கனவே 6

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
மீரா தன்னால் முடிந்த அளவுக்கு வேகமாக சென்றாள். அந்த அறையின் கதவை தள்ளினாள். ஆனால் கதவு உள்பக்கம் பூட்டியிருந்தது.

"மகி.." கதவை தட்டினாள்.

மௌனமாக இருந்தான் அவன்.

"மகி வெளியே வா.. நாம கொஞ்சம் பேசலாம்!" என்றாள்.

"மகி.. மகி.." மீண்டும் மீண்டும் அழைத்தாள்.

"இங்கிருந்து போ மீரா." மகிழன் சிறுகுரலில் சொன்னான்.

மீரா தன் காதில் விழுந்ததை நம்ம முடியாமல் கதவை பார்த்தாள்.

"மகி.."

"போ மீரா.. உன்னை எனக்கு பிடிக்கல. இங்கிருந்து போ. என்னை பார்க்க இனி எப்பவும் வராத."

அவன் சொன்னதை அவளால் நம்ப முடியவில்லை.

"ஆனா ஏன் மகி? நீ என்னை லவ் பண்றதானே?"

எதிரில் மீண்டும் நெடியதொரு மௌனம்.

"இ.. இல்ல!"

மீரா இடம் வலமாக தலையசைத்தாள்.

அவளின் அருகில் நின்றிருந்த செழியனுக்கு அவமானமாக இருந்தது.

"மீரா வா போகலாம்." என்று அழைத்தான்.

"மாமா கொஞ்ச நேரம்." கெஞ்சியவள் கதவினை தட்டினாள்.

"உளறாம வெளியே வா‌ மகி. நீ என்னை லவ் பண்ணலன்னா வேற என்னதான் பண்ணுவ?" என்றுக் கேட்டாள்.

அவளின் கேள்வி செழியனுக்கு முட்டாள்தனமாக தோன்றியது. ஆனால் அது மகிழனுக்கும் மீராவுக்குமான ஒரு அந்தரங்கமான கேள்வி. ஒருவரையொருவர் காதலிப்பதை தவிர வேறு எந்த வேலையுமே செய்ததில்லை என்பதன் அர்த்தம் அது. சுவாசிப்பதையும், வாழ்வதையும் போன்று முக்கியமானது காதல் என்ற அர்த்தம் கொண்டது.

"இங்கிருந்து போ மீரா." மகிழன் இதை ஒவ்வொரு முறை சொல்லும்போதும் மீராவுக்கு இதயத்தை அறுப்பது போல இருந்தது. இத்தனை வருடங்களில் எத்தனை நாட்கள் இந்த வீட்டில் அவள் சுற்றி வந்திருக்கிறாள் என்று அவளுக்கே கணக்கு தெரியவில்லை. அவனின் அறையில் ஒவ்வொரு சென்டிமீட்டரும் அவளுக்கு பரிட்சயம்.

இதுவரை உடல் மட்டும்தான் கூடியதில்லை. ஆனால் உள்ளம் இரண்டற கலந்து பல வருடங்கள் ஆகி விட்டிருந்தது. அவன் போ என்று சொல்வது செத்து போ என்றுச் சொல்வதை போலவே இருந்தது.

"மகி.." அவள் அப்படி அழைக்கும் ஒவ்வொரு கணமும் அவனுக்கு நெஞ்சை அறுத்தது. அந்த கதவை திறந்து அவளை அணைத்து விடுவோமோ என்று பயந்து வீட்டுக்குள் நின்றுக் கொண்டிருந்தான் அவன். இந்த ஒருநாளை கடந்து விட்டாலே போதும் எனும் அளவுக்கு இதயம் படபடத்தது. அவள் கிளம்பும் போது எங்கே தன் உயிரையும் சேர்த்து எடுத்துச் சென்று விடுவாளோ என்று கவலைக் கொண்டான்.

"இவ்வளவு நாளா என்னை ஏன் பார்க்க வரல மகி? உன் அப்பா உன்னை ஹவுஸ் அரெஸ்ட் பண்ணிட்டாரா? ஆனா நீ எங்க அப்பாவுக்காவாது ஒரு போன் பண்ணி இருக்கலாம் இல்ல?"

"முட்டாளா நீ? இங்கிருந்து போன்னு சொல்லிட்டு இருக்கேன். சம்பந்தம் இல்லாம பேசி நின்னுட்டு இருக்க. இங்கிருந்து போ மீரா!" விரட்டினான்.

"மகி.. நீ என்ன திட்டினாலும் எனக்கு வலிக்காது. இந்த கதவை மட்டும் திற. ப்ளீஸ்.. எதுவா இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம்.!"

"முடியாது மீரா. எனக்கு உன் முகத்தை பார்க்க பிடிக்கல. இங்கிருந்து போய் தொலை."

இப்படியெல்லாம் அவன் என்றுமே திட்டியதில்லை. கண்ணீரை துடைத்துக் கொண்டாள். செழியனோ நெருப்பாக நின்றுக் கொண்டிருந்தான்.

"நான் இவனை கொல்ல போறேன்." என்றான்.

"அதுக்கு முன்னாடி நீ என்னை கொல்ல வேண்டி வரும்." என்றவள் கதவின் மீது சாய்ந்து நின்றாள்.

"மகிம்மா.. மை ஸ்வீட் கார்ன்.. நீ என் பப்பு குட்டி இல்ல.. கதவை திறம்மா.. நாம எதுவா இருந்தாலும் பேசலாம்." என்றாள்.

செழியனுக்கு அங்கே நிற்க கூசியது. அவமானத்தை தாண்டி அவர்களின் அந்தரங்கத்தை ஒட்டுக் கேட்பது போலிருந்தது. இந்த நிலையில் இருப்பவளை விட்டு செல்லவும் மனம் வரவில்லை.

"பேபி பாய்.. கதவை திறடா!"

அதற்கு மேல் முடியவில்லை. செழியன் அங்கிருந்து நகர்ந்து விட்டான்.

கதவின் அந்த பக்கம் நின்றிருந்த மகிழன் தரையில் சரிந்து அமர்ந்தான். ஆறாக பெருக்கெடுத்தது கண்ணீர்.

"உனக்கு என்னை பிடிக்கலையா? இந்த கால் சீக்கிரம் நல்லாகிடும் மகி. நான் நல்லா நடப்பேன். என்னை நம்பு." என்றாள்.

அவள் சொல்வது அவனுக்குப் புரியவில்லை. ஆனாலும் அவளின் காலில் ஏதோ பிரச்சனை என்று மட்டும் புரிந்துக் கொண்டான்

"நீ தொலைஞ்சி போக மாட்டியா மீரா? ஐ ஹேட் யூ. தெளிவாதானே சொல்றேன். போய் தொலையேன்." லாவா கதிரின் சிவப்பென வந்தது அவனின் வாய் வார்த்தைகள்‌.

மீரா உடைந்து துவண்டு விழாமல் இருக்க பெரிதும் முயன்றாள்.

"நீ இல்லன்னா நான் வாழ முடியுமா? என் வாழ்க்கை நீதான்டா. நீயே போன்னு சொல்ற!" அவளுக்கு புரியவில்லை. அவனோடு சேர்ந்து விடலாம் என்ற நப்பாசை மழை கால பட்டாசு போல நமத்துப் போய் கொண்டிருந்தது. திரும்பி ஓடி விட சொல்லி கெஞ்சியது மூளையின் ஒரு பாதி.

"நடிப்பை நிப்பாட்டிட்டு கிளம்பு மீரா. அன்னைக்கு நீ கம்பல் பண்ணாம இருந்திருந்தா நாம பைக் ரைட் போயிருக்க மாட்டோம். உன் ஆசையால்தான் நானும் கீழே விழுந்தேன். உன்னால நான் செத்திருப்பேன். உனக்கு அப்பவும் திருப்தி இல்லதானே? என்னைக் கொன்னாதானே உனக்கு சந்தோஷம்?"

அவனின் அமில வார்த்தைகளில் துவண்டது மனம்.

"நான் ஏற்கனவே ரொம்ப நொந்துப் போயிருக்கேன் மகி. உனக்காக என் பேமிலியை, என் ரோசத்தையெல்லாம் விட்டுட்டு வந்திருக்கேன்."

"எனக்காக உன் குடும்பத்தை விட்டு வந்தவ மறுபடி யாருக்காவது என்னையும் விடுவ!"

அவன் சொன்னது உண்மையிலேயே அவன் சொன்னதுதானா என்று குழம்பினாள் மீரா. அவனுக்கு இப்படியும் கூட பேச தெரியும் என்பதே அவளுக்கு இன்றுதான் தெரிந்தது.

"நா.. நான் போக போறேன். நீதான் விரட்டுற. நீதான் என்னை கெட்டவளா நினைச்சி திட்டுற. ஆனா நான் இப்ப போனா மறுபடியும் வரவே மாட்டேன். ப்ராமிஸ்.. உனக்கு இரண்டு நிமிசம் டைம் தரேன்." என்றவள் தன் கை கடிகாரத்தை பார்த்தாள்.

மகிழன் வழியும் தன் கண்ணீரை துடைத்துக் கொண்டு சிலையாக அமர்ந்திருந்தான்.

"இரண்டு நிமிசமே அநாவசியம். போயிடு. உனக்கு இங்கே எந்த வேலையும் இல்ல. உன் ஏமாத்து காதலுக்கு ஏமாந்த அதே பழைய மகிழனும் இங்கே இல்ல." என்றான்.

"இன்னும் ஒன்னரை நிமிசம் இருக்கு மகி." சொல்லும்போதே லேசான விம்மல் ஒலி புறப்பட்டது.

"ஐ ஹேட் யூ.. போ."

"ஒரு காரணம் சொல்லு!" கடைசி கேள்வியாக கேட்டாள்.

"ஐ ஹேட் யூங்கறதை விட பெரிய காரணம் உனக்கு வேணுமா? உன் முகம் பிடிக்கல. உன் கால் பிடிக்கல.!" காலை பற்றி முழுதாய் தெரியாமலேயே சொன்னான்.

"முகம்.." தன் முகத்தைத் தொட்டுப் பார்த்தாள்.

"ஆனா என் முகத்துல கீறல் கூட இல்ல மகி. நீ என்னை நல்லா பார்க்கல." என்றாள்.

ஆமாம். அவன் அவளை நன்றாக பார்க்கவில்லை. பார்க்க முடியவில்லை.

"நீ எப்படி இருந்தாலும் எனக்கு பிடிக்கல. தயவு செஞ்சி போறியா?" எரிச்சலோடு சொன்னான்.

"ப.. பதிமூணு செகண்ட்தான் இருக்கு."

முகத்தை பொத்தியபடி தன் முட்டிக் காலில் முகம் புதைத்தான் மகிழன்.

"லவ் யூ மகி. ஏன் உனக்கு என்னை பிடிக்கலன்னு தெரியல. நான் போறேன். நீ சொன்னன்னு போறேன். ஆனா உனக்காக காத்திருப்பேன். இந்த ஆயுசுக்கும் காத்திருப்பேன். நீ ஆயுசுக்கும் வராம போனா அடுத்த ஜென்மத்துல கூட காத்திருப்பேன். ஆனா நீ என்னைத் தேடி வராம நானா உன்கிட்ட வரவே மாட்டேன். நான் மீரா. இது உனக்கே தெரியும்.
மத்தவங்களை விட என்னை அதிகமா தெரிஞ்சிக்கிட்டவன் நீ. என் பிடிவாதம் உனக்கே தெரியும் பேபி பாய். என்ன காரணமா இருந்தாலும் என்கிட்ட ஓடி வந்துடு. யூ ஆர் மை ப்ரீஸியஸ் ஜெம். மை ஒன்லி ஒன் மேன்!" என்றவள் கண்களை துடைத்துக் கொண்டு திரும்பி நடந்தாள்.

மகிழன் கண்ணீரை துடைத்துக் கொண்டு எழுந்து நின்றான். அருகே இருந்த ஜன்னலை சத்தமில்லாமல் திறந்துப் பார்த்தான். மீரா நொண்டியபடி வெளியே நடந்துக் கொண்டிருந்தாள். ஒரு அடி எடுத்து வைக்கவே சில நொடிகள் பிடித்தது அவளுக்கு. அந்த கால்களை கவனித்தான். சுருக்கென்று நெஞ்சில் தைத்தது. தன்னால்தான் அந்த விபத்து அவளுக்கு ஏற்பட்டது என்பதை புரிந்துக் கொண்டான்.

தான் அவளின் துரதிஷ்டம் என்று நினைத்தபடியே திரும்பினான். எதிரே இருந்த கண்ணாடியில் தெரிந்த தன் முகத்தைப் பார்த்தான்‌. சிதைந்த முகம். மூக்கில் பாதி இல்லை. உதடு ஒரு பக்கம் போயிருந்தது. அந்த உதட்டோடு இவ்வளவு நேரம் பேசியதே அவனுக்கு சிரமம்தான். ஒரு பக்க கன்னத்தில் மட்டும் எலும்பு துருத்திக் கொண்டிருந்தது. அவனது பார்வைக்கு அவனே அவலட்சணமாக தெரிவதாக தோன்றியது.

முகத்தை உள்ளங்கைகளால் மூடிக் கொண்டான். அழுகையால் அந்த உள்ளங்கைகள் நனைந்தது.

"உனக்கு ஏன் என்னை இவ்வளவு பிடிச்சிருக்கு மீரா?"

"ஏனா நீ ரொம்ப ரொம்ப அழகா இருக்க மகி!"

மீராவுடனான தன் உரையாடலை நினைத்துப் பார்த்தான். விம்மினான். இந்த முகத்தை பார்த்தால் நிச்சயம் அவள் தன்னை வெறுப்பாள் என்று நம்பினான்.

"நான் உன் பேபி பாய் இல்ல மீரா. நான் கர்ண கொடூரமா இருக்கேன். நான் உனக்கு பொருத்தமானவன் கிடையாது." என்றான் கண்ணாடியை பார்த்துக் கொண்டு. அப்படி பேசும் போது தன் முகம் கோணுவதை கண்டு ஆத்திரமடைந்தான். அருகே இருந்த பிளாஸ்டிக் பூ ஜாடியை எடுத்து அந்த கண்ணாடியை நோக்கி விட்டெறிந்தான். கண்ணாடி சில்லு சில்லாக உடைந்து சிதறியது. உடைந்த அத்தனை சில்லுகளிலும் அவனது முகம்தான் தெரிந்தது.

முகத்தை மூடியபடி தரையில் மண்டியிட்டான்.

விபத்தான ஆரம்ப நாளில் இருந்தே பயம். நல்லவேளையாக அவனின் தந்தை அவனை அவர்களின் ஊர் மருத்துவமனைக்கு கொண்டுச் சென்று சேர்த்து விட்டார். அதனால் மீராவுக்கு இந்த விசயம் தெரியவில்லை. அவன் முகத்தில் கட்டோடு இருந்த ஒரு நாளில்தான் அவனை தேடிக் கொண்டு வந்தார்கள் மீராவின் மாமன்கள். அவர்களிடம் தன் முகத்தை காட்ட பயம் அவனுக்கு. உலகில் எந்த துரோகத்தையும் அவனால் தாங்கிக் கொள்ள முடியும். ஆனால் தன் முகத்தை கண்டு மீரா முகம் சுளிப்பதை அவனால் தாங்க இயலாது.

அவளிடம் உண்மையை சொல்லவே அவ்வளவு பயம். அந்த உண்மை அவளுக்கு அநாவசியம் என்று கூட நினைத்தான். தன் முகத்தின் அழகிற்காக அவள் தன்னை விரும்புகிறாள் என்றால் அந்த அழகே இல்லாதபட்சத்தில் அவளை அணுகுவது எந்த விதத்தில் சரியென்று யோசித்தான்.

"எல்லா பொருளையும் எடுத்து வச்சாச்சி. இந்த ரூம் மட்டும்தான் பாக்கி. கதவை திறங்க தம்பி." என்றார் பொருட்களை வண்டியில் ஏற்றும் ஒருவர்.

தரையில் கிடந்த தனது கர்ச்சீப்பை எடுத்து முகத்தை மறைத்துக் கட்டிக் கொண்டான். நெற்றி வரை மறைக்கும் தொப்பியை எடுத்து அணிந்துக் கொண்டான். தலையை குனிந்த படியே வெளியே நடந்தான். நிமிர அவனுக்கு தைரியம் இல்லை. அழகு அழகு என்று தினம் நூறு முறை மீரா சொன்னதன் பிரதிபலிப்பாக இப்போதைய அழகில்லாத தன் முகத்தை அந்நியர்களிடம் வெளிக்காட்ட தயங்கினான் அவன்.

தான் சொன்ன சொல்லே எமனாய் மாறித் தன்னையே கொல்லும் என்பதை மீராதான் அறியாமல் போய் விட்டாள்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN