கனவு 3

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
பேருந்து ஓடிக் கொண்டிருந்தது. மகிழனின் கையோடு தனது வலது கரத்தை கோர்த்திருந்தாள் மீரா. மற்றொரு கரம் பேருந்தின் கம்பியை பிடித்துக் கொண்டிருந்தது.

"இன்னைக்கு நீ கொஞ்சம் ஸ்பெஷல் ப்யூட்டியா இருக்க!" என்றாள்.

மகிழன் அவளின் கண்களை கவனித்தான். இந்த சிறு விழிகள் நேசத்தை இதற்கு மேலும் கூட சுமக்குமா என்று அவனுக்கு கேள்வி எழுந்தது.

"ப்யூட்டியா இருக்க.. அழகா இருக்க.. இப்படியெல்லாம் பசங்ககிட்ட சொல்லவே கூடாது."

"ஆனா அழகா இருந்தா அழகா இருக்கன்னுதானே சொல்ல முடியும்?" என்று விழிகளை சுழற்றினாள்.

"ஆனாலும் நீ பீல் பண்றியேன்னு சொல்றேன். நீ செம ஹேண்ட்சம்! மேன்லி!" என்றாள்.

அவளின் பின்னால் நின்றுக் கொண்டிருந்த ஒரு பையன் இவளின் பேச்சை கேட்டுவிட்டு இந்த பக்கம் நின்றிருந்த மகிழனை மேலும் கீழும் பார்த்தான். அவனின் கண்களில் சிறிது இளக்காரமும் எரிச்சலும் இருந்தது.

'வம்பை இழுத்து விடுறாளே! இப்ப அந்த பையன் 'ஒரு பொண்ணு இவ்வளவு புகழுற அளவுக்கு நீ இருக்கியாடா'ன்னு நினைப்பானே!' என்று கவலையோடு நினைத்தான் மகிழன்.

"மச்சி.. வர வர பொண்ணுங்களுக்கு சுத்தமா டேஸ்டே இல்லாம போயிட்டு இருக்குடா! ஒன்னு பொறுக்கி மாதிரி இருக்கணும். இல்லன்னா அமுல் பேபி மாதிரி இருக்கணும். நார்மலான பசங்களெல்லாம் இவங்க கண்ணுக்கு தெரியறதே இல்ல போல!" என்றான் அந்த பையன் தன் நண்பனிடம்.

மகிழனின் முகம் சட்டென சிவந்து விட்டது. அந்த பையனின் பொறுக்கி என்ற வார்த்தை அவனுக்குள் இருந்த கோபத்தை தூண்டி விட்டு விட்டது. அந்த பையனை அங்கேயே தோலை உரிக்க வேண்டும் போல இருந்தது.

"அவன் கிடக்கறான் விடு. நீ என்னை நம்புவியா இல்ல அவனை நம்புவியா? உனக்கு யார்‌ முக்கியம்?" மீராவின் கேள்வியால் பார்வையை திருப்பிக் கொண்டவன் "உன்னைதான்!" என்றான் சிறுகுரலில்.

மைவிழி கதிரின் குழந்தைக்கு மொட்டையடிப்பு விழா நடந்து முடிந்தது.

ஆனால் அது எதையும் கண்டுக் கொள்ளாமல் மகிழனுக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்தாள் மீரா.

"வேட்டி சட்டையில் கலக்கற மகி!" கொஞ்சல் குரலில் கூறினாள்.

அவன் எந்த உடை அணிந்தாலும் அவளுக்குப் பிடிக்கும். ஒவ்வொரு கோணத்திலும் அவனை ரசிப்பது ஒன்றே தனது வாழ்நாள் லட்சியம் என்று நினைத்திருப்பவள் அவள்.

"நான் ஒரு யோசனை சொல்லட்டா.?" என்றுக் கேட்டாள்.

மகிழன் நிமிர்ந்துப் பார்த்தான். அந்த பந்தியில் அவன் மட்டும்தான் அமர்ந்திருந்தான். அனைவருமே எப்போதோ சாப்பிட்டு விட்டு சென்று விட்டிருந்தனர். இவள் அவனுக்கு பக்கத்தில் இருந்த நாற்காலியில் அமர்ந்தபடி அவனோடு கதை பேசிக் கொண்டிருந்தாள்.

"சொல்லு!"

"ஒரு நாளைக்கு நீயும் நானும் ஹாஸ்பிட்டல் போகலாமா? உன் ப்ளட் முழுசா எனக்கு மாத்தி விட்டுட்டு என் ப்ளட் முழுசா உனக்கு மாத்தி விடணும். செமையா இருக்கும் அப்ப!"

புரையேறிய தலையை தட்டிக் கொண்டான் மகிழன்.

"சைக்கோ கில்லர் மாதிரியே பேசுற!" என்றான் பயத்தோடு.

உதட்டை கோணியவள் "நீ வருவியா மாட்டியா அதை மட்டும் சொல்லு!" என்றாள்.

"நீங்க பயப்படாதிங்க மாமா. இவ சின்ன பொண்ணா இருக்கும்போது கீழே விழுந்திருப்பான்னு நினைக்கிறேன். தலையில் அடிப்பட்டிருக்கும். நாம நல்ல டாக்டர்கிட்ட காட்டலாம். இல்லன்னா பேய் ஓட்டுறவங்ககிட்ட கூட்டிப் போகலாம்!" அவர்களின் பின்னால் வந்து நின்ற பிருந்தன் இதை கூறினான்.

மீரா திரும்பிப் பார்த்து முறைத்தாள். "போடா குட்டிச் சாத்தான்!" என்றாள்.

பிருந்தன் சிரித்தான்‌. "மைவிழி அக்கா கல்யாணம் பண்ண பிறகு புருசனை கொல்லுறா! நீ கல்யாணம் பண்ணும் முன்னாடியே கொன்னுடுவன்னு நினைக்கிறேன்!" நக்கலாக சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.

"அவன் கடக்கறான் விடு.. நீ இன்னும் கொஞ்சம் சாப்பிடு!" என்று உணவை பரிமாறினாள் மீரா.

"இது என்ன வயிறா இல்ல பானையா?" எனக் கேட்டவனின் நெஞ்சை தொட்டவள் "ஸ்ட்ராங் ஆகு!" என்றாள்.

"ஏற்கனவே அப்படிதான் இருக்கேன்!" என்றவன் எழுந்து நின்றான்.

அவன் விசேச வீட்டின் முன்பகுதிக்கு வந்தப்போது மீராவின் தந்தை நாற்காலியில் அமர்ந்திருந்தார்.

மகிழன் தயங்கியபடி சென்று அவர் அருகே அமர்ந்தான்.

"மாமா!" என்றழைத்தான்.

நிமிர்ந்துப் பார்த்தவர் "சாப்பிட்டிங்களா சின்ன மாப்பிள்ளை?" என்றுக் கேட்டார்.

மீரா என்றைக்கு இவனை தன்னவன் என்று கை காட்டினானோ அன்றிலிருந்தே இவனை மாப்பிள்ளை என்று அழைக்க ஆரம்பித்து விட்டார் அவர். அவருக்கு தன் மகளின் பிடிவாதம் பற்றி தெரியும். சுற்றி வளைப்பதை விட நேரடியாக விசயத்தை முடித்து விடலாம் என்று நினைப்பவர் அவர்.

"வயிறு புல்!"

"உங்க பாட்டி நல்லா இருக்காங்களா?"

"நல்லாருக்காங்க மாமா. உங்களை கேட்டதா சொல்ல சொன்னாங்க!" என்றவன் எழுந்து நின்றான்.

"குழந்தை கையில் காசு வச்சி தர சொன்னாங்க. மறந்துட்டேன். நான் போய் மொய் கவரை தந்துட்டு வரேன்!" என்றவன் வீட்டுக்குள் நுழைய இருந்த நேரத்தில் வீட்டுக்குள் இருந்து ஓடி வந்தாள் மீரா.

"மகி.. வா நாம பைக் ரைட் போகலாம்!" என்றவள் அவனின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு நடந்தாள். மகிழன் தன் வருங்கால மாமனாரை திரும்பிப் பார்த்தான். அவர் செழியனோடு என்னவோ பேசிக் கொண்டிருந்தார்.

"இந்த நேரத்துக்கு எதுக்கு ரைட்? பைக் ஏது?" என்றவனின் முன் பைக் சாவியை காட்டியவள் "கதிர் மாமாவோட பைக்.. இரண்டு மணி நேரம் பர்மிசன் தந்திருக்காரு.. அதுக்குள்ள இந்த ஊரை ஒரு சுத்து சுத்திட்டு வந்துடணும்!" என்றாள்.

அடிக்கும் வெயிலை அண்ணாந்து பார்த்தான். இவளிடம் என்ன சொன்னாலும் விட மாட்டாள் என்று அவனுக்கே தெரியும். அதனால் அமைதியாக அவளை பின்தொடர்ந்தான். வரிசையாக நின்றிருந்தது உறவினர்களின் வாகனங்கள். அவற்றைத் தாண்டி கடைசியில் இருந்தது கதிரின் பைக்.

"நாம இந்த ஊரை சுத்த போறோம்‌. நீ என் சொத்துன்னு இந்த ஊருக்கே நான் காட்ட போறேன். எவளுக்கும் நீ இல்ல. இந்த மீராவுக்காக மட்டுமே பிறந்தவன் இந்த மகின்னு எல்லோருக்கும் சொல்ல போறேன்!"

மகிழன் தனக்குள் சிரித்துக் கொண்டான். அவள் பேச பேச கேட்டுக் கொண்டிருந்தால் உணவு தண்ணீர் தேவைப்படாது என்று கூட எண்ணினான். சில நேரங்களில் தன் காதலால் அவள் பயமுறுத்தினாலும் கூட அவளின் எந்த செய்கையையும் அவனால் ரசிக்காமல் இருக்க முடியவில்லை. திகட்ட திகட்ட காதலை ஊட்டிக் கொண்டிருந்தாள்‌. ஆனால் அவனுக்குதான் திகட்டவே இல்லை.

அவள் அருகில் சந்தோசமாக இருந்தான். வாழ்க்கை நேர் கோட்டில் சென்றுக் கொண்டிருந்தது. காரணம் சரிவர தெரியாவிட்டாலும் கூட அவள் அவனை ஒரு மனிதனாக வைத்திருந்தாள். தன் காதலியாய், மனைவியாய், எல்லாமுமாய் மாற அவளுக்கு எல்லாவித தகுதியும் இருக்கிறது என்று புரிந்து வைத்திருந்தான்.

அவன் பைக்கை ஸ்டார்ட் செய்ய இருந்த நேரத்தில் அவர்களின் அருகே வந்து நின்றது அதியனின் கார். அவன் மீராவின் பெரிய மாமன். வாகனத்தில் இருந்து இறங்கியவன் மீராவையும் மகிழனையும் மாறி மாறி பார்த்தான்.

"என்ன மீரா ரொம்ப சந்தோசமா இருக்க போல!?" கிண்டலாக கேட்டவனுக்கு தெரியும் அவளின் முகம் சந்தோசத்தின் காரணம் மகிழன் என்று.

"ரைட் போக போறோம் மாமா!" என்றவள் அவனை அணைத்துக் கொண்டாள்.

"பத்திரம்!" என்றவன் அவளின் முதுகை தட்டி தந்தான். மீரா புன்னகையோடு விலகி நின்றாள். அதியன் வீட்டை நோக்கி நடந்தான்.

மகிழன் பைக்கை இயக்கியதும் ஏறி அமர்ந்தாள் மீரா.

"பாஸ்டா போ மகி!" என்றாள்.

"ம்.!" என்றவன் ஆரம்பிக்கும் போதே முழு வேகத்தோடுதான் கிளம்பினான். வாசலில் நின்று மீராவின் தந்தையோடு பேசிக் கொண்டிருந்த செழியன் மகிழனின் வேகத்தை கண்டு அசந்துப் போனான்.

"ரேஸ் போறாங்களா என்ன?" என்றான்.

"சூப்பரா இருக்கு!" கைகளை விரித்து காற்றோடு கதை பேசிய மீரா "மகி ஐ லவ் யூ!" என்று எதிர் காற்றோடு கத்தினாள்.

மகிழன் பைக்கின் வேகத்தை கூட்டினான். அவனின் கை நரம்புகள் முறுக்கேறிக் கொண்டே இருந்தன.

"செமையோ செம மகி. ஆனாலும் வேகம் குறைச்சிக்கலாம்! ரொம்ப ஸ்பீட் மாதிரி இருக்கு!" என்றவள் அவனின் தோளில் கை பதித்தாள்.

"இன்னும் கொஞ்ச நேரம் மீரா. மைன்ட் டிஸ்டர்பன்ஸா இருக்கு!"

அவனை அணைத்தவள் "என்னாச்சி பாப்பும்மா?" என்றுக் கேட்டாள். அவளின் மூச்சுக்காற்று அவனின் வலது காதை மோதியது. ஆக்ஸிலேட்டரில் இருந்த அவனின் கரம் தானாகவே வலுவிழந்தது.

"எனக்கு கொஞ்சம் பிரச்சனை இருக்கு மீரா!" வாகனத்தின் வேகம் முப்பதுக்கும் கீழ் வந்து விட்டது.

"என்னாச்சிம்மா? தலைவலியா? நான் பிடிச்சி விடவா?"

இடம் வலமாக தலையசைத்தவன் "நான் சில விசயத்துல ரொம்ப சென்சிடிவ்! உன் மாமாக்கள்கிட்ட அதிகம் பழகாம இருக்கியா? எனக்கு சந்தேகம் கிடையாது. நீயும் தப்பானவ கிடையாது. ஆனா என் மைன்ட் ப்ராப்ளம்! எனக்கு ஜெலஸ் அந்த வானத்தை விட அதிகம். நமது நாட்கள் எனக்கு வரம் போல. அதை வீண் பண்ணிக்க விரும்பல நான்!" என்றவன் தான் சொல்ல வந்த விசயத்தை அவளிடம் சொல்லவேயில்லை.

"அவ்வளவுதானா? சோ ஸ்வீட் பேபி நீ! நான் இனி யாரோடும் நெருங்கி நின்னு பேசல! ஓகேவா?" என்றாள். அவன் கேட்டிருந்தால் மலையையே புரட்டுபவள் அவள். இதெல்லாம் ஒரு விசயமா?

"தேங்க்ஸ் மீரும்மா!" என்றவனின் கழுத்தில் தன் முகத்தை சாய்க்க முயன்றாள். "நீ இப்படி பண்ணா நான் பைக்கை எங்கேயாவது விட்டுடுவேன். ஓசி பைக். பத்திரமா கொண்டு போய் தரணும்!" என்று பதட்டமாக சொன்னான் மகிழன்.

"நீ எப்ப பைக் வாங்குவ? இந்த ரைட் எவ்வளவு சூப்பரா இருக்கு! உன்கிட்ட பைக் இருந்தா நாம தினமும் இப்படி போகலாம்!"

'ஆமா.. காலேஜ் போகவே விட மாட்ட நீ. என்னேரமும் சுத்திட்டே இருந்தா என்னாகுறது?' என நினைத்தவன் அதை வெளியில் சொல்லவில்லை.

"வாழ்க்கை வெகு சுகம். அந்த வானமும் என் வசம். நீ என் அருகே இருந்தால் அந்த இறைவனும் அந்நியமே!" என்றவள் வானத்தை பார்த்தாள். மீண்டும் கையை விரித்தாள். சாலையின் இருபுறமும் இருந்த மரங்கள் சொர்க்கத்தை கண் முன் நிறுத்தின. காதலனின் மேனி வாசம் அவளை கிறக்கத்தில் ஆழ்த்திக் கொண்டிருந்தது.

"நீயும் நானும் எப்பவும் பிரியவே கூடாது மகி!" என்றவள் அவனை இறுக்கமாக அணைத்துக் கொண்டாள்.

அவனும் வானத்தில்தான் மிதந்துக் கொண்டிருந்தான். வாழ்வின் மணி துளிகள் தேன் பாகில் ஊறிக் கொண்டிருந்தது. வாழ்க்கையின் தித்திப்பு, வாழ்வின் மணம், வாழ்வின் இசை, வாழ்வின் பூரிப்பு என்று மனதில் முழுமை நிரம்பி பொங்கி வழிந்தது.

அதே நேரத்தில் அவர்களின் எதிரே வந்துக் கொண்டிருந்த லாரி ஒன்றின் பிரேக் வொயர் தனது நீண்டநாள் தேய்மானத்தால் பட்டென்று விட்டுப் போனது.

மகிழன் தனது பாதையில் சரியாகதான் சென்றுக் கொண்டிருந்தான். ஆனால் எதிரில் வந்த லாரியின் பாதை மாறிப் போனது. கண் இமைக்கும் நேரத்தில் இவர்களின் பைக் மீது வந்து மோதியது.

பைக்கிலிருந்து தூக்கி வீசப்பட்டாள் மீரா. பைக்கோடு சேர்ந்து அந்த தார்சாலையில் மகிழனும் இழுத்துச் செல்லப்பட்டான். தரையில் விழுந்துக் கிடந்த மீராவின் வலது காலின் மீது ஏறி சென்றது அந்த லாரியின் பின் சக்கரம்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN