கனவே 10

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
மீரா மெள்ள படிகளில் ஏறினாள். ஓரிடத்தில் கால் புரட்டி விட்டது. அவள் இரண்டடி விழும் முன் அவளை தாங்கி பிடித்தது இரு கரங்கள். மீரா திரும்பிப் பார்த்தாள். மகிழன் அவளைப் பார்த்தபடி நின்றிருந்தான்.

"கவனமா இருக்க மாட்டியா மீரா?" எனக் கேட்டவன் அவளை அணைத்தபடி மேலே ஏறினான்.

தரையில் விழுந்து எழுந்தாள் மீரா. இரண்டாம் படியில் இல்லை. அவள் தரை தளம் வந்து வீழ்ந்தும் கூட மகிழன் வரவில்லை. ஏனெனில் அவன் அங்கே இருக்கவே இல்லை.

கனவு கூட சற்று நேரம் நீடிக்காமல் போனதே என்ற கவலையோடு அருகே இருந்த சுவற்றைப் பிடித்துக் கொண்டு எழுந்து நின்றாள் மீரா. விழுந்து வைத்த காரணத்தால் கால் வலித்தது. அதை பொருட்படுத்தினால் பிறகு என்றுமே நடக்க இயலாமல் போய் விடும் என்ற எண்ணத்தோடு மேலே ஏறினாள். அங்கே சுற்றி நின்றிருந்த அனைவரும் அவளை கேலியாக பார்த்தனர்.

அவர்களை அவளால் புரிந்துக் கொள்ள முடிந்தது. அவளின் கால் அடி பட்டதில் அவர்களுக்கும் இரக்கம் உண்டு. ஆனால் அவர்களுக்கு பொறாமை தந்துக் கொண்டிருந்த அவளின் காதல் இற்றுப் போனதில் சந்தோசம் அவர்களுக்கு‌. அந்த சந்தோசம்தான் கேலி கிண்டலாக மாறி அவளிடம் சேர்ந்துக் கொண்டிருந்தது.

"என்ன மீரா.. எங்கே உன் பேபி பாய்?" என்றுக் கேட்டான் ஒருவன்.

"பார்த்து நடக்க கூடாதா மீரா? உன் காலுக்கு வலிக்கும் இல்லையா? அப்புறம் உன் காதலனுக்கும் வலிக்கும்!" என்றான் இன்னொருவன்.

மீரா அவர்கள் யாரையும் பொருட்படுத்தாமல் தனது வகுப்பறை நோக்கி நடந்தாள். ஒருவன் ஓடிவந்து அவளின் பின்னலை பிடித்து இழுத்தான்.

"என்னம்மா தேவி, எங்க கூடவெல்லாம் பேச மாட்டியா? ஓடி போனவனேதான் வேணுமா?" என்றுக் கேட்டான் அவன்.

மீராவுக்கு எரிச்சலாக வந்தது. தன் பின்னலை இழுத்துக் கொண்டவள் அவன் பக்கம் கோபமாக திரும்பினாள்.

"உங்களுக்கெல்லாம் இப்ப என்னதான் பிரச்சனை? என் மகிழன் இல்லாதது பிரச்சனையா? ஏன் உங்க சொந்த பந்த நட்புல யாருமே தொலைஞ்சோ அழிஞ்சோ போகலையா? புதுசா என் காதலன் விட்டுப் போனதை மட்டுமே பெருசா எடுத்துப் பேசிட்டு இருக்கிங்க.! இதே காலேஜ்ல இத்தனை பேர் படிக்கறாங்க. ஆனா என்கிட்ட மட்டும் வம்பு பண்ணிட்டு இருக்கிங்க. நானும் அவனும் சேர்ந்து இருக்கும்போது உங்களுக்கு அந்த அளவுக்கு வயிறு எரிஞ்சதா? ப்ச்.. இது இவ்வளவு நாளா எனக்கு தெரியாம போச்சே!" என்று பொய்யாய் வியந்தாள்.

"ரொம்பதான்டி பேசுற!" என்றபடி அவளை நெருங்கிய ஒருவன் அவளின் கன்னத்தை வருட இருந்த நேரத்தில் அவனின் கையை பற்றியது மகிழனின் கரம்.

"என் மீரா மேல கை வைக்கிற அளவுக்கு உனக்கு தைரியமா?" எனக் கேட்டவன் அவனின் கையை பிடித்து வளைத்தான். மீராவை தொட முயன்றவன் கத்தியபடியே அவனை விட்டு விலக முயன்றான்.

அவனின் வயிற்றில் ஓர் உதையை தந்த மகிழன் "இன்னொரு முறை என் மீரா பக்கத்துல வராதே!" என்று எச்சரித்துவிட்டு மீராவின் அருகே வந்தான்.

மீரா கண்களை மூடி திறந்தாள். கனவுதான். இதுவும் கனவுதான். மூடிய விழிகளில் கலங்கி நின்றது கண்ணீர்.

"என்னை விடுடி.." என்று கத்தியவனை கண் விழித்துப் பார்த்தாள். கன்னத்தை வருட வந்தவனின் கையை பிடித்து அவன் முதுகோடு வளைத்திருந்தவள் தனது இடது கரத்தால் தன் கண்களை துடைத்துக் கொண்டாள்‌.

"டோன்ட் டிஸ்டர்ப் மீ, ப்ளீஸ்!" என்று விட்டு அவனை விட்டுவிட்டு விலகி நடந்தாள்.

கையை உதறிக் கொண்டவன் தன்னை தாண்டிச் செல்பவளை கொலை வெறியோடு முறைத்தான்.

"இவளை சும்மா விட கூடாது." என்றுக் கருவினான்.

மீரா வகுப்பறையில் வந்து அமர்ந்தாள். அது அவளின் இளங்கலை வருடத்து வகுப்பறை. அவளும் மகிழனும் அமர்ந்திருக்கும் அதே பெஞ்சில் வந்து அமர்ந்திருந்தவள் டெஸ்கில் தலை சாய்த்து படுத்தாள். அவனோடு சேர்ந்து இந்த இடத்தில் பேசி மகிழ்ந்த நேரங்கள் அனைத்தும் கண்களில் வந்துப் போனது.

"மீரா நீ ஒரு பட்டாம்பூச்சி. நான் உன்னை வேட்டையாடும் அசைவ தாவரம்." என்றான் ஒருநாள்.

"உண்மையாவா?" சிறு சிரிப்போடு கேட்டவளை பொய் முறைப்போடு பார்த்தவன் "லைசன்ஸ் இல்லாதபோது உள்ளூர்ல வண்டி ஓட்டலாம். தப்பில்ல. ஆனா மெயின் ரோட்டுக்கு போக கூடாது. அது போலதான் இதுவும்!" என்றான் கண்களை சிமிட்டி.

அவனின் நெஞ்சில் சாய்ந்தவள் "நீ பக்கத்துல இருந்தா போதும். நான் எதுவுமே கேட்க மாட்டேன். ஆனா நீ இத்தனை வருசமா எங்கே இருந்த மகி? நாம ப்ரீகேஜிலியே பார்த்திருக்கணும். நிறைய டைமை வேஸ்ட் பண்ணிட்டோம்‌." என்றாள்.

"ரொம்ப யோசிக்கற நீ. எல்லாத்துக்கும் நேரம் காலம் உண்டு. நீ ஏன் இப்படி பறக்கற? நீயும் நானும் சேர்ந்து காதலின் வீதியில் நடப்போம்.." என்றான் சத்தியம் செய்வது போல.

மீரா மகிழ்ந்துப் புன்னகைத்தாள்.

"அக்கா.." யாரோ அழைத்தார்கள்‌. மீரா எழுந்து அமர்ந்து எதிரே பார்த்தாள்.

"இது என் இடம் அக்கா. கிளாஸ் ஹவர் ஆரம்பிக்க போகுது." என்றாள் தயக்கமாக.

மீரா எழுந்தாள். டெஸ்கை கைகளால் வருடியபடியே வெளியே நடந்தாள்.

இருக்கவே முடியவில்லை. அவனை விட்டு விலகி இருப்பது மிகவும் கடினமாக இருந்தது. அவனின் அட்ரஸை மாமன்களிடம் எவ்வளவோ முறை கேட்டு விட்டாள். மூவருமே சொல்ல மறுத்தனர்.

முகவரி தெரிந்தால் அவனை தேடி ஓடி விடுவாள் அவள். அது தங்களுக்கு அவமானம் என நினைத்தனர் மாமன்கள்.

ஆரவல்லியின் பக்கத்து வீட்டாரை கூட விசாரித்தாள் மீரா. அவர்களுக்கும் கூட மகிழனின் ஊர் எதுவென்று தெரியவில்லை.

பொறுத்துப் பார்த்துவிட்டு நாளிதழ் ஒன்றில் விளம்பரம் தந்தாள் மீரா.

"காணவில்லை.. மகிழன் வயது இருபத்தி மூன்று. ஆறடிக்கும் சற்று குறைவு. வெளிர் சிகப்பு. எடை அறுபத்தியிரண்டு. கண்டுபிடித்து தருவோருக்கு நல்ல சன்மானம் வழங்கப்படும்." என்று புகைப்படத்தோடு விளம்பரம் தந்திருந்தாள். தகவலுக்கு கைபேசி எண் என்று அதியனின் கைபேசி எண்ணை தந்திருந்தாள்.

வீட்டில் இருந்த அனைவரும் அவளை திட்டி தீர்த்தனர். அப்பாவுக்குமே கூட கோபம் எல்லை மீறிய விட்டது.

"பெண் பிள்ளை போல ஒருநாளாவது நடந்துக்கிறியா?" எனக் கேட்டு அவளின் கன்னத்தில் ஓங்கி ஒன்று விட்டார். மீரா கலங்கிய கண்களோடு கன்னத்தை பிடித்தபடி நிமிர்ந்துப் பார்த்தாள். அப்பா முகத்தை சுளித்தபடி அங்கிருந்து நகர்ந்தார். உயிரோடு கொன்றுக் கொண்டிருந்தாள் அவள். அவளை திட்டவும் மனம் வரவில்லை. அதே சமயம் அவள் செய்வது அனைத்தையும் பொறுத்துக் கொள்ளவும் முடியவில்லை. அவளின் காலை கண்டு ஏற்கனவே அனைவரும் வருந்திக் கொண்டிருந்தனர். அப்படி இருக்கையில் இப்படி எதையாவது இழுத்து விட வேண்டுமா என்பது அவர்களின் எண்ணமாக இருந்தது‌.

"உனக்குன்னு ஒரு எல்லை இருக்கு. ரொம்ப பண்ணாத." என்றான் அதியன் கோபத்தோடு.

"ஏதாவது போன் வந்ததா மாமா?" தான் திட்டியும் கூட இப்படி கேட்கிறாளே என்று நெற்றியில் அடித்துக் கொண்டான் அவன்.

"தொலைஞ்சி போ!" என்றுவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.

எந்த போனும் வரவில்லை என்று மீராவுக்கு புரிந்துப் போனது‌.

ஆனால் செய்தித்தாள் விளம்பரத்தை அகிலன் பார்த்து விட்டான். தம்பி சொன்ன போது கூட பத்தோடு பதினொன்று என்று நினைத்திருந்தவனுக்கு இந்த விளம்பரத்தை கண்ட பிறகு மனம் கனத்துப் போனது.

பணத்திற்காக, அழகிற்காக இப்படி அலைகிறாளோ என்று எண்ணாமலும் இருக்க முடியவில்லை.

மறுநாளே சந்தனக்கொடிக்கால் வந்துச் சேர்ந்தான் அகிலன். தூரத்தில் இருந்தபடியே மீராவை நோட்டம் விட்டான்.

ஒற்றைப் பார்வையில் எடை போடும் அளவிற்குதான் இருந்தது அவளின் முகம். வாடிப்போன கொடி போல இருந்தாள்.

அடிக்கடி வானம் பார்த்தாள்‌. அடிக்கடி கண்ணீர் சிந்தினாள். அடிக்கடி முகத்தை மூடிக் கொண்டு விம்மினாள்.

ஒருநாள் இருநாள் அல்ல. ஒரு வாரம் தொடர்ந்து அவளை கண்காணித்தான் அகிலன். மீரா கல்லூரி செல்வதும் வீடு வருவதுமாக எந்திர ரூபத்தில் செய்துக் கொண்டிருந்தாள். பேருந்தில் ஏறவில்லை‌. நொண்டிக் கொண்டேதான் வீடு வந்தாள்.

அகிலனுக்கு வெறுப்பாக இருந்தது. "ச்சை கருமம். என்ன லவ்வு ** லவ்வு. இப்படியெல்லாம் கஷ்டப்பட சொல்லி யார் இவங்களுக்கு சொல்றாங்க? பிறந்ததுல இருந்து இரண்டு பேரும் ஒன்னாவா இருந்தாங்க? டைம் பாஸ்க்கு பழகற காதலுக்கு இவ்வளவு சீன் தேவையா?" என்றான் தனக்குள். ஆனால் அவனுக்கு இன்னொன்றும் தெரியும், தான் இப்போது சொன்னது தம்பிக்காரன் காதில் மட்டும் விழுந்திருந்தால் தன்னை வகுந்திருப்பான் என்பதுதான் அது.

***

"சார் மீராவோட கேஸ் இன்னைக்கு கோர்டுல விசாரிக்க போறாங்க.!" என்று தேவன் சொல்லவும் தனது இருக்கையை விட்டு எழுந்தான் காவல் துறை அதிகாரி இனியன்.

"மீராவுக்கு நியாயம் கிடைக்கலன்னா நான் அவங்களை எண்கவுண்டர் பண்ணிடலாம்ன்னு இருக்கேன்." என்றான் அவன்.

"சார் பொறுமையா இருங்க.‌ நம்ம ஜட்ச் சார் நிச்சயம் நல்ல தீர்ப்பா தருவாரு.." என்றான் தேவன்.

இருவரும் குற்றவாளிகளை அழைத்துக் கொண்டு நீதிமன்றம் சென்றனர்.

அதியன் இவர்களை கண்டுவிட்டு ஓடி வந்தான்.

"இனியா.. அவனுங்களை என் கையில் கொடுத்துடுங்க. ப்ளீஸ். நான் உங்களுக்கு நான் என் மொத்த சொத்தையும் எழுதி வைக்கிறேன். அவங்களை சாகடிக்காம எனக்கு மனசு ஆறாது." என்றான்.

"அதியன்.. கொஞ்சமாவது பொறுப்போட நடந்துக்கங்க.. சட்டம், காவல்ன்னு நாங்க எதுக்கு இருக்கோம்? நாங்க கவனிச்சிக்கிறோம் விடுங்க!" என்றான் இனியன்.

"உங்களுக்கு அக்கா தங்கை இல்ல இனியன். அதனாலதான் இப்படி சொல்றிங்க!" என்றவனை முறைத்தான் எதிரில் இருந்தவன்.

"உன் வொய்ப் எனக்கு தங்கச்சி போலதான். சும்மா வாய்க்கு வந்தபடி பேசிட்டு இருக்காத. சட்டத்தை நம்பாதவங்க எதுக்கு எங்ககிட்ட வந்து கம்ப்ளைண்ட் பண்றிங்க?" என்றான் கோபமாக.

"தேவன்.. மீரா வந்துட்டாங்களா பாருங்க.." என்று அவனை அங்கிருந்து அனுப்பி வைத்தான்.

"அவ வரல!" என்றான் அதியன்.

இனியன் குழப்பமாக பார்த்தான்.

"ஏன்?"

"ஏன்னா.. நான் என்ன சொல்லட்டும்? ஹாஸ்பிட்டல்ல இருக்கா. இந்த ஒரு மாசத்துல பன்னென்டாவது முறையா சூஸைட் அட்டெம்ட்!" என்றவன் முகத்தை அழுந்த தேய்த்துக் கொண்டு நிமிர்ந்தான்.

"எங்க கஷ்டமெல்லாம் சொன்னா உங்களுக்கு புரியாது இனியன். தினமும் நரகம். நான் எங்க வீட்டுக்கு போகவே இல்ல.. நான், என் தம்பி, என் வொய்ப்ன்னு எல்லோருமே எங்க மாமா வீட்டுலதான் இருக்கோம். அவ எந்த நேரத்துல என்ன செய்வாளோன்னு பயமா இருக்கு. அவ செத்து போய்ட்டாவே பரவாலன்னு நிறைய முறை நினைச்சிட்டேன். அவளோட அக்கா இருபத்து மணி நேரமும் அவளோடவேதான் இருக்கா. ஆனா எந்த டைம்லதான் சூஸைட் அட்டெம்ட் பண்றாளோ? நேத்து அவங்க அக்கா அவளை கூட்டிக்கிட்டு தோட்டத்துக்கு போயிருக்கா. அங்கே கீழே கிடந்த துரு பிடிச்ச பிளேடை எடுத்து கையை அறுத்துக்கிட்டா. அவங்க அக்கா பார்த்து உடனே சத்தம் போடலன்னா இவ இன்னேரம் ப்ளட் லாஸ்ல செத்திருப்பா." என்றான் நடுங்கும் கையால் தலையை கோதி விட்டபடி.

இனியனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அக்காள் தங்கையோடு பிறக்கா விட்டாலும் கூட ஒரு பெண்ணின் வலி புரிய மனிதனாக இருந்தால் போதாதா?

"நீங்க சமாதானம் பேசி பார்க்கலாம் இல்ல?" என்றான் சிறு குரலில்.

"நாங்க யாராவது கிட்ட போனாலே கத்தி கூச்சல் போடுறா இனியா. அவளோட ரூம்க்குள்ள எங்க மாமா கூட கால் வைக்க முடியல. அவ்வளவு அழுகை. அத்தனை கூச்சல்." என்றான். நடப்பதை பார்க்கையில் அவனுக்கே புத்தி பேதலித்து விடும் போல இருந்தது.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN