கனவு 4

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
மீரா மீண்டும் கண் விழித்தபோது மருத்துவமனை அறை ஒன்றினுள் இருந்தாள்.

"மீராம்மா!" அம்மா அவளை கண்ணீரோடு பார்த்தாள்.

"என்ன ஆச்சி?" தலையைப் பிடித்துக் கொண்டு கேட்டாள். உடம்பில் இருந்த வலியை கொஞ்சம் கொஞ்சமாக உணர முடிந்தது. வலதுக் கால் மரத்துப் போனது போல இருந்தது. ஆனால் அது அனைத்தையும் தாண்டி மகிழனின் முகம் நினைவுக்கு வந்தது. எழ வேண்டும் என்று கோடி மடங்கு உத்வேகம் வந்தது. ஆனால் உடலின் சோர்வால் விரலை கூட அசைக்க முடியவில்லை அவளால்.

"மகி.." அம்மாவை பார்த்து பயத்தோடு கேட்டாள்.

"அந்த பையனை அவங்க அப்பா அவங்க ஊர் ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிப் போயிட்டாரு.."

மீராவுக்கு வருத்தமாக இருந்தது. வருங்கால மாமனாரை பார்க்காமல் போய் விட்டோமே என கவலைப்பட்டாள். அவரின் புகைப்படத்தை கூட மகிழன் காட்டியது இல்லை. 'சரி மாமனார் எப்படி இருந்தா நமக்கென்ன?' என நினைத்துக் கொண்டாள்.

"அவன் நல்லாருக்கானா அம்மா?"

"எனக்கு மட்டும் என்னடி தெரியும்? ஆக்ஸிடென்ட் ஆன அன்னைக்கு எங்களுக்கு போன் வந்தது. வந்துப் பார்த்தா நீ மட்டும்தான் ஹாஸ்பிட்டல்ல இருந்த. ஆனா அந்த பையனை பத்தி எதுவும் தெரியல. செழியன்தான் விசாரிச்சிட்டு வந்து 'மகிழனை அவங்க அப்பா கூட்டிப் போயிட்டாரு'ன்னு சொன்னான்!" அம்மா சொன்னது அவளுக்கு குழப்பத்தை தந்தது.

தனது நிலையைப் பார்த்தாள். காலில் பெரிய கட்டாக இருந்தது. கைகளிலும் சிராய்ப்பு இருந்தது. இந்த நிலையில் அவன் தன்னை விட்டுச் செல்வான் என்று கனவில் கூட நினைக்கவில்லை.

ஆனாலும் விட்டு சென்றது விட்டுச் சென்றதுதானே? ஏன் சென்றிருப்பான் என்று யோசித்து குழம்பினாள்.

"அம்மா மகியோட பாட்டிக்கு போன் பண்ணிக் கொடேன்!" மீரா கெஞ்சிக் கேட்டுக் கொண்டிருந்த நேரத்தில் அந்த அறைக்குள் வந்தான் சரண்.

"கண் விழிச்சிட்டியா மீரா?" என்று வந்தவன் அவளருகே இருந்த நாற்காலியில் அமர்ந்தான்.

"உனக்கு ஆக்ஸிடென்ட்ன்னு கேட்டதுமே எனக்கு ஹார்ட் அட்டாக் வர மாதிரி ஆயிடுச்சி. எதிர்ல வந்த லாரிக்கு பிரேக் இல்லாம இருந்திருக்கு. எல்லாம் நேரம்தான். என்னன்னு சொல்ல?" கவலையோடு சொன்னவன் தங்கையின் நெற்றி கூந்தலை ஓரமாக ஒதுக்கி விட்டான்.

"முகத்துல கூட கீறல்!" என்றான் கவலையாக. அவனுக்குத் தெரியும் தன் சின்ன தங்கைக்கு அழகின் மீது தனி ஆர்வம் என்று. அவளின் அலங்காரம் பொருத்தமானதாக இருக்கும். அனைவரும் ரசிக்கும்படியும் இருக்கும். இந்த முக கீறலை கூட இன்னும் நான்கைந்து மாதங்களில் சரி செய்து விடுவாள் என்றும் தெரியும்.

மீரா தன் முகத்தை தொட்டுப் பார்த்தாள். சில இடங்களில் காயங்கள் தட்டுப்பட்டது.

"என் காலுக்கு என்ன ஆச்சி?" நினைவு வந்தவளாக கேட்டாள்.

அம்மா தரையை பார்த்து கண்களை துடைத்துக் கொண்டாள். சரணின் முகமும் வெகுவாக வாடிப் போய் விட்டது. மீராவிடம் எப்படி விசயத்தை சொல்வதென்று இருவருக்குமே தெரியவில்லை.

"மீரா.." தயக்கமாக இழுத்தான்.

"என்ன அண்ணா?"

"உனக்கு கால்ல ஆபரேசன் பண்ணி இருக்காங்க மீரா.!"

மீரா தன் காலை மீண்டும் ஒருமுறை பார்த்துக் கொண்டாள்.

"ஓ.." என்றாள்.

அம்மாவின் விம்மல் ஒலி லேசாக கேட்டது. குழப்பமும் சிறிது பயமும் மீராவை சூழ்ந்தது.

"நீ நடக்க ஆரம்பிக்க சில மாசங்கள் ஆகும் மீரா!" அண்ணன் உடைந்த குரலில் சொன்னான்.

மீராவுக்கு கண்கள் கலங்கியது.

"வீ..வீல்சேர் இருக்கு இல்லையா!?" அவளுக்கே கேட்காத ஒரு குரலில் கேட்டாள்.

அம்மா நன்றாகவே அழுதாள். முந்தானையால் வாயைப் பொத்திக் கொண்டு அழுதாள்.

"மீராம்மா.." சரண் மூக்கை உறிஞ்சினான்.

"உன்னால இனி பழையபடி நடக்க முடியாது.. நடக்க ஆரம்பிச்சாலும் தாங்கி தாங்கிதான் நடக்க முடியும்ன்னு டாக்டர்ஸ் சொல்லிட்டாங்க!" என்றவன் தன் கண்களைத் துடைத்துக் கொண்டான்.

மீராவின் முகத்தில் ஈயாடவில்லை. நெஞ்சுக் கூடு மேலே ஏறி இறங்கியது. அவளுக்கு மூச்சு விடுவதே சிரமமாக இருந்தது.

தான் இனி சாதாரணம் போல நடக்க முடியாது என்பதையும் தாண்டி அவளுக்கு வந்த முதல் பயமே மகிழனுக்கு தான் இனி ஜோடியாக முடியுமா என்பதுதான். மகிழனும் அவளும் நடந்துப் போகும் காட்சிகள் கற்பனையில் வந்தது. அவள் நொண்டி நொண்டி நடக்க அவன் ஒவ்வொரு அடியிலும் காத்திருந்து காத்திருந்து அழைத்துச் செல்வது போல காட்சிகள் வரவும் அவளின் கண்களில் கண்ணீர் தானாக பெருக்கெடுத்தது.

இவனுக்கு இவள் பொருத்தமா என கேட்கும் ஊராரின் கேள்விகளும், மகிழனின் வீட்டில் தன்னை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்ற சிந்தனையும் அவளின் இதயத்தை இரு மடங்காக துடிக்க செய்தது. மகிழனை மறந்து ஒற்றை நாள் கூட அவளால் இருக்க முடியாது. அவன் இல்லாத வாழ்வை கனவில் கூட யோசிக்க முடியாது. அப்படி இருக்கையில் தானே தன் காதலுக்கு தடங்கல் என்பதை அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

சின்னதாக ஆரம்பித்த அழுகை சற்று நேரத்தில் பெரிதானது. விக்கியழுதாள்‌. அவளின் கேவல் ஒலி அம்மாவையும், சரணையும் உடைத்தது.

"மீராம்மா.." சரணின் கெஞ்சல் அவளின் காதில் ஏறவில்லை.

"இதனாலதான் மகி என்னை விட்டுட்டு போயிட்டானா?" அவளையும் மீறி வந்தது கேள்வி. அவனின் மீது அதிகளவு நம்பிக்கைக் கொண்டிருந்தாள். இந்த கேள்விக்காக தன்னையே திட்டியும் கொண்டாள். ஆனால் கேட்காமல் இருக்க முடியவில்லை.

"லூசு.. அவன் இதுக்காக விட்டுப் போவானா?" எனக் கேட்டுத் திட்டிய சரண் "இந்த ஹாஸ்பிட்டலுக்கு நாங்க வரும் முன்பே அவங்க இங்கிருந்து கிளம்பிட்டாங்க மீரா.!" என்றான்.

மீராவுக்கு நம்பிக்கையே இல்லை. ஆனாலும் மகிழன் திரும்பி விட மாட்டானா என்று சிறு ஆசையும் வந்தது.

அவளின் அழுகை அதிகமாகிக் கொண்டிருந்தது. மகிழனின் கையிலிருந்த தனது கரம் நழுவி கீழே விழுவது போலிருந்தது. விம்மிக் கொண்டிருந்தவளுக்கு திடீரென்று மூச்சு விடுவதில் சிரமம் வந்தது.

பெரும் விம்மல். பெரும் மூச்சுகள். சரணுக்கும் அம்மாவுக்கும் பயமாக இருந்தது.

"நான் டாக்டரை கூட்டி வரேன்!" என்றபடி வெளியே ஓடினான் சரண். சற்று நேரத்தில் மருத்துவர் வந்து அவளுக்கு ஊசியைப் போட்டு தூங்க வைத்தார்.

"பிரஷர் தர மாதிரி விசயத்தையெல்லாம் ஏன் சொல்றிங்க?" என்ற டாக்டரை வலியோடு பார்த்தான் சரண்.

அவளின் கால் முன்பு போல இல்லை என்பதை அவளிடம் சொல்லாமல் எப்படி மறைப்பது என்று அவனுக்குத் தெரியவில்லை.

சரணும் அம்மாவும் அந்த அறையை விட்டு வெளியே நடந்தார்கள். கண்ணீர் காய்ந்த கன்னங்களோடு மயக்கத்தில் இருந்தாள் மீரா. ஆனாலும் நினைவுகள் உறங்கவில்லை.

"மகி என்னை விட்டுப் போகாதே!" என்று அவ்வப்போது பிணாத்தினாள்.

மயக்கத்திலும் கூட அவளது கரங்கள் மகிழனைதான் தேடின. பெரிய இழப்பை சந்தித்தது போல இருந்தது.

இரவில் காய்ச்சல் அதிகமாகிப் போனது. எத்தனை ஊசிகள் போட்டும் ஜுரம் குறையவில்லை. "மகி.. மகி.." என்று சலிக்காமல் அழைத்துக் கொண்டிருந்தாள்.

"அமைதியா இரும்மா!" என்ற அப்பாவின் குரல் அவளுக்கு அரை மயக்கத்தில் கேட்டது.

"ப்பா.. மகி வேணும்ப்பா!" என்று அழுதவளின் கண்ணீர் ஜுரத்தின் காரணமாக வெண்ணீராக மாறி வழிந்தது.

"ஏதாவது பண்ணுடா சரண்!" அம்மா அழுதபடி சொன்னாள்.

"மாப்பிள்ளை நீங்க அந்த ஆரவல்லி அம்மாவுக்கு சொந்தக்காரர்தானே, அவங்க பேரனை கொஞ்சம் வர சொல்லுங்களேன். கல்யாணம் பண்ணிக்கிறேன்னு அவங்க பாட்டியோடு வந்து நம்மக்கிட்ட பேசினான் இல்ல.!? இப்ப இப்படி விட்டுட்டு போனா என்ன நியாயம்?" என்று கதிரிடம் கேட்டார் அப்பா.

கதிர் கவலையோடு அதியனையும், செழியனையும் பார்த்தான். இரண்டு நாட்களாகவே அவர்கள் மகிழனின் வீட்டிற்கு சென்று வந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் பூட்டிய வீடு இன்னமும் திறக்கப்படவில்லை. ஆரவல்லி எங்கேயும் செல்வதில்லை என்று அந்த வட்டத்தில் உள்ள எல்லோருக்குமே தெரியும். அவளின் மகனைப் பற்றிய விவரங்கள் அங்கிருந்த யாருக்குமே அதிகம் தெரியவில்லை.

"நாலு நாள் முன்னாடி அவங்க பையன் வந்தான். ஆரவல்லி கிழவி திட்டிட்டு இருந்தா. அவன் இரண்டு மணி நேரம் கழிச்சி கிளம்பிட்டான். அவ்வளவுதான்!" என்ற பக்கத்துக்கு வீட்டாருக்கு மகிழனின் விபத்து பற்றிக் கூட எதுவும் தெரியவில்லை.

ஒருவேளை அவன் இறந்து விட்டானோ என்று கூட நினைத்தான் அதியன். ஆனால் "அந்த லாரி விபத்தில் யாரும் பலியானதா தகவல் இல்லை." என்றுச் சொன்னான் கதிர்.

"அந்த பையனோட அப்பா யாருன்னு கொஞ்சம் விசாரிங்க. கேட்கும் போதெல்லாம் எங்க அப்பாவை இன்னொரு நாள் வர சொல்றேன்னு சொல்லியே அந்த பையன் காலம் தள்ளிட்டான்!" என்றாள் மைவிழி.

அதியன் யோசித்துவிட்டு தன் நண்பன் ஒருவனிடம் உதவிக் கேட்டான். காவல் துறையில் பணியாற்றிக் கொண்டிருந்த அவனும் அரை நாளில் மகிழனின் தந்தை வீட்டு முகவரியை கண்டுபிடித்துத் தந்தான்.

"இப்ப என்ன செய்றது? நாம போய் அவனை கூட்டி வரலாமா? இல்லன்னா இவ காய்ச்சல்லயே செத்துடுவா போல! அளவுக்கு மீறிய செல்லம் தந்தா இப்படிதான்!" என்று போற போக்கில் தன் மாமனார் மாமியாரை குற்றம் சாட்டினான் கதிர்.

"போய்ட்டு வரலாம்!" என்ற அதியன் அன்றே புறப்பட்டான்.

"அவங்க நம்மை விட பணக்காரங்க!" என்றான் செழியன் தன் அண்ணனை பார்த்து.

"அதனால என்ன? நாமும்தான் சம்பாதிப்போம். சம்பாதியமெல்லாம் மேட்டரா?" என்றான் அதியன் காரை ஓட்டிக் கொண்டு.

"அந்த பையனுக்கு ரொம்ப அடிப்பட்டு இன்னமும் மயக்கத்தில் இருக்கானோ? அதனாலதான் அவன் இன்னமும் மீராவை தேடலயோ!?" தனது சந்தேகத்தைக் கேட்டான் கதிர்.

"பின்னாடி உட்கார்ந்திருந்த இவளே கண் விழிச்சிட்டா. பைக்கை ஓட்டிப் போன அவனுக்கு என்ன?" கோபமாக ஒலித்தது செழியனின் குரல். அவனுக்கு மீரா செல்ல தங்கையை போல. அவனுக்கு மட்டுமில்லை அதியனுக்கும், கதிருக்கும் கூட அவள் செல்ல தங்கைதான். இவர்கள் அனைவருமே அவளை விட ஏழெட்டு வருடங்கள் பெரியவர்கள். ஆனால் இவர்களுக்கு காதல் என்றால் என்னவென்று தெரியும் முன்பே தான் ஒருத்தனை காதலிப்பதாக இவர்களிடம் வந்து சொன்னவள் அவள்.

அவளுடையது வெறும் ஈர்ப்பு என்று அனைவருமே கேலி கிண்டல் செய்தது உண்டு. ஆனால் ஏழு வருடங்கள் கடந்த பிறகும் தன் காதலை வெற்றிக்கரமாக வளர்த்து வைத்திருந்தவள் அவள்.

அவள் எல்லா விசயத்திலும் பிடிவாதக்காரிதான். ஆனால் இந்த காதலில் பைத்தியக்காரி என்றே சொல்லலாம். ஆரம்பத்தில் அம்மா திட்டினாள். ஆனால் அவள் காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை. மைவிழியும் கூட தங்கைக்கு புத்திமதியை லாரி லாரியாக வழங்கினாள். ஆனால் எங்கே அவள் கேட்டாள்?

அதியன் அந்த வீட்டின் முன் காரை நிறுத்தினான். வாசலில் நின்றிருந்த வாட்ச்மேன் காரின் அருகே வந்தான்.

"யார் வேணும் சார்?"

"மகிழனை பார்க்கணும்!"

வாட்ச்மேனின் முகம் மாறிப் போனது. "அவரை தேடி யார் வந்தாலும் அவங்களை உள்ளே விட வேணாம்ன்னு சொல்லி இருக்காங்க சார்!" என்றான் அவன்.

செழியனும் கதிரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

"சந்தனக் கொடிக்காலில் இருந்து மீராவின் மாமாக்கள் வந்திருக்காங்கன்னு போய் சொல்லுங்க!" என்றான் அதியன்.

வாட்ச்மேன் தயக்கமாக தன் போனை எடுத்தான். போனில் யாரிடமோ விசயத்தைச் சொன்னான். பின்னர் இவர்களை பார்த்து இடம் வலமாக தலையசைத்தான்.

"சின்ன தம்பி உங்களை பார்க்க விருப்பம் இல்லன்னு சொல்லிட்டாரு!" என்றவன் அதற்கு மேல் அவர்களோடு பேசாமல் உள்ளே சென்று கேட்டை உள்பக்கம் பூட்டிக் கொண்டான்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN