மௌனம் 26

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
குமரனின் முன்னால் நின்றிருந்தார்கள் அவரின் சக நண்பர்கள்.

"இந்த நாட்டுல என்னதான் நடக்குது குமரன்.? நாம குற்றவாளிகளை தேடி பிடிச்சி கொல்லும் முன்னாடி அவங்க செத்துப் போய் கிடக்கறாங்க.. நமக்கு முன்னாடி யாருக்கு விசயம் போகுது.? யார் இதையெல்லாம் செய்றது.?" எனக் கேட்டார் ஓர் அதிகாரி.

"சார் எனக்கு மட்டும் எப்படி தெரியும்.? எல்லாமே மர்மமா இருக்கு. கொன்னவங்க யாருன்னு யாராலும் கண்டுபிடிக்க முடியல. ஒத்தை ஆதாரம் கூட கிடைக்கல.! செய்றது எத்தனை பேர் கொண்ட கூட்டம்ன்னு கூட தெரியல!" என்று சோக கதை வாசித்தார் அவர்.

"சீக்கிரம் அவங்களை கண்டுபிடிச்சி அரெஸ்ட் பண்ணனும் குமரன். இந்த நாட்டோட சட்ட ஒழுங்கு குலையுறதுல எனக்கோ நம்ம தலைவருக்கோ துளியும் விருப்பம் இல்ல!" என்ற அவர் அங்கிருந்து சென்றார்.

அவர்கள் பேசிக் கொண்டிருந்ததை தங்களின் திரையில் பார்த்துக் கொண்டிருந்தார்கள் இரு இளைஞர்கள்.

"நாடு இருநூறு வருசம் முன்னாடி இருந்த மாதிரியே இன்னமும் இருக்குன்னு நினைக்கிறாங்க போல!" என்றான் அவனது தாய் மொழியில்.

அருகில் அமர்ந்திருந்தவன் தலையசைத்தபடி சிரித்தான்.

"அப்பதான் படிப்பு இல்ல. உலக அறிவு இல்ல.. ஆனா இப்பவும் அதே போலன்னு நினைப்பு போல! நம்ம காலகட்டத்துல அந்த வெள்ளைகாரங்க இருந்திருந்தா வெறும் மூணே மாசத்துல எல்லோரையும் ஒழிச்சி கட்டியிருப்போம்!" என்றான் அவன்.

"இந்த காலத்து இளைஞர்கள் எல்லாருமே சின்ன வயசுல கண்ட கனவுதானே இது!?" கேட்டு சிரித்தான் அருகில் இருந்தவன்.

"என் நாட்டுக்கு நான் செய்ற பணி இது! சட்ட ஒழுங்கு கெட்டுப் போகாம இருக்கதான் இந்த பணியே! அதையும் மீறி இந்த போலிஸெல்லாம் நம்மை கண்டுபிடிச்சா அதை அப்ப பார்த்துக்கலாம்.!" என்றவர்கள் தங்களின் அடுத்த வேலைகளை பார்க்க ஆரம்பித்தார்கள்.

"இது யார் சார் புதுசா?" குமரனின் கீழ் வேலை செய்யும் ஒருவர் கேட்டார்.

"யாரா இருந்தா என்ன? நமக்கு உதவி செய்றாங்க! அது போதாதா? இதே நாட்டுல பல போக்கத்தவனுங்க தீவிரவாதிக்கு நாட்டை காட்டிக் கொடுக்கறானுங்க! அப்படி இருக்கையில இப்படி கொஞ்சம் பேர் கூடவா செயல்படாம இருப்பாங்க? இங்கே துரோகிகள் இருக்கிறதை விட ஆயிரம் மடங்கு வீரர்கள் உண்டு. ஆனா எல்லோரும் ஓரிடத்துல கூடதான் கொஞ்சம் டைம் எடுக்கும்!" என்றார் குமரன்.

தங்சேயா தன் முன் நின்றிருந்த முரளிதரனை ஏறிட்டுப் பார்த்தார்.

"படகு வந்துடுமா?" என்றார்.

தன் கை கடிகாரத்தை பார்த்த முரளி "இன்னும் பத்து நிமிசம் சார்!" என்றான்.

தங்சேயா எப்போதுமே இரு யோசனைகளோடு இருப்பவர். இது இல்லாவிட்டால் அது என்று திட்டங்களை வைத்திருப்பவர்.

இந்திய நாட்டை அழித்து விடலாம் என்று வந்தவர் இப்படி சுற்றி வளைக்கப்படுவோம் என்பதை நினைக்கவே இல்லை. சென்ற முறை புவின் சுலபமாக தப்பியதாலா இல்லை இந்த நாட்டில் தனக்கு உதவும் மங்குனி மடையர்கள் மீது கொண்ட நம்பிக்கையாலா என்றுத் தெரியவில்லை. ஆனால் தங்சேயா இங்கே வந்து விட்டார். வந்தவருக்கு விரைவிலேயே தான் அகப்பட்டுக் கொண்டது புரிந்துப் போனது.

ஸ்டெலாஸ்டியன் சாகும் முன்பே அங்கிருந்து கிளம்பி விட்டார் இவர்‌. இவர் இந்த நாட்டுக்குள் காலடி எடுத்து வைத்ததும் கிடைத்த முதல் செய்தியே ஸ்டெலாஸ்டியனின் இறப்புதான். உடல் வேண்டுமானால் கிடைக்காமல் போகலாம். ஆனால் அவன் இறந்தான் என்பதை அவனின் வீட்டில் வேலை செய்துக் கொண்டிருந்த ஒரு கிழவன் வந்து தங்சேயாவின் கையாளிடம் சொல்லி விட்டான். அவன் சொன்ன அடையாளபடி ஸ்டெல்லாவை கொன்றது ரூபி என்பது தங்சேயாவின் கணக்கு. அவ்வளவு சுலபத்தில் இறப்பவன் இல்லை ஸ்டெல்லா. அவனையே சாய்த்த வீரம் கண்டிப்பாக தனது வளர்ப்பில் உருவான ரூபியாகதான் இருக்கும் என்று எண்ணி விட்டார்.

ஸ்டெலாஸ்டியனை ரூபி கொன்றது ஒன்றும் அவ்வளவு சாதாரண விசயம் கிடையாது. அவளுக்கு பின்னால் இங்கே வேறு யாரோ இருக்கிறார்கள் என்பது அவரின் எண்ணம். ஆனால் அது நிச்சயம் புவினாக இருக்காது என்றும் நம்பினார். ஏனெனில் தான் அழிந்தாலும் கூட அவன் ரூபியை இது போன்ற பிரச்சனையில் சிக்க வைத்து தன்னிடம் சாக அனுப்புவான் என்று நம்பவில்லை அவர்.

எது என்னவோ! ஸ்டெலாஸ்டியனின் சாவு இவரை அசைத்துப் பார்த்து விட்டது. இந்த நாட்டிற்குள் தான் வந்தது தவறோ என்று நினைத்தார். ரூபிக்கு தண்டனை தர கடத்தியவர் அவளை பின்தொடர்ந்து போலிஸ் வருமென்று நினைக்கவேயில்லை. தன் குழுவில் உள்ள யார் வேணாலும் போலிஸின் துப்பாக்கிக்கு பலியாகலாம். ஆனால் தனது நிழலை கூட எந்த நாட்டு காவல் துறையும் கை தொட கூடாது என்ற தீவிரத்தில் இருந்தவர் அவர். ஆனால் தான் தங்கியிருந்த இடத்திற்கே போலிஸ் வந்து விடவும் மிகவும் குழம்பி விட்டார். அவருக்கு உதவ ஆயிரம் பேர் இருந்தார்கள். அப்படி இருக்கையில் தன்னை போலிஸ் நெருங்குவது எந்த விதத்தில் சாத்தியம் என்று நினைத்து விட்டார்.

அவர் வைத்த குண்டுகளும் தோற்றுதான் போயின. முதலில் வெடித்த பத்து குண்டுகளும் கூட அவர் எதிர்பார்த்த சேதாரத்தை விளைவிக்கவில்லை என்ற விசயம் அவரின் காதுகளுக்கு எட்டி விட்டது. அதுவே அவரை பொறுத்தவரை பெரும் தோல்விதான்.

ஏதோ ஒரு தவறு நடக்கிறது என்பதை புரிந்துக் கொண்டார். இங்கிருந்து தப்பிக்க வேண்டிய அவசியம் உள்ளதையும் அவரின் உள்ளுணர்வு அறிந்து விட்டது. ஆனால் போகும் முன் இந்த நாட்டை அழித்து விட வேண்டும் என்றுதான் அந்த நூறு வெடிகுண்டுகளை தயார் செய்தார். ஆனால் அதையும் நவீன் சொதப்பி விட்டான்.

"நிஜமாவே இந்த சில மணி நேரத்துல ஒரு இடத்துல கூட பாம் வெடிக்கலையா?" கடைசி சந்தேகமாக கேட்டார்.

"இல்ல சார்.." என்றான் ஒருவன்.

"அந்த நாயை டார்ச்சர் பண்ணி சாகடிக்கணும்!" விஷால் பற்களை அரைத்தபடி சொன்னான்.

"யெஸ்!" என்ற தனசேகர் தனது துப்பாக்கியை எடுத்தார்.

"தங்சேயாவுக்கு நாம தனியா ஒரு சிலை வைக்கணும்!" என்றான் யாரையோ குறி பார்த்தபடி.

"ஏன் சார்?" நவீன் குழப்பமாக கேட்டான்.

"இவனாலதான் இத்தனை துரோகிகள் வெளி வந்திருக்காங்க.. இவங்க எல்லோரும் ஏதோ ஒரு விதத்துல கரையான்கள். இவங்களை விட்டா நாட்டையே அழிச்சிடுவாங்க.!" என்றவன் தங்சேயாவை ஒட்டி நின்றிருந்த ஒருத்தனை சுட்டான். சுட்டுவிட்டு சட்டென்று மரத்தின் பின்னால் நகர்ந்து நின்றுக் கொண்டான்.

"என்னாச்சி?" தங்சேயாவை சுற்றி இருந்தவர்கள் அதிர்ச்சியோடு சுற்றும் முற்றும் பார்த்தார்கள்.

"போலிஸ்.." என்றான் ஒருவன் சந்தேக குரலில்.

தங்சேயாவை அங்கிருந்த ஒரு காரில் ஏற்றினான் ஒருவன்.

"இங்கிருந்து கிளம்பலாம்!" என்றபடி பரபரப்பாக கிளம்பினார்கள் அனைவரும்.

ஆனால் அதற்குள் தங்சேயா இருந்த காரின் மீது வந்து விழுந்தது ஒரு பாம். விழுந்த அடுத்த நொடியில் படாரென்று கார் வெடித்தது. அந்த இடமே கருகிப் போய் விட்டது எனலாம்.

தனசேகர் குழப்பத்தோடு தன்னை சுற்றி இருந்தவர்களை பார்த்தான்.

"இது யார் வேலை?" என்றான்.

"யாருக்குத் தெரியும்?" என்று கையை விரித்த விஷால் அந்த வெடிகுண்டு வந்து விழுந்த திசையை நோக்கினான்.

யாரோ இரு இளைஞர்கள் அங்கிருந்து பைக்கில் வேகமாக புறப்பட்டு சென்றார்கள்.

"அவங்கதான் சார்!" என்று கையை நீட்டினான் விஷால்.

"அவங்களை பிடிங்க!" என்று தனசேகர் சொன்ன நேரத்தில் "சார் நோ!" என்றாள் லாவண்யா அவசரமாக.

"இவ்வளவு நேரம் பிரேம்லயே வராம இருந்துட்டு இப்ப வந்து என்ன சொல்ற நீ?" புரியாமல் கேட்டான் தனசேகர்.

"அவ.. அவங்க இரண்டு பேரும் ரதியோட பிரெண்ட்ஸ் சார்!" திருட்டு விழி விழித்தபடி சொன்னாள் அவள்.

"ரதி?" விஷாலை குழப்பத்தோடு பார்த்தான் தனசேகர்.

"சார் அவ என் பிரெண்ட்.. அவதான் நவீனுக்கும் ரதிக்கும் பாடிகார்டா இருந்தவ.. அவளோட பிரெண்ட்ஸ்தான் இவங்க. மறைமுக இளைஞர் குழு சார் அவங்களோடது. ரதி என்கிட்ட சொல்லி இருக்கா.. அவங்கதான் இந்த வேலையை பண்ணி இருக்காங்க.. ஏன்னுதான் தெரியல!" தலையை சொறிந்தபடியே சொன்னாள்.

"அட போயா! போன முறை துரோகிங்க ஜெயிச்சாங்க.. இந்த முறை நாட்டு பற்றாளர்கள் ஜெயிச்சாங்க.. கடமையே கண்ணா இருக்கும் நம்மளை பெர்பாமன்ஸ் பண்ணவே விட மாட்டேங்கிறாங்களே!" சலிப்போடு சொன்னான்‌ தனசேகர்.

"சாரி சார்!" என்ற லாவண்யாவிடம் கையை அசைத்தான்.

தனசேகர் சோகமாக மரத்தின் மீது சாய்ந்து நின்றுக் கொண்டிருந்தான். நடந்ததை அவனால் சுலபமாக கணக்கிட முடிந்தது. அதற்காக அந்த இளைஞர் குழுவை பற்றி மேலிடத்தில் போட்டு தர விருப்பம் இல்லை. பல ஆயிரம் துரோகிகள் வாழும் நாட்டில் இந்த இளம் புயல்கள் இருப்பது அவனுக்கு சிறு நிம்மதியை தந்தது. போன முறை அனைவருமே ஏமாந்துப் போயினர். ஆனால் இந்த முறை ஒவ்வொருவரும் போராட்டத்தில் நுழைந்து விட்டனர் என்று விசயம் அவனுக்கு மகிழ்ச்சியை தந்தது.

அவன் தனது நினைவில் இருந்த நேரத்தில் சொகுசு படகு ஒன்று அந்த கடற்கரையோரத்தில் வந்து நின்றது.

"இது வேறா? அந்த படகை அழிக்கிற அளவுக்கு ஏதாவது இருக்கா நம்மக்கிட்ட?" தனசேகர் தனது சக பணியாளர்களைப் பார்த்துக் கேட்டான். ஆனால் அதற்குள் எங்கிருந்தோ வந்து அந்த சொகுசு படகின் மீது விழுந்தது ஒரு ராக்கெட். ஒரே நொடியில் அந்த படகும் சாம்பலாகி தண்ணீரோடு கலந்துப் போனது.

"இவங்க என்ன இப்படி இருக்காங்க? இந்த ஆயுதங்கள் இவங்களுக்கு ஏது?"

"தெரியலையே சார்!" என்ற விஷால் லாவண்யாவின் புறம் திரும்பினான்.

"சார் எனக்கு எதுவும் தெரியாது. அவங்க இரண்டு பேரையும் ரதியோடு சேர்த்து இரண்டு மூணு முறை பார்த்திருக்கேன். அவ்வளவுதான். மத்தபடி இந்த கூட்டத்துக்கும் எனக்கும் நடுவுல எந்த சம்பந்தமும் இல்ல!" என்றாள் கையை விரித்தபடி.

தனசேகரின் போன் ஒலித்தது. அறியாத நம்பரை கண்டுவிட்டு ஸ்பீக்கரில் போட்டான்.

"ஹலோ சேகர் சார்!" என்றது எதிர் குரல்.

யாரென்று சொல்லும் முன்பே அது யாரென்று அவர்களால் யூகிக்க முடிந்தது.

"ஆயுதங்களை எங்களாலும் தயார் பண்ண முடியும் சார்.. எங்கக்கிட்ட எல்லா ரக விஞ்ஞானியும் உண்டு. எல்லா வித தொழில் பணியாளர்களும் உண்டு. எங்களுக்கு நிறைய அசால்ட் உண்டு. அதனால்தான் இந்த நாடு இப்படியே இருக்கு. இந்த முறை இவனுங்க வந்தாங்க. நாங்க பாவம் பார்த்து அவங்களை மட்டும் போட்டு தள்ளினோம். ஆனா இன்னொரு முறை எந்த நாயாவது நாட்டை அழிக்க வந்ததுன்னா அவனோடு சேர்த்து அவனை நாட்டுக்குள்ள விட்ட எல்லோரையும் போட்டு தள்ளுவோம்! இது வார்னிங். உங்களுக்கு பழி போட்டு தூக்குல போட ஆள் வேணும்ன்னா சொல்லுங்க.. ஒரு இரண்டு பேர் வந்து சரணையிடுறோம்!" என்றவன் தொடர்பை துண்டித்துக் கொண்டான்.

"விட்டா இவனுங்க தனி படை அமைச்சாலும் அமைச்சிடுவாங்க!" என்றான் தனசேகர் கவலையோடு.

"ஆனா அவங்க செஞ்சதும் சரிதானே சார்? இந்த நாட்டை நாம காப்பாத்துறோம்ங்கற நம்பிக்கையில்தான் அவங்க ஜாலியா விளையாடிட்டு இருக்காங்க. ஆனா அவங்களுக்கு நாம சரியான பாதுகாப்பு கூட கொடுக்கலங்கற ஒரு சமயம் வரும்போது அவங்க இப்படி எதையாவது செஞ்சிதானே ஆகணும்? அவங்க இப்படி பண்ண காரணம் அவங்க பெற்றோர், உடன்பிறந்தோர், நண்பர்களுக்கெல்லாம் பாதுகாப்பு வேணும்ன்னுதானே?" லாவண்யா கேட்டது கண்டு சிரித்தான் தனசேகர்.

"இளைஞர் படையில் நீயும் இருப்ப போல!?" கேலியாக கேட்டான்.

அந்த பள்ளத்தில் எரிந்துக் கொண்டிருந்த பெரும் நெருப்பை பார்த்தவள் "இல்ல சார்! ஆனா இதுக்கு மேலயும் இணைய வேண்டிய அவசியம் கிடையாது. நான் என் பணியை பொறுப்பா செய்றேன். எனக்கு அதுவே திருப்தி!" என்றாள்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN