தேவதை 3

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
⚠️கதை நூறு சதவீத கற்பனை!

ஆதி அழுதுக் கொண்டிருந்தாள். அவளின் ஒவ்வொரு துளி கண்ணீரும் அந்த கிரகத்தின் நெருப்பு குழம்பின் சூட்டை நூறு மடங்காக குறைத்துக் கொண்டிருந்தது.

அந்த கிரகத்தின் கடவுள் அந்த அண்டத்தின் மறுதிசையில் இருந்த ஒரு பாலாற்று தீவினில் இருந்த மஞ்சள் நிற மரத்தடி ஒன்றில் அமர்ந்திருந்தார். அவர் ஆணும் இல்லை. பெண்ணும் இல்லை‌. அவருக்கு சாதி இல்லை. மதம் இல்லை. இனம் மொழி ஏதும் இல்லை. அத்தோடு அவருக்கு என்று பாலினமும் இல்லை. அவர் ஒரு கடவுள் அவ்வளவே.

அவரால் கிரகங்களை இடம் மாற்ற முடியும். கொதிக்கும் சூரியனை பனிக்கட்டியாய் உருக்க முடியும். பிரபஞ்ச வெளியில் பறந்து திரிந்துக் கொண்டிருக்கும் பாறைக் கற்களை எடுத்து தன் கவணில் பூட்டி அடுத்த பிரபஞ்சத்தின் சூனிய வீதிக்கு குறி பார்த்து அடிக்க முடியும்.

அவருக்கு பொறுப்புகள் என்று எதுவும் இல்லை. ஏனெனில் அந்த பிரபஞ்சத்தின் காலம் சில ஆயிரம் வருடங்கள் முன்புதான் முடித்திருந்தது. பிரபஞ்சம் அழிந்தால்தான் ஆன்மாக்கள் அத்தனையும் தூய்மையாகி அவரின் அகத்துக்குள் உட் புகும். முன்பு இருந்த காலம் மிகவும் சோர்வை தந்து விட்டது அவருக்கு. அவர் உருவாக்கிய எந்த உயிருக்குமே சுய சிந்தனையே இல்லை. அனைத்தும் கால்நடைகளாக மட்டுமே இருந்தன. நல்லவேளையாக அதற்கு மேய்ப்பனாகவும் அவரே இருந்து விட்டார். ஆனால் எப்படி இருந்தும் அந்த காலத்தில் சுவாரசியம் என்பது துளியும் இல்லை.

ஆனால் இந்த முறை அப்படி இல்லை என அவருக்கு தெரியும். ஏனெனில் அவரால் எதிர்காலத்தைக் காண முடியும். இந்த பிரபஞ்சத்திற்குள் அனாதையாக வந்திருக்கும் ஆதியெனும் அன்பின் தேவதையால் இந்த பிரபஞ்சத்தின் வரலாறில் புது யுகம் எழுதப்படப் போகிறது என்றும் அவருக்கு தெரியும்.

தனக்குள் புதைந்துப் போயுள்ள அத்தனை ஆன்மாக்களும் புது பிறவிகள் எடுக்க போகின்றன என்றும் ஒவ்வொரு ஆன்மாவும் ஆயிரம், லட்சம், கோடி பிறவிகள் எடுக்க போகின்றன என்றும் அவருக்குத் தெரியும்.

அது அனைத்தையும் விட மிக முக்கியமான மற்றொரு விசயத்தையும் அவர் கணித்து வைத்திருந்தார். அதுதான் இந்த முறை காலத்தின் பிடியில் சிக்க போகும் ஆன்மாக்கள் அனைத்தும் தாங்களே எதிர்பார்த்திராத ஒரு வாழ்க்கையை வாழ போகின்றன என்று. ஆனால் அந்த எதிர்பார்த்திராத வாழ்வு தனக்குமே அமையும் என்பதை அந்த அப்பாவி கடவுள் அப்போது‌புரிந்துக் கொள்ளவில்லை போலும்.

மரத்தின் அடியிலிருந்து எழுந்து நின்றார். சோம்பலை முறித்தார். இவ்வளவு நாளாக சோம்பேறியாகவே இருந்து விட்டதன் காரணமாக இப்போது புது பணி செய்ய சிறு சலிப்பாக இருந்தது.

தனியாய் இருப்பதாக கவலைக் கொண்டவர் தன்னை இரண்டாய் நான்காய் பிரித்தார்.

"நான் பெண் உரு கொள்கிறேன்!" என்றபடி அங்கங்களை மாற்றி உருவமெடுத்தார் ஒருவர்.

"நான் ஆண்.." என்ற ஒருவர் தன் நினைவில் இருந்த ஆணின் உருவிற்கு மாறினார்.

"நான் ஆணும் பெண்ணுமாக மாறப் போகிறேன்!" என்ற மூன்றாவது கடவுள் தான் விரும்பியது போல மாறினார். நான்காம் கடவுள் தனக்கு பாலினம் அநாவசியம் என்றுச் சொல்லி விட்டார்.

கடவுள் ஒற்றையாக இருக்கையில் அவருக்கு பெயர் தேவைப்படவில்லை. ஆனால் இப்போது நால்வராக மாறி விட்டதில் பெயர் தேவைப்பட்டது.

"நான் ஆக்சிசன் என்று எனக்கு பெயர் சூட்டிக் கொள்கிறேன்!" என்றான் அந்த ஆண் கடவுள். மற்றவர்கள் சரியென தலையசைத்ததும் அங்கிருந்த பறந்து விண்வெளியை சுற்றிப் பார்க்க புறப்பட்டான்.

"நான் ஃபயர் என பெயர் தரிக்கிறேன்." என்ற பெண் கடவுள் அந்த பாலாற்று நதியில் நீராட கிளம்பினாள்.

"அக்வா என்ற பெயர் எனக்கு பிடித்துள்ளது. அதுதான் இனி என் பெயர்." என்ற இருபாலின கடவுள் தான் கற்பனை செய்த நடனத்தை ஆடிப் பார்க்க கிளம்பினார்.

பாலினத்தை தேர்ந்தெடுக்காத கடவுள் யோசித்தார். "ஹார்ட்.. இந்த பெயர் எனக்கு பொருந்துமா?" எனக் கேட்டார் அருகே நடனமாடிக் கொண்டிருந்த அக்வாவிடம்.

"ஓ.. நன்றாக உள்ளது. ஆமாம் அதன் அர்த்தம் என்ன?" என்றுக் கேட்டார் அவர்.

"எனக்கும் தெரியல.!" உதட்டை பிதுக்கியவர் தொடர்ந்து நடனம் ஆடினார்.

"எனக்கு நிறைய விசயங்கள் தெரிகின்றது போல் தோன்றுகிறது. பார்த்தாயா இந்த கை அசைவை? இது சுவர்கமா அண்டத்தின் முத்திரை. இதை சற்று மாற்றினால் யத்யரூபா பேரண்டத்தின் உருவிற்கு மாறும். தூரத்தில் இருந்து பார்த்தால்தான் அந்த பேரண்டம் இப்படி தெரியும். அருகில் சென்று பார்த்தாயானால் அது அப்படியே தலைகீழாக மாறி விட்டது போல் இருக்கும்." என்றார்.

"நிகழப்போகும் இந்த காலத்தில் உருவான முதல் பைத்தியம் நீதான் என்று தோன்றுகிறது!" என்ற ஹார்ட்‌ மஞ்சள் மரத்தின் அடியில் சென்று மீண்டும் அமர்ந்துக் கொண்டார்.

"இந்த முறை அன்பால் உருவாகப் போகிறது வாழ்க்கை. சுவாரசித்தை ரசிக்கலாம் நாம்!" என்றுவிட்டு கண்ணை மூடி அமர்ந்தார்.

ஆதியோ அழுகையை தவிர வேறு ஒன்றையும் நினைக்கவில்லை. அவளின் கண்ணீர் நெருப்போடு கலந்து காற்றாய் மாறியது. காற்று தண்ணீர் துளியாய் மாறியது. மேகங்கள் உருவாயின. கடல் உருவானது. அவளின் கண்ணீரால் நிரம்பிய கடல் அது. அவளின் சந்ததிகளுக்கு தெரியாது அந்த கடல் உவர்க்க காரணம் அது இந்த ஆதியின் கண்ணீரால் நிரம்பியதால்தான் என்பது பற்றி.

நாட்கள் மாதங்களாக நகர்ந்துக் கொண்டிருந்தது.

சத்திய தேவ உலகம் இன்னமும் அந்த இரண்டு உயிர்களுக்கும் துக்கம் அனுசரித்துக் கொண்டிருந்தார்கள். ஆதியை கொல்லும் முயற்சியில் தனது வீரன் ஒருவனையும் கொன்றிருந்தான் கவி. ஆனால் அது அவர்களுக்கு கணக்கு கிடையாது. தங்களுக்குள் கொன்றுக் கொல்லலாம். வெளியாட்கள்தான் கொல்ல கூடாது என்ற ஆக்கப்பூர்வமான கொள்கையை வைத்திருந்தார்கள் அவர்கள். (கடைசி வரியை கேலி கிண்டல் தொனியில் நீங்கள் படித்து விட்டு அதற்கு என்னை குறை சொல்ல கூடாது.)

அன்பின் தேவ உலகம் மாபெரும் பெரு வெளியிலிருந்து மறைந்துக் கொண்டிருந்தது. அந்த கிரகத்தில் புல் பூண்டு கூட இல்லை. நதிகளில் கூட ஓரறிவு உயிரியும் கூட இல்லை. பிறகு எதற்கு தான் இருக்க வேண்டும் என்று நினைத்தோ என்னவோ அந்த பெருவெளியிலிருந்து தன்னை காணாமல் போகச் செய்துக் கொண்டிருந்தது அந்த உலகம்.

செழினி இன்னும் தன் உலகத்துக்கு திரும்பி வரவில்லை. அவனை சத்திய தேவர்களாலும் கண்டறிய முடியவில்லை. எங்கோ ஒளிந்துக் கொண்டிருந்தான் அவன். அவனை கண்டுபிடித்து தருவோருக்கு ஐநூறு நெருப்பு பந்துகளை பரிசாக தருவதாக அறிவித்திருந்தான் கவி. ஆனால் யாரிடம் இருந்தும் இன்னும் தகவல் வரவில்லை.

இயல்பாய் சென்றுக் கொண்டிருந்த சத்திய தேவர்களின் நாளில் திடீரென்று வந்து சேர்ந்தது ஒரு பிரச்சனை. அங்கிருந்த பலருக்கும் என்னவோ பிணி பிடித்துக் கொண்டது. அனைவரும் பைத்தியம் போல நடந்துக் கொள்ள ஆரம்பித்தார்கள்.

கவியால் பிரச்சனையை பிரித்தறிய முடியவில்லை. தேவ உலகங்களுக்கு மருத்துவராக இருக்கும் வனியிடம் ஓடினான் கவி.

"வனி.. என் தேவர்களுக்கு ஏதோ பிரச்சனை. நீங்கள்தான் சரி செய்ய வேண்டும்." என்றுக் கேட்டான்.

வனி அலட்சியத்திலேயே ஊறி வளர்ந்தவன். ஆனாலும் வந்து கேட்டது கவி எனும் வீர தேவன் ஆயிற்றே. அதனால் உடனே கிளம்பினான். அவன் வந்துப் பார்த்தபோது கவியின் உலகத்தில் இருந்தவர்கள் பாதி பேர் அழுதுக் கொண்டிருந்தார்கள். சிலர் படுத்த இடத்தை விட்டு நகராமல் இருந்தனர். சிலரோ எங்கேயாவது வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். புரியாத மொழியில் சிலர் எதையோ பிதற்றிக் கொண்டிருந்தார்கள்.

அனைவரையும் சோதித்து விட்டு வந்தார் வனி.

"என்ன பிரச்சனை?" என்றுக் கேட்டான் கவி.

"உனக்கு என்ன பிரச்சனை என்று நீ முதலில் சொல்." என்றார் அவர்.

கவி ஆச்சரியப்பட்டான். "உங்களு.."

"எனக்கு எல்லாம் தெரியும். அதனால்தான் நான் மருத்துவன். நீ உன் பிரச்சனையை சொன்னால் நான் மருந்தை உரைப்பேன்." என்றவர் அவனின் பனி மரத்தின் கிளை ஒன்றின் மீது ஏறி அமர்ந்தார்.

அங்கே அமர்ந்தபடியே அந்த உலகத்தை நோட்டம் விட்டார். பெரும்பாலும் பனிதான் இருந்தது அந்த உலகத்தில். எங்கேயாவது அதிசயமாக சிறு நீல செடிகளும், அடர் நீல மரங்களும் இருந்தன.

ஆங்காங்கே இருந்த பனிமரத்தில் வசித்துக் கொண்டிருந்தார்கள் தேவர்களும், தேவதைகளும்.

சில பனி மரங்கள் அடர்ந்து பல கூடுகளோடு இருந்தன. தோய்ந்து இருந்த சில தேவ தேவதைகள் அந்த கூடுகளில் சுருண்டு படுத்திருந்தார்கள்.

மரங்களுக்கு இடையே ஆங்காங்கே பயிற்சிக் களங்கள் இருந்தன. ஆனால் அத்தனையும் இப்போது தூசால் நிரம்பி இருந்தது. பயிற்சி எடுத்து பல வருடங்கள் ஆகியிருக்கும் என்பது பார்க்கும்போதே புரிந்தது.

எப்போதும் தரையில் சீராக படர்ந்திருக்கும் பனி பூக்கள் இப்போது குப்பையாக குவிந்து கிடந்தன. அவ்வுலகமே தலைகீழாக மாறி விட்டது போலிருந்தது.

"எனக்கு என்னன்னா.." தயங்கினான் கவி.

"என்னவோ விடுப்பட்டது போல ஒரு உணர்வு. உடலில் இருக்கும் ஒரு உறுப்பை இழந்தது போல மனதுக்குள் எதையோ இழந்து விட்டதாக தோன்றுகிறது.. மகிழ்ச்சி வரவேயில்லை. துக்கம் பீறிட்டு வருகிறது. இங்கே எந்த பிரச்சனையும் இல்லை. பிறகேன் இப்படி ஓர் உணர்வு என்றுப் புரியவில்லை.!" சிறு குரலில் சொல்லி முடித்தான்.

வனி தன் கண்களை மூடினார். அவ்விடத்தின் சூழ்நிலையில் கலந்திருந்த விசயங்களை கிரகிக்க முயன்றார். சில மணி நேரங்களுக்கு பிறகு கண் விழித்தார்.

"உறங்கிட்டிங்களா?" என்றுக் கேட்டான் கவி.

முறைத்தவர் "பிரச்சனை புரிஞ்சது. நீ உன் நக்கலை நிறுத்து." என்றபடியே அந்த மரத்தை விட்டு கீழே குதித்தார்.

"தீர்வு என்ன?" எனக் கேட்ட கவியை முறைத்தவர் "முதல்ல பிரச்சனையை தெரிஞ்சிக்கோ. பிறகு தீர்வை பத்தி யோசிப்ப." என்றார்.

"ஓ.. சரி சொல்லுங்க.." என்றவன் அங்கிருந்து பனிதிட்டு ஒன்றின் மீது அமர்ந்தான்.

அவனை ஆராய்ந்தார் அவர். பூமியில் பிறக்கப்போகும் மனிதர்களின் அதே உருவத்தைதான் அவனும் கொண்டிருந்தான். ஆனால் அவர்களை விட சற்று உயரமாக இருந்தான். உயரத்துக்கு ஏற்ற உடல் அமைப்பையும் கொண்டிருந்தான். அவனின் உடல் பனிகட்டியை போல கடினமாக இருந்தன. அவன் கருப்பு நிறத்தில் இருந்தான். அவனை யாராலும் கொல்ல முடியாது. ஆனால் அவன் நினைத்தால் அவனைக் கொன்றுக் கொள்ளலாம். இடுப்பு வரை வளர்ந்திருந்த கூந்தலை மடித்து கட்டியிருந்தான். இடுப்பில் மட்டும் பனி மிருகத்தின் தோலால் தயாரிக்கப்பட்ட அழகான உடை ஒன்று இருந்தது. கழுத்திலும் கைகளிலும் பனி முத்துக்களால் ஆன மாலைகளை ஆபரணமாக அணிந்திருந்தான்.

"கலப்பு காதல் தவறில்லைதான். ஆனால் எனக்கு உங்களை பிடிக்கவில்லை மருத்துவரே. என்னை நேசிக்கும் எண்ணம் கொண்டிருந்தால் தயவு செய்து விட்டு விடுங்கள்." என்றான் கவி. அவரின் பார்வை கண்டு அவனுக்கு இப்படிதான் தோன்றியது.

"இந்த காற்றில் இருந்த அன்பு முழுவதும் மறைந்துப் போய் விட்டது. அதனால்தான் நீங்கள் இப்படி இருக்கிறீர்கள்." என்றார் அவர்.

அவனுக்குப் புரியவில்லை.

"அன்பு??"

"ஆமா. அன்பு என்பது உன் இதயத்தில் உள்ள ஈரம் போல. ஈரமற்ற இதயம் இருக்காது. அது போலதான் அன்பு இல்லாத இந்த உலகமும் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துக் கொண்டிருக்கிறது."

அதிர்ச்சியோடு எழுந்து நின்றவன் "நாங்க இதை எப்படி சரி செய்வது?" என்றான் அவசரமாக.

"இனி முடியாது. அன்பு என்பது அன்பின் தேவர்களுக்கு சொந்தமானது. அவர்கள் இருக்கும்வரை மட்டும்தான் இந்த காற்றில் அன்பு இருக்கும். அவங்க இப்போது முழுதாக அழிந்து விட்டார்கள். இனி உங்களை காப்பாற்ற யாராலும் முடியாது."

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN