கனவே 9

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அவளைப் போல தன்னைக் காதலிக்க யாரால் முடியும் என்பது அவனின் கேள்வியாக இருந்தது. அவனை காதலிப்பது போல வேறு யாரை தன்னால் காதலிக்க இயலும் என்பது அவளின் கேள்வியாக இருந்தது.

மகிழன் அவளுக்காக உடற் கட்டு குறையாமல் பார்த்துக் கொண்டான். மீரா அவனுக்காக தன் அழகில் அதிகம் கவனம் செலுத்தினாள்.

அவர்கள் இருவரும் அதிகாரப்பூர்வமாக காதலிக்க ஆரம்பித்த சில நாளில் மைவிழிக்கு திருமணம் நடந்தது. மாப்பிள்ளை கதிர் ஆரவல்லிக்கு தூரத்து சொந்தம். பாட்டியை வீட்டில் விட்டுவிட்டு மகிழன் திருமணத்திற்கு கிளம்பினான். அன்றுதான் மீரா தன் காதலன் யாரென்று அக்காவிற்கும் மற்றவர்களுக்கும் அறிமுகம் படுத்தி வைத்தாள்.

"இந்த வயதில் காதல் தப்பு." என்றாள் மைவிழி.

"நீங்க இப்படியே சொல்லுங்க அக்கா. அப்பதான் நாங்க சின்ன சின்ன விசயத்துக்கும் உடனே சேர்ந்துப்போம்." என்றவளை புரியாமல் பார்த்தாள் மைவிழி.

"நாங்க இரண்டு பேரும் ரொம்ப விரும்புறோம். ஆனாலும் என்னோடு படிக்கும் மத்த பசங்க எங்களோட அன்பை எப்போதும் தப்பா சொல்லிட்டே இருப்பாங்க.‌ அவங்க அப்படி சொல்லும் போதெல்லாம் எனக்குச் சிரிப்புதான் வரும். எங்களோட காதலை உங்ககிட்ட ப்ரூவ் பண்ண வேண்டிய அவசியம் கிடையாது. ஆனா உங்களின் சந்தேகத்துக்காகவாவது நாங்க எங்க காதலை எங்களுக்குள்ள தினம் ப்ருவ் பண்ணிட்டு இருக்கோம்." என்றாள்.

மைவிழிக்கு ஒன்றும் புரியவில்லை. தன்னால் முடிந்த அளவிற்கு அறிவுரைகளை தந்து விட்டு அமைதியாகிக் கொண்டாள்.

ஆனால் ஒருநாள் மைவிழியும், கதிரும் கண்காட்சி ஒன்றில் ராட்டினம் சுற்றிக் கொண்டிருந்த நேரத்தில் மீரா மகிழனுக்கு முத்தம் தந்துக் கொண்டிருந்ததை கண்டு அதிர்ந்துப் போய் விட்டாள்.

தங்கையை அழைத்துத் திட்டித் தீர்த்தாள்.

"நீ நினைக்கிற அளவுக்கு இல்ல.. சும்மா கன்னத்துல தந்தேன்.‌ நீ ராட்டினத்துல இருந்து பார்த்ததுக்கு லிப் கிஸ் மாதிரி இருக்கும்." என்றவளின் கன்னத்தில் ஓங்கி ஒன்று அறைந்தாள்.

"வயசு பொண்ணு மாதிரியா நடந்துக்கற? பொது இடத்துல அப்படி என்ன கிஸ்? அதுவும் இன்னும் காலேஜ் கூட முடிக்கல. கல்யாணம் பண்ணிக்கதானே போறிங்க.? அதுக்குள்ள இரண்டு பேரும் பிரிஞ்சி வேற யாரையாவது கட்டிக்க போறதில்லையே! பிறகேன் இப்படி?" என்றுக் கத்தினாள்.

"அக்கா.. நீ இப்படி சீன் போடுற அளவுக்கு பெருசா ஒன்னும் நடந்துடல. இது ஜஸ்ட் ஒன் கிஸ். நான் கேட்டா அவன் தர மாட்டான். அதனாலதான் அவன் கவனிக்காத சமயத்துல நானே தந்தேன். நீ பயப்படுற அளவுக்கு ஒன்னும் இல்ல. அவன் ரொம்ப கட்டுப்பாடு. அவனை சீண்டிட்டே இருக்கணும்ன்னு என் தலைக்குள்ள பூச்சி கத்திட்டு இருக்கு. இதெல்லாம் ஒரு விளையாட்டு. உனக்குப் புரியாது. நீ இதை கண்டுக்காத!" என்றுவிட்டு நகர்ந்து விட்டாள்.

மைவிழிக்குதான் தலையை பிய்த்துக் கொள்ள வேண்டும் போல இருந்தது. மீரா எல்லாம் தெரிந்தே பேசினாள். எல்லாம் புரிந்தும் கூட அவள் விருப்பத்திற்கே நடந்துக் கொண்டாள்.

கல்லூரி இரண்டாம் ஆண்டில் ஒருநாள் மகிழனை தன் தாய் தந்தை, அண்ணனிடமும் அறிமுகப்படுத்தி வைத்தாள். அவர்களுக்கு மகிழனை பார்த்த கணமே பிடித்துப் போய் விட்டது.

அதற்கு காரணமும் இருந்தது. மீராவின் பெரிய அக்கா வேதா. அவளுக்கு பல வருடங்களுக்கு முன்பே திருமணம் நடந்து விட்டது. ஆனால் அவளின் கணவன் கையாலேயே கத்தி குத்துப்பட்டு இறந்துப் போனாள் அவள். அக்கா இறந்ததன் காரணமாகவே மைவிழிக்கு வெளி ஆண்களை பிடிக்கவில்லை. அவளுக்கும் கதிருக்கும் திருமணம் செய்து வைக்கவே இவர்களுக்கு பெரிய பிரயத்தனமாக இருந்து விட்டது.

மீராவும் அப்படி இருந்து விடுவாளோ என்று நினைத்திருந்த நேரத்தில் இவ்வளவு அம்சமான பையனை அழைத்து வந்து பல வருட காதல் என்றுச் சொன்னதாலோ என்னவோ அவனை பற்றிய பின்புலத்தை விசாரித்து விட்டு தங்களின் மாப்பிள்ளை என்று ஏற்றுக் கொண்டு விட்டார்கள். ஆரவல்லியின் வீட்டிற்கு அவ்வப்போது போய் வந்தாள் அம்மா. ஆரவல்லியும் இவர்களின் வீட்டிற்கு வந்து கதை பேசினாள்.

"எட்டாவதுல இருந்து லவ் பண்றோம்ன்னு வெளியே சொல்லாத மீரா. அது தப்பு." என்று மீராவிடம் ஒருநாள் சொன்னான் மகிழன்.

"நான் உண்மையைதான் சொல்றேன் மகி. நான் உன்னை அப்போதிருந்தான் லவ் பண்றேன். அது ஈர்ப்பா கூட இருந்திருக்கலாம். ஆனா எத்தனை ஈர்ப்பு காதல் வரை தொடருது? என்னோடது தொடர்ந்ததே. அப்படின்னா இது லவ்தானே?" என்றுக் கேட்டாள்.

"பைத்தியம். அது லவ் இல்ல." என்றவன் சொன்னதை அவள் என்றைக்கு ஏற்றுக் கொண்டு இருந்திருக்கிறாள்? பார்வையற்றவன் கையில் தந்த ப்யூஸ் போன பல்பு போன்றது அவளுக்கு புத்தி சொல்வது.

"மகி.. இந்த வாரத்துல கிளம்பலாமா?" அவனின் அறை வாசலில் வந்து நின்றுக் கேட்டார் வசந்த்.

"நா.. நான் வரல.." என்றான் முகத்தை கைகளால் மூடிக் கொண்டு‌. முகத்தை கர்ச்சிப்பால் மறைந்திருந்தும் கூட கைகளில்தான் முகம் புதைத்து இருந்தான்.

இதே மீராவை பார்க்கும் முன் என்றால் இந்த விசயத்தை ஓரளவு சாதாரணமாக எடுத்துக் கொண்டு இருந்திருப்பானோ என்னவோ? ஆனால் இப்போது அதிகம் வெந்தான். அவனுக்கு என்ன எண்ணம் என்று நொடி கூட யோசிக்கவில்லை. மீரா என்ன நினைப்பாள் என்று மட்டும்தான் யோசித்து கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தான்.

"சின்ன குழந்தைப் போல அடம் பிடிக்காத மகி. உன் நல்லதுக்குதான் கூப்பிடுறேன். நீ பழையபடி வெளியே நடமாடணும்ன்னுதான் எங்களுக்கும் ஆசை. கொஞ்ச மாசம். உன் முகம் சீராகிடும்." என்றார்.

"ஆனா என் பழைய முகம்தான் வேணும். அதுதான் என் மீராவுக்கு பிடிக்கும்." என்றவனை முறைத்தான் அங்கே வந்த அகிலன்.

"ஸ்டாப் இட் மகி. உனக்கு எங்களை விட அந்த எவளோ ஒருத்திதான் முக்கியமா போயிட்டாளா? அவ உன்னை அழகுக்காக காதலிச்சிருக்கான்னா அதுக்கு நீ இப்ப ப்ரீ ஆனதா சந்தோசப்படணுமே தவிர கவலைப்படக் கூடாது." என்றான்.

"அவளை பத்தி தப்பா சொல்லாத. நான் உன்னை கொன்னுடுவேன்." என்று தன் அருகே இருந்த பால் டம்ளரை தூக்கி வீசினான். டம்ளர் அகிலனின் காலடியில் வந்து விழுந்தது. பல மணி நேரம் முன்பே வித்யா கொண்டு வந்து இந்த பாலை வைத்துவிட்டுப் போயிருந்தாள். அதனால் ஆறி போயிருந்தது பால்.

"முட்டாளுக்கு சொன்னா எப்படி புரியும்? நீயே ஒருநாள் புரிஞ்சிப்ப. அன்னைக்கு வந்து என்கிட்ட மன்னிப்பு கேட்ப!" என்றவன் தம்பியை வெறித்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.

வசந்த் அவனருகே வந்து அமர்ந்தார்.

"ப்ளீஸ் மகி.. உனக்காக வா. எனக்காக வா. உன் அம்மா அழுதுட்டே இருக்கா. பாட்டி சரியா சாப்பிடுறதே இல்ல. வித்யா புகுந்த வீட்டை விட்டுட்டு உனக்காக இங்கே வந்து தவமா கிடக்கறா.. உன்னையும் அந்த பொண்ணையும் பிரிக்கணும்ன்னு ஒருகாலத்துல நினைச்சேன் நான். ஆனா இப்ப அந்த பொண்ணு உன்னை ஏத்துக்கணும்ன்னு ஆண்டவன்கிட்ட வேண்டிட்டு இருக்கேன். ப்ளீஸ் எங்க எல்லோருடைய நிலையையும் புரிஞ்சிக்கோ. நீயும் கொஞ்சம் யோசி. இது உனக்காகதான். நீ பழையபடி சந்தோசமா மாறலன்னா இந்த வீடு இன்னமும் இருண்டுதான் போகும். அட்லீஸ்ட் அந்த பொண்ணுக்காகவாவது நினைச்சிப் பாரு. இந்த முகத்தோடு போவதை விட கொஞ்சம் சீர்ப்பட்ட முகத்தோடு போனா அவ உன்னை ஏத்துக்க ஓரளவுக்கு வாய்ப்பு இருக்கு இல்லையா?" என்றுக் கேட்டார். மகன் தன்னோடு மருத்துவ சிகிச்சைக்கு வர வேண்டும் என்று தன்னால் இயன்றவரை கெஞ்சிக் கொண்டிருந்தார் அவர்.

அறையின் வாசலில் நின்று அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த அகிலனுக்குதான் ஆத்திரமாக வந்தது. 'ச்சே.. ஏதோ ஒரு பொண்ணுகாக எங்களைப் பத்தி யோசிக்காம போயிட்டான். லவ்வாம் லவ்வு! எல்லாம் வெறும் அழகு மேல வந்த ஈர்ப்பு. சின்ன பையன்தானே? இன்னும் இரண்டு மூணு வருசம் போனா எல்லாத்தையும் அவனே புரிஞ்சிக்க போறான்.' என்று நினைத்தான் அவன்.

மகிழன் யோசித்தான். அப்பா சொன்னது சரியென்றுதான் மனதிற்கு தோன்றியது. தனக்காக இல்லாவிட்டாலும் மீராவுக்காக என்று நினைத்தான்.

ஒரு வாரம் இதே யோசனையில் இருந்தவன் தன் அறையை விட்டு வெளியே வந்தான். மாடியில் இருந்தபடி வீட்டை கவனித்தான். பாட்டி சோபா ஒன்றில் சரிந்து அமர்ந்திருந்தாள். தாத்தாவின் நினைவில் தன் வீட்டில் இருந்தவள் அவள். இன்று இவனுக்காக இடம் பெயர்ந்திருக்கிறாள். அவளின் மன வேதனையை அவனாலும் புரிந்துக் கொள்ள முடிந்தது. அந்த வீட்டில் இருக்கையில் தினமும் தாத்தாவின் படத்தை வணங்கி விட்டுதான் எழுந்து வேலையே பார்ப்பாள்.

தூண் திண்ணையிலிருந்து, கதவு ஜன்னல் வரை தாத்தாவின் நினைவுதான் நிறைந்திருக்கும் அங்கே. பேரன் மீது கொண்ட பாசத்தால் வந்து விட்டவள் அவள். விரைவில் அவளை பழைய வீட்டிற்கு அழைத்துச் சென்றுவிட வேண்டும் என்று தனக்குள் சொல்லிக் கொண்டான் மகிழன்.

அம்மா டைனிங் டேபிளில் தலைசாய்த்துப் படுத்திருந்தாள். வித்யா சூடான பாலை கொண்டு வந்து அவளிடம் வைத்தாள்.

"ப்ளீஸ்ம்மா குடிங்க.. தம்பி நல்லாகிடுவான்." என்றாள்.

மகிழனுக்கு கண்கள் கலங்கியது. கணவனை விட்டு பிரிய யோசிப்பவள் வித்யா. இன்று தனக்காக வந்து இங்கே இருக்கிறாளே என்று பெருமூச்சு விட்டான். அப்பா சொன்னது போல அந்த வீடு இருளடைந்துதான் கிடந்தது. கலகலப்பே இல்லை. அவன் தப்பு செய்து விட்டு வந்த நாட்களில் கூட இப்படி இருந்ததில்லை.

"அப்பா நான் ஆபரேஷன் பண்ணிக்கிறேன்!" என்றான்.

வசந்த் நிம்மதியில் அவனை அணைத்துக் கொண்டார்.

"தேங்க்ஸ் மகி!" என்றார்.

உண்மையில் இந்த விசயத்தில் அவன்தான் கெஞ்சியிருக்க வேண்டும். பணத்தை கொட்டி மொத்த முகத்தையும் சீர்செய்வது எவ்வளவு பெரிய வேலை என்று அவனுக்கும் தெரியும். ஆனால் தனது பிடிவாதத்தால் தனது பயத்தால் தனக்கே எதிரி ஆகி போனோமே என்று கவலைக் கொண்டான்.

அவன் சிகிச்சைக்காக கிளம்பிய பிறகே அந்த வீட்டில் இருந்தவர்களுக்கு நிம்மதி பிறந்தது.

மறு பக்கத்தில் மீரா கரைந்துக் கொண்டிருந்தாள். வீட்டில் அப்பாவையும், அண்ணனையும் தவிர மற்ற அனைவரும் அவளைத் திட்டினார்கள். அவள் மகி என்ற ஒரு வார்த்தை சொன்னாலே அனைவரும் எரிந்து விழுந்தார்கள்.

"இன்னொரு முறை அவனை நினைச்சி இப்படி சாப்பாட்டை தள்ளி வச்சா அப்புறம் நான் உனக்கு விஷமே வச்சிடுவேன் மீரா." என்று பொய்யாக மிரட்டினாள் மைவிழி.

மகிழன் அருகில் இல்லாமல் இருப்பதற்கு அப்படியே சாகலாம் போல தோன்றியது அவளுக்கு.

தன்னேயே இழந்து விட்டது போன்று ஒரு எண்ணம் அவளுக்கு.

எத்தனை நாள்தான் இவளையும் இவள் போக்கிலேயே விடுவது?

அவளை முதுகலை படிப்பில் சேர்த்து விட்டார்கள். அவளோடு முன்பு படித்த முக்கால்வாசி பேர் இப்போதும் சக மாணவர்களாக இருந்தனர்.

அவளின் காதலையும், காலையும் வெளிப்படையாகவே விமர்சித்தனர்.

"பத்தினி தெய்வம்ப்பா.. எட்டாவதுல இருந்து காதலிச்சி இருக்கா.." என்று கிண்டல் செய்தான் சத்யன்.

"ஏன்ம்மா நொண்டி பெண்ணே.. உன் காதலன் உன் காலை பார்த்துட்டே ஓடி போயிட்டானா?" எனக் கேட்டான் ஆர்யா.

அவளுக்கு கோபமாக வந்தது. அவளை உடைக்க மகிழனை தவிர வேறு யாராலும் முடியாது.

"நீ என்ன யோக்கியமா? நேத்து ஒருத்தி இன்னைக்கு ஒருத்தின்னு சுத்திட்டு இருக்கற நாதாரி நீ. என் லவ்வை தப்பு சொல்ல உனக்கு என்ன உரிமை இருக்குடா ***?" என்று சத்யனை காய்ந்தாள்.

ஆர்யாவின் புறம் திரும்பியவள் "எனக்கு கால் மட்டும்தான் குறை. ஆனா என்னால வாழ முடியும். ஆனா உன்னை மாதிரி மனசுல குறையோடு இருப்பவங்களால வாழ முடியாது. சீக்கிரம் சரி பண்ணிக்கோ.. இல்லன்னா செத்துட போற." என்றாள்.

அந்த வகுப்பில் இருந்த மொத்த மாணவர்களும் அசந்து போனார்கள் இவள் திட்டுவதைக் கண்டு. அனைவரும் ஆர்யாவையும், சத்யனையும் கேலி செய்தார்கள்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN