மௌனம் 21

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
பத்து இடத்திலும் வெடிகுண்டுகள் வெடித்திருந்தன.

நாடே பரபரப்பாக இருந்தது. குண்டுவெடிப்பில் ஆயிரகணக்கானவர்கள் இறந்ததாக செய்தியில் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

ஆனால் நடந்ததோ வேறு.

குண்டு வெடிக்கும் முன்பே பத்து இடங்களையும் கண்டறிந்து விட்டார்கள். அந்த வெடிகுண்டுகளை செயலிழக்கவும் செய்து விட்டனர். ஆனால் இடத்தை கூட மாற்றாமல் அந்தந்த இடத்திலேயே வீரியம் குறைவான வெடிகுண்டுகளை இவர்களே வெடிக்க செய்தனர். ஆயிரக்கணக்கானவர்கள் யாரும் இறக்கவில்லை. ஒரு உயிர் கூட இந்த வெடிகுண்டுகளின் காரணமாக இறக்கவில்லை. ஆனால் தங்சேயாவிற்கு அவனது திட்டம் சரியாக சென்றுக் கொண்டிருக்கிறது என்று நம்பிக்கை தர வேண்டிய கட்டாயம் இவர்களுக்கு.

ரூபி மருத்துவமனையில் இருந்தாள். அவளின் அருகே பைத்தியம் போல அமர்ந்திருந்தான் நவீன். ரதிக்குதான் நவீனின் இந்த சோகம் கண்டு ஆச்சரியமாக இருந்தது‌.‌ அவளால் அவனை நம்பவே முடியவில்லை. ரூபியின் கழுத்தை நெரிக்கும்போது இந்த பாசம் எங்கே சென்றது என்பதுதான் அவளின் கேள்வியாக இருந்தது.

விஷாலுக்கும் கூட என்னவோ போல இருந்தது. தீவிரவாதிகள் என்று பெயர் தந்து விடுவது சுலபம் என்றாலும் அந்த பெயரை அடைய இவர்களுக்கு எவ்வளவு கொடுமைகள் நடக்கிறது என்று புரிந்து தனக்குள் உருகினான்.

ஏதோ ஒரு பெண் என்று அவனால் நினைக்க முடியவில்லை. அவளின் இடத்தில் தன் தங்கையோ, தனது அக்காவோ தொலைந்திருந்தாலும் இதே போலதான் அவர்களின் நிலையும் இருந்திருக்கும் என்பதை அவனால் புரிந்துக் கொள்ள முடிந்தது.

சிறு பிஞ்சுகளிடம் பயத்தை காட்டி, மூளையை சலவை செய்து, இந்த உலகத்தின் மீது வெறுப்பை உண்டாக்கிய தங்சேயாவை அடியோடு வெறுத்தான் விஷால்.

அவனை போன்றோரை அழிக்கும் வரை இந்த உலகம் உருப்படாது என்று எண்ணினான்.

தங்சேயாவை தேடும் பணி தீவிரமாக்கப்பட்டது. ஆனால் ரகசியமாகதான் இருந்தது.

ரூபி கண் விழித்ததும் அவளிடம் விஷால் கேட்ட முதல் கேள்வியே "தங்சேயா எங்கே.?" என்பதுதான்.

காய்ச்சலில் முகம் வாடி, தொண்டை வறண்டுப் போய் இருந்தவள் "தாகமா இருக்கு.." என்றாள் சிறு குரலில்.

நவீன் ஓடி வந்து அவளை எழுப்பி அமர வைத்தான். அவளை நெஞ்சில் சாய்த்துக் கொண்டு தண்ணீரை தந்தான்.

ரூபி போதுமென்று தலையசைத்ததும் விஷால் அவளைக் கேள்வியாக பார்த்தான்.

"எங்கே போனார்ன்னு தெரியல சார்.. ஆனா உங்களுக்கும் இந்த நாட்டுக்கும் நான் நல்ல பாடம் கத்துத் தரப் போறேன்னு சொன்னாரு.!" என்றாள் தன் கைகளை பார்த்தபடி. வெள்ளை துணியால் கட்டுப் போடப்பட்டு இருந்த கைகளின் வலியை அவளால் உணர முடிந்தது‌.

விஷால் தன் முகத்தைத் தேய்த்துக் கொண்டான்.

"அவன் எப்படி உன்னை கூட்டிப் போனான்.?" என்றுக் கேட்டான்.

"கடத்திட்டு போனார் சார்.." சிறு குரலில் சொன்னவளிடம் தலையசைத்தான்.

"வீட்டுல நான் தனியா இருந்தேன். வாசல்ல கார் ஒன்னு வந்து நின்ன சத்தம் கேட்டது. நவீன் பாஸ் வர டைம் இல்ல. அதனாலதான் யாரோன்னு ஜன்னல் வழியா பார்த்தேன். நாலஞ்சி பேர் இறங்கினாங்க.. எனக்கு என்னவோ தப்பா பட்டது. நான் சொல்வதை உங்களால நம்ப முடியாம கூட போகலாம்.. ஆனா என்னோட இத்தனை வருச பயிற்சியிலும் பயத்திலும் எனக்கு சொல்லி தரப்பட்டது ஒன்னுதான், என்ன ஆனாலும் என் குழுவில் உள்ளவங்களை நான் காயப்படுத்த கூடாது. இது ஒரு மிரட்டல் மாதிரி. பயமுறுத்தல் மாதிரி என் நெஞ்சில் விதைக்கப்பட்ட விஷம். அதனால்தான் அவங்களை பார்த்ததும் அவங்ககிட்ட இருந்து தப்பிக்கிறது மட்டுமே எனக்கு பிரதானமா இருந்தது.." என்றவளை அதிர்ச்சியோடு பார்த்தான் விஷால். ஏன் அவர்களை திருப்பி தாக்கவில்லை என்ற கேள்வியை தான் கேட்கும் முன்பே பதில் தந்தவளை வியப்போடு நோக்கினான்.

தங்சேயா ஏதோ ஒரு விதத்தில் இவர்களை மனித எந்திரங்களாக மாற்ற முயன்றிருக்கான் என்று புரிந்தது அவனுக்கு. அதனால்தான் குழந்தைகளை தேர்ந்தெடுத்து பயிற்சி தந்திருக்கிறான் அவன் என்றும் விஷாலுக்கு புரிந்தது.

"அவங்க எங்க குழுவை சார்ந்தவங்களா இருக்கலாம்ங்கற பயத்துலதான் நான் நவீன் பாஸ்க்கு போன் பண்ணேன். ஆனா அவர் எடுக்கல. அதுக்குள்ள ஒருத்தர் வீட்டுக்குள்ள வந்துட்டார். அவர் என் பேர் சொல்லி கூப்பிட்ட பிறகுதான் அது தங்சேயான்னே எனக்கு புரிஞ்சது.." என்றவளின் உடல் தானாக நடுங்கியது. அவளின் உடல் நடுக்கத்தை சுற்றி இருந்த அனைவராலும் பார்க்க முடிந்தது.

இயல்பிலேயே பயத்தில் ஊறியவள் அவள் என்பது விஷாலுக்கு குற்ற உணர்வை தந்தது.

"அது தங்சேயான்னு தெரிஞ்சதும் என் ரூம்க்குள்ள போய் கதவை சாத்திக்கிட்டேன். நவீன் பாஸ்க்கு போன் போட்டு சலிச்சிட்டேன். அதுக்கப்புறம்தான் உங்க ஞாபகம் வந்தது.!" என்று விஷாலை பார்த்தாள்.

"ஏதாவது பிரச்சனைன்னா போன் பண்ண சொன்னிங்க, அந்த நம்பிக்கையில்தான் உங்களுக்கு கூப்பிட்டேன். உங்களோடு பேசும்போது டவர் கிடைக்கல. ஆனா அதுக்குள்ள தங்சேயா என் ரூம் கதவை எப்படியோ திறந்துட்டாரு. என்னையும் அவரோடு இழுத்துட்டு போயிட்டாரு.." என்றவளின் தலையை வருடித் தந்தான் நவீன்.

"சாரி.." என்றான்.

"நான்தான் ஸ்டெல்லாவை கொன்னுட்டேன்னு சொல்லி என் கையிலும் காலிலும் கத்தியால் வெட்டிடார் பாஸ்.. ஆனா நான் சத்தியமா ஸ்டெல்லாவை கொல்லல.!" என்ற ரூபியின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.

விஷால் அவசரமாக தனது கர்ச்சீப்பை எடுத்து நீட்டினான்.

"நான் சொன்னதை அவர் நம்பவே இல்ல.. உனக்கு மட்டும்தான் ஸ்டெல்லாவோட இடம் தெரியும்ன்னு சொல்லி கை கால்ல வெட்டிட்டாரு.!" என்றாள் விம்மலாக.

"சாரி.. ரியலி சாரி.." ரதி திடீரென மன்னிப்பு கேட்கவும் சுற்றி இருந்த அனைவரும் குழப்பத்தோடு அவளைப் பார்த்தனர்.

"உனக்கு இப்படி தண்டனை தருவாங்கன்னு தெரியாது.. நான்.. நான்தான்.. அந்த ஸ்டெல்லாவை சூட் பண்ணேன்.!" கையை விரித்துச் சொன்ன தோழியை தன் பக்கம் திருப்பினாள் லாவண்யா.

"ஆனா நீ ஏன் இதை என்கிட்ட கூட சொல்லல.?" என்றுக் கோபமாக கேட்டாள்.

"ஏன் சொல்லணும்.? நம்ம நாட்டுல தீவிரவாதிங்க இருக்காங்க.. நீங்க எல்லோரும் மத்த நாட்டுக்கிட்ட கலந்துப் பேசிட்டு இருக்கவும், தீவிரவாதிகளை காயம்படாம பிடிக்கவும் நேரம் பார்த்துட்டு இருக்கிங்க.. நான் ஏன் அவனை உயிரோடு விடணும்.? எனக்கு எந்த ஆபிசர்கிட்டயும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது. பல நாடுகளில் தேடப்படும் ஒரு தீவிரவாதியை கொல்ல மக்கள் சார்ப்பா எனக்கு உரிமை இருக்கு.!" என்றாள்.

நவீன் அவளை முறைத்தான்.

"உன்னால சும்மாவே இருக்க முடியாதா.? எங்க தங்சேயா பத்தி உனக்கு தெரியாது.. அவரோட ஆளுங்க மேல யாராவது கை வச்சாங்கன்னு தெரிஞ்சா அவங்களை அழிச்சிட்டுதான் அடுத்த வேலை பார்ப்பாரு.. ஏற்கனவே நீயும் நானும் சேர்ந்து பழகறோன்னு நம்பிதான் அன்னைக்கு உன்னை கார் பார்க்கிங்ல சுட வந்தாங்க.!" என்றான்.

ரதி அதிர்ச்சியோடு அவனை வெறித்தாள்‌.

"அன்னைக்கு கொல்ல வந்தது என்னையா.?" என்றுக் கேட்டாள்.

ஆமென தலையசைத்தான் நவீன்.

தலையை பிடித்தாள் ரதி. அன்று மாலையில் அவன் சாரி கேட்டதன் பொருள் இன்றுதான் அவளுக்குப் புரிந்தது.

"ஆனா உனக்கு எப்படி ஸ்டெல்லா இருந்த இடம் தெரியும்.?" லாவண்யா தனது சந்தேகத்தை கேட்டாள்.

"அன்னைக்கு இவன் என்னை வீட்டை விட்டு துரத்திட்டான். என் ஹேன்ட் பேக்கை அவங்க வீட்டுலயே விட்டுட்டு வந்துட்டேன்னு கொஞ்ச தூரம் வந்த பிறகுதான் ஞாபகம் வந்தது‌ திரும்பி போனேன். இந்த லூசு பையன் அவளோட கழுத்தை நெரிச்சிட்டு இருந்தான். அவளை காப்பாத்ததான் நினைச்சேன். ஆனா அவ ஸ்டெல்லாவோட அட்ரஸ் சொல்லவும் இவன் மேல இருந்த கடுப்பு அவன் மேல திரும்பிடுச்சி. அதனாலதான் நானே போய் அவனை சுட்டு தள்ளிட்டேன்.!" என்றாள்.

"தோசை சுடுற மாதிரியே சொல்லுறப்பா.." கிண்டலாக சொன்ன தோழியை கேலியாக பார்த்த ரதி "எனக்கு தோசை சுடதான் வராது.." என்றாள்.

"ஆக மொத்தத்துல உன் அவசர புத்தியால ரூபிக்கு இப்படி ஒரு நிலை.." குற்றம் சாட்டிய நவீனை எரிச்சலோடு பார்த்தாள் ரதி.

"இப்படி நடக்கும்ன்னு எனக்கு மட்டும் என்ன சாமியா வந்து சொல்லிச்சி.? ஏதோ கோபத்துல அவனை போட போய் இதுல இவ மாட்டிக்கிட்டா.." என்றவள் லாவண்யாவின் புறம் திருப்பினாள்.

"நான் கொஞ்சம் கடுப்புல இருக்கேன் லா.. இங்கிருந்து போறேன்.. தயவுசெஞ்சி அந்த தங்சேயாவை சட்டுன்னு கண்டுபிடிச்சி கொன்னுடுங்க.. இல்லன்னா நான் ஏதாவது கோளாறு பண்ணிடுவேன்.!" என்றுவிட்டு வெளியே நடந்தாள்.

விஷால் தனசேகருக்கு போன் செய்து விசயத்தை சொன்னான்.

"நாம இந்த விசயங்களை தள்ளிப் போட போட இந்த மாதிரிதான் நடக்கும் விஷால்.. நம்ம மக்கள் சும்மாவே ரோசக்காரங்க.. இவன்தான் தவறானவன்னு சொல்லிட்டோம்ன்னா அவங்களே களத்துல இறங்கிடுவாங்க.. துரோகிகள் இருக்கும் அதே அளவுக்கு ரோசக்காரர்களை வச்சிருக்கோம் நாம.. சீக்கிரம் தங்சேயாவை கொன்னே ஆகணும்.!" என்றான் அவன்.

"எங்கே போய் தொலைஞ்சான்னு தெரியலையே சார்.." என புலம்பிய விஷாலிடம் "இந்த நாட்டுல இருந்து அவன் வெளியே போக போறதும் இல்ல.. அதிலேயும் உயிரோடு போறது கனவுல கூட கிடையாது.. நம்பிக்கையோடு தேடுவோம்.. அவனோட போட்டோ நம்ம டிபார்ட்மெண்டை சேர்ந்த பலரிடமும் இருக்கு‌. அவன் எங்கே என்ன பர்ஜேஸ் பண்ணாலும் நமக்கு தகவல் வந்து சேர்ந்துடும். விரைவில் அவனை பத்திய தகவல் கிடைக்கும்ன்னு நம்புவோம்.." என்று சொல்லி விட்டுப் போனை வைத்தான் தனசேகர்.

விஷால் ரூபியின் பக்கம் பார்த்தான்.

"நமக்கு வேலை இருக்கு லா.. உன் பிரெண்ட்க்கு போன் பண்ணி இவங்களை பார்த்துக்க சொல்லு.! நம்மை பொறுத்தவரை இவங்க குற்றாவாளிகள். தங்சேயாவை பொறுத்தவரை துரோகிகள். நாம இரண்டுக்குமே இவங்களுக்கு பாதுகாப்பு தந்துதான் ஆகணும்.!" என்றான்.

லாவண்யா புரிந்துக் கொண்டவளாக தலையசைத்தாள். ரதிக்கு போன் செய்து விவரத்தை சொல்லி வர சொன்னாள்.

ஐந்தாம் நிமிடத்தில் அந்த அறையின் வாசலில் வந்து நின்றாள் ரதி‌.

"ஓகே.. நீங்க போகலாம்.!" என்றாள்.

"சிஸ்டர்.. உங்க உணர்ச்சிகளை நானும் புரிஞ்சிக்கிறேன். அதுக்காக இவங்க இரண்டு பேரையும் போட்டு ஏதும் தள்ளிடாதிங்க.. நமக்கு நிறைய தகவல்கள் வர வேண்டி இருக்கு.. இவங்க நம்மோட விட்னெஸ்.." என்றான் விஷால்.

ரதி சரியென்று தலையசைத்தாள்.

அவர்கள் இருவரும் அங்கிருந்துச் சென்றதும் ரூபியின் அருகே வந்தவள் "ஏதாவது ஹெல்ப் வேணுமா.?" என்றுக் கேட்டாள்.

ரூபி வேண்டாமென தலையசைத்ததும் ஒரு ஓரமாக சென்று அமர்ந்துக் கொண்டாள்.

தங்சேயா அந்த கடற்கரை ஓரத்தில் இருந்த மற்றொரு பங்களாவில் இருந்தார். தன் முன் நுரையோடுப் பொங்கிக் கொண்டிருந்த கடலை வெறித்தார்.

அந்த கடலைப் போலதான் அவரின் உள்ளமும் பொங்கிக் கொண்டிருந்தது.

"இந்த சுயநல உலகத்துல பசி சாவை தடுக்கணும்ன்னு நான் பாடுபட்டா என்னோடு கூடவே இருப்பவங்களே எனக்கு எதிரா திரும்புறாங்க.!" என்று வருத்தமாக சொன்னார்.

"இந்த நாட்டை மட்டுமில்ல இந்த உலகத்தையே சுடுகாடா மாத்தணும். அப்பதான் எனக்கு திருப்தி.!" என்றார்.

தனது போனை எடுத்தவர் இந்த நாட்டில் தனக்கு உதவியாக உள்ள அனைவரையும் அவசரமாக தன்னை பார்க்க வர சொன்னாரு.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN