மணாளனின் மனம் 45

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
யசோதா நன்றாக யோசித்துப் பார்த்தாள்.

"அந்த ஆளுக்கு பயந்து வீட்டை விட்டு நான் வந்திருக்கவே கூடாதுண்ணா.. அது என் வீடு.." என்று அண்ணனிடம் சொன்னாள் யசோதா.

"நான்‌ வேணா போய் அவனை அந்த வீட்டை விட்டு துரத்திட்டு வரட்டா.?" என்றுக் கேட்டார் அவளின் அண்ணன்.

"இவன் எனக்கு குழி தோண்டணும்ங்கற ஒரே எண்ணத்துல இருப்பான் போல.." என்று ரவீந்தர் தனக்குள் புலம்பினார். அதே நேரத்தில் அவரின் காலில் ஊர்ந்த எறும்பு ஒன்று நறுக்கென்று அவரை கடித்தது.

"அம்மா.." என கத்தியவரை நிமிர்ந்துப் பார்த்தார் யசோதாவின் அண்ணன்.

"நீ.. நீ இங்கே என்ன பண்ற.?" எனக் கேட்டவரை எரிச்சலோடு பார்த்த ரவீந்தர் "என் பொண்டாட்டியை என்னோடு கூட்டிப் போக வந்தேன்.." என்றார்.

"அடிச்சி வீட்டை விட்டு துரத்தும்போது இவ உன் பொண்டாட்டின்னு தெரியலையா.?" என்றுக் கேட்டார் அவர்.

"அடிச்சி துரத்தினேனா.?" என்று அதிர்ந்தவர் "உன் வீட்டுல பொண்ணு எடுத்ததுக்கு இன்னும் எவ்வளவு பழியை போடுவிங்களோ.?" என்றுப் புலம்பினார்.

யசோதா கணவனை ஓரக்கண்ணால் பார்த்தாள்.

"என்னய்யா பொண்ணு வளர்த்தி விட்டிருக்கிங்க.? சண்டை வந்ததும் தாலியை கழட்டி வீசுறா.. நம்ம கலாச்சாரம் என்ன, நம்ம பண்பாடு என்ன.? இவளை பார்த்து மருமக புள்ளையும் சேர்த்து கெட்டு போயிடும் போல.! இவ தாலியை கழட்டி வீசவும் எனக்கு தோள்ல வெட்டு விழுந்துடுச்சி.." என்றவரை முறைத்தார் யசோதாவின் சகோதரர்.

"அதான் தாலியை கழட்டி வீசிட்ட இல்ல.? நான் இவனை கொன்னுடட்டா.? ரொம்ப வாயடிக்கிறான்.!" என்றார் அவர்.

"அச்சோ வேணாம்ண்ணா.!" என்ற தங்கையை சில நொடிகள் யோசனையோடு பார்த்தவர் மாமனின் பக்கம் திரும்பினார்.

"அது சரி.. அங்கே ஏன் மரத்து மேல ஏறி நின்னுட்டு இருக்கிங்க.? நேரா வீட்டுக்கு வர வேண்டியதுதானே.?" என்றுக் கேட்டார்.

"வீட்டு கேட் பூட்டி இருந்துச்சி.. அதான்.!" என்ற ரவீந்தர் பற்களை கடித்தபடி மரத்தை விட்டு கீழே இறங்கினார்.

அவர் சுற்றிக் கொண்டு கேட் பக்கம் வந்தபோது மச்சான் கேட்டின் அருகிலேயே நின்றிருந்தார்.

'இவன் வீட்டுல தெரியாம ஒரு பொண்ணு எடுத்துட்டேன்.. பொண்டாட்டி கட்டியதுக்கு ரோசத்தையெல்லாம் தூர எறிஞ்சிட்டு மறுபடியும் இவன் வீட்டுக்குள்ள போக வேண்டியதா இருக்கே.!' என நினைத்தபடி உள்ளே நடந்தார்.

"அன்னைக்கு மண்வெட்டி தெரியாம பறந்து வந்து விழுந்துடுச்சி மாப்பிள்ளை.. அதையெல்லாம் மனசுல வச்சிக்காதிங்க.! அக்கா தங்கச்சியோடு பிறந்தவங்களுக்குதான் என் வலியெல்லாம் புரியும்.!" என்றார் அவர்.

ரவீந்தருக்கு முகத்தில் அடித்தார் போல இருந்தது. பல வருடங்களுக்கு முன்பு இதே இடத்தில் யசோதாவை பெண் கேட்டு வந்து நின்ற நாள் நினைவிற்கு வந்தது.

'நீங்க உங்க வீட்டுக்கு ஒரே பையன்.! என் மக கொஞ்சம் செல்லமா வளர்ந்த புள்ளை.. அதோட தேவையெல்லாம் உங்களால புரிஞ்சிக்க முடியாது.. நீங்க வேற எங்கேயாவது பொண்ணு தேடிக்கங்க..' என்று மாமனார் சொல்லியதும் அதற்கு 'இல்ல மாமா.. அக்கா தங்கச்சி இல்லன்னாலும் என்னால யசோதாவை புரிஞ்சிக்க முடியும்.. அவளுக்கு இந்த வீட்டுல இருந்த செல்வாக்கு எந்த விதத்திலும் குறையாம பார்த்துப்பேன்.. அவ மனசு வாட விட மாட்டேன்.! ஏதாவது தப்பு பண்ணா கூட நல்ல முறையா சொல்லி தந்து அனுசரணையா இருந்துப்பேன் மாமா.. என்னை நம்பி கட்டிக் கொடுங்க..' என்று தான் கேட்டதும் அவருக்கு நினைவிற்கு வந்தது.

அவர் வாக்கு தந்த மாமனார் சில வருடங்கள் முடிந்ததும் இறந்து போனார். ஆனால் தன் வாக்கும் கூட மறைந்துப் போனதா என்று நினைத்துப் பார்த்து மனம் வாடினார்.

"ஏதோ கோபத்துல மண்வெட்டியை வீசிட்டேன்.! எவ்வளவு கோபமா இருந்தாலும் அதை என்கிட்ட காட்டுங்க.. என் தங்கச்சியை எதுவும் சொல்லாதிங்க.‌. அவ ரொம்ப அப்பாவி புள்ளை.!" என்ற மச்சானிடம் சரியென தலையசைத்தார் ரவீந்தர். தன் மகளை ஒருவன் தொல்லை செய்தான் என்ற விசயம் அறிந்ததும் அவனை கொல்ல ஆள் அனுப்பியவர்தானே இவரும்.? அதனால்தான் மச்சானின் நிலை புரிந்ததோ என்னவோ.?

மாமியார் கோழி குழம்பு உண்ணாமல் போக கூடாது என்று சொல்லி அவசரமாக விருந்து தயாரித்து மருமகனுக்கு பரிமாறினாள்.

யசோதா தான் கொண்டு வந்த பையோடு திரும்பினாள்.

"உங்களுக்காக ஒன்னும் நான் வரல.. என் புள்ளைங்களுக்காகதான் வரேன்.!" என்றாள் முகத்தை கோணித்தபடி.

"என்ன காரணமா இருந்தா என்ன? நீ வந்தாலே போதும்.!" என்று முனகினார் அவர்.

புவனா தன் இடதுக் கையில் ஈரத்தை உணர்ந்தாள். கணவனின் முகம் பார்த்தாள். அவன் தன் பார்வையால் மருத்துவரை பின்தொடர்ந்துக் கொண்டிருந்தான். அவனின் முகம் பதட்டத்தில் இருந்தது. அவனின் இரு உள்ளங்கைகளும் வியர்வையில் ஊறிக் கொண்டிருந்தது. அதனால் அவன் கரங்களின் இடையே இருந்த புவனாவின் கரமும் ஈரமாகிக் கொண்டிருந்தது.

ஸ்கேன் செய்யப்பட்டும் அறையில் இருந்த படுக்கையில் படுத்திருந்தவள் தன் அருகே அமர்ந்திருந்த கணவனிடம் "மாமா கொஞ்சம் பக்கத்துல வாங்களேன்.!" என்றாள்.

முத்தமிழ் அவசரமாக அவளருகே வந்தான்.

"என்ன புவனா.? உனக்கு பயமா இருக்கா.? நாம இங்கிருந்துப் போயிடலாமா.?" என்றுக் கேட்டான்.

அவனின் காதோரத்தில் "தூ.." என்று எச்சிற் இல்லாமல் வெறுமனே துப்பியவளை குழப்பமாக பார்த்தான் அவன்.

"பீலிங்க்ஸை வெளியவே காட்ட கூடாதுன்னு சொன்ன ரோபோட்தானே நீங்க.? அப்புறம் ஏன் சாதாரண ஸ்கேனுக்கு இப்படி வேர்த்து ஊத்திட்டு உட்கார்ந்திருக்கிங்க.?" என்றுச் சிறு குரலில் கேட்டாள்.

"நான் எங்கே வேர்த்துப் போய் இருக்கேன்.?" என்றுக் கேட்டவனை விசித்திரமாக பார்த்தவள் "உங்களை போல பிறவியை எல்லாம் நான் இப்பவேதான் பார்க்கறேன்.!" என்றாள்.

ஏதோ வேலையாக இருந்த மருத்துவர் ரேகா இவர்களின் அருகே வந்தார்.

"ஹாய்.. நாம ஸ்கேனை ஆரம்பிச்சிடலாமா.?" எனக் கேட்டவர் தனது இருக்கையில் அமர்ந்தார்.

"இந்த இரண்டு வாரத்துல நிறைய முறை மயக்கம் போட்டு விழுந்துட்டா டாக்டர்.. வாமிட்டா எடுத்துட்டு இருக்கா.. ஹாஸ்பிட்டலுக்கு நானாதான் இன்னைக்கு இழுத்துட்டு வந்தேன். எப்படியாவது இந்த வாமிட், மயக்கத்தையெல்லாம் சரி பண்ணிடுங்க.!" என்றவனை புன்னகையோடு பார்த்த ரேகா "டேப்ளட்ஸ் தரேன் சார்.. ஆனா அது எல்லோருக்கும் நூறு சதவீதம் வேலை செய்யாது.. நல்லா ரெஸ்ட் கொடுங்க.. கொஞ்சம் அனுசரணையா பார்த்துக்கங்க.. ஹார்மோன் சேன்ஞ்சஸால அடிக்கடி கோபம், அழுகையெல்லாம் வரும்.. அப்போதெல்லாம் அட்ஜஸ்ட் பண்ணிக்கங்க.!" என்றார்.

"கோபமும், அழுகையுமா?" குழம்பினான் முத்தமிழ்.

மானிட்டரை பார்த்துக் கொண்டிருந்த ரேகா தன் கையிலிருந்த கருவியை புவனாவின் வயிற்றில் தேய்த்தார்.

"கூசுது மாமா.!" கணவனுக்கு மட்டும் கேட்கும்படி சொன்னவளிடம் "ஸ்ஸ்.." என்றவன் மானிட்டரை ஆர்வத்தோடு பார்த்தான். எதுவுமே புலப்படவில்லை. ஆனாலும் பார்த்துக் கொண்டிருந்தான்.

"ம்ம்.. டபுள் கன்கிராட்ஸ்‌‌.." என்றாள் ரேகா இருவரையும் திரும்பிப் பார்த்து.

இருவரும் மொத்தமாக புன்னகைத்தனர்.

"நீங்க டிவின் பேபிஸ்க்கு பேரண்ட்ஸாக போறிங்க.." ரேகா சொன்னது கேட்டு இருவரும் அதிர்ந்து விட்டனர்.

"டிவின்ஸ்.!?" இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். பலவித உணர்ச்சிகள் இருவரின் மனதிலும் உதித்தது.

"ஹார்மோன் சேன்ஞ்சஸும் நார்மலை விட கொஞ்சம் அதிகமா இருக்கும்.. சோ இரண்டு பேரும் கவனமா இருந்தா நல்லது.! எண்ணங்கள் அதிகம் உண்டாகலாம்.. அந்த எண்ணங்கள் அத்தனையும் நல்ல எண்ணங்கள்ன்னு நம்மால உறுதியா சொல்ல முடியாது.. அதனால மைன்ட் ரிலாக்ஸ்க்கு நல்ல மியூசிக் கேட்டுக்கிட்டு நல்ல கதை புத்தகங்கள் படிங்க.. ஆரோக்கியமான உணவுகளை மட்டும் சாப்பிடுங்க.!" என்றார்.

புவனாவிற்கு தேவையான மருந்து மாத்திரைகளை தந்தவர் அடுத்து எந்த நாளில் செக்கப்க்கு வர வேண்டும் என்றும் சொல்லி அனுப்பினார்.

முத்தமிழ் யோசனையோடே காரை ஓட்டினான்.

"புவனா.. ரொம்ப நேர்மையா ஒரு பதில் தரியா.?" வெகு நேரத்திற்கு பிறகு கேட்டான்.

"என்ன மாமா.?" என்றவளிடம் "இந்த தற்கொலை எண்ணங்கள் நிஜமாவே உன்னை விட்டு போயிடுச்சா.?" என்றுக் கேட்டான்.

புவனா அதிர்ச்சியோடு அவனைப் பார்த்தாள். "ஏ.. ஏன் மாமா இப்படி கேட்கறிங்க.?"

"உண்மையா சொல்லணும்ன்னா எனக்கு பயமா இருக்கு புவனா.. சண்டை வராத வாழ்க்கையெல்லாம் யாருக்குமே கிடையாது. நீ ஏதாவது கோபத்துல எதையாவது பண்ணிக்கிட்டா அப்புறம் நான் இரண்டு குழந்தைகளையோடு அனாதையா நிற்பேன்.! இது ஒன்னும் விளையாட்டு கிடையாது.!" என்றான்.

"நான்தான் மங்கைக்கிட்ட கோர்ஸ் முடிச்சேனே மாமா.!"

இடம் வலமாக தலையசைத்தவன் "எத்தனை கவுன்சிலிங் போனாலும் சரி.. அவங்கவங்க மனசு ஸ்ட்ராங்கா இருந்தா மட்டும்தான் தற்கொலை பண்ணிக்காம இருக்க முடியும்.!" என்றான் கவலையோடு.

"வாழ்க்கையில் நாம கேட்டது கண்டிப்பா கிடைச்சே ஆகணும்ன்னு பிடிவாதம் பிடிச்சி தற்கொலை பண்ணிக்கிறது நம்ம வாழ்க்கைக்கு நாம செய்ற துரோகம் புவனா.. நீ பிச்சைக்காரியா இருந்தாலும், பெரும் வியாதிக்காரியா இருந்தாலும், கொலைக்காரியா இருந்தாலும் உன் லைஃப் உன்னோடதேதான்.! உன் அனுபவத்தை யாரும் திருட முடியாது.. இந்த லைஃப்ல நமக்கு எவ்வளவு நட்டம் வந்தாலும் நமக்கு கிடைக்கற அனுபவம் மட்டும்தான் நம்மோட லாப கணக்கே.! யார் வேணாலும் எந்த லைப்பை வேணாலும் வாழலாம்.. ஆனா நாம கத்துக்கிட்ட அனுபவித்தை வேற யாராலும் கத்துக்க முடியாது.!

ஒரு புத்தகத்தை இரண்டு பேர் படிக்கிறது கிடையாதுன்னு ஒரு சொல்லாடல் இருக்கு. அதுக்கு அர்த்தம் ஒரு புத்தகத்தை பார்க்கும் ஒவ்வொருத்தரோட கண்ணோட்டமும் வெவ்வேற.. அது போலதான் வாழ்க்கையும். ஒரே மாதிரியான வாழ்க்கையை இரண்டு பேர் வாழ்வது கிடையாது.. இது உன் லைஃப். உன் லைப்க்கு நீதான் முழு பொறுப்பு. உன் கையில் தரப்படும் ஒரு பூச்செடியை பாதுகாக்க எத்தனை டைம் ஸ்பென்ட் பண்ணுவ.! ஆனா அது போல உன் லைப்பை பாதுகாக்க நீ முயற்சி பண்றியான்னு எனக்கு தெரியல. இந்த வாழ்க்கை எவ்வளவு மோசமான இருந்தாலும் அதை வெறுக்க கூடாது நாம. ஏனா இது நமக்கான கிஃப்ட். நமக்கு மட்டுமேயான கிஃப்ட். இதை நமக்கு பிடிச்ச மாதிரி செதுக்க வேண்டிய அத்தனை மன தைரியத்தையும் ஆண்டவன் நமக்கு தந்திருக்கான். இந்த உலகத்துல உள்ள அழகான இடங்களை சுத்தி பார்க்க தொடங்கினா நமக்கு ஐம்பது நூறு மனித ஆயுசு பத்தாது. இதான் உண்மை.! உன்னை நினைச்சி உண்மையிலேயே எனக்கு பயமா இருக்கு.!" என்றான்.

புவனா சாலையை பார்த்தாள். அவன் சொன்னதன் அர்த்தம் தெளிவாகதான் அவளுக்கும் புரிந்து இருந்தது.

"நமக்கு பிடிச்சவங்களுக்கு நம் மேல் விருப்பம் இல்லங்கறபோது வரும் வேதனையில் எடுத்த முடிவு மாமா அது.! ஆனா அந்த பிடிச்சவங்களோட மனசு ஒருநாள் மாறும், அவங்களும் நாம அவங்களை விரும்புவதை விட நூறு இருநூறு மடங்காக நம்மை விரும்பும் ஒருநாள் வரும்ன்னு அப்ப எனக்கு தெரியல மாமா.. இல்லன்னா 'இப்படி ஒரு நாள் வரும், போன உயிர் திரும்பி வராது'ன்னு அப்பவே புரிஞ்சிருக்கும்.!" என்றாள்.

முத்தமிழ் காரை நிறுத்தினான். அவள் புறம் திருப்பினான்.

"நீ ஏன் புரிஞ்சிக்கவே மாட்டேங்கிற புவனா.? இங்கே நீ உன்னைதான் ரொம்ப விரும்பணும்.. அதுக்கடுத்துதான் அடுத்த மனுசரை விரும்பணும்.! உன்னை நீ விரும்புற மாதிரி இந்த உலகத்துல வேற யாராலும் உன்னை விரும்பவே முடியாதுன்னு உனக்கு நீயே ப்ரூவ் பண்ணனும்.! இன்னைக்கு மனுசன் நாளைக்கு கிடையாது. ஆனா நீ இருக்கும் வரை நீ உன் மீது வச்ச நேசம் இருக்கும்.! இங்கே நான் உன்னை வெறுத்தாலும் நீ எப்பவும் உன்னை வெறுக்கவே கூடாது.! எந்தவொரு மோசமான சூழ்நிலை வந்தாலும் அங்கே உன்னை காப்பாத்த நான் வருவேன்னு எதிர்பார்க்கறதை விட அட்லீஸ்ட் நான் வரும் வரைக்காவது நீ உன்னை காப்பாத்திக்கற அளவுக்கு இருக்கணும்.!" என்றான்.

புவனா அவனை அணைத்துக் கொண்டாள்.

"லவ் யூ மாமா.! உங்களை லவ் பண்ற அளவுக்கு நான் என்னை லவ் பண்ணது கிடையாது.! ஆனா இனி உங்களுக்காக நான் என்னை லவ் பண்றேன்.!" என்றாள்.

முத்தமிழ் ஆச்சரியமாக அவளைப் பார்த்தான்.

"சொன்னவுடனே கேட்டுக்கிட்டியே.!" அவனுக்கே அவளை நம்ப முடியவில்லை.

"புத்தி கொஞ்சம் கொஞ்சமா தெளிஞ்சிட்டு வருது மாமா.! அதனாலதான் டக்குன்னு புரிஞ்சிக்கிறேன்.!" என்றாள்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN