கனவே 8

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
மீராவின் அன்றைய நாள் கேள்விக்கு நான்கைந்து வாரங்கள் கழித்துதான் பதில் சொன்னான் மகிழன்.

"நான் பெரிய பையனான பிறகு பதில் சொல்றேன்!" என்பதுதான் அந்த பதிலே.

மீரா சரியென்று தோள்களை குலுக்கினாள். "நான் மீரா. எனக்கு ஒரு அக்கா, ஒரு அண்ணன், ஒரு தம்பி இருக்காங்க.." என்றுத் தன்னைப் பற்றி அறிமுகப்படுத்திக் கொண்டாள்.

மகிழனுக்கு அவளை ஏதோ ஒரு விதத்தில் பிடித்திருந்தது. இவளை பற்றி நினைத்ததில் தனக்கு கோபம் வரும் என்று விசயம் கூட அவனுக்கு மறந்துப் போனது.

தோழியாய் இருந்தால் கூட போதும் என்று நினைத்ததுதான் பழக ஆரம்பித்தான். ஆரம்பத்தில் அவளோடு பேசவே மிகவும் சிரமப்பட்டான். அவள் வாயாடிப் பெண்ணாக இருந்தாள். அவனை எல்லா விசயத்திலும் கவிழ்த்துக் கொண்டிருந்தாள்.

அவனிடம் பாடத்தில் சந்தேகம் கேட்டாள். அவளுக்கு சந்தேகம் தீர்க்கவே அவன் அதிகமாக படித்தான். அவளிடம் நல்ல பையன் என்ற பெயர் வாங்கவே வழக்கத்தை விடவும் அமைதியானவனாக மாறினான்.

இருவரும் ஒன்றாக படித்தார்கள். ஒன்றாகவே விளையாடினார்கள். பள்ளி முடிந்து வீடு திரும்புகையில் அவளை அவளது தெருவில் விட்டுவிட்டு தனது வீடு நோக்கி சைக்கிள் ஓட்டினான் மகிழன்.

மீரா தன் வீட்டு பலகாரங்களை அவனுக்கு கொண்டு வந்து தந்தாள். அவனது பாட்டியிடம் சினேகம் பிடித்தாள்.

இருவரும் சேர்ந்து ஓசி ஸ்கூட்டி வாங்கி ஓட்ட பழகிக் கொண்டனர்.

இவர்கள் இருவரும் சேர்ந்து சுத்துவதை கண்டு பள்ளியில் சக மாணவர்கள் அரசல் புரசலாக தங்களின் வதந்தியை ஆரம்பித்தார்கள். நட்பாக பழகினாலே பாதி நேரம் இப்படிதான் பேச்சு கேட்க வேண்டி வரும். இங்கே சொல்லவா வேண்டும்? வதந்தி அளவுக்கு மீறியே பரவியது என்றுச் சொல்லலாம்.

"மீரா எல்லோரும் நம்மை தப்பா பேசுறாங்க." என்று பதினொன்றாம் வகுப்பு படிக்கையில் ஒருநாள் ஆரம்பித்தான் மகிழன்.

"அவங்க பேசினா நமக்கென்ன?" என்றாள் அவள்.

"உனக்கு பயமாவே இல்லையா?"

"எதுக்கு?"

"இப்படியெல்லாம் வதந்தி பரவினா உன் ப்யூச்சர் பாதிக்கப்படும் மீரா." கவலையாக சொன்னவனின் கன்னம் கிள்ளியவள் "என் ப்யூச்சரே நீதான். எனக்கு ஒரு பாதிப்பும் இல்ல." என்றாள்.

மகிழனுக்கு உண்மையிலேயே வெட்கம் வந்தது. மீரா தன்னோடு பேசிய அந்த முதல் நாளுக்கு பிறகு பல புத்தகங்களை தேடி படித்தான். சிறுவர்களுக்கு வரும் ஈர்ப்பை எப்படி நீங்க செய்வது என்று தேடித் தேடிப் படித்தான். அது உண்மையாகவே ஈர்ப்பாக மட்டுமே இருக்கும்பட்சத்தில் கால போக்கில் அந்த ஈர்ப்பு மறைந்துப் போய் விடும் என்பதை மட்டும் புரிந்துக் கொண்டான்.

நண்பனாக எண்ணிதான் பழக நினைக்கிறாள் போல என்று எண்ணி அவளிடம் பேச ஆரம்பித்தான். ஆனால் அவளின் எண்ணம் மாறவில்லை என்பது அவனுக்கு தினமும் புரிந்தது.

அவளோடு பழக பழக அவளை பிடித்துப் போயிற்று அவனுக்கு. திரைப்படங்களில் வந்த நாயகிகள் அனைவரும் மீராவின் அழகின் முன் தோற்றுப் போவது போல தோன்றியது அவனுக்கு. எதிர்காலத்தை பற்றி என்ன கனவு கண்டாலும் அதில் மீராவும் இருந்தாள்.

அவன் காவல்துறை அதிகாரி ஆனால் அவள் மருத்துவராகி அவனோடு சேர்ந்து சிரித்துக் கொண்டிருந்தாள். அவன் ஆசிரியராக ஆனால் அவள் இன்ஜியராகி அவனோடு பேசினாள். மீண்டும் ஏதாவது தவறு செய்து, இந்த முறை ஜெயிலுக்கே கூட போய் விடுவோமோ என்றுக் கூட நினைத்துப் பல நேரங்களில் பயந்தான். ஆனால் அப்போதும் கூட சிறை கம்பியின் அந்த பக்கம் நின்று இவனை அழுதப்படி பார்த்தாள் மீரா. அவனுக்கு இந்த நினைப்பு வரும்போதெல்லாம் திக்கென்று இருக்கும். அவளோடு சேர்ந்த தன் எதிர்காலம் மிக சிறப்பாக அமைய வேண்டும் என்று மட்டும்தான் எதிர்பார்த்தான்.

அவனின் பயம் வீண் என்பது விரைவிலேயே அவனுக்குப் புரிந்துப் போனது. ஏனெனில் அவளோடு பழகுகையில் அவன் மனம் பூனைக் குட்டிப் போல குறுங்கிப் படுத்துக் கொண்டது. அவனே பல நேரங்களில் தன் உணர்வுகளை தட்டி எழுப்ப வேண்டியதாக இருந்தது. ஆனால் அந்த கலை மீராவுக்கு நன்றாக வந்தது. அவனை கையாள நன்றாக கற்றுக் கொண்டு விட்டாள். அவனைச் சிரிக்க, முறைக்க, வெட்கப்பட வைக்க என அனைத்தும் அவளால் செய்ய முடிந்தது.

அவளின் கையாட்டி பொம்மையாக இருப்பது அவனுக்கு பிடித்திருந்தது. அது ஒரு வலை. அவளிடம் சிக்கிக் கொண்டிருந்தான். தப்பிக்க வேண்டும் என்று கனவில் கூட நினைக்கவில்லை.

பத்தாம் வகுப்பில் ஒருமுறை ஒருவாரம் விடுமுறை எடுத்துக் கொண்டாள். அவனுக்கு தன்னையே தொலைத்தது போல இருந்தது. நட்போ, காதலோ ஆனால் அவளின் அன்புக்கு அடிக்ட் ஆகி விட்டிருந்தான். அது மட்டும் நிஜம்.

ஒருவாரம் கழித்து வந்தவள் முதல் முறையாக வெட்கப்பட்டாள்.‌ அவளுக்கு வெட்கப்பட தெரியும் என்பதை அவன் அறிந்த நாள் அது.

"ஏன் ஒரு வாரமா நீ ஸ்கூல் வரல? எனக்கு போர் அடிச்சது. ஃப்ரீ ஹவர்ல கூட டெஸ்க்லயே தூங்கிட்டு இருந்தேன்." என்றான்.

"சாரிப்பா..‌ நான் பெரிய பொண்ணாயிட்டேன். எங்க வீட்டுல சடங்கு செஞ்சாங்க. என் மாமன்கள் இரண்டு பேரும் என்னை கொடுமை பண்ணிட்டாங்க.."

"அச்சோ என்னாச்சி?" கவலையாக கேட்டான். கேலி கிண்டல் ஏதாவது செய்து அவளின் மனதை உடைத்து விட்டிருப்பார்களோ என்று சந்தேகித்தான். அவர்களை அடித்து நொறுக்க சொன்னது மனம்.

"சொந்தக்காரங்க எல்லோரும் நிறைய ஸ்வீட்ஸெல்லாம் வாங்கிட்டு வந்து தந்தாங்க.. ஆனா இந்த புண்ணாக்குங்க என் மைவிழி அக்காவோடு சேர்ந்து என் ஸ்வீட்ஸ் முழுக்க சாப்பிட்டு தீர்த்துட்டாங்க." என்றாள் உதட்டை பிதுங்கியபடி.

இதெல்லாம் குறையா என நினைத்தவன் மறுநாளே தன் பாட்டியிடம் பலகாரங்கள் நிறைய செய்ய சொன்னான்.‌ அதில் பாதியை மீராவுக்குதான் பார்சல் செய்தான்.

அவர்களின் வாழ்க்கை நன்றாகதான் போய் கொண்டிருந்தது. ஆனால் கல்லூரி முதலாம் ஆண்டு முடிந்ததும் மகிழனிடம் ஓடி வந்தாள் மீரா.

"எனக்கு நாளையிலிருந்து பத்தொன்பது. இப்ப சொல்லு.. நீ என்னை லவ்வரா ஏத்துக்கிறியா?" என்றுக் கேட்டாள்.

மகிழனுக்கு அதிர்ச்சிதான். "நா.. நாளைக்கு சொல்றேன்!" என்றான்.

விடிய விடிய யோசித்தான். அவளை விலகி இருப்பது தன்னால் முடியும் என்று அவனுக்குத் தோன்றவேயில்லை. அவள் வாழ்நாள் முழுக்க தேவைப்பட்டாள். அவளின் ஓயாத பேச்சை கேட்டுக் கொண்டிருக்கும் தன் அப்பாவி காதுகளுக்காகவாது, அவளை காணும் போதெல்லாம் மனதுக்குள் ஏற்படும் நிம்மதிக்காகவாவது, தன் எதிர்கால கனவுகள் அனைத்தும் அதே போல நிஜத்திலும் நடக்க வேண்டும் என்பதற்காகவாவது அவள் தேவைப்பட்டாள்.

மறுநாள் அவளுக்கு பிறந்தநாள் பரிசாக தன் காதலை தந்தான். "ஐ லவ் யூ." என்றான் சுருக்கமாக.

இது அவள் எதிர்பார்த்ததுதான். அவ்வளவு நம்பிக்கை அவன் மீதும்,‌ தன் காதல் மீதும்.

ஆனால் அந்த காதலை தான் இப்போதைக்கு சொல்லியே இருக்க கூடாது என்று மகிழன் நினைக்கும் அளவிற்கு அவனை களவாட ஆரம்பித்து விட்டாள் அவள். அவனின் நேரங்களை, கனவுகளை, பாச நேசங்களை, அவனின் சிறு சிறு உணர்வுகளை என அனைத்தையும் அவளே திருடிக் கொண்டு விட்டாள்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN