் குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தாள். மதில் சுவரை ஒட்டி வளர்ந்திருந்த மரம் ஒன்றில் ஏறி நின்றிருந்தார் ரவீந்தர்.

யசோதா ஆச்சரியமாக அவரைப் பார்த்தாள்.

"வீட்டுக்கு போலாம் வாடி.." என்றழைத்தார் கிளை ஒன்றை கெட்டியாக அணைத்தபடி.

"நான் வரல.." சுள்ளென்று எரிந்து விழுந்தாள் யசோதா.

"பிள்ளைங்களை பெத்து விட்டுட்டு வந்திருக்கியே, அறிவுகெட்டவளே! அவங்களை யார் பார்த்துப்பாங்க.." என்றவரை முறைத்தாள்.

"இந்த வயசுல நான் அவங்களை பார்த்துக்கணுமா.? அப்படியே இருந்தாலும் நானேதான் பெத்தேனா.. உங்களுக்கு பங்கே இல்லையோ.? உங்க கை கால்ல என்ன கட்டையா முளைச்சிருக்கு.. போய் நீங்க பார்த்துக்கங்க.." என்றவள் தரையில் கிடந்த சிறு கல் ஒன்றை எடுத்து அவர் மீது எறிந்தாள். அவளுக்கு குறி வைக்கவே தெரியாது என்பது அவர்கள் இருவருமே அறிந்த விசயம்தான். அதனால்தான் தைரியமாக நின்றிருந்தார் ரவீந்தர். அவர் நினைத்தது போலவே அந்த கல் அவரின் காலுக்கடியில் பறந்து கீழே விழுந்தது.

"உனக்கு என் மேல கோபம்ன்னு தெரியும்.. மன்னிச்சிடு தங்கம் பிள்ளை.. ஆனா அந்த பத்மினியோட முகத்தை கூட நான் நல்லா பார்க்கல.. இது நம்ம குலதெய்வம் அங்காள பரமேஸ்வரி மேல சத்தியம்.!" என்றார்.

"இத்தனை வருசமா எனக்கு போன் பண்ணல நீங்க.. நான் உங்களை நம்பணுமா.? எனக்கு குலதெய்வம் இனி அங்காள பரமேஸ்வரி இல்ல.. எங்க காத்தமுத்து மட்டும்தான்.!" என்றாள்.

"அப்படியெல்லாம் சொல்ல கூடாது தங்க புள்ளை.. சாமி குத்தம் வந்துடும்.. எங்க அம்மாவும் அப்பாவும் என்னை ஏசுறாங்க புள்ளை.. தமிழ் ஒரு பக்கம் முறைச்சிட்டே திரியறான். ஆவூன்னு எங்கம்மா எங்கன்னு கேட்டு உசுர வாங்கறான்.. தயவு செஞ்சி வந்துடு புள்ளை.." என்றார் கெஞ்சலாக.

"நான் வரல.. போய் பத்மினியை கட்டி கூட்டி வந்துக்கங்க.. அவ வந்து எல்லோரையும் பார்த்துப்பா.."

"கோபத்துல என்ன பேசுறதுன்னு தெரியாம பேசுறியே.. நான் அந்த பத்மினியை கட்டிக்க முடியாது.. அவ புருசன் ஏதோ ஏ.எஸ்.பியா இருக்கானாம்.. நீ சொன்னங்கறதுக்காக நான் போய் இப்படி ஏதும் கேட்டுட்டா பெரிய துப்பாக்கியா எடுத்து என்னை சுட்டுப்புடுவான் அவன்.." என்றார்.

யசோதா அதிர்ச்சியாக கணவனைப் பார்த்தாள்.

"அந்த ஆள் சாதாரண மனுசனா இருந்திருந்தா கட்டியிருப்பிங்களோ.?" என கேட்டவளிடம் இடம் வலமாக தலையசைத்தவர் "அச்சோ.. இப்படியெல்லாம் எடக்கு மடக்கா கேள்வி கேட்காத தங்கம்.. எனக்கும் அந்த பொம்பளைக்கும் நடுவுல எந்த விதத்திலும் தொடர்பு இல்லன்னு சொல்லதான் இந்த விசயத்தை சொன்னேன். நான் உன்னை விட்டுட்டு வேற எவளையாவது பார்த்திருந்தா என் கண்ணு இரண்டும் அவிஞ்சி போகட்டும்.." என்றார்.

யசோதா நம்பிக்கை இல்லாமல் பார்வையை உருட்டினாள். பத்மினியின் கணவன் உண்மையிலேயே காவல் துறை அதிகாரியாக இருக்கும் பட்சத்தில் தன் கணவன் நிச்சயம் அவளை நெருங்க நினைக்க மாட்டார் என்று நம்பினாள். ஆனால் இத்தனை வருடங்கள் பிரிந்து இருந்தவருக்கு இப்போது என்ன புது பாசம் என்று கேட்டது அவளின் மனம்.

"இத்தனை வருசம் எப்படி இருந்திங்களோ அப்படியே உங்க மக‌ வீட்டுல போய் இருக்க வேண்டியதுதானே.? இங்கே ஏன் வந்து தொல்லை பண்ணிட்டு இருக்கிங்க.?" என்று எரிச்சலாக கேட்டாள்.

"நான் சும்மா போய் இருந்தேன்.. இத்தனை வருசமா காட்டுலயும் மேட்டுலயும் கஷ்டமா பட்டுட்டோமே அங்கே இருந்தா கொஞ்சம் நிம்மதியா இருக்கலாமேன்னு இருந்தேன்.." என்றவரை நோக்கி மீண்டும் ஒரு கல்லை பறக்க விட்டாள் யசோதா.

"இங்கே நிம்மதியே இல்லையோ.?"

"அங்கே மருமகனும் மகளும் வேலைக்கு போயிடுறாங்க.. நான் ஜாலியா டிவியை பார்த்துட்டு உட்கார்ந்திருந்தேன்.. இங்கே எங்க அம்மாவும் நீயும் டிவியை விட்டே நகர மாட்டேங்கிறிங்க.. இந்த வீணா போன சீரியலையும் மாத்தியே தொலைய மாட்டேங்கிறிங்க.."

அவர் சொன்னது கேட்டு அவளுக்கு கோபம்தான் வந்தது.

"ஆனா நீங்க எனக்கு போனே பண்ணல.."

"ஆத்தா.. நம்ம பொண்டாட்டிதானேங்கற நினைப்புல ஏதோ அசால்டா இருந்துட்டேன்.. போன் பண்ணாதது தப்புதான்.. தயவுசெஞ்சி வீட்டுக்கு வந்துடு புள்ளை.." என்றவரிடம் மறுப்பாக தலையசைத்தவள் "எனக்கு சமாதானம் ஆகல.. நீங்க என்னை எல்லார் முன்னாடியும் கேவலமா பேசுனிங்க.. பதினாறு வயசு புள்ளை.. புருசன் கூடவே இருக்கணுமாம்ன்னெல்லாம் பேசிட்டிங்க.." என்றவள் முந்தானையை எடுத்து மூக்கை துடைத்துக் கொண்டாள்.

இந்த முறை ரவீந்தருக்கும் கோபம் வந்தது.

"நீ பத்மினிக்கும் எனக்கும் முடிச்சி போட்ட கோபத்துல அப்படி பேசிட்டேன்.. அதையெல்லாம் மனசுல வச்சிக்காம வந்துடு புள்ளை.."

யசோதா யோசித்தாள். உண்மையிலேயே அவளுக்கு அவர் தன்னோடு இல்லாமல் விலகி இருந்ததெல்லாம் கோபம் கிடையாது. அப்படி ஒரு கோபம் இருந்திருந்தால் அவர் வீட்டை விட்டு சென்ற முதல் மாதமே பெட்டியை கட்டியிருப்பாள். அதற்காக அவள் சில நேரங்களில் கணவனின் அருகாமையை எதிர்பார்க்கவே இல்லை என்றும் சொல்லி விட முடியாது. எத்தனை காலத்திற்கு பிரிந்து இருந்து விடுவார். வரும்போது வரட்டுமே என்ற எண்ணம்தான் அவளுக்கும். ஆனால் இந்த பத்மினி இடை புகவும்தான் அவளின் எண்ணங்கள் அத்தனையும் நாட்டியம் ஆட ஆரம்பித்து விட்டது. அந்த பத்மினியின் கணவர் யாரென தெரிந்த உடனேயே அவளின் கோபம் சற்று தீர்ந்து விட்டது என்றுச் சொல்லலாம். இப்போது இவர் கெஞ்சியதும் மனம் அவளை அறியாமலேயே அவர் பக்கம் சாய ஆரம்பித்து விட்டது.

"மருமக புள்ளை வேற மாசமா இருக்கு போல.. நேத்தும் இன்னைக்கும் வாந்தியா எடுத்துட்டு இருக்கா.. நீ வந்தா அந்த புள்ளைக்கு கொஞ்சம் அனுசரணையா இருக்கும். 'அத்தை எப்ப வீட்டுக்கு வருவாங்க மாமா'ன்னு கண்ணுல தண்ணியோடு வந்து என்கிட்ட கேட்குது.. நான் என்னவோ உன்னை அடிச்சி வீட்டை விட்டு துரத்தினா மாதிரியே எல்லோரும் என்னை பார்க்கறாங்க யசோதா‌.. நான் இனி நம்ம வீட்டு காம்பவுண்டை கூட தாண்ட மாட்டேன்.. போனை கூட அன்னைக்கே உடைச்சி போட்டுட்டேன். உன்னை எப்பவும் திட்டவே மாட்டேன்.. வீட்டுக்கு போலாம் வரியா.?" என்றுக் கேட்டார்.

யசோதா யோசனையோடு தலையசைத்தாள்.

"வயலுக்கு போன உன் அண்ணன்காரன் திரும்பி வரதுக்குள்ள வெளியே வந்துடு.. நாம போயிடலாம்.." என்றவரை ஆச்சரியமாக பார்த்தவள் "திருட்டுதனமா கூட்டிப் போக வந்திருக்கிங்களா.? அப்படின்னா நான் வரல.." என்றாள்.

"உங்க அண்ணன்காரன் ஒரு மாதிரி பைத்தியம் யசோதா.. பேசவே விட மாட்டான். வாசல்ல வந்து நின்னதுக்கே மண்வெட்டியால என்னை வெட்டிட்டான்.. அவனை நம்பி உங்க வீட்டுக்கு வந்தேன்னா எனக்கு ஒரேடியா பாடை கட்டிடுவான்.. என் தாய்க்கு நான் ஒத்தை புள்ளை ஆத்தா.. தயவுசெஞ்சி எனக்கு கருணை காட்டி நீயே வந்துடு.!" என்றவரை அதிர்ச்சியாக பார்த்தவள் "எங்கண்ணன் மண்வெட்டியால போட்டுட்டானா.? ஆனா எனக்கு எதுவும் சொல்லலையே.." என்றாள் குழப்பமாக.

தனது சட்டையை விலக்கி தோள் பகுதியை காட்டினார் அவர்.

"அந்த கிறுக்குபையன் என்கிட்டயே எதுவும் சொல்லல புள்ளை.. பார்த்தும் பார்க்காததுமா வெட்டிப்புட்டான். இனி மானம் மரியாதை இருக்கும் வரைக்கும் அவன் வீட்டு வாசற்படியில் கூட காலை வைக்க மாட்டேன் நான்.!" என்றார்.

யசோதாவுக்கு கணவனை கண்டு பரிதாபமாக இருந்தது. இந்த வயது வெட்டு குத்து வாங்க வேண்டிய வயதா என்று இரக்கப்பட்டாள். ஆனாலும் அண்ணணுக்கு இவ்வளவு முன்கோபம் ஆகாது என்று எண்ணினாள்.

"நீங்க போங்க.. நான் எங்க அண்ணன்கிட்ட சொல்லி அவனையே கொண்டு வந்து விட சொல்றேன்!" என்றாள்‌.

இடம் வலமாக தலையசைத்தவர் "நீ வராம நான் போக மாட்டேன்.. எத்தனை நாள் ஆனாலும் சரி இந்த மரத்தை விட்டு கீழே இறங்கவும் மாட்டேன்.!" என்றார்.

யசோதா என்னவோ சொல்ல வாயெடுத்த நேரத்தில் அந்த வீட்டின் காம்பவுண்ட் கேட்டை திறந்துக் கொண்டு உள்ளே வந்தார் யசோதாவின் அண்ணன்.

வந்தவரின் கண்களுக்கு தோட்டத்தில் நின்றிருந்த தங்கைதான் முதலில் தெரிந்தாள்‌.

"என்னம்மா ஆச்சி.? அந்த தெருபொறுக்கியை நினைச்சி அழுதுட்டு இருக்கியா.?" எனக் கேட்டவரை கலவரமாக பார்த்தார் ரவீந்தர். மச்சானின் கையில் இருந்த கடப்பாரை கலவரத்தை சற்று அதிகப்படுத்தியது.

'தெரியாம மரத்துல ஏறிட்டேன்.! இவன் பார்த்தான்னா ஒரேடியா என்னை பொதைச்சிட்டுதானே மறுவேலை பார்ப்பான்.. நான் தெரு பொறுக்கியாம்.. விட்டா அவங்க தங்கச்சிக்கு இன்னொரு கல்யாணமும் கூட பண்ணி வைப்பான்.!' என்று கடுப்போடு நினைத்தார்.

"நான் வீட்டுக்கு போறேன் அண்ணா.. தமிழும் புவனாவும் நான் இல்லாம கஷ்டப்படுவாங்க.." என யசோதா சொல்லவும் "ஓ.. அவங்க கஷ்டப்படுவாங்கன்னா அந்த தெரு பொறுக்கி அவன் வப்பாட்டியை கூட்டி வந்து வீட்டுல வச்சிக்கட்டும். யார் வேணாங்கறது.?" என்றுத் திருப்பிக் கேட்டார் யசோதாவின் அண்ணன்.

'அண்ணனும் தங்கச்சியும் ஒரே வாய்க்கால் வழி ஓடின தண்ணிங்கதான் போல..' என நெற்றியில் அடித்துக் கொண்டார் ரவீந்தர்.

வெகுநேரமாக மரத்தின் கிளையை கட்டிப் பிடித்துக் கொண்டிருந்ததன் காரணமாக தோள்பட்டை வலிக்க ஆரம்பித்து விட்டது. ஆனாலும் மனைவி இல்லாமல் வீட்டிற்கு திரும்ப அவருக்கு மனம் வரவில்லை. இத்தனை வருடங்களாக எவ்வளவோ அனுசரித்து போன மனைவிக்காக வெறும் ஒருநாள் காத்திருப்பது தவறாக படவில்லை.

'வயசுல எல்லாம் ஒன்னும் மண்ணுமா இருந்துட்டா இந்த வயசான காலத்துல மாமியார் வீட்டுக்கு வந்து கெஞ்ச வைக்கிறாளே இந்த கடன்காரி.!' என்று மனதுக்குள் மனைவியை திட்டாமலும் இருக்க முடியவில்லை.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN