கனவே 2

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
மீரா அவசர அவசரமாக கல்லூரிக்கு தயாராகிக் கொண்டிருந்தாள்.

"மகி இன்னைக்கு என்ன டிரெஸ் போட்டிருப்பான்.? எந்த டிரெஸ்ஸா இருந்தாலும் அவன் அழகாதான் இருப்பான்!" என்றவள் கண்ணாடியில் தன் முகம் பார்த்தாள்.

"நீதான் கொஞ்சம் அழகு கம்மியா இருக்க மீரா! நீ என்ன செஞ்சாலும் அவன் அழகுக்கு ஈக்வெல் ஆகவே முடியாது!" சோகத்தோடு சொல்லியபடி பெருமூச்சி விட்டாள்.

"நீ பேரழகு மீரா!" அக்காள் கணவனின் குரல் கேட்டு திரும்பினாள். அவளது அறையின் வாசற்படியில் சாய்ந்து நின்றுக் கொண்டிருந்தான் கதிர்.

"உங்களுக்கு தைரியம் இருந்தா அதை எங்க அக்கா முன்னாடி சொல்லுங்க! நான் நம்புறேன்!" என்றாள் குறும்பாக பார்த்தபடி.

கதிர் கையெடுத்துக் கும்பிட்டான்.

"உன் அக்கா எனக்கு ஆறடியில் குழி தோண்டிடுவா!" என்றான் பொய் பயத்தோடு.

"அவ அப்படி செஞ்சா கண்டிப்பா நானும் வந்து அவளுக்கு உதவிதான் செய்வேன்!" என்றான் அங்கே வந்த செழியன். அவனைப் பொறுத்தவரை கேலி கிண்டலுக்கு கூட மைவிழியின் கர்வம் தீர கூடாது.‌

"மீரா.. என் கண்ணு கோளாறு ஆகிட்டு இருக்குன்னு நினைக்கிறேன்! ஏனா நான் எங்கே பார்த்தாலும் நீயும் உன் லவ்வரும்தான் கண்ணுக்கு தெரியுறிங்க! நேத்து என் லவ்வரோடு பார்க் போனேன். அங்கே நீயும் அவனும் உட்கார்ந்து பேசிட்டு இருந்திங்க. சரின்னு அங்கிருந்து கிளம்பினா சிக்னல்ல நானும் அவளும் பைக்கை நிறுத்திய போது எங்க பக்கத்து பஸ்ல இருக்கிங்க!" என்றான் தலையை ஆட்டியபடி.

அவன் கேலி செய்கிறான் என்பது அவளுக்கு நன்றாக புரிந்துப் போனது.

"மாமா.. நீங்க சொன்னது சரிதான். உங்க கண்ணுக்கு கோளாறுதான். சீக்கிரம் டாக்டரை பார்த்துடுங்க.!" என்றவள் கல்லூரி பேக்கை எடுத்தே தோளில் மாட்டிக் கொண்டு வெளியே நடந்தாள்.

செழியனும் கதிரும் அவளின் முதுகை வெறித்தனர்.

"நீங்க வேணா பாருங்க.. ஒருநாள் இல்ல ஒருநாள் லவ்வுல நான் இவளை ஓவர்டேக் பண்ண போறேன்!" என்றான் செழியன்.

கதிர் அவனின் தோளில் கை வைத்தான்.

"நம்ம லவ் எந்த விதத்திலும் குறைஞ்சது இல்ல செழியா! இவளோடது மெச்சூர் இல்லாத லவ்! ஸ்கூல்ல இருந்து லவ் பண்றேன்னு சொல்றா! இவ லவ்வை கண்டா எனக்கு சில சமயத்துல இது சரியில்லாத காதலோன்னு தோணுது!"

செழியன் கதிரின் வாயை பொத்தினான். "இது மட்டும் அவ காதுல விழுந்ததுன்னா உங்க கூட நின்ன பாவத்துக்கு எனக்கும் சேர்த்து விஷம் வச்சிடுவா! உங்க கொழுந்தியா ரொம்ப உக்கிரம் சில விசயத்துல!" என்றான்.

அவர்கள் இருவரும் பேசிக் கொண்டே கூடத்திற்கு வந்தபோது மீரா உணவை முடித்துக் கொண்டு வாசலை நோக்கி துள்ளியோடிக் கொண்டிருந்தாள்.

"இவளை போல ஒரு பட்டாம்பூச்சியை நான் எங்கேயும் பார்த்ததே இல்ல!" தன் அம்மாவிடம் சொல்லிக் கொண்டிருந்தான் சரண். அவனுக்கு தன் சின்ன தங்கையின் மீது பெரும் பாசம். அவள் செய்வது அத்தனையையும் அவன் ரசிப்பான். அவளின் காதலுக்கு அந்த வீட்டில் அதிக ஆதரவு தருபவன் அவன்தான்.

"அண்ணா டாடா.. கதிர் மாமா, செழியன் மாமா டாட்டா!" வாசலில் நின்று கையசைத்து விட்டு ஓடினாள் மீரா.

என்னதான் சொன்னாலும் கூட அவள் ஒரு துள்ளித் திரியும் புள்ளிமான் என்பதை யாராலும் மறுக்க முடியாது. அவள் எப்போதும் சந்தோசமாக இருப்பாள். எப்போதும் அவளின் இதழ்களில் புன்னகை விளையாடும்.

பேருந்து வந்து நின்றதும் படிகளில் ஏறிய மீராவின் கண்கள் மகிழனைதான் தேடின. பின்னால் இருந்த இருக்கையில் அமர்ந்திருவன் அவனின் அருகே கை காட்டினான்.

"வாவ்.. செம ஹேண்ட்சம் நீ!" அவனருகே வந்து அமர்ந்ததும் தன் வழக்கமான பல்லவியை ஆரம்பித்தாள் மீரா.

"நீதான் ரொம்ப அழகு!" என்றான் அவன்.

இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டே வந்ததில் கல்லூரி வரவில்லை. மாறாக கண்டக்டர் வந்துச் சேர்ந்தார்.

"டிக்கெட்.. டிக்கெட்.!"

தங்களின் அழகான காதல் தருணத்தை கலைத்து விட்டு விட்டாரே என்று எரிச்சலடைந்த மீரா டிக்கெட்டை வாங்கிக் கொண்டு மீண்டும் தன் காதலன் புறம் திருப்பினாள்‌.

"மத்த எல்லா நாளையும் விட இன்னைக்கு உன் கண்ணு ரொம்ப அழகா இருக்கு!" என்றாள் அவனின் தோளில் சாய்ந்தபடி. அவளிடமிருந்து நகர முயன்றவன் "பஸ்ல எல்லாரும் இருக்காங்க மீரா!" என்றான்.

"நீ ரொமான்டிக்ல ரொம்ப வீக்கு!" என்றவளின் நெற்றியில் சுட்டு விரலை பதித்து அவளை பின்னால் தள்ளியவன் "உன் ரொமான்ஸ்க்கு ஈக்வெல்லா என்னால இருக்க முடியாது தாயே! நீ ஒரு கொரில்லா கொரங்கு! என் பர்ஸ்ட் கிஸ்ஸை ஆட்டைய போட்டதும் இல்லாம கடிச்சி வேற வச்சிட்ட!" என்றான் தன் உதட்டை தொட்டபடி.

மீரா அவனை அலட்சியமாக பார்த்தாள்.

"ஆனா நல்லா இருந்தது இல்ல?"

மகிழன் அவளின் கண்களை பார்க்கவில்லை.

"ஸ்டாப் வந்துடுச்சி வா!" என்றவன் அவளை இழுத்துக் கொண்டு கீழே இறங்கினான்.

இருவரும் கல்லூரிக்குள் நுழைந்தது கண்டு மாணவர்கள் சிலர் தங்களுக்குள் சிரித்து பேசிக் கொண்டனர். இவர்களின் காதல் அங்கிருக்கும் அனைவருக்கும் தெரியும். இவர்கள் இருவருக்குமே நெருங்கிய நட்புக்கள் யாரும் கிடையாது. இவர்கள் இருவருமே இரட்டை பிறவிகள் போல ஒட்டி திரிந்தால் பிறகு எந்த நண்பர்கள்தான் நட்பை பகிர்வார்கள்?

மாலை வேளையில் வழக்கம்போல அவனை வெளியே கடத்திச் சென்று விட்டாள் மீரா.

"எனக்கு சப்ஜெக்ட்ல என்னவோ கிளியர் ஆகாத மாதிரி இருக்கு.. இப்பவாவது அதை புரட்டி பார்க்கறேன்.!" தன் பேக்கை திறக்க முயன்றவனை வெறித்தவள் "வீட்டுக்கு போன பிறகு சும்மாதானே இருக்க? அங்கே படியேன்!" என்று விட்டு அவனின் மடியில் தலை சாய்ந்தாள்.

"உனக்கு பிடிவாதம் அதிகமாகிக்கிட்டே போகுது!"

"நீ ஐ லவ் யூ சொல்லு.. நான் பிடிவாதம் பிடிக்க மாட்டேன்!" என்றவளை கண்டு புன்னகைக்காமல் இருக்க முடியவில்லை அவனால். அவளது நெற்றியில் பறந்துக் கொண்டிருந்த கூந்தலை ஒதுக்கி விட்டான்.

"நீ க்யூட்!"

"நீயும்!" என்றவள் அவனின் சட்டையின் பட்டன்களின் இடைவெளியில் விரல்களை நுழைத்தாள்.

அவள் நெஞ்சை தொட்டதும் அவனுக்கு கூசியது. "பேட் கேர்ள் மாதிரி பிகேவ் பண்ணாத!" என்றான்.

"பட் ஐ வாண்ட் யூ!" சிணுங்கினாள்.

அவனுக்கு குழப்பமாக இருந்தது. முன்பு இந்த அளவிற்கு இவள் அடம் பிடித்ததில்லை. சின்ன சின்ன அணைப்புகள், கோர்த்திருக்கும் கரங்கள், காதல் ததும்பும் புன்னகை பரிமாற்றங்கள். இதை தாண்டி அவள் எதையும் கேட்டதில்லை.

"எனக்குன்னு சில எதிர்பார்ப்புகள் இருக்கு மீரா. உன்னை இந்த பிரபஞ்சம் அளவுக்கு பிடிக்கும். ஆனா என்னோட மனைவி எனக்கு ரொம்ப ஸ்பெஷலா தேவைப்படுறா!"

மீரா திகைத்து எழுந்து அமர்ந்தாள்.

"புரியல.." என்றாள். ஆனால் அவளுக்கு புரிந்ததுதான் இருந்தது.

"சடங்கு சம்பிரதாயம் அதெல்லாம் தாண்டி ஒரு ஸ்பெஷலை நான் எதிர்பார்க்கிறேன்! எத்தனை வருசமா லவ் பண்ணாலும் சரி. நீ எனக்கு மனைவியாகும்போது அந்த உரிமை இதை விட அதிகமா இருக்கும். நான் பழங்காலமாதான் உனக்கு தெரிவேன். ஆனா எனக்கு அப்படிதான் பிடிச்சிருக்கு! என் மனைவியை முதல் முறையா எடுத்துக்கும்போது அவ எனக்கு உரிமைப்பட்டவளா இருக்கணும்ன்னு ஆசைப்படுறேன்.!"

மீரா சிரித்தாள்.

"உன் பொண்டாட்டி உனக்கு பத்தினியா வேணும்ன்னு சொல்ற! அதானே?"

மகிழன் ஒற்றை கண்ணை அடித்து ஆமென தலையசைத்தான்.

"அப்ப வா கல்யாணம் பண்ணிக்கலாம்!" என்றபடி எழுந்து நின்றவளை கண்டு நெற்றியில் அடித்துக் கொண்டவன் "கிறுக்கு!" என்றபடியே அவளை இழுத்து அமர வைத்தான்.

"நாம மெதுவா பண்ணிக்கலாம்!" என்றான்.

"நீ இப்படியே எனக்கு ஒத்து வராமலேயே இரு. நான் உன்னை கடத்திப் போய் உன் கழுத்துல தாலி கட்டிடுறேன்!"

மகிழன் அவளின் முகத்தை பற்றி தன் புறம் திருப்பினான்.

"உனக்கு ஏன் என்னை இவ்வளவு பிடிச்சிருக்கு?" வழக்கமான அதே கேள்வி.

"ஏனா நீ ரொம்ப அழகு!" அவளுடையதும் அதே வழக்கமான பதில்.

"உன்னை சென்டிமீட்டர் சென்டிமீட்டரா கூட வர்ணிக்கலாம். அவ்வளவு அழகா இருக்க.. நீ மட்டும் இல்லாம இருந்திருந்து இங்கே யாராவது ஆண்கள் அழகா இருப்பாங்கன்னு சொல்லியிருந்தா சிரிச்சிருப்பேன்.. ஆனா நீ என்னை தலைகீழா மாத்துற மகி.." என்றவள் அவன் அசந்திருந்த நேரத்தில் அவனின் நெஞ்சில் தலை சாய்ந்துக் கொண்டாள்.

அவளின் மூச்சுக் காற்று அவனின் சட்டையின் நூல் இடைவெளிகளில் உட்புகுந்து அவனின் நெஞ்சின் மீது பரவியது.

"இந்த முறை காலேஜ் லீவ் விட்டா என்னை உன் அம்மா அப்பா வீட்டுக்கு கூட்டிப் போறியா?" என்றுக் கேட்டாள் அவனின் சட்டையில் விளையாடியபடி.

மகிழன் இடம் வலமாக தலையசைத்தான்.

"நானே அங்கே போகல. உனக்கு அங்கே என்ன வேலை?"

"எனக்கு அவங்களை பார்க்கணும்!" சிணுங்கினாள்.

"நான் உன்னை ஏமாத்திடுவேன்னு நினைக்கிறியா?"

"இல்ல.. அவங்களையும் கைக்குள்ள போட்டுக்கிட்டா உன்னை கட்டிக்கிறது ஈஸியா இருக்குமேன்னுதான்!" என்றவளின் நெற்றியில் பதிந்தது அவனின் இதழ்கள்.

"நீ எனக்கு கிடைச்ச கிஃப்ட்!" என்றான்.

"கருமம்.. அவங்களுக்கு சலிக்குமா சலிக்காதா? பார்க்கற நேரத்துல எல்லாம் பார்க்கற இடத்துல எல்லாம் கட்டிபிடிச்சிட்டே உட்கார்ந்திருக்காங்க!" எரிச்சலோடு சொன்னான் வினய். அந்த பார்க்கின் அருகே இருந்த சாலையில் நடந்துக் கொண்டிருந்தான் அவன். அவனுக்கு இவர்கள் இருவரையும் கண்டாலே பிடிப்பதில்லை.

"விடுடா! ஜோடி புறாக்கள் இல்லையா? வேட்டைக்காரங்க கையில் கிடைக்கும்வரை இப்படிதான் சுத்திட்டு இருப்பாங்க!" என்றான் அவனருகே இருந்த சாரதி.

அவர்கள் இருவரும் இந்த ஜோடிகளை வெறித்துப் பார்த்துவிட்டு நகர்ந்த அதே நேரத்தில் அந்த சாலையில் சற்று தள்ளி தன் காரை நிறுத்தியிருந்த வசந்த் தன் மகனை கோபத்தோடு பார்த்தார்.‌ தன் மகன் இப்படி பொதுவெளியில் எவளையோ அணைத்தபடி கிடப்பதும் அவருக்கு பிடிக்கவில்லை. அவனை இப்படி மயக்கி வைத்திருக்கும் அந்த எவளோ ஒருத்தியையும் அவருக்கு பிடிக்கவில்லை.

பல வருடங்களாக தன் குடும்பத்தை பிரிந்து இருக்கிறான் மகிழன். அவனை வீட்டுக்கு திருப்பி அழைத்துக் கொண்டு விட அந்த வீட்டில் இருந்தவர்கள் எவ்வளவோ போராடிக் கொண்டிருந்தார்கள். ஆனால் அவனின் கல்நெஞ்சம் கரைய மறுத்தது.

ஆரவல்லி அவரின் சொந்த தாய்தான். ஆனால் அவளுக்கு தன் மகனோடு இருக்க மனம் வரவில்லை. மகிழனும் பல வருடங்கள் முன்பே தந்தையை விட்டுவிட்டு பாட்டியின் வீட்டுக்கே வந்து விட்டான்.

இன்றும் கூட வசந்த் இங்கே வர காரணம் மகனை தன்னோடு அனுப்பி வைக்க சொல்லி தன் தாயிடம் கேட்கதான். ஆனால் ஆரவல்லி வழக்கம்போல அவனை அனுப்பி முடியாது என்றுச் சொல்லிவிட்டாள். அது மட்டுமில்லாமல் அவனுக்கு இந்த ஊரில் ஒரு காதலி இருக்கிறாள் என்ற விசயத்தையும் போட்டு உடைத்து விட்டாள்.

அதை கேட்டதில் இருந்து வசந்துக்கு கோபம் உச்சத்தில் இருந்தது. தாயை திட்டிவிட்டு வந்தவர் நிஜத்திலேயே தன் மகனின் காதல் காட்சியை பார்ப்போம் என்று நினைக்கவில்லை.

"இந்த சனிக்கிழமை என் அக்கா பொண்ணுக்கு மொட்டை போடுறாங்க..‌ நீ வரியா?" மகிழனிடம் கேட்டாள் மீரா.

மகிழன் யோசித்துவிட்டு சரியென தலையசைத்தான்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN