தேவதை 5

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
இவ்வளவு காலம் அனாதையாக இருந்த ஆதி இப்போது தன்னைச் சுற்றிலும் இருந்த மற்ற ஜீவன்களை கண்டு அழுகையை குறைத்துக் கொண்டாள்.

அன்பு அப்படிதான். அதற்கு எந்த கோபமும், ரோசமும் கிடையாது. ஒரு சிறு காரணம் போதும், துள்ளித் திரிய!

ஆதியின் மனம் பூங்கொத்தாக மாறியது. அவளின் சுவாசமும், வாசமும் அந்த உலகில் பரவ ஆரம்பித்தது.

இவ்வளவு நாள் அனாதை போல படுத்துக் கிடந்த பலரும் புத்துணர்வு பெற்று எழுந்தார்கள். அவர்களின் மேனி சோர்வும், மனதின் பாரமும் மெள்ள மெள்ள மறைந்தது.

அவளுக்கு காவலாக இருந்த இரு பெண்களும் விரைவிலேயே அவளுக்கு நெருங்கிய நண்பர்களாக மாறி விட்டார்கள்.

"ஆதி நீ ரொம்ப அழகு!" எனச் சொல்லி அவளுக்கு பனிப் பூக்களை தினமும் பரிசாக அளித்தனர்.

அந்த பனிக்கட்டியால் உருவான கம்பி கதவுகளின் வழியே அப்பூக்களை பெற்று மாலையாய் கோர்த்து தன் கழுத்தில் அணிந்துக் கொள்வாள் ஆதி. அவளுக்கு அப்படிதான் பிடித்திருந்தது. அந்த பனி பூக்கள் பல வித வண்ணங்களில் இருந்தன‌. அனைத்தும் சிறு இதழ் தரித்த அழகுப் பூக்கள். அந்த உலகில் இருக்கும் பனி மரங்களில் அதிசயம் போல் பூக்கள் பூக்கள். இப்போது இவள் வந்த பிறகு அந்த பூக்களின் பூக்கும் திறன் அதிகரித்திருந்தது.

அவ்வுலகத்தில் இருந்த யாருக்குமே பூக்கள் மீது ஈடுபாடு கிடையாது. அதனாலேயே அவளுக்கு இந்த பூக்களை கொண்டு வந்து தந்தார்களோ என்னவோ? ஆனால் ஆதி பூ மாலையை அணியும் போது வசீகரமாக இருப்பாள். அது அங்கிருந்த அனைவருக்கும் பிடித்து இருந்தது.

சத்திய தேவர்களும், தேவதைகளும் ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி அந்த சிறை குகையையே சுற்றிக் கொண்டிருந்தார்கள். அவளின் அருகாமையை வேண்டினார்கள்.

அந்த உலகம் மெள்ள பழைய நிலைமைக்கு திரும்பி வந்தது. பயிற்சி மைதானங்கள் மீண்டும் பழையபடி செயல்பட ஆரம்பித்தது. தேவர்களும் தேவதைகளும் வாள் சுழற்றினார்கள். இதுவரை அவர்கள் போட்டிராத எல்லை வரை கூட சண்டை போட்டார்கள்.

அனைத்தையும் தூரத்தில் இருந்துப் பார்த்துக் கொண்டிருந்தான் கவி. அவனுக்கு பெரும் வியப்பாக இருந்தது. அந்நியள் ஒருத்தியால் தன் உலகில் இவ்வளவு பெரிய மாற்றாங்களா என்ற ஆச்சரியத்தில் இருந்தான். அவன் எந்த விசயத்தில் கலந்துக் கொள்ளவில்லை. ஆனால் அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்தான்.

அவன் சுயநலக்காரன். அந்த உலகமே சுயநலத்தால் நிறைந்ததுதான். அவர்களுக்கு ஆதியின் அன்பு புன்னகைகள் மிகவும் ஆச்சரியமாக இருந்தன.

"அந்த தேவதையை கைது பண்ணி வைக்கவா உன்னை கூட்டி வர சொன்னேன்?" ஒருநாள் அந்த உலகிற்கு வந்த வனி சோகமாக கேட்டார்.

"அவ சந்தோசமா இருக்கா." என்றான் கவி.

ஆமாம் அவள் சந்தோசமாக இருந்தாள். அதை விட அவளுக்கு வேறு என்ன வேண்டும்?

"ஆனா நீ அவளோட உரிமையை பறிச்சிட்ட! அவ ஒரு குழந்தை. அவளை விட்டுடு. அவளுக்கு அவளோட உலகம்தான் இல்ல. இங்கேயாவது பறந்து திரியட்டும். அவ ஒரு அனாதை. உன் மக்களோடாவது கலந்து பழகட்டும். அவ உங்களை காப்பாத்த வந்திருக்கா. அதை அவகிட்ட இருந்து மறைச்சி அடைச்சி வைக்க உனக்கு என்ன உரிமை இருக்கு?" என்று கோபமும், வருத்தமுமாக கேட்டார் அவர்.

"பேசி குழப்பாதிங்க வனி. செழினி செஞ்ச தப்புக்கு நான் இவளையும் என்னைக்கோ கொன்னிருப்பேன். ஆனா இவளை கொல்ல முடியாம போச்சி. இப்ப இவளால என் உலகம் பழைய நிலைமைக்கு வந்திருக்கு. அதுக்கு பரிசா நான் அவளுக்கு உயிர் பிச்சை தரேன்." என்றான் அவன்.

வனி அவனை அதிர்ச்சியோடு பார்த்தார்.

தேவன் வடிவில் ஒரு ராட்சசன் அவன் என்பது மட்டும் அவருக்குத் தெளிவாக புரிந்தது.

"நீ எவ்வளவு பெரிய தப்பு செய்றன்னு உனக்குப் புரியல. சீக்கிரமே நீ ரொம்ப வருத்தப்படுவ.!" என்று விட்டு அங்கிருந்துச் சென்றார்‌ அவர்.

ஆதியின் தோழிகளும் தோழர்களும் ஒருநாள் கவியை தேடி வந்தார்கள்.

"ஆதியை சிறையிலிருந்து விடுவிங்க ஏந்தலே!" என்று வேண்டுக்கோள் விடுத்தனர்.

கவி அவர்களை முறைத்தான்.

"அவ ஆபத்தானவள். ஏற்கனவே செழினியால் இரண்டு உயிர் போயிருக்கு. அப்பவும் உங்களுக்கு போதலையா?" என்றான் கோபமாக‌.

எதிரில் வந்து நின்றவர்கள் கவலையோடு தலைக் குனிந்தனர்.

"அவளை சிறைக்குள் வைத்து பார்க்க மனம் வாடுகிறது ஏந்தலே!" சிறு குரலில் சொன்னாள் ஒருத்தி.

"அவள் ஆபத்தானவள்!" அவன் மீண்டும் அதையேதான் சொன்னான்.

"இல்ல. அவ அப்படி இருக்க வாய்ப்பு இல்ல. அவளோடு நீங்கள் பழகவில்லை. அவளின் அன்பும், ஆசையும் தனித்துவமானது. எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாதது. அவளை எங்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது. அவள் சில சமயங்களில் சிறு குழந்தையின் புன்னகையை நினைவுப் படுத்துக்கிறாள்!" என்றான் ஒருவன்.

ஆத்திரமாக வந்தது கவிக்கு. கேவலம் தன் முன்பே எவளோ ஒருத்தியை தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்களே என்று எரிச்சலடைந்தான். ஆனால் அவன் தன் மக்களுக்காக வாழ்பவன். அதனால் அவர்களின் வேண்டுக்கோளை தட்ட முடியவில்லை.

அளவுக்கு அதிகமாக யோசனை செய்துவிட்டு ஆதியின் சிறை கதவை திறந்தான். அவளை தன்னோடு இழுத்துக் கொண்டு அந்த உலகின் மறுபக்கத்துக்கு சென்றான். அங்கே தேவ தேவதைகள் நடமாட்டம் இல்லாத ஒரு இடத்தில் அவளைப் பிடித்துத் தரையில் தள்ளினான். அவளின் கழுத்தில் தன் கத்தியை வைத்தான். வெந்து தணிந்தது அவளின் கழுத்து. கருப்பென்று காயம் கூட இல்லை. அவளிடமிருந்து கத்தலும் இல்லை இம்முறை. இந்த சில வருடங்களில் பால் வெளி அண்டத்தில் அநியாயத்திற்கு அழுது விட்டதன் காரணமாகவோ என்னவோ அவளுக்கு இப்போதெல்லாம் அழுகையும், கண்ணீரும் அநாவசியமாகி விட்டன.

கவி கோபத்தில் தன் கத்தியை தூக்கி தூர எறிந்தான்‌.

"இங்கே பார் பெண்ணே! உனக்கு ஒரே ஒரு கட்டளை மட்டும் விதிக்கிறேன். நீ மிகவும் ஆபத்தானவள் என்று எனக்குத் தெளிவாக தெரியும். உனக்கு எங்கள் உலகின் மீது கோபம் இருக்கும். நீ பழி வாங்க நேரம் பார்த்துக் கொண்டிருப்பாய் என்றும் தெரியும். ஆனால் இவர்கள் என் மக்கள். இவர்களின் பாதுகாப்பிற்கு சிறிதும் துயரம் ஏற்படுவதைக் கூட நான் விரும்பவில்லை. நான் உனக்கு உயிர் பிச்சை தந்துள்ளேன். அதனால் நீ அதை மனதில் வைத்துக் கொண்டு என் மக்களிடம் நேர்மையாக நடக்க வேண்டும். உன்னால் என் மக்களில் யாருக்காவது சிறு காயம் உண்டானாலும் உன்னை உயிரோடு புதைத்து விடுவேன். நான் மிகவும் கெட்டவன். உனக்கு எந்த வித தண்டனையையும் யோசிக்காமல் தேர்ந்தெடுப்பேன். நான் சொன்னதை நன்றாக நினைவில் வைத்துக் கொண்டு இரு.. உனக்கு சண்டையிட ஆசை வந்தால் என்னிடம் வா. நாம் நேருக்கு நேர் மோதலாம்." என்றான்.

ஆதி திருதிருவென விழித்தாள். அவளுக்கு சண்டை என்றால் என்னவென்று சுத்தமாக தெரியாது. அவன் சொன்ன குற்றச்சாட்டுகள் ஒன்றில் கூட அவளுக்கு சம்பந்தம் இல்லை. அவள் ஒரு அன்பின் தேவதை. அன்பின் தேவதைகளின் குணாதிசியம் தெரிந்திருந்தால் கவி இப்படி இவளை பார்த்திருக்க மாட்டான். செழினி ஒன்றும் ஆதியை போல சுத்தமான அன்பின் தேவன் கிடையாது. அவன் அந்த உலகில் உருவானவனும் கிடையாது. ஒரு அன்பின் தேவனுக்கும், சத்திய தேவதைக்கும் பிறந்தவன் அவன். அதனால்தான் அவனுக்குள் கோபமும், கொல்லும் குணமும் இருந்தது. இதை பற்றியெல்லாம் கவிதான் யோசிக்கும் இல்லை. விசயங்களை அறிந்துக் கொள்ள ஆர்வமும் காட்டவில்லை.

கவி சேணம் கட்டப்பட்ட குதிரையை போலதான் இருந்தான். அவனுக்கு தன் உலகம், தன் மக்களை தவிர வேறு யார் மீதும் அக்கறை இல்லை. அன்பின் தேவ, தேவதைகள் பற்றி அவன் கொஞ்சமே கொஞ்சம் விசாரித்திருக்கலாம். அவன் உலகத்தில் இருந்த பனி நூலகத்தில் பதியப்பட்டுள்ள மற்ற உலகத்து தேவர்களை பற்றிய விசயங்களை ஒரு நாளாவது படித்துப் பார்த்திருக்கலாம்.

காலமே கடந்த பிறகு இப்போது என்ன செய்வது? அவளின் உலகமே அழிந்து மறைந்துப் போயிற்று. இனி என்ன?

ஆதி அந்த உலகத்தில் சாதாரண தேவதையாக நடமாட ஆரம்பித்தாள். பனியில் செய்யப்பட்ட பெரிய மாளிகை ஒன்றில் அவளுக்கு தங்க இடம் தரப்பட்டது. அது அவளுக்கு பாதுகாப்பாக இருந்த ஒரு பெண்ணின் மாளிகை. அவள்தான் ஆதிக்கு தன் வீட்டில் இடம் தந்திருந்தாள். ஆதியை விழுந்து விழுந்து கவனித்தாள். ஆதிக்கு எல்லாமே புதிதாக இருந்தது. ஆயினும் மறுப்புச் சொல்லவில்லை. அன்பு காட்டுபவர்கள் அனைவருக்கும் அவள் அடிமை என்பது அங்கிருந்தவர்களுக்குதான் தெரியவில்லை.

கவி தனது பனி மரத்தின் மீதிருந்தபடியே எதிரே தூரத்தில் இருக்கும் மாளிகையை கவனித்துக் கொண்டிருந்தான். ஆதியின் நடவடிக்கைகளை நிழல் போல கவனித்துக் கொண்டிருந்தான்.

அவனுக்குச் சந்தேகம். இரண்டு பேருக்காக ஒரு உலகத்து மக்களையே அழித்தவன் அவன். அப்படியிருக்கையில் தன் உலகத்தை அழித்தவர்களோடு எப்படி இவள் சகஜமாகவ வாழ முடியும் என்று எண்ணி பயந்தான்.

அவளால் தன் மக்களுக்கு ஆபத்து வந்து விட கூடாது என்பதற்காகவே அவளின் காலடியில் பின்தொடர்ந்து நடந்தான்.

ஆதி அனைவரோடும் அன்பாய் பேசினாள். அவர்களோடு இணக்கமாக நடந்துக் கொண்டாள். அந்த மாளிகையில் இருந்தவர்களோடு சேர்ந்து உணவுண்டாள். அவளை அனைவரும் வியந்து மட்டும்தான் பார்த்தார்கள். அவர்களால் தங்களை கட்டுப்படுத்த முடியவில்லை.

ஒருநாள் ஒருவன் தன் தினசரி பயிற்சிக்கு கிளம்பிக் கொண்டிருந்தான். வழியில் இருந்த பனி ஆற்றின் கரையில் அமர்ந்திருந்த ஆதியை கண்டவன் தன் வேலையை மறந்து அவளின் அருகே வந்து அமர்ந்தான். வெள்ளை பனி மிதந்துக் கொண்டிருந்த ஆற்றில் காலை விட்டபடி கரையில் அமர்ந்திருந்த ஆதி இவனைப் பார்த்துப் புன்னகைத்தாள்.

அவனுக்கு மயக்கம் வராத குறை. எப்படி இவளால் இவ்வளவு அழகாக சிரிக்க முடிகிறது என்று எண்ணி குழம்பினான். அவளை பிடித்திருந்தது.

"நீ உன் பயிற்சிக்கு செல்லவில்லையா வாரி? உன் ஏந்தல் உன்னைக் கண்டால் திட்டுவார்." என்றாள் கவலையாக.

வாரி என்ன சொல்வான்? அவளைக் கண்டபிறகு எங்கேயும் செல்ல மனமே வரவில்லை.

"உன்னை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது." என்றான் தன்னை மறந்து.

பற்கள் தெரிய புன்னகைத்தாள். "எனக்கும் பிடித்துள்ளது.!" என்றாள் தலையை சாய்த்து.

பாய்ந்து அணைத்துக் கொண்டான் வாரி. அவளின் இரு கன்னங்களிலும் முத்தமிட்டான்.

"நீ மிகவும் அழகு. நீ மிகவும் நல்லவள். உன்னை நான் விரும்புகிறேன்." என்றான் உணர்ச்சிவசத்தோடு. அவனால் எவ்வளவு முயன்றும் தன்னை கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை.

"நீயும் அழகானவன் வாரி. நீயும் நல்லவனே. உன்னை எனக்கும் பிடித்துள்ளது." என்றாள் மாசற்ற மனத்தோடு. அந்த இடத்தில் யார் இருந்தாலும் அதைதான் சொல்லி இருப்பாள் அவள். ஏனெனில் அவளுக்கு தெரிந்தது அன்புதானே தவிர அவனைப் போல காதல் இல்லை.

வாரி அவளை விட்டு விலகினான். "நன்றி ஆதி. நான் என் ஏந்தலிடம் அனுமதி கேட்டு உன்னை மணக்கின்றேன்." என்றவன் எழுந்து அங்கிருந்து ஓடினான்.

ஆனால் சென்றவன் வரவேயில்லை. ஒரு வாரங்கள் கடந்தபிறகு ஆதியே தன்னிடம் பழகும் மற்றவர்களிடம் விசயத்தைக் கேட்டாள்.

"ஓ உங்களுக்குத் தெரியாதா? ஒரு வாரம் முன்னால் வாரிக்கும், எங்கள் ஏந்தலுக்கும் இடையில் பயிற்சி நடந்தது. பயிற்சியின் வேகத்தில் ஏந்தல் அவனைக் கொன்று விட்டார். அவரின் வீரத்திற்கு உயிர் துறக்க அவனுக்குக் கொடுத்து வைத்திருக்கிறது." என்றாள் ஒருத்தி.

பல நாட்களுக்கு பிறகு ஆதி மீண்டும் கண்ணீர் விட்டாள். சில துளிகளாக இருந்தாலும் அந்த கண்ணீர் அங்கிருந்தவர்களையும் சேர்த்து பாதித்தது.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN