முன்னுரை

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member


ஆதி எப்போதும் போலதான் அன்றைய நாளின் நல்விடிவை அன்போடு வரவேற்றிருந்தாள். ஆனால் அந்த நாளின் முடிவில் தன் வாழ்வின் முடிவும் எழுதப்பட்டிருப்பதை அவள் அறியவேயில்லை.

அந்த நந்தவனத்திலிருந்த மென்மையான பூக்கள் அனைத்தும் சற்று முன்தான் அழித்தொழிக்க பட்டிருந்தன.

ஆதி அந்த அழிந்த நந்தவனத்தின் நடுவே கண்ணீரோடு அமர்ந்திருந்தாள். அவளை தன் நீண்டிருந்த வாளின் முனையில் கட்டுப்படுத்தி வைத்திருந்தான் கவி.

அவளுக்கு இந்த தண்டனையை தேர்ந்தெடுத்ததே தான்தான் என அறிந்திருந்தவனால் அவளது கண்ணீர் முகம் அவனது நெஞ்சில் நெருப்பை வாரி ஏன் இறைத்தது என்றுதான் அறியமுடியவில்லை.

அவள் தன் முன்னிருந்த கவியை சோகமாக பார்த்தாள். கவி அவளது சோக முகம் தன்னை என்னவோ செய்வதை உணர்ந்து தனது வாளை அவளது முகத்திற்கு அருகே கொண்டு போனான். அவனது கத்தியிலிருந்து வெளி வந்த சிவப்பு கதிர்கள் அவளது முகத்தை சுட்டதில் அக்கதிர்கள் பட்ட இடமெங்கும் வெந்து போயின. ஆதி வலி பொறுக்காமல் பெருங்குரலெடுத்து கதறினாள்.

"அவளை கொன்று விடுங்கள் ஏந்தலே.." என கத்தியது அவனருகே இருந்த வீரர் கூட்டம். அவர்களை திரும்பி பார்த்து முறைத்தான் கவி. அந்த கூட்டம் தங்களது வாயை சட்டென மூடிக் கொண்டது.

கதறலோடு அந்த கூட்டத்தை பார்த்தாள் ஆதி. ஆனால் சற்று நேரத்திலேயே காயத்தால் வெந்த அவளது முகம் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்பியது. சுற்றியிருந்த வீரர் கூட்டம் ஆச்சரியத்தில் தங்களுக்குள் பேசிக்கொண்டது. அவர்களை கண்டு சந்தேகத்தோடு திரும்பி ஆதியை பார்த்தான் கவி.

அவள் முகம் அவனது கண் முன்னரே முழுமையாக குணமடைந்தது. அவன் சந்தேகத்தோடு தனது நீண்டிருக்கும் கத்தியை பார்த்தான்.

'இது எப்படி சாத்தியம்..? எனது ஏந்தலின் வாள். இந்த வாளால் அடிப்பட்டவர்கள் குணமடைந்ததாக எந்த சரித்திரமும் இல்லையே..' அவன் தன் சந்தேகம் தீர்க்க முடிவு செய்து தனது வாளை அருகிருந்த ஒரு வீரனின் பக்கம் காட்டினான். அந்த கத்தியின் கதிர் வீச்சு பட்டதும் அந்த வீரன் அங்கேயே துடிதுடித்து விழுந்தான்.

"ஆ..." ஆதி தன் முன் நடந்த உயிர் வதையை கண்டு அலறினாள். அவளது அலறல் கவிக்கு எரிச்சலை தந்தது. "உனது வாயை சற்று நேரம் மூடுகிறாயா..? எதற்காக இப்படி கத்தி தொலைகிறாய்..? உன்னால் எனக்கு காது வலி வந்துவிடும் போல..." என்றான்.

"என்னை விட்டு விடுங்கள் ஏந்தலே.. நான் எந்த தவறும் இழைக்காத அன்பின் தேவதை.." அவனிடம் தன் கை கூப்பி வேண்டினாள் அவள்.

அவளது கண்ணீர் அவனின் இதயத்திற்கு வலி தந்ததாலேயே கவிக்கு அவள் மீது அதிக கோபம் வந்தது.

"நீ அன்பின் தேவதை என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது.. உனது அன்பின் தேவ இனம்தான் எங்களின் சத்திய தேவ இனத்தில் இருந்த இரு வீரர்களை கொன்றுள்ளார்கள்.." என்றான் கோபத்தோடு.

ஆதி தன்னை சுற்றி இருந்த இடத்தை பார்த்தாள். அவளின் மொத்த இனமும் அழிந்து போய் விட்டதை நினைத்தவளால் கண்ணீர் மட்டுமே சிந்த முடிந்தது. "இரு உயிர்களுக்காக எங்களின் மொத்த இனத்தையும் அழித்து விட்டீரே ஏந்தலே.. இதுவா உங்களின் நியாயம்.?" என்றாள் கண்ணீரோடு.

"இரண்டு உயிருக்கே ஓர் இனத்தை அழித்தால்தான் எங்களின் இனம் மீது அனைவருக்கும் பயம் வரும். நாளை வரும் நாளில் எங்கள் இனத்தாரை யாரும் குறைவாக எடை போட்டு விட கூடாது பெண்ணே.." என்றவன் அவளின் கையை பற்றி மேலே எழுப்பினான்.

ஆதி பயந்தபடியே எழுந்து நின்றாள்.

"உனக்கு நான் தர போகும் தண்டனை கண்டு பிறிதொரு நாளில் யாரும் எங்களின் சத்திய தேவ இனத்தை நெருங்க கூட கூடாது தேவ பெண்ணே.." என்றான்.

கவியின் கோபத்திற்கு தன் மொத்த இனத்தையும் பறி கொடுத்தவள் ஆதி. அந்த தேவ உலகில் கடைசியாக மிஞ்சியிருந்த ஒரே ஒரு அன்பின் தேவதை அவள் மட்டுமே!

சத்திய தேவ இனத்தை சார்ந்த கவிக்கு இந்த அன்பின் தேவ இனம் கண்டு ஏன் கோபம்.?

அன்பின் தேவதையான ஆதியின் வாழ்வில் இனி என்ன நடக்கும்.?

கோபத்தை மட்டுமே அறிந்த கவி ஆதிக்கு மட்டுமே சொந்தமான அன்பை உணர்வானா.?

ஆதி+ கவியின் காதல்.. இது எப்படி சாத்தியமாகும்.?

இருவேறு உணர்வுகள் ஒன்று சேர்க்கையில் என்ன நடக்கும்.?

இது எனது அடுத்த பேன்டஸி ஸ்டோரி நட்புக்களே.. இரு தேவ இனத்தின் இடையில் ஏற்பட்ட போரில் அப்பாவியான அன்பின் தேவ இனம் அழிந்ததை பற்றிய கதை.

இது முழுக்க முழுக்க எனது கற்பனை மட்டுமே.!

விரைவில் முதல் அத்தியாயத்தோடு வருகிறேன் நட்புக்களே..
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN